கூச்சலிடும் கம்பீரமான அன்னம்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையேயுள்ள எல்லையினருகே வியாபித்திருக்கும், நார்த்தம்ப்ரியா மலைகள் க்ரிண்டன் ஏரியின் தண்ணீரைக் கட்டித் தழுவியிருக்கின்றன. புதர்களை உடையாய் அணிந்து நிற்கும், சுற்றியுள்ள இம்மலைகளின் செம்பழுப்பு வர்ணங்களையும் பழுப்பு நிறங்களையும் இத்தண்ணீர் பிரதிபலித்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், காட்டு வாத்துகள், உள்ளான்குருவி கூட்டங்களோடும், கணந்துள் பறவைகளோடும், தங்கநிற ஆட்காட்டிக் குருவிகளோடும் சேர்ந்து தண்ணீரிலுள்ள களைகளின் நுனியைத் தின்றுகொண்டிருந்தன.
திடீரென, மூடுபனி மெதுவாக மறையத் தொடங்கியதும், பறவைக்கே உரித்தான ஓர் அழைப்பு என் காதுகளை வந்தெட்டிற்று. அது மலைகளுக்குமேல் தாழ்வாக பறந்துகொண்டிருக்கும் கூச்சலிடும் அன்னப்பறவைகளின் (whooper swans) எக்காளம் முழங்குவதைப் போன்ற பாட்டாக இருந்தது. 2.5 மீட்டருக்கு அதிகமான இடைநீளத்தைக் கொண்ட இறக்கைகளால் அவை மிதவலாக தண்ணீரின் மீதிறங்க வந்தபோது அவை வனப்பின் சிகரமாய் இருந்தன. அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடதுருவ கடல்கள் உறைந்து பனிக்கட்டியாகும்போது இந்த அன்னப்பறவைகள் ரஷ்யா, ஐஸ்லாந்து, வடக்கத்திய ஐரோப்பா போன்ற தேசங்களிலிருந்து தெற்கே பறந்துசெல்கின்றன. இங்கு அவற்றிற்கு—நீர்த்தாவரங்கள், மெல்லுடலிகள், விதைகள், பூச்சிகள் போன்ற—உணவு கிடைக்கிறது.
அவற்றின் அலகுகளின் அடிப்பகுதியில் உள்ள மஞ்சள்நிற முக்கோணப் பகுதிக்கு என்னுடைய பைனாக்குலரை ஃபோகஸ் செய்தபோது, எனக்கு முன் அந்த ஏரியில் இருந்த 29 அன்னப்பறவைகளும் திளைப்பில் ஆழ்த்தும் ஒரு காட்சியளித்தன. அவை நேரான கழுத்தின்மீது தலையை உயர்த்தி வைத்து பெருமிதத்துடன் பார்த்தன.
ஒரு காலத்தில் கூச்சலிடும் இந்தப் பறவை பிரிட்டனில் இனப்பெருக்கம் செய்யும் பறவையாக இருந்தது. ஆனால் 18-ம் நூற்றாண்டில் இங்கு பூண்டற்றுப்போயிற்று (extinct). இதுவரை அது தன்னைத்தானே இங்கு நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. அடைகாக்கும் பருவத்தில் கூச்சலிடும் பறவைகள் மிகவும் மூர்க்கமானவையாக இருக்கின்றன. ஐந்து முதல் ஏழு முட்டைகளையும் பின்னர் தங்களுடைய குஞ்சுகளையும் உடைய கூட்டை தாக்கவல்ல எதிரிகளிடமிருந்து கடுஞ்சீற்றத்துடன் பாதுகாக்கின்றன.
கூச்சலிடும் பறவைகளில் பெற்றோர் பறவைகள் உடைந்த குச்சிகளை வைத்து ஒரு கூட்டைக் கட்டுவதற்கு ஒன்றாக சேர்ந்து உழைக்கின்றன. இந்தக் கூட்டை ஒரு தீவின்மீதோ நேரடியாக தண்ணீர்மீதோ கட்டுகின்றன. தண்ணீர்மீது கட்டினால் ஒரு ஆளையும்கூட தாங்கக்கூடியதாக உள்ள ஒரு மிதக்கும் தீவைக் கட்டுகின்றன. அக்கூட்டில் மஞ்சள் நிறமுடைய முட்டைகள் 35 முதல் 42 நாட்கள்வரை அடைகாக்கப்படுகின்றன. சுமார் பத்து வாரங்கள் கழித்து குஞ்சுகள் பறந்துசெல்லுமுன் பெற்றோர் பறவைகள் இரண்டுமே குஞ்சுகளைக் கவனித்துக்கொள்கின்றன.
இடிந்து கிடந்த ரோமர்களின் வெர்கோவிக்கியும் கோட்டைக்குப் பின்னால் மகிமையான கருஞ்சிவப்பு வண்ணத்துடன் சூரியன் மறைகையில், அது ஏரியின்மீதும் அதிலுள்ள அன்னப்பறவைகள்மீதும் இளஞ்சிவப்பு நிறத்தில் பிரதிபலித்தது. உயிரினத்தின் அழகையும் இத்தகைய கம்பீரமான படைப்பின் அதிசயத்தையும் குறித்து யோசித்து நின்றேன்.