உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 8/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சரிவர காணச்செய்தல்
  • ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட கொடுமைக்காரர்கள்
  • கேஃபினும் கருத்தரித்தலும்
  • நச்சேற்றப்பட்ட உடல்கள் தூய்மைக்கெடுக்கப்பட்ட சுற்றுப்புறங்கள்
  • பரவலான மூளைக் கோளாறுகள்
  • மதுபான சம்பந்த அறுவை சிகிச்சை அபாயம்
  • யுத்தத்தில் பிள்ளைகள்
  • வெட்டுக்கிளிகளுக்கு எதிராக தோல்வியுறும் ஒரு போர்
  • நெடுநாள் வாழ்ந்த வானவியல் நிபுணர்கள்
  • ஆட்சிவர்க்கத்தினரின் மொழி
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ஹபிள் குழப்பம்—அதன் விளைவு எப்படி இருந்தது?
    விழித்தெழு!—1995
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 8/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

சரிவர காணச்செய்தல்

திக்குமுக்காடவைத்த பல தோல்விகளுக்குப்பின் ஐ.மா.-வின் விண்வெளி கழகமாகிய NASA, பெருந்தோல்வி ஒன்றை வெற்றியாக மாற்றியிருப்பதாக தோன்றுகிறது. அக்கழகத்தால் 1990-ல் ஓட்டப்பாதையில் விடப்பட்ட ஹபிள் விண்வெளி தொலைநோக்கி குறைபாடுள்ள ஒரு முதன்மைக் கண்ணாடியை உடையதாய் இருக்கிறது. இது அந்தத் தொலைநோக்கி சரிவர காணச்செய்வதைத் தடைசெய்தது. எனினும் டிசம்பர் 1993-ல் விண்வெளியில் நடக்கும் விண்வெளிவீரர்கள், குறைபாடுள்ள அந்தத் தொலைநோக்கியில் குறைபாடற்ற கண்ணாடியைப் பொருத்துவதிலும், வேலைசெய்யாத கருவிகளை மாற்றீடு செய்வதிலும் 30 மணி நேரங்களைச் செலவழித்தனர். அதன் பலன்கள்? “சில அம்சங்களில் ஹபிள் தொடக்கத்தில் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே வேலைசெய்கிறது,” என்று அறிவிக்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை. நியூஸ்வீக் பத்திரிகை சொல்லுகிறபடி, “8,500 மைல் [14,000 கிலோமீட்டர்] தூரத்தில் இருக்கும் ஒரு மின்மினிப் பூச்சியைக்கூட பார்க்கும் அளவுக்கு ஹபிள் இப்போது உருவங்களை அவ்வளவு தெளிவாகக் காட்டுகிறது.” இப்போது முன்னேற்றமடையச் செய்யப்பட்ட தொலைநோக்கியில் படங்களைப் பார்த்த பிறகு, ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தைச் சேர்ந்த டூக்கோ மாக்கெட்டோ, “என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், சபாஷ்,” என்று வியந்ததாக அறிக்கை செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட கொடுமைக்காரர்கள்

ஆஸ்திரேலியாவில் பள்ளிப் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே வன்முறையாக நடந்துகொள்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. அந்த நாட்டில் 20 சதவீத மாணாக்கர்கள் தாங்கள் பள்ளியில் பாதுகாப்பாக உணருகிறதில்லை என்று கூறுகின்றனர்; 7 பிள்ளைகளில் 1 தவறாமல் கொடுமைப்படுத்தப்படுகிறது. வம்புச் சண்டையிடும் பிள்ளைகள் தன்-மதிப்பு அற்றவர்களாய் இருந்து படிப்பில் மந்தமாக இருக்கும் போக்கை உடையவர்களாக இருக்கின்றனர். வன்முறை நிறைந்த திரைப்படங்களும் வீடியோக்களும் தகவல்தொடர்புத்துறை நிகழ்ச்சிகளும் நிச்சயமாகவே இளைஞர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதாக கண்டுபிடிப்புகள் கருத்துத் தெரிவிக்கின்றன. பையன்கள் படுமோசமான கொடுமைக்காரர்களாகவும் இளம்பெண்களும் பள்ளிப் பணியாளர்களும் அடிக்கடி அதற்கு ஆளாகுபவர்களாகவும் இருக்கின்றனர். ஆசிரிய ஆசிரியைகளும்கூட இந்தப் பள்ளிக் கொடுமைக்காரர்களின் கைகளில் அகப்பட்டு அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் அநேகர் பழிவாங்குதலுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் தொந்தரவுபிடித்த மாணவமாணவியர்களைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். மதிய உணவுவேளையில் பள்ளி மைதானங்களில் ரோந்து பணியை மேற்கொள்ளும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு இருவழி ரேடியோக்கள் (two-way radios) கொடுக்கப்படவேண்டும் என்று ஆசிரியர்களின் அமைப்பு ஒன்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கேஃபினும் கருத்தரித்தலும்

