உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 7-9
  • உங்கள் வீட்டில் விஷம் இருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் வீட்டில் விஷம் இருக்கிறதா?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சமநிலையை காத்துக்கொள்ளுதல்
  • இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?
    விழித்தெழு!—1998
  • செயற்கை இரசாயனங்களின் பிரளயம்
    விழித்தெழு!—1998
  • இரசாயன அலர்ஜி தாக்கும்போது
    விழித்தெழு!—2000
  • தொழில்துறை வேதியல் பொருட்களின் அருவருப்பான பக்கம்
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 7-9

உங்கள் வீட்டில் விஷம் இருக்கிறதா?

அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழும் 3,000-க்கும் அதிகமான மக்கள் மத்தியில் சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதைப் பற்றி சையன்டிபிஃக் அமெரிக்கன் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய இரசாயனங்களை அநேக ஆட்கள் அதிகளவில் எதிர்ப்படுவது . . . தூய்மைக்கேடு இல்லாதவை என அவர்கள் கருதும் வீடுகள், அலுவலகங்கள், கார்கள் போன்ற இடங்களிலேயே ஆகும்.” சுத்தப்படுத்தும் திரவங்கள், அந்துருண்டைகள், கட்டுமான பொருட்கள், எரிபொருட்கள், டியோடரைசர்கள், கிருமி நாசினிகள், சலவை செய்த துணிகள், புதிய செயற்கை பொருட்கள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் ஆவியே வீடுகளில் காற்று தூய்மைக்கேடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விண்வெளி வீரர்களுக்கு, “விண்வெளி ஃபுளு காய்ச்சல்” ஏற்பட என்ன காரணம் என்றே தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட ஆவிகள் அல்லது “வெளிவரும் வாயு”தான் இதற்கு காரணமென்று பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு புதிய காரில் அமரும்போது அல்லது ஒரு சூப்பர்மார்கெட்டில் சுத்தம் செய்யும் சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை கடக்கும்போது வெளிவரும் வாயுவை நீங்கள் முகரலாம். சீல் செய்யப்பட்ட உறைகளில் அவை இருந்தாலும்கூட இந்த வாடையை நீங்கள் முகரமுடியும். வெண்பனியின் குளிரை தவிர்ப்பதற்காக சில வீடுகள் முழுவதுமாக இழுத்து மூடியிருக்கலாம். ஆனால், பல்வேறு இரசாயனங்களிலிருந்து வெளிவரும் ஆவியின் காரணமாக இவ்விதமாக மூடப்பட்டுள்ள வீட்டிற்குள் ஏற்படும் தூய்மைக்கேடு வெளியில் இருப்பதைவிட மிகவும் அதிகமாகும்.

வீட்டிற்குள் ஏற்படும் தூய்மைக்கேட்டினால், பிள்ளைகள் அதிலும் முக்கியமாக தவழும் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கனடாவின் மெடிக்கல் போஸ்ட் கூறுகிறது. ஏனென்றால், பெரியவர்களைக் காட்டிலும் அவர்கள்தான் தரைக்கு அருகில் இருக்கின்றனர்; முதியவர்களைவிட அதிக வேகமாக சுவாசிக்கின்றனர்; 90 சதவிகிதமான நேரம் வீட்டிற்குள்தான் இருக்கின்றனர்; அவர்களுடைய உறுப்புகள் முதிர்ச்சியடையாத காரணத்தால் நச்சுப்பொருட்கள் அவர்களின் சரீரங்களை மிக எளிதில் பாதித்துவிடுகின்றன. உடலுக்குள் செல்லும் ஈயத்தில் சுமார் 40 சதவிகிதத்தை அவர்களின் சரீரம் உறிஞ்சிக்கொள்கிறது; ஆனால் பெரியவர்களின் சரீரங்கள் சுமார் 10 சதவிகிதத்தை மட்டுமே உறிஞ்சிக்கொள்கின்றன.

சமநிலையை காத்துக்கொள்ளுதல்

முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு இரசாயனங்களை உபயோகிப்பது இந்தச் சந்ததிதான். ஆகவே, அவற்றின் ஆபத்துக்களைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு இன்னும் அதிகம் இருப்பதால் விஞ்ஞானிகள் கவனமாக இருக்கின்றனர். இரசாயனங்களை எதிர்ப்பட்டாலே புற்றுநோய் அல்லது மரணம் நிச்சயம் என்று பயந்துவிட வேண்டாம். அநேகர் நல்லவிதமாக சமாளித்து வருகிறார்களே! அதற்கான எல்லா புகழும் மனித சரீரத்தை அற்புதகரமாக சிருஷ்டித்தவரையே சாரும். (சங்கீதம் 139:14) அப்படி இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. அதிலும், ஆபத்தாக இருக்கக்கூடிய இரசாயனங்களோடு நமக்கு அதிக தொடர்பு இருந்தால் அதிக கவனம் அவசியம்.

