உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 4-7
  • இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நச்சுத்தன்மையை சோதிப்பதிலுள்ள பிரச்சினைகள்
  • விலங்குகள் மீதான பரிசோதனைகளை நம்பமுடியுமா?
  • ஆய்வுக்கூட பரிசோதனைகள் தோல்வியுறுகையில்
  • இயக்குநீர்களைப் போல் வேடமிடும் இரசாயனங்கள்
  • செயற்கை இரசாயனங்களின் பிரளயம்
    விழித்தெழு!—1998
  • உங்கள் வீட்டில் விஷம் இருக்கிறதா?
    விழித்தெழு!—1998
  • தொழில்துறை வேதியல் பொருட்களின் அருவருப்பான பக்கம்
    விழித்தெழு!—1988
  • இரசாயன அலர்ஜி தாக்கும்போது
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 4-7

இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?

நன்மைகளையும் தீமைகளையும் எடைபோட்டு பார்த்த பிறகே நம் வாழ்க்கையில் அநேக தீர்மானங்களை செய்கிறோம். உதாரணமாக, கார் வைத்திருப்பதில் அநேக சௌகரியங்கள் உண்டு என்பதற்காகவே அநேகர் அதை வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் சௌகரியங்களை செலவுகளோடு ஒப்பிட்டு பார்த்தே ஆகவேண்டும். காப்புறுதி, பதிவு, மதிப்பு குறைதல், ஓடும் நிலையில் பராமரிப்பதற்கு ஆகும் செலவுகள் போன்றவையும் இதில் அடங்கும். விபத்துகள் காரணமாக ஏற்படும் சேதங்கள் அல்லது மரணம் இவற்றின் ரிஸ்க்கையும்கூட அவர்கள் சிந்திக்க வேண்டும். அதேபோன்ற நிலைமைதான் செயற்கை இரசாயனங்களுக்கும். அவற்றின் நன்மைகளை தீமைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உதாரணமாக, எம்டிபிஇ (MTBE [methyl tertiary butyl ether]) என்ற இரசாயனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது பெட்ரோலோடு சேர்க்கப்படுவதால் பெட்ரோல் முழுவதுமாக எரிவதற்கும், வண்டிகளிலிருந்து வெளிவரும் புகை குறைவதற்கும் உதவுகிறது.

அமெரிக்காவிலுள்ள அநேக நகரங்களில் இன்று என்றும் இல்லாத அளவு காற்று சுத்தமாக இருக்கிறதென்றால் அதற்கு எம்டிபிஇ-ம் ஒரு காரணம். ஆனால் சுத்தமான காற்று, “ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது” என்று நியூ சையன்டிஸ்ட் அறிவிக்கிறது. இது ஏனென்றால், எம்டிபிஇ புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஓர் இரசாயனமாகும். இது, பூமிக்கடியில் இருக்கும் லட்சக்கணக்கான பெட்ரோல் சேமிப்பு தொட்டிகளிலிருந்து கசிந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. இதன் விளைவாக, ஒரு நகரம் அதற்கு தேவைப்படும் தண்ணீரில் சுமார் 82 சதவிகிதத்தை வெளியிலிருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது. அதற்காகும் செலவு, ஒரு வருடத்திற்கு 14 கோடி ரூபாயாகும்! இந்தப் பேரழிவு, “அமெரிக்காவில் ஏற்பட்ட நிலத்தடி நீர் தூய்மைக்கேட்டிலேயே மிகவும் மோசமானதும் அநேக வருடங்கள் நீடிக்கக்கூடிய ஒன்றுமாகும்” என நியூ சையன்டிஸ்ட் கூறுகிறது.

சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சில இரசாயனங்கள் தடைசெய்யப்பட்டு அவற்றின் விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ‘ஆனால், ஏன் இப்படி நடக்கிறது? புதிய இரசாயனங்களின் நச்சுத்தன்மைப் பற்றி முழுவதுமாக சோதிக்காமலா அவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள்?’ என நீங்கள் கேட்பது புரிகிறது.

