இனி இல்லாமல் போகும் அந்த வலி
பைபிள் வாக்குறுதியின் நிறைவேற்றமாக நீக்கப்படப் போகும் அந்த வலி, முதல் மனிதனுடைய அபூரணத்தின் விளைவாக அனுபவிக்கப்பட்டு வரும் வலியாகும். இது தீராத வலி என்பதாக விவரிக்கப்படக்கூடிய அந்த வலியையும் உட்படுத்துகிறது.
நோய் அல்லது காயத்துக்கு எச்சரிக்கும் ஓர் அமைப்பாக இருப்பதற்கு பதிலாக, தீராத வலி, “நிறுத்த முடியாத ஒரு அபாய அறிவிப்பொலிக்கு” ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த வலிதானே அவதிப்படுகிறவர்கள் நிவாரணம் நாடி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்கள் பணத்தை செலவழிக்கும்படி செய்கிறது, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை பாழாக்கியும்விடுகிறது.
வலி நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் A. ஸ்டெர்ன்பாக் எழுதினார்: “கடுமையான வலியைப் போலில்லாமல், தீராத வலி ஒரு நோய்க்குறியாக இல்லை. தீராத வலி எச்சரிக்கும் அறிகுறி அல்ல.” அவசர மருத்துவம் (Emergency Medicine) இவ்விதமாக அழுத்திக்கூறியது: “தீராத வலிக்கு எந்த நோக்கமுமில்லை.”
இதன் காரணமாக, அண்மை ஆண்டுகளில் அநேக மருத்துவர்கள் இப்படிப்பட்ட ஒரு வலியையே உண்மையான ஒரு நோயாக கருத ஆரம்பித்திருக்கிறார்கள். “கடுமையான வலியில், வலியானது நோய் அல்லது காயத்துக்கு நோய்க்குறியாக இருக்கிறது,” என்பதாக வலியின் பேரில் இன்றுள்ள ஏற்புடைய பாடப்புத்தகமாகிய வலியை சமாளித்தல் (The Management of Pain) புத்தகத்தில் ஜான் J. பானிக்கா விவரிக்கிறார். “தீராத வலியில் வலிதானே நோயாக இருக்கிறது.”
வலியைப் புரிந்துகொள்ள முயற்சிகள்
வலி இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. “வலி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்வதற்கான நிலையான கவர்ச்சி அறிவியல் அறிஞர்களைத் தீவிரமாக வேலைசெய்யும்படிச் செய்திருக்கிறது,” என்பதாக அமெரிக்கன் ஹெல்த் பத்திரிகை சொன்னது. ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பாக, வலி என்பது பார்வை, கேட்டல், தொடுதல் போன்றே தோலிலுள்ள விசேஷித்த நரம்பு முனைகளால் உணரப்பட்டு குறிப்பிட்ட நரம்பிழைகளால் மூளைக்குக் கடத்தப்படும் உணர்வின் ஒரு வகை என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் வலியைப் பற்றிய இந்த எளிமையான கருத்து உண்மையில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி?
வலி உணர்வே இல்லாத ஓர் இளம் பெண்ணை வைத்து செய்த ஆய்வே அந்தப் புதிய உட்பார்வைக்கு வழிநடத்திய ஒரு காரியமாகும். 1955-ல் அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து, அவளுடைய மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பரிசோதனைச் செய்தது, வலிக்கான காரணத்தைப் பற்றி முற்றிலும் புதிய ஒரு கருத்துக்கு வழிநடத்தியது. மருத்துவர்கள் “நரம்பு முனைகளுக்காக தேடினர்,” என்பதாக 1960, ஜூலை 30 தேதியிட்ட தி ஸ்டார் வீக்லி மேகஸீன் விளக்கியது. “[அவளுக்கு] அது எதுவும் இல்லையென்றால், சரீர வலிக்கு அவள் உணர்ச்சியற்றவளாக இருந்ததற்கு அது காரணமாக இருந்திருக்கும். ஆனால் நரம்பு முனைகள் அங்கிருந்தன, தோற்றத்தில் குறைபாடில்லாதவையாகவும் இருந்தன.
