முதுகு வலியினால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா?
“வலி பயங்கரமாக இருந்தது. யாரோ ஒரு தீக்குச்சியை எடுத்து என் முதுகுக்கு தீ வைத்தது போல நான் உணர்ந்தேன்! உடைந்தக் கண்ணாடி துண்டிலிருந்து என் தங்கை மகனைத் தூக்குவதற்காக குனிந்தது தான் எனக்கு நினைவிருக்கிறது. திடீரென்று என்னுடைய முதுகு முழுவதிலும் தீப்பிடித்துக்கொண்டது போல நான் உணர்ந்தேன். என்னால் நேராக நிமிர முடியாமல் நான் அதே நிலையில் பல நாட்கள் இருந்தேன். அப்படிப்பட்ட ஒரு வலியை முன்னொருபோதும் நான் அனுபவித்தது கிடையாது,” என்று 32 வயதான குடும்பத்தலைவியும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயுமாயிருக்கும் கேரன் விவரிக்கிறாள்.
ஐக்கிய மாகாணங்களில் அது பாதிக்கும் ஆட்களின் எண்ணிக்கையில் முதுகு வலி தலை வலிக்கு அடுத்ததாக உள்ளது. இது 45 வயதுக்குட்பட்டவர்களில் நீண்ட கால இயலாமைக்கு முக்கிய காரணமாகவும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றாவது முக்கிய காரணமாகவும் இருக்கிறது. துன்புறுவோர் நிவாரணம் பெற ஆண்டுக்கு சுமார் 2,400 கோடி டாலர்களை செலவழிக்கின்றனர்—1991-ல் எய்ட்ஸ் சிகிச்சைக்காக செலவிட்டதில் நான்கு மடங்கு.
முதுகு தொந்தரவுகளில் அறிவியல் ஆய்வாளர் டாக்டர் ஆல்ஃப் L. நேகம்சென் சொன்னபடி, கடந்தப் பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் 200 கோடி நோயாளிகள் கீழ் முதுகு வலியினால் துன்புற்றிருக்கின்றனர். “நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையின்போது ஏதாவது ஒரு சமயத்தில் நம்மில் 80 சதவீதத்தினர் ஓரளவு முதுகு வலியை அனுபவிப்போம்,” என்று அவர் சொன்னார்.
வலியின் ஒரு சுழற்சி
முதுகு வலி வித்தியாசம் பார்ப்பதில்லை. உடலுழைப்பைத் தேவைப்படுத்தும் வேலையிலிருப்பவர்களும் உடலுழைப்பைத் தேவைப்படுத்தாத வேலையிலிருப்பவர்களுமான இரு சாராருமே முதுகு வலியினால் பாதிக்கப்படலாம். ஆண்களும் பெண்களும், இளைஞரும் முதியோரும் இந்த வலிக்கு பலியாக முடியும். வலி திரும்பத் திரும்ப வருவதாகவும் தொடர்ச்சியாகவும் இருக்கையில், வேலை, வருவாய், குடும்பம், குடும்பத்தில் ஒருவருடைய பங்கு ஆகியவற்றைப் பாதித்து அது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தையும்கூட உண்டுபண்ணக்கூடும்.
மக்கள் ஒரு வலி சுழற்சியில் தங்களைக் காண்கிறார்கள் என்பதாக வலிக்கு எதிரான போராட்டம் (The Fight Against Pain) புத்தகம் குறிப்பிடுகிறது. சரீர வலி கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது, இது, மாறாக, அதிக தீவிரமான மற்றும் நீடித்த வலிக்கு வழிநடத்தலாம். உதாரணமாக ஓர் இளம் பெற்றோர் அல்லது குடும்பத்துக்கு உணவளிப்பவர் முதுகு தொந்தரவுகளினால் விளையும் இயலாமையின் காரணமாக வேலை, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டியிருக்கலாம்.
