இசைநாடகத்தில் ஒரு இரவு
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
இசைக்குழு ஒன்று நிகழ்ச்சிக்குமுன் தயார்செய்கையில் சாதாரணமாக கேட்கப்படும் ஒத்திசைவற்ற ஒலி திடீரென நிற்கிறது. விளக்குகள் மங்கலாகின்றன. திடீர் கைத்தட்டல் வரவேற்க, அதன் இயக்குநர் மேடைக்கு வருகிறார். சிரம்தாழ்த்தி கூடிவந்திருப்போருக்கு வணக்கம் தெரிவிக்கிறார். பின்னர், நிசப்தம் நிலவியிருக்கையில் அவர் தன் கரங்களை உயர்த்தி, நடத்துனருக்கே உரித்தான தோரணையில் சைகைகாட்டி, இசைக்குழு நிகழ்ச்சியின் தொடக்க இசையைத் துவங்கிவைக்கிறார். அத்தகைய கிளர்ச்சியூட்டும் கணத்தை, ஒரு இசைநாடகத்தின் துவக்கத்தை, நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? அனுபவிக்க விரும்புகிறீர்களா? இசைநாடகம் என்றால் உண்மையிலேயே என்ன, அதன் தொடக்கம் என்ன?
இசைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களாகவோ அங்கங்களாகவோ பிரிக்கப்பட்ட ஒரு நாடகத்தையோ (ஆப்பரா செரியா) ஒரு நகைச்சுவையையோ (ஆப்பரா பூஃப்பா) நடித்துக் காட்டுவதே இசைநாடகம் எனப்படுகிறது. அதன் கதாபாத்திரங்கள் தங்களுடைய பாகங்களை பாடல்கள் மூலமே அளிக்கிறார்கள். இசைநாடகம் பலவிதமான கூட்டுபாகங்களால் ஆனது: நாடக உரை அல்லது கதைவசனம் (ஒரு எழுத்தாளரின் அல்லது கவிஞரின் படைப்பு); இசையமைப்பாளரால் அமைக்கப்பட்ட இசை; பாடுதல்; ஆடுதல்; காட்சியமைப்பு; உடைகள் போன்றவை. பாட்டும் வசனமும் கலந்த நாடகங்கள் (musicals) இசைநாடகங்களைப் போன்றுதான் இருக்கும், ஆனால் அதைவிட மென்மையான பாணியில் இருக்கின்றன. நீங்கள் ஒருவேளை மேற்குப் பக்க கதை (West Side Story) அல்லது ஓக்லஹாமா போன்ற திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அவற்றில் நடிகர்கள் சிலநேரங்களில் பேசுவதற்குப் பதிலாக பாடுகிறார்கள்.
இசைநாடகங்களில் பல வகையுண்டு: உவால்ஃப்காங் ஆமாடேயுஸ் மொஸார்ட் மற்றும் ஜோயாக்கினோ ரோஸினி போன்றவர்களுடையவை தனிச் சிறப்புடையவை; ஜூஸெப்பே வெர்டியுடையது விறுவிறுப்பானது மற்றும் மனம் நெகிழச்செய்வது; ரிக்கார்ட் வேக்னருடையது சிக்கல் வாய்ந்தது, மெதுவானது, எளிமையானது என்றும்; ஸோர்ஸ் பிஸெட்டுடையது பல்சுவையூட்டக்கூடியது மற்றும் உயிரூட்டமுள்ளது என்றும்; ஜாகோமோ பூசினியுடையது, உணர்ச்சிவசப்படுத்தக்கூடியது என்றெல்லாம் விவரிக்கப்படுகின்றன.
இசையும் பாட்டும் ஏறத்தாழ மனித வரலாறு தொடங்கிய அதே காலத்தில் தோன்றியதாகும். (ஆதியாகமம் 4:21; 31:27) மனிதவர்க்கத்தின் வாழ்நாள் முழுவதும் பலவகையான இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 11-ம் நூற்றாண்டின்போது, இசை அமைக்கும் ஒரு முறை பழக்கத்திற்கு வந்தது. இசைநாடகம் 16-ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியைச் சேர்ந்த ஃபிளாரென்ஸில் தொடங்கியதாக தகவல் குறிப்புநூல்கள் கூறுகின்றன. இந்த வகை இசைநாடக அமைப்பின் அம்சங்களை (இசைநாடகம் [opera], கதைவசனம் [libretto], ஆண்குரல் மேல்தாயி [tenor], பெண்குரல் மேல்தாயி [soprano],) விவரிக்க வேறு பல மொழிகளில் அநேக இத்தாலிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது இசைநாடகத்தின் தொடக்கத்தைப் பற்றி சான்று பகருவதாக இருக்கிறது. இசைநாடகம் ஐரோப்பாவின் பல்வேறு பாகங்களுக்கும் பரவியபோது, அது பல மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. இன்று உலகமுழுவதிலும் இசைநாடக அரங்குகள் காணப்படுகின்றன.
அதிகத்தைத் தெரிந்துகொள்ள, மிலானில் வசிக்கும் ஆன்டோனெல்லோவுக்கும் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து வந்திருக்கும் அவருடைய நண்பர் மாக்ஸுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடலை நாம் கவனிக்கலாம். ஆன்டோனெல்லோவும் மாக்ஸும் மிலானிலிருக்கும் லா ஸ்காலாவில் வழக்கத்திற்கு மாறான கிளர்ச்சியூட்டும் ஒரு மாலைநேரத்தை கழிக்கின்றனர். இது இசைநாடக அரங்குகள் எல்லாவற்றிலும் மிகப் புகழ்வாய்ந்த ஒன்றாகும்.
இசைநாடக அரங்கில்
மாக்ஸ்: லா ஸ்காலாவை 1778-ல் தொடங்கி வைத்தார்களென்று நீங்கள் கொடுத்த கையேட்டில் நான் வாசித்தேன். அது இரண்டாம் உலகப்போரில் வீசிய குண்டுகளால் மகா மோசமாக பாழாக்கப்பட்டதற்குப்பிறகு அதை மறுபடியும் கட்டி 1946-ல் தொடங்கி வைத்தார்களென்று படித்தேன். 2,000-க்கும் அதிகமான பேர் உட்காரும் வசதி அதில் இருக்கிறதென்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.
ஆன்டோனெல்லோ: அது சரிதான். நீங்கள் பார்க்கிறமாதிரி பண்டையகால குதிரைலாடத்து வடிவில் கட்டியிருந்தார்கள். 17-ல் இருந்து 19-ம் நூற்றாண்டுவரை கட்டிய பெரும்பாலான இசைநாடக அரங்குகளை இதே வடிவில்தான் கட்டியிருக்கிறார்கள். அதனுடைய எல்லா பக்கத்திலேயும் ஆறு அடுக்கு தனி அறைகள் (boxes) இருந்தன. இசைக்குழுவின் தளம் அங்கே மேடைக்கு முன்னால் இருக்கிறது. லா ஸ்காலா உலகில் இருக்கும் இசைநாடக அரங்குகளிலேயே ரொம்ப பழசுமில்லை ரொம்ப பெரியதுமில்லை. அது அவ்வளவு புகழ் பெற்றிருப்பதற்குக் காரணமே பல இசைநாடகங்களை முதன்முதலில் இதில் நடத்தியிருக்கிறார்கள் என்பதுதான். இன்னும், புகழ்பெற்ற பல இயக்குநர்களும் பாடகர்களும் இங்கே இசைநாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். புகழ்வாய்ந்த இயக்குநர் ஆர்டுரோ டாஸ்கனினி என்பவர் அவர்களில் ஒருவர். எழுதப்பட்ட இசை எதுவும் இல்லாமலேயே அவரால் இதை நடத்த முடிந்தது. லா ஸ்காலாவுடைய ஒலியமைப்பு பக்காவாக இருக்கிறதென்று சொல்கிறார்கள். இசைநாடக அரங்கமென்றால் ஒலியமைப்பே அதற்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. அதில் இசையையோ அல்லது குரலையோ மைக்ரோஃபோனும் லெளட்ஸ்பீக்கரும் வைத்து ஒலிபெருக்குகிறதில்லை.
மாக்ஸ்: இசைநாடக பாடகர்களைப்பற்றி கொஞ்சம் சொல்வீர்களா?