“அடுத்து, மருத்துவர்கள் நரம்பு முனைகளை மூளையோடு இணைப்பதாக கருதப்படும் நரம்பிழைகளைப் பரிசோதனை செய்து பார்த்தனர். இங்கே, நிச்சயமாகவே குறைபாடு காணப்படலாம். ஆனால் இல்லை. நரம்பிழைகள் பார்க்க முடிந்தவரையில், காயத்தின் காரணமாக சிதைந்துபோனவற்றைத் தவிர குறைபாடில்லாதவையாக இருந்தன.
“கடைசியாக, அப்பெண்ணின் மூளைப் பரிசோதிக்கப்பட்டது, மறுபடியுமாக, எந்த ஒரு வகையான குறையையும் நிர்ணயிக்க முடியவில்லை. இருக்கிற எல்லா அறிவு மற்றும் கோட்பாட்டின் படியும், இந்தப் பெண் இயற்கையாக வலியை உணர்ந்திருக்க வேண்டும், என்றாலும், மெய்க்கூச்ச உணர்ச்சியும்கூட அவளுக்கு இல்லை.” ஆனால் தோல் மீது செலுத்தப்பட்ட அழுத்தத்தை அவளால் உணரமுடிந்தது, குண்டூசியினால் குத்தும்போது அவள் வலியை உணரவில்லை என்றாலும் குண்டூசியின் தலையும் குண்டூசியின் கூர்முனையும் தொடுகையில் அதற்கிடையே வித்தியாசத்தை அவளால் உணரமுடிந்தது.
வலியை விளக்குவதற்கு 1960-களில் பிரபலமான ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குவதற்கு உடன் ஆசிரியராக இருந்த ரானல்ட் மெல்சக் அதன் சிக்கலானத் தன்மைக்கு மற்றொரு உதாரணத்தை அளிக்கிறார். அவர் விளக்கினார்: “திருமதி ஹல் அங்கு இல்லாத [அது வெட்டப்பட்டிருந்தது] தன் காலைச் சுட்டிக்காட்டிக்கொண்டு, தன்னுடைய கால் விரல்களினூடாக பழுக்கக் காய்ச்சிய ஒரு கம்பியை வைத்துக் குத்துவது போன்று எரிகிற வலியை அவள் விவரித்தாள்.” மெல்சக் “‘போலி வலி’ என்பதாக அவர் அழைக்கும் வலிக்கு இன்னும் விளக்கத்தைத் தேடிக்கொண்டிருப்பதாக,” மக்ளீன்ஸ் பத்திரிகையிடம் 1989-ல் தெரிவித்தார். மேலுமாக, உடலின் ஒரு பாகம் சரியாக இயங்காமலும் ஆனால் வலி வேறொரு இடத்திலுமாக இருக்கும், பரவும்வலி என்றழைக்கப்படுகிற ஒரு வகை வலியும் இருக்கிறது.
மனமும் சரீரமும் இரண்டுமே உட்பட்டிருக்கின்றன
வலி என்பது இப்பொழுது “மனது, சரீரம் ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள அதீத சிக்கலான பின்னிய செயல்விளைவே” என்பதாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வலி (Pain in America) என்ற தன்னுடைய 1992-ம் புத்தகத்தில், மேரி S. ஷெரிடன், “வலியின் அனுபவம் அத்தனை அதிகமாக மனதால் நேரடியாக உணரப்படுவதால் சிலசமயங்களில் மனது, வலி இருப்பதை மறுதலிக்கவும் சிலசமயங்களில் அதை உருவாக்கி கடுமையான காயம் மறைந்து நீண்ட காலத்துக்குப் பின்பும் அதைத் தக்கவைத்துக்கொண்டும் இருக்கமுடியும்,” என்று சொல்கிறார்.
