புதிய மருந்துகளுக்காக விந்தையான தேடுதல்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
ரப்பர், கொக்கோ, பருத்தி, வலிநீக்கிகள் இவையெல்லாம் பொதுவாகக் கொண்டிருப்பது என்ன? எல்லாவற்றையுமே தாவரங்களிலிருந்து பெறலாம். ஒளிச்சேர்க்கைமூலமாக உருவாக்கப்படும் சர்க்கரை, மற்றும் ஆக்ஸிஜனோடு, பச்சைத் தாவரங்கள் மற்ற அடிப்படையான வேதியியல் கூட்டமைவால் அநேக அரிதான பொருள்களையும் உண்டாக்குகின்றன. இரண்டாம் நிலையில் உண்டாகும் இந்த வேதிப்பொருள்கள் ஒவ்வொரு தாவரத்துக்கும் அதன் விசித்திரமான குணங்களைக் கொடுக்கின்றன.
முட்செடியின் அரிப்பு, ஆப்பிள் ஒன்றின் கடும்புளிப்பு, ஒரு ரோஜாவின் நறுமணமிக்க வாசனை; இவையெல்லாம் வித்தியாசமான வேதிப்பொருள்களின் கூட்டுப்பொருள்கள் தாவரங்களாலேயே தயாரிக்கப்படுவதால்தான். இவ்வாறு தனியான விளைபொருள்போல் தோன்றுவது உண்மையில் ஒரு மிகச் சிக்கலான கலவையாக பெரும்பாலும் இருக்கிறது.
இயற்கையின் இரசாயன தொழிற்சாலைகள்
கொக்கோவிற்கே உரித்தான வாசனையை எடுத்துக்கொள்வோம். இந்த விசித்திரமான நறுமணத்தை உண்டாக்குவதற்கு, 84 வேறுபட்ட ஆவியாகக்கூடிய வேதிப்பொருள்கள் ஒன்றுசேர்கின்றன என்று இதுவரைக்கும் அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? கெக்கேயோ விதைகளின் உட்பொருள்கள் மிக மிக சிக்கலானவை. அவற்றை அடையாளங்கண்டுகொள்வதற்காகச் சமீப ஆண்டுகளில் அதிகமான முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. ஆனாலும் இது இயற்கையின் வெறும் ஒரு தயாரிப்புதான்.
கொழுப்பினி (Cholesterol) ஒரு கொழுப்பு நிறைந்த மூலப்பொருள்; மனித இருதய நோயோடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இது பரவலாக அறியப்பட்டிருக்கிறது. எனினும், சில தாவரங்களில் வேதிப்பொருள்களின் ஓர் அடிப்படையான தொகுதியாகிய ஸ்டிராய்டுகளை உருவாக்குவதில் ஆரம்ப நிலைப் பொருளாக இது இருக்கிறது. வைட்டமின் டி, இயக்குநீர்கள் (கார்ட்டசோன்கள் போன்றவை), அழற்சிநீக்கி பேட்டாமெத்தசோன் போன்ற மருந்துகள் ஆகியவற்றை ஸ்டிராய்டுகள் உட்படுத்துகின்றன. ஒருவிதமான காட்டு வள்ளிக்கிழங்கு (wild yam) வகைகளிலிருந்து டயோஸ்ஜெனின் உண்டாக்கப்படுகிறது; இது ஸ்டிராய்டு கருத்தடை மாத்திரைகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மறுபட்சத்தில், தாழை இலை சாறிலிருந்து (sisal leaf pulp) மெல்லிய நூல் உண்டாக்கப்பட்டபிறகு பிரித்தெடுக்கப்பட்ட ஓர் இயற்கை ஸ்டிராய்டாகிய ஹெக்குஜெனிலிருந்து கார்ட்டசோன்கள் தயாரிக்கப்படுகிறது. இன்றைய கால புதிய மருந்துகளில் பல, முதலில் தாவரங்களின் திசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை.