கருத்தரித்திருக்கும் பெண்கள் காபி, டீ, கொக்கோ, கோலா போன்ற பானங்களில் அடங்கியிருக்கும் கேஃபின் என்ற ரசாயனப் பொருளை உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ளும்படி, 1980-ல் ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (U.S. Food and Drug Administration) சிபாரிசு செய்தது. விலங்குகளைக்கொண்டு நடத்திய பரிசோதனைகளின் அடிப்படையிலேயே முக்கியமாக இந்தச் சிபாரிசு செய்யப்பட்டது. எனினும், அதற்குப்பிறகு, கருத்தரித்த பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கேஃபினை உபயோகிக்கும் விஷயத்தில் எச்சரிப்புடன் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது என்று மிகவும் திட்டவட்டமாக வெளிப்படுத்தின. நாளொன்றுக்கு 300 மில்லிகிராமுக்கும் அதிகமான கேஃபினை (கிட்டத்தட்ட மூன்று கப் காபி) உட்கொள்ளுவது கருவுக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்று பெரும்பாலான ஆராய்ச்சிகள் காட்டினபோதிலும், கருத்தரித்த பெண்களில் 75 சதவீதத்தினர் கேஃபினை உட்கொள்ளுகிறார்கள் என்று தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் சமீபத்தில் அறிக்கை செய்தது. ஆகிலும், அதைவிட குறைந்த அளவு கேஃபினும்—நாளொன்றுக்கு 163 மில்லிகிராம்கூட—சில பெண்களில் தானாக கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கருத்துத் தெரிவிக்கிறது. அந்த ஆராய்ச்சியை நடத்திய ஆராய்ச்சியாளர்கள்: “கருத்தரித்தலின்போது கேஃபின் உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ளுவதே நியாயமான ஒரு சிபாரிசாக இருக்கும்,” என்று குறிப்பிடுகின்றனர்.

நச்சேற்றப்பட்ட உடல்கள் தூய்மைக்கெடுக்கப்பட்ட சுற்றுப்புறங்கள்

கொக்கெயின் உபயோகிப்பதனால் ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,020 பேர் மரிக்கின்றனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. மனித உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் இந்தப் போதைப்பொருளின் விளைவுகள் நன்கு அறியப்பட்டதாக இருக்கின்றன. ஆனால் இந்தப் போதைப்பொருளை உற்பத்திசெய்வதும் பொலிவியா, பெரு, கொலம்பியா நாட்டு மழைக்காடுகள், ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் தூய்மையை மிகவும் கெடுக்கிறது என்று நேஷனல் ஜியாக்ரஃபிக் சமீபத்தில் அறிக்கைசெய்தது. “ஐ.மா. மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின்படி, உலகமுழுவதும் 1992-ல் சுமார் 308 டன் கொக்கெயின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. உற்பத்தியாகும் மொத்த அளவில் இது ஏதோவொரு சிறு பங்கேயாகும். இந்த அளவு கொக்கெயினை உற்பத்தி செய்ய 10 கோடியே 60 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெயும், 42 லட்சம் லிட்டர் கரைப்பான்களும், 11 லட்சம் லிட்டர் கந்தக அமிலமும், 70,000 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், 14,000 லிட்டர் அம்மோனியாவும் தேவைப்படுகின்றன. மொத்த உற்பத்தியின் பெரும்பகுதி ஆறுகளில் கொட்டப்படுகிறது. இது நீர்வாழ் உயிரிகளை அழித்துப்போட்டு, நீர்ப்பாசன நீரையும் குடிநீரையும் தூய்மையற்றதாக்குகிறது,” என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது.