நச்சுத்தன்மையை சோதிப்பதிலுள்ள பிரச்சினைகள்

உண்மையைச் சொன்னால், நச்சுத்தன்மைக்காக இரசாயனங்களை சோதிப்பது அறிவியலும் ஊகமும் கலந்ததே. “ஆபத்தை கணிப்பவர்களுக்கு எந்த இரசாயனம் ‘பாதுகாப்பானது’ அல்லது எது ‘பாதுகாப்பற்றது’ என தெளிவாக பிரித்து காட்டுவது கடினம்” என்று ஜோசப் வி. ராட்ரிக்ஸ் கணிக்கப்பட்ட ஆபத்துகள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் கூறுகிறார். செயற்கையாக தயாரிக்கப்படும் அநேக மருந்துகளைப் பொறுத்தவரையிலும்கூட இதுவே உண்மை. “ஒரு மருந்து, எதிர்பாராத ஆபத்தான பின்விளைவை ஏற்படுத்துமா இல்லையா என்பதை எவ்வளவுதான் கவனமாக சோதித்தாலும் நிச்சயமாக சொல்லமுடியாது” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.

இதற்கு காரணம், ஆய்வுக்கூடங்களுக்கே உரித்தான சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு இரசாயனம் வித்தியாசப்பட்ட, சிக்கலான வெளி உலக நிலைமைகளில் எவ்வாறு செயல்படும் என்பதை ஆய்வுக்கூடங்களில் முழுமையாக செய்துபார்க்க முடியாது. ஆய்வுக்கூடங்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான வித்தியாசப்பட்ட செயற்கை இரசாயனங்கள் உலா வருகின்றன; அவற்றில் அநேகம் ஒன்றோடு ஒன்றும் உயிருள்ளவற்றோடும் செயலாற்றும் தன்மை கொண்டவை. இவற்றுள் சில தனித்திருக்கையில் ஆபத்தற்றவை; ஆனால் நம் சரீரத்திற்கு வெளியேயோ உள்ளேயோ அவை ஒன்று சேரும்போது புதிய, நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களை உண்டுபண்ணக்கூடும். அதுமட்டுமா, நம் உடலின் வளர்சிதை மாற்றங்கள் சில இரசாயனங்கள் மீது செயலாற்றிய பிறகு அவை ஆபத்தானவையாக, ஒருவேளை புற்றுநோய் ஏற்படுத்தும் ஒன்றாகவும்கூட மாறிவிடுகின்றன.

இப்படிப்பட்ட சவால்கள் இருப்பதால், ஒரு இரசாயனம் ஆபத்தானதா இல்லையா என்பதை ஆபத்தை கணிப்பவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? அந்த இரசாயனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை ஆய்வுக்கூடத்திலுள்ள பிராணிகளுக்கு கொடுத்து அதன் விளைவுகளை அப்படியே மனிதர்களுக்கும் பொருத்துகிறார்கள். இன்றுவரை இவ்வாறுதான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த முறையை எப்போதுமே நம்பமுடியுமா?

விலங்குகள் மீதான பரிசோதனைகளை நம்பமுடியுமா?

இப்படிப்பட்ட பரிசோதனைகள் விலங்குகளை வதைப்பதாகும் என்ற தார்மீக பிரச்சினை ஒருபுறமிருக்க மற்ற கேள்விகளும்கூட எழும்புகின்றன. உதாரணமாக, பல்வேறு விலங்குகள் வித்தியாசமான இரசாயனங்களுக்கு வித்தியாசமான விதமாக பிரதிபலிக்கின்றன. ஒரு பெட்டை சீமைப்பெருச்சாளியைக் கொல்வதற்கு டையாக்ஸின் என்ற மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனத்தில் ஒரு சிறு துளி போதும். ஆனால் ஒரு பெருச்சாளி போலிருக்கும் ஹாம்ஸ்டரை கொல்வதற்கு அதைவிட 5,000 மடங்கு அதிகம் தேவை! எலி, சுண்டெலி போன்ற நெருங்கிய தொடர்புடைய இனங்கள்கூட பல இரசாயனங்களுக்கு வித்தியாசமாக பிரதிபலிக்கின்றன.

