இரக்கமற்ற ஒரு விரோதியைவிட மோசமானது
கடுமைத் தணியாத வலி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிடக்கூடும். அது அவர்களுடைய சமாதானத்தை, சந்தோஷத்தை, பிழைப்பைச் சூறையாடி, வாழ்க்கையை அத்தனை துயரமானதாக ஆக்குவதால் சிலர் தற்கொலையின் மூலமாக நிவாரணம்பெற நாடுகிறார்கள். மருத்துவ மிஷனரி ஆல்பர்ட் ஷூவிட்சர் பின்வரும் முடிவுக்கு வந்தார்: “மரணத்தைவிடவும்கூட வலி மனிதவர்க்கத்தின் பயங்கரமான எஜமானனாக இருந்து வருகிறது.”
சொல்லர்த்தமாகவே, கோடிக்கணக்கான ஆட்கள் பயங்கரமாக அவதிப்படுகின்றனர். ‘ஒரு பாதாளத்துக்கு மேலே காலவரம்பற்ற விண்வெளியில் நாம் தொங்கவிடப்பட்டு, சுழன்றுகொண்டிருக்கும் பூமியிலிருந்து வரும் சப்தங்களை நம்மால் கேட்க முடிந்தால், அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதவர்க்கத்தினரின் ஒருமித்தக் குரல் வலியினால் ஓயாது வாய்விட்டுக் கதறுவதை நாம் கேட்போம்,’ என்பதாக ஒரு பிரெஞ்சு அறுவை மருத்துவர் சொன்னார்.
ஆம், கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் 1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியது இன்று அதிக வலிமையுள்ளதாகவும் இருக்கிறது: “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”—ரோமர் 8:22.
வினைமையான உடல்நலப் பிரச்னை
அமெரிக்க நாட்டவரில் 8 பேரில் ஒருவர் மூட்டுவீக்கத்தில் அதிக பொதுவான நோயான எலும்புமூட்டுவீக்கத்தின் பயங்கரமான வலியை அனுபவிக்கிறார். இன்னும் அதிகமான ஆட்களுக்கு வேதனைத்தரும் முதுகு வலி இருக்கிறது. மற்றவர்கள் புற்றுநோய், இருதய நோய் போன்றவற்றின் வேதனையான பாதிப்புகளைச் சகிக்க வேண்டியுள்ளது.
இன்னும் லட்சக்கணக்கான ஆட்கள் வேதனைத்தரும் தலைவலிகள், பல்வலிகள், காதுவலிகள், மூலநோய், இன்னும் மற்ற எண்ணற்ற நோய்களாலும் காயங்களாலும் அவதிப்படுகின்றனர். சமீப ஆண்டு ஒன்றில் மருத்துவரின் சிபாரிசின்றி வாங்கக்கூடிய வலி நிவாரணிகளுக்காக மட்டுமே அமெரிக்க நாட்டவர் 210 கோடி டாலர்களைச் செலவழித்திருப்பதையும், அல்லது வலியானது “அமெரிக்காவின் மறைந்திருக்கும் கொள்ளைநோய்” என்று அழைக்கப்படுவதையும் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
வலி சம்பந்தப்பட்டதில் ஒருவேளை மிகவும் குறிப்பிடத்தக்க நிபுணரான ஜான் J. பானிக்கா சொன்னார்: “பணத்தின் நோக்குநிலையிலிருந்தும் மனித துயரத்தின் நோக்குநிலையிலிருந்தும், தீராத வலி என்பது உண்மையில் மற்ற உடல்நலப் பிரச்னைகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்தாலும் இருப்பதைவிட அதிக முக்கியமானதாக இருக்கிறது.”
வலியில்லாத ஒரு வாழ்க்கையா?
இப்படிப்பட்ட கொடூரமான யதார்த்த நிலையின் மத்தியில், வலியில்லாத ஒரு வாழ்க்கையின் சாத்தியத்தைப் பற்றி சொல்வது மடத்தனமாகத் தோன்றக்கூடும். ஆகவே, பைபிள் சொல்வது, அதாவது, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; . . . இனி . . . துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, [வலியுமில்லை, NW]” என்பது இயற்கைக்கு மாறாகத் தோன்றக்கூடும்.—வெளிப்படுத்துதல் 21:4.
