உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 7/22 பக். 14-17
  • மகா பிளவு பள்ளத்தாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகா பிளவு பள்ளத்தாக்கு
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிளவின் ஏரிகள்
  • அதிக வகைவகையான மிருகங்கள்
  • பிளவில் குடியிருக்கும் நாடோடிகள்
  • விக்டோரியா ஏரி—ஆப்பிரிக்காவின் உள்நாட்டு பெருங்கடல்
    விழித்தெழு!—1998
  • ஆராய்ச்சி எண் 1—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வலம்வருதல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • மரணப் பள்ளத்தாக்கில் உயிரினங்கள்
    விழித்தெழு!—2006
  • ‘நலமும் விசாலமுமான தேசம்’
    ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 7/22 பக். 14-17

மகா பிளவு பள்ளத்தாக்கு

கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

அது ஒரு மிகப்பெரிய பள்ளம், பூமியின் பரப்பிலுள்ள மிகப்பெரிய குழி. அது நிலவின் பரப்பிலிருந்து பார்த்தால்கூட தெரியும் அளவுக்கு அவ்வளவு பெரிது! வட இஸ்ரேலிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கிலிருந்து மொஸாம்பிக் வரை நீண்டுபரந்து கிடக்கும் இது—மலைக்க வைக்கும் 6,400 கிலோமீட்டர்—ஆப்பிரிக்க கண்டத்தின் நீளத்தில் பெரும் பகுதிவரை செல்கிறது.

1893-ல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த நிலவியல் நிபுணரான ஜே. டபிள்யூ. கிரிகொரி இந்த இயற்கை அதிசயத்தைப் பற்றிய முதல் விவரமான ஆராய்ச்சியை செய்தார். இந்த மிகப்பெரிய பள்ளம், தண்ணீர் மற்றும் காற்றின் அரிமானத்தினால் அல்ல, மாறாக “அருகிலுள்ள நிலம் நிலையாக இருக்க, பாறை அதிகமான அளவில் அமிழ்வதன் காரணமாக ஏற்படுகிறது” என்று கிரிகொரி கண்டுணர்ந்தார். (ஒப்பிடுக: சங்கீதம் 104:8, NW.) பூமியின் பரப்பிலுள்ள இந்த மிகப்பெரிய வெடிப்பை அவர் மகா பிளவு பள்ளத்தாக்கு என்று அழைத்தார்.

பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமியின் கீழ் ஏற்பட்ட பெரும் மாற்றங்களினால் உண்டான இந்த பள்ளத்தாக்கைப் பற்றி விஞ்ஞானிகள் இன்றும் முழுமையாக அறியாமலிருக்கிறார்கள். அப்படியிருந்தாலும், அதற்குள் பல்வேறு வகைகளைத் திரளாக காண்கையில், தன் மனதைப் பறிக்கொடுக்காதவரே இருக்க முடியாது. எதியோப்பியாவில் தொடங்கும் மகா பிளவு பள்ளத்தாக்கின் ஆப்பிரிக்க பகுதியில்தான், பூமியிலேயே மிகவும் அச்சுறுத்துகிற இடங்களில் ஒன்றான தாணகில் பள்ளம் (அஃபர் முக்கோணம் என்றும் அழைக்கப்படுவது) அமைந்திருக்கிறது. செங்கடலுக்கு எல்லையாக அமைந்துள்ள இந்த மிகப்பெரிய இயற்கை உப்பள பகுதியானது 1,50,000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஒரு பாலைவனம். இங்கு நிலமானது கடல் மட்டத்தைவிட 120 மீட்டர் தாழ்ந்து விட்டது. வெப்பநிலையானது கொதிக்கும் 54 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். அதிலிருந்து இந்த பிளவானது எதியோப்பிய மேட்டுநிலப்பகுதிக்கு—கடல்மட்டத்திற்கு மேல் 1,800 மீட்டர் உயரத்திலுள்ள ஒரு குளிர்ந்த பகுதிக்கு—4,300 மீட்டர் வரை உயர்ந்துநிற்கும் மலையுச்சிகளை உடைய பகுதிக்கு—உயர்கிறது. இந்த வளமான மேட்டுநிலத்தின் சாரல்களை அடர்ந்த மழைக் காடுகள் போர்வையாக மூடியிருக்கின்றன. இவை நீலநைல் போன்ற அநேக நதிகளுக்கு நீரின் வற்றாத ஊற்றுமூலமாக இருக்கின்றன. தென்புறமாக பிரயாணம் செய்து அதன் கிழக்குப் பகுதிக்கு வரும்போது, அந்த பிளவு வியத்தகு விதத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது.

