மிஷனரிகள்—யார் மாதிரி வைக்கவேண்டும்?
இயேசு கிறிஸ்து சீஷராக்க தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளை கொடுப்பதற்கு முன்பாக, பிற மதங்கள் கலப்பான மிஷனரி நடவடிக்கையை ஏற்கெனவே செய்துவந்திருக்கின்றனர். சிலர் மற்றவர்களைவிட அதிகமாக செய்தனர். ஏனென்றால் அனைத்து மதங்களும், எல்லாரும் தழுவிய அணுகுமுறையை கொண்டில்லை; அதாவது, எல்லா மக்களுக்கும் சரிநிகராகப் பொருந்தும் என்று உணரக்கூடிய ஒரு செய்தியை எல்லாமே கற்றுக்கொடுப்பது கிடையாது.
எடுத்துக்காட்டாக, மதக் களஞ்சியம் (The Encyclopedia of Religion) சொல்கிற பிரகாரம், எல்லாருக்குமான அத்தகைய கண்ணோட்டமானது “தொன்மை மதங்கள் மற்றும் ஷின்டோவின் மதநம்பிக்கைகள், மேலும் கன்பூசிய, யூத மற்றும் பார்சிய மதங்களின் பல்வேறு பிரிவுகளில்” குறைவாக எடுத்துச்சொல்லப்படுகிறது. இத்தகைய மதங்கள் “மக்கள் இடம்பெயருவதாலும் ஒழுங்கமைக்கப்பட்ட மிஷனரி நடவடிக்கைகளைக் காட்டிலும் அடுத்திருக்கிற அயலார் படிப்படியாக உட்புகுத்துவதாலும் அதிகமாக” பரவுகின்றன.
“இந்துமதம் விசேஷமான, மிகவும் சிக்கல்வாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது,” என்று அந்தக் களஞ்சியம் மேலுமாக சொல்கிறது. “பாரம்பரியங்களை அநேக விஷயங்களில் பிரஸ்தாபிக்காமல் இருப்பதற்கு ஒப்பாக இருந்தாலும்,” இந்துக்களாக இராதவர்களால் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்படுவதன் மூலம் பிரஸ்தாபப்பட்டு வருவதால், அது மறுபட்சத்தில், “விறுவிறுப்பான மிஷனரி நடவடிக்கை செய்யப்பட்ட சமயங்களைக் கொண்டிருந்திருக்கிறது.”
“எல்லாருக்கும் மிக அதிகமாக பொருந்தும் செய்தியை பரப்புவதாகவும் மதம் தோன்றிய இடத்தைக் காட்டிலும் விஞ்சி மிகப் பரவலான மிஷனரி வைராக்கியத்தைக் காட்டக்கூடியதாகவும் உரிமைபாராட்டும் தற்போதைய மதங்கள்,” இஸ்லாமையும் புத்தமதத்தையும் உள்ளடக்குகின்றன என்று அண்டோவர் நியூட்டன் இறையியல் பள்ளியைச் சேர்ந்த மாக்ஸ் L. ஸ்டாக்ஹவுஸ் கூறுகிறார். என்றபோதிலும், இஸ்லாமிய மிஷனரிகள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மாதிரிகளாக சேவித்திருக்க முடியாது, ஏனென்றால், கிறிஸ்து சீஷராக்குவதற்கான கட்டளை கொடுத்தப் பிறகு, சுமார் 590 ஆண்டுகள் வரை இஸ்லாமிய சகாப்தம் தொடங்கவில்லை. மறுபட்சத்தில், புத்தமதம், கிறிஸ்தவ மதத்திற்கு முன்பாக ஸ்தாபனமானது; ஏறத்தாழ அதே காலப்பகுதியை அதற்குப் பிறகு வந்த இஸ்லாம் எடுத்தது.
பரந்த மனப்பான்மைக்கான மாதிரி
புத்தர் தன் சீடர்களிடம், “சந்நியாசிகளே, போங்கள், இந்த மதசித்தாந்த கொள்கையைப் பிரச்சாரப்படுத்துங்கள், . . . ஒரே திசையில் இருவராக போக வேண்டாம்!” என்று சொல்லி மிஷனரி இயக்கத்தைத் தொடங்கிவைத்ததாக பாரம்பரியம் உரிமைபாராட்டுகிறது. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் முன்பாக ஐரோப்பாவில் புத்தமத மிஷனரிகள் இருந்திருந்தாலும், பெரிய அளவிலான மிஷனரி இயக்கங்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கின்றன. அநேக மதங்களின் விஷயத்தில், பிரயாண வணிகர்கள், யாத்ரீகர்கள், மாணாக்கர்கள் என்று தனிப்பட்ட ஆட்களுடைய மட்டத்திலேயே மதமானது பரவினது. எடுத்துக்காட்டாக, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பாகங்களுக்கு, அது கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் வணிக மார்க்கங்கள் மூலம் சென்றெட்டியது.
நெதர்லாந்திலுள்ள லைடன் பல்கலையைச் சேர்ந்த ஏரிக் சூர்ஹையர் என்பவர் புத்தமதம் பரவினதற்கு பிரதானமாக துணைகோலிய மூன்று காரணிகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று, புத்தமதத்தின் “சகல மதங்களிடமான பரந்த மனப்பான்மை” ஆகும். இது “புத்தமதமல்லாத நம்பிக்கைகளை ஆவிக்குரிய மெய்ம்மையின் தொடக்க மற்றும் பகுதியான வெளிப்பாடுகளாக” எளிதில் ஏற்றுக்கொள்வதையும் மேலும் “அதன் தெய்வங்களுக்குள் புத்தமதமல்லாத தெய்வங்களை” புகுத்துவதையுங்கூட அனுமதித்தது.
இரண்டாம் காரணியானது புத்தமத மிஷனரிகள் “வீடில்லா நிலை” என்றறியப்பட்ட நிலைக்குள் பிரவேசித்தனர். அப்படியென்றால் எல்லா உலக வேற்றுமைகளையும் விடுத்தலாகும். ஜாதி முறையின் மட்டுகளிலிருந்து விடுபட்டவர்களாக, சடங்காச்சார தீட்டென்ற பயமில்லாமல் அந்நியர்களோடு அவர்களால் பழக முடியும். இவர்களுடைய மதவாத முக்கியத்துவத்தையே புத்தர் வெறுத்தொதுக்கினார்.
மூன்றாம் காரணியானது, புத்தமதத்தின் பரிசுத்த எழுத்துக்கள் எந்தக் குறிப்பிட்ட ஒரு மொழியோடும் சம்பந்தப்பட்டில்லை. எந்தவொரு மொழிக்கும் அவை எளிதில் மொழிபெயர்க்கப்படலாம். “விசேஷமாக சீனாவில், அதிக பிரபலம் வாய்ந்த அந்நியநாட்டு மிஷனரிகள் எல்லாமே மொழிபெயர்ப்பாளர்களாய் சுறுசுறுப்பாக இருந்தனர்,” என்று சூர்ஹையர் குறிப்பிடுகிறார். உண்மையில் பார்த்தால், பாலியோடும் சமஸ்கிருதத்தோடும் சேர்ந்தவாறு, புத்தமத இலக்கியத்திற்கு சீனமொழி மூன்றாம் பிரதான மொழியாகும் அளவுக்கு அவர்கள் மொழிபெயர்த்தார்கள்.
பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டு மத்திபத்தில், இந்திய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான அசோக அரசர் புத்தமதத்தைப் பிரபலப்படுத்துவதற்கு அதிகத்தைச் செய்து, அதன் மிஷனரிசார்ந்த அம்சங்களையும் வலுப்படுத்தினார். ஆனாலும், இந்த முன்-கிறிஸ்தவ சகாப்தத்தின்போது, புத்தமதமானது இந்தியாவிலும் இலங்கை என்று இன்று அழைக்கப்படும் நாட்டிலும் பிரதானமாக மையங்கொண்டிருந்தது. முடிவில், கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கிய பிற்பாடுதானே, புத்தமதமானது சீனா, இந்தோனீஷியா, ஈரான், ஜப்பான், கொரியா, மலேசியா, மயன்மார், வியட்நாம் இத்யாதி இடங்களில் பரவியது.
தெளிவாகவே, சீனாவுக்குச் சென்ற புத்தமத மிஷனரிகள் தங்களுடைய மதத்தை அதிக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக்க, சற்று மாற்றியமைப்பதில் எந்த ஆட்சேபணையும் காணவில்லை. “மூல புத்தமத எழுத்துக்களுக்குக் கூடுதலான விளக்கங்கள் அளிக்கப்பட்டன; ஆதரவளிக்கும் இலக்கியங்களும் புதுப் பாட்டுக்களும் புதுச் சட்டதிட்டங்களும் பிரசித்தியாயின; இவை திருத்தங்களைச் செய்து, உண்மையில் புத்தமத செய்தியிலுள்ள அம்சங்களை மாற்றியமைத்தன. இவ்வாறு அந்த நாட்டிலிருந்த பழங்குடி மக்களுடைய மதங்களையும் கன்ஃபூசிய மதத்திலும் டாவோ மதத்திலும் உள்ள அம்சங்களின் பாகமாகி சில வழிகளில் புத்துயிர் அளித்தன,” என்று மதக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.
சிலசமயங்களில், இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் காட்டப்போகும்வண்ணம், கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் தங்களுடைய காலத்திற்கு முன்வாழ்ந்த புத்தமத மிஷனரிகளைப் பின்பற்றியிருக்கின்றனர். பிற மொழிகளில் தங்களுடைய பரிசுத்த எழுத்துக்களை மொழிபெயர்த்திருக்கையில், சரித்திராசிரியராகிய உவில் டியூரண்ட் சொல்வதுபோல, அவர்கள் “புறமத நம்பிக்கையையும் சடங்காச்சாரத்தையும் தங்களுடைய மதப் பழக்கவழக்கங்களுக்குள் உறிஞ்சிக்கொள்ளும்படி” அடிக்கடி அனுமதித்திருக்கின்றனர், அல்லது ஊக்கமளிக்கவும் செய்திருக்கின்றனர்.
‘ஆதர்ச மிஷனரியை’ பின்பற்றுவது
யூதமதமானது கிறிஸ்தவ மதம் செய்த அதே கருத்தில் மிஷனரி நடவடிக்கையை ஊக்குவிக்கவில்லை, ஆனால் “ஓரளவு மதம் மாற்றம் செய்தது” என்று யூதமதமும் கிறிஸ்தவ மதத் துவக்கங்களும் (Judaism and Christian Beginnings) புத்தகம் விளக்குகிறது. எனினும், அந்தப் புத்தக ஆசிரியர், சாமுவெல் சான்ட்மெல் என்ன குறிப்பிடுகிறாரென்றால் “அடிக்கடியாவது, அவ்வப்போதாவது அதனிடமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.”
“யூதமத நூலில் பிதாவாகிய ஆபிரகாம் ஆதர்ச மிஷனரியாக அடிக்கடி விவரிக்கப்படுகிறார்,” என்று சான்ட்மெல் விளக்குகிறார். அவர் என்ன விவாதிக்கிறாரென்றால், “யூதருடைய பிரிவுகளில் ஒருசில பிரிவுகளிலாவது ஏதோவொருவிதமான எண்ணம் இருந்தில்லையென்றால் ஆபிரகாம் மிஷனரியாக இருக்கக்கூடிய” இந்த “கருத்து நிச்சயமாகவே எழும்பியிருக்காது. இந்த ஒருசில பிரிவுகள் மதம் மாறுபவர்களுக்காக சுறுசுறுப்பாய் தேடுவதையாவது அல்லது தாங்களாகவே மதமாற்றத்தை நாடுபவர்கள் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதையாவது ஆதரித்தன.”a
அத்தாட்சிப்படி, பொது சகாப்தத்திற்கு சற்று முன்னான இரண்டு நூற்றாண்டுகளின்போது, புறமதங்கள் அதன் கவர்ச்சியை இழக்கத் தொடங்குகையில், விசேஷமாக கிரேக்க மொழி பேசும் நாடுகளில் யூதரின் மிஷனரி நடவடிக்கை தீவிரமானது. இந்த நடவடிக்கை பொது சகாப்தத்தினூடே தொடர்ந்தது. ஆனால் பொ.ச. நான்காம் நூற்றாண்டின்போது தடை விதிக்கப்பட்டது. அப்போது ரோம சாம்ராஜ்யமானது தன்னுடைய அதிகாரப்பூர்வ மதமாக, செறிவற்ற வகையான கிறிஸ்தவத்தைத் தழுவியது.
