விக்டோரியா ஏரி—ஆப்பிரிக்காவின் உள்நாட்டு பெருங்கடல்
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இதுவரை யாருமே நுழைந்திராத ஆப்பிரிக்கா என்ற அந்தக் கருப்புக் கன்னியின் “இதயத்தில்” ஒரு “வெள்ளை மனிதர்” நுழைகிறார். அது 1858-ம் ஆண்டு. விரல்விட்டு எண்ணத்தக்க போர்ட்டர்களோடு அந்த மனிதர் பிரவேசிக்கிறார். சுகவீனமும் களைப்பும் அநிச்சயமும் பாரமடையச் செய்தபோதிலும், தன்னுடைய ஆட்கள் துவளாமல் முன்னேறிச் செல்ல தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறார். கண்டுபிடிக்க கடினமான பயனுள்ள ஒன்றைத் தேடி, அதாவது நைல் நதியின் பிறப்பிடத்தைத் தேடி ஜான் ஹன்னிங் ஸ்பீக் செல்கிறார்.
உள்நாட்டிலுள்ள பெரும் தண்ணீர் தடாகத்தைப் பற்றிய கதைகள் அவருடைய மனதில் புதுப்புனல் போல பொங்கிக்கொண்டிருந்தன. அராபிய அடிமை வியாபாரிகள் அந்தத் தண்ணீர் தடாகத்தை எப்படி அழைத்தனர் என்று உங்களுக்குத் தெரிந்துகொள்ள விருப்பமா? யூக்கரிவி. கதிரவனின் கதிர்களைக்கூட தரையில் கால் பதிக்கவிடாத அந்தப் புதர்களைக் கடந்துசெல்ல ஸ்பீக் போராடினார். 25 நாட்களுக்குப் பிறகு, கடைசியில் இந்தச் சிறிய குழுவினருக்கு அற்புதமான காட்சியை காணும் பாக்கியம் கிடைத்தது. அவர்களுக்கு முன், இறைவன் தந்த “கேமிராவுக்கு” எட்டிய தூரம் வரை, நன்னீர் கடல் பரந்து விரிந்திருந்தது. ஸ்பீக் பின்னர் இவ்வாறு எழுதினார்: “என் காலடியில் பரந்துகிடந்த அந்த ஏரிதான் ஆர்வத்தைத் தூண்டும் அந்த ஆற்றின் பிறப்பிடம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அதன் பிறப்பிடத்தைப் பற்றிய விஷயம் வெறும் அனுமானமாகவும் அநேகருக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவும் இருந்திருக்கிறது.” அப்பொழுது அரியணையில் வீற்றிருந்த இங்கிலாந்து அரசியை கௌரவிக்கும் வண்ணம் அவர் தனது கண்டுபிடிப்புக்கு விக்டோரியா என்ற பெயர் சூட்டினார்.
நைல் நதியின் பிறப்பிடம்
இன்றும் அதே பெயரை தாங்கிநிற்கும் அந்த ஏரி, உலகிலேயே மிகப் பெரிய இரண்டாவது நன்னீர் ஏரி என்ற புகழ் மாலையை சூடியிருக்கிறது. வட அமெரிக்காவிலுள்ள சுபீரியர் ஏரியே உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி. நிலநடுக்கோட்டு சூரிய ஒளியில் பளபளக்கும் பிரமாண்டமான கண்ணாடியைப் போன்ற தட்டையான பரப்புடைய விக்டோரியா ஏரி 69,484 சதுர கிலோமீட்டர் விரிந்து காணப்படுகிறது. நிலநடுக்கோட்டை அதன் வட முனையில் கடந்து, மகா பிளவு பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. டான்ஜானியாவையும் உகாந்தாவையும் தழுவினாற்போலவும் கென்யாவின் எல்லையைத் தொட்டாற்போலவும் அமைந்துள்ளது.