எனினும் வலியில்லாத வாழ்க்கையின் சாத்தியம் இயற்கைக்கு மாறானதல்ல. ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த வேதவாக்கியம் உண்மையில் அர்த்தப்படுத்துவது என்ன? வலியுணர்வே இல்லாத மக்கள் இன்று இருக்கிறார்கள். அதில்லாமல் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் பொறாமைக்குரியவர்களா? உறுப்பியல் ஆய்வாளர் ஆலன் பாஸ்பாம் சொன்னார்: “வலியே இல்லாமல் இருப்பது பேராபத்தாக இருக்கிறது.”
உங்களால் வலியை உணர முடியாதிருந்தால், உங்களுக்கு உண்டாயிருக்கும் கொப்புளம் மிக மோசமான சீழ் வைத்த வெம்புண்ணாகும்வரை ஒருவேளை நீங்கள் அதை கவனிக்கமாட்டீர்கள். செய்தி அறிக்கை ஒன்றின்படி, எந்த வலியையும் உணரமுடியாதிருந்த ஒரு சிறுமியின் பெற்றோர் “சிலசமயங்களில் எரிகிற சதையின் வாசனையை முகர்ந்து, பின்னர் அவள் ஓர் அடுப்பின் மீது அக்கறையின்றி சாய்ந்திருப்பதைக் காண்பார்கள்.” இவ்விதமாக வலி இரக்கமற்ற ஒரு விரோதியைவிட மோசமாக இருக்கிறது. அது ஓர் ஆசீர்வாதமாகக்கூட இருக்க முடியும்.
அப்படியென்றால், ‘இனி வலியுமில்லை’ என்ற பைபிளின் வாக்குறுதியைப் பற்றி என்ன? இது நிறைவேற வேண்டும் என்று நாம் உண்மையில் விரும்புகிற ஒரு வாக்குறுதியா?
கண்ணீரில்லாத ஒரு வாழ்க்கையா?
இந்த வசனத்தின் சூழமைவு பின்வருமாறும்கூட சொல்வதைக் கவனியுங்கள்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 21:4) இது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் கண்ணீர் இன்றிமையாததாகும். வலி உணர்வு செய்வதைப் போல இது நம்மைப் பாதுகாக்கிறது.
கண்ணீர் நம் கண்களை ஈரமாக வைத்து கண்ணுக்கும் கண் இமைக்குமிடையே உராய்தலைத் தடைசெய்கிறது. அவை அந்நிய வஸ்துக்களையும்கூட நம் கண்களிலிருந்து நீக்குகின்றன. கூடுதலாக, அவை விஷக்கிருமிகளை நீக்கி தொற்றுநோயைத் தடைசெய்யும் லைசோசைம் என்றழைக்கப்படும் கிருமி நாசினியைக் கொண்டிருக்கின்றன. நம்முடைய வலி உணர்வைப் போலவே, கண்ணீர் சிந்துவதற்கான திறமை, அதிசயமாக வடிவமைக்கப்பட்டுள்ள நம்முடைய சரீரங்களின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாக இருக்கிறது.—சங்கீதம் 139:14.
இருப்பினும், கண்ணீரானது துயரம், துக்கம் மற்றும் அலைக்கழிக்கப்படுவதோடுகூட நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கிறது. பைபிள் காலங்களில் வாழ்ந்த தாவீது ராஜா “இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்,” என்று புலம்பினார். (சங்கீதம் 6:6) இயேசுவும்கூட ஒரு நண்பன் மரித்தபோது “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:35) மக்கள் இப்படிப்பட்ட துயரக் கண்ணீரை சிந்தவேண்டும் என்பது கடவுளுடைய ஆதி நோக்கமாக இருக்கவில்லை. முதல் மனிதனாகிய ஆதாமின் பாவமே, மனித குடும்பத்தின் அபூரணமான, மரித்துக்கொண்டிருக்கும் நிலைமைக்குக் காரணமாக இருக்கிறது. (ரோமர் 5:12) ஆகவே, இனி இல்லாமல் போவது நம்முடைய அபூரணமான, மரிக்கும் நிலைமையின் விளைவாக வரும் கண்ணீரே ஆகும்.
நீக்கப்படப்போகும் குறிப்பிட்ட வகையான ஒரு கண்ணீரைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதால், வலியுமில்லை என்ற வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றமடையும்? குறைந்தபட்சம் சிலசமயங்களிலாவது, துயரத்தையும் அழுகையையும் உண்டுபண்ணும் வலியை மக்கள் அனுபவிக்கமாட்டார்களா?