ஆகவே, ஒரு இரசாயனத்திற்கு ஒரு விலங்கினம் பிரதிபலிக்கும் விதத்தை வைத்து மற்றொரு விலங்கினம் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் நிச்சயமாக சொல்லமுடியாமல் இருக்கிறதல்லவா? அப்படியிருக்க அவற்றை மனிதர்கள் தாங்கிக்கொள்வார்கள் என்று எப்படி சொல்லமுடியும்? அவர்களால் உறுதியாக சொல்லமுடியாது என்பதே அப்பட்டமான உண்மை.

மருந்து தயாரிப்பவர்களின் வேலை உண்மையில் தலை உருளும் வேலைதான். தாங்கள் தயாரிக்கும் மருந்தை வாங்க விரும்புகிறவர்களையும் அவர்கள் திருப்தி செய்யவேண்டும், விலங்கு நலத்தைப் பற்றி அக்கறையுள்ள ஆட்களையும் சமாளிக்க வேண்டும், அதேசமயம் அந்தப் பொருட்கள் பாதுகாப்பானவைதான் என தங்கள் மனசாட்சியையும் திருப்திப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் காரணங்கள் நிமித்தமாக, சில ஆய்வுக்கூடங்களில் கல்சர் மீடியங்களில் வளர்க்கப்படும் மனித செல்களில் இரசாயனங்களை செலுத்தியே ஆராய்ச்சி செய்கின்றனர். ஆனால் இது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

ஆய்வுக்கூட பரிசோதனைகள் தோல்வியுறுகையில்

முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதுகாப்பானது என தவறாக அறிவிக்கப்பட்ட இரசாயனங்களுக்கு மிகவும் சிறந்த உதாரணம் பூச்சிக்கொல்லியான டீடீடியாகும். இது சுற்றுச்சூழலில் இப்போதும் பெருமளவு காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்குள் டீடீடி அதிக காலம் தங்கிவிடும் தன்மை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் பின்னர் அறியவந்தனர். நச்சுத்தன்மை வாய்ந்த மற்ற இரசாயனங்களும் இதைப் போலவேதான். இதனால் என்ன மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன? கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளிலிருந்து ஆரம்பித்து, பிறகு மீன்கள், கடைசியில் பறவைகள், கரடிகள், நீர் நாய்கள் வரை செல்லும் உணவு சங்கிலியின் மேல் மட்டத்தில் இருக்கும் விலங்குகளின் உடலிலும் இந்த நஞ்சு சேர்ந்துவிடுகிறது. இந்த உணவு சங்கிலியே ஓர் உயிருள்ள புனல்போலாகி கீழ் மட்டத்தில் இருப்பதைவிட மேல் மட்டத்தில் இருக்கும் விலங்குகளின் உடலில் இந்த நஞ்சின் அடர்த்தி அதிகரித்துவிடுகிறது. கிரெப் எனப்பட்ட ஒருவகை நீர்வாழ் பறவைகள் பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் ஒரு குஞ்சைக்கூட பொரிக்க முடியாமல் போனது இதற்கு ஓர் நல்ல உதாரணமாகும்!

உயிருள்ள இந்தப் புனல்கள் அதிக சக்தி வாய்ந்தவை! ஏனென்றால், தண்ணீரில் மிகவும் குறைவான அளவுகளில் காணப்படும் இந்த நச்சுப்பொருட்கள் மேல் மட்டத்தில் இருக்கும் விலங்குகளின் உடலில் மிகவும் அதிகளவில் சேர்வதற்கு ஓர் உதாரணம், வட அமெரிக்காவிலுள்ள செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் காணப்படும் வெள்ளை திமிங்கிலங்கள். இறந்தபிறகு அவற்றை ஆபத்தான கழிவுபொருட்களில் ஒன்றாக கருதும் அளவுக்கு அவற்றின் உடலில் அதிகளவு நச்சுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அநேக விலங்குகளுக்குள் காணப்படும் இரசாயனங்கள் சில சமயங்களில் இயக்குநீர்களைப் போல வேஷமிடுகின்றன. இந்த இரசாயனங்களால் ஏற்படும் மறைமுகமான நச்சு விளைவுகளை விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இயக்குநீர்களைப் போல் வேடமிடும் இரசாயனங்கள்