“[சரீரத்தின்] சமநிலையான செயல்பாடுகளை இடைமறிக்கும் இந்தக் கருத்தில்தான் சில இரசாயனங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதன் காரணமாக தெளிவற்ற சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவை வெறுமனே மந்தமான ஓர் உணர்வை ஏற்படுத்தலாம்” என்று இரசாயனங்கள் ஜாக்கிரதை! என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. ஆபத்து ஏற்படுத்தும் இரசாயனங்களை எதிர்ப்படுவதை குறைக்க நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை செய்யவேண்டிய அவசியமில்லை; ஆனால், அன்றாட பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களை செய்தாலே போதும். தயவுசெய்து பக்கம் 8-ல் உள்ள பெட்டியில் இருக்கும் ஆலோசனைகளைக் கவனியுங்கள். அவற்றில் சில உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

இரசாயனங்களை உபயோகிக்கையில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்தான்; என்றாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரியங்களை நினைத்து அளவுக்கு மீறி கவலைப்படாமல் இருந்தால் அதிக உதவியாக இருக்கும். “அமைதலான இருதயம் உடலுக்கு ஜீவன்” என்று நீதிமொழிகள் 14:30-ல் (NW) பைபிள் கூறுகிறது.

இருந்தாலும் இரசாயன நஞ்சுகள் காரணமாக அநேகர் நோய்வாய்ப்படுகின்றனர்; சில சமயங்களில் மரணத்தின் நுழைவாயிலுக்கே கொண்டு செல்லப்படுகின்றனர்.a இன்று, மற்ற அநேக காரணங்கள் நிமித்தமாக துயரப்படும் லட்சக்கணக்கான மக்களைப் போலவே இரசாயனங்களால் வியாதிப்பட்ட மக்களும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கலாம். ஏனென்றால், இந்தப் பூமியில் வாழ்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் சீக்கிரத்தில் இல்லாமற்போகும். அது மட்டுமா, நஞ்சான எண்ணங்களும் அந்த எண்ணம்கொண்ட ஆட்களும்கூட இல்லாமற்போவர். இதைப் பற்றி இந்தத் தொடர் கட்டுரையின் கடைசி கட்டுரையில் வாசித்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம்.

[அடிக்குறிப்புகள்]

a சமீப காலங்களில் அநேக ஆட்கள் அதிகமான இரசாயனங்களால் பாதிக்கப்படும் நிலைக்கு (multiple chemical sensitivity) ஆளாகின்றனர். விழித்தெழு!-வின் பின்வரும் ஒரு பிரதி இந்த நிலையைப் பற்றி கலந்தாலோசிக்கும்.

[பக்கம் 8-ன் பெட்டி]

ஆரோக்கியமான, பாதுகாப்பான வீடு

நஞ்சான இரசாயனங்களை எதிர்ப்படுவதை குறைக்க உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களை செய்தாலே போதுமானது. உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய சில ஆலோசனைகள் இதோ! (இன்னும் கூடுதலான, தெளிவான விவரங்களுக்கு அருகிலுள்ள நூல்நிலையத்தை அணுகுங்கள்.)

1. ஆவி வெளிவிடும் இரசாயனங்கள் உங்களிடம் இருக்கின்றனவா? உங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்றை அசுத்தப்படுத்தாத ஓரிடத்தில் அவற்றை சேமித்து வையுங்கள். எளிதில் ஆவியாகும் கரைப்பான்கள் கொண்ட பெயின்ட், வார்னிஷ், பசைகள், பூச்சிக்கொல்லிகள், சுத்தம்செய்யும் கரைசல்கள் போன்ற இரசாயனங்களும் ஃபார்மால்டிஹைடுகளும் இதில் உட்படும். எளிதில் ஆவியாகக்கூடிய பெட்ரோலிய பொருட்களும் நஞ்சான ஆவிகளை வெளிவிடுகின்றன. பென்சீனும் இந்தத் தொகுதியைச் சேர்ந்ததே; அதிக அடர்த்தியான நிலையில் உள்ள இந்த இரசாயனத்தை நீண்டகாலம் சுவாசித்தால் புற்றுநோயும், பிறப்பு கோளாறுகளும், இனப்பெருக்கம் சார்ந்த மற்ற ஆபத்துகளும் ஏற்படுகின்றன.

