உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 3-4
  • செயற்கை இரசாயனங்களின் பிரளயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செயற்கை இரசாயனங்களின் பிரளயம்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அதிக இரசாயனங்களால் பேராபத்தா?
  • இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?
    விழித்தெழு!—1998
  • உங்கள் வீட்டில் விஷம் இருக்கிறதா?
    விழித்தெழு!—1998
  • தொழில்துறை வேதியல் பொருட்களின் அருவருப்பான பக்கம்
    விழித்தெழு!—1988
  • இரசாயன அலர்ஜி தாக்கும்போது
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 3-4

செயற்கை இரசாயனங்களின் பிரளயம்

செயற்கை இரசாயன கலவைகள் நம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டன. ஆகவே இந்த நூற்றாண்டை வேதியியல் சகாப்தம் என்றே அழைக்கலாம். ஏரோசால்கள், செயற்கை சர்க்கரைகள், அழகு சாதனங்கள், சாயங்கள், மைகள், பெயின்ட், பூச்சிக்கொல்லிகள், மருந்துகள், பிளாஸ்டிக்குகள், குளிரூட்டிகள், சின்தடிக் துணிகள் என எண்ணற்ற இரசாயனங்கள் நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் குவிந்து கிடக்கின்றன.

இவ்வுலகில் இரசாயனங்களுக்கு அதிக மவுசு இருப்பதால் இவற்றைத் தயாரிக்க உலகமுழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,50,000 கோடி ஐமா டாலர் செலவாகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று மார்கெட்டில் சுமார் 1,00,000 இரசாயனங்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு வருடமும் 1,000 முதல் 2,000 புதிய இரசாயனங்கள் அவற்றோடு சேர்ந்து கொள்வதாகவும் அது அறிவிக்கிறது.

என்றபோதிலும், இரசாயனங்கள் வெள்ளம்போல் குவிந்துகிடப்பது ஒரு கேள்வியை எழுப்புகிறது: சுற்றுச்சூழலையும் நம் ஆரோக்கியத்தையும் இவை எவ்வாறு பாதிக்கின்றன? இரசாயனங்களைப் பொருத்தவரை நாம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறோம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறதல்லவா? “நம்முடைய சந்ததிமீதே ஆராய்ச்சி செய்யப்படுகிறது; ஆனால் இதன் விளைவு என்னவாகும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்” என ஒரு டாக்டர் கூறினார்.

அதிக இரசாயனங்களால் பேராபத்தா?

மாசுபடுத்தும் இரசாயனங்களால் பெருமளவு பாதிக்கப்படுவது, “படிப்பறிவில்லாத ஏழைகளே. ஒவ்வொரு நாளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்ப்படும் இரசாயனங்கள் அவர்களை எந்தளவுக்கு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய சரியான பயிற்றுவிப்போ அடிப்படை தகவலோ அவர்களுக்கு கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை” என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பூச்சிக்கொல்லிகளைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மை. ஆனால் நாம் அனைவருமே இரசாயனங்களால் பாதிக்கப்படுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கலிபோர்னியாவிலுள்ள ஏறக்குறைய 20 சதவிகித கிணறுகளில் தூய்மைக்கேட்டின் அளவானது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அளவுகளைவிட அதிகமாக இருக்கிறது என உலகின் பச்சை சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. இதில் பூச்சிக்கொல்லிகளும் அடங்கும். அந்தப் புத்தகம் மேலும் கூறுவதாவது: “ஃப்ளாரிடாவிலுள்ள 1,000 கிணறுகள் தூய்மைக்கேட்டின் காரணமாக மூடப்பட்டுவிட்டன; ஹங்கேரியிலுள்ள 773 நகரங்களிலும் கிராமங்களிலும் கிடைக்கும் தண்ணீரை வாயில் வைக்கமுடியாது; பிரிட்டனிலுள்ள பத்து சதவிகித நிலத்தடி நீர்நிலைகள் உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு அளவைவிட அதிகமாக தூய்மைக்கேடு அடைந்திருக்கின்றன; நைட்ரேட் உப்பு அதிகளவு கலந்திருப்பதால் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ள சில இடங்களில் கிடைக்கும் தண்ணீரை பிறந்த குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கமுடியாது.”

உபயோகமான ஆனால் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றொரு இரசாயனம் பாதரசம். இது, தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள், கோடிக்கணக்கான தெரு விளக்குகள் ஆகியவற்றிலிருந்து வெளிவந்து சுற்றுச்சூழலில் கலந்துவிடுகிறது. எரிபொருள், பெயின்ட் போன்ற அநேக பொருட்களில் காணப்படும் ஈயமும் பாதரசத்தைப் போலவே நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். இது முக்கியமாக குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஈய புகையை சுவாசிக்கும் சராசரியான ஒரு குழந்தையின் “ஐ.க்யூ.-விலிருந்து நான்கு பாயின்டுகள் காணாமல் போகலாம்” என்று எகிப்திலுள்ள கெய்ரோவிலிருந்து வரும் ஓர் அறிக்கை கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 100 டன் பாதரசம், 3,800 டன் ஈயம், 3,600 டன் பாஸ்பேட், 60,000 டன் டிடர்ஜென்ட் ஆகியவை மத்தியதரைக் கடலில் சேர்வதற்கு மனிதர்களே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. இதைக் கேட்கையில் இந்தக் கடல் அபாயத்தில் இருக்கிறதென ஒரு சிறு குழந்தைக்கூட சொல்லிவிடும். ஆனால் ஆபத்தில் இருப்பது இந்தக் கடல் மட்டுமல்ல. உண்மையைச் சொன்னால், 1998-ம் வருடத்தை சர்வதேச கடல் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அறிவிக்க வேண்டியிருந்தது அல்லவா? உலகமுழுவதிலும் உள்ள எல்லா கடல்களுமே ஆபத்தில் இருக்கின்றன; அதற்கும் தூய்மைக்கேடே முக்கிய காரணம்.

வேதியியல் தொழில்நுட்பத்தினால் அநேக பிரயோஜனமான பொருட்களை நாம் பெற்றிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அவற்றை உபயோகித்த பிறகு தூக்கியெறியும்போது அவற்றால் சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில், ஒரு பத்திரிகை எழுத்தாளர் எழுதியபடி நம்மை நாமே, “முன்னேற்றத்தின் பிணைக்கைதிகள்” ஆக்கிக்கொண்டு விட்டோமா?

[பக்கம் 4-ன் பெட்டி]

இரசாயனங்களும் இரசாயன மாற்றங்களும்

“இரசாயனம்” என்ற பதம் நம்மைச் சுற்றியிருக்கும் எல்லா அடிப்படை பொருட்களையும் குறிக்கும். இரும்பு, ஈயம், பாதரசம், கார்பன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற நூற்றுக்கும் அதிகமான அடிப்படை கூறுகளும் இதில் அடங்கும். தண்ணீர், அமிலங்கள், உப்புகள், ஆல்கஹால் போன்றவை இரசாயன சேர்மங்கள் அல்லது பல்வேறு கூறுகளின் கூட்டு ஆகும். இவற்றில் அநேகம் இயற்கையில் காணப்படுகின்றன.

“ஒரு பொருள் வேதியியல் ரீதியாக மற்றொரு பொருளாய் மாற்றப்படும் முறையே இரசாயன மாற்றம்” ஆகும். உதாரணமாக நெருப்பு ஓர் இரசாயன மாற்றமாகும்; ஏனென்றால், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களாகிய பேப்பர், பெட்ரோல், ஹைட்ரஜன் போன்றவை முற்றிலும் வேறுபட்ட பொருளாக அல்லது பொருட்களாக மாறுகின்றன. நம்மைச் சுற்றிலும் நம் உடலுக்கு உள்ளேயும் பல இரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

[பக்கம் 3-ன் படம்]

மாசுபடுத்தும் இரசாயனங்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்