பரவலான மூளைக் கோளாறுகள்

தி நியூ யார்க் டைம்ஸ் 1994-ன் தொடக்கத்தில் அறிவித்தது: “கிட்டத்தட்ட இரண்டு அமெரிக்கர்களில் ஒருவர்—48 சதவீதத்தினர்—தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவதொரு காலகட்டத்தில் மூளைக் கோளாறினால் அவதிப்பட்டிருக்கின்றனர்.” மிக சாதாரணமாக ஏற்பட்ட கோளாறு ஆழ்ந்த மனச்சோர்வு என்பதாகவும், 17 சதவீதத்தினர் வாழ்க்கையின் ஏதோவொரு காலகட்டத்தில் இதனால் துன்புற்றிருந்தனர் என்றும் சமூகவியல் நிபுணர் ஒருவரால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று கண்டுபிடித்தது. இந்த ஆராய்ச்சியில் 8,000-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நேர்முக சோதனைப் பேட்டி (face-to-face diagnostic interview) காணப்பட்டனர். பதினான்கு சதவீதத்தினர் ஒரு காலத்தில் சாராயத்தைச் சார்ந்து இருந்திருந்தனர். பெண்களில் 12 சதவீதத்தினர் பின்னதிர்ச்சி மன இறுக்க கோளாறினால் (post-traumatic stress disorder) துன்பப்பட்டிருந்தனர் என்பது அந்த ஆராய்ச்சியின் ஆச்சரியமான அம்சங்களில் ஒன்று என டைம்ஸ் குறிப்பிட்டது. அவர்களில் பாதிபேருக்கு அது “கற்பழிக்கப்பட்டதனாலோ பாலுறவு சம்பந்தமாக தாக்கப்பட்டதனாலோ ஏற்பட்டிருந்தது.” மனக் கோளாறுகளால் அவதிப்பட்ட அனைவரிலும் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே நிபுணர்களின் உதவியை நாடியிருக்கின்றனர். அந்த ஆராய்ச்சிக்குத் தலைவராயிருந்த சமூகவியல் நிபுணர், டாக்டர் ரானல்ட் C. கெஸ்லர் இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டார்: “வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், நாம் நினைத்துக்கொண்டிருந்ததைவிட அதிகப்படியான மனக் கோளாறுகள் இருந்துவருகின்றன. சந்தோஷமான செய்தி என்னவென்றால், உங்களால் நினைத்துப் பார்க்க முடிவதைவிட அதிகம்பேர் தானாகவே குணமடைந்துவருகின்றனர்.”

