உண்மையான மகிழ்ச்சிக்கு வழி
“மகிழ்ச்சியை நாடித் தேடுவதே வாழ்க்கையின் ஒரே நோக்கம்.” இப்படி சொன்னவர் டாலை லாமா என்ற புத்தமத தலைவர். மனதையும் இருதயத்தையும் பயிற்றுவித்தால் அல்லது கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சியை அடையலாம் என அவர் நம்பினார். “பூரண மகிழ்ச்சிக்கு மனம்தான் அடிப்படை” என்று சொன்னார். அதற்குக் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என அவர் நினைக்கிறார்.a
இதற்கு நேர்மாறாக, இயேசுவை சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு கடவுள்மீது பலமான விசுவாசம் இருந்தது, அவருடைய போதனைகள் நூற்றாண்டுகளாகவே கோடிக்கணக்கான மக்களை கவர்ந்துள்ளன. மனிதர் மகிழ்ச்சி காண வேண்டும் என்பதில் இயேசு அக்கறை காட்டினார். அவருடைய பிரசித்திபெற்ற மலைப்பிரசங்கத்தில், பேரின்பத்திற்கான ஒன்பது வழிகளை—ஒன்பது சொற்றொடர்களை—“சந்தோஷமுள்ளவர்கள்” என்ற வார்த்தையோடு முடிக்கிறார். (மத்தேயு 5:1-12, NW) அதே பிரசங்கத்தில், மனதையும் இருதயத்தையும் ஆராய்ந்து பார்க்கும்படியும், சுத்திகரிக்கும்படியும் கட்டுப்படுத்தும்படியும் கூறினார். அதாவது வன்முறை, ஒழுக்கயீனம், சுயநலம் போன்ற எண்ணங்களை நீக்கி, சமாதானமும் சுத்தமும் அன்பும் நிறைந்த எண்ணங்களால் நிரப்ப வேண்டும் என போதித்தார். (மத்தேயு 5:21, 22, 27, 28; 6:19-21) “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே” நாம் “சிந்தித்துக்கொண்டிரு”க்க வேண்டும் என அவருடைய சீஷர்களில் ஒருவர் பிற்பாடு அறிவுரை கூறினார்.—பிலிப்பியர் 4:8.
உண்மையான மகிழ்ச்சிக்கு, மற்றவர்களுடன் நல்லுறவும் அவசியம் என்பதை இயேசு அறிந்திருந்தார். மனிதர்களாகிய நாம் எப்போதுமே கூடிவாழும் இயல்புடையவர்கள். ஆகவே, நம்மை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டால் அல்லது எப்போதும் அக்கம் பக்கத்தாரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வும் பிறரை நேசிக்கும் குணமும் நமக்கு இருந்தால் மாத்திரமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட அன்புக்கு அடிப்படை கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவுதான் என இயேசு போதித்தார். இங்கு இயேசுவின் போதனை டாலை லாமாவின் கூற்றிலிருந்து வித்தியாசப்படுவதைக் காண்கிறோம். கடவுளை சார்ந்திராமல் மனிதர்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது என இயேசு போதித்தார். ஏன் அப்படி?—மத்தேயு 4:4; 22:37-39.
உங்கள் ஆவிக்குரிய தேவைகளை சிந்தியுங்கள்
பேரின்பத்தைப் பற்றிய சொற்றொடர்களில் ஒன்று: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) இயேசு ஏன் இதைக் கூறினார்? ஏனெனில், மிருகங்களிலிருந்து நாம் வித்தியாசப்பட்டவர்கள். நமக்கு ஆவிக்குரிய தேவைகள் உண்டு. நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அன்பு, நீதி, இரக்கம், ஞானம் போன்ற தெய்வீக குணங்களை வளர்க்க முடியும். (ஆதியாகமம் 1:27; மீகா 6:8; 1 யோவான் 4:8) நோக்கமுள்ள வாழ்க்கையும் நம்முடைய ஆவிக்குரிய தேவைகளில் உட்படுகிறது.