2. பாத்ரூம்கள் உட்பட எல்லா ரூம்களிலும் நல்ல காற்றோட்டமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஷவரில் குளிக்கும்போது தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் ஆவியாகக்கூடும். அதனால் குளோரின் அல்லது குளோரோஃபார்ம் அதிகம் சேர்ந்துவிடலாம்.

3. வீட்டிற்குள் வருவதற்கு முன்பு உங்கள் கால்களை துடையுங்கள். இது சாதாரண ஒரு செயலாக இருந்தாலும் வீட்டிற்குள் வரும் ஈயத்தின் அளவை ஆறில் ஒரு பங்கு குறைக்கிறது என சையன்டிபிஃக் அமெரிக்கன் கூறுகிறது. அதுமட்டுமல்ல, பூச்சிக்கொல்லிகள் வீட்டிற்குள் வருவதையும்கூட இது குறைக்கிறது. ஏனென்றால் சில பூச்சிக்கொல்லிகள் சூரிய ஒளி பட்டதும் சிதைந்துவிடுகின்றன; ஆனால் வீட்டிற்குள் இருக்கும் தரைவிரிப்புகளில் படிந்த மருந்து பல வருடங்களானாலும் சிதையாமலேயே இருந்துவிடலாம். இல்லையென்றால் வீட்டிற்குள் வருவதற்கு முன் ஷூக்களை கழற்றிவிடுங்கள். உலகின் சில பகுதிகளில் இது சர்வசாதாரணமான பழக்கமாகும். தரைவிரிப்புகளில் உள்ள தூய்மைக்கேட்டை குறைக்க ஒரு நல்ல வாக்யூம் கிளீனர் தேவை. அதில் சுழலும் பிரஷ் இருந்தால் அதிக உதவியாக இருக்கும்.

4. ஒரு ரூமில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதாக இருந்தால் எந்தப் பொம்மையையும் இரண்டு வாரம் வரை அந்த ரூமிற்குள் கொண்டு செல்லாதீர்கள். மருந்து தெளித்த சில மணிநேரத்திற்குள் அந்த ரூமை நீங்கள் மறுபடியும் உபயோகிக்கலாம் என அந்த மருந்து பாட்டிலில் அச்சடித்திருப்பதைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். பொம்மைகளில் காணப்படும் சில பிளாஸ்டிக் மற்றும் ஃபோம் பொருட்கள், எஞ்சியிருக்கும் பூச்சிக்கொல்லிகளை ஒரு பஞ்சைப் போல உறிஞ்சுவிடுகின்றன என்று சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அந்தப் பொம்மைகளிலிருக்கும் பூச்சிக்கொல்லிகள் தோல் மூலமாகவும் வாய் மூலமாகவும் குழந்தைகளுக்குள் செல்லலாம்.

5. பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதை குறையுங்கள். பூச்சிக்கொல்லிகளுக்கு, “வீடுகளிலும் தோட்டங்களிலும் அவற்றிற்குரிய இடம் இருக்கிறது; ஆனால், ஏதோ பெருஞ்சேனையான பூச்சி தாக்குதலை சமாளிப்பதற்கு தேவையான அளவு மருந்துகளை வீட்டில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதைப்போல சராசரியான நபர் நம்பும்படி விளம்பரங்கள் செய்துவிடுகின்றன” என்று பிரான்க் கிரெஹாம் ஜூனியர் என்பவர் அமைதியான வசந்தகாலத்திற்கு பிறகு என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார்.

6. உறிந்துவரும் ஈயம் கலந்த பெயின்டை சுரண்டிவிட்டு ஈயம் கலக்காத பெயின்ட் அடியுங்கள். ஈயம் கலந்த பெயின்ட் தூசியில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். குழாய் தண்ணீரில் ஈயம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், தண்ணீரின் வெப்பநிலை சிறிதளவு குறையும்வரை குளிர்ந்த நீர் குழாயை திறந்து கொஞ்ச நேரம் தண்ணீரை ஓடவிடுங்கள். பிறகு அந்த நீரைப் பருகலாம். வெந்நீர் குழாயில் வரும் தண்ணீரை ஒருபோதும் குடிக்காதீர்கள்.—நம் உணவிலுள்ள சுற்றுச்சூழல் நஞ்சுகள் (ஆங்கிலம்).

[பக்கம் 9-ன் படம்]

வீட்டிற்குள் ஏற்படும் மாசுக்கேட்டினால் அதிகம் பாதிக்கப்படுவது தவழும் குழந்தைகளே

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்