தாவரங்களும் மனிதனும்
மனிதனுடைய செயற்கைச் சேர்ம மருந்துகளின் உபயோகம் ஒரு நவீன மருத்துவ வளர்ச்சியாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதாரண சுகவீனங்களுக்குத் தாவரங்களே நிவாரணிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. வேதனையைத் தணிப்பதற்கு சாதாரண கடற்பஞ்சு (anemone) பயன்படுத்தப்பட்டதைப் பற்றி பூர்வகாலத்து அசீரியர்களின் பதிவுகள் விளக்குகின்றன. மேலும் மூலிகை தாவரங்களின் பரவலான பயன்படுத்துதலைப் பற்றி, பார்வோன்களின் காலத்திலிருந்த எகிப்திய மருத்துவத்தின் நாணற்புல்தாள் பதிவுகள் (papyri) வெளிப்படுத்துகின்றன.
உலகமெங்கும் கிட்டத்தட்ட 20,000 மூலிகை தாவரங்களின் பயன்படுத்துதலைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனம் பதிவுசெய்திருக்கிறது. பிரிட்டனில்மட்டுமே, சுமார் 5,500 வேறுபட்ட மூலிகை மருந்துகளில் உட்பொருள்களாகக் குத்துமதிப்பாக 6,000-லிருந்து 7,000 டன்கணக்கான மூலிகைகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில், மருத்துவர்களின் மருத்துவக் குறிப்புகளில் பாதிக்குமேலானவை தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட மருந்துக்களுக்கே என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல்
உலகத்திலுள்ள தாவரங்களில் அறியப்பட்ட ஏறத்தாழ 2,50,000 வகைகளில், ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்ட விசித்திரமான வேதியியலை உடையதாக இருக்கிறது. அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து பயனுள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான தடயங்களுக்காக (clues) ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். எளிதான வழிகளில் ஒன்று, மக்கள் தங்கள் சொந்த வட்டாரங்களில் வளரும் தாவரங்களை எப்படி நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்வதாகும்.
கொக்கோ இலைகளைச் சவைப்பது பசிவேதனையை மரத்துப்போகச் செய்து, சோர்வை நீக்கியது என்ற கண்டுணர்வுதான் மரத்துப் போகச் செய்யும் மருந்து, கொக்கெய்ன் (cocaine) கண்டுபிடிப்புக்கு வித்திட்டது. இந்தக் கொக்கெய்ன் மூலக்கூறைப் பிரித்தெடுத்து, அதன் வடிவமைப்பை சற்று மாற்றுவதன்மூலம், மருந்து தயாரிப்பாளர்கள் வருவிக்கப்பட்ட ஒரு செயற்கைச் சேர்ம பொருளைத் (a synthetic derivative) தயாரித்தனர். இது குறிப்பிட்ட இடம் மரத்துப்போவதற்கு உபயோகப்படுத்தப்படும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பல் மருத்துவர் நீங்கள் வேதனைக்குள்ளாகாதபடி இருப்பதற்காக உங்களுடைய தாடையின் ஒரு பாகம் “உணர்வற்றுப்போகச் செய்வதற்கு” ஓர் ஊசி போட்டிருந்தார் என்றால், இந்தக் ஆராய்ச்சியிலிருந்து நீங்கள் உண்மையிலேயே பலனடைந்தவராக இருப்பீர்கள்.
தாவரங்களின் பயன் பற்றிய கூடுதலான மதிப்புமிக்க செய்திகள் இன்னும் பிரசுரிக்கப்பட்டில்லை. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கிரே மூலிகைச் சேகரிப்புத் தோட்டம் (Gray Herbarium) ஆர்னல்டு பயிர்த்தோட்டம் (Arnold Arboretum) போன்றவற்றில் 25 லட்சம் வகைமாதிரிகளை நான்குக்கும் மேலான ஆண்டுகளாக ஆராய்ச்சிசெய்திருந்த அறிவியல் வல்லுநர்களால், மருந்துகளின் உண்மையான ஊற்றுமூலமாக இல்லையென முன்பு நிராகரிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளைக் குறிப்பிட்டு காட்டமுடிந்தது.
