இளைஞர் கேட்கின்றனர்
மணமாகா தாய்மார்கள் நிலைமையை நன்கு சமாளிப்பது எப்படி?
லிண்டாவின் உணர்ச்சிகளில் அதிர்ச்சி, மறுப்பு, அச்சம், கோபம், நம்பிக்கையின்மை, மனக்கசப்பு ஆகிய இவையெல்லாம் கலந்திருந்தன.a அவள் எதற்காக பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாளோ அதையே சோதனை ஊர்ஜிதப்படுத்திற்று—அவள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தாள். திருமணமாகாத, பதினைந்தே வயது நிரம்பிய லிண்டா, ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் கருத்தரிக்கும் பத்து லட்சம் பருவவயதினரில் ஒருத்தியாகவே இருந்தாள். எனினும், பருவவயது கருத்தரிப்பு உலகளாவிய ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அது அனைத்து இனத்தவர் மத்தியிலும் அனைத்து சமூகப்பொருளாதார வகுப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது.
கருத்தரித்தல் மகிழ்ச்சியற்ற ஒரு குடும்ப வாழ்க்கையிலிருந்து தங்களை விடுதலையாக்கும் அல்லது காதலனோடு உள்ள ஒரு உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் பருவவயது பெண்களில் சிலர் கற்பனை செய்கின்றனர். மற்றவர்களோ குழந்தையை ஒரு அந்தஸ்து அடையாளமாக (status symbol) காண்கின்றனர்; அல்லது பேணுவதற்கும் நேசிப்பதற்கும் உள்ள தங்களுக்கே சொந்தமான ஒன்றாக காண்கின்றனர். ஆனாலும், ஒற்றைப் பெற்றோராய் இருப்பதன் கடினமான நிஜம், சீக்கிரமே அத்தகைய கற்பனைக் கனவுகளைக் கலைந்துபோகச் செய்கிறது. திருமணமாகா தாய் ஒருத்திக்குக் கடினமான, அடிக்கடி வேதனையான, தெரிவுகளைச் செய்யவேண்டிய கட்டாயநிலை ஏற்படுகிறது. பொருளாதாரப் பிரச்சினைகள், உணர்ச்சி சம்பந்தமான மனமுறிவு, தனிமை, துணையின்றி ஒரு குழந்தையை வளர்ப்பதால் வரும் அழுத்தங்கள் ஆகியவற்றோடு அவள் ஒருவேளை போராடிக்கொண்டும் இருக்கலாம். ஆகவே, நல்ல காரணத்தோடுதான் நம் படைப்பாளர், திருமணத்துக்குமுன் கொள்ளும் உடலுறவையும் உள்ளிட்ட “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்,” என்று கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.—1 கொரிந்தியர் 6:18; ஏசாயா 48:17.
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பாலின ஒழுக்கக்கேடு பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை. (1 கொரிந்தியர் 5:11-13) அப்படியிருந்தும்கூட, அவர்கள் மத்தியில் திருமணமாகா வாலிபத் தாய்மார்கள் இருக்கின்றனர். சிலர் கடவுளுடைய தராதரங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னமே கருத்தரித்துவிட்டனர். மற்றவர்களோ கிறிஸ்தவர்களாக வளர்க்கப்பட்டனர், ஆனால் ஒழுக்கக்கேட்டில் வீழ்ந்துவிட்டனர். சிலர், சபையால் சிட்சிக்கப்பட்டு, தங்களுடைய தவறுகளுக்காக மனஸ்தாபப்பட்டு அவற்றிலிருந்து மனந்திரும்புகின்றனர். அப்படிப்பட்ட இளைஞருக்குக் கடவுளுடைய வார்த்தை என்ன உதவியையும் வழிநடத்துதலையும் கொடுக்கிறது?b
என் குழந்தையின் தகப்பனை மணந்துகொள்ள வேண்டுமா?
கருக்கலைத்தல் கடவுளுடைய சட்டத்திற்கு எதிரானது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. (யாத்திராகமம் 20:13; ஒப்பிடவும்: யாத்திராகமம் 21:22, 23, NW; சங்கீதம் 139:14-16.) குழந்தை கருத்தரிக்கும்போது இருந்த வேண்டாவெறுப்பான சூழ்நிலைகளின் மத்தியிலும், தன்னுடைய குழந்தையைப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒற்றைத்தாய்க்கு இருக்கிறது என்றும் அது போதிக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) பெரும்பாலானோருடைய விஷயத்தில், தத்து எடுத்து வளர்க்கக் கொடுப்பதைவிட அந்தப் பெண்ணே அக்குழந்தையை வளர்ப்பதுதான் மிகச் சிறந்ததாய் இருக்கிறது.c
ஒரு குழந்தையைத் தானே வளர்ப்பதனால் ஏற்படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, அந்தக் குழந்தையின் தகப்பனையே திருமணம் செய்துகொள்வது ஞானமாக இருக்குமே என்று சில தாய்மார்கள் ஒருவேளை யோசிக்கலாம். ஆனால் பருவவயது தகப்பன்மார்கள் பலர் அநேகமாக அந்தக் குழந்தைக்கோ அதன் தாய்க்கோ கடமைப்பட்டவர்களாக உணர்வதே கிடையாது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான இளம் தகப்பன்மார்கள் இன்னும் பள்ளிக்குச் செல்லும் வயதினராகவும், வேலையில்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள். “திருமணப் பிணைப்புக்கு வெளியே உண்டாகும் பிறப்பைத் தடுப்பதற்காக மட்டும் செய்துகொள்ளப்படும் திருமணம் நிச்சயமாகவே நிலையற்றிருக்கக்கூடிய ஒரு திருமணம்,” என்று ஆராய்ச்சியாளர் ஒருவரால் அழைக்கப்படும் ஒன்றிற்குள் நுழைவது, மோசமான நிலைமையை படுமோசமானதாகத்தான் ஆக்கலாம். கிறிஸ்தவர்கள், “கர்த்தருக்கு உட்பட்டவனை மாத்திரமே” திருமணம் செய்துகொள்ளும்படி பைபிள் அறிவுரை கூறுகிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 7:39, NW) இதை உணர்ந்தவளாக (ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட) லிண்டா, தன்னுடைய குழந்தையின் 18-வயது தகப்பனைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்தாள். அவள் விவரிக்கிறாள்: “அவருக்குக் கடவுள் மீதோ பைபிள் மீதோ கொஞ்சம்கூட அக்கறை கிடையாது.”
