கலிபோர்னியாவின் நிலநடுக்கங்கள் பெரியது எப்பொழுது வரும்?
பூமி அசைந்தாடிற்று. எரிவாயு குழாய்கள் உடைந்து தெறித்தன. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. தீ முழங்கியது. இது என்ன சமீபத்திய லாஸ் ஏஞ்சலிஸ் நிலநடுக்கமா? இல்லை. 1906, ஏப்ரல் 18-ல் சான் பிரான்ஸிஸ்கோவைத் தாக்கிய நிலநடுக்கமே அது. அந்த நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து முழங்கிய மூன்றுநாள் தீயும், நகரத்தின் மையத்தில் இருந்த 512 வளாகங்களை நாசமாக்கி, சுமார் 700 உயிர்களை மாய்த்தன.
அத்தகைய அழிவுகளை உண்டாக்குவது எது?
கண்டத்திட்டு பிறழ்ச்சி தத்துவத்தை (Theory of Plate Tectonics) பயன்படுத்தி விளக்க முயற்சிக்கின்றனர் விஞ்ஞானிகள். பாறையாலான, மெல்ல நகர்ந்து செல்லும் சுமார் 20 திடமான கண்டத்திட்டுகள் அல்லது பாளங்களுக்குமேல் பூமியின் மேலோடு (crust) அமைந்திருக்கிறது; அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டும் குறிப்பிட்ட சிலசமயங்களில் ஒன்றுக்குக்கீழாக ஒன்றுமாக கடந்துசெல்கின்றன என்பதாக அவர்கள் சொல்கின்றனர். பசிபிக் கண்டத்திட்டு, வட அமெரிக்க கண்டத்திட்டை உரசிக்கொண்டு வடக்கைநோக்கி மெல்ல கடந்து செல்கிறது. இந்த இரண்டு கண்டத்திட்டுகளுக்கும் இடையே ஏற்படும் அந்தப் பிறழ்ச்சிப் பகுதியே சான் ஆண்ரேயஸ் பிளவு (San Andreas Fault) என்றழைக்கப்படுகிறது. அது வடக்கே சுமார் 1046 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரந்து கிடக்கிறது. கலிபோர்னிய வளைகுடாவின் முனையில் தொடங்கி, சான் பிரான்ஸிஸ்கோவிற்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் சென்று மறைகிறது.
இந்தக் கண்டத்திட்டுகள் மிகவும் மெதுவாக, உங்கள் விரல்களின் நகம் வளருவதைப் போன்ற—வருடத்திற்கு ஒரு சில சென்டிமீட்டரோ அல்லது அதற்கு கூடகுறைவாகவோ—ஏதோவொரு வீதத்தில் நகர்ந்துசெல்கின்றன. அந்தக் கண்டத்திட்டுகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டு கடந்துசெல்ல முயற்சிசெய்கையில் அவை ஒட்டிக்கொண்டிருக்கும் பல வருட காலப்பகுதியில் அழுத்தம் உருவாகிக்கொண்டு வருகிறது. பின்னர் அவை வெடிப்பு சக்தியோடு ஒன்றையொன்று விட்டு விலகிச் செல்லலாம்.
சான் ஆண்ரேயஸ் பிளவு லாஸ் ஏஞ்சலிஸின் வடகிழக்கில் 53 கிலோமீட்டர் தூரத்திற்குக் கடந்துசென்று, சான் பிரான்ஸிஸ்கோவிற்கு அருகே பசிபிக் பெருங்கடலுக்குள் செல்கிறது. பெரியது என்றழைக்கப்படும் ஒன்றைப்பற்றி கலிபோர்னியர்கள் கவலைப்படுகின்றனர் என்றால் இதில் ஏதேனும் ஆச்சரியமுண்டோ?
சான் பிரான்ஸிஸ்கோ
1906-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சான் ஆண்ரேயஸ் பிளவின் வடமுனை ஓரளவு அமைதியாகவே இருந்தது. பின்னர், 1989, அக்டோபர் 17, மாலை 5:04 மணியளவில், கணக்கிடப்பட்ட ஐந்து கோடி அமெரிக்கர்கள் சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலகத் தளக்கட்டுப் பந்தாட்டத் தொடரைத் தங்களுடைய டிவியில் பார்ப்பதில் மூழ்கியிருந்தனர். திடீரென, டிவி கேமராக்கள் ஆடத் தொடங்கின. சான் பிரான்ஸிஸ்கோவின் தெற்கே சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் சான் ஆண்ரேயஸ் பிளவின் இரு முனைகளும் ஒன்றையொன்று மின்னல்வேகத்தில் கடந்துபோயின. இது நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்தி 63 பேரைக் கொன்று, நெடுஞ்சாலைகளைத் தகர்த்தெறிந்து, வாகனங்களை நொறுக்கிப்போட்டு, ஆயிரக்கணக்கானோரை வீடிழக்கச் செய்தது. எதிர்பார்க்கப்பட்ட பெரியது ஒன்றிற்கு முன்னுரைக்கப்பட்ட அளவாகிய 8 மேக்னிட்யூடைவிட (magnitude) அந்த நிலநடுக்கம் மிக மிகக் குறைந்த வல்லமைவாய்ந்ததாகவே இருந்தது.a
லாஸ் ஏஞ்சலிஸுக்கும் சான் பிரான்ஸிஸ்கோவிற்கும் இடை வழியில் உள்ள பார்க்ஃபீல்ட் என்ற சிறிய நகரத்துக்கு அருகில், 1988-க்கு முன்னோ பின்னோ உள்ள ஐந்து வருடங்களுக்குள் 6 மேக்னிட்யூட் அளவுள்ள ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்பதாக, முன்பு 1985-ன் வசந்தத்தில், ஐ.மா. புவியமைப்பியல் நில அளவை முன்னுரைத்தது. எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பூமியின் இயக்கத்தை ஆராய்வதன் மூலம், நிலநடுக்கங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது எவ்வாறு, நிலநடுக்கம் தாக்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னதாக அல்லது சில நாட்களுக்கு முன்னதாகவும்கூட ஒரு எச்சரிக்கை விடுப்பது எவ்வாறு என்றெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என அவர்கள் நம்பிக்கையாய் இருந்தனர். இந்த ஆராய்ச்சிக்கான செலவு $15 மில்லியன், ஆனால் அந்த நிலநடுக்கம் ஒருபோதும் ஏற்படவில்லை. ஐ.மா. புவியமைப்பியல் நில அளவை அமைப்பைச் சேர்ந்த வில்லியம் எல்ஸ்வர்த் ஒருமுறை சொன்னதுபோல், “நிலநடுக்க இயக்க முறைகளை விளக்குவது ஒரு தெளிவற்ற அறிவியல்.”
லேண்டர்ஸ் நிலநடுக்கம்
இவ்வாறு, 1992, ஜூன் 28-ல் 7.5 மேக்னிட்யூட் அளவுள்ள ஒரு நிலநடுக்கம் தென் கலிபோர்னியாவின் மஹாவி பாலைவனத்தில் உள்ள லேண்டர்ஸுக்கு அருகிலுள்ள மக்கள் அடர்த்தி குறைவான பகுதியைத் தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலநடுக்கத்தைப்பற்றி டைம் பத்திரிகை சொன்னது: “பயங்கரமான சில நொடிகளில், அது எண்ணற்ற ஏறுமாறான வழிகளில் சாலைகளைத் திருப்பிவிட்டது, வாகன நிறுத்துமிடங்களை மாற்றிப்போட்டது, நிலத்தோற்றத்தை அலங்கோலமாக்கிவிட்டது. அதிசயமாக ஒரே ஒரு உயிரை மட்டும் பலிகொண்டது.” இந்த மேக்னிட்யூட் அளவு நிலநடுக்கத்தைப் பார்க்கையில் ஏற்பட்ட சேதம் மிகக் குறைவானதே.
ஆகவே இதுவும் அந்தப் பெரியது அல்ல. உண்மையில், அது சான் ஆண்ரேயஸ் பிளவின் மீதும்கூட இல்லாமல், ஆனால் அதைச் சுற்றியுள்ள சிறிய பிளவுகளில் ஒன்றின்மேல்தான் இருந்தது.
இருப்பினும், அந்த லேண்டர்ஸ் நிலநடுக்கம், பிக் பேர் (Big Bear) ஏரிக்கு அருகாமையில் ஏற்பட்ட ஒன்றோடு சேர்ந்து, சான் ஆண்ரேயஸின் அருகிலுள்ள பகுதிகளை எழுப்பிவிட்டிருக்கலாம். சான் ஆண்ரேயஸின் தெற்குமுனைப் பகுதியின் ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் கண்டத்திட்டுகள், அடுத்த 30 வருடங்களுக்குள் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் உடைந்து தெறித்து விடுபட 40 சதவீத வாய்ப்பு உண்டென்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். அது நெடுங்காலமாக பயந்து நடுங்கவைத்த 8 மேக்னிட்யூட் அளவைக்கொண்ட பெரியது ஒன்றைத் தூண்டிவிடலாம். அது லேண்டர்ஸில் ஏற்பட்டதைப்போல சுமார் ஐந்து மடங்கு வல்லமைவாய்ந்ததாக இருக்கலாம்.
லாஸ் ஏஞ்சலிஸ்
பின்னர், இந்த வருடம் ஜனவரி 17-ம் தேதி, அதிகாலை 4:31 மணியளவில் லாஸ் ஏஞ்சலிஸ் குலுக்கி எழுப்பிவிடப்பட்டது. லாஸ் ஏஞ்சலிஸில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட சான் ஃபெர்ணான்டோ வடிநிலத்தின் நிலமட்டத்திற்கு சுமார் 18 கிலோமீட்டர் ஆழத்தில், பாறைத்துண்டு ஒன்று, ஆழமாக புதைக்கப்பட்டு கிடந்த பிளவு ஒன்றின் பக்கமாக சுமார் 5.5 மீட்டர் தூரத்திற்கு விலகிச் சென்றுவிட்டதாக கருதப்பட்டது. 6.6 மேக்னிட்யூட் அளவைக் கொண்டிருந்த இந்தப் பத்து-நொடி குலுக்கல், குறைந்தது 57 உயிர்களையாவது பலிகொண்டது. துயரகரமாக, இடிந்து வீழ்ந்த மாடிக் கட்டடம் ஒன்றில் 16 பேர் மாண்டனர். தப்பிப் பிழைத்த ஒரு ஆள், நொறுங்கிக் கிடந்த, வாகனங்கள் நிறுத்தும் 20 டன் கான்க்ரீட் கட்டடத்தின்கீழ் எட்டு மணி நேரம் சிக்கிக்கிடந்தார். ஒரு நெடுஞ்சாலை தகர்ந்துபோனது நகரத்தின் வடபகுதிக்கு போகும் முக்கிய வழித்தடத்தை துண்டித்தது. சர்ச்சுகள், பள்ளிகள், கடைகள், ஒரு பெரிய மருத்துவமனை ஆகியவை அடைக்கப்பட்டன. அடிக்கடி நடப்பதைப் போன்றே, குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் மிக அதிகம் பாதிக்கப்பட்டன. ஏனென்றால் நவீன நிலநடுக்கப் பாதுகாப்பு நியமங்கள் நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்னமே கட்டப்பட்ட பழைய கட்டடங்களில் அவர்கள் வாழ்ந்துவந்தனர்.
பெரிய நகரம் ஒன்றிற்கு நேர் அடியில் இருக்கக்கூடிய அந்தப் பகுதியைச்சார்ந்த சிறிய பிளவுகளாலும்கூட ஏற்படுத்தப்பட வாய்ப்பிருந்த பிரச்சினைகளை இந்த நிலநடுக்கம் விளக்கிக் காட்டிற்று. மக்களைப் பொருத்தவரை, நிலநடுக்க மேல்மையத்தில் (epicenter) வாழ்ந்தால் அவர்களுக்கு எந்த நிலநடுக்கமும் பெரியதாகவே இருக்கிறது!
கண்டிப்பான உள்ளூர் கட்டுமான நியமங்கள் மட்டும் இல்லாதிருந்தால் நாசம் பேரளவாக இருந்திருக்கும். ஒவ்வொரு நிலநடுக்கமும் அடுத்தமுறை கையாளுவதை எளிதாக்கவல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. முந்தைய நிலநடுக்கங்களுக்குப் பிறகு வலுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகளின் சந்திப்புகள் (freeway overpasses) சில, இந்த நிலநடுக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டன; மற்றவையோ தப்பவில்லை. ஆனால் ஒரு பெருநகர் அருகே ஒரு பெரிய நிலநடுக்கம்—உண்மையிலேயே பெரியது—தாக்குமானால்தான் சோதனையே இருக்கிறது. மீண்டும் லாஸ் ஏஞ்சலிஸையே தாக்குமா?
இரண்டாவது பெரியது ஒன்று வரவிருக்கிறதா?
‘ஐயோ, வேண்டாம்! இன்னொன்று வேண்டவே வேண்டாம்! ஒன்றையே சமாளிக்கமுடியவில்லை!’ இருந்தபோதிலும், புவியமைப்பியல் வல்லுநர்கள் சிலர் அண்மை எதிர்காலத்தில் மற்றுமொரு பெரியதைத்தான் காண்கின்றனர். நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையின் 1994, ஜனவரி 22 இதழ் சொன்னது: “லாஸ் ஏஞ்சலிஸிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயகரமான பிளவு வரிசைகள் ‘பெரியது ஒன்றை’ ஏற்படுத்தக்கூடும். அதன் ஒவ்வொரு துணுக்கும் சான் ஆண்ரேயஸ் பிளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று ஏற்படுத்தும் அழிவுக்குச் சமமான நாசம் விளைவிப்பதாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். . . . லாஸ் ஏஞ்சலிஸ் வடிநில கிடைநிலை பிளவுகள் நிறைந்ததாய் இருக்கிறது. காரணம், அந்த மாகாணத்தினூடே பெரும்பாலான இடங்களில் வடக்கிலிருந்து தெற்குமுகமாக செல்லும் சான் ஆண்ரேயஸ் பிளவு, லாஸ் ஏஞ்சலிஸில் மேற்குப் பக்கமாக வளைகிறது. இது அந்தப் பகுதியில் கூடுதல் அழுத்தங்களை உண்டுபண்ணுகிறது. எப்படியோ, பசிபிக் கண்டத்திட்டின்மேல் உள்ள இடம்பெயரும் நிலம் அந்த வளைவைக் கடந்தே தன்னுடைய வடதிசை பயணத்தைத் தொடரவேண்டும்.”
பசிபிக் கண்டத்திட்டு கடந்தபோது, லாஸ் ஏஞ்சலிஸ் வடிநிலத்தில் கிடைநிலை பிளவுகளாலான வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டது என்றும், அங்கு இந்த வருடத் துவக்கத்தில் நேரிட்ட நிலநடுக்கத்திற்கு அவற்றில் ஒன்றுதான் காரணம் என்றும் புவியமைப்பியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த நிலநடுக்கத்தைப்பற்றி நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அதன் முதல் அறிக்கையைத் தொடர்ந்து ஒருவாரம் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது: “ஒரு கிடைநிலை பிளவுதான் காரணம் என்றும், இந்தப் பிளவில் பாறையின் ஒரு பாளம் மற்றொன்றின்மீது உராய்ந்து செல்கிறது என்றும் விஞ்ஞானிகள் இன்னும் நம்புகின்றனர். கடந்த வார நிலநடுக்கத்தில், நிலநடுக்க மேல்மையத்திற்கு வடக்கே இருந்த சான்ட்டா சூசானா மலைகள் குறைந்தது 40 சென்டிமீட்டர் [16 அங்குலம்] உயரத்திற்கு அப்படியே அலாக்காக தூக்கப்பட்டன; அதேசமயம் 15 சென்டிமீட்டர் [6 அங்குலம்] வடக்குநோக்கித் தள்ளப்பட்டன.”
லாஸ் ஏஞ்சலிஸ் வடிநிலத்தைக் கடந்து குறுக்கு மறுக்காகச் செல்லும் சிறிய கிடைநிலை பிளவுகள், சான் ஆண்ரேயஸில் இன்னும் எதிர்பார்க்கப்படுகிற 8 மேக்னிட்யூட் அளவுள்ளதைப் போலவே அபாயகரமானதாக இருக்கக்கூடும் என்று கால்டெக்கைச் சேர்ந்த புவியமைப்பியல் நிபுணர் காரி சே கருதுகிறார். “நகரத்தின் முக்கியப் பகுதியின்கீழ் உண்மையிலேயே 8 மேக்னிட்யூட் அளவுள்ள ஒரு பெரிய நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாமா?” என்று லாஸ் ஏஞ்சலிஸை மனதில் கொண்டவராக சே கேட்கிறார். அதன்மேல் வசிக்கும் லட்சக்கணக்கானோரை யோசிக்கும்போது, அது அச்சுறுத்தும் கேள்வியாக இருக்கிறது!
மற்ற மக்கள் புயற்காற்றுகள், வெள்ளங்கள், சூறாவளிகள் ஆகியவற்றின் மத்தியில் வாழ்வதைப் போன்று கலிபோர்னியர்கள் நிலநடுக்கங்களுக்கு மத்தியில் வாழ்வதாக தோன்றுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a “மேக்னிட்யூட்” என்பது இயக்கு விசையளவு அளவுகோலை குறிக்கிறது. இந்த அளவையானது ஒரு பிளவின் நெடுகே பாறை விலகிச் செல்வதை நேரடியான அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ரிக்டர் அளவையானது நிலநடுக்க அதிர்வலையின் வீச்சை அளக்கிறது; ஆகவே இது ஒரு நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மையுடைய மறைமுக அளவாகவே இருக்கிறது. பெரும்பாலான நிலநடுக்கங்களுக்கும் இந்த இரண்டு அளவுகோல்களும் வழக்கமாக ஒரேமாதிரியான அளவுகளைக் காட்டுகின்றன. இருப்பினும் இயக்கு விசையளவு அளவுகோலானது மிக துல்லியமாக இருக்கிறது.
[பக்கம் 16-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சான் ஆண்ரேயஸ் பிளவு
லாஸ் ஏஞ்சலிஸ்
பசிபிக் பெருங்கடல்
லாஸ் ஏஞ்சலிஸ் வடிநிலத்தில் கிடைநிலை பிளவுகள்
[பக்கம் 15-ன் படம்]
1994-ல் ஏற்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ் நிலநடுக்கத்தில் சேதமடைந்த நெடுஞ்சாலை
[படத்திற்கான நன்றி]
[பக்கம் 17-ன் படம்]
1994-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எரிவாயு குழாயிலிருந்து வெளியாகும் தீக்கொழுந்துகள்
[படத்திற்கான நன்றி]
Tina Gerson/Los Angeles Daily News
[பக்கம் 18-ன் படம்]
ஒரு லாஸ் ஏஞ்சலிஸ் நெடுஞ்சாலையின் தகர்த்தெறியப்பட்ட இந்தப் பகுதி 6.6 மேக்னிட்யூட் அளவுள்ளதாயிருந்த பத்து-நொடி குலுக்கலால் இடிக்கப்பட்டது
[படத்திற்கான நன்றி]
Gene Blevins/Los Angeles Daily News