வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
காஃபின் அடங்கிய பானங்களையும் உணவுப் பொருள்களையும் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டுமா?
காஃபின் அடங்கிய காஃபி, டீ, சாக்லெட், மாடே, சோடா ஆகியவற்றை கிறிஸ்தவர்கள் உபயோகிப்பதை பைபிள் தடைசெய்வதில்லை. எனினும், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும் நியமங்களை பைபிள் கொடுக்கிறது. காஃபின் அடங்கிய பானங்களையும் உணவுப் பொருள்களையும் சிலர் தவிர்ப்பதற்கான காரணத்தை நாம் முதலாவது சிந்திப்போம்.
மனதைத் தூண்டுகிற பண்பு காஃபினுக்கு இருப்பதால் அது மனநிலை மாற்றும் மருந்து எனக் கருதப்படுகிறது; இதுவே அதைப் பலரும் தவிர்ப்பதற்கான முக்கியக் காரணமாகும். காஃபினுக்கு ஒருவர் அடிமையாகவும் கூடும். மருந்தாளுநர்களுக்கான தரமான புத்தகம் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீண்ட காலத்திற்கு, அளவுக்கதிகமாக காஃபினை உட்கொள்வது, அதைத் தாக்குப்பிடிப்பதற்கு உடலைப் பழக்கப்படுத்திவிடலாம்; அதற்கு அடிமைப்படுவதற்கு, அது இல்லாமல் இருக்க முடியாது என்று எண்ணுமளவுக்கும் செய்துவிடலாம். காஃபின் உட்கொள்வதைத் திடீரென நிறுத்தினால் தலைவலி, எரிச்சல், கவலை, கோபம் தலைசுற்றல் போன்ற பின்விளைவுகள் ஏற்படலாம்.” டையக்னாஸ்டிக் அண்டு ஸ்டாட்டிஸ்டிக்கல் மேன்யுல் ஆஃப் மென்டல் டிஸார்டர்ஸ் என்ற புத்தகத்தில், பிற மருந்துகளை நிறுத்தும்போது வரும் பின்விளைவுகளின் அறிகுறிகளோடு காஃபினை நிறுத்தும்போது வரும் பின்விளைவின் அறிகுறிகளையும் பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை உட்கொள்வது சரியல்லவென கிறிஸ்தவர்களில் சிலர் நினைப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனெனில் அவர்கள் எந்தவொரு பழக்கத்திற்கும் அடிமையாவதைத் தவிர்க்கவும் சுயகட்டுப்பாடோடு இருக்கவும் விரும்புகிறார்கள்.—கலாத்தியர் 5:23.
தங்களுடைய உடல்நலத்தையோ பிறவாக் குழந்தையின் நலனையோ காஃபின் பாதிக்கலாமென சிலர் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் “முழு ஆத்துமாவோடு” கடவுளை நேசிக்க வேண்டும், எனவே, தங்கள் வாழ்நாளைக் குறைத்துப்போடும் எதிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. பிறரிடம் அன்புகூரும்படியும் அவர்கள் கட்டளை பெற்றிருப்பதால் பிறவாக் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தக் காரியத்தையும் தவிர்க்கிறார்கள்.—லூக்கா 10:25-27.
உடல்நலத்திற்கு இந்தளவு கவனம் செலுத்த வேண்டுமா? பல்வேறு வியாதிகளுக்கு காஃபின்தான் காரணமெனக் கூறப்பட்டாலும் எல்லாரும் அதை ஆமோதிப்பதில்லை. காஃபின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதெனவும்கூட சில ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை செய்கிறார்கள். 2006-ல் டைம் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “[காஃபினால்] சவ்வுப்பையில் (bladder) புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் பிற நோய்களும் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆரம்பகால ஆராய்ச்சிகள் குறிப்பிட்டன. அப்படிப்பட்ட பெரும்பாலான நோய்கள் வருவதில்லை என அடித்துச்சொல்வதோடு மட்டுமல்லாமல் அதனால் கிடைக்கும் குறிப்பிடத்தக்க பலன்களையும் வெகு சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. ஈரல் பாதிப்பு, பார்கின்சன் நோய், சர்க்கரை நோய், அல்ஸைமர் நோய், பித்தப்பையில் கற்கள், மனச்சோர்வு போன்றவை வராமலும், சில வகை புற்றுநோய்கள் வராமலும்கூட பாதுகாப்பதில் காஃபினுக்கு ஓரளவு பங்கிருப்பதாகத் தெரிகிறது.” காஃபினைப் பயன்படுத்துவது குறித்து ஒரு செய்திப் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “மிதமாக உட்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.”
காஃபின் சம்பந்தமான தற்போதைய தகவலைத் தான் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும், இதில் உட்பட்டுள்ளதாகத் தெரிகிற பைபிள் நியமங்களின் அடிப்படையிலும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தீர்மானத்தைச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, காஃபினை உட்கொள்வது தன் வயிற்றிலுள்ள குழந்தையைப் பாதிக்குமென கர்ப்பிணியாய் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நினைத்தால் அக்குழந்தை பிறக்கும்வரை அதைத் தவிர்க்க அவர் தீர்மானிக்கலாம். தவறாமல் உட்கொள்கிற காஃபினை நிறுத்தினால், கோபம் தலைகாட்டும் அல்லது சோர்வூட்டுமென ஒரு கிறிஸ்தவர் உணர்ந்தால், அதைத் தவிர்க்கும்படியோ ஒருவேளை தற்காலிகமாகத் தவிர்க்கும்படியோ ஆலோசனை கொடுக்கப்படலாம். (2 பேதுரு 1:5, 6) இத்தகைய தீர்மானத்தை மற்ற கிறிஸ்தவர்கள் மதிக்க வேண்டும், தங்கள் கருத்தைத் திணிக்க முயலக்கூடாது.
காஃபின் அடங்கிய பானங்களையும் உணவுப் பொருள்களையும் குறித்து நீங்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும், பவுல் கொடுத்த பின்வரும் புத்திமதியை மனதில் வையுங்கள்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.