வலி இல்லாத வாழ்க்கை சமீபமாயிருக்கிறது!
தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உடலின் சிக்கல்வாய்ந்த நுட்பமான செயல்முறைகள் நிச்சயமாகவே ஓர் அதிசயமாக உள்ளன. அவற்றை ஆராய்வது பின்வருமாறு எழுதிய பைபிளின் சங்கீதக்காரன் செய்ததுபோல படைப்பாளரை துதிக்க நம்மைத் தூண்டவேண்டும்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.” (சங்கீதம் 139:14) உண்மையிலே வலியில்லாத வாழ்க்கையை கடவுள் ஒருவரால் மாத்திரமே கூடிய காரியமாக்க முடியும்! ஆனால் இது எவ்வாறு நிறைவேற்றப்படும்?
வலியும் கண்ணீரும் நீக்கப்படுவதைப் பற்றிய வாக்குறுதிக்குச் சற்று முன்பாக, பைபிள் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்”பற்றியும்; “முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின” என்று சொல்வதையும் கவனியுங்கள். (வெளிப்படுத்துதல் 21:1, 4) நிச்சயமாகவே நம்முடைய சொல்லர்த்தமான வானமும் பூமியும் ஒழிந்து போவதைப் பற்றி பைபிள் பேசிக்கொண்டில்லை. மாறாக, சுருக்கமாகச் சொன்னால், முற்றிலும் புதிய ஓர் காரிய ஒழுங்குமுறை தற்போதிருப்பதை மாற்றீடு செய்யும் என்பதாக அது சொல்கிறது. ஆம், ஒரு புதிய மீமானிட அரசாங்கம் இங்கே பூமியிலேயே வலியில்லாத ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதைக் கூடியகாரியமாக்கும்.
இந்த அரசாங்கத்தை விவரிக்கையில், பைபிள், “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [அல்லது, அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்,” என்று சொல்கிறது. (தானியேல் 2:44) இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில், அவர் பின்வருமாறு சொன்னபோது, இந்த ராஜ்ய அரசாங்கத்துக்காக ஜெபிக்கும்படியாக அவர் நமக்குக் கற்பித்தார்: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
ஆனால் அந்த ஜெபத்தின் நிறைவேற்றம் எவ்விதமாக உங்களுக்கு வலியில்லாத வாழ்க்கையை அர்த்தப்படுத்தக்கூடும்?
மீமானிட வல்லமையுள்ள ஓர் அரசர்
கடவுள் தம்முடைய அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்த தெரிந்துகொண்டிருக்கிறவருடைய ஞானமும் வல்லமையும்தானே இதற்கு அடிப்படையாக இருக்கிறது. அவரே இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். அவரைப் பற்றி ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது: “அந்த அரசாங்கம் அவர் தோளின்மேலிருக்கும்; . . . அவருடைய அரசாங்கத்தின் பெருக்கத்துக்கும் அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7, கிங் ஜேம்ஸ் வர்ஷன்.
இப்பொழுது பரலோகத்திலிருக்கும் இயேசுவின் ஞானம், பூமியிலுள்ள எல்லா மருத்துவர்களுடையதைக் காட்டிலும் மிக உயர்ந்ததாகும். காயங்களிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் அதன் அமைப்புகள் உட்பட நம்முடைய மாம்ச உடலின் செயல்முறைகளை அவர் முழுமையாக புரிந்துகொள்கிறார். அவர் 1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் இருந்தபோது, அவரால் சுகப்படுத்த முடியாத ஒரு வியாதியோ நோயோ இருக்கவில்லை. கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக அவர் பெரிய அளவில் செய்யப்போவதை இவ்விதமாக செய்துகாட்டினார். ஒரு சந்தர்ப்பத்தைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்லுகிறது:
“அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்”டார்கள். (மத்தேயு 15:30, 31) இயேசு தம்முடைய ராஜ்யத்தில் சுகப்படுத்தப்போகிற நோய்களில் அந்தப் பயங்கரமான, தீராத வலியும் இருக்கும்.
ஆம், என்னே மகத்தான ஓர் ஆசீர்வாதமாக அது இருக்கும்! மேலும் வெகு சிலருக்கு மாத்திரம் அது செய்யப்படாது. படைப்பாளருடைய வாக்குறுதி: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) பின்னர், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ், ‘இனி வலியுமில்லை,’ என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும்.—வெளிப்படுத்துதல் 21:4, NW.
கிறிஸ்துவின் மகிமையான ராஜ்ய ஆட்சியின்கீழ், தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாப்பது உட்பட, நம்முடைய உடலின் அநேக நுட்பமான செயல்முறைகளும் பரிபூரணமாக இயங்கும், ஏனென்றால் சுதந்தரிக்கப்பட்ட பாவம் நீக்கப்பட்டிருக்கும். நம்முடைய வலி உணர்வு வாதிக்கும் ஒன்றாக ஒருபோதும் ஆகாது. சந்தோஷகரமாகவே, இப்பொழுது நிறைவேறிவரும் பைபிள் தீர்க்கதரிசனங்களின்படி, நாம் அந்தப் புதிய உலகின் வாயிலில்தானே இருக்கிறோம், அங்கே வலி ஒருபோதும் துயரத்தை உண்டுபண்ணாது.—மத்தேயு 24:3-14, 36-39; 2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:11-13.
இப்பொழுது லட்சக்கணக்கான ஆட்களை வாதித்துக்கொண்டிருக்கும் வகையான அந்த வலி இனிமேலும் இல்லாதிருக்கும் அந்தக் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம். ஆனால் நீங்கள் ஏதோவொன்றைச் செய்யவேண்டும். இயேசு கிறிஸ்து கடவுளிடம் ஜெபிக்கையில் இந்த அடிப்படைத் தேவையைச் சுட்டிக்காட்டினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
இன்றியமையாத இந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்ய யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். உங்கள் பிராந்தியத்திலுள்ள அவர்களில் ஒருவரிடம் கேளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் அல்லது வசதியான வேறு ஏதாவது ஓர் இடத்தில் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க நீங்கள் விரும்புவதைத் தெரியப்படுத்தி இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு எழுதுங்கள். மனிதர்கள் வலியில்லாத வாழ்க்கையை அனுபவிப்பதற்கான கடவுளுடய நோக்கங்களைப் பற்றி அதிகத்தை நீங்கள் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் அப்பொழுது செய்யப்படும்.