ஆன்டோனெல்லோ: ஆறுவிதமான குரல்கள் இருக்கின்றன. கீழ்த்தாயி (bass), இடைத்தாயி (baritone), மேல்தாயி (tenor) என்கிற மூன்று ஆண் குரல்களும், அதற்கு ஒத்துப்போகிற கீழ்த்தாயி (contralto), இடைத்தாயி (mezzo-soprano), மேல்தாயி (soprano) என்கிற மூன்று பெண் குரல்களும் இருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலேயும் ஆணுடைய கீழ்த்தாயியும் பெண்ணுடைய கீழ்த்தாயியும் அடிக்குரல்களாகவும், ஆனால் ஆணுடைய மேல்தாயியும் பெண்ணுடைய மேல்தாயியும் நல்ல உச்சகுரல்களாகவும் இருக்கின்றன. ஆணுடைய இடைத்தாயியும் பெண்ணுடைய இடைத்தாயியும் நடுத்தரமான குரல்களாக இருக்கின்றன.
ஒரு நல்ல இசைநாடக பாடகராக ஆகவேண்டுமானால், ஒரு ஆள் நல்ல குரல் படைத்தவராக இருக்கவேண்டும். கூடுதலாக ஒரு விசேஷ கல்லூரியில் பல வருடங்கள் படிக்கவேண்டும். அங்கே அவனுடைய குரல் திறமையை முழுவதும் எப்படி பயன்படுத்துவது என்று மாணவனுக்கு கற்றுக் கொடுப்பார்கள். அப்படி படிக்கவில்லையென்றால் யாரும் இசைநாடக பாடகராக முடியாது. தனிக்குரலில் பாடுகிறவர்களை நீங்கள் சீக்கிரத்தில் பார்ப்பீர்கள். அப்படி பாடுகிறவர்கள் சிலவேளைகளில் நல்ல தராதரங்களோடு இருக்கிற, ஒருவரை ஒருவர் காதலிக்கிற வாலிப ஆண் பெண்களுடைய பாகங்களில் பாடினாலும்கூட இவர்களெல்லாம், சிலரைத் தவிர, முதிர்ச்சியடைந்து நல்ல உடல்கட்டுள்ள ஆட்களாகவே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
மாக்ஸ்: தெரியாதே, ஆனால் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.
ஆன்டோனெல்லோ: ஏனென்றால் அவர்கள் தங்களுடைய தொழிலில் முதிர்ச்சியடைந்து மேல்நிலைக்கு வருகிறார்கள். இசைநாடகத்தில் பாடுகிறதற்கு அவர்களுக்கு நல்ல உடல் வலிமை தேவையாக இருக்கிறது. திரும்பத் திரும்ப சத்தமாக உச்சகுரலில் நீண்டகாலம் பாடவேண்டுமென்றால் ஒன்றும் தமாஷில்லை. மிகவும் புகழ்வாய்ந்த பெண்குரல் மேல்தாயி மரியா கல்லாஸ் இந்த லா ஸ்காலாவில் 1950-களில் அடிக்கடி பாடியிருக்கிறார்கள். ஆனால் மெலிவதற்காக அவர்கள் சாப்பிடுவதை தீவிரமாக கட்டுப்படுத்தினதற்குப் பிறகு அவர்கள் திறமை ரொம்பவும் குறைய ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதனால் மாக்ஸ், தனிக்குரலில் பாடுகிறவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து தப்பாக எடைபோடாமல், அவர்களுடைய குரலைத்தான் பாராட்டவேண்டும் பாருங்களேன்! இயக்குநர் வெளியே வருகிறார். உங்கள் இசைநாடக கண்ணாடியை போட்டுக்கொள்ளுங்கள், அப்போதுதான் பாடுகிறவர்களையும் முழு நாடகத்தையும் நீங்கள் ரொம்ப நல்லா பார்க்கலாம். ஆனால் ஒரே ஒரு எச்சரிக்கை: இசைநாடகத்தை ரொம்ப நல்லா அனுபவிக்கவேண்டும் என்றால், முதல் அங்கத்தில் நாம் கவனித்த மாதிரியே, இசையையும் பாட்டையும் நன்றாக கவனித்துக் கேளுங்கள்.
திரைக்குப்பின் நடப்பதென்ன?
மாக்ஸ்: எவ்வளவு நேரம் கைதட்டுகிறார்கள்! பாடுகிறவர்களுக்கு நிஜமாகவே நல்ல இனிமையான குரல் இருக்கிறது. இப்பொழுது எவ்வளவு நேரம் இடைவேளை விடுவார்கள்?
ஆன்டோனெல்லோ: சுமார் 20 நிமிடம். ஆனால் இடைவேளை நேரத்தில் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறதென்று தெரியுமா?
மாக்ஸ்: என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.
