எமது வாசகரிடமிருந்து
சர்வதேச மாநாடுகள் “இவ்வுலகத்தை எது ஐக்கியப்படுத்தும்?” (டிசம்பர் 22, 1993, ஆங்கிலம்) என்ற தொடர் கட்டுரைக்கு நன்றிசொல்ல விரும்புகிறேன். கிழக்கு ஐரோப்பாவில் நடந்த சர்வதேச மாநாடுகள் பற்றிய பகுதியை நான் உண்மையில் அனுபவித்துப் படித்தேன். யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருக்கும் சில கிறிஸ்தவர்கள்கூட ஆஜராகி இருக்க முடிந்தது என்பதை அறிவது உற்சாகமூட்டுவதாய் இருந்தது.
E. R., ஐக்கிய மாகாணங்கள்
என் கணவரும் நானும் முழுநேர ஊழியர்கள்; ஆதலால், எங்களை மனம்வருந்தச் செய்யும் வகையில், சர்வதேச மாநாட்டில் நாங்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கு எங்களுடைய பட்ஜெட் எங்களை அனுமதிக்கவில்லை. எனினும், உங்களுடைய கட்டுரைகளை வாசிக்கும்போது, நான் மாநாட்டில் இருந்ததுபோல உணர்ந்தேன். பக்கம் 9-ல் காண்பிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சகோதரிகளோடு சேர்ந்து இதயம்பொங்க பாடிக்கொண்டிருந்தது போலவும்கூட கற்பனை செய்துகொண்டேன். தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அந்தக் கட்டுரை என்னை உத்வேகப்படுத்தியது.
I. F., பிரான்ஸ்
பேச்சுத்தொடர்பு “திருமணத்தில் பேச்சுத்தொடர்பு” (ஜனவரி 22, 1994, ஆங்கிலம்) என்ற தொடர் கட்டுரையை வாசித்த பிறகு, நான் திருமணமாயிருந்த கடந்த 28 வருடங்களாக என் மனைவிக்குத் தேவையான அன்பை நான் காட்டாமல் இருந்துவந்திருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். அந்தப்போக்கில் அவள் எதை நாடினாலும், அதை சிறுபிள்ளைத்தனம் என்று குறுட்டுத்தனமாகத் தள்ளிப்போட்டேன். இந்தக் கட்டுரைகளோ கடவுள் எப்படிப் பெண்களை உண்டாக்கினார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவிசெய்தது. எதிர்காலத்தில், என் மனைவிக்குத் தேவையான அன்பைக் காட்ட நான் முயற்சிசெய்வேன். இந்தத் திருத்தமான அறிவுக்காக உங்களுக்கு நன்றி.
Y. K., ஜப்பான்
அந்தத் தொடரை எவ்வளவு அனுபவித்துக் களித்தேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் போதாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள உணர்ச்சிப்பூர்வமான, உடல்சார்ந்த வித்தியாசங்களைப் பற்றிய தெளிவான ஆய்வைக் கண்டு மலைத்துப்போனேன். என்னை நானே சோதித்து, என்னை நானே மேம்பட்டவகையில் புரிந்துகொள்ள முடிந்தது. நான் திருமணம் ஆகாதவள். மற்றவர்களின் கருத்து என்ன என்பதை நன்றாக அறிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நான் நம்புகிறேன்.
D. R., இத்தாலி
சுதந்திரம், ஆண்களுக்கே உரிய ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சுதந்திரத்தை மதிக்கிற பல பெண்களையும் எனக்குத் தெரியும். ஆண்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், ஆசைகள் ஆகியவற்றை, பெண்களைவிட வித்தியாசமானதாக நீங்கள் எடுத்துக்காண்பிப்பது என்னைக் கஷ்டமாக உணரச் செய்கிறது.
U. B., ஜெர்மனி.
“எந்தத் தனித்தன்மையையும் விசேஷமாக ஆணுக்குரியது அல்லது பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும் என்று குறிப்பிடுவது முடியாத காரியம்,” மேலும், “கற்பனைப் பாத்திரமான ‘குறிப்பிடத்தக்க ஆண்,’ ‘குறிப்பிடத்தக்க பெண்’ ஒருவேளை உளவியல் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடும்,” என்று கட்டுரை ஒத்துக்கொண்டது. “ஜெரி” மற்றும் “பேம்” என்ற தம்பதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் எப்படிக் கணவர்களும் மனைவிகளும் தங்கள்தங்கள் பேச்சுத்தொடர்பு பாணிகளில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதை வெறுமனே எடுத்துக்காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.—ED.
ஆப்பிரிக்க விளையாட்டுச் சாமான்கள் “விலையில்லா ஆப்பிரிக்க விளையாட்டுச் சாமான்கள்” என்ற (மார்ச் 22, 1993, ஆங்கிலம்) கட்டுரை, என் குழந்தைப் பருவத்தின் ஒரு நினைவு மலர் போல எனக்கு இருந்தது. எங்களுடைய ஆப்பிரிக்க நகர்களிலும் கிராமங்களிலும் விளையாட்டுச் சாமான்கள் எல்லா குழந்தைகளுக்கும் கிடைப்பதாயில்லை. எனவே, செல்வமிக்க வெள்ளைக் குழந்தைகள் போல வைத்திருக்க நாங்கள் எங்களுடைய சொந்த விளையாட்டுச் சாமான்களை செய்ய ஆரம்பித்தோம். ஆனால், அவர்கள் எங்கள் வீட்டில் செய்யப்பட்ட விளையாட்டுச் சாமான்களைப் போற்றுவதில்லை. எதுவாக இருந்தாலும், அந்தக் கட்டுரை எனக்கு அதிக சந்தோஷமூட்டியது.
A. A., காமரூன்
பிரச்சினைகளைத் தீர்த்தல் எங்களுக்காக நீங்கள் அளித்துவரும் மிக அருமையான “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகளுக்காக நன்றியறிதலைத் தெரிவிப்பதற்காக எழுதுகிறேன். புதிய விழித்தெழு! இதழைப் பெறும்போதெல்லாம், அந்தத் தொடருக்குத்தான் முதலில் திருப்புவேன். விசேஷமாக, “என் பிரச்னைகளைத் தீர்க்க யார் உதவக்கூடும்?” என்ற கட்டுரைக்காகப் பாராட்டுகள். (மார்ச் 8, 1994) நான் மேல்நிலைப் பள்ளியில் மாணவனாக இருக்கிறேன். என் எதிர்காலத்தைப் பற்றிய தீர்மானங்களை எடுப்பது உண்மையில் கவலையூட்டுவதாய் இருக்கிறது. என் பெற்றோரும் நானும் எப்போதும் மனந்திறந்துபேசும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தோம். இருந்தாலும், சில சமயங்களில், அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று நான் இன்னும் உணர்கிறேன். அவர்களுடைய ஆலோசனையைக் கேட்பதும், என் உணர்வுகளைப் பற்றியும் அக்கறைகளைப் பற்றியும் அவர்களிடம் பேசுவதும் எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண இந்தக் கட்டுரை எனக்கு உதவிசெய்தது.
H. L., ஐக்கிய மாகாணங்கள்