“என்னுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் புரிந்துகொள்ளாமலும் பரிவுகாட்டாமலும் இருப்பதுதானே எனக்கு மிகப் பெரிய பிரச்னையாக தோன்றுகிறது. நீங்கள் உண்மையில் எவ்வளவு வேதனைப்படுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் வலியை குறைவாக எடைபோடும் மனச்சாய்வுடையவர்களாக அவர்கள் இருக்கின்றனர்,” என்கிறார் 1986-ல் முதல் முறையாக முதுகு வலியினால் தாக்கப்பட்ட 35 வயதான, பேட் என்ற ஒரு செயலர். “எப்பொழுது அல்லது எங்கே வலி திடீரென தொடங்கும் என்பது உங்களுக்குத் தெரியாதிருப்பதால், அதிகமான நடவடிக்கைகளில் நீங்கள் பங்கெடுக்க மனமில்லாதிருக்கிறீர்கள். உங்களுக்கு வலி இருப்பதன் காரணமாக, நீங்கள் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளாதவராக, எவராவது ஒருவரின் புதிதாக பிறந்தக் குழந்தையைக் கையிலெடுக்காதவராக, புன்முறுவல் செய்யாதவராக இருப்பதால் சமூகத்துக்கு இலாயக்கற்றவராக தோன்றலாம். வலி, அதை மேற்கொள்ளாவிட்டால், அது உங்களை மேற்கொண்டுவிடக்கூடும்.”
முதுகு வலிப்பதற்கான காரணம்
முதுகு வலி தவிர்க்க முடியாத ஒன்றா? அதைத் தணிக்க அல்லது தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் முதுகுக்கு நீங்கள் எப்பொழுது மருத்துவ உதவியை நாட வேண்டும்? இடைவிடாது தொடர்ந்திருக்கும் முதுகு வலி உள்ளே இருக்கும் அநேக நோய்களுக்கு அறிகுறியாக இருந்தபோதிலும், இந்தக் கலந்தாராய்வு முதுகு வலி ஏற்படுவதற்குரிய இரண்டு காரணங்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும்—முதுகெலும்பின் பிதுங்கிய வட்டுகள் (Herniated discs) சரிந்துபோதல் மற்றும் இயங்குதசை சுருங்குதல்.
இளம் மற்றும் மத்திப வயதிலிருக்கும் பெரியவர்கள் மத்தியில் சரிந்துபோன முதுகெலும்பின் பிதுங்கிய வட்டே முதுகு நோய்க்கு முக்கிய காரணமாயிருக்கிறது. இந்த வட்டுகள் “நழுவிய வட்டுகள்” என்று அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன, அவை அவற்றின் இடத்திலிருந்து உள்ளே அல்லது வெளியே நழுவிச்செல்ல முடியாத காரணத்தால் இதற்கு இது பொருத்தமற்ற பெயராகும்.
ஒரு நபர் தன்னுடைய 20 வயதுகளை எட்டுகையில், வட்டுக்குள் இருக்கும் கடற்பஞ்சு போன்ற அமைப்பு அதன் மீள் சக்தியையும் ஈரப்பசையையும் இழந்துவிட வட்டு சுருங்கிவிடுகிறது. ஆனால் பொதுவாக இதனால் வலி ஏற்படுவதில்லை. இருப்பினும், சிலருக்கு கடற்பஞ்சு போன்ற உள்ளமைப்பின் ஒரு பகுதி நூலிழை அமைப்புக்கொண்ட திசுவின் வெளி வட்டத்தினூடாக சரிந்துபோகையில் அல்லது வீங்கும்போது கடுமையான வலி ஏற்படுகிறது.
வட்டுகளைப் பற்றி செல்வம் (Fortune) என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி அவை வழுவிவிட்டதென்றால், மிகச் சிறிய அழுத்தம்—தும்மல் அல்லது ஒரு ஸ்டீரியோவை நகர்த்த குனிதல் போன்ற சிறிய ஏதோவொன்றும்கூட—வலியை உண்டுபண்ணும் கடைசி காரணியாக இருக்கலாம்.”
வட்டுகள் முதல் 24 விலா எலும்புகள் அல்லது முதுகெலும்பின் எலும்புகளுக்கிடையே அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படுகின்றன. இந்த எலும்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டு ஒரு செங்குத்தான ஒரு குழலாக, தண்டு குழலாக அமைந்திருக்கிறது. இதனூடாக தண்டுவடம் செல்கிறது. ஒவ்வொரு ஜோடி தண்டெலும்புக்குமிடையே, ஒரு சிறிய துவாரம் உள்ளது. இதனூடாகவே நரம்பு வேர் என்றழைக்கப்படும் நரம்புத்திரள் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு திரள் என்பதாக, குழலைவிட்டு வெளியேறுகிறது. ஒரு வட்டு சரிந்து குறிப்பிட்ட ஒரு நரம்பின்மீது அழுத்தக்கூடும். இந்த அழுத்தமானது உணர்வலைகளை உடலின் பாகங்களுக்கும் பாகங்களிலிருந்தும் கடத்திச்செல்லும் நரம்பு துடிப்புகளைக் குறுக்கிட்டு தடுக்கக்கூடும்.