ஆன்டோனெல்லோ: தீவிரமான வேலை! மேடை இயக்குநர் ஒருவர் சொல்கிறபிரகாரம் மேடை அமைக்கிறதில் விசேஷ திறமைபடைத்த ஆட்கள், மெஷின் ஆபரேட்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், தச்சுவேலைக்காரர்கள், மற்ற வேலையாட்கள் ஆகிய எல்லாரும் சேர்ந்து நல்ல ஒத்திசைவோடு மேடை அலங்கரிப்பை கலைத்துவிட்டு ஒரு புதிய காட்சி அமைப்பை அமைக்கிறார்கள். இந்தக் காலத்தில் இசைநாடக அரங்கங்கள் எல்லாம் நவீன தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் காட்சி அமைப்பெல்லாம் சீக்கிரமாக மாற்றலாம், சிலசமயங்களில் நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போதேகூட மாற்றலாம். மேடையில் சில பாகங்களை உயர்த்தவும் தாழ்த்தவும், நீராற்றல் மேடைகளையும் (Hydraulic platforms), இயந்திர உயர்த்திகளையும் (mechanical lifts) மற்ற மெஷின்களையும் பயன்படுத்துகிறார்கள். இசைநாடக அரங்கம் எல்லாவற்றிலுமே, மேகம் அல்லது மூடுபனி மாதிரியும், புகைமாதிரியும், மழை அல்லது காற்று சப்தம் மாதிரியும், அல்லது திடீர் மின்னலுடைய பெருஞ்சத்தம் மாதிரியெல்லாம் விசேஷ விளைவுகளை வரவைப்பதற்கான அல்லது ஆச்சரியமான காட்சிகளை அமைக்கிறதற்கான ஏற்பாடுகளோடு கட்டுகிறார்கள். வெவ்வேறு அளவு ஆற்றலுள்ள நாடகமேடை விளக்கு அமைப்பு ஒன்று, காட்சி விளைவுகளையும் வர்ண ஒளிக்கற்றைகளையும் உண்டாக்கும். இது கட்டாயமாக ஆச்சரியப்பட வைக்கும்.
மாக்ஸ்: இங்கே உட்கார்ந்துகொண்டு நாம் இசைநாடகத்தைப் பார்க்கிறோம் கேட்கிறோம். ஆனால் நாடகம் நடக்கும்போது திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது?
ஆன்டோனெல்லோ: அது சுவாரசியமான ஒரு விஷயம் மாக்ஸ். நாம் சொகுசா இங்கே உட்கார்ந்து நாடகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது, திரைக்குப் பின்புறத்திலேயும் மேடைக்கு இரண்டு பக்கங்களிலேயும் ஒரு சிறிய படையாக ஆட்கள் வேலைசெய்கிறார்கள். பாடுகிற ஒருவர், அல்லது பாடுகிறவர்களுடைய குழு, அல்லது ஆடுபவர்கள் சரியான சமயத்தில் அசையாமல் இருந்துவிட்டார்களென்றால் என்ன ஆகுமென்று நினைத்துப் பாருங்கள். திரைக்குப் பின்புறத்தில், மேடை இயக்குநருடைய உதவியாளரோ உதவியாளர்களோ இசைக்குழுவோடு சேர்ந்து, எழுதிவைத்த இசையை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்து, யாருக்கடுத்து யார் சரியாக எப்போது மேடைக்கு போகவேண்டும் என்பதை பாடுகிறவர்களுக்குச் சொல்கிறார்கள். பாடகர்குழு தலைவரும் பாடுகிறவர்களுக்கு அதையே செய்கிறார்.
ஞாபகப்படுத்துகிறவர் (prompter) மேடையின் நடுவில், பார்க்கிறவர்கள் கண்ணுக்கு மறைவான இடத்தில் ஒரு தனி அறையில் இருக்கிறார். அவர் (அல்லது அவள்) குறிப்பிட்ட ஒருசிலரால் மட்டும் பார்க்கமுடிகிற தொலைக்காட்சியில் இயக்குநருடைய அசைவுகளை பாக்கிறார். எழுதப்பட்ட கதைவசனத்திலிருந்து ஞாபகப்படுத்துகிறவர் தனிக்குரல் பாடகர்கள் பாடிக்கொண்டிருப்பதைவிட கொஞ்சம் வேகமாக வரிகளை வாசிக்கிறார். பாடுகிற ஆள் வரிகளை மறக்காமல் இருக்க இப்படிச் செய்கிறார்.