ஒருவருடைய மனநிலை, மன ஒருமை, ஆளுமை, ஆலோசனைக்கு மசியும் இயல்பு போன்றவையும் இன்னும் மற்ற காரணிகளும் ஒருவர் வலிக்கு எவ்விதமாக பிரதிபலிக்கிறார் என்பதில் முக்கியமாக இருக்கின்றன. “பயமும் கவலையும் மிகைப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பை உண்டுபண்ணுகின்றன,” என்பதாக வலி சம்பந்தப்பட்டதில் நிபுணரான டாக்டர் பானிக்கா குறிப்பிட்டார். இவ்விதமாக ஒருவர் வலியை உணரக் கற்றுக்கொள்ளக்கூடும். வலி சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கைதேர்ந்தவராக இருக்கும் மன இயல் பேராசிரியர் டாக்டர் வில்பர்ட் ஃபார்டிஸ் விளக்குகிறார்:
“வலி உண்மையானதா என்பது கேள்வி அல்ல. நிச்சயமாகவே அது உண்மையாகவே இருக்கிறது. அதில் செல்வாக்கு செலுத்தும் அதிமுக்கியமான காரணிகள் யாவை என்பதே கேள்வியாக இருக்கிறது. இரவு உணவுக்கு முன்னால் ஹாம் சாண்விட்ச் (இறைச்சி கலவை இடையில் வைக்கப்பட்ட ஒரு ரொட்டித்துண்டு) பற்றி உங்களிடம் நான் பேசினால், உங்களுக்கு வாய் ஊறுகிறது. அது மிகவும் உண்மையாக இருக்கிறது. ஆனால் அது சூழ்நிலையினால் ஏற்படுகிறது. அங்கு ஹாம் சாண்விட்ச் எதுவும் இல்லை. மனிதர்கள் சூழ்நிலையின் உணர்ச்சிக்கு மிக நேர்த்தியாக உட்படக்கூடியவர்கள். சமுதாய நடத்தை, வாயூறல், இரத்த அழுத்தம், உணவை செரிமானம் செய்யும் வேகம், வலி போன்ற எல்லா காரியங்களின்மீதும் செல்வாக்கு செலுத்துகிறது.”
உங்கள் உணர்ச்சிகளும் மனநிலையும் வலியை தீவிரப்படுத்தும் விதமாகவே அவை அதை அடக்க அல்லது குறைக்க முடியும். ஓர் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நரம்பியல் அறுவை மருத்துவர் ஒருவர் தான் இளைஞனாக இருந்தபோது, ஒரு பெண்ணிடம் அவ்வளவு மயங்கி இருந்ததால் அவளோடு உறைபனி மூடிய ஒரு சுவரில் உட்கார்ந்திருந்தபோது கடுங்குளிரையோ அல்லது தன் பிட்டத்தில் வலியையோ உணராதிருந்ததை சொன்னார். “நான் பனிக்கடுப்பினால் தாக்கப்பட்டிருந்தேன்,” என்று அவர் விளக்கினார். “நாங்கள் அங்கு 45 நிமிடங்கள் உட்கார்ந்திருந்திருக்க வேண்டும், கடுங்குளிர் எதையும் நான் உணரவில்லை.”
இப்படிப்பட்ட உதாரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. விளையாட்டில் வெகுவாக மூழ்கியிருக்கும் கால்பந்து ஆட்டக்காரர்கள் அல்லது விறுவிறுப்பான போரில் ஈடுபட்டிருக்கும் போர்வீரர்கள் மோசமாக காயமடைந்திருந்தாலும் அந்தச் சமயத்தில் சிறிது அல்லது எந்த வலியையும் உணருவதில்லை. ஆப்பிரிக்காவில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்த பிரபல ஆய்வாளர் டேவிட் லிவிங்ஸ்டன், ஒரு சிங்கத்தால் தாக்கப்பட்டதைப் பற்றி சொன்னார். “எலியிடம் ஒரு வேட்டைநாய் நடந்துகொள்வதைப்போல” இது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்த அதிர்ச்சி ஒரு வகையான கனவுத்தோற்றத்தை உண்டுபண்ண, அங்கு எந்த வலியும் இல்லை.”