உதாரணமாக, இடுப்பு நரம்பு வேர்களில் அழுத்தம் வைக்கப்பட்டால் இடுப்புச் சந்துவாதம் என்றழைக்கப்படும் மிகவும் வேதனைதரும் ஒரு நிலைமை ஏற்படக்கூடும். தண்டின் அடிப்பகுதியிலிருந்து தோன்றிவரும் பல்வேறு நரம்பு வேர்கள் இடுப்பு நரம்பை உண்டுபண்ணுகிறது. ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இடுப்பு நரம்பு வேர், ஒவ்வொரு தொடையின் பின்புறத்திலும் முழங்கால் வரையாகவும் பின்னர் மற்ற நரம்புகளாகவும் பிரிந்துசெல்கின்றன. இடுப்பு நரம்பு வலி பொதுவாக முதுகின் கீழ்புறத்தில் ஆரம்பித்து, இடுப்பு, புட்டம், தொடையின் பின்புறமும், சிலசமயங்களில் கெண்டைக்கால் மற்றும் பாதம் வரையாகவும் பரவுகிறது. இதன் விளைவாக ஒரு நபர் பாதத்தில் தளர்ச்சியை அனுபவிக்கலாம்—கால் தசைகள் கால் விரல்களைத் தூக்க இயலாமற்போவதால் பாதத்தை இழுத்துக்கொண்டு நடக்கும் ஒரு நிலை. துன்புறுகிறவர் குத்தல்களை, மரத்துப்போன உணர்ச்சியை மற்றும் பாதிக்கப்பட்ட காலில் தசை சம்பந்தப்பட்ட பலவீனத்தையும்கூட அனுபவிக்கலாம்.
வட்டு இடுப்புக்குக் கீழே சிறுநீர்ப்பை மற்றும் குடலை சீர்காப்புச் செய்யும் நரம்புத் தொகுதியான கவுடா எக்வீனாவிலுள்ள நரம்பு வேர்களை அழுத்துமேயானால், சிறுநீர்க்கழிப்பது அல்லது மலங்கழிப்பதில் பிரச்னை உண்டாகலாம். இப்படிப்பட்ட எந்த ஒரு நோய்க்குறியையும் உடையவர்கள், உடனடியாக ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும், ஏனென்றால் அவை கவலைக்குரிய நரம்புசம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அறிகுறிகளாக இருக்கலாம்.
சுருங்கி விசாலிக்கையில், முதுகெலும்பு முறிந்துவிடாமல் வளைக்கவும் முறுக்கவும் உதவியாக இருப்பதில் முதுகிலுள்ள தசைகள் பந்தகங்களோடு ஒத்துழைக்கின்றன. ஆனால் அழுத்தத்தின்கீழ், உருமாறிய தசை சுருங்கி, ஒரு கடினமான கட்டியாக ஆகும் அளவுக்கு விறைப்பாகிவிடக்கூடும். எச்சரிப்பின்றி வந்து, தற்காலிகமாக ஒரு நபரை நகரமுடியாதபடி செய்கையில் முதுகு தசை சுருங்குதல் வேதனைத்தருவதாக இருக்கக்கூடும். துன்புறும் ஒருவர் இந்த வலியை “உங்கள் முதுகில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் பூமியதிர்ச்சிகள்,” என்பதாக விவரிக்கிறார்.
பலவீனமாகிவிட்ட தசைகளைக் கூடுதலான சேதத்திலிருந்து பாதுகாக்கவே தசை சுருக்கங்கள் ஏற்படுவதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். டைம் லைஃப் புக் வெளியிட்ட ஆரோக்கியமான முதுகு (The Fit Back) இவ்வாறு குறிப்பிடுகிறது: “முதுகை செயலறச்செய்வதன் மூலம், சுருக்கங்கள், படுத்துக்கொண்டு மிகச் சிறந்த நடவடிக்கை எடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறது. இந்த நிலை, உங்கள் முதுகில் மிகக் குறைந்தபட்ச அழுத்தத்தை வைப்பது மட்டுமல்லாமல், வீங்கிவிட்ட திசு தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும்படி அனுமதிக்கிறது.”