அதற்காக அந்த இளம் தகப்பனை கொஞ்சம்கூட சட்டைசெய்யாமல் இருக்கவேண்டும் என்று இது அர்த்தப்படுத்தாது. அந்தச் சிறு குழந்தை பெரிய ஆளாக வளரும்போது, அவன் தன்னுடைய பிறப்புக்குக் காரணமாயிருந்த தகப்பனை அறிந்துகொள்ள விரும்பலாம். அல்லது அந்த இளம் தகப்பனோ அவனுடைய பெற்றோரோ, அந்தக் குழந்தையோடு தொடர்பு வைத்துக்கொள்வதற்கான அல்லது ஓரளவு பணவுதவி செய்வதற்கான ஏதோவொரு தார்மீகக் கடமையை உணரலாம். இருந்தபோதிலும், அவள் அந்த வாலிபனோடு மேன்மேலும் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பெண்ணின் பெற்றோர் விரும்பலாம். (1 தெசலோனிக்கேயர் 4:3) எனினும், சில தேசங்களில் உள்ள நீதிமன்றங்கள், குழந்தை பிறப்பதற்குக் காரணமாயிருந்த, திருமணமாகா தகப்பன்மார்களுக்குத் திருமணமான தகப்பன்மார்களுக்குக் கொடுப்பதைப் போன்ற அதே சட்ட உரிமைகளை அளித்திருக்கின்றன. ஆகவே திருமணமாகா அந்தத் தகப்பனிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும் ஒரு சுமுகமான உறவைக் காத்துக்கொள்வது பிள்ளையை வைத்துக்கொள்ளும் உரிமைக்கான கடும்போரைத் தவிர்க்கலாம்.d அந்த இளம் தகப்பனோடு ஓரளவு தொடர்பு அவசியமாக இருக்கலாம்; ஆனாலும் அது காதல் நிறைந்ததாகவோ ஒழுக்கநெறியை விட்டுக்கொடுக்கச் செய்வதாகவோ இருக்கக்கூடாது. பெரியோர்கள் மேற்பார்வையோடு தொடர்புகொள்வது பொதுவாகவே விரும்பத்தக்கது.
உதவியைப் பெறுதல்
சர்வைவிங் டீன் பிரக்னன்ஸி என்ற புத்தகம் சொல்லுகிறது: “உங்களுடைய குழந்தையை வைத்து, வளர்க்க நீங்கள் தீர்மானிக்கும்போது, திடீர் பெரியோர்களாக மாறுவதைத் தெரிந்துகொள்கிறீர்கள். . . . கவலையற்றிருந்த, ஒருசில கடமைகளையும் பொறுப்புக்களையும் மட்டுமே கொண்டிருந்த உங்களுடைய ஒரு சொந்த பாகத்தைப் பின்விட்டுச் செல்வதைத் தெரிந்துகொள்கிறீர்கள்.” இதன் காரணமாக பருவவயது பெற்றோருக்கு உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது. (பொது நூலகம் ஒன்றில் எளிதில் கிடைக்கக்கூடிய) பொருத்தமான மருத்துவப் பிரசுரங்களை வாசிப்பது, பயந்துபோய் இருக்கும் இளம் தாய் தனக்கிருக்கும் பிள்ளை-பராமரிப்புத் திறமைகளில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அதிகம் உதவலாம்.
முக்கியமாக பெற்றோருடைய ஆதரவு மதிப்புமிக்கதாய் இருக்கிறது. ஒருவருடைய தாய் பிள்ளை-வளர்ப்பு அனுபவத்தின் தகவல் சுரங்கமாக இருக்கலாம். அவர்களிடம் உதவி கேட்க தர்மசங்கடமாக இருக்கலாம் என்பது உண்மைதான். பெண்ணின் பெற்றோர் இன்னும் புண்பட்டும் கோபமாகவும் இருக்கலாம். அந்தக் கருத்தரித்தல் அவர்களுடைய சொந்த வாழ்க்கைப் பாணியில் எதிர்மாறான பாதிப்புகளைக் கொண்டு வந்துவிடுமோ என்றும்கூட பயப்படலