உங்கள் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டுங்கள்
கடுங்குளிர் காலத்தில் ஓர் நாள். படிக்கட்டுகளெல்லாம் பனிக்கட்டியால் மூடிக்கிடந்தன. இறங்க முயற்சித்த முதல் நபர் கிட்டத்தட்ட விழுந்துவிட்டார். அடுத்து இறங்க இருந்தவர் அறிவித்தார்: “இப்பொழுது பாருங்கள், இப்படித்தான் இறங்கவேண்டும்!” சொல்லி வாயை மூடக்கூட இல்லை அவர் சறுக்கிவிட்டு மல்லாக்க விழுந்தார். ஒரு கணம் நிசப்தம் நிலவுகிறது. பின்னர் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதைப் பார்த்தபின், அங்கு நின்றிருந்தவர்கள் குலுங்கக்குலுங்கச் சிரித்தனர்.
“நகைக்க ஒரு காலமுண்டு.” ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்குமுன் இவ்வாறுதான் சொன்னார் சாலொமோன் ஞானி. (பிரசங்கி 3:4) இன்றும் அதுவே உண்மையாக இருக்கிறது. நகைப்பதற்கான திறமை கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு விசேஷ குணமாகும். ‘நித்தியானந்த தேவன்’ என்று பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒருவரிடமிருந்து வரும் பரிசாகும்.—1 தீமோத்தேயு 1:11.
அப்படியானால், படைப்பு முழுவதும் மனமகிழ்ச்சியூட்டும் காரியங்களால் நிறைந்திருக்கிறது என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. நகைச்சுவை கேளிக்கையாட்டங்களை செய்யும் பூனைக்குட்டிகளும் நாய்க்குட்டிகளும், நன்கு அடி கிடைக்கும்வரை தன்னுடைய தாயின் வாலை மெல்லும் ஒரு சிங்கக்குட்டியும், கிளைகளினூடே ஒன்றையொன்று துரத்தி ஒன்றன்மீது ஒன்று விழுந்து குட்டிக்கரணம் போடும் குரங்கு குட்டிகளும் இப்படைப்புகளில் சில ஆகும். கவனித்து, போற்றப்படுவதற்கு நம்மைச்சுற்றி எங்கும் மகிழ்ச்சியூட்டும் காரியம் காத்திருக்கிறது.
அப்படியானால் எல்லாரும் ஒரே காரியத்தைப்பற்றி சிரிக்கின்றனர் என்று சொல்வதற்கல்ல. மாறாக, எது வேடிக்கையாக இருக்கிறது என்பது பெரும்பாலும் ஒருவருடைய பண்பாடு, ஆளுமை, பின்னணி, மனநிலை, மற்ற அம்சங்கள் போன்றவற்றைச் சார்ந்திருக்கிறது. இருப்பினும், அநேகமாக ஒவ்வொருவரும்—வேடிக்கையான ஒரு கதை, ஆச்சரியமான ஒரு மகிழ்ச்சி, ஒரு தமாஷ், ஒரு சொற்சிலம்பம் போன்ற ஏதாவது ஒரு விஷயத்திற்கு—சத்தமான சிரிப்புடன் பிரதிபலிக்கின்றனர்.
நகைச்சுவை என்ன நோக்கத்தை நிறைவேற்றுகிறது? குறைந்தது, அது ஒருவரோடு நல்லமுறையில் பேச்சுத்தொடர்பு கொள்ளும் வழியாக இருக்கிறது. ஒரு குறிப்பு சத்தமான சிரிப்பை “இருவருக்கிடையில் உள்ள மிகக் குறைந்த தூரம்” என்றழைத்தது. உண்மையில், நகைச்சுவை திருமணப் பொருத்தத்தை அளக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கருதுகின்றனர். எது வேடிக்கையாக இருக்கிறது என்பதன்பேரில் ஒத்துப்போகும் ஜோடிகள், நகைச்சுவையைப்பற்றிய விருப்பத்தில் அவ்வளவாக ஒத்துவராதவர்களைவிட, ஒருவரையொருவர் விரும்பி, நேசித்து, மணந்துகொள்ள விரும்பும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர் என்று நகைச்சுவையின்பேரிலான ஓர் ஆராய்ச்சி கண்டுபிடித்தது. ஏன்? ஏனென்றால் நகைச்சுவை பல காரியங்களைக் குறித்துக் காட்டுகிறது: மதிப்பீடுகள், அக்கறைகள், ஈடுபாடுகள், புத்திக்கூர்மை, கற்பனாசக்தி, மற்றும் தேவைகள். “நகைச்சுவை உணர்ச்சியுடைய மக்கள் அதிக படைப்புத்திறனுள்ளவர்களாயும், விட்டுக்கொடுப்பவர்களாயும், புதிய கருத்துக்களையும் முறைகளையும் பரிசீலிக்கவும் பின்பற்றவும் அதிக விருப்பமுள்ளவர்களாயும் இருக்கும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றனர்” என்று 1985-ல் ஐ.மா.-வில் உள்ள ஆயிரம் கழகங்களில் எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்திற்று.
