வால்சிங்ஹேம்—இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய கோயில்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்தில் நார்ஃபோக் ஜில்லாவிலுள்ள அழகிய கிராமம், வால்சிங்ஹேம், ஆண்டுதோறும் வால்சிங்ஹேமின் மாதா கோயில்களுக்கு வருகைதரும் 1,00,000 வரையிலான யாத்ரிகர்களை வரவேற்கிறது. ஒரு கோயிலின் பொறுப்பை ரோமன் கத்தோலிக்கரும் மற்றொன்றின் பொறுப்பை சர்ச் ஆஃப் இங்கிலாண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இது தர்க்கத்துக்கு இடமளிக்கும் நிலைமைக்கு வழிநடத்தியிருக்கிறது.
“வால்சிங்ஹேமுக்கு தேசிய புனிதயாத்திரை சமீப ஆண்டுகளில் துயரமான அனுபவமாக இருந்துவருகிறது,” என்பதாக சர்ச் டைம்ஸ்-ல் சர்ச் ஆஃப் இங்கிலாண்டின் ஓர் மதகுரு எழுதினார். “யாத்ரிகர்களின் ஊர்வலம் . . . அதைவிட பெரிய மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பாளர்களின் கூட்டத்தினுடைய . . . உரத்த மற்றும் கோபாவேசமான எதிர்ப்புக் கூப்பாடுகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது.”
ஏன் இந்த எதிர்ப்பு? “கிறிஸ்தவம் என்ற பெயரின் கீழ் இங்கே நடத்தப்படுவது புறமதத்தைத்தவிர வேறொன்றுமில்லை, சத்தியத்துக்குத் தெளிவான நேர்முக அவமதிப்பாக, கடவுளுடைய பார்வையில் அருவருப்பாக எங்களுடைய புராட்டஸ்டன்டு பாரம்பரியத்துக்கு இழிவான நிந்தையாகவே இருக்கிறது,” என்பதாக சர்ச் ஆஃப் இங்கிலாண்ட் கோயிலுக்கு எதிராக கிளர்ச்சிசெய்பவர்கள் அறிவிக்கின்றனர்.
இங்கிலாந்தில், அரிதாகவே மதம் இப்படிப்பட்ட தீவிர உணர்ச்சிகளைக் கிளப்பிவிடுகிறது. இப்படிப்பட்ட பலமான உணர்ச்சிகளை உண்டுபண்ணுவதற்கு வால்சிங்ஹேமில் என்ன இருக்கிறது? கோயில்களின் வரலாறு பற்றிய ஒரு மறுபார்வை புரிந்துகொள்ள உங்களுக்கு உதவிசெய்யும்.
புராட்டஸ்டன்டுக்கு எதிராக கத்தோலிக்கன்
பதினாறாவது நூற்றாண்டுச் சீர்திருத்தத்துக்கு முன்னால், இங்கிலாந்து ரோமன் கத்தோலிக்க தேசமாக, அநேக கோயில்களைக் குறித்து பெருமைக்கொண்டிருந்தது. அதில் மிகப் பழமையானது வால்சிங்ஹேமில், தேசத்தில் கன்னி மரியாளின் பிரதான கோயிலாக இருந்தது. அது 1061-ம் ஆண்டு பண்ணை நில உரிமையாளரின் மனைவி கிராமத்தில் ஒரு வீட்டைக் கட்டியபோது ஆரம்பமானது. புராணக் கதையின்படி, இயேசுவின் தாய் மரியாள் நாசரேத்தில் வாழ்ந்த வீட்டின் ஒரு நகலாக அது கருதப்பட்டதன் காரணமாக அதனுடைய கட்டுமானப் பணிக்குரிய விவரங்கள் ஒரு சொப்பனத்தில் கொடுக்கப்பட்டன. வரலாற்றின் இடைநிலைக்காலத்தின் போது, இந்த மாதாவின் கோயில் சர்வதேச முக்கியத்துவத்தையும் பொதுமக்களின் மதிப்பையும் பெற்றுக்கொண்டது.
ராஜாக்களும் பொதுமக்களும் ஒன்றுபோல வால்சிங்ஹேமுக்குத் திரண்டுவந்தனர். அவர்களைக் கவர்ந்திழுத்தது என்ன? குழந்தை இயேசுவை தன் முழங்காலில் கொண்ட மரியாளின், மரத்தால் செய்யப்பட்ட சிலையைத் தவிர, பாவமன்னிப்பு சலுகைகள், மற்றும் நினைவுச்சின்னங்கள் விற்பனைக்குத் தாராளமாக கிடைத்தன, மற்றும் வியாதிகள் அங்கு குணமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாத்ரிகர்கள் மரியாளினுடைய கொஞ்சம் உறைந்த பால் சொட்டுகளைக் கொண்டிருப்பதற்கு பெயர்பெற்றதாக அறிவிக்கப்படுகிற ஒரு சிறு குப்பியை, வால்சிங்ஹேமின் “அற்புதத்தைப்” பார்க்கமுடிகிறது. ஒருசில பார்வையாளர்கள் அது வெறுமனே சீமைச் சுண்ணாம்பு அல்லது வெள்ளை ஈயம் என்பதாக உறுதியாக நம்புகையில், பைபிள் கல்விமான் இராஸ்மஸ், சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கருவினால் பக்குவமாய்ப் பதப்படுத்தப்பட்ட நொறுங்கிய சீமைச்சுண்ணாம்பாக தோன்றிய நினைவுச்சின்னத்தின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
இராஸ்மஸ் போன்ற ஒரு சிறந்த சீர்திருத்தவாதி ஏன் வால்சிங்ஹேமுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார்? ஒருவேளை ஒரு பொருத்தனை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம். கோயிலை அவர் மிகவும் நுட்பமாக விவரிக்கிறபோதிலும், “இந்த முழு மதசம்பந்தமான பயிற்சியைப் பற்றிய, அவருடைய கேலி நடையான தாக்குதல் இயல்புமீறி கடுமையாக உள்ளது,” என்பதாக தி கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இராஸ்மஸ் “கேலி நடையிலும் நம்பிக்கையற்ற மனநிலையோடும்” எழுதினார் என்பதாக வரலாற்றாசிரியர் ஃபிரெட்ரிக் சீபோம் விளக்குகிறார். “அவர்தானே கன்னியை வணங்கினார் என்பதற்கோ அவர்களுடைய கோயிலுக்குப் புனித யாத்திரை செய்வதில் பயனுண்டு என்று நம்பினார் என்பதற்கோ” எந்த நிரூபணமும் இல்லை என்பதாக மேலுமாக எழுதினார்.