இந்த ஏரியின் முக்கிய நுழைவிடம் டான்ஜானியாவிலுள்ள கஜெரா நதி; இது ருவாண்டாவின் மலைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீரை சேமிக்கிறது. என்றபோதிலும், விக்டோரியா ஏரிக்குள் வந்துவிழும் பெரும்பாலான தண்ணீர் மழை நீரே. தண்ணீரை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள ஒரு பெரும் நிலப்பரப்பில் இது சேகரிக்கப்படுகிறது; இது 2,00,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பிற்கு சமம். இந்த ஏரியின் வடிகால் உகாந்தாவிலுள்ள ஜின்ஜாவில் இருக்கிறது. இந்த இடத்தில் தண்ணீர் வடக்கு நோக்கி பாய்ந்து வெண் நைல் நதியை பிறப்பிக்கிறது. விக்டோரியா ஏரி மாத்திரமே நைல் நதிக்கு ஊற்றுமூலம் அல்ல. இருந்தாலும் இது பெரும் நீர்த்தேக்கம் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் இதிலுள்ள நன்னீர் ஒருபோதும் வற்றாமல் எகிப்து வரையில் ஜீவன்களைக் காத்துவருகிறது.
ஏரி வாழ்க்கை
ஏரி பரப்பின் குறுக்கே இதமாக செல்கிறது ஒரு பாய்மரக் கப்பல். அதன் வெள்ளை பாய்மரம் வண்ணத்துப்பூச்சியின் ஒட்டிய சிறகைப் போல் காட்சியளிக்கிறது. சுற்றிலுமிருந்து வீசும் காற்றினால் தள்ளப்பட்டு, அந்தச் சின்னஞ்சிறு படகு ஏரியின் மத்திபத்திற்கு அடித்துச் செல்லப்படுகிறது. நடுப்பகலுக்குள் அக்காற்றின் திசை மாறி, எங்கிருந்து துவங்கியதோ அத்திசைக்கே அந்தப் பாய்மரத்தை மீண்டும் சேர்க்கிறது. இந்த வழக்கத்தையே ஏரிக்கரை மீனவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் செய்துவருகின்றனர்.
தவுட்டுநிற கூரைகளைக் கொண்ட கிராமங்களும் குக்கிராமங்களும் விக்டோரியாவின் தண்ணீரைச் சுற்றி காளான் குடைகளைப் போல் சுற்றிலும் நிற்கின்றன. நைல் நதிப்படுகையைச் சுற்றியுள்ள கிராமத்தாருக்கு மீன் ஒரு முக்கிய உணவு. தங்களுடைய அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அந்த ஏரியிடமே கையேந்தியுள்ளனர். கதிரவன் விழிப்பதற்கு முன்பே ஒரு மீனவன் கண் விழித்துவிடுகிறான். ஒழுகும் பாய்மரக் கப்பலிலுள்ள தண்ணீரை வெளியேற்றி, போர்வைபோல் பனிபடர்ந்த தண்ணீரை விலக்கிக்கொண்டு அந்த மனிதர்கள் செல்கின்றனர். “ஐலஸா” பாடியபடியே துடுப்பு வலித்து தங்களுடைய கிழிந்த பாய்மரத்தை ஆழ்பரப்பை நோக்கி செலுத்துகின்றனர். அந்தச் சிறிய படகு தொடுவானத்தில் மறையும்வரை கரையிலிருந்து பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விரைவிலேயே அவர்கள் திரும்பி வந்துவிடுகின்றனர், ஏனெனில் அவர்களுக்கும் தலைக்குமேல் வேலை இருக்கிறதே.
ஆழமற்ற இடங்களில் சிறுவர் சிறுமியர் தண்ணீரை வாரியடித்து விளையாடுகின்றனர்; அதே சமயம் பெண்கள் துணிமணிகள் துவைத்து, குடிநீர் எடுக்கின்றனர். கடைசியாக, ஏரிக்கரை வேலை நிறைவடைகிறது. தலையில் தண்ணீர் நிறைந்த மண்பானை, முதுகில் குழந்தை, துவைத்த துணிமூட்டைகளோ இருகரங்களில். இப்படியாக அந்த மங்கையர் மெதுவாக தங்கள் வீட்டை நோக்கி நடைபோடுகின்றனர். மக்காச்சோளமும் பீன்ஸும் பயிரிட்டுள்ள தங்களது சிறிய தோட்டங்களையும் சீராட்டிவிட்டு விறகு பொறுக்குகின்றனர், சாணமும் சாம்பலும் கலந்த கலவையைப் பயன்படுத்தி மண் வீடுகளை மெழுகுகின்றனர். ஏரிக் கரையோரத்தில் சற்று உள்ளே, சீசல் தாவரம் எனப்படும் ஒரு வகை தாழை நாரில் பலமான கயிற்றையும் அழகிய கூடைகளையும் பெண்கள் திறமையுடன் பின்னுகின்றனர். மரக்கலம் செய்ய ஆண்கள் சிலர் ஒரு பெரிய கட்டையை கோடரியில் செதுக்கும்போது வரும் ஓசை காற்றில் இசையாக எதிரொலிக்கிறது.
பொழுது சாயும் நேரத்தில், அந்தப் பெண்களின் கண்கள் மீண்டும் பெரிய நன்னீர் கடலை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. தொடுவானில் தெரியும் வெள்ளை பாய்மரக் கப்பலின் நுனி ஆண்களின் வரவுக்கு அச்சாரம் போடுகிறது. இதை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். தங்களுடைய புருஷரையும் அவர்கள் கொண்டுவரும் மீன்களையும் பார்க்க வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.
ஏரிக் கரையோரப் பகுதிகளிலும் தீவுகளிலும் வாழும் இந்தச் சிறிய சமுதாயத்தினருக்கென சமாதானத்தின் செய்தியைக் கொண்டுசெல்லும் ஆட்களுக்கு அமோக வரவேற்பு! ஒவ்வொரு கிராமத்துக்கும் குக்கிராமத்துக்கும் அவர்கள் நடந்து செல்கின்றனர்; அல்லாவிடில் மரக்கலத்தில் செல்கின்றனர். அங்குள்ள மக்கள் தாழ்மையாகவும் செவிமடுக்க ஆவலாயும் இருக்கின்றனர். அச்சடிக்கப்பட்ட பைபிள் பிரசுரங்களை நிலோடிக் மற்றும் பாண்டு என்ற தங்களுடைய சொந்த மொழிகளில் வாசிக்கையில் அவர்கள் பரவசமடைகின்றனர்.
நீர்வாழ் உயிரினங்கள்
விக்டோரியா ஏரி 400-க்கும் மேற்பட்ட வகையான மீன்களை போஷித்து காக்கிறது. அவற்றில் சில உலகில் வேறெங்கும் கிடையாது. மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு வகை மீன் சிசிலிட் என்றழைக்கப்படுகிறது. ஜூவாலை மீன், இளஞ்சிகப்பு மீன், கிஸுமு தவளை-வாய் போன்ற பட்டப்பெயர்கள் வர்ணஜாலமிக்க இச்சிறிய மீனுக்கு உண்டு. சில சிசிலிட்டுகள் தங்களுடைய குட்டிகளைப் பாதுகாக்க விநோதமான முறையை கையாளுகின்றன. ஆபத்து வருவதுபோல தோன்றுகையில், தாய் மீன் அதன் வாயை அகலமாய் திறக்கிறது, அப்போது அந்தச் சிறிய குட்டிகள் அதற்குள் வேகமாய் ஓடிப்போய் ஒளிந்துகொள்கின்றன. ஆபத்தான கட்டத்தைத் தாண்டியபின், அது தன்னுடைய குட்டியை வெளியில் கக்கிவிடுகிறது, பின்பு அவை தங்களுடைய ‘நார்மல்’ வேலையை செய்யத் துவங்குகின்றன.
அற்புதகரமான பல்வகை நீர்ப் பறவைகளுக்கு விக்டோரியா ஏரி ஒரு புகலிடம். கிரிப், நீர்க்காக்கைகள், அன்னிங்காக்கள் ஆகிய பறவைகள் தண்ணீருக்குள் டைவ் அடித்து, அவற்றின் கூரிய அலகால் மீனை திறமையுடன் கவ்வுகின்றன. கொக்குகளும் ஹெரோன் நாரைகளும் கரண்டிமூக்கு நாரைகளும் ஆழமற்ற நீர் நிலைகளில் வலம்வருகின்றன. எடுத்து வைத்த காலடியை அப்படியே பாதியில் நிறுத்திக்கொண்டு, அசையாமல் பொறுமையுடன் நிற்கின்றன; அவற்றின் எல்லைக்குள் வரும் அப்பாவி மீனை அலாக்காக கொத்துகின்றன. கூழைக்கடாக்கள் கூட்டங்கூட்டமாக எஞ்சின் இல்லாத ஆகாயவிமானம் போல தலைக்குமேல் வானில் மிதந்து வருகின்றன. தொகுதியாக நீச்சலடிக்கையில், மீன் கூட்டத்தை வளைத்துக்கொண்டு தங்களுடைய பெரிய கூடைபோன்ற அலகால் அப்படியே அள்ளிக்கொள்கின்றன. வலிமைமிகு சிறகுகள் கொண்ட மீன் கழுகு வானத்தில் ஆதிக்கம் செய்கிறது. தண்ணீருக்கு மேலே துருத்திக்கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கிளையில் அது அமர்ந்துகொள்கிறது. உஸ். . .ஸ் என்ற இரைச்சலுடன் காற்றை கிழித்துக்கொண்டு ஒரே பாய்ச்சலில் பாய்ந்துசென்று, ஏரியின் மேற்பரப்பிற்கு வரும் ஒரு மீனை லாவகமாக கவ்விக்கொள்கிறது. பிரகாசமான நிறமுடைய தூக்கணாங்குருவிகள் ஏரிக்கரை நெடுக இருக்கும் அடர்ந்த பப்பைரஸ் நாணல்களுக்கு மத்தியில் கூ(வீ)டு கட்டுகின்றன; வேலமர காட்டிலிருந்து வரும் ஹார்ன்பில் பறவைகளின் ‘ஒப்பாரி’ கரைக்கு அப்பால் வெகுதூரம் வரை கேட்கிறது.
காலையிலும் மாலையிலும், நிசப்தமான ஏரியிலிருந்து நீர் யானைகளின் உறுமல் எதிரொலிக்கிறது. நண்பகலில் கரையோரத்தில் உறங்குகின்றன. அப்போது, ஆழமற்ற நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் வழவழப்பான சாம்பல்நிற பாறைகள் போல் காட்சியளிக்கின்றன. ஆபத்தான நைல் நதி முதலையைப் பற்றி ஏரி மக்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். நடுங்கவைக்கும் இப்பிராணிகளில் பெரும்பாலானவை மனிதனால் அழிக்கப்பட்டுவிட்டபோதிலும், விடுபட்டுப்போன ஒருசில விக்டோரியா ஏரியின் தொலைதூர மூலைகளில் இன்னும் வசிக்கின்றன.
துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட தண்ணீர்
விக்டோரியாவை முதன்முதல் ஜான் ஸ்பீக் கண்ணோட்டமிட்ட நாளிலிருந்து ஆப்பிரிக்காவின் ஜனத்தொகை பெருகிவிட்டது. அந்த ஏரிக் கரைகளின் எல்லைக்குள்ளேயே, மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வயிற்றுப்பாட்டுக்கு இப்பொழுது அந்தத் தண்ணீரையே சார்ந்திருக்கின்றனர். கடந்தகாலங்களில், மீன்பிடிப்பதற்காக பாரம்பரிய முறைகளையே உள்ளூர் மீனவர்கள் நம்பியிருந்தனர். பின்னப்பட்ட மீன் கண்ணிகள், பப்பைரஸ் வலைகள், தூண்டில்கள், ஈட்டிகள் இவற்றை பயன்படுத்தியே தங்களுக்குத் தேவையானதை பிடித்துவந்தனர். இன்றோ, மிக நீளமான தூரத்திற்கு பரப்பி விடக்கூடிய கூம்பு வடிவ பெரிய வலைகளும் செங்குத்தாக தொங்கவிடப்படும் நைலான் வலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே ஆழ்நீரில் டன்கணக்கில் மீன்கள் அள்ளப்படுகின்றன. இவ்வாறு மிதமிஞ்சி மீன்பிடிப்பது ஏரியின் சுற்றுச்சூழலை அச்சுறுத்துகிறது.
