மேக்பை உண்மையிலேயே ஒரு திருடனா?
லா காட்ஸா லாட்ரா (அந்தத் திருடும் மேக்பை) என்ற இசை நாடகத்தை எழுதிய 19-ம் நூற்றாண்டு இத்தாலிய இசைஞர் ரோஸினி 1817-ல், மேக்பை (சலசல சத்தமிடும் பறவை) ஒரு திருடன்தான் என்று அவர் நிச்சயமாகவே நம்பினதாக சொன்னார். மற்றவர்களுடைய காரியங்களில் ஈடுபடும் இந்தப் பறவையைக் குறித்து அதே கருத்தை மற்றவர்களும் கொண்டிருந்தனர். “மேற்கின் விளையாட்டுத்தனமிக்க கெட்ட பையன்கள் மத்தியில், தொந்தரவு தரும் போக்கிரிகளாகிய மேக்பைகள் (magpies) இருக்கின்றன,” என்று வட அமெரிக்க பறவைகளைப் பற்றிய புத்தகம் (Book of the North American Birds) சொல்கிறது. இந்தக் கறுப்பு அலகுடைய மேக்பைகள், மற்ற இடங்களில் அறியப்பட்டிருந்தாலும், மேற்குப் பகுதியை அறிமுகம்செய்த பிரபலமான லூயிஸ் மற்றும் கிளார்க் என்பவர்களின் 1804-06 ஆய்வுப் பயணத்தின்போது ஐக்கிய மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தத் தொகுதியின் அங்கத்தினர்கள், தங்களுடைய கூடாரங்களுக்குள் மேக்பைகள் புகுந்து, உணவுகளைத் திருடின என்று சொன்னார்கள்.
நீங்கள் ஐரோப்பாவில், ஆசியாவில், ஆஸ்திரேலியாவில், அல்லது வட அமெரிக்காவில் வாழ்கிறீர்களென்றால், உங்களுடைய உள்ளூர் மேக்பைகளை அடையாளம் கண்டுகொள்வீர்கள். அது பெரும்பாலும் பெரிய பறவையாக இருக்கிறது; 56 சென்டிமீட்டர் அளவுக்கு நீளம். அதனுடைய சிறகுகளிலும் உடலிலும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை வடிவமைப்புகளை கொண்டிருக்கிறது. அது இடத்திற்கு தகுந்தவாறு பலவர்ணமாக மாறும் பச்சை வாலையும் பலமான அலகையும் கொண்டிருக்கிறது. மேக்பைகள் பெரும்பாலும் தொகுதி தொகுதிகளாக வாழ்கின்றன. விடாப்பிடியாய் தங்களுடைய பிராந்தியங்களுக்காகப் போராடுகின்றன, மக்களுக்கு எதிராகவும்கூட.
பிரிட்டன் மேக்பை வெறுமனே வெள்ளை நிற வயிறு மற்றும் சிறகு வரிகளைக் கொண்ட கறுப்பு நிற பறவைபோல் முதல் பார்வையில் தோன்றுகின்றன. ஆனால் அவை சில மிடுக்கான வஞ்சிக்கும் வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இடத்திற்கு ஏற்றாற்போல் மாறும் கருஞ்சிவப்பு நிற மற்றும் பச்சை நிற மின்னொளிகள் உடலுக்குள்ளும் நீண்ட வால்களின் சிறகுகளுக்குள்ளும் செல்கின்றன. அவை சில இடங்களில் வெண்கல நிறத்தையும் விளிம்புகளில் கொண்டிருக்கின்றன. அதனுடைய வால், அதன் நீளத்தில் பாதிக்கு மேலான பகுதியை எடுத்துக்கொள்கிறது.
ஆஸ்திரேலியன் மேக்பைகள் பாட்டுப்பாடுவதும், தங்களுடைய ராககீதங்களில் களிகூருவதும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. மேக்பைகளின் சலசல சத்தமும், சிரிக்கும் மீன்கொத்திப் பறவை என்றழைக்கப்படும் குக்கபூராவின் கூவுதலும், நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு நிச்சயமான அடையாளமாகும். மேக்பையின் பிரத்தியேகமான பாட்டுடன், அதன் வளவளப்பான முதுகில், பிட்டத்தில், சிறகுகளில், வாலுக்கு அடிப்புறத்தில் இருக்கும் வெள்ளைப் பட்டைகளைக் கொண்டும் அதை அடையாளம் கண்டுகொள்ளலாம்.
எனவே, அது உண்மையிலேயே ஒரு திருடனா? வட அமெரிக்க தோட்டப் பறவைகளும் பாட்டும் (Song and Garden Birds of North America) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “கறுப்பு அலகுடைய மேக்பை, மேற்கு ஐக்கிய மாகாணங்களில் நீண்டகாலமாகத் திருடன் என்றும் தோட்டி என்றும் இழிவாகக் கருதப்பட்டு வருகிறது.” ஆனாலும், அந்த இறுதி முனையிலும்கூட, போற்றுதல் இருக்கிறது. ஏன்? தோட்டிகள் மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் சடலங்களைச் சுத்தம்செய்கின்றன. எள்ளிநகையாடப்படுகிறதோ போற்றப்படுகிறதோ எதுவானாலும்சரி, மேக்பை, நம் பூமியை மேம்படுத்தி அழுகுபடுத்தும் 9,300 பறவைவகைகளில் ஒன்றாகவும் இருக்கிறது.