நம் சரீரத்திலுள்ள முக்கியமான வேதியியல் தூதுவர்கள் இயக்குநீர்களே. இரத்த ஓட்டத்தின் மூலம் அவை சரீரத்தின் மற்ற பாகங்களுக்கு பயணித்து, சரீர வளர்ச்சி அல்லது இனப்பெருக்க சுழற்சி போன்ற குறிப்பிட்ட செயலைத் தூண்டுகின்றன அல்லது தடைசெய்கின்றன. சில செயற்கை இரசாயனங்கள் சரீரத்திற்குள் செல்லுகையில் இயக்குநீர்களின் செயல்பாடுகளோடு குறுக்கிடுகின்றன. தீங்கான விதத்தில் அவற்றைப் போல் நடிப்பதன் மூலம் அல்லது அவற்றை தடைசெய்வதன் மூலம் இவ்வாறு செய்கின்றன என்று “பெருகிவரும் அறிவியல் அத்தாட்சிகள்” சுட்டிக்காட்டுகின்றன என உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியது ஆர்வமூட்டுவதாக இருந்தது.

பிசிபிகள்,a டையாக்ஸின்கள், ஃபியூரான்கள், டீடீடியில் மீந்திருப்பவை உட்பட சில பூச்சிக்கொல்லிகள் ஆகியவையும் இதில் அடங்கும். இவை, நாளமில்லா சுரப்பிகளைத் தடுப்பவை என்று அழைக்கப்படுகின்றன. இயக்குநீர்களின் ஊற்றுமூலமாக இருக்கும் நம் சரீரத்தின் நாளமில்லா சுரப்பி மண்டலம் இயல்பாக செயல்படுவதை தடைசெய்யும் ஆற்றல் இந்த இரசாயனங்களுக்கு உண்டு.

பெண் பாலின இயக்குநீர் எஸ்ட்ரோஜனைப் போலவும் இந்த இரசாயனங்கள் வேஷமிடுகின்றன. பீடியாட்ரிக்ஸ் என்ற மருத்துவ பத்திரிகையில் ஓர் ஆய்வு வெளியிடப்பட்டது. அதன்படி, அநேக சிறுமிகள் சிறுவயதிலேயே பருவமடைவதற்கு காரணம் எஸ்ட்ரோஜன் உள்ள பொருட்களை தலைமுடிக்கு உபயோகிப்பதும் சுற்றுச்சூழலில் உள்ள எஸ்ட்ரோஜனைப் போல் நடிக்கும் மற்ற இரசாயனங்களுமே ஆகும்.

ஓர் ஆணுடைய வளர்ச்சி பருவத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தில் சில இரசாயனங்களின் பாதிப்பு ஏற்பட்டால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படலாம். உதாரணமாக, “வளர்ச்சியின் குறிப்பிட்ட நேரத்தில் ஆண் கடலாமைகளுக்கும் முதலைகளுக்கும் பிசிபிகளைக் கொடுத்தால் அவை பெட்டையாக அல்லது ‘அலிகளாக’ மாறிவிடுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன” என டிஸ்கவர் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை கூறுகிறது.

அதோடுகூட, இரசாயன நச்சுகள் நோய்தடுப்பு முறைகளை பலவீனமடைய செய்துவிடுகின்றன. அதனால், விலங்குகளுக்கு வைரஸ் தொற்றுநோய்கள் ஏற்பட அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. எப்போதும் இருந்ததைவிட இப்போது வைரஸ் தொற்றுநோய்கள் இன்னும் பரவலாகவும் அதிக வேகமாகவும் பரவி வருவதாக தோன்றுகிறது. இவை, உணவு சங்கிலியின் மேல் மட்டத்தில் இருக்கும் விலங்குகளாகிய டால்பின்கள், கடல் பறவைகள் போன்றவற்றிலேயே அதிகம் காணப்படுகின்றன.