அநேகமாக தசை சுருங்குதலுக்குக் காரணமாயிருக்கும் முதுகு அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு, முதுகு, அடிவயிறு, மற்றும் தொடைகளின் தசைகள் பலமாகவும் உறுதியாகவும் நிலைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, பலமில்லாத வயிற்று தசைகள் சரியான ஆதரவைக் கொடுக்காதிருப்பதாலும், முதுகெலும்பின் மீது உடல் எடையின் இழுப்பை சரியாக தடுக்க இயலாதிருப்பதாலும் முதுகில் தசை அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடும். வயிற்று தசைகள் நல்ல நிலையிலிருந்தால், கீழ் முதுகு குழிவாக வளைந்துவிடாதபடி தடுக்கும் “தசை வளையத்தை” அவை உண்டுபண்ணுகின்றன. கீழ் முதுகு அதீதமாக வளைந்திருக்கும்போது, தொய்வு, கீழ் முதுகின் முதுகெலும்பை வரிசையிலிருந்து நகர்த்திவிடுகிறது.
வலியைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடியவை
மோசமான தோற்றநிலை, உடல் பருமன், பலவீனமான தசைகள் மற்றும் அழுத்தம் போன்றவை கீழ் முதுகில் வலியை உண்டுபண்ணக்கூடிய காரணிகள் ஆகும். உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு அல்லது தூக்கிக்கொண்டு சரிவர செய்யப்படாத பொதுவான செயல்கள் இதற்கு எளிதில் ஆளாகும்படிச் செய்யும் நிலைமைகளாகும்.
நல்ல தோற்றநிலைக்கும் உறுதியான வயிறு மற்றும் முதுகு தசைகளுக்குமிடையே ஒரு பரஸ்பர சம்பந்தம் உண்டு. சரியான தோற்றநிலை தசைகள் சரிவர செயல்பட அனுமதிக்கையில், நல்ல தசை தன்மை சரியான தோற்றநிலைக்கு இன்றியமையாததாகும். முதுகெலும்பின் இயல்பான S வடிவ வளைவைப் பின்தொடரும் வரிசை நல்ல தோற்றநிலைக்கு தேவைப்படுகிறது. நல்ல தோற்றநிலை என்பது விறைப்பான நேரான முதுகெலும்பை அர்த்தப்படுத்துவதில்லை.
மோசமான தோற்றநிலை திருத்தப்படுமேயானால், தோற்றநிலையினால் ஏற்படக்கூடிய வலி தவிர்க்கப்படலாம் என்பதாக உங்கள் சொந்த முதுகுக்கு சிகிச்சையளியுங்கள் (Treat Your Own Back) என்ற புத்தகத்தில் ராபின் மெக்கன்ஸி குறிப்பிடுகிறார். மேலுமாக அவர் சொல்கிறார்: “இருப்பினும், திருத்தப்படவில்லையென்றால், காலம் கடந்துசெல்லும்போது, பழக்கமாகிவிட்ட மோசமான தோற்றநிலை கணுக்களின் அமைப்பில் மாற்றங்களை உண்டுபண்ணிவிடுகிறது, அதீத தேய்மானம் ஏற்படுகிறது, கணுக்கள் உரிய காலத்துக்கு முன்பாக முதுமையடைவது இதன் விளைவாக இருக்கிறது.”
விசேஷமாக வயிற்றில், அதீத உடல் எடையும்கூட, முதுகைத் தாங்கும் தசைகளின் மீது ஈர்ப்பு இழுவிசையை உருவாக்குவதன் காரணமாக முதுகுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். ஒழுங்கான உடற்பயிற்சியே ஆரோக்கியமான முதுகுக்கு இன்றியமையாததாகும். வலி இல்லையென்றாலும், உடற்பயிற்சி முக்கியமாகும், ஏனென்றால் போன முதுகுவலி திரும்பவும் எதிர்பாரா வகையில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. உடற்பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாக முழுமையான ஒரு மருத்துவ மதிப்பீடு பரிந்துரைசெய்யப்படுகிறது. தனிநபரின் முதுகுப் பிரச்னைக்கு ஒரு மருத்துவர் சரியான உடற்பயிற்சியை குறிப்பாக சொல்லக்கூடும் அல்லது நோயாளியை இயன் மருத்துவரிடமாக அனுப்பிவைக்கலாம்.