கடைசியாக, இயக்குநர் காட்சி அமைப்பு மாற்றங்களையும் நடிகர்கள் கூட்டமாக மேடையில் ஏறுகிறதையும் மேற்பார்வை செய்கிறார். அதுமட்டுமல்லாமல் வர்ண ஒளிக்கற்றைகளை மேடையில் சரியான பகுதிகளுக்கு சரியான நேரத்தில் அடிக்கிறார்களா என்று எலக்ட்ரீஷியன்கள்மேல் ஒரு கண்வைத்திருக்கிறார். மற்ற இசைநாடக அரங்குகள் மாதிரியே லா ஸ்காலாவிலேயும் இரண்டு சுழலும் அல்லது உயரும் மேடைகளை அமைக்கிற திட்டம் போட்டிருக்கிறார்கள். இது காட்சி அமைப்புகளை அமைக்க உதவுவதோடு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு அதிகமான காட்சிகளைத் தயாரித்துக் காண்பிக்கிறதை சாத்தியமாக்கும்.
மாக்ஸ்: ஒரு இசைநாடகத்தை நடத்த அவ்வளவு ஆட்களும் அவ்வளவு வேலையுமா! அப்பா . . . எனக்கு ஆச்சரியமாக இருகிறது!
ஆன்டோனெல்லோ: ஆமாமாம்! பெரிய இசைநாடக அரங்குகளில் நிரந்தரமான ஒரு இசைக்குழுவையும், பாடகர்குழுவையும், நாட்டியக்குழுவையும், நூற்றுக்கணக்கில் கலைஞரையும் வைத்திருக்கிறார்கள். பின்னர் நுணுக்கவேலையாட்கள், தையல்காரர்கள், ஷூ தைக்கிறவர்கள், தச்சுவேலைக்காரர்கள், மேக்கப் போடுகிறவர்கள், எலக்ட்ரீஷியன்கள், காட்சிகளை உண்டாக்குகிற அல்லது வரைகிற திரை ஓவியர் ஒருவரோ இரண்டு பேரோ—இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம்போக, பாதுகாப்புக்கும் நிர்வாகத்துக்கும் மற்ற வேலைகளை செய்யவும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
பைபிள் அடிப்படையிலான இசைநாடகங்கள்
மாக்ஸ்: பைபிளில் இருந்து தயாரிக்கப்பட்ட இசைநாடகங்கள் ஏதாவது இருக்கின்றனவா?
ஆன்டோனெல்லோ: இருக்கின்றன, நிறைய இருக்கின்றன. பல துறைகளில் இருக்கிற—பூர்வகால மக்களுடைய வரலாறு, கட்டுக்கதை, இடைக்கால புராணக்கதைகள், வில்லியம் ஷேக்ஸ்பியரும் மற்ற எழுத்தாளர்களும் எழுதிய படைப்புகள் இப்படிப்பட்ட—பல பொருட்களை வைத்தும் இசைநாடகம் தயாரித்திருக்கிறார்கள். நாபூக்கோ என்கிற இசைநாடகத்தை இத்தாலியைச் சேர்ந்த அமைப்பாளர் ஜூஸெப்பே வெர்டி என்பவர் உருவாக்கினார். இது “நேபுகாத்நேச்சார்” என்பதன் சுருக்கமான பெயராக இருக்கிறது. அது யூதர்களை அடிமைகளாக ஜெரூசலமிலிருந்து பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனதைப்பற்றி சொல்கிறது. ஜோயாக்கினோ ரோஸினி என்கிற வேறொரு இத்தாலிய அமைப்பாளர் மோசிய (மோசே) இசையோடு சேர்த்து அமைத்தார். பின்னர் பிரெஞ்சு இசையமைப்பாளர் ஷார்ல்காமி சான்சான் என்பவர் சான்சான் ஏ டாலீலா (சிம்சோனும் தெலீலாளும்) என்கிறதை அமைத்தார். இந்த நாடகங்களுடைய முக்கிய கதைகள் பைபிளில் இருக்கிற மாதிரியே முழுவதும் இருக்கிறதில்லை. ஆனால் இந்த மூன்று இசைநாடகங்களிலேயும் கடவுளுடைய பெயரான யெகோவா இருக்கிறதைப்பற்றி தெரிவது நன்றாக இருக்கிறது.
மாக்ஸ்: அப்படியா? ஹென்டல் மற்றும் பாக்கின் படைப்புகளில் அது சொல்லப்பட்டிருக்கிறதென்று எனக்கு தெரியும். ஆனால் அது வாசக இசைநாடகத்தில்கூட இருக்கிறதென்று எனக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.
ஆன்டோனெல்லோ: நாபூக்கோவின் முடிவில் பாடகர்குழு ‘உன்னதராகிய யெகோவாவைப்பற்றி’ பாடுகிறது. பின்னர் பிரதான ஆசாரியனாக இருந்த சகரியா கடவுளுடைய பெயரை சொல்கிறார். ரோஸினியுடைய இசைநாடகத்தில், மோசே ‘யெகோவா’ என்று கூப்பிடுகிறார். சாம்சோன் எட் டாலீலாவில் ‘யெகோவா’ அநேக முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாக்ஸ்: மிகவும் நன்றாக இருக்கிறது.
ஆன்டோனெல்லோ: இதெல்லாம் இல்லாமல் பைபிளில் இருந்து தயாரித்த வேறு பல இசைநாடகங்களும் இருக்கின்றன. அதில் ரிக்கார்ட் ஸ்ட்ராஸ் தயாரித்த சாலோமே; ஆர்னால்ட் ஷ்யூன்பெர்க் தயாரித்த மோசெஸ் உண்ட் ஆரான் (மோசேயும் ஆரோனும்); இல்டேப்ரான்டோ பிட்ஸெட்டி உருவாக்கிய டிபாரா எ யாயீலெ (தெபொராளும் யாகேலும்) ஆகிய இவையெல்லாம் அதில் அடங்கும். பாருங்கள்! கடைசி அங்கம் தொடங்கப்போகிறது.
மனம்கவர்ந்த ஒரு மாலை
ஆன்டோனெல்லோ: இந்த இசைநாடகம் உங்களுக்கு பிடித்திருந்ததா?
மாக்ஸ்: ஆமாம், எனக்கு பிடித்திருந்தது. முக்கியமாக நான் ஏற்கெனவே அந்தக் கதைவசனத்தை வாசித்ததனால் முக்கிய கதை எனக்கு நன்றாக புரிந்தது. இல்லாவிடில் புரிந்துகொள்வதற்கு கஷ்டமாக இருந்திருக்கும். வாசிக்கச்சொல்லி நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி.
ஆன்டோனெல்லோ: தனிக்குரலிலேயும் குழுவாகவும் பாடுகிற அத்தனை வார்த்தைகளையும் புரிந்துகொள்ள வேண்டுமானால், மொத்தத்தில் முடியாத காரியம்தான். ஏனென்றால் அவ்வப்போது இசை பாடுகிற குரலைவிட சத்தமாக இருக்கும், பின்னர் உச்ச குரலில் பாடும்போது சிலசமயத்தில் வார்த்தைகளை தனித்தனியாக பிரித்து அறிந்துகொள்ள முடியாது. பார்க்கிறவர்களுக்கு முக்கியக் கதை நன்றாக புரியட்டும் என்று இந்தக் காலத்தில் பல இசைநாடக அரங்குகளிலேயும், மொழிபெயர்க்கப்பட்ட உபதலைப்புகளை அல்லது மேல் எழுதப்பட்ட வாசகங்களை கொடுக்கிறார்கள்.
மாக்ஸ்: ஆன்டோனெல்லோ, இது மிகச் சிறந்த ஒரு இசைநாடகமாக இருந்தது. இனிமையான இசையும் பாடலும் உண்மையிலேயே நாம் சிருஷ்டிகரை போற்றும்படி செய்கிறது. காரணம் அவர்தானே பாடவும், நாடகத்தை அமைக்கவும், நடிக்கவும், இசையை போற்றவும் மனுஷனுக்கு திறமையை கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சந்தோஷமான, கிளர்ச்சியடைய செய்கிற மாலைவேளையை அனுபவிக்க செய்ததற்காக உங்களுக்கு நன்றி.
[பக்கம் 24-ன் படம்]
லா ஸ்காலா அரங்கம்
[படத்திற்கான நன்றி]
இத்தாலியின் மிலானிலுள்ள லா ஸ்காலா
[பக்கம் 26-ன் படங்கள்]
மேலே: “சாம்சோன் எட் டாலீலா” இசைநாடகத்திலிருந்து காட்சி
[படத்திற்கான நன்றி]
Winnie Klotz