ஆவிக்குரிய தேவைகளை நாம் எப்படி நிறைவு செய்யலாம்? ஆழ்நிலைத் தியானம் அல்லது சுயபரிசோதனை மூலமாக அல்ல. அதற்கு மாறாக, இயேசு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4) நம் வாழ்க்கைக்கு உயிர்நாடியான “ஒவ்வொரு வார்த்தை”யும் கடவுளிடமிருந்தே வருகிறது என இயேசு சொன்னதை கவனியுங்கள். நம்முடைய சில கேள்விகளுக்கு கடவுள் மட்டுமே பதிலளிக்க முடியும். இந்த உட்பார்வை இன்று நம்முடைய காலத்திற்கு மிகவும் இன்றியமையாதது, ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் மகிழ்ச்சிக்கான வழியைப் பற்றியும் சொல்லும் கோட்பாடுகள் இன்று குவிந்து கிடக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கும் உதவியளிக்கும் புத்தகங்களே புத்தகக் கடைகளில் விற்கப்படுகின்றன. இன்டர்நெட் சைட்டுகளில் மகிழ்ச்சி என்ற விஷயத்தைப் பற்றி ஆராய்வதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இருந்தாலும், இந்த விஷயங்களில் மனித சிந்தனை எப்போதுமே தவறாக வழிநடத்தப்படுகிறது. இது தன்னல விருப்பங்களுக்கு அல்லது தற்பெருமைக்கே வழிவகுக்கிறது. இது மட்டுப்பட்ட மனித அறிவையும் அனுபவத்தையுமே சார்ந்தது. இது பெரும்பாலும் தவறான கருத்துக்களுக்கும்கூட காரணமாகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, சுய-உதவி புத்தக எழுத்தாளர்கள் “பரிணாம மனோவியல்” கோட்பாட்டை தங்கள் கருத்துக்களுக்கு அடிப்படையாக வைக்கும் போக்கு இன்று வளர்ந்துவருகிறது. அக்கோட்பாட்டின்படி, மனிதன் விலங்கிலிருந்து வந்ததாக கருதப்படுவதால் மனித உணர்வுகளுக்கு மிருகப் பரம்பரையே அடிப்படை என நம்பப்படுகிறது. ஆகவே, படைப்பாளர் இருப்பதையே நம்பாத எந்தவொரு கோட்பாட்டின் அடிப்படையில் மகிழ்ச்சியைக் கண்டடைய எடுக்கும் எந்த முயற்சியும் பயனுள்ளதாக இருக்க முடியாது. அது ஏமாற்றத்தில்தான் விளைவடையும். பூர்வகால தீர்க்கதரிசி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஞானிகள் வெட்[கமடைவர்]. . . . இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள். அவர்களுக்கு ஞானமேது?”—எரேமியா 8:9.
நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பது யெகோவா தேவனுக்குத் தெரியும். ஆகவே எது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்பதும் அவருக்குத் தெரியும். மனிதனை ஏன் இந்தப் பூமியில் படைத்தார், அவனுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியும். ஆகவே, இந்த விஷயங்களையெல்லாம் பைபிள் வாயிலாக அவர் நமக்கு தெரிவிக்கிறார். தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அப்புத்தகத்தில் கடவுள் தெரியப்படுத்தியுள்ள விஷயங்கள், நல்லிதயம் படைத்தவர்களுடைய மனதை தூண்டுகின்றன, மகிழ்ச்சியையும் அருளுகின்றன. (லூக்கா 10:21; யோவான் 8:32) இயேசுவின் இரண்டு சீஷர்களுடைய விஷயத்திலும் இதுதான் நடந்தது. அவர் இறந்தபோது அவர்கள் துக்கமடைந்து நிலைகுலைந்து போயினர். ஆனால், மனிதகுலத்தை இரட்சிக்க கடவுள் கொண்டுள்ள நோக்கத்தில், தாம் வகிக்கும் பாகத்தை உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவே சொன்னதை உணர்ந்தபின், “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.—லூக்கா 24:32.
பைபிள் சத்தியத்தை நம் வாழ்க்கையில் பின்பற்றும்போது இந்த சந்தோஷம் அதிகரிக்கிறது. இந்த விஷயத்தில், மகிழ்ச்சியை வானவில்லுக்கு ஒப்பிடலாம். வானவில் சாதகமான சூழ்நிலையில் தோன்றுகிறது. ஆனால் சூழ்நிலைகள் மிக நன்றாக இருக்கும்போது இந்த வானவில் அதிக பிரகாசமாக—இரட்டையாகவும்—தெரிகிறது. பைபிள் போதனைகளைப் பொருத்துவதால் நம்முடைய மகிழ்ச்சியை எவ்வாறு இன்னும் அதிகரிக்கலாம் என்பதற்கு சில உதாரணங்களை நாம் இப்போது காணலாம்.
