பில்கிரிம்களும் அவர்களது சுதந்திரப் போராட்டமும்
நெதர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆங்கிலேய தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் (Puritans) 1620-ல் நெதர்லாந்தின் ராட்டர்டாமுக்கு அருகில் டெல்ஃப்ஷ்ஹாவன் என்ற இடத்திலிருந்து பயணம் செய்திருந்தனர். அவர்கள், முதல் நிரந்தர ஆங்கிலேய குடியிருப்பை—பிளிமத் காலனியை—இப்போது மஸசூசட்ஸின் தென்கிழக்குப் பகுதியாய் இருக்கும் நியூ இங்கிலாந்தில் ஸ்தாபித்தனர். ஆழ்ந்த மதப்பற்றுள்ள இம் மக்கள், மேஃபிளவர் என்ற சின்னஞ்சிறு கப்பலில் ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடலின் வழியாக அப்படிப்பட்ட ஒரு நீண்ட, கடினமான கடற்பயணம் செய்யும் அளவுக்கு துணிச்சலாய் செயற்படும்படி அவர்களை எது தூண்டியது? முதலாவதாக, அவர்கள் நெதர்லாந்துக்கு ஏன் வந்திருந்தனர்? அங்கிருந்து ஏன் புறப்பட்டுச் சென்றனர்?
இங்கிலாந்தில் மதச் சூழ்நிலை
1500-களின்போது, சீர்திருத்த இயக்கத்தால் ரோமன் கத்தோலிக்க சர்ச் பலமிழக்கும்படி செய்யப்பட்டது. இங்கிலாந்து உட்பட, ஐரோப்பா முழுவதிலும் புராட்டஸ்டண்ட் சர்ச்சுகள் தோன்றலாயின. இங்கிலாந்தின் விஷயத்தில், தன் முதல் திருமணம் முறித்துவிடப்படுவதற்கான கிங் ஹென்றி VIII-ன் வேண்டுகோளுக்கு போப் ஒப்புதல் தர மறுத்த பிறகு ரோமுடன் முடிவாக பிளவு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களின் சர்ச் ரோமிலிருந்து பிரிந்தது, மேலும் 1534-ல் ஹென்றியை, “பூமியில் கடவுளுக்கு அடுத்தபடியாக, சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் உன்னத தலைவராக” ஆங்கிலேய நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாய் அங்கீகரித்தது. அவருடைய மகள் எலிசபெத் 1533-ல் பிறந்து, ஒரு புராட்டஸ்டண்ட்டாக வளர்க்கப்பட்டார். அவர் முதலாம் எலிசபெத் ராணியாக ஆனபிறகு, ஒரு வலிமைமிக்க புராட்டஸ்டண்ட் இயல்பை ஆங்கிலிகன் சர்ச்சுக்கு அளித்தார். இருப்பினும், செல்வாக்குள்ளதாயிருந்த ஆங்கிலிகன் சர்ச்சுடன் ஒத்துப்போகாத சிறுசிறு புராட்டஸ்டண்ட் தொகுதியினரும் இருந்தனர். இவர்களில் பலர், தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் எந்தவொரு தடயமுமின்றி அந்த ஆங்கிலிகன் சர்ச்சை அவர்கள் சுத்திகரிக்க விரும்பினர். ஒரு தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவத் தொகுதியினர், விசேஷமாய் மிதமிஞ்சினவர்களாகக் கருதப்பட்டனர். ஏனெனில் அவர்கள் பேராயர்களையும் குருக்களையும் உடைய குருக்களாட்சியிலிருந்து (hierarchy) பிரிந்து சென்றனர். தங்களது சபை, முற்றிலும் சுதந்திரமானதாக, தங்களுக்கென்றேயுள்ள மூப்பர்களுடைய ஆட்சியின்கீழ் இருப்பதாய் அவர்கள் எண்ணினர்.