மதுபான சம்பந்த அறுவை சிகிச்சை அபாயம்

டேனிஷ் தலைமை அறுவை மருத்துவர் டாக்டர் ஃபின் ஹார்ட் சொல்கிறபடி, தினமும் ஐந்து பெக்குகளுக்கு (peg) கூடுதலாக மதுபானம் அருந்தும் நோயாளிகள் குறைவாகக் குடிக்கும் நோயாளிகளைவிட, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களினால் துன்பப்படுவதற்கான மூன்று மடங்கு அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர். ஜர்னல் ஆஃப் தி டேனிஷ் மெடிகல் அசோஸியேஷன் சமீபத்தில் அறிக்கைசெய்தபடி, மதுவைத் துர்ப்பிரயோகம் செய்வது கிட்டத்தட்ட எல்லா உறுப்பமைப்புகளின் மேலும் நச்சு விளைவைக் கொண்டிருக்கிறது. அது அதிக இரத்தப்போக்கையும் இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பல பிரச்சினைகளையும் விளைவிக்கிறது. அத்தகைய நிலைமைகள் வழக்கமாக டாக்டர்கள் நோயாளிகளை நீண்டநாள் மருத்துவமனையில் வைத்திருப்பதையும் அதிக இரத்தம் ஏற்றுவதையும் தேவையாகக் காண்பதற்கு வழிநடத்துகின்றன. தினமும் அதிகளவான மதுபானத்தை அருந்துபவர்கள் தங்களுடைய நோய்த்தடைகாப்பு அமைப்பையும் பலவீனப்படுத்திக்கொள்ளும் அபாயத்திற்குள்ளாகி, இதனால் தொற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். ஆனால், பல வாரங்களுக்குக் குடிக்காதிருந்தபிறகு நோய்த்தடைகாப்பு அமைப்பு நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. நோயாளிகள் ஏதாவது அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமுன் பல வாரங்களுக்கு குடிக்காமல் இருக்கும்படி டாக்டர் ஹார்ட் சிபாரிசு செய்கிறார்.

யுத்தத்தில் பிள்ளைகள்

கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் 15 லட்சம் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று தி ஸ்டேட் ஆஃப் தி உவர்ல்ட்ஸ் சில்ரன் 1994 என்ற ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி நிறுவன அறிக்கை ஒன்று கூறுகிறது. மற்றுமொரு 40 லட்சம் பிள்ளைகள் ஊனமாக்கப்பட்டு, முடமாக்கப்பட்டு, குருடாக்கப்பட்டு அல்லது மூளை பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். அகதிகளாயிருப்பவரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 50 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. பிள்ளைகள் ராணுவங்களிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். அநேக நாடுகளில் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டும், அட்டூழியங்களைப் பார்க்கவோ அவற்றில் பங்குகொள்ளவோ கட்டாயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். ஒரு பகுதியில் பெண்களைக் கற்பழிப்பது “யுத்தத்தின் முறைப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே ஆகிவிட்டிருக்கிறது.” “நாகரிகத்தின் படலம் ஒருபோதும் இவ்வளவு மெல்லியதாக தேய்ந்துபோனது கிடையாது என்று முடிவுக்கு வருவது சரியானதாகத் தோன்றுகிறது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வெட்டுக்கிளிகளுக்கு எதிராக தோல்வியுறும் ஒரு போர்

நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை, “வெட்டுக்கிளிகளுக்கு எதிரான போரில் ஐமா தோல்வியடைந்து வருகிறது,” என்று 1994-ன் தொடக்கத்தில் அறிக்கையிட்டது. நெதர்லாந்தில் சமீபத்தில் நடந்த வேளாண்மை விஞ்ஞானிகளின் ஒரு கூட்டத்தின்படி, 1980-ன் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் $400 மில்லியன் செலவுசெய்து வெட்டுக்கிளிகளுக்கு எதிராக புரிந்த போரானது அதிக சாதனை ஒன்றும் புரிந்துவிடவில்லை. அந்தக் கொள்ளைநோயை முடிவுக்குக் கொண்டுவந்தது எதுவென்றால், அந்தப் பூச்சிகளைக் கடலுக்குள் அடித்துச்சென்ற எதிர்பாராத ஒரு காற்றேயாகும். பாலைவனத்தில் எப்பொழுதாவது ஒருமுறை மழைபெய்து, ஆங்காங்கு பச்சைத் தாவரங்களை முளைக்கச்செய்யும்போது, வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்து திரளாக மாறுகின்றன. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் திரளாக ஆகுமுன் கொல்ல முயற்சிக்கிறது. அதற்கு இது பாலைவனத்தில் காணப்படும் பசும்பகுதிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களைச் சார்ந்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், அந்தச் செயற்கைக்கோள்கள் பசும்பகுதிகளில் பலவற்றைத் தவறவிட்டுவிடுகின்றன. நிலப்பகுதிகளில், உள்நாட்டுப் போர்களும் வளங்களின் குறைவும் மருந்துத் தெளிப்பு குழுக்கள், அறியப்பட்ட இனப்பெருக்க பகுதிகளைக்கூட சென்றெட்ட விடாமல் தடுத்திருக்கின்றன.