மாதிரி வைப்பது
என்றபோதிலும், யூத மிஷனரிகள் வைத்த மாதிரியை கிறிஸ்தவ மிஷனரிகள் பின்பற்றும்படி சொல்லப்படவில்லை. உண்மையில், தம் நாளைய யூதப் பரிசேயர்களிடம் இயேசு சொன்னார்: “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது, அவனை உங்களைப்போலவே இரட்டிப்பாய் அழிவுக்கு கனிந்தவனாக்குகிறீர்கள்.” (மத்தேயு 23:15, பிலிப்ஸ்) ஆகவே அவர்கள் ஆபிரகாமை “ஆதர்ச மிஷனரி”யாக கருதியபோதிலும், தெளிவாகவே யெகோவா தேவன் மீது ஆபிரகாம் கொண்டிருந்த வகையான விசுவாசத்தையுடைய ஆட்களை யூத மிஷனரிகள் மதம் மாற வைக்கவில்லை.
கிறிஸ்தவ மிஷனரிகள் பின்பற்றவேண்டிய மாதிரியானது மிகச் சிறந்த, ஆதர்ச மிஷனரியான இயேசு கிறிஸ்துவால் வைக்கப்பட்ட பூரண முன்மாதிரியாகும். சீஷராக்குவதற்கான கட்டளையைப் பிறப்பிப்பதற்கு முன்பாகவே, இந்த வேலையை உட்படுத்தும் சர்வதேச மிஷனரி நடவடிக்கையைச் செய்ய தம்முடைய ஆரம்பகால சீஷர்களுக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். நூற்றாண்டுகளாக நீடித்திருக்கும் திட்டவேலையாக இது இருக்கவேண்டியிருந்ததால், இந்தக் கேள்வி உசிதமாயிருந்தது, அவர் அளித்த மாதிரியை கிறிஸ்துவின் சீஷர்கள் பற்றியிருப்பார்களா?
பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு முடிவை எட்டியபோது, அதற்கான பதில் இன்னும் தெளிவாயில்லை. இன்று, இந்த 20-ம் நூற்றாண்டு அதன் முடிவை எட்டுகையில் அவ்வாறு இல்லை. சுமார் 1,900 ஆண்டுகளாக, கிறிஸ்துவின் சீஷர்களாக உரிமைபாராட்டுபவர்களுடைய பங்கில் செய்யப்பட்டுவரும் கடந்தகால மிஷனரி நடவடிக்கை ஒரு திறந்த புத்தகமாக நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனாவை அதன் பிறப்பிடமாகக் கொண்டு கிறிஸ்தவம் உலகெங்கும் பரவியது. மேற்குப் பக்கமாக மாசிடோனியாவுக்குச் சென்றது ஒரு அடியாக இருந்தது. எமது அடுத்த கட்டுரையில் இதைப் பற்றி படித்துப்பாருங்கள்.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மெக்ஸிகோவில் பல நூற்றாண்டுகளாக என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். பின்வரும் பதிவைப் படிக்கையில், ‘அவர்கள் ஒளியின் ஊழியராக இருந்திருக்கிறார்களா, இருளின் ஊழியராக இருந்திருக்கிறார்களா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a யூத மதப்பழக்கத்திற்கான துணைநூல் (A Guide to Jewish Religious Practice) சொல்கிறது: “மதம் மாறிய அனைவருக்கும் ஆபிரகாமே பிதாவாக கருதப்படுகிறார் . . . மதம் மாறியவர்களை எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமுடைய புத்திரனாகவோ புதல்வியாகவோ அழைப்பது வழக்கமானது.”
[பக்கம் 7-ன் படம்]
இயேசு, கிறிஸ்தவ மிஷனரி வேலையை துவக்கிவைத்து, தம்முடைய சீஷர்களைப் பயிற்றுவித்து அவர்கள் பின்பற்றவேண்டிய மாதிரியை வைத்துப்போனார்