தாவரங்களின் வேதியியல் உள்ளடக்கத்தை மற்றொரு ஆய்வுக்கோணம் ஒப்பிட்டுப்பார்க்கிறது. ஒரு சிற்றினம், பயனுள்ள கூட்டுப்பொருள்களைக் கொண்டிருந்தால், அதற்குத் தொடர்பான மற்ற சிற்றினங்களும் மதிப்புக்குரியதுதான். வட ஆஸ்திரேலியாவின் மோரட்டன் பே செஸ்ட்நட் (Moreton Bay chestnut) என்ற மரத்தின்மீதான ஆய்வு, காஸ்டனோஸ்பர்மைனை பிரித்தெடுத்தது. அப்போது அதிநுண்ணுயிர் எதிர்ப்புச் செயலைச் செய்யும் ஒரு நச்சாக இது இருந்தது. இதன் தொடர்பான மரங்களைத் தேடிக்கொண்டிருந்த தாவரவியல் வல்லுநர்கள் தென் அமெரிக்க அலெக்ஸாவை (Alexa) ஆராயும்படி சிபாரிசுசெய்தனர்.
புற்றுநோய் எதிர்ப்பு ஆராய்ச்சி
சில சமயங்களில் தடயங்கள் தவறாக வழிநடத்துவதாக இருக்கின்றன. அதனால், எதிர்பாராத பலன்களைக் கொடுக்கின்றன. உதாரணமாக, மாடகாஸ்கர் பெரிவின்கில்-லிருந்து எடுக்கப்படும் சாறு நீரிழிவைக் குணப்படுத்தும் என்று உரிமைபாராட்டப்பட்டது. கனடாவின் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆனால் அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தும்வகையில், பெரிவின்கில் சாறு, ரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைக் குறைத்து, நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பை மட்டுப்படுத்தியது. இது லுக்கிமியாவுக்கு (leukemia) அதாவது ரத்தத்தின் வெள்ளணுப்புற்று நோய்க்கு, எதிராக அந்தச் சாறை ஆய்வுசெய்துபார்க்கும் எண்ணத்தை மருத்துவர்களுக்குக் கொடுத்தது.
இறுதியில், கிட்டத்தட்ட 90 பொருள்கள் பிரித்தெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு, வின்கிரிஸ்டின், வின்பிளாஸ்டின் என்று அறியப்பட்டவை மருத்துவரீதியில் பயனுள்ளதாக நிரூபித்திருக்கின்றன. அவை அவ்வளவு மிகச் சிறிய அளவிலே அந்தத் தாவரத்தில் இருப்பதால், 2 கிராம் வின்கிரிஸ்டினை உற்பத்திசெய்ய ஏறக்குறைய ஒரு டன் தாவரம் தேவைப்படுகிறது. இன்று இந்தக் கூட்டுச்சேர்மங்களும், அதன் வருவிக்கப்பட்ட பொருள்களும், குழந்தைப்பருவ வெள்ளணுப்புற்று நோய்க்குச் சிகிச்சையாக உலகமெங்கும் பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் மருந்தைக் கொடுக்கிறது.
1950-களின் பிற்பகுதியில், ஐ.மா. தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் (U.S. National Cancer Institute) 25-வருட முறைப்படியான ஓர் ஆராய்ச்சி திட்டத்தை ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் 40,000 சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட 1,14,000 தாவர சாறுகள், ஆய்வகத்தில் உண்டாக்கப்பட்ட புற்றுநோய் மாதிரிகளில் (cancer culture) கட்டி உண்டாவதை எதிர்க்கும் செயலுக்காகச் சோதிக்கப்பட்டன. இவற்றில் கிட்டத்தட்ட 4,500, கூடுதலான ஆய்வுக்கு தகுதியடையுமளவிற்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டிருந்தன. ஆனால் மரபுவழிமருந்தியல் (pharmacognosist) டாக்டர் W. C. இவன்ஸ் குறிப்பிடுகிறார்: இன்றியமையாததாக இருக்கிற அப்படிப்பட்ட ஆராய்ச்சியின் நேரடியான பலனாக “பலன்தரும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் நிச்சயமாகவே கண்டுபிடிக்கப்படும் என்பது நிகழாதுபோல் தோன்றுகிறது.” புற்றுநோய்கள் பல்வேறுபட்டதாக இருக்கின்றன. இந்தச் சோதனைகளில் ஆய்வகத்தில் உண்டாக்கப்பட்ட விரைவாகவளரும் ஒருசில புற்றுநோய் செல் மாதிரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
பழங்கால தாவரங்களிலிருந்து புதிய மருந்துகள்
நன்கறியப்பட்ட தாவரங்கள் ஆராய்ச்சியாளர்களை அதிகமாக சிந்திக்க வைக்கின்றன. உதாரணமாக, இஞ்சி. இப்போது வாந்தியடக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாகப் பயணவாந்திக்குa எதிராக பலன்தரத்தக்கதாக இருக்கிறது. மிகத் தனிச்சிறப்புமிக்கதாக இஞ்சி, சிஷ்டசோமையாசஸ் (பில்ஹார்ஸையா) என்ற வெப்பமண்டல ஒட்டுண்ணி நோயால் துயரப்படுவோரின் வேதனைநீக்கியாக இருப்பதில் மதிப்புவாய்ந்ததாக நிரூபித்திருக்கிறது. இஞ்சிப் பொடிகளின் மாத்திரைகளைப் பயன்படுத்தி, நைஜீரியாவிலுள்ள நோய் தொற்றப்பட்ட பள்ளிப் பிள்ளைகள்மீது நடத்தப்பட்ட சோதனைகள், அவர்களின் சிறுநீரில் ரத்தம் வருவதைத் தடுத்தது; அவர்களுடைய சிஷ்டசோம் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைத்தது.