உங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள்
முதலாவதாக, செல்வத்தைப் பற்றியதில் இயேசுவின் அறிவுரையை கவனியுங்கள். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதை கண்டித்த பின்பு, வித்தியாசமான ஒரு சொற்றொடரை பயன்படுத்தினார். அவர் கூறினார்: “உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” (மத்தேயு 6:19-22) சொத்து சேர்ப்பதிலோ பதவியை நாடுவதிலோ அல்லது வேறு பல இலக்குகளை அடைவதிலோ கண்ணும் கருத்துமாக இருந்தால் அதிமுக்கியமான காரியங்களை நாம் இழந்துவிடுவோம் என்பதே அவர் சொன்ன விஷயத்தின் சாராம்சம். ஏனென்றால் மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு சொன்னார், “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) உண்மையிலேயே முக்கியமான விஷயங்களை, அதாவது கடவுளோடு நம் உறவு, குடும்பத்தின்மீது அக்கறை போன்றவற்றையும், இதோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் முதலில் வைக்கும்போது, நம் ‘கண் தெளிவாக’ இருக்கும்; நமக்கு உள்ளதை வைத்து திருப்தியோடும் இருப்போம்.
இயேசு இங்கே துறவறத்தை ஆதரித்து பேசவில்லை என்பதை கவனியுங்கள். இயேசுதாமேயும் ஒரு துறவி அல்ல. (மத்தேயு 11:19; யோவான் 2:1-11) இருந்தாலும், வாழ்க்கை என்பது செல்வத்தை சேர்க்க கிடைத்த வாய்ப்பாக கருதுபவர்கள் கடைசியில் அந்த வாழ்க்கையையே—ஜீவனையே—இழந்துவிடுகிறார்கள் என இயேசு போதித்தார்.
வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் அதிக செல்வந்தர்களாக இருந்தவர்களைப் பற்றி குறிப்பிடும்போது, அ.ஐ.மா., சான் ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள வசிய துயில்முறை மருத்துவர் (psychotherapist) இவ்வாறு கூறினார்: பணமே “மன அழுத்தத்திற்கும் குழப்பங்களுக்கும் அடிப்படை காரணம்.” அந்தச் செல்வந்தர்கள் “இரண்டு அல்லது மூன்று வீடுகள் வாங்குகிறார்கள், கார் வாங்குகிறார்கள், பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அப்படியிருந்தும் அவற்றால் திருப்தியடையவில்லை [மகிழ்ச்சியடையவில்லை] என்றால், மன உளைச்சலும், விரக்தியும் அடைந்து வாழ்க்கையே சூனியமாகி விட்டதுபோல் உணருகிறார்கள்.” இதற்கு நேர்மாறாக, இருப்பதை வைத்து எளிய வாழ்க்கை வாழ்ந்து ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கும்படி இயேசு சொன்ன அறிவுரைக்கு செவிகொடுப்பவர்கள் உண்மையான மகிழ்ச்சியை கண்டடைவது உறுதி.
ஹவாயில் வசித்துவரும் டாம் என்ற கொத்தனார் பசிபிக் தீவிலுள்ள மக்களுக்கு வழிபாட்டுக்குரிய இடங்களை கட்டிக் கொடுப்பதற்கு மனமுவந்து உதவினார். வசதி குறைந்த பணிவான அந்த மக்களிடத்தில் ஒரு காரியத்தை டாம் கவனித்தார். அவர் இவ்வாறு கூறினார்: “இந்தத் தீவுகளில் வசிக்கும் என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தார்கள். உண்மையான மகிழ்ச்சிக்குக் காரணம் பணமோ பொருளோ அல்ல என்பதை அவர்களிடமிருந்து நான் தெளிவாக கற்றுக்கொண்டேன்.” தன்னோடு வேலையில் ஈடுபட்ட மற்ற வாலன்டியர்களும் தங்களுக்கு இருப்பதை வைத்து எந்தளவுக்கு திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்பதையும் அவர் கவனித்தார். டாம் சொல்கிறார்: “வேண்டுமானால் அவர்களும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அவர்கள் ஆவிக்குரிய காரியங்களையே முதலிடத்தில் வைத்து எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.” இந்த மாதிரிகளைக் கண்டு தூண்டப்பட்ட டாம் தன்னுடைய வாழ்க்கையையும் அதுபோல எளிமையாக்கினார். அதனால், தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஆன்மீக விஷயங்களுக்காகவும் அவரால் அதிக நேரம் செலவிட முடிகிறது—இப்படியொரு தீர்மானம் எடுத்ததற்காக அவர் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை.