இச் சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், மக்களின்மீதுள்ள தனது செல்வாக்கை இழந்துவிடப்போவதை எண்ணி ராணி எலிசபெத் பயந்தார். ஆகவே அவர்களுக்கு விரோதமாக கடும் சட்டங்களை இயற்றினார். இவ்வாறு இயற்றியபோதிலும், பல்வேறு சீர்திருத்தக் கிறிஸ்தவத் தொகுதிகள் தொடர்ந்து கூடிவர ஆரம்பித்தன. ஆனாலும் இரகசியமாய், தனி வீடுகளில் அவ்வாறு தொடர்ந்து கூடிவந்தன. தங்களுடைய நம்பிக்கைகளைத் தெரிவிக்கும் மத சம்பந்தமான துண்டுப்பிரசுரங்கள் பலவற்றையும் தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் விநியோகித்தனர். லண்டனைச் சேர்ந்த தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஆங்கிலிகன் ஊழியர்களைப் பெரும்பாலும் கொண்ட மூப்பர்களின் குழுவைத் தங்களுக்கென்று நியமித்துக் கொண்டனர். இவ்வாறு, ஆங்கிலிகன் சர்ச்சைச் சீர்திருத்துவதை விட்டுவிட்டு, அதிலிருந்து பிரிந்து சென்றவர்களே பிரிவினையாளர்கள் (Separatists) என்று அழைக்கப்பட்டனர்.
ராணி எலிசபெத்தையடுத்து பதவிக்கு வந்தவரான கிங் ஜேம்ஸ் I, ராணியின் மத கொள்கைகளையே பின்பற்றினார். அவர் “[தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள்] நாட்டை விட்டுச் செல்லும்படி வற்புறுத்தப்போவதாய்” பயமுறுத்தினார். அதே சமயத்தில், பைபிளின் கிங் ஜேம்ஸ் வர்ஷன் எனப்பட்ட ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையை ஒப்படைத்தார். அது 1611-ல் முற்றுப் பெற்றது. இப் புதிய மொழிபெயர்ப்பு, பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படி பலரைத் தூண்டுவித்தது. இதன் விளைவு என்ன? இன்னும் அநேகர் அரசு சார்ந்த சர்ச்சை விட்டுப் பிரிந்துசெல்ல ஆரம்பித்தனர். நீங்கள் அந்நாட்களில் வாழ்ந்துவந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? துன்புறுத்தல் பற்றிய பயமுறுத்தலின்கீழும் உங்கள் மத நம்பிக்கைகளை மாற்றியிருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? எது வந்தாலும் பரவாயில்லை என்று, உங்கள் நம்பிக்கைகளில் உறுதியுடன் இருந்திருப்பீர்களா? தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்களில் பலர் அவ்வாறு செய்தார்கள், இணங்கிப்போக மறுத்தார்கள்.
ஹாலந்துக்குத் தப்பிச்செல்லுதல்
இணங்கிப் போகாதிருந்த பிரிவினையாளர்களில் ஒரு தொகுதியினர், ஸ்க்ரூபி என்ற சிறிய ஆங்கிலேய நகரில் இருந்தனர். அங்கு அவர்கள், “ஆளும் மூப்பராய்” இருந்த அஞ்சலகத் தலைவர் உவில்லியம் புரூவ்ஸ்டரின் வீட்டில் இரகசியமாக கூடிவந்தனர். முன்னாள் ஆங்கிலிகன் சர்ச்சின் குருவாய் இருந்த ஜான் ராபின்ஸனும் அவர்களோடு கூட்டுறவு கொண்டிருந்தார். ஸ்க்ரூபியிலிருந்த அத் தொகுதியினர், குருக்கள் மற்றும் பேராயர்களுக்கு மாறாக மூப்பர்கள் சர்ச்சை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, குருக்களுக்கான உடைகளையும், ஆங்கிலிகன் சர்ச் சேவைகளின் ஆசாரம் பலவற்றையும் நிராகரித்தனர். சட்டம் இவற்றைத் தேவைப்படுத்தியபோதிலும் அவ்விதம் செய்தனர்.
அதிகரித்துவந்த அழுத்தத்தின்கீழ், இச் சிறிய தொகுதி, அதன் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஒரே இடமாக அச்சமயத்தில் இருந்த நெதர்லாந்துக்கு ஓடிப்போக தீர்மானித்தது. என்றபோதிலும், குடிபெயர்ந்து செல்வது சட்டவிரோதமாய் இருந்தது. ஆகவே கூடியமட்டும் இரகசியமாய், அத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளையும், தங்களோடு எடுத்துச் செல்ல முடியாத அனைத்துப் பொருட்களையும் விற்றனர். 1608-ல் அவர்கள் ஆம்ப்ஸ்டர்டாமுக்கு கப்பலில் சென்றனர். நெதர்லாந்தில்தான் இப் பிரிவினையாளர்கள் தங்களை யாத்ரீகர்களாக (பில்கிரிம்களாக) எண்ணிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இப் பில்கிரிம்கள், போய்ச்சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு லீடனுக்கு மாறிச்சென்றனர். அந்த ஆண்டில்தான், ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே மூண்டுகொண்டிருந்த போரை ஒரு சமாதான ஒப்பந்தம் தடங்கல் செய்தது. அந்த ஒப்பந்தம் பில்கிரிம்களுக்கு இன்னும் அமைதியான சூழல் கிடைப்பதில் விளைவடைந்தது. படிப்படியாக, அதிக நாடோடிகள் இங்கிலாந்திலிருந்து வந்துசேர்ந்தனர். சுமார் 300 ஆகும்வரை அத்தொகுதி வளர்ச்சியடைந்தது. காலப்போக்கில், அவர்கள் ஒரு பெரிய வீட்டை வாங்கினர். அங்கு ஜான் ராபின்ஸனும் அவருடைய குடும்பமும் வசித்துவந்தனர், அதோடு கூட்டங்களையும் அங்கு நடத்த முடிந்தது.
லீடனில் சுமார் பத்து ஆண்டுகளைக் கழித்த பிறகு, பில்கிரிம்கள் அமைதியிழந்தவர்களாக உணர ஆரம்பித்தனர். ஸ்பெய்னுடன் செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தம் முடிவடைய இருந்தது. ஆகவே, ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை நெதர்லாந்தில் வலுவடைய ஆரம்பித்தால், கிங் ஜேம்ஸின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது நடத்தப்பட்டதைவிட மோசமாக நடத்தப்படுவர் என்று அவர்கள் பயந்தனர். மேலும், தங்கள் அயலவரான கட்டுப்பாடற்ற டச்சுக்காரர்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. மேலும் தங்களுடைய பிள்ளைகள், ஒழுக்கக் கட்டுப்பாடற்ற டச்சு இளைஞர்களுடன் கூட்டுறவு கொள்வதைப் பற்றி கவலைப்பட்டனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றொரு பிரம்மாண்டமான இடமாற்றம் செய்வதை எண்ணிப்பார்த்தனர்—இம்முறை, அமெரிக்காவுக்கு!
மேஃபிளவர் கடலில் செல்கிறது!
அப்படிப்பட்ட ஒரு நீண்ட கடற்பயணத்திற்கு பணம் செலவழிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. மற்றொரு குறிப்பிடத்தக்க பிரச்சினை, ஆய்வுப்பயணத்திற்கு வேண்டிய அனுமதியை, இங்கிலாந்து அரசரிடமிருந்து—தாங்கள் நெதர்லாந்துக்கு ஓடிச்சென்றபோது யாரிடமிருந்து தப்பிச்செல்ல வகைதேடினரோ, அதே அரசரிடமிருந்து—பெறவேண்டியிருந்தது! பில்கிரிம்கள் தங்கள் மனுக்களால் கிங் ஜேம்ஸின் கட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்திக்கொண்டே இருந்தனர். முடிவாக, அவர் தன் அனுமதியை வழங்கினார். காலப்போக்கில், லண்டன் வணிகர்கள் அடங்கிய ஒரு தொகுதி இத் துணிகர முயற்சிக்கு பண உதவியளித்தது.
முடிவில், புறப்படுவதற்கான நேரம் வந்தது! இடம் மாறிச்செல்லத் தீர்மானித்த, லீடனிலிருந்த பில்கிரிம் சர்ச்சைச் சேர்ந்தவர்கள், ஸ்பீட்வெல் என்ற கப்பலில் ஏறினர். ஜூலை 22, 1620-ல் இங்கிலாந்து செல்வதற்காக டெல்ஃப்ஷ்ஹாவனிலிருந்து புறப்பட்டனர், இன்னும் கூடுதல் உறுப்பினரைச் சேர்த்துக்கொள்வதற்காக அவ்வாறு சென்றனர். பில்கிரிம்கள், ஸ்பீட்வெல், மேஃபிளவர் என்ற இரு கப்பல்களில் ஏறிச்சென்றனர். என்றபோதிலும், ஸ்பீட்வெல்லின் உடற்பகுதியில் தீவிர கசிவுகள் ஏற்பட்டதால் கப்பல்கள் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று. அங்கு, மேஃபிளவர், ஸ்பீட்வெல்லிலிருந்து பயணிகளையும் உணவுப்பொருட்களையும் ஏற்றிக்கொண்டது. முடிவாக செப்டம்பர் 6-ல், 27 மீட்டர் நீளமே உடையதாய் இருந்த அச் சிறிய மேஃபிளவர் மட்டும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிளிமத்திலிருந்து கடற்பயணத்தை ஆரம்பித்தது. அதில் மொத்தம் 102 பயணிகளைக் கொண்ட 24 குடும்பங்களும், 25 பேரைக் கொண்ட கப்பல் ஓட்டும் பணியாளர்கள் அடங்கிய ஒரு தொகுதியும் இருந்தன. 5,000 கிலோமீட்டர் தொலைவுடைய ஒரு பெருங்கடல் பயணத்தை முயன்றுபார்ப்பதற்கு, அனுபவமற்ற பயணிகளாயிருந்த அவர்களுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்க வேண்டும்! அக் கப்பல் மிதமிஞ்சிய கூட்டத்தால் நிறைந்திருந்தது. அதோடு, ஆபத்தான வட அட்லாண்டிக் வானிலையுடன் போராட வேண்டியிருந்தது. அக் கப்பலில் ஏறிச்சென்றவர்கள் பெருங்கடலில் ஒன்பது நீண்ட வாரங்களைக் கழித்த பிறகு, நிலப்பகுதியைக் கண்டபோது, அவர்களுக்கு இருந்திருக்கும் உணர்வுகளைக் கற்பனை செய்து பாருங்கள்!
காலனியை நிறுவுதல்
பில்கிரிம்கள் கரையேறுவதற்கு முன்பு, அப் புதிய காலனியின் எதிர்கால அரசாங்கம் சம்பந்தமாக ஒரு பரஸ்பர ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை செய்துகொண்டனர். அத் தொகுதியிலிருந்த 41 ஆண்களால் ஒப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் பில்கிரிம்கள், “குடிமக்களைக் கொண்ட ஒற்றை அரசாங்க அதிகாரத்தின்கீழான அரசியல் அமைப்பு” ஒன்றுக்குள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். மேலும், தங்களுடைய விவகாரங்கள் அனைத்தின்மீதும் ஆளுகை செய்யும்படியான சட்டங்களை ஏற்படுத்துவது மற்றும் அதன்படி நடப்பது ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இந்த ஆவணத்தை முதல் அமெரிக்க அமைப்பு என்று வரலாற்று வல்லுநர் சிலர் அழைத்திருக்கிறபோதிலும், அதை இயற்றிய பில்கிரிம்கள், “ஒரு மத இயல்பையுடைய ஓர் அதிகாரத்தை நிலைநாட்டுவதை மனதில் கொண்டிருந்தனர்” என்று குரோட்ட விங்க்லர் பிரின்ஸ் என்ஸிக்ளோப்பெடி குறிப்பிட்டுக் காட்டுகிறது. அக் காலனியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உடல் ரீதியிலும் மத ரீதியிலும் ஒன்று சேர்ந்திருக்கும்படி ஒப்படைப்பதே அதன் நோக்கமாய் இருந்தது.
கடற்கரையைப் பார்வையிட்ட பிறகும், உள்நாட்டில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட பிறகும், குளிர் மிகுந்த டிசம்பரில், பின்பு பிளிமத் காலனி என்றழைக்கப்பட்ட நியூ பிளிமத் என்று அவர்கள் பெயரிட்ட இடத்தில் அத் தொகுதியினர் குடியேறினர். அவர்கள் அமெரிக்க இந்தியர்களால் பயிர்செய்யப்பட்டு வந்திருந்த வயல்களைக் கடந்து வந்தனர். ஆனால் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுப்பயணம் மேற்கொண்டவர்களால் கவனிக்கப்பட்டு வந்திருந்த அம் மிகப்பெரிய அமெரிக்க இந்தியர்கள், ஆய்வுப்பயணிகளின் நோய்களால்—பெரியம்மை மற்றும் மணல்வாரி அம்மை உட்பட்ட நோய்களால்—தாக்கப்பட்டிருந்தனர். இல்லாவிடில், ஒரு காலனியை நிறுவும் நோக்கில் எடுக்கப்பட்ட பில்கிரிம்களின் முயற்சியை அந்த அமெரிக்க இந்தியர்கள் எதிர்த்திருந்திருக்கலாம்.
ஒரு சமூக கட்டடத்தையும் பல தனி வீடுகளையும் கட்டுவதன் மூலம் அந்த பில்கிரிம்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தனர். அது ஒரு சிரமமான ஆரம்பமாய் இருந்தது. ஏனெனில் அவர்கள் குளிர்காலத்தில் போய்ச் சேர்ந்தனர், மேலும் அவர்களுடைய கப்பலில் இருந்த உணவுப்பொருட்களில் போதியளவு மீந்திருக்கவில்லை. அந்த முதல் குளிர்காலத்தின்போது, நோய்ப்பட்டு 52 பேர் இறந்தனர். 24 கணவன்மார்களில் 13 பேரும், 18 மனைவிமார்களில் கிட்டத்தட்ட 14 பேரும் அவர்களில் அடங்குவர். அவர்களுடைய முதல் ஆளுநர் ஜான் கார்வரும் இறந்தவர்களில் ஒருவர். ஆனால் தப்பிப்பிழைத்தவர்கள் நியூ பிளிமத்திலேயே தங்கியிருக்கத் தீர்மானமாய் இருந்தனர். அடுத்த ஆளுநர், உணர்ச்சியார்வம் மிகுந்த உவில்லியம் பிரேட்ஃப்ர்ட். அவர் அந்தப் புதிய காலனியினுடைய வரலாற்றின் ஒரு திட்டவட்டமான பதிவை வைத்திருந்தார். ஆகவே, அமெரிக்காவின் முதல் வரலாற்று வல்லுநராகக் கருதப்பட்டு வருகிறார்.
பில்கிரிம்களும் இந்தியர்களும்
நியூ பிளிமத்திற்கு முதலாவதாக போய்ச்சேர்ந்த பில்கிரிம்கள், அமெரிக்க இந்திய உள்ளூர் வாம்ப்பனோவாக் குடிகளின் முக்கியத் தலைவரான மஸஸாய்ட்டுடன் ஒரு பரஸ்பர சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தில், பில்கிரிம்களும் வாம்ப்பனோவாக் குடிகளும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யாமல் இருந்துகொள்ள வாக்கு கொடுத்துக்கொண்டனர், அதோடு வெளியாட்களிடமிருந்து போரிட நேரிட்டால் பரஸ்பர பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் ஆணையிடுவித்துக் கொண்டனர். மஸஸாய்ட்டின் நட்பு இல்லாவிட்டால், பில்கிரிம்களில் எவராவது தப்பிப் பிழைத்திருந்திருப்பதற்கு சாத்தியமில்லாதது போல் தோன்றுகிறது. இந்த அமெரிக்க இந்தியர்கள், குடியேறியவர்களுக்கு உள்ளூர் சோளக்கதிரை உண்பதற்காகவும் பயிரிடுவதற்காகவும் கொடுத்தனர். அவர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தம், பிற குடிகளின் கைகளில் விழுந்து மடிவதைத் தடுக்க பில்கிரிம்களுக்கு உதவியாயிருந்தது.
ஆரம்ப நாட்களில், காலனியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க இந்தியர்களிடமிருந்து அதிகளவு உதவியைப் பெற்றனர். ஆளுநர் உவில்லியம் பிரேட்ஃபர்ட் கூறுவதற்கிசைய, டிஸ்க்வான்ட்டம் என்ற பெயருடைய ஓர் இந்தியர், காலனியைச் சேர்ந்தவர்களுக்கு “சோளக்கதிரைப் பயிரிடுவது எப்படி என்றும், எங்கு மீன்பிடிக்கச் செல்வது என்றும், பயனுள்ள பொருட்களை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்றும் கற்பித்தார். மேலும், அவர்களுடைய நன்மைக்காக அறியாத இடங்களுக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லும் வழிகாட்டியாகவும் இருந்தார்.” இந்திய சோளக்கதிரின் முதல் அறுவடை நன்றாய் இருந்தது, அதோடு, பறவைகளை வேட்டையாடுவதிலும் பில்கிரிம்கள் வெற்றியடைந்தனர். அவர்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தனர், அதனால் ஒரு மூன்று-நாள் அறுப்பின் பண்டிகையைக் கொண்டாட தீர்மானித்தனர். மஸஸாய்ட்டும் 90 அமெரிக்க இந்திய போர்வீரர்களும் ஐந்து மான்களைக் கொண்டுவந்து அவ் விருந்தைச் சிறப்பித்தனர்.
அக் காலனியைப் போலவே, அக் கொண்டாட்டமும் பலமான மத அர்த்தங்களைக் கொண்டிருந்தது. அடுத்த ஆண்டு குறைந்த மகசூல் காரணமாக பில்கிரிம்கள் அப் பண்டிகையைக் கொண்டாடாத போதிலும், நன்றிதெரிவிக்கும் நாள், ஐக்கிய மாகாணங்கள், கனடா மற்றும் பிற நாடுகள் ஒருசிலவற்றில் பின்பு ஒரு வருடாந்தர தேசிய மற்றும் மத விடுமுறையாக ஆனது. இன்று, வட அமெரிக்காவில் நன்றிதெரிவிக்கும் நாள், வான்கோழி, கிரான்பெரி குழம்பு, பூசணிக்காய் சோமாசி ஆகியவற்றைக் கொண்ட ஒரு குடும்ப விருந்துக்கான சந்தர்ப்பத்துக்கு ஒரு மாதிரியாய் இருக்கிறது. ஆனால் அடிப்படையில் அது, “உள்ளார்ந்த மத சிந்தனை, சர்ச் சேவைகள் மற்றும் ஜெபத்துக்கான ஒரு சமயமாய்” நிலைத்திருக்கிறது.—தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா, 1994. a
பிந்தைய அபிவிருத்திகள்
1622-ல் இன்னும் அதிக பில்கிரிம்கள் லீடனிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வந்தனர். பிறகு, கூடுதலான கப்பல்கள் ஐரோப்பாவிலுள்ள உடன் விசுவாசிகளோடு வந்து சேர்ந்தன. 1630-ல், பில்கிரிம்களின் கடைசி தொகுதி லீடனிலிருந்து காலனியுடன் சேர்ந்துகொண்டது, அப்போது அவர்களுடைய எண்ணிக்கை சுமார் 300 ஆனது. காலப்போக்கில் அக் காலனி, வடபகுதிக்கு மிகத் தொலைவில் இல்லாமல் இருந்த பெரிய மஸசூசட்ஸ் பே காலனியுடன் இணைந்தது. இக் காலனியைச் சேர்ந்தவர்களும் தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையையே உடையவர்களாய் இருந்தனர். என்றபோதிலும், அதே சமயத்தில், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களுடைய அமெரிக்க இந்திய அயலவருக்கும் இடையே விரோதங்கள் வளர்ந்துவந்தன. அந்தப் புதிய தேசத்தை ஆளும்படி தங்களைக் கடவுள் முன்குறித்திருந்ததாய் நம்பின தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள், கர்வமிக்கவர்களாய் ஆகிக்கொண்டே வந்தனர். இதைப் பார்த்ததும், அமெரிக்க இந்தியர்கள் எப்போதையும்விட மிகவும் மனக்கசப்பு கொள்ள ஆரம்பித்தனர். விசனகரமாக, வாம்ப்பனோவாக்கில் உடன்படிக்கை செய்து 55 ஆண்டுகளே ஆன பிறகு, பிளிமத்திலிருந்த அந்தக் காலனி, பிற ஆங்கிலேய காலனிகள் மூன்றுடனும் அமெரிக்க இந்தியர்கள் சிலருடனும் சேர்ந்து, மஸஸாய்ட்டின் மகனுக்கு எதிராக சண்டையிடச் சென்றது. அவரும் சுமார் மூவாயிரம் அமெரிக்க இந்திய ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் இன்னும் நூற்றுக்கணக்கானோரை அடிமைத்தனத்துக்குள் விற்றனர். வாம்ப்பனோவாக் குடி அற்றுப்போனது.
பில்கிரிம்கள் விட்டுச்சென்றது
நெதர்லாந்தில், பில்கிரிம்கள் வாழ்ந்துவந்த லீடனின் ஒரு பகுதியை இன்னும் நீங்கள் பார்வையிடலாம். அதேபோன்று, அமெரிக்காவுக்குச் செல்லும்படியாக அவர்கள் புறப்பட்ட டெல்ஃப்ஷேவன் துறைமுகத்தையும் பார்வையிடலாம். மஸசூசட்ஸைச் சேர்ந்த தற்போதைய பிளிமத் நகரில், பில்கிரிம்களால் ஆரம்பத்தில் கட்டப்பட்ட கிராமத்தை மறுபடியுமாக எடுத்துக் கட்டிய பிளிமத் பிளான்ட்டேஷனை நீங்கள் பார்க்கலாம். அதோடு, ஒரு பில்கிரிம் அருங்காட்சியகத்தையும் மேஃபிளவர் கப்பலின் ஓர் உருவமாதிரியையும் பார்க்கலாம். இக் கிராமத்தில், நடிகர்கள் ஆரம்பக் குடியிருப்பாளர்களைச் சித்தரித்துக் காட்டுகின்றனர். கடவுளுடைய பெயர் யெகோவா என்றும், “சர்ச்” என்பது கல்லால் கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல, ஆனால் மக்களால் ஆனது என்றும் அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். “உங்கள் சர்ச்சில் எத்தனை மூப்பர்கள் இருக்கின்றனர்?” என்ற கேள்விக்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறுகின்றனர்: “பைபிள் தேவைப்படுத்துவதை நிறைவேற்றும் அத்தனைப் பேர்கள்.”
பில்கிரிம்கள் தங்கள் சமூகத்தை, “மோசேயின் வழிநடத்துதலின் கீழிருந்த இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களைப் போலவே” காட்டிக்கொள்ள முயன்றனர் என்பதாக தி ப்யூரிட்டன் ஹெரிட்டேஜ்—அமெரிக்காஸ் ரூட்ஸ் இன் தி பைபிள் என்ற புத்தகம் கூறுகிறது. என்றபோதிலும், சில சமயங்களில் தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் மிதமிஞ்சி சென்றனர். உதாரணமாக, பொருள்வளம் கடவுளுடைய தயவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது என்ற அவர்களுடைய நம்பிக்கையிலிருந்துதான், அவர்கள் கடின உழைப்பாளிகள் என்ற ஓரளவு புகழ் தோன்றியது. மேலும், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை உண்மையிலேயே நேசித்தபோதிலும், பல ஆரம்ப தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள், “தங்களுடைய . . . மிதமிஞ்சிய பாசங்களை மறைக்க” வேண்டும் என்பதாக நம்பினர். இவ்வாறு, “தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவம்” இரக்கமற்ற தோற்றத்துடனும், கடுமையான அரசாங்கத்துடனும், மிதமிஞ்சிய கண்டிப்புடனும் தொடர்புபடுத்தி வழங்கப்படலாயிற்று. என்றபோதிலும், அவர்களுடைய அபூரணத்தன்மைகளின் மத்தியிலும், பில்கிரிம்கள் ஓரளவு ஒழுக்க பலம் உடையவர்களாய் இருந்தனர், மதப்பற்றுள்ளவர்களாய் இருந்தனர், மேலும் பைபிளுக்கிசைய வாழ முயன்றனர். பில்கிரிம்களை ஒற்றுமைப்படுத்தி, அவர்களுடைய சோதனைகள் பலவற்றினூடேயும் தாங்கிக்கொள்ளச் செய்த பண்புகள் இவைகளாகவே இருந்தன என்பது தெளிவாயிருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு நன்றிதெரிவிக்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட விடுமுறை அவர்களுக்குத் தேவையில்லை. கூடுதலான தகவலுக்கு, தயவுசெய்து விழித்தெழு! (ஆங்கிலம்) நவம்பர் 22, 1976 இதழில் பக்கங்கள் 9-13-ஐக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
வாம்ப்பனோவாக் இந்தியக்குடிகள் பில்கிரிம்களுக்கு உதவினர்
[படத்திற்கான நன்றி]
Harper’s Encyclopædia of United States History
[பக்கம் 24-ன் படங்களுக்கான நன்றி]
Top: Model van de Mayflower