அயல்நாட்டு மீன் வகைகளின் வரவு சமநிலையற்ற சூழலை ஏற்படுத்தியதால், உள்ளூர் மீன்பிடி தொழில் பாதிப்படைந்திருக்கிறது. போதாக்குறைக்கு, ஹையஸிந்த் என்ற நீர்த் தாவரமும் ஏரிக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. இது அழகிய ஊதாநிற பூவுடைய மிதக்கும் களையாகும். தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் களைத்தாவரம், ஏரிக் கரைகள் மற்றும் கடற்கழிகளின் பெரும் பரப்பை வளைத்துப்பிடித்து அடைத்துவிடும் அளவுக்கு பெருகிவருகிறது. சரக்கு கப்பல்கள் கடற்கரைகளுக்கும் நீரில் அமைக்கப்பட்டுள்ள தளங்களுக்கும் செல்ல முடியாதபடி பாதையை அடைத்துக்கொள்கின்றன. பயணிகளுடைய ஃபெர்ரி படகுகள் செல்வதையும் உள்ளூர் மீனவர்களுடைய மரக்கலங்கள் செல்வதையும் தடைசெய்கிறது. தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளும் ஏரிப் பரப்பிலுள்ள காடுகளை அழிப்பதும், கழிவுநீரை ஏரிக்குள் விடுவதும், தொழில் மயமாக்கலும் ஏரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
விக்டோரியா ஏரி தப்பிப் பிழைக்குமா? இந்தக் கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது, அதன் அநேக பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. ஆனால், விக்டோரியா ஏரி இயற்கையின் படைப்பு. ‘பூமியைக் கெடுக்கிறவர்களை’ கடவுளுடைய ராஜ்யம் அழித்தபிறகு அது தொடர்ந்து பூமியில் நிலைத்திருக்கத்தான் வேண்டும்.—வெளிப்படுத்துதல் 11:18.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
ஏரியை விழுங்கும் அந்த மீன்
அது எண்ணெய்போல் இருக்கிறது, தீராப்பசியுடையது, விரைவில் பன்மடங்காக பெருகுகிறது, ஆறு அடி நீளம் வளருகிறது. அது என்ன? லேட்ஸ் நிலோடிகஸ்! பொதுவாக நைல் பெர்ச் என அறியப்பட்டுள்ளது. இந்தப் பெரிய, தீராப்பசியுடைய மீன், 1950-களில் விக்டோரியா ஏரியில் விடப்பட்டது; இப்பொழுது அது சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக விளங்குகிறது. 40 வருடத்திற்குள் கிட்டத்தட்ட ஏரியின் 400 வகையான மீன்களை விழுங்கிவிட்டது. இந்தப் பேரழிவு, லட்சக்கணக்கான உள்ளூர் மக்களின் முக்கிய உணவை அச்சுறுத்துகிறது. ஏனெனில் அவர்கள் சிறிய வகையாகிய டிலப்பியா, சிசிலிட்கள், இன்னும் மற்ற உள்ளூர் மீன்களையே சார்ந்திருக்கின்றனர். இந்த ஏரியின் ஆரோக்கியத்திற்கும் இந்த சிறிய மீன்களே காரணம். இவற்றில் சில, ஷிஸ்ட்டோஸோமையாசிஸ் என்ற கொடிய வியாதியை உண்டாக்கும் நத்தை வகையை சாப்பிடுகின்றன. இதனால் அந்த நோய் அதிகம் வராமல் தடுக்கிறது. கட்டுக்கடங்காமல் வளர்ந்துவரும் கடற்பாசிகளையும் பிற நீர்த் தாவரங்களையும் மற்றவை சாப்பிடுகின்றன. தடுக்கப்படாத இந்த வளர்ச்சி, விஞ்சிய ஊட்டமடைதல் (eutrophication) என்றழைக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது தாவரங்கள் அழுகும்போது, நீரிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வதால் அப்பகுதியிலுள்ள நீரில் ஆக்ஸிஜன் பெருமளவு குறைகிறது. எனவே இவற்றை சுத்தம் செய்ய உள்ளூர் வகை மீன்களில் சில மாத்திரமே இருப்பதால், ஆக்ஸிஜன் இல்லாமல் “மரித்துவிட்ட பகுதிகள்” பெருகிவிட்டன, இன்னும் அதிகமான மீன்களையும் கொன்றுவருகின்றன. சாப்பிட மீன்கள் குறைவாகவே இருப்பதால், தீராப்பசியுடைய நைல் பெர்ச் புதிய உணவை நாடியிருக்கிறது—அதுதான் அதன் சொந்த குட்டி! ஏரியை விழுங்கிவரும் இந்த மீன் தன்னையே விழுங்கிவிடும் அபாயத்தில் இருக்கிறது!
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உகாந்தா
கென்யா
டான்ஜானியா
விக்டோரியா ஏரி
[பக்கம் 15-ன் படம்]
விக்டோரியா ஏரியின் கரைகளில் சாட்சி கொடுத்தல்
[பக்கம் 16-ன் படம்]
தூக்கணாங்குருவி
[பக்கம் 16-ன் படம்]
கூழைக்கடாக்கள்
[பக்கம் 17-ன் படம்]
வெண்ணிற உண்ணி கொக்கு
[பக்கம் 16, 17-ன் படம்]
நைல் முதலை
[பக்கம் 16, 17-ன் படம்]
நீர் யானையின்மீது அமர்ந்திருக்கும் ஹெரோன் நாரை