சிரிப்பதா சிரிக்காதிருப்பதா
ஏதாவதொன்றை வேடிக்கையானதாக்குவது உண்மையிலேயே எது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. நகைச்சுவையின் ஆழத்தில் இருப்பது முரண்பாடு—பொருத்தமற்றதாக தோன்றும் இரண்டு காரியங்கள் ஒன்றுசேர்க்கப்படுவது—என்பதாக சிலர் கருதுகின்றனர். ஒரு சர்க்கஸ் கோமாளியைப்போல உடை அணிந்திருக்கும் வளர்ந்த ஒரு மனிதன் ஒரு சிறுபிள்ளையை குலுங்கி குலுங்கி சிரிக்கவைக்கலாம். ஆகிலும், அதிக வாழ்க்கை அனுபவமும், உயர்ந்த அறிவுத்திறன்களும் உடைய ஒரு வளர்ந்த ஆள் அந்தக் கோமாளித்தனமான கேளிக்கைகளை வேடிக்கையானதாக காணாமல் இருக்கலாம். அவர் மனதை உட்படுத்தும் நகைச்சுவை வகைகளில்—சிலேடைகள், சொற்சிலம்பங்கள், அல்லது தமாஷ்களில்—இன்பம் காணலாம். இவை சரீரப்பிரகாரமாக இல்லாமல் வார்த்தைகளில் அறிவுத்திறனை உபயோகிக்கவைக்கின்றன.
அடைத்துவைக்கப்பட்ட உணர்ச்சி சக்தி வெளிப்படுத்தப்படுவதில் இருந்து நகைச்சுவை விளைவடையலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகின்றனர். நகைச்சுவை மன இறுக்கத்தையும் வேதனையையும் மறைப்பதில் உதவலாம். “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்,” என்று பைபிள் சொல்லுகிறது.—நீதிமொழிகள் 14:13.
நகைச்சுவையின் பல வகைகள் கேளிக்கை என்று சொல்லப்படுவதை உட்படுத்துகின்றன. ஒரு ஆள் தடுக்கிவிழுகிறார் அல்லது தண்ணீரில் நனைந்துவிடுகிறார். வேடிக்கை, அல்லவா? ஒருவேளை யாரும் உண்மையிலேயே காயம் அடையாமலிருந்தால் வேடிக்கைதான்.
தவறான அல்லது கொடுமையில் இன்பம்காணும் நகைச்சுவைக்கு ஓர் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளாதிருக்க ஒரு கிறிஸ்தவன் கடும் முயற்சி எடுக்கிறான். என்ன இருந்தாலும் அன்பு ‘அநியாயத்தில் சந்தோஷப்படுகிறதில்லை.’ (1 கொரிந்தியர் 13:6) எந்த நாட்டையோ இனத்தையோ தரக்குறைவுபடுத்தும் புண்படுத்துகிற தமாஷ்களையும் ஒரு கிறிஸ்தவன் தவிர்க்கிறான். தன்னுடைய நகைச்சுவை உணர்ச்சியை அவன் ‘இரக்கத்தோடு’ சமநிலைப்படுத்துகிறான். (1 பேதுரு 3:8) உதாரணமாக, சிறு குழந்தை ஒன்று தடுமாற்றத்தோடு ஒருசில அடிகள் எடுத்துவைத்தபின் அலங்கோலமாக விழுவதைக் காண்பது மகிழ்வூட்டும் தமாஷாக இருக்கலாம். அதேசமயம் வயதான ஒருவரோ ஊனமுற்ற ஒருவரோ விழுந்தால், சிரிப்பதல்ல, ஆனால் ஓடிச்சென்று அவருக்கு உதவுவதே தகுதியான செயலாக இருக்கிறது.