யெகோவா தேவனை முழு நம்பிக்கையோடும் உறுதியோடும் அமைதியாக நோக்கியிருக்கும் அவருடைய ஊழியக்காரர்களும்கூட சிலசமயங்களில் தங்கள் வலி தணிக்கப்படுவதை அனுபவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “விநோதமாகத் தோன்றினாலும், முதல் சில அடிகளுக்குப் பின், நான் உண்மையில் அவற்றை உணரவில்லை. பதிலாக, தூரத்தில் முரசு அடிக்கப்படுவதைப்போன்று நான் அவற்றை கேட்பதுபோலவே இருந்தது,” என்று அடிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர் தெரிவித்தார்.—பிப்ரவரி 22, 1994, ஆங்கில விழித்தெழு!, பக்கம் 21.
எவ்விதமாக வலி உணர்ச்சிகளின் கடுமை தணிக்கப்படுகின்றன
வலியினுடைய புரியாத அம்சங்கள் சிலவற்றை விளக்கும் முயற்சியில், 1965-ல் மன இயல் பேராசிரியர் ரானல்ட் மெல்சக் என்பவரும் உறுப்பியல் பேராசிரியர் பேட்ரிக் வால் என்பவரும் மிகப் பரவலாக பாராட்டுப்பெற்ற வாயில் கட்டுப்பாட்டு வலிக் கோட்பாடு என்பதை உருவாக்கினர். வலி பற்றிய டாக்டர் பானிக்காவின் பாடப்புத்தகத்தின் 1990 பதிப்பு, இந்தக் கோட்பாடு “வலி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை துறையில் அதிமுக்கியமான வளர்ச்சிகளில் இடம்பெறுவதாக” சொன்னார்.
இந்தக் கோட்பாட்டின் பிரகாரம், தண்டுவடத்தில் கொள்கையளவிலுள்ள வாயில் திறப்பதும் மூடிக்கொள்வதும் வலி மின்துடிப்புகள் மூளைக்குக் கடந்துசெல்வதை அனுமதிக்கவோ தடைசெய்யவோ செய்கின்றன. வலியைத் தவிர மற்ற உணர்ச்சிகள் வாயிலை அடைத்துக்கொண்டால், மூளையை வந்தடையும் வலி மின்துடிப்புகள் குறைந்துவிடலாம். இதனால்தான், உதாரணமாக, இலேசாக சுட்டுக்கொண்டுவிட்ட விரலைத் தேய்ப்பது அல்லது ஆட்டுவதால் வலி குறைக்கப்படுகிறது, ஏனென்றால் வலி மின்துடிப்புகள் கடத்தப்படுவதோடு குறுக்கிடுவதற்கு வலியினுடையதைத் தவிர மற்ற மின்துடிப்புகள் தண்டுவடத்திற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றன.
நம்முடைய உடல்கள் என்டார்ஃபின் என்றழைக்கப்படும் நோவாற்றும் வஸ்துக்கள் போன்றவற்றை தாமாகவே உற்பத்திசெய்கின்றன என்ற 1975-ன் கண்டுபிடிப்பு, வலியின் புரியாத அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வில் மேலுமாக உதவியது. உதாரணமாக, சில ஆட்கள் என்டார்ஃபினை அதிக அளவில் உற்பத்தி செய்வதால் குறைவாக அல்லது எந்த வலி உணர்வும் இல்லாமல் இருக்கலாம். துளையீட்டு மருத்துவமுறை (acupuncture), அதாவது மயிரளவு மெல்லிய ஊசிகளால் உடலைத் துளைக்கும் மருத்துவ முறையால் வலி எவ்விதமாக குறைக்கப்படுகிறது அல்லது நீக்கவும்படுகிறது என்ற புதிரையும்கூட என்டார்ஃபின்கள் விளக்கக்கூடும். கண்கூடாக கண்ட சாட்சிகளின் அறிக்கைகளின்படி, துளையீட்டு மருத்துவமுறை ஒன்றை மட்டுமே நோவகற்றும் மருந்தாக பயன்படுத்தி நோயாளி தூங்காமலும், விழிப்பாயும், தளர்ந்த நிலையிலும் இருக்கையில் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது! ஏன் எந்த வலியும் உணரப்படவில்லை?