நெடுநாள் வாழ்ந்த வானவியல் நிபுணர்கள்

வானவியல் நிபுணர்கள் மற்ற ஜனங்களைவிட நீண்டகாலம் வாழ்கின்றனரா? 1715-க்கும் 1825-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த மக்களின் ஆயுசு நாட்களின்பேரிலான ஆராய்ச்சி ஒன்றைப்பற்றி, ஜெர்மானிய இயற்கை-அறிவியல் பத்திரிகை நாடூர்விசன்ஷாஃப்ட்லிகா ருன்ட்ஷாவ் அறிக்கைசெய்கிறது. இந்த வருடங்களின்போது, 25 வயதில் வானவியல் நிபுணர்களாக ஆன 67 ஆண்கள் சராசரி ஆயுசு காலமாக 71.6 வருடங்கள் வாழ்ந்தனர். இந்த ஆண்களில் சுமார் பாதிபேர் ஜெர்மானியர்களாக இருந்தனர். இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் 25 வயதுடையவராயிருந்த ஜெர்மானிய ஆண்கள் சராசரி ஆயுசு காலமாக 60.7 வருடங்களே வாழ்ந்தனர். வானவியல் நிபுணர்களுக்கு ஏன் இந்தப் போனஸ்? “அவர்களுடைய நீண்ட ஆயுசு எதிர்பார்ப்பு அவர்களுடைய வேலையோடு சம்பந்தப்பட்ட அமைதியோடும் சாந்தத்தோடும் ஏதோவொரு வழியில் தொடர்புடையதாய் இருக்க வாய்ப்பு இருக்கிறது,” என்பதாக அந்தப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அல்லது “ஒருவேளை வெறுமனே அண்டத்தில் இருக்கும் அற்புதங்களோடு தொடர்புகொண்டு மூழ்கியிருப்பதுதானே அவர்களுடைய சொந்த ஆரோக்கியத்தில் ஒரு நேர்நிலையான பாதிப்பைக் கொண்டிருக்கலாம்,” என அந்தப் பத்திரிகை கருதுகிறது.

ஆட்சிவர்க்கத்தினரின் மொழி

இத்தாலியில் அரசாங்க ஆவணங்கள் பலவற்றின் தொழில்நுட்ப மொழியும் ஆட்சி மொழியும் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமானதாக இருப்பதால், இது எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இத்தாலிய பொது நிர்வாகம் கருதுகிறது. பப்ளிக் ஃபங்ஷன்ஸ் துறை அமைச்சர் சாபீனோ காசேசெ சொல்கிறபடி, “இந்த நிர்வாகம் இனியும் தனது பிரஜைகளோடு தொடர்புகொள்ளாத, அதே மொழியைப் பேசாத ஒரு நிர்வாகமாக இருக்கிறது.” ஆகவே அரசாங்கப் பணியாளர்கள் சாதாரணமாக உபயோகிக்கப்படாத வார்த்தைகள் நிறைந்த “ஆட்சி மொழி” பேசுவதற்குப் பதிலாக, சாதாரண இத்தாலிய மொழி பேசத் தொடங்கவேண்டியிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு, “பொது நிர்வாகத்தில் எழுத்துத்தொடர்பு கொள்வதற்கான எழுத்துநடைக் குறியீடுகளை” அறிமுகப்படுத்தும்போது அறிவிக்கப்பட்டது. எளிதில் புரிந்துகொள்ளப்படும் 7,050 அடிப்படை வார்த்தைகளாலாகிய ஒரு சொற்தொகுதியைக் கொடுக்கும் அந்த அகராதி, சட்டங்கள், படிவங்கள், சுற்றறிக்கைகள், பொது அறிக்கைகள் போன்றவற்றை அடிக்கடி சாதாரண குடிமக்களுக்குப் புரிந்துகொள்ள முடியாததாக ஆக்கிய பழமையான மற்றும் கடினமான பல வார்த்தைகளை நீக்க முயற்சிக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்