அழுத்தமும்கூட முதுகுப் பிரச்னைக்கு ஒருவர் எளிதில் ஆளாகும்படிச் செய்யலாம் என்பதாக அநேக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தணிக்கப்படாத இறுக்கம் தசைகளை விறைப்பாக்கிவிடுவதன் காரணமாக அழுத்தம் ஒருசிலருடைய விஷயத்தில் தசை சுருங்குதலைத் துவக்கி வைக்க, இது முதுகு வலியில் விளைவடையலாம். அழுத்தத்துக்கு காரணமானவற்றை சமாளிப்பது அல்லது நீக்குவது முதுகு வலியின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும்.
வேலையை நீண்டநேரம் உட்கார்ந்தபடி செய்கிறவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்கிறவர்கள் முதுகு அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். ஸ்வீடன் நாட்டு ஆய்வுப்படி, உட்கார்ந்திருக்கையில் பின்முதுகின் மீது அதிகமான பளு வைக்கப்படுகிறது. வருந்தத்தக்கவிதமாக, முதுகுப்பக்கம் போதுமான பளுதாங்கியில்லாத அலுவலக நாற்காலிகளைப் பயன்படுத்தும்போது இந்த ஆபத்து கூடுகிறது. எப்பொழுதும் உட்கார்ந்துகொண்டே இல்லாமல் ஒழுங்கான இடைவேளைகளில் எழுந்து நிற்பதும் ஒருசில நிமிடங்களுக்கு சுற்றி நடப்பதும் உதவியாக இருக்கக்கூடும்.
கனமான அல்லது இலேசான பொருட்களைத் தூக்கும்போதுகூட, தங்கள் முதுகுத் தசைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தூக்கும்போது முதுகுத் தசைகளின் மீது எல்லா அழுத்தமும் விழாதபடிக்கு முழங்காலை மடித்துக்கொள்வது பரிந்துரைசெய்யப்படுகிறது.
அலங்கோலமான தோற்றநிலையில் வேலைசெய்யும் ஒரு நபரும்கூட முதுகுப் பிரச்னைகளுக்கு ஆளாகும் வாய்ப்பிருக்கிறது. தொழிற்சாலையில் வரிசையாக நின்று பணிபுரியும் ஆட்கள், தாதிகள், மின் வேலைப் பார்ப்பவர்கள், வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்புடையவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவரும் நீண்ட நேரம் குனிந்துகொண்டு வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. முதுகுக்குத் தீங்கிழைக்கப்படும் அபாயத்தைக் குறைக்க, ஒழுங்காக ஓய்வெடுப்பதை அல்லது உடல் அமர்வு நிலையை மாற்றிக்கொள்வதை இயன் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். நீண்ட நேரம் நிற்பவர்கள், ஒரு சிறிய ஸ்டூலை அல்லது அடிதாங்கியைப் பயன்படுத்தும்படியாகவும் கீழ் முதுகை நேராக்கும்படி ஒரு பாதத்தை இலேசாக உயர்த்தும்படியும் ஆலோசனை வழங்கப்படுகிறார்கள்.
சிகிக்சைக்காக தேடுதல்
தசை சம்பந்தமான காரணங்களினால் முதுகு வலியை அனுபவிக்கும் பெரும்பாலருக்கு, மருத்துவர்கள் பழமை சிகிச்சையை பரிந்துரை செய்கின்றனர்—படுக்கையில் ஓய்வு, வெப்பத்தைப் பயன்படுத்துதல், தேகத்தைப் பிடித்துவிடுதல், உடற்பயிற்சி மற்றும் ஆரம்பத்தில் வீக்கத்தை தடைசெய்யும் வலி நிவாரணிகள். பின் சொல்லப்பட்டதைப் பற்றியதில், மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ப்ரெளன் ஓர் எச்சரிக்கையை கொடுக்கிறார். ஐக்கிய மாகாணங்களில், முதுகு வலி துயரத்துக்கு முக்கிய காரணம் மருந்துகளை நாள்பட பயன்படுத்தியதே, அதாவது மருந்துகளின் பக்கப் பாதிப்புகளே என்று குறிப்பிடுகிறார். ஒரு மருந்தைச் சகித்துக்கொள்ளுவதற்கு எதிராக ஒருவர் எச்சரிப்பாயிருக்க வேண்டும், இது மருந்தின் அளவைக் கூட்டவும் ஒருவேளை அதற்கு அடிமையாகிவிடுவதிலும் விளைவடையலாம்.
