வலிக்கு சிகிச்சையளிப்பதில் முன்னேற்றம்
சமீப காலம் வரையிலுமாக வெகு சில மருத்துவர்களே வலியைப் பற்றி அதிகம் அறிந்தவர்களாக இருந்தார்கள், அநேகர் இன்னும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சர்வதேச வலி ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜான் லீபெஸ்கின்ட் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வாறு குறிப்பிட்டார்: “வலி பிரச்னைகளைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க மாணவர்களுக்குப் போதிப்பதற்கு நான்கு வருடங்களில் நான்கு மணிநேரத்துக்கு மேலாக செலவழிக்கும் ஒரு மருத்துவ கல்லூரி உலகிலேயே இல்லை என்று நான் நினைக்கிறேன்.”
என்றாலும், வலியைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் அதற்குச் சிகிச்சையளிப்பதில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளோடு தற்செயலாகப் பொருந்தியிருக்கின்றன. இதன் காரணமாக வலியில் அவதிப்படுகிறவர்களுக்கு எதிர்கால வாய்ப்பு பிரகாசமாக ஆகியிருக்கிறது. “தீராத வலி வெறும் நோய்க்குறி அல்ல, ஆனால் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய ஒரு நோயாகவே இருப்பதை இப்பொழுது மருத்துவம் உணர்ந்துகொண்டிருப்பதற்காக நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்,” என்பதாக அமெரிக்கன் ஹெல்த் பத்திரிகை அறிவித்தது. இந்த நோக்குநிலை, பிரத்தியேகமாக வலிக்கு சிகிச்சையளிப்பதற்காகவே இருக்கும் தனி மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
வலிக்கு சிகிச்சையளிக்கப்படும் இடங்களில்
டாக்டர் ஜான் J. பானிக்கா ஐக்கிய மாகாணங்களில் வலிக்கென்று பல துறைகளடங்கிய முதல் தனி மருத்துவமனையைத் திறந்தார். “உலகிலேயே 1969-ல் இப்படிப்பட்ட தனி மருத்துவமனைகள் 10 மாத்திரமே இருந்தன,” என்று அவர் தெரிவித்தார். ஆனால் பிரத்தியேகமாக வலிக்கு சிகிச்சையளிப்பதற்கென்றே இருக்கும் தனி மருத்துவமனைகளின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கவிதமாக அதிகரித்துவிட்டிருக்கிறது. இப்பொழுது வலிக்கென்று ஆயிரத்துக்கும் மேலான தனி மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலுமாக தேசிய தீராதவலி விரிவாக்க சங்கத்தின் பிரதிநிதி, “ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் புதியவைகள் திறக்கப்பட்டுவருகின்றன,” என்று குறிப்பிட்டார்.a
அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! “வினைமையான வலியிலிருந்து விடுதலை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல் தூரம் பிரயாணம் செய்துவந்த நோயாளிகள் இப்பொழுது அதை அருகாமையில் பெறக்கூடும்,” என்பதாக நியூ யார்க் நகர மயக்க மருந்து மருத்துவர் டாக்டர் கேரி ஃபெல்ட்ஸ்டைன் குறிப்பிட்டார். அவதிப்படுகிறவர் நீங்களாக இருந்தால், வலிக்கு சிகிச்சையளிப்பதில் பயிற்சிபெற்ற நிபுணர்களின் ஒரு குழுவிடமிருந்து உதவியைப் பெறுவது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்!
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாணக் கண்காணியின் மனைவி லிண்டா பார்சன்ஸ் பல ஆண்டுகளாக முதுகு வலியை அனுபவித்தாள். உதவியை நாடி ஒரு மருத்துவருக்குப் பின் ஒரு மருத்துவரிடமாக சென்றாள், ஆனால் அவளுடைய வலி குறைந்தபாடில்லை. கடந்த வருடம் மே மாதத்தில் ஒரு நாள், நம்பிக்கை இழந்த நிலையில், அவளுடைய கணவன் தொலைபேசி புத்தகத்தை எடுத்து “வலி” என்ற தலைப்பின்கீழ் பார்த்தார். அங்கே தென் கலிபோர்னியாவில் அவர்கள் சேவை செய்துவந்த இடத்திற்கு அருகே வலிக்கென்று இருந்த ஒரு தனி மருத்துவமனையின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. மருத்துவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது, ஒருசில நாட்களுக்குப் பின் லிண்டா முதல் முறையாக ஆலோசனைக்காகவும் பரிசோதனைக்காகவும் மருத்துவரைச் சந்தித்தாள்.
மருத்துவமனை புறநோயாளியாக லிண்டா சிகிச்சைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிகிச்சைக்காக வாரத்துக்கு மூன்று தடவைகள் தனி மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்து, வீட்டிலும்கூட ஒரு சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றினாள். ஒருசில வாரங்களில், கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை அவள் உணர ஆரம்பித்தாள். அவளுடைய கணவன் விளக்குகிறார்: “ஒரு நாள் மாலை, ‘எந்த வலியும் எனக்கு இல்லாதிருப்பதை என்னால் நம்பமுடியவில்லை,’ என்பதாக அவள் ஏறக்குறைய ஆச்சரியமாகச் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது.” சில மாதங்களுக்குள் தனி மருத்துவமனைக்கு வழக்கமாகச் செல்வது நிறுத்தப்பட்டிருக்கக்கூடும்.
லிண்டா தன் வலியைச் சமாளிப்பதற்குப் பெற்றுக்கொண்ட உதவி, வலிக்கென்று இருக்கும் பல துறைகளடங்கிய அநேக தனி மருத்துவமனைகளால் அளிக்கப்படுவதை ஒத்திருக்கிறது. இப்படிப்பட்ட தனி மருத்துவமனை உடல்நல சேவையில் தேர்ச்சிபெற்ற ஒரு குழுவின் சிறப்புத் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. டாக்டர் பானிக்காவின் பிரகாரம், இது “தீராத வலியைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த அணுகுமுறையாகும்.” உதாரணமாக லிண்டா எவ்விதமாக அவளுடைய வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டாள்?
வலிக்கு எவ்விதமாக சிகிச்சையளிக்கலாம்
தனி மருத்துவமனையில் வந்திறங்கிய உடன் கொடுக்கப்படும் சிற்றேடு ஒன்று செயல்முறையை விவரிக்கிறது: “வலியின் காரணத்திற்கான அடிப்படையை மருத்துவர் ஒருவர் மதிப்பிட ஒவ்வொருவரும் சோதிக்கப்பட்டனர். பின்னர் நடைமுறைக்கு ஏற்ற இலக்குகளும் சிகிச்சை திட்டங்களும் சுருக்கமாக விவரித்துக்கூறப்படுகின்றன. . . . வலியையும் கவலையையும் குறைத்து மருந்துகளின்மீது சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காக ‘என்டார்ஃபின்களை’ (இயற்கையாக உடலில் உற்பத்திசெய்யப்படும் ரசாயனங்கள்) விடுவிப்பதற்கு உடலுக்கு உதவிசெய்வதற்காக விசேஷித்த உத்திகளும் அணுகுமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.”
லிண்டா பெற்றுக்கொண்ட சிகிச்சைகளில் துளையீட்டு மருத்துவமுறையும் (தோலினூடாக) மின் ஆற்றலைச் செலுத்தி நரம்பைத் தூண்டுதல் முறையும் (TENS) அடங்கும். அவள் தனி மருத்துவமனையில் மின் ஆற்றல் தூண்டுதல் சிகிச்சையைப் பெற்றாள், வீட்டில் பயன்படுத்துவதற்கு ஒரு சிறிய TENS கருவியும் கொடுக்கப்பட்டது. நோயாளி தன் உடலின் பிரதிபலிப்புகளைக் கண்காணித்து வலியின் தாக்குதலைக் குறைப்பதற்கு அவற்றை சிறிது மாற்றியமைக்க நோயாளிக்கு கற்றுக்கொடுக்கப்படும் உடலியங்கல் மாற்றக்குறிப்பும்கூட (Biofeedback) பயன்படுத்தப்பட்டது.
ஆழத்திலிருக்கும் திசுக்களைத் தேய்த்துப் பிசைந்துவிடுதல் உட்பட, இயன்முறை சிகிச்சையும் சிகிச்சை திட்ட முறையின் ஓர் அம்சமாகும். காலப்போக்கில், லிண்டா அதற்கு தயாராக இருந்தப் பின்தானே, தனி மருத்துவமனையின் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, அது சிகிச்சையின் இன்றியமையாத பாகமானது. உடற்பயிற்சி அத்தியாவசியமானது, ஏனென்றால் தீராத வலியினால் குறைந்துவிடும் என்டார்ஃபின்களை அது பழைய நிலைக்குக் கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வலியிலிருக்கும் ஆட்களுக்கு பிரயோஜனமுள்ள உடற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவிசெய்வது சவாலாக உள்ளது.
தனி மருத்துவமனைக்கு வருகின்ற, தீராத வலியினால் அவதிப்படுகிறவர்கள் அதிகளவில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கின்றனர், லிண்டா இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆனால் சீக்கிரத்தில் மருந்துகளை மறக்கும்படி செய்யப்பட்டாள், இதுவே வலிக்கென்றிருக்கும் தனி மருத்துவமனைகளின் ஒரு முக்கியமான இலக்காகும். பின்னடைவு அறிகுறிகளை லிண்டா அனுபவிக்கவில்லை, இருந்தபோதிலும் அது அசாதாரணமானதில்லை. வலி நிபுணர் டாக்டர் ரானல்ட் மெல்செக் இவ்வாறு குறிப்பிட்டார், “10,000-க்கும் மேற்பட்ட தீப்புண் பலியாட்களை வைத்து நடத்திய ஒரு சுற்றாய்வில் . . . , பின்னால் அடிமைகளாகிவிட்டவர்களில் ஒருவர்கூட, மருத்துவமனையில் தங்கியிருந்த சமயத்தில் வலியைப் போக்க கொடுக்கப்பட்ட மருந்துகளினால் அவ்விதமாக ஆகவில்லை.”
தீராத வலிக்கு அநேகமாக மிகப் பெரிய மனவியல் அம்சம் இருப்பதன் காரணமாக, உண்மையில் தனி மருத்துவமனைகள் நோயாளிகளுக்குத் தங்கள் வலியை நினைவிலிருந்து அகற்ற உதவிசெய்ய முயற்சிக்கின்றன. “நீங்கள் எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், உணர்வுகளுக்கு நீங்கள் எவ்வளவு கவனத்தைச் செலுத்துகிறீர்கள்—இவை அனைத்துக் காரியங்களும் நீங்கள் உண்மையில் என்ன உணருகிறீர்கள் என்பதன்பேரில் மிகப் பேரளவான செல்வாக்கைச் செலுத்துகின்றன,” என்பதாக ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியின் ஒரு பேராசிரியர் டாக்டர் ஆர்த்தர் பார்ஸ்கி விளக்கினார். ஆகவே நோயாளிகள் தங்கள் வலியைத் தவிர மற்றக் காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவப்படுகிறார்கள்.
சுகமடைவதற்கான எதிர்பார்ப்புகள்
இந்தப் புதிய வலிக்கான தனி மருத்துவமனைகள் மனிதவர்க்கத்தின் வலி பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கின்றனவா? இங்கே விவரிக்கப்பட்டுள்ள வலி சிகிச்சை முறைகள் பிரயோஜனமாயிருந்த போதிலும், தகுதிவாய்ந்த ஒரு தனி மருத்துவமனை அல்லது வலி நிபுணரைத் தெரிவுசெய்வதில் ஒருவர் கவனமுள்ளவராக இருக்கவேண்டும். அப்பொழுதும்கூட எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஏற்றதாய் இருத்தல் வேண்டும்.
உண்மையான ஒரு வெற்றிக் கதையைக் கொண்டு இதை விளக்க: முன்னாள் ஒலிம்பிக் பளு தூக்குபவரான ஸ்டீவன் காஃப்மேன், கொள்ளைக்காரன் ஒருவன் அவரை கழுத்தில் சுட்டதால் ஏற்பட்ட தீராத வலியின் காரணமாக ஏறக்குறைய நோயாளியாகவே ஆகிவிட்டார். எட்டு மாதங்கள் வலி சிகிச்சைத் திட்டத்திற்குப் பின்பு அவரால் முழுநேர வேலைக்கும், கடைசியில் பளு தூக்கும் போட்டி விளையாட்டிற்கும்கூட திரும்பி வர முடிந்தது. என்றாலும் அவர் சொன்னார்: “பாதிநேரம், என்னுடைய கால்விரல்கள் கொதிநீரில் இருப்பதுபோல அவை எரிந்துகொண்டிருக்கும்.”
ஆகவே கிளர்ச்சியூட்டும் எல்லா முன்னேற்றத்தின் மத்தியிலும், ‘வலி இனி இராது,’ என்ற பைபிளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) அப்படியென்றால் அந்த இலக்கை எவ்விதமாக முயன்று அடையமுடியும்?
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! வலிக்கென்று இருக்கும் எந்தக் குறிப்பிட்ட ஒரு தனி மருத்துவமனையை அல்லது சிகிச்சை முறையை ஆதரிக்கவில்லை.
[பக்கம் 9-ன் படங்கள்]
மின் ஆற்றலால் நரம்பைத் தூண்டுதல் உள்ளிட்ட வலி சிகிச்சை முறைகள்