மகிழ்ச்சியும் சுயமதிப்பும்
கண்ணியம் அல்லது சுய மதிப்பு என்ற உணர்வு மகிழ்ச்சிக்கு அத்தியாவசியமாகும். மனித அபூரணத்தின் காரணமாகவும் அதனால் விளைந்த பலவீனங்களின் காரணமாகவும் சிலர் தங்களைப் பற்றி தாழ்வாக எண்ணுகிறார்கள். அநேகருக்கு இப்படிப்பட்ட உணர்வுகள் சிறு பிராயத்திலிருந்தே இருக்கின்றன. ஆழமாக வேரூன்றிய இப்படிப்பட்ட உணர்வுகளை மேற்கொள்வது கடினமாக தோன்றலாம். ஆனால் இந்த பலவீனத்தை மேற்கொள்ள முடியும். கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் பொருத்துவதே இதற்கு தீர்வு காண வழி.
படைப்பாளர் நம்மை பற்றி எவ்வாறு உணருகிறார் என்பதை பைபிள் விளக்குகிறது. அவருடைய கருத்துக்கள் எந்த மனிதனின் கருத்துக்களையும்விட—ஏன் நம்முடைய சொந்த கருத்துக்களையும்விட—அதிக முக்கியமானதாக இருக்காதா? அன்பே உருவான கடவுள் நம்மை தப்பெண்ணத்துடனோ அல்லது பகைமையுடனோ பார்ப்பதில்லை. நாம் எப்படிப்பட்டவர்களாக ஆக முடியும் என்பதோடுகூட நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் அவர் கவனிக்கிறார். (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 4:8) சொல்லப்போனால், அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களுக்கு என்ன பலவீனங்கள் இருந்தாலும் அவர்களை அருமையானவர்களாக—ஏன், பிரியமானவர்களாகவும்—கருதுகிறார்.—தானியேல் 9:23; ஆகாய் 2:7.
உண்மையில், கடவுள் நம்முடைய பலவீனங்களையோ பாவங்களையோ கண்டுகொள்ளாமல் விட்டுவிடுபவர் அல்ல. சரியானதைச் செய்வதற்கு கடினமாக உழைக்கும்படி எதிர்பார்க்கிறார். (லூக்கா 13:24) அப்படி செய்யும்போது அவர் நமக்கு பக்கத்துணையாக இருக்கிறார். இருந்தாலும், பைபிள் இவ்வாறு கூறுகிறது: “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” அது மேலும் கூறுகிறது: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.”—சங்கீதம் 103:13; 130:3, 4.
ஆகவே, கடவுள் உங்களை நோக்கும் விதமாகவே நீங்கள் உங்களை நோக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் தம்மை நேசிப்போரை பிரியமானவர்களாக கருதுகிறார் என்பதையும் தாங்கள் எதற்குமே லாயக்கற்றவர்கள் என நினைத்தாலும் தங்கள்மீது அவர் நம்பிக்கை வைக்கிறார் என்பதையும் அறிவது அவர்களுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடச் செய்யும்.—1 யோவான் 3:19, 20.