தாவர குடும்பத்தில் அதிகமான மருந்துகளைத் தேடும் பெரும்பணியில் ஆராய்ச்சியாளர்கள் வெறும் ஆரம்பநிலையிலேயே இருக்கிறார்கள். ஓரளவிற்கு நன்கறியப்பட்டதாகக் கருதப்படும் அந்தத் தாவரங்களும்கூட, பல ரகசியங்களை இன்னும் உடையதாக இருக்கின்றன. அதிமதுரம் (Licorice) மிகப் பிரபலமானதாக இப்போது இருக்கிறது. அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களாகிய அழற்சிநீக்கிப் பொருள்களும், அவற்றின் வருவிக்கப்பட்ட பொருள்களும் மூட்டு அழற்சியினால் (arthritis) துயரப்படுகிற சிலருக்கு நிவாரணமளிக்கும். காளான்நீக்கிகளாகவும் நுண்ணுயிரிநீக்கிகளாகவும் இருக்கும் பயன்கள்குறித்து, அறிவியல் வல்லுநர்கள் சாதாரண தோட்ட பட்டாணியையும்கூட ஆராய்கிறார்கள்.
பதிவுசெய்யப்படுவதற்கு முன்பாகவே உலகின் ஒருசில பகுதிகளில் தாவர வகைகள் பொறுப்பற்ற விதத்தில் அழிக்கப்படுவது, புதிய மருந்துகளுக்கான தேடுதல் விரைவாகத் தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. தாவரங்களின் ஜாக்கிரதையான வேதியியல் ஆய்வு, அவற்றின் மரபுவழிப் பண்புகளைப் பாதுகாத்தல் இன்னும் மிக அத்தியாவசியமான நடவடிக்கையாக இருக்கிறது. நன்கறியப்பட்ட தாவரங்களுக்கும்கூட இது பொருந்துகிறது. ஆனால் ஒரு புதிர் இதுவரைக்கும் தீர்க்கப்படாமல் இருக்கிறது: இந்த விசித்திரமான அநேக வேதிப்பொருள்களால் அந்தத் தாவரங்களுக்குத்தான் என்ன பிரயோஜனம்? உதாரணமாக, கோழிக்கீரை (purslane) தாவரம், மனித நலனிற்கு அத்தியாவசியமான ஒரு இயக்குநீராகிய நோரடிரினலினை (noradrenaline) அப்படிப்பட்ட அதிகச் செறிவில் தயாரிப்பது ஏன்?
நிஜமாகவே, தாவர வாழ்க்கையின் சிக்கலமைப்புகளைப் பற்றிய நம் அறிவு இன்னும் மிகவும் வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. ஆனால், நாம் இதுவரைத் தெரிந்திருக்கிறது, முழுமையான வடிவமைப்பு இருப்பதைக் குறித்துக்காட்டி, ஒரு மகத்தான வடிவமைப்பாளருக்குப் புகழாரத்தைக் கொடுக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a ஜூலை 22, 1982, ஆங்கில விழித்தெழு! இதழின் பக்கம் 31-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படம்]
இஞ்சி பயணவாந்திக்கு ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது