மகிழ்ச்சியை செல்வத்தால் வாங்கமுடியுமா?
அத்தாட்சிகளின்படி அதிகமான பணத்தைக் கொண்டிருப்பது மனிதர்களை அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாகச் செய்வதில்லை. சைக்காலஜி டுடே பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “வறுமைக்கோட்டைத் தாண்டியபிறகு, வருவாயின் அதிகரிப்புக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும் அதிசயிக்கத்தக்க விதமாக அதிகம் சம்பந்தம் இருப்பதில்லை.”
அக்டோபர் 29, 1993 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ்-ல் வந்த இறப்புச் செய்திக் குறிப்பின் தலைப்பு இதை உறுதிசெய்தது: “தன்னுடைய பெரும் செல்வத்தால் மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்கமுடியாத பெருஞ்செல்வந்தர் டாரிஸ் டியூக், 80, காலமானார்.” கட்டுரை சொன்னது: “ஒருநாள் பின்மாலை பொழுதில், 1945-ல் ரோமில் செல்வி டியூக், அப்போது 33 வயதினளாய் இருந்தவள், தன்னுடைய நண்பரிடம், தன்னுடைய மிகப் பெரிய சொத்து சிலவிதங்களில் மகிழ்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பதாகச் சொன்னாள்.”
“அந்த எல்லா பணமும் சிலசமயங்களில் பிரச்னையாக இருக்கிறது,” என்பதாக டியூக் தன் நண்பரிடம் தெரிவித்தாள். “ஒருசில தடவைகள் ஒரு மனிதனோடு நான் பழகியபின்பு, அவர் என்னை தான் எவ்வளவு நேசிக்கிறார் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் உண்மையில் அதை அர்த்தப்படுத்துகிறாரா என்பதை நான் எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? நான் எப்படி நிச்சயமாக இருக்கமுடியும்?” டைம்ஸ் குறிப்பிட்டது: “அந்த இரவு அவளுடைய வார்த்தைகள் அவளுடைய செல்வத்தால் அவள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதை, பீதியும் அடைந்திருப்பதைக் காட்டின.”
அதேவிதமாகவே, ஒருசமயம் உலகிலேயே பெரிய பணக்காரன் என்று பெயரெடுத்த ஜீன் பால் கெட்டி சொன்னார்: “பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கட்டாயமாக சம்பந்தமிருக்கவேண்டும் என்பதில்லை. ஒருவேளை மகிழ்ச்சியின்மையோடு அது சம்பந்தமுள்ளதாயிருக்கலாம்.” ஜேன் ஃபாண்டா என்ற ஹாலிவுட் நடிகை, 1970-களில் ஒரு திரைப்படத்துக்கு அரை மில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கியவள், இவ்வாறு சொன்னாள்: “செல்வத்தையும் எல்லா பொருள் சம்பந்தமான காரியங்களையும் நான் ருசித்துவிட்டேன். அவற்றால் எந்தப் பிரயோஜனமுமில்லை. ஒவ்வொரு செல்வந்தனும் ஒரு மனோதத்துவரை கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. அப்படியானல் மணவிலக்குகளையும் தங்கள் பெற்றோரை வெறுக்கும் பிள்ளைகளையும்பற்றி சொல்லவே வேண்டாம்.”
செல்வம் மாத்திரமே ஒருபோதும் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாதிருக்கையில், இழிவான வறுமையும் அதைக் கொண்டுவரமுடியாது. இதன் காரணமாகவே, வெகு காலத்துக்கு முன்பாக ஒரு ஞானி இவ்வாறு சொன்னார்: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.” (நீதிமொழிகள் 30:8, 9) மகிழ்ச்சியாக இருக்கும்பொருட்டு ஒரு நபருக்குத் தேவையாயிருப்பது, “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே,” என்று மற்றொரு பைபிள் எழுத்தாளர் குறிப்பிட்டார். “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.”—1 தீமோத்தேயு 6:6-10.