யேடி தாமதமாக பதிலைக் கண்டுபிடித்தார் ஆனால் வெகு தாமதமாக அல்ல
ஒரு கறுப்புப் பெண் சமூக நீதிக்காக 87 வருடங்களாக தேடியதைப் பற்றிய கதை. அவர் மரக்கட்டை ஒன்றில் உட்கார்ந்து ஒரு கழிமுகத்தின் ஓரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய தோல் மிருதுவாகவும் மனது தெளிவாகவும் இருக்கிறது. அவருக்குத் தன்னைப்பற்றிய மதிப்பான ஒரு மனநிலை இருக்கிறது. அவர் உறுதியானவராகவும் அனுபவசாலியாகவும் அறிவாளியாகவும் இருக்கிறார். ஆனால் அவருடைய கண்களில் சொல்நயத்தையும் நகைச்சுவைத் திறனையும், அதோடுகூட மகிழ்விக்கும் மனத்தாழ்மையையும் காணலாம். அவர் கதை சொல்வதில் கைதேர்ந்தவர். அவருடைய ஆப்பிரிக்க பாரம்பரியம் தெளிவாக, தெற்குமுனை மாகாணங்களைப் பற்றிய நினைவுகளோடு இரண்டர கலந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கையை அவர் கற்பனையில் திரும்ப வாழ்ந்துகாட்டுகையில் உன்னிப்பாய் கவனியுங்கள்.
“என்னுடைய பாட்டி, ஆப்பிரிக்காவிலிருந்து ஜார்ஜியா போய்க் கொண்டிருந்த ஒரு அடிமைக் கப்பலில் பிறந்தார். அவர் பிழைப்பார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாதளவு நோஞ்சானாக இருந்தார். ஆகவே அவருடைய அம்மா விற்கப்பட்டபோது அந்த நோஞ்சான் குழந்தையையும் அவருடைய அம்மாவிடம் கொடுத்தார்கள். இது சுமார் 1844-ல் நடந்தது. அந்தக் குழந்தைக்கு ரேச்சல் என்று பெயரிடப்பட்டது.
“டிவிட் கிளிண்டன் தன்னுடைய பெரியப்பாவின் சார்பாக ஒரு தோட்டத்தை நிர்வகித்து வந்தார். ரேச்சல், என்னுடைய அப்பா ஐசேயா கிளிண்டனை டிவிட்டினால் கருத்தரித்தார், அவர் ஜூன் 1866-ல் பிறந்தார். அவர்கள் அவரை ஐக் என்றழைத்தனர். ஒரு பையனாக, டிவிட்டோடு அதே குதிரையில் அடிக்கடி சவாரிசெய்தார். அப்போது ஒரு தோட்டத்தை நிர்வகிப்பதில் தெரிந்திருக்கவேண்டிய அனைத்தையும் கற்றுக்கொண்டார். சில வருடங்கள் கழித்து, டிவிட் ஐக்கிடம் சொன்னார்: ‘நீ உலகில் சொந்தமாக வாழ்க்கை நடத்தவேண்டிய காலம் வந்துவிட்டது.’ பின்னர் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த பண பெல்ட்டைக் கழற்றி ஐக்கிடம் கொடுத்தார்.
“இதற்குப் பிறகு என் அப்பா Mr. ஸ்கின்னர் என்ற ஒருவரிடம் வேலைக்கு அமர்ந்து, ஸ்கின்னர் தோட்டத்தின் கண்காணிப்பாளர் ஆனார். பின்னர் எலன் ஹாவர்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஜார்ஜியாவைச் சேர்ந்த வேன்ஸ்பராவின் அருகிலுள்ள பர்க் மாவட்டத்தில், 1892, ஜூன் 28-ம் தேதி நான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருந்தது. வீட்டு வாசல்படியிலிருந்து வெளியே இறங்கி வெளியுலக வாழ்க்கை எப்படியிருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தேன். என் உடைக்குப் பின்னால் பெல்ட்டைக் கட்டிவிடும்வரை அம்மா என்னை விடாமல் பிடித்துவைத்துக் கொண்டு, ‘பெல்ட்டைக் கட்டிக்கிட்டுப் போ,’ என்று தினமும் சொல்வதைக் கேட்பேன். என்னுடைய அப்பாவோடு கூடவே நான் இருக்க கலப்பையின் கவையில் ஏறிக்கொள்வேன்.
“ஒரு நாள் ஒரு கோடைகால புயலின்போது, Mr. ஸ்கின்னரையும் அவரது குதிரையையும் வெட்டவெளியில் வைத்து மின்னல் தாக்கியது. இருவரும் கொல்லப்பட்டனர். Mrs. ஸ்கின்னர் வட மாகாணங்களைச் சேர்ந்தவர். ஜெனரல் ஷர்மன் அட்லான்டாவை தீக்கிரையாக்கிய செயலுக்காக பர்க் மாவட்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களாலும் வெறுக்கப்பட்டார். ஆகவே கறுப்பர்களை வெறுத்ததைவிட Mrs. ஸ்கின்னரை அவர்கள் அதிகம் வெறுத்தனர்! அவர்களையும்கூட Mrs. ஸ்கின்னர் பழிக்குப்பழி வாங்கினார். அவர்களை வெட்கத்தில் ஆழ்த்துவதற்காக, தன்னுடைய கணவர் இறந்ததும், அந்தத் தோட்டத்தைக் கறுப்பராகிய என் அப்பாவுக்கு விற்றுவிட்டார். 20-ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே ஜார்ஜியாவில் கறுப்பர் ஒருவர் ஒரு தோட்டத்திற்குச் சொந்தக்காரராக இருப்பதை கற்பனை செய்துபாருங்கள்!”
Mr. நீலியும் ஜெனரல் ஸ்டோர்ஸும்
“அப்பாவுக்கு ஏதாவது தேவைப்பட்டபோதெல்லாம், ஜெனரல் ஸ்டோர்ஸ் வைத்திருந்த Mr. நீலியிடம் சென்றார். அதில் கிடைக்காத பொருளே இல்லை. டாக்டர் வேண்டுமா, அந்த ஜெனரல் ஸ்டோர்ஸுக்குப் போங்கள். ஒரு சவப்பெட்டி வேண்டுமா, அந்த ஜெனரல் ஸ்டோர்ஸுக்குப் போங்கள். எதற்கும் பணம் கொடுக்கவேண்டிய தேவையில்லை; பருத்தி அறுவடை காலம் வரும்வரை அதை உங்கள் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். அப்பாவுக்கு வங்கியில் பணம் இருந்தது நீலிக்குத் தெரியவந்தது. ஆகவே அவர் எங்களுக்கு எல்லாவற்றையும்—ஐஸ் பெட்டி, தையல் மெஷின், துப்பாக்கிகள், சைக்கிள்கள், இரண்டு கோவேறு கழுதைகள் போன்ற எங்களுக்கு அவசியமே இல்லாத பொருட்கள் அனைத்தையும் கொண்டுவந்தார். ‘அது எங்களுக்குத் தேவைப்படலியே!’ என்று அப்பா சொல்வார். அதற்கு நீலியின் பதில்: ‘இது ஒரு அன்பளிப்பு. அத உங்க கணக்கில வெச்சிக்கிறேன்.’
“ஒரு நாள் ஒரு பெரிய கறுப்பு ஸ்டூடபேக்கர் காரை எங்கள் பண்ணைக்குக் கொண்டுவந்தார் நீலி. அப்பா சொன்னார்: ‘Mr. நீலி, அது எங்களுக்குத் தேவைப்படல! அத ஓட்டவோ பராமரிக்கவோ யாருக்கும் தெரியாது. அதுமட்டுமல்ல அத கண்டா எல்லாருக்கும் பயம்!’ அதையெல்லாம் நீலி காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ‘இத வச்சுக்குங்க ஐக். அத உங்க கணக்கில வெச்சுக்கிறேன். மேலும் என்னுடைய வேலைக்காரங்கள்ல ஒருத்தன விட்டு உங்க வேலைக்காரங்களுக்கு அத ஓட்ட கத்துக்கொடுக்கச் சொல்றேன்.’ அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் ஏற்படவில்லை. ஒருநாள் பெட்ரோல் வாங்க போகும் வேலைக்காரர் ஒருத்தரோடு என்னைப் போகவிடும்படி அப்பாவிடம் நான் கேட்டேன். ‘உன்னப்பத்தி எனக்குத் தெரியும்; அத நீ தொட்டுக்கூட பாக்கக்கூடாது!’ என்று அப்பா சொன்னார். நாங்கள் அவர் கண்பார்வையில் இருந்து மறைந்தவுடனேயே, ‘நான் கொஞ்சம் ஓட்டிப் பாக்கிறேன்னே. நான் ஓட்டிப் பாப்பேன்னு அப்பாவுக்குத் தெரியும்,’ என்று கேட்டேன். கார் பறக்கத் தொடங்கிற்று; நான் இடது பக்கம் திருப்பி பின்னர் வலது பக்கம் திருப்பி புதருக்குள்ளும் மரங்களுக்குள்ளும் ஓட்டிச் சென்றேன். இறுதியில் அதை நீரோடையில் கொண்டு இறக்கினேன்.
“இந்தச் சாமான்களை எல்லாம் வேண்டாமென்று ஏன் சொல்லவில்லை என்று அப்பாவிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் சொல்வார்: ‘அது பெரிய தப்பாப் போயிடும், ஒரு கேவலமாப் போயிடும். அதோடகூட, Mr. நீலிக்கு சிநேகிதர்களாக இருக்கும் எந்த நீக்ரோக்களோடும் KKK [Ku Klux Klan] அங்கத்தினர்கள் கைகலப்பது கிடையாது.’ ஆகவேதான் எங்களுக்குத் தேவையேயில்லாத இந்த எல்லா சாமான்களுக்கும் பணம் கொடுத்தோம். ‘உங்களுக்குத் தேவையாயில்லாதத வாங்காதீங்க, இல்லன்னா உங்களால வாங்க முடியாத பொருள் உங்களுக்கு சீக்கிரமே தேவைப்படும்,’ என்று எப்போதுமே அப்பா சொல்லிக் கொண்டிருந்ததைப்பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். நான் Mr. நீலியை வெறுத்தேன்!
“அந்த நூற்றாண்டின் பிறப்பாகிய ஜனவரி 1, 1900-ஐ எல்லாரும் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும்போது, என்னுடைய அம்மா தனது நான்காவது பிள்ளையைப் பெற்றெடுக்கையில் இறந்துபோனார்கள். அப்போது எனக்கு எட்டு வயதே ஆகியிருந்தது; ஆனால் நான் அப்பாவை நல்லபடியாக கவனித்துக்கொள்வேன் என்று அவரிடம் கல்லறையில் வைத்தே சொன்னேன்.
“பிள்ளைகளாய் இருந்த எங்களுக்கு என் அம்மாவின் அம்மா பெரிதும் உதவினார். அவருடைய பெயர் மேரி. அவர் அதிக மதப்பற்று உடையவராக இருந்தார். அவருக்கு நல்ல ஞாபகசக்தி இருந்தது, ஆனால் எழுதவோ படிக்கவோ வராது. நான் சமையலறையில் இருந்துகொண்டு அவர்களிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவேன். ‘கடவுள் பார்வையில எல்லாரும் சமம்னு வெள்ளக்காரங்க சொல்றாங்க, இருந்தாலும் அவங்க கறுப்பர்களோட சகவாசம் வெச்சுக்க இஷ்டப்படறதில்லையே ஏன்? நாம சொர்க்கத்துக்குப் போகும்போது, அந்த வெள்ளக்காரங்கள்லாம் அங்கக்கூட அவங்க வருவாங்களா? Mr. நீலியும் அங்கு இருப்பாரா?’ அதற்கு மேரி: ‘எனக்குத் தெரியாது. நாம எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருப்போம்,’ என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி எனக்கு அவ்வளவு நிச்சயம் கிடையாது.
“‘பாட்டிமா, நாம சொர்க்கத்தில போய் என்ன செய்யப்போறோம்?’ ‘ஆ, தங்கத்தால செய்யப்பட்ட தெருக்கள்ல நடக்கப்போறோம்! இறக்கை கட்டிக்கிட்டு மரம்விட்டு மரத்துக்குப் பறக்கப்போறோம்!’ ‘நான் வெறுமனே வெளியில் இருந்து விளையாடிக்கொண்டிருப்பேன்,’ என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். எப்படியோ சொர்க்கத்திற்குப் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் நரகத்திற்குப் போகவேண்டும் என்றும் விரும்பியது கிடையாது. ‘பாட்டிமா நாம சொர்க்கத்தில என்ன சாப்பிடப்போறோம்?’ ‘ஆ, நாம பாலும் தேனும் சாப்பிடப்போறோம்!’ ‘ஐயோ எனக்குப் பால் பிடிக்காதே, எனக்குத் தேனும் பிடிக்காது! பாட்டிமா, நான் பட்டினி கிடந்து சாகப்போறேன்! சொர்க்கத்தில பட்டினி கிடந்து நான் சாகப்போறேன்!’”
எனது கல்வியைத் தொடங்குகிறேன்
“நான் படிக்கவேண்டுமென்று அப்பா விரும்பினார். 1909-ல் அலபாமாவில் உள்ள டஸ்கீஜி கல்வி நிலையத்திற்கு என்னை அனுப்பினார். புக்கர் T. வாஷிங்டன் அந்தப் பள்ளியில் இருந்தார். அவர்தான் அங்கு எல்லாம். மாணாக்கர்கள் அவரை அப்பா என்று அழைத்தனர். அவர் நிறைய இடங்களுக்கு பிரயாணம் செய்து அந்தப் பள்ளிக்காக பணம் திரட்டினார்; பெரும்பாலான பணத்தை வெள்ளையர்களிடமிருந்து திரட்டினார். அவர் பள்ளியில் இருந்தபோது, இந்தச் செய்தியை எங்களுக்குப் பிரசங்கித்தார்: ‘கல்வி பயிலுங்கள். ஒரு வேலையைப் பெற்று உங்களுக்குப் பணம் சேர்த்து வையுங்கள். பின்னர் சொந்தமான ஒரு நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள். நான் உங்களைப் பார்க்க வரும்போது, வெட்டிச் சீர்படுத்தாத புற்களையும், பெயிண்ட் அடிக்காத வீட்டையும், அல்லது உடைந்த ஜன்னல்களில் குளிரைத் தடுப்பதற்காக துணிகளை வைத்து அடைத்திருப்பதையும் காணும்படி செய்யாதீர்கள். உங்களைப்பற்றி நன்மதிப்புடன் உணருங்கள். உங்கள் இனத்தவருக்கு உதவுங்கள். அவர்கள் முன்னேற அவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கமுடியும்.’
“அவர்களுக்கு ஒரு ‘முன்னேற்றுவிப்பு’ நிச்சயமாக தேவையாகத்தான் இருந்தது. அவர்கள் நல்ல மக்கள்—அவர்களில் நற்குணங்கள் அநேகம் இருக்கின்றன. நீக்ரோக்களைப்பற்றி சிந்திக்கும்போது ஒரு வெள்ளையர் கடந்தகாலத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவேண்டிய காரியங்கள் இருக்கின்றன. நீக்ரோக்களுக்கு கற்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒரு நீக்ரோவுக்குக் கற்றுக்கொடுப்பது என்பது அடிமைத்தன நியமங்களுக்கு எதிரானதாக இருந்தது. எங்களுடைய விருப்பத்திற்கு எதிராக இந்த நாட்டுக்கு வந்த மக்கள் நாங்கள் மட்டுமே. மற்றவர்களுக்கு வரவேண்டும் என்ற அவா இருந்தது. எங்களுக்கு அப்படி இருந்ததில்லை. அவர்கள் எங்களைச் சங்கிலிகளில் கட்டி இங்கு இழுத்துவந்தனர். 300 வருடங்களாக ஆதாயமேதுமின்றி எங்களை வேலைவாங்கினார்கள். வெள்ளையருக்காக நாங்கள் 300 வருடங்கள் உழைத்தோம்; அவர் எங்களுக்கு உண்ண போதுமான உணவும் அல்லது உடுக்க தேவையான துணிமணிகளைக்கூட கொடுத்ததில்லை. காலை தொடங்கி இரவு வரை வேலைவாங்கினார், ஒன்றும் இல்லாததற்கெல்லாம் எங்களை கசையால் அடித்தார். அவர் எங்களை விடுதலையாக்கியபோதும் கற்பதற்கான ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தரவில்லை. நாங்கள் பண்ணையில் வேலைசெய்ய வேண்டும் என்றும், எங்களுடைய பிள்ளைகளும் வேலைசெய்து, வருடத்தில் மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்றும் விரும்பினார்.
“அது எப்படிப்பட்ட பள்ளி என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு சின்ன சர்ச்சு, ஏனென்றால் நீக்ரோக்களுக்கு பள்ளி இல்லை. மரப்பலகை இருக்கைகள். வருடத்திலேயே சூடு அதிகமாக இருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள். ஜன்னல்களுக்கு திரைகள் கிடையாது. பிள்ளைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். நூற்றிமூன்று மாணவர்களுக்கு ஒரே ஒரு வாத்தியார், பூச்சிப் புழுக்களெல்லாம் உள்ளே வருகின்றன. மூன்று மாதங்களில் ஒரு பிள்ளைக்கு நீங்கள் என்னத்தைச் சொல்லிக் கொடுக்கமுடியும்? டஸ்கீஜியில் இருக்கும்போது கிடைத்த ஒரு கோடை விடுமுறையில் நான் எல்லா வயதிலுமுள்ள 108 மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்.
“1913-ல் ஒரு நர்ஸாக நான் பயிற்சியை முடித்தேன். 1914-ல் சாமுவேல் மான்ட்கோமரியைத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் அவர் முதல் உலக யுத்தத்திற்காக புறப்பட்டுப் போய்விட்டார்; நான் கர்ப்பமாயிருந்தேன். அது என்னுடைய ஒரே குழந்தை. சாமுவேல் திரும்பிவந்து சிறிது காலத்தில் இறந்துபோனார். நர்ஸ் வேலையை கண்டுபிடிக்கும் எதிர்பார்ப்போடு என்னுடைய இளம் மகனுடன், இல்லினாய்ஸில் உள்ள என்னுடைய தங்கையைக் காண ரயிலில் சென்றிருந்தேன். கறுப்பர்கள் அனைவரும் எஞ்சினையொட்டி பின்னால் இருந்த ரயில் பெட்டியில் ஏறிக்கொள்ளும்படி சொல்லப்பட்டனர். அங்கு மிகவும் சூடாக இருந்தது, ஜன்னல்கள் திறந்திருந்தன, எனவே கரியும் சாம்பலும் எங்கள் மேல் அப்பிக்கொண்டது. இரண்டாம் நாள் எங்கள் உணவு தீர்ந்துபோயிற்று, குழந்தைக்குப் பாலும் இல்லை. உணவு தயாரிக்கும் பெட்டிக்கு (dining car) உள்ளே போக முயற்சித்தேன், ஆனால் ஒரு கறுப்பு போர்ட்டர் தடுத்து நிறுத்திவிட்டார். ‘நீங்க உள்ள போகக்கூடாது.’ ‘என் குழந்தைக்குக் கொஞ்சம் பாலாவது விலைக்குத் தருவாங்களா?’ கிடைத்த பதில் இல்லை என்பதே. எனக்கு சினமூட்டிய முதல் அநீதி நீலியாக இருந்தார். இது இரண்டாவது.
“1925-ல், ரயிலில் போர்ட்டராக இருக்கும் ஜான் ஃப்யூ என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன். அவர் மினிசோடாவின் செ. பால் என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார், ஆகவே நான் அங்கு மாறிச்சென்றேன். இது சமூக நீதி பிரச்சினை சம்பந்தமாக என்னை சினமூட்டிய மூன்றாவது காரியத்தை எதிர்ப்படவைத்தது. செ. பாலில் நான் வடகோடிப் பகுதியில் இருந்துவந்தேன். ஆனால் பாரபட்சம் தென் மாகாணங்களைவிட மோசமாக இருந்தது. அந்த மாவட்ட மருத்துவமனையினர் என்னை ஒரு நர்ஸாக பதிவு செய்ய மறுத்தனர். கறுப்பு நர்ஸைப்பற்றி அவர்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்பதாக சொன்னார்கள். டஸ்கீஜியில் நாங்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டோம், ஆகவே நோயாளிகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் செ. பாலிலோ தோல் நிறம் தீர்மானிக்கும் காரணியாக இருந்தது. வேன்ஸ்பராவில் இன்னும் எனக்கிருந்துவந்த என்னுடைய சிறிய வீட்டை விற்றுவிட்டு அந்தப் பணத்தை, ஒரு சிறிய நிலத்தையும் வீட்டையும் வாங்கும்போது பாதி பணம் கொடுக்க பயன்படுத்தினேன். நான் ஒர்க்ஷாப் ஒன்றைத் தொடங்கி, நான்கு மெக்கானிக்குகளை அமர்த்தினேன். விரைவில் தொழில் நன்கு நடந்துகொண்டிருந்தது.”
NAACP-யைக் கண்டுபிடிக்கிறேன்
“அநேகமாக 1925-ல் நான் NAACP-யைக் [National Association for the Advancement of Colored People (கறுப்பு இனத்தவர் முன்னேற்ற தேசிய சங்கம்)] கண்டுபிடித்து அதில் தீவிரமாக இறங்கினேன். ‘உங்கள் இனத்தவருக்கு உதவுங்கள். அவர்கள் முன்னேற அவர்களுக்கு உதவுங்கள்,’ என்று புக்கர் T. வாஷிங்டன் சொல்லியிருந்தார் அல்லவா? நான் செய்த முதல் காரியம் என்னவென்றால், சொந்த வீடுகளைக் கொண்டிருந்து வரிகளைச் செலுத்திய கறுப்பு வாக்காளர்களின் ஒரு பெரிய பட்டியலோடு அந்த மாகாணத்தின் கவர்னரைப் போய்ப் பார்த்ததுதான். சொன்னதை அவர் கவனித்துக் கேட்டுவிட்டு, எனக்கு வேலை தர மறுத்த அதே மாவட்ட மருத்துவமனையில் ஒரு கறுப்பு வாலிபப் பெண்ணுக்கு ஒரு நர்ஸ் வேலை வாங்கித் தந்தார். இருந்தாலும் அங்கிருந்த வெள்ளைக்கார நர்ஸுகள் அவளை மிகவும் கொடுமைப்படுத்தினர்—சீருடைகளிலெல்லாம் சிறுநீரை ஊற்றியும்விட்டனர். ஆகவே அவள் கலிபோர்னியாவுக்குச் சென்று, அங்கு ஒரு டாக்டராகிவிட்டாள்.
“என்னுடைய ஒர்க்ஷாப் தொழிலைப் பொறுத்தவரையில், 1929-ல் ஒருநாள் வரை அது நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் 2,000 டாலரை என்னுடைய வங்கியில் போட்டுவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். வங்கிகள் வீழ்ச்சியடைந்தன என்று மக்கள் கத்தத் தொடங்கினர். இன்னும் இரண்டு இடங்களிலிருந்து ஒர்க்ஷாப்புக்கு பணம் வரவேண்டியிருந்தது. அதையெல்லாம் நான் இழந்துவிட்டேன். எவ்வளவு பணத்தை என்னால் மீட்கமுடிந்ததோ அதை என்னுடைய மெக்கானிக்குகளோடு பகிர்ந்துகொண்டேன்.
“யாரிடமும் பணம் இல்லாதிருந்தது. என்னுடைய லைஃப் இன்சூரன்ஸ் பாலிஸியை 300 டாலருக்கு விற்றுப் பணமாக்கி நான் என்னுடைய முதல் வீட்டை வாங்கினேன். அந்த வீட்டை 300 டாலருக்கு வாங்கினேன். நான் பூக்களையும் கோழிகளையும் முட்டைகளையும் விற்றுவந்தேன். விடுதியினராக வருபவர்களுக்கு இடமளித்தேன். பின்னர் என்னிடமிருந்த கூடுதலான பணத்தை, ஒவ்வொன்றும் 10 டாலர்கள் என்ற விலைக்கு காலி நிலங்களை வாங்குவதற்காக உபயோகித்தேன். நான் ஒருபோதும் பட்டினியாய்க் கிடந்ததில்லை; அரசாங்க உதவியை நம்பி வாழ்ந்ததுமில்லை. முட்டைகள் சாப்பிட்டோம். கோழிகள் சாப்பிட்டோம். அவற்றின் எலும்புகளைப் பொடியாக்கி என்னுடைய பன்றிகளுக்குத் தீவனமாக கொடுத்தோம்.
“பின்னர் எலனர் ரூஸ்வெல்ட்டுக்கு தோழியானேன்; மேலும் ஹியூபர்ட் ஹம்ஃப்ரிக்கு மிக நெருங்கிய சிநேகிதியானேன். Mr. ஹம்ஃப்ரி செ. பாலில், வெள்ளையர்கள் பெரும்பான்மையர் வாழும் முக்கியப் பகுதியில் ஒரு பெரிய மாடிவீட்டுக் கட்டடத்தை வாங்க உதவினார். அந்த வீட்டுநில தரகர் தன்னுடைய உயிருக்காக மிகவும் பயந்தார். ஆகவே அந்த வீட்டில் 12 மாதங்களுக்கு நான் ஒன்றும் செய்யப்போவதில்லை என்று என்னை வாக்குறுதி கொடுக்கவைத்தார்.”
என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை
“நான் ஒருபோதும் மறந்திராத அசாதாரணமான ஏதோவொன்று 1958-ல் சம்பவித்தது. வெள்ளைக்காரர் இருவரும் ஒரு கறுப்பரும் ஒரு ராத்திரிக்கு தங்குவதற்காக இடம்தேடி என்னிடம் வந்தனர். என்னை சட்டப்பூர்வமாக வம்பில் மாட்டிவிடுவதற்கான ஒரு சூழ்ச்சி என்று எண்ணி, அவர்களை மணிக்கணக்காக நான் விசாரித்தேன். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்; நாட்டின் குறுக்கே பயணம் செய்து நியூ யார்க்கில் நடக்கும் ஒரு மாநாட்டுக்குச் செல்கிறார்கள் என்பதே அவர்களுடைய கதையாக இருந்தது. பாரபட்சமே இல்லாத ஒரு பரதீஸிய பூமிக்கான கடவுளின் நோக்கத்தைப்பற்றி பைபிள் என்ன சொன்னது என்பதை எனக்குக் காண்பித்தார்கள். மனித சகோதரத்துவம். ‘இத்தன அநேக வருஷமா நான் தேடிக்கிட்டிருந்தது இவங்கக்கிட்ட இருக்குமோ?’ நான் யோசித்தேன். அவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பதாக கூறிக்கொண்டார்களோ அப்படித்தான் தோன்றினார்கள்—சகோதரர்களாக இருந்தார்கள். அந்த ராத்திரி அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கியிருக்க விரும்பவில்லை.
“சில வருடங்களுக்குப்பின், என் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களில் ஒருவர் மரிக்கும் தருவாயில் இருந்ததாக எனக்குத் தெரியவந்தது. நான் அவரைக் காணச் சென்றிருந்தேன். அவருடைய பெயர் மின்னி. அவருக்காக நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது: ‘அங்க இருக்கிற அந்தச் சின்ன புளூ கலர் புஸ்தகத்த தயவுசெய்து கொஞ்சம் வாசித்துக் காட்டுங்களேன்,’ என்று சொன்னார். அது யெகோவாவின் சாட்சிகளால் விநியோகிக்கப்படும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற புத்தகமாக இருந்தது. ஆகவே ஒவ்வொரு முறை போகும்போதும் அந்தச் சின்ன புளூ புத்தகத்திலிருந்து அதிகமதிகம் வாசித்தேன். ஒரு நாள் மின்னி இறந்துபோனார்; நான் அவருடைய வீட்டுக்குப் போனபோது, டெய்ஸி கெர்க்கன் என்ற வெள்ளைக்கார பெண்மணி அங்கு இருந்தார். அவர் அநேகமாக முழுக் குருடாக இருந்தார். அந்தச் சின்ன புளூ புத்தகத்தை மின்னியோடு அவர் படித்ததாக என்னிடம் சொன்னார். நான் எடுத்துக்கொண்டு போக விரும்பும் ஏதாவது இங்கு இருக்கிறதா என்று டெய்ஸி என்னிடம் கேட்டார். ‘அவங்க பைபிளும் அந்தச் சின்ன புளூ புஸ்தகமும் கிடச்சா அதுவே போதும்,’ என்று நான் சொன்னேன்.
“அந்த புளூ புத்தகத்தில் உள்ளவற்றை நான் பின்பற்றினால், என்னுடைய இனத்தவருக்கு நான் செய்துகொண்டிருந்த அத்தனை வேலையையும் நிறுத்தவேண்டும் என்று எனக்குத் தெரியும். பிரயோஜனமான காரியங்கள் என்று உணர்ந்து நான் செய்துகொண்டிருந்த எல்லா வேலைகளையும் என்னால் விவரிக்கமுடியவில்லை. ரயில் போர்ட்டர்களுக்காக ஒரு சங்கத்தை நான் அமைத்தேன். நீதிமன்ற வழக்குகளின் மூலம் சிலருக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தேன். சிலசமயங்களில் நகரத்தின் பல பாகங்களில் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தேன். என் ஜனங்கள் சட்டத்தை மீறாமல் இருப்பதையும் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறு மீறியபோது அவர்களை ஜெயிலிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டியிருந்தது. நான் பத்துக்கும் மேற்பட்ட கிளப்களைச் சேர்ந்தவளாயிருந்தேன்; ஆனால் அவையாவும் சமூக சேவை செய்பவையாகவே இருந்தன.
“ஆகவே இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடப்பதைப் பற்றி நான் ஒன்றும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கமுடியாது என்று நான் எண்ணினேன். என்னுடைய ஜனங்கள் இப்போது துன்புற்றுக்கொண்டிருந்தனர்! NAACP-யில், ஒரு வெள்ளைக்கார செயலாளரையும் உள்ளிட்ட, அநேக பணியாளர்கள் எனக்கு இருந்தனர். செ. பாலில் 1937 முதல் 1959 வரை நான் NAACP-யின் உபதலைவியாகவும் 1959 முதல் 1962 வரை அதன் தலைவியாகவும் செயலாற்றினேன். நான்கு மாகாணங்களை ஒரு சம்மேளனமாக ஒழுங்கமைத்து, இறுதியில் NAACP-யானது அதன் தேசிய மாநாட்டை செ. பாலில் நடத்தவைப்பதற்காக அதில் சேவை செய்தேன். இதற்கிடையில் அநேக போராட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சொன்னால் ஒவ்வொன்றும் ஒரு கதையாக இருக்கும். 1962-ல் என்னுடைய 70 வயதில் நான் ஓய்வுபெறுவதற்கு முன்பு, ஜனாதிபதி ஜான் F. கென்னடியைச் சென்று சந்தித்தேன். வருந்தத்தக்க விதத்தில், அச்சமயத்தில் கடவுளுடைய வழிக்கு இடமே கொடுக்காத அளவுக்கு என்னுடைய வழியில் நீதியைத் தேடுவதில் படுதீவிரமாக இருந்தேன்.”
சமூக நீதிக்கான ஒரே வழியை இறுதியில் கண்டுபிடிக்கிறேன்
“டெய்ஸி கெர்க்கனோடு தொலைபேசியின் மூலம் நான் எப்போதும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தேன். அவரும் என்னைக் காண ஒவ்வொரு வருடமும் வந்தார். நான் அரிஜோனாவில் உள்ள டக்ஸனுக்குச் சென்று சிறிதுகாலத்தில் என்னுடைய காவற்கோபுர அன்பளிப்பு சந்தா தீர்ந்துவிட்டது. முழங்காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை என்னை நடமாட்டமின்றி இருக்கச் செய்தது. ஆகவே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான அடெல் செமோன்யன் என் வீட்டைத் தட்டியபோது, மகிழ்ச்சிக்குரிய விதமாக, நான் வீட்டில் இருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பைபிள் படிக்கத் தொடங்கினோம். இறுதியில் சத்தியத்தின் முழு பயனையும் நான் உணர்ந்தேன். என்னுடைய ஜனத்தின் எல்லா பிரச்சினைகளையும் என்னால் தீர்த்துவைத்து உண்மையிலேயே ‘அவர்களை முன்னேற்றுவிக்க’ முடியாது என்பதை உணர்ந்தேன். பிரச்சினை Mr. நீலியைவிட பெரியதாக இருந்தது. தென் மாகாணங்களைவிட பெரியதாக இருந்தது. ஐக்கிய மாகாணங்களைவிட பெரியதாக இருந்தது. உண்மையில் இந்த உலகத்தைவிடவே பெரியதாக இருந்தது.
“அது ஒரு சர்வலோக கேள்வியாக இருக்கிறது. இந்த உலகத்தை ஆள உரிமையுள்ளவர் யார்? மனிதனா? கடவுளுடைய எதிரி சாத்தானா? அல்லது அது சிருஷ்டிகருடைய உரிமையா? சந்தேகமின்றி, அவருடையதுதான்! இந்தப் பிரச்சினை ஒருமுறை தீர்க்கப்பட்டால், என் வாழ்நாள் முழுவதும் நான் போராடிக்கொண்டிருந்த சமூக அநீதியின் அறிகுறிகள் மறைந்துபோகும். கறுப்பர்களுக்கோ வெள்ளையர்களுக்கோ நான் என்னதான் செய்திருந்தாலும், நாம் இன்னும் வயதாகி மரிக்கிறோம். கடவுள் பூமியை எல்லாருக்கும் சமூக நீதி கிடைக்கும் ஒரு பரதீஸாக மாற்றுவார். என்றென்றுமாக வாழ்ந்து, தாவரங்களையும் விலங்குகளையும் பராமரித்து, என்னைப் போல என் அயலகத்தாரை நேசித்து—அதன்மூலம் கடவுள் பூமியில் ஆணையும் பெண்ணையும் படைத்ததற்கான ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அறிந்து நான் பூரித்துப்போனேன். (சங்கீதம் 37:9-11, 29; ஏசாயா 45:18) நான் சொர்க்கத்திற்குப் போகவும் அங்குப் பாலும் தேனும் குடித்து வாழவும் அல்லது பட்டினி கிடந்து சாகவும் தேவையில்லை என்று கற்றுக்கொண்டதில் நான் கிளர்ச்சியுற்றேன்!
“எனக்குச் சில மனவருத்தங்கள் இருக்கின்றன, முக்கியமாக, தவறான மூலத்திலிருந்து சமூக நீதி தேடுவதில் என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணடித்தேனே என்று. என்னுடைய வாலிபப்பிராயத்தின் சக்தியைக் கடவுளுக்கு கொடுக்க ஆசையாய் இருந்திருப்பேன். மற்ற மக்களுக்கு உதவிசெய்வதன்மூலம் நான் அவ்வாறுதான் கொடுத்தேன் என்று நம்பினேன். இப்போதும் நான் உதவிசெய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் கிறிஸ்து இயேசுவின்கீழான கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நம்பிக்கையை மக்களுக்கு சுட்டிக்காட்டுவதன் மூலம் அதைச் செய்துவருகிறேன். நாம் இரட்சிக்கப்படும் பொருட்டு வானத்தின்கீழ் கொடுக்கப்பட்ட நாமம் அந்த இயேசுவின் நாமம் மட்டுமே. (மத்தேயு 12:21; 24:14; வெளிப்படுத்துதல் 21:3-5) என்னுடைய அப்பா மூடிய கையை என்னிடம் காட்டும்போது சொல்வதுண்டு: ‘நீ உன்னுடைய கைய இறுக மூடினா, உள்ள ஒன்னும் போகாது, வெளியவும் ஒன்னும் போகாது.’ மற்றவர்களுக்கு உதவி கிடைப்பதற்காக நான் என்னுடைய கையைத் திறந்துவிட விரும்புகிறேன்.
“யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக நான் 87 வயதில் முழுக்காட்டப்பட்டேன். என்னுடைய காலம் குறுகியதாக இருப்பதால், நான் என் நடவடிக்கைகளைக் குறைக்கமுடியாது. நான் இப்போதும் சுறுசுறுப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் முன்பு இருந்ததைப்போல் சுறுசுறுப்பாக இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் ஒருவேளை இரண்டே இரண்டு சபைக் கூட்டங்களை மட்டும் தவறவிட்டிருப்பேன். என்னுடைய குடும்பத்தினர் உயிர்த்தெழுப்பப்படும்போது என்னால் முடிந்தளவு கற்றுக்கொடுக்க, என்னால் முடிந்த அத்தனையும் நான் கற்கவேண்டும். வெளி ஊழியத்தில் அடெலின் உதவியோடு ஒரு மாதத்துக்கு 20 முதல் 30 மணி நேரம் செலவிடுகிறேன்.
“இப்பொழுது, நான் சொன்ன காரியங்களெல்லாம் என் வாழ்க்கையின் முக்கியக் குறிப்புகளாகும். ஒவ்வொன்றையும் என்னால் உங்களுக்குச் சொல்லமுடியாது, சொன்னால் இந்த மரக்கட்டையிலேயே உட்கார்ந்து வாரக்கணக்கில் நாம் பேசிக்கொண்டேயிருப்போம்.”
அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பெரிய நீர் விரியன் பாம்பு வளைந்து நெளிந்து அந்த மரக்கட்டையின் மீது ஊர்ந்து வந்தது. “இந்தப் பாம்பு எங்கிருந்து வந்தது?” யேடி கத்தினார். அவர் மீன் பிடிக்கும் தூண்டிலையும் தான் பிடித்த மீனையும் வேகமாக எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டுப்போனார். பேட்டி இத்துடன் முடிவடைந்தது.—யேடி கிளிண்டன் ஃப்யூ ஒரு “விழித்தெழு!” நிருபரிடம் சொன்னபடி. இந்தப் பேட்டிகொடுத்து சிறிது காலம் கழித்து, யேடி 97 வயதில் இறந்துபோனார்.