நகைச்சுவையும் உங்கள் உடல்நலமும்
தகுந்தமுறையில் பயன்படுத்தும்போது, நகைச்சுவை அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது. மெய்யாகவே சத்தமாக சிரிப்பது சிகிச்சையளிப்பதற்கான ஒரு கருவியாகக்கூட உதவலாம் என்பதற்கான சான்று சிறிதுசிறிதாக அதிகரித்துவருகிறது. சிரிக்கும் செயலானது ஒருவருடைய உள்ளுறுப்புகளுக்கு ஆரோக்கியமான ஒரு செய்தியை அனுப்புகிறது என்பது அறியப்பட்டதாக இருக்கிறது. மேலுமாக, அமெரிக்க உடல்நலம் (American Health) பத்திரிகை சொல்லுகிறபடி, சில “ஆராய்ச்சியாளர்கள் சத்தமாக சிரிப்பது நோய்த்தடைகாப்பு அமைப்பை வலுவூட்டுகிறது என்பதாக நினைக்கின்றனர்.” பின்னர் நோய்த்தடைகாப்பு வல்லுநர் லி S. பர்க் இவ்வாறு சொல்வதாக அந்தப் பத்திரிகை மேற்கோள்காட்டுகிறது: “எதிர்மறை உணர்ச்சிகள் நோய்த்தடைகாப்பு அமைப்பைக் கட்டுப்படுத்த முடியும். இப்போது நம்பிக்கைகரமான உணர்ச்சிகளும்கூட அதைப்போலவே கட்டுப்படுத்த முடியும்போல் தோன்றுகிறது.” இது பைபிளின் இந்த வார்த்தைகளில் உள்ள ஞானத்தை சிறப்பித்திக் காட்டுகிறது: “மகிழ்ச்சியான இருதயம் நோய்ப்போக்கியைப் போல நன்மைசெய்கிறது.”—நீதிமொழிகள் 17:22, NW.
நகைச்சுவையின் நோய்த் தீர்க்கும் வல்லமையை உபயோகிக்கும் நம்பிக்கைகளில், மருத்துவமனைகளில் சில சிரிப்பு அறைகள் என்றழைக்கப்படுபவற்றை அமைத்திருக்கின்றன. இவ்வறைகளில் நோயாளிகள் விளையாடலாம், வேடிக்கையான திரைப்படங்களைக் காணலாம், தமாஷ்களைக் கேட்கலாம், அல்லது வெறுமனே உறவினர்களோடு நல்ல மனமகிழ்ச்சியான சூழ்நிலையில் வந்துபோகலாம். நீங்கள் நகைச்சுவை உணர்வோடு நடந்துகொள்ள முடியுமா? எடுத்துக்காட்டாக, உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் ஒருவர் சுகமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். தகுந்த சந்தர்ப்பங்களில் நகைச்சுவையான புத்தகம் ஒன்றையோ வேடிக்கையான வாழ்த்திதழ் ஒன்றையோ அவனுக்கு அல்லது அவளுக்குக் கொடுப்பதன் மூலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவருடைய மனநிலையை நீங்கள் ஏன் பிரகாசிக்கச் செய்யக்கூடாது?
சத்தமாக சிரிப்பது கோபத்தையும் மட்டுப்படுத்தக்கூடும். டாக்டர் R. B. வில்லியம்ஸ், இளையவர், “கோபமாய் இருப்பது உங்கள் உடல்நலத்திற்கு கெடுதி விளைவிக்கும்” என்று சொல்கிறார். அதைப்போலவே பைபிள் சொல்லுகிறது: “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30) “சிரித்துக்கொண்டிருக்கும்போது கோபமாய் இருப்பது கடினமாக இருக்கிறது,” என்கிறார் டாக்டர் வில்லியம்ஸ். ஆம், ஒரு சூழ்நிலையில் உள்ள நகைச்சுவையைப் பார்ப்பது கோபத்தைக் கையாளும் முன்னேற்றவழிகளில் சிறந்த ஒன்றாக இருக்கிறது.
குடும்ப வட்டாரத்திற்குள்
நகைச்சுவையை குடும்பத்திற்குள் செயலாற்றும்படி செய்யலாம். கணவர் ஒருவர் சொல்கிறார்: “ஒரு மோட்டார் மெக்கானிக்குக்கு பல்நோக்கு கருவியை (multipurpose tool) போல அது எனக்கு உதவியாய் இருக்கிறது. காரணம் அது பல காரியங்களைச் செய்கிறது. அது பாதுகாக்கிறது, உற்சாகமூட்டுகிறது, பலனளிக்கக்கூடிய உரையாடல்களைத் தொடங்கிவைக்கிறது, முன்கூட்டியே கொண்டுள்ள தப்பான எண்ணங்களைப் போக்குகிறது, புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை நியாயமான மற்றும் கரிசனையுள்ள வார்த்தைகளாக மாற்றுகிறது.”