நம்பிக்கை—மகிழ்ச்சிக்கு அடிப்படை
நம்பிக்கை மனோதத்துவம் (positive psychology) என அழைக்கப்படும் ஒரு கருத்து சமீப காலங்களில் பிரபலமாகி வருகிறது. அது, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது, நம்பிக்கையான எண்ணத்தை வளர்க்கிறது, ஒருவருடைய பலத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது, இப்படி செய்வது மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் என கூறுகிறது. வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு நோக்குவது நம் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது என்ற கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளலாம். இருந்தாலும், இந்த நம்பிக்கையான மனநிலை வெறுமனே சொந்த எண்ணங்களின் மீது அல்ல, ஆனால் உண்மையின் மீது ஆதாரம் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், நம்பிக்கையான மனநிலை அல்லது எண்ணங்கள் அநேகருடைய மகிழ்ச்சியை சூறையாடுவதற்குக் காரணமான போர், பட்டினி, வியாதி, தூய்மைக்கேடு, வயோதிபம், சுகவீனம் அல்லது மரணம் போன்றவற்றை எந்த விதத்திலும் நீக்கி விடாது. இருந்தாலும், நம்பிக்கையான மனநிலை முற்றிலும் வீணாகிவிடுவதில்லை.
அக்கறைக்குரிய விஷயம் என்னவெனில், நம்பிக்கையான மனநிலை (optimism) என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, அதைவிட வலிமையான வார்த்தையை பயன்படுத்துகிறது, அதுதான் நம்பிக்கை (hope). வைன்ஸ் கம்ப்ளீட் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி, பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “நம்பிக்கை” என்ற வார்த்தைக்கு “சாதகமான, உறுதியான எதிர்பார்ப்பு, . . . நல்லதை மகிழ்ச்சியோடு எதிர்பார்ப்பது” என்று விளக்கமளிக்கிறது. பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தை, ஒரு சூழ்நிலையைக் குறித்த நம்பிக்கையான மனநிலையைக் காட்டிலும் அதிக அர்த்தமுடையது. ஒருவருடைய நம்பிக்கை எதில் ஊன்றியிருக்கிறதோ அதையும் குறிக்கிறது. (எபேசியர் 4:4; 1 பேதுரு 1:4) எடுத்துக்காட்டாக, முந்தின பாராவில் குறிப்பிடப்பட்ட துயர்மிகுந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நீங்கி விடும் என்பதே கிறிஸ்தவ நம்பிக்கை. (சங்கீதம் 37:9-11, 29) ஆனால், அந்த நம்பிக்கையில் வேறு பலவும் அடங்கியுள்ளன.
கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள் பரதீஸிய பூமியில் பரிபூரண ஜீவனை பெற்றுக்கொள்ளும் காலத்தை கிறிஸ்தவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். (லூக்கா 23:42, 43) அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு விவரிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
அப்படிப்பட்ட எதிர்காலத்திற்காக எதிர்பார்த்திருக்கும் எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது உறுதி. அவர் தற்போது கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்து வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். (யாக்கோபு 1:12) அப்படியானால், பைபிளை அலசிப்பார்த்து, நீங்கள் ஏன் அதை நம்ப வேண்டும் என்பதை அறிய ஏன் முயற்சி செய்யக் கூடாது? ஒவ்வொரு நாளும் பைபிளை வாசிப்பதற்கு நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துங்கள். அவ்வாறு செய்வது உங்களுடைய ஆன்மீகத்திற்கு மெருகூட்டுகிறது, மக்களின் மகிழ்ச்சியை சூறையாடும் காரியங்களை தவிர்ப்பதற்கு உதவுகிறது, உள்ளதை வைத்து இன்னுமதிக திருப்தியாக இருக்க உதவுகிறது. இறுதியாக, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே உண்மையான மகிழ்ச்சியின் இரகசியம். (பிரசங்கி 12:13) பைபிளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை. அதைத்தான் இயேசு சொன்னார்: “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள். [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]”—லூக்கா 11:28.
[அடிக்குறிப்பு]
a புத்த மதத்தினருக்கு கடவுள் நம்பிக்கை முக்கியமல்ல.
[பக்கம் 5-ன் படம்]
சொத்து சேர்ப்பதாலோ தனிமைப்படுத்திக் கொள்வதாலோ அல்லது மனிதனின் மட்டுப்பட்ட அறிவில் சார்ந்திருப்பதாலோ மகிழ்ச்சியைக் கண்டடைய முடியாது
[பக்கம் 6-ன் படம்]
கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்பட்டு வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியானது
[பக்கம் 7-ன் படம்]
கிறிஸ்தவ நம்பிக்கை ஒருவரை மகிழ்ச்சியுள்ளவராக்குகிறது