இயன் மருத்துவமும் வர்மமுறை மருத்துவரின் சந்திப்புகளும் வேதனையை அனுபவிக்கும் சிலருக்கு உதவியையும் நிவாரணத்தையும் அளிக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் முதுகு வலிக்காக மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் வர்மமுறை மருத்துவத்தை நாடுகிறார்கள் என்பதாக உடல்நல உண்மைகள் (HealthFacts) பத்திரிகை குறிப்பிடுகிறது.
சரிந்துபோன பிதுங்கிய வட்டோடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் திருத்துவதற்கு அல்லது வலியைத் தணிப்பதற்கு அறுவைசிகிச்சைத் தேவைப்படலாம். இருப்பினும், மருத்துவர்கள் முதுகு வலியில் துன்புறும் பெரும்பாலானவர்களுக்குப் பழங்கால சிகிச்சையையே பரிந்துரைப்பர். அறுவைசிகிச்சைத் தேவைப்படும் என்பதாக சொல்லப்படுகிறவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது மருத்துவரின் கருத்தைப் பெறுவது நலமாக இருக்கும்.
இலட்சக்கணக்கான துன்புறுவோருக்கு, இடைவிடாத ஆனால் தாங்கமுடிகிற வலி வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கிறது. அநேகர் வலியை தவிர்க்கமுடியாத ஒன்றாக ஏற்றுக்கொண்டுவிட்டு, ஆனால் அது அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிட அனுமதியாதிருக்க முயற்சி செய்கிறார்கள். வலியை தூண்டும் காரணிகளை அறிந்தவர்களாக அதைத் தவிர்க்க அல்லது தடுக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்து, சரியான எடையைக் காத்துக்கொண்டு, தங்கள் தோற்றநிலையை மேம்படுத்தி தங்கள் வாழ்க்கையின் அழுத்தத்தைக் குறைக்கிறார்கள். சரிந்துபோன வட்டு மற்றும் தசை சுருக்கங்களிலிருந்து திரும்பத் திரும்ப வரும் வலியின் மத்தியிலும், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேரன், சுறுசுறுப்பான ஓர் அட்டவணையைக் காத்துக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் வேலையில் அதிகமான நேரத்தை செலவழிக்கிறாள். கேரனைப் போல துன்புறுவோர் பலர் நம்பிக்கையான ஒரு மனநிலையைக் காத்துக்கொண்டு தங்கள் முதுகு வலியைக் கட்டுப்படுத்துவதற்காக உழைக்கின்றனர்.
[பக்கம் 24-ன் பெட்டி]
முதுகு வலியைத் தவிர்ப்பதில் சில உதவிகள்
☞ வேகமாக, திடீரென நகர்ந்து எதையாவது தூக்குவதைத் தவிர்க்கவும். இடுப்பிலிருந்து குனிவதற்குப் பதிலாக, முழங்காலை வளைக்கவும்.
☞ கனமான பொருட்களைத் தூக்கும்போது உதவிக்காக கேட்கவும்.
☞ அநேக மூட்டைகளை எடுத்துச்செல்லும்போது, ஒவ்வொரு பக்கத்திலும் பளுவை சமநிலைப்படுத்திக்கொள்ளவும். கனமான ஒரே ஒரு பொருளை எடுத்துச்செல்லும்போது, உடலுக்கு அருகே முன்னால் இரண்டு கைகளாலும் எடுத்துச்செல்லவும். பக்கவாட்டில் எடுத்துச்சென்றால், இரு பக்கமும் மாறி மாறி எடுத்துச்செல்லவும்.
☞ மடித்துவைக்கக்கூடிய பயணமூட்டை தூக்கியை/அல்லது தோள்பட்டையுள்ள, இலேசான எடையுள்ள பயணமூட்டையை பிரயாணத்துக்குப் பயன்படுத்தவும்.