எரிச்சலூட்டும் பழக்கங்கள் உறவுகளை முறிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கும்போது நகைச்சுவை உணர்ச்சி சிறப்பாக உதவிபுரிவதாக இருக்கிறது. தன்னுடைய விளையாட்டு சாமான்களை எடுத்து வைக்கும்படி திரும்பத் திரும்ப புத்திசொல்லியிருந்தாலும் உங்களுடைய மகன் எடுத்துவைக்க மறந்துவிடுகிறான். உங்களுடைய கணவர் தன்னுடைய அழுக்குத் துணிகளை குளியலறை தரையிலேயே விட்டுவிடுகிறார். உங்கள் மனைவி இரவு சாப்பாட்டை தீய்த்துவிடுகிறாள். குறைகாணுதல், வெட்கப்படுத்துதல், பழிசுமத்துதல், பெருங்கூச்சலிடுதல், அல்லது கத்துதல் போன்றவை நிலைமைகளை இன்னும் மோசமடையத்தான் செய்கின்றன. சிவப்புப்புத்தகம் (Redbook) பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு உடல்நல ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு நபரை நீங்கள் எதிர்த்தாலோ அவரை கேலிசெய்தாலோ அவர் எதிர்ப்பவராகவே ஆகிறார். நகைச்சுவையோ மக்கள் தங்களுடைய நடத்தையை சிறிது தூரத்திலிருந்து பார்த்து அதை மாற்றும்படி அழைப்பு விடுக்கிறது.”
மடத்தனமாக நடந்துகொண்டதற்காக குற்றவுணர்ச்சியையுடைய நபரை கேலி செய்வதை இது அர்த்தப்படுத்தவில்லை. அது பொதுவாகவே சிரிப்பையல்ல, வேதனையையே உண்டுபண்ணுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தையே நகைச்சுவையாக மாற்ற முயற்சியுங்கள். நன்றாக சிரிப்பதுதானே மன இறுக்கத்தை அதிகளவு தணிக்கமுடியும். ஒரு மனைவி சொல்கிறார்: “நான் கோபப்படப்போகும் சந்தர்ப்பங்களை என் கணவர் கவனிக்கிறார். அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் நகைச்சுவையாக ஏதோவொன்றைச் சொல்லி அல்லது செய்து கோபத்தைத் தணித்துவிடுகிற சமயங்களும் உண்டு. நான் அதை உணருமுன்தானே சிரித்துகொண்டிருக்கிறேன். பின்னர் அது அவ்வளவு பெரிய விஷயமே இல்லை என்று உணருகிறேன்.”
இருப்பினும் சில எச்சரிப்புகள். விளையாட்டாக இருக்கக்கூடாத அல்லது இரக்கப்படவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் வேடிக்கையாக நடந்துகொள்வதைத் தவிருங்கள். நீதிமொழிகள் 25:20 சொல்வதை கவனியுங்கள்: “மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.” உணர்ச்சிசம்பந்தமாகவோ சரீரப்பிரகாரமாகவோ புண்படுத்தாதிருக்க, நகைச்சுவையை விவேகத்தோடு மட்டுமே பயன்படுத்தவேண்டும். நகைச்சுவை ஒருபோதும் அசிங்கமானதாகவோ அவமரியாதையானதாகவோ இல்லாதிருக்கட்டும். மூத்த பிள்ளைகள் தங்களுடைய இளைய உடன்பிறப்புக்களை இடைவிடாமல் கிண்டல் செய்வதற்கான இலக்காக்கி விடுவதற்கு இடங்கொடுப்பதை இது தடைசெய்கிறது. பெருந்தன்மையோடு கிண்டல் செய்வது ஒரு காரியம், ஆனால் புண்படுத்தும் குறிப்புகள் மற்றொன்று. திருமணத் துணைகளும் நகைச்சுவையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கவேண்டும். அதைக் குறைகாண்பதற்கான ஒரு கருவியாகவோ தாழ்வுபடுத்துவதற்கான ஒரு வழியாகவோ பயன்படுத்தக்கூடாது.
கவிஞர் லேங்ஸ்டன் ஹியூஸ் ஒருமுறை எழுதினார்: “வரவேற்கப்படும் ஓர் கோடை மழைபோன்று, நகைச்சுவை திடீரென பூமியையும் காற்றையும் உங்களையுமே தூய்மைப்படுத்தி குளிர்விக்கலாம்.” மெய்யாகவே, நகைச்சுவை நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கக்கூடும். நகைச்சுவை நம்மையே ஒரு பொருட்டாக நாம் நினைப்பதைத் தவிர்க்க உதவலாம். மனமகிழ்ச்சியுடனும் தளர்ந்த மனநிலையிலும் இருக்க அது உதவக்கூடும். மற்றவரோடு உள்ள உறவை மென்மையாக்கக்கூடும். இன்னலைச் சகிப்பதற்கு அது நமக்கு உதவலாம். நம்முடைய உடல்நலத்தையும்கூட அது முன்னேற்றுவிக்கக்கூடும்.
ஆகவே உங்கள் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டுங்கள். அதைக் கண்டுபிடியுங்கள். அதைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களிடமும் உங்களைச் சுற்றியுள்ளோரிடமும் அற்புதங்களை நடப்பிக்கும்!
[பக்கம் 26-ன் படம்]
குடும்பத்தில் நடக்கும் எதிர்பாரா சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ள நகைச்சுவை உதவலாம்