இயக்குநீர்களைப் போல நடிக்கும் இரசாயனங்களால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானில் சில வருடங்களுக்கு முன்பு பிசிபியால் மாசுபட்ட உமி எண்ணையை சில பெண்கள் உட்கொண்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள், “குன்றிய சரீர வளர்ச்சியும் மன வளர்ச்சியும், இயல்புக்கு அதிகமான அல்லது குறைவான நடத்தை கோளாறுகள், மிகவும் சிறிய ஆண்குறிகள், சராசரி ஐ.க்யூ.-விற்கும் ஐந்து புள்ளிகள் குறைவான அறிவுத்திறன் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தன” என்று டிஸ்கவர் பத்திரிகை அறிவிக்கிறது. அதைப்போலவே, நெதர்லாந்திலும் வட அமெரிக்காவிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், அதிகளவு பிசிபிகளோடு தொடர்பு ஏற்பட்ட பிள்ளைகளிடையே சரீர வளர்ச்சியும் மன வளர்ச்சியும் இதேபோன்று பாதிக்கப்படுகின்றன என்பதையே காண்பிக்கின்றன.

ஆண்களிலும் பெண்களிலும் ஏற்படும் மார்பக புற்றுநோய், விரை புற்றுநோய், விந்து சுரப்பி புற்றுநோய் போன்ற “இயக்குநீர் சார்ந்த” புற்றுநோய்கள் அதிகரிப்பதற்கும் இந்த இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மேலுமாக அநேக நாடுகளில் இருப்பதைப் போல ஆண்கள் மத்தியில் சராசரி விந்து எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதும் விந்தின் தன்மை குறைந்துபோவதும் இந்த இரசாயனங்களை அதிகமாக உபயோகிப்பதன் விளைவாக இருக்கலாம். சில தேசங்களில், கடந்த 50 வருடங்களில் சராசரி விந்து எண்ணிக்கை ஏறக்குறைய 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது!

“நம்முடைய சந்ததிமீதே ஆராய்ச்சி செய்யப்படுகிறது” என ஒரு டாக்டர் சொன்னதாக முந்தைய கட்டுரையில் வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் சொன்னது உண்மைதான் போலும். நாம் கண்டுபிடித்திருக்கும் இரசாயனங்களில் அநேகம் நல்ல பயனளித்திருக்கின்றன என்பது ஒருபக்கம் உண்மையாக இருந்தாலும் மறுபக்கம் கெடுதியும் விளைவித்திருக்கின்றன அல்லவா? ஆகவே, நம்மை பாதிக்கக்கூடிய இரசாயனங்களை தேவையில்லாமல் உபயோகிப்பதை குறைப்பது ஞானமல்லவா? நம்முடைய வீடுகளிலேயே இவற்றில் அநேகம் குவிந்துகிடக்கின்றன என்பதைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆபத்தான இரசாயனங்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை எமது அடுத்த கட்டுரை அலசி ஆராயும்.

[அடிக்குறிப்புகள்]

a பிசிபிகள் (பாலிகுளோரினேடட் பைபீனைல்கள்) 1930-ம் வருடத்திலிருந்து அதிகம் உபயோகத்தில் இருந்தன. 200-க்கும் அதிகமான எண்ணைப் போன்ற சேர்மங்கள் இந்த வகையில் உள்ளடங்கும். இவற்றை உபயோகித்து, உராய்வைத் தடுக்கும் பொருள், பிளாஸ்டிக், மின் தடைப்பொருள், பூச்சிக்கொல்லிகள், பாத்திரம் கழுவும் திரவங்கள், மற்ற பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இன்று அநேக நாடுகளில் பிசிபி தயாரிப்பு தடைசெய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பத்து முதல் இருபது லட்சம் டன் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. தூக்கியெறியப்பட்ட பிசிபிகள் சுற்றுச்சூழலில் சென்று சேர்ந்ததன் விளைவாக அநேக கேடான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

[பக்கம் 7-ன் படம்]

இந்தத் திமிங்கிலங்கள் இறந்தபிறகு ஆபத்தான கழுவுப்பொருட்களில் ஒன்றாக கருதும் அளவுக்கு அவற்றின் உடலில் அதிகளவான நச்சுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன

[படத்திற்கான நன்றி]

©George Holton, The National Audubon Society Collection/PR

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்