☞ ஒரு காரின் பெட்டியிலிருந்து மூட்டைகளைத் தூக்கும்போது, அவற்றைத் தூக்குவதற்கு முன்பாக உடலுக்குச் சமீபமாக மூட்டைகளை நிறுத்திவைத்துக்கொள்ளவும்.
☞ காற்றுறிஞ்சுதல் மூலம் தூசகற்றுங்கருவியைப் பயன்படுத்துகையில், நீண்ட கைப்பிடியுடையதை பயன்படுத்தவும். கீழ்ப்பரப்பிலுள்ள பொருட்களில் தூசியை அகற்றுவதற்கு இடுப்பிலிருந்து குனிவதற்குப் பதிலாக, முழங்கால் திண்டைப் பயன்படுத்தி ஒரே காலில் மண்டியிட்டுக் கொள்ளவும். இடுப்பிலிருந்து நீங்கள் குனிய வேண்டியதாயிருந்தால், சாத்தியமாயிருக்கையில், ஏதாவது ஒன்றின்மீது சாய்ந்துகொள்ள ஒரு கையைப் பயன்படுத்தவும்.
☞ அலுவலக வேலை செய்யும்போது, ஒரு சாய்வுமேசையில் உட்கார்ந்தும் இடுப்பு உயர மேற்பரப்பில் நின்றுகொண்டும் மாறி மாறி வேலை செய்யவும்.
☞ தோட்டவேலை செய்கையில் மண்டியிட்டுக்கொண்டு செய்யவும், வேலையைப் பிரித்து விட்டுவிட்டு குறுகிய காலத்துக்குச் செய்யவும். நின்றுகொண்டிருக்கையில் இடுப்பிலிருந்து குனியவேண்டாம்.
☞ நாளொன்றுக்கு 10 முதல் 15 நிமிடங்கள் மாத்திரமாகவே இருந்தாலும்கூட ஒழுங்கான அடிப்படையில் முதுகு பயிற்சிகளைச் செய்யவும். வயதானவராயிருந்தால், மிதமான உடற்பயிற்சிகளைச் செய்யவும்.
☞ படுக்கையை விரிக்கும்போது, ஒரு முழங்காலில் படுக்கையின்மீது மண்டியிட்டுக்கொண்டு படுக்கையின் அடுத்தப் பக்கத்தை எட்டுகையில் இரு கைகளையும் பயன்படுத்தாமல் ஒரு கையால் உங்கள் உடலின் எடையைத் தாங்கிக்கொள்ளவும். நேராக்கும்போது அல்லது போர்வையை செருகும்போது, படுக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தரையில் மண்டியிட்டுக் கொண்டுசெய்யவும்.
☞ நெடுந்தூரம் காரோட்டிச் செல்லுகையில், இடையில் நிறுத்தி ஓய்வெடுக்கவும். காரின் இருக்கை உட்கார செளகரியமாக இல்லையென்றால் ஒடுங்கிய பகுதியை சரியாக நிரப்ப ஒரு தலையணையைப் பயன்படுத்தவும்.
☞ கடினமான மேற்பரப்புகளில் ஓடும் உடற்பயிற்சியை செய்யவேண்டாம். சரியான உடற்பயிற்சிக் காலணிகளைப் பயன்படுத்தவும்.
☞ தொய்வான நாற்காலி அல்லது சோபாவில் உட்காரும்போது, ஒரு தலையணையை அல்லது முதுகின் பளுதாங்கும் பொருளைப் பயன்படுத்தவும். ஊன்றி நிற்பதற்கு உங்கள் கால்களைப் பயன்படுத்தி மெதுவாக எழுந்திருக்கவும்.
Z☞ மணிக்கணக்காக உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டியிருக்கையில், முதுகைத் தாங்குவதற்குச் சரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நாற்காலியைப் பெற்றுக்கொள்ளவும். அவ்வப்போது எழுந்து சுற்றிவரவும்.
☞ நீண்ட நேரத்துக்கு கோப்பு அலமாரி இழுப்பறைகளின்மீது குனிந்துகொண்டில்லாமல், உங்களால் முடியும்போது ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளவும்.
☞ உயர்ந்த குதிங்கால் காலணிகளைப் பகல்நேரத்தில் நீங்கள் அணியவேண்டியிருந்தால், கூடுமானால் மாற்றி அணிந்துகொள்ள அதிக செளகரியமான ஒரு ஜோடி காலணிகளை எடுத்துச்செல்லவும்.