மகா பிளவு பள்ளத்தாக்கு முழுவதும் அநேக தோற்றங்களையும் அளவுகளையும் கொண்ட எரிமலை சிகரங்களும் பிரிந்துசெல்லும் மற்ற சிறிய பிளவு பள்ளத்தாக்குகளும் உண்டு. மேற்குப் பகுதியின் பிளவில் எரிமலை அசைவுகளானது ருவாண்டா, ஜயர் மற்றும் உகாந்தாவின் எல்லைகளில் பரவியிருக்கும் ரூவன்சோரி மற்றும் விருங்கா மலைத் தொடர்களை ஏற்படுத்தியிருக்கிறது. சில சிகரங்கள் இன்றும் பூமியின் உட்புற வெப்பத்தினால், சில சமயங்களில், புகையையும் கொப்பளிக்கும் எரிமலைக் குழம்பையும் கக்குகின்றன. கிழக்குப் பகுதியிலுள்ள பிளவிலிருந்து அதிக தொலைவில் இல்லாத, புராதன எரிமலைச் சிகரங்களாகிய கிளிமஞ்சாரோ மற்றும் கென்யா மலைகள் அவ்வளவு உயரமாக இருப்பதால், நிலநடுக்கோட்டு சூரியனின் கொதிக்கும் உஷ்ணத்திலும் அவற்றின் உச்சிகளில் பனி படர்ந்திருக்கும். பூமிக்கு அடியில் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற பெரும் கொந்தளிப்புகளுக்கு அத்தாட்சியாக, பிளவு பள்ளத்தாக்கு முழுவதும், நீராவி மற்றும் கொதிக்கும் நீரை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பல சூடான நீருற்றுகள் அமைந்திருக்கின்றன.

தெற்கில், இன்னும் சற்று உள்ளே டான்ஜானியாவில், இந்த பள்ளத்தாக்கிற்கு எல்லையைபோல் அமைந்த ஒரு பெரிய புல் சமவெளி இருக்கிறது. மாசாய் மொழியில் அது “பெரிய திறந்த வெளி” என்று அர்த்தங்கொள்ளும் சரங்கெத் என்று அழைக்கப்படுகிறது. செரங்கெதி சமவெளி என்று பொதுவாக அறியப்பட்டிருக்கும் அதன் செழிப்பான புல்வெளி அநேக காட்டுமிருகங்களுக்கு உணவளிக்கிறது. இங்குதான் கண்ணைக் கவரும் நிகழச்சியாகிய ஆப்பிரிக்க மறிமானின் இடப்பெயர்ச்சி நடைபெறும்!

பிளவின் ஏரிகள்

ஆப்பிரிக்காவிலுள்ள மகா பிளவு பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் சோடியம் கார்பனேட்டால் மாசுபடுத்தப்பட்ட தொடர்ச்சியான பல ஏரிகள் இருக்கின்றன. இந்த வேதிப் பொருள்கள் எரிமலைகளுள்ள நீர்வரும் பரப்புகளிலிருந்து மழைத்தண்ணீர் மூலமாகவோ, பூமிக்கு அடியில் ஏற்படும் எரிமலை அதிர்வுகள் மூலமாகவோ ஏரிகளில் வந்து சேர்ந்துவிடுகின்றன. வட கென்யாவிலுள்ள டர்கனா ஏரி போன்ற சில ஏரிகள் குறைந்த காரத்தன்மையுடையவை. ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பரவியிருக்கும் பாலைவனப்புதர்களால் சூழப்பட்டிருக்கும் டர்கனா ஏரி, சில சமயங்களில் அழகிய பச்சை மாணிக்கக் கல் நிறத்தில் ஜொலிக்கிறது. அது உலகிலேயே அதிகமான முதலைக் கூட்டத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறது. கென்யாவிலுள்ள மகாடி மற்றும் டான்ஜானியாவிலுள்ள நாட்ரன் ஏரிகள், வெள்ளை சோடா படிவங்களாக ஆகும் அளவு அவ்வளவு உப்பு நிறைந்தவைகளாக இருக்கின்றன. காரணம் என்ன? உப்புகளை வெளியே எடுத்துச் செல்லும் வழியில்லாததால். அதிகமான தண்ணீர் ஆவியாகி போய்விடுவதால் அடர்த்தியான கனிமம் பின்தங்கிவிடுகிறது. பிளவு பள்ளத்தாக்கின் சோடா ஏரிகளின் கசப்பான தண்ணீர்களிலும் அவற்றை சுற்றிலும் மிகக் குறைவான மிருகங்களே வாழமுடியும். என்றாலும், கவனிக்கத்தக்க விதிவிலக்குகளானது இளம்பிங்க் நிற ஃபிளமிங்கோஸ். அவை அந்த காரச்சத்துள்ள தண்ணீர்களில் அதிகமாக வளரும் நுண்ணிய பாசிவகைகளை உணவாகத் தேடி ஒவ்வொரு சோடா ஏரியாக மாறிச் செல்லும். இங்கு ஃபிளமிங்கோஸ் லட்சக்கணக்கில் கூடும்போது, அவை ஒரு பிங்க் நிற உயிருள்ள கடலைப்போல் காட்சியளிக்கின்றன.

இந்த விஷத் தண்ணீரில் செழித்து வாழும் மற்றொரு பிராணி டிலாப்பியா க்ரஹாமி (tilapia grahami) என்ற சிறிய மீன். கார-எதிர்ப்புசத்துள்ள இந்த மீன் நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களுக்கு அருகில், கையால் தொடக்கூட முடியாதளவு சூடாக இருக்கும் தண்ணீர்களில், அநேகமாக காணப்படும். ஆனாலும், அங்கே இந்த சிறிய மீன், ஏரியின் பாசிகளை உண்டு, உயிர்வாழ்கிறது.

கிழக்குப் பகுதியிலுள்ள பிளவின் ஏரிகள் ஒருசிலவற்றில் மட்டுமே நன்னீர் காணப்படுகிறது. கென்யாவிலுள்ள நைவாஷ ஏரி அவற்றுள் ஒன்று. அது கடல் மட்டத்திற்கு மேல் 1,870 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அதன் தெள்ளத்தெளிந்த நீரில் வகைவகையான மீன்களும், குளிர்காயும் நீர்யானைக் கூட்டமும் தஞ்சம் புகுகின்றன. அதன் கரைகளெங்கும் பச்சை போர்வைபோல பரவியிருக்கும், 400-க்கும் அதிகமான வித்தியாசப்பட்ட வண்ணமிக்க பறவை வகைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் நாணற்புல்லும் மற்ற நீர்வாழ் தாவரங்களும் நிறைந்திருக்கின்றன. மஞ்சள்நிற வேல மரங்களையும் சூழ்ந்திருக்கும் மலைத்தொடர்களையும் கொண்ட பின்னணியில் அமைந்திருக்கும் நைவாஷ ஏரி, பார்ப்பதற்கு கொள்ளை கொள்ளும் அழகுடையது.

பிளவு பள்ளத்தாக்கு அமைப்பின் மத்தியில், உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியாகிய விக்டோரியா ஏரி அமைந்திருக்கிறது. அதன் தண்ணீர்கள் கென்யா, உகாந்தா, மற்றும் டான்ஜானியாவின் கரைகளை தொட்டுக்கொண்டும், நைல் நதியின் ஒரு ஊற்றாகவும் அது இருக்கிறது. இன்னும், தெற்கே டாங்கனீகா ஏரியின் தண்ணீர் 1,440 மீட்டர் ஆழம் வரை செல்கின்றன. இதுதான் உலகிலேயே இரண்டாவது ஆழமான ஏரி.

அதிக வகைவகையான மிருகங்கள்

கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு மிகவும் அதிக வகைவகையான வனவிலங்குகளைக் கொண்டிருக்கிறது. காட்டெருமைகள், ஒட்டகச்சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் யானைகள் ஆகியவை பிளவின் எல்லையின்றி பரந்துகிடக்கும் காட்டுப் பகுதியில் வலம் வரும் பெரிய பாலூட்டிகளில் ஒருசில மட்டுமே. வறண்ட நீரற்ற பகுதிகளில் வரிக்குதிரைகள், ஆப்பிரிக்க மான்கள், நெருப்புக் கோழிகள் ஆகியவை காணப்படலாம். புல்வெளியை கடந்தோடுகையில் கண்கவர் மறிமான்கள் காற்றில் உயரத் துள்ளி குதிக்கும். புள்ளியிட்ட பூனைகுடும்பத்தைச் சேர்ந்த சிறுத்தைப் புலி மற்றும் சீட்டா திறந்த சமவெளியில் வேட்டையாடும்; கெம்பீரமான சிங்கத்தின் உறுமல் அந்தி சாயும் நேரத்தில் அநேகமாக கேட்கப்படும். உயரமான விருங்கா மலைத்தொடரில், அரிய மலைக் கொரில்லா வாழ்கிறது. இன்னும் கீழாக பிளவின் தரையில் பாபூன் குரங்குக் கூட்டங்கள் பூச்சிகள், விதைகள் மற்றும் தேள்களைத் தேடி அந்தக் கரடுமுரடான பகுதியை மெதுவாக சுற்றிவரும். காற்றில் உயரப்பறக்கும் வலிமைமிக்க கழுகுகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் அவற்றின் பிரமாண்டமான சிறகுகளை விரித்து, தர்மல்கள் அல்லது வெப்பக்காற்று சுழற்சிகளில் மேலெழும்பி பயணம் செய்கின்றன. வண்ணமிக்க தூரக்குகள், பார்பட்டுகள், ஹார்ன் பில்கள், கிளிகள் ஆகியவை முட்செடிகள் நிறைந்த பள்ளமான பகுதியில் வசிக்கின்றன. விதவிதமான அநேக அளவுகளிலும், நிறங்களிலும் இருக்கும் பல்லிகள், தங்கள் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டதைப்போல வேகமாக அங்குமிங்கும் ஓடித்திரிந்து கொண்டிருக்கும்.

பிளவில் குடியிருக்கும் நாடோடிகள்

கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு, மேய்ப்பர்களும் நாடோடிகளுமான ஓரளவு பாலைவனம் சார்ந்த அநேக இனங்களின் வீடாகும். கம்பீரமான தோற்றத்தையுடைய இந்த மக்கள் ஆப்பிரிக்க நாடோடிகளுக்கே உரிய நீண்ட துள்ளலுடன் கூடிய நடையைக் கொண்டவர்கள். மிகக் குறைந்த மழைபெய்யும் இடங்களில், தங்கள் ஆடுமாடுகளுக்கு புதிய மேய்ச்சலிடம் தேடி முழு கிராமமும் மூட்டைகட்டிக்கொண்டு இடம்விட்டு இடம் மாறிச்செல்வர். பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமல் அவர்கள் எல்லை குறிக்கப்படாத நாடுகளைக் கடந்துசென்று, வெளியில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாதவர்களைப் போலக் காணப்படுகின்றனர். இந்த தொலைதூரமான இடங்களில் வாழ்க்கை மிகவும் மெதுவாக நகர்கிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைக் கொண்டு நேரம் கணிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் செல்வம் அவனுடைய ஒட்டகங்கள், வெள்ளாடுகள், மாடுகள், அல்லது செம்மறியாடுகளைக் கொண்டு அல்லது அவன் வீட்டிலிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.

வீடுகள் சாதாரணமாக, ஆனால் திறமையுள்ள விதத்தில் கட்டப்படுகின்றன. மரக்கிளைகள் வளைக்கப்பட்டு, ஒரு குவிமாடம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும்படி ஒன்றாக இணைத்து கட்டப்படுகின்றன. பிறகு அதன் வெளிப்புறம் ஒன்றாக பின்னப்பட்ட புல், மிருகத்தோல்கள் அல்லது சாணத்துடன் கலந்த மண்ணைக்கொண்டு மூடப்படுகிறது. அப்படிப்பட்ட வீடுகளில் ஒரு சமைக்கும் அடுப்பு, வீட்டுப்பிராணிகளுக்கான ஒரு சிறிய அடைப்பு, மிருகத் தோலினாலான ஒரு படுக்கை ஆகியவை இருக்கும். அடுப்படியிலிருந்து வரும் புகை வீடு முழுவதையும் நிரப்பி, ஈக்கள் மற்றும் கொசுக்கள் உள்ளே வருவதை தடுத்து விடுகிறது. அநேக சமயங்களில் ஒரு கிராமம் அல்லது குடும்பத் தொகுதி தங்கள் சிறிய குவிமாட குடிசைகளை ஒரு வட்டத்தில் அமைத்து, இரவு நேரங்களில் தங்கள் ஆடுமாடுகளை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றிலும் முட்செடிகளாலான உட்புகமுடியாத ஒரு வேலியை கட்டிக்கொள்கின்றனர்.

மகா பிளவு பள்ளத்தாக்கு முழுவதிலும், வெவ்வேறுபட்ட முகஜாடைகளும், மொழிகளும், தங்கள் இனம் மற்றும் இடத்தைச் சார்ந்து வித்தியாசப்படும் பழக்கவழக்கங்களும் உடைய பலதரப்பட்ட மக்கள் காணப்படுகின்றனர். மத நம்பிக்கைகளும் வெகுவாக வித்தியாசப்படுகின்றன. சிலர் இஸ்லாமையும் மற்றவர்கள் பெயர்க் கிறிஸ்தவத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அநேகர் மூட நம்பிக்கையுள்ளவர்கள்; தாங்கள் புரிந்துகொள்ள முடியாத எதையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று நம்பும் குணமுடையவர்கள். சமீப ஆண்டுகளில், கல்வி மற்றும் மருத்துவ உதவி கொடுக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் அநேக தொலைதூரமான இடங்கள் வெளிப்புற செல்வாக்குகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கம்பீரமான தோற்றத்தையுடைய நாடோடிகளை சந்திக்க யெகோவாவின் சாட்சிகளும் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமல்லவே. வாழ்க்கை நடத்துவதற்காக உலர்ந்த நிலத்தில் ஒருவருமே கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாத ஒரு காலத்தைப் பற்றிய பைபிளின் நம்பிக்கையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு சாட்சிகள் முயலுகின்றனர். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போல செழிக்கும்.” (ஏசாயா 35:1) அதுவரையில், சகலத்தையும் படைத்தவராகிய யெகோவா தேவனுடைய பல்வேறுபட்ட படைப்பு திறனுக்கு ஒரு நினைவுச் சின்னமாக மகா பிளவு பள்ளத்தாக்கு நின்றுகொண்டிருக்கும்.

[பக்கம் 14-ன் வரைப்படம்/படம்]

இஸ்ரேல்

எகிப்து

சவுதி அரேபியா

செங்கடல்

ஏமன்

எரிட்ரியா

ஏடன் வளைகுடா

ஜிபௌதி

எதியோபியா

சூடான்

சோமாலியா

கென்யா

உகாந்தா

ருவாண்டா

புருண்டி

ஜயர்

டான்ஜானியா

ஜாம்பியா

மலாவி

மொஸாம்பிக்

[பக்கம் 15-ன் படம்]

செரங்கெதி சமவெளியில் கண்ணைக்கவரும் நிகழ்ச்சி—ஆப்பிரிக்க மறிமானின் இடப்பெயர்ச்சி—நடைபெறும்

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

ஃபிளமிங்கோஸ் லட்சக்கணக்கில் கூடும்போது,

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

பிங்க் நிற உயிருள்ள கடலைப்போல காட்சியளிக்கும்

பிளவு பள்ளத்தாக்கின் மக்களோடு யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் செய்தியை பகிர்ந்து கொள்கின்றனர்

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

கீழே: © Index Stock Photography and John Dominis, 1989

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்