சீர்திருத்தத்தின்போது புதிதாக உருவான சர்ச் ஆஃப் இங்கிலாண்ட் ரோமன் கத்தோலிக்க மதத்தை விலக்கிவைத்திருந்தது. 1538-ல் “வால்சிங்ஹேமின் சூனியக்காரி” என்று அழைக்கப்படலானவளுடைய கோயில், இந்தப் பிரிந்துபோன சர்ச்சின் தலைவரான எட்டாவது அரசன் ஹென்றியின் ஆணையின்பேரில் அழிக்கப்பட்டு அந்த ஸ்தலம் விற்கப்பட்டது. விக்கிரகாராதனையின் வெறுக்கப்பட்ட அடையாளமாக இருந்த சிலை 160 கிலோமீட்டருக்கு அப்பால் லண்டனிலுள்ள செல்ஸாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே எல்லாருக்கும் முன்பாக எரிக்கப்பட்டது.
புராட்டஸ்டன்டுகள் கத்தோலிக்கர்களைப் போல செய்கின்றனர்
எனினும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், சர்ச் ஆஃப் இங்கிலாண்ட் வால்சிங்ஹேமின் மாதா கோயிலை ஒரு புராட்டஸ்டன்டு கோயிலாக புதுப்பித்தது! மூல சிலையின் செதுக்கப்பட்ட ஒரு படிவம் 1921-ல் வால்சிங்ஹேமின் பங்கு சர்ச்சில் நிறுவப்பட்டது, முதல் நவீன யாத்ரிகர்கள் ஓராண்டுக்குப் பின் வந்திறங்கினர். பொதுமக்களிடையில் கோயிலின் மதிப்பு வளர்ந்திருப்பது போலவே, சர்ச் உறுப்பினர்கள் சிலருடைய சினமும் வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், 30 நிமிட ஊர்வலத்தில் தெருக்களின் வழியாக சிலை தூக்கிச் செல்லப்படும்போது, அவர்கள் விக்கிரகாராதனையை ஆவேசமாக எதிர்க்கின்றனர்.
ரோமன் கத்தோலிக்கர்கள் 1934-ல் மாதாவின் தேசிய கோயிலை வால்சிங்ஹேமில் நிறுவினர். இந்தக் கோயில், முதலில் இருந்த தாய் சேய் உருவத்தின் இரண்டாவது நகலைக் கொண்டிருக்கிறது, பழைய செருப்பு திருக்கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது யாத்ரிகர்கள் வெறுங்காலில் மூல கிராம கோயிலுக்கு நடந்துசெல்வதற்காக தங்கள் காலணிகளை கழற்றிவிட்டுச்செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இடமாகும். அக்கறையூட்டும் விதமாக, எதிர்ப்பாளர்களின் குறி சர்ச் ஆஃப் இங்கிலாண்ட் கோவிலுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது, ஏனென்றால் இது மரியாள் வழிபாட்டை ஊக்குவிப்பதாகவும் சர்ச்சினுடைய புராட்டஸ்டன்டு பாரம்பரியத்தை உதறித்தள்ளுவதாகவும் இருப்பதாக அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.
ஆனால் எதிர்ப்பாளர்களுடைய தீவிர எதிர்ப்புக்கு வேறொரு காரணம் இருக்கிறதா? இருப்பதாக அநேகர் நம்புகிறார்கள். “சமீபகால எதிர்ப்புகள் அதிகமாக ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிக்காரரை, குறிப்பாக ஆண்புணர்ச்சிக்காரர்களைப் பற்றிய அச்சத்தின் காரணமாகவே” என்பதாக தி இன்டிப்பென்டென்ட் என்ற செய்தித்தாள் அறிவிப்பு செய்கிறது. இது சர்ச் ஆஃப் இங்கிலாண்டைச் சேர்ந்த ஒரு தொகுதி, மனிதர்கள் முக்கியமாக குருமார், கடந்த சில ஆண்டுகளாக வால்சிங்ஹேமை தங்கள் வருடாந்தர மாநாட்டை நடத்துவதற்குரிய இடமாக ஆக்கியிருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் ஏன் வருகிறார்கள்? வழக்கமாக வரும் யாத்ரிகன் ஒருவர் இவ்வாறு கருத்துதெரிவித்தார்: “உலகில் இது அதிகமாக எதிர்பாலாரோடு கொள்ளும் ஒரு சம்பவம் அல்ல.”
விக்கிரகாராதனையில் ஆழமாக அமிழ்ந்து, இப்போது ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியோடு சேர்ந்திருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சி, தெளிவாகவே உண்மைக் கிறிஸ்தவர்களால் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.—1 கொரிந்தியர் 6:9; 10:14; 1 யோவான் 5:21.