ஊசிகள் என்டார்ஃபின் உற்பத்தியை தூண்ட அது வலியைத் தற்காலிகமாக துடைத்துவிடுகிறது என்பதாக சிலர் நம்புகிறார்கள். மற்றொரு சாத்தியம், துளையீட்டு மருத்துவமுறை வலியை போக்குகிறது, ஏனென்றால் ஊசிகள் வலியைத் தவிர மற்ற மின்துடிப்புகளை அனுப்பும் நரம்பிழைகளைத் தூண்டிவிடுகிறது. இந்த மின்துடிப்புகள் தண்டுவடத்திலுள்ள வாயில்களை நெருக்க, வலி மின்துடிப்புகள் வலி உணரப்படுகிற மூளையை வந்தடைவதைத் தடைச்செய்கின்றன.
வாயில் கட்டுப்பாட்டு கோட்பாடும் உடல் தன் சொந்த வலி நிவாரணிகளை உற்பத்திசெய்யும் உண்மையும், ஏன் ஒருவருடைய மனநிலை, எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் உணரப்படும் வலியின் அளவினைப் பாதிக்கின்றன என்பதையும் விளக்கலாம். இவ்விதமாக ஒரு சிங்கத்தின் திடீர் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சி லிவிங்ஸ்டனின் என்டார்ஃபின் உற்பத்தியைத் தூண்டி, வலியைத் தவிர மற்ற மின்துடிப்புகள் அவருடைய தண்டுவடத்தை மூழ்கடித்துவிட்டிருக்கலாம். இதன் விளைவாக அவருக்கு வலி உணர்ச்சிகள் குறைவாக இருந்தன.
இருந்தபோதிலும், முன்பு குறிப்பிடப்பட்ட விதமாகவே, ஒருவரின் மனநிலையும் உணர்ச்சிகளும் எதிர்மாறான பாதிப்பைக் கொண்டிருக்கலாம். அசல் நவீன வாழ்க்கையின் அதீத அளவான தினசரி அழுத்தமானது, கவலை, இறுக்கம் மற்றும் தசை சுருங்குதல்களை உண்டுபண்ணுவதன் மூலம் ஒரு நபரின் வலி உணர்வினை அதிகப்படுத்தலாம்.
மகிழ்ச்சிக்குரிய விதமாகவே, வலியில் அவதிப்படுகிறவர்களுக்கு நம்பிக்கைகொள்ள காரணமிருக்கிறது. இது ஏனென்றால் அநேக நோயாளிகள் இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகளிலிருந்து இப்போது நன்மையடைந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட முன்னேற்றங்கள் பயங்கரமான இந்த நோயினைச் சரியாகப் புரிந்துகொள்வதன் விளைவாக இருக்கின்றன. வலி மருத்துவ அமெரிக்க கல்விச்சாலையின் தலைவர் டாக்டர் ஸ்ரீதர் வாசுதேவன் இவ்வாறு விளக்கினார்: “வலி என்பது சிலசமயங்களில் தன்னில்தானே ஒரு நோயாக இருக்கக்கூடும் என்ற கருத்து 1980-களில் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்திருக்கிறது.”
வலிக்கு சிகிச்சை அளிப்பதில் புரட்சிகரமான மாற்றங்கள் எவ்விதமாக நடந்தேறியிருக்கின்றன? என்ன சிகிச்சைகள் பலனுள்ளவையாக நிரூபித்துவருகின்றன?
[பக்கம் 7-ன் படம்]
துளையீட்டு மருத்துவமுறை எவ்விதமாக வலியை குறைக்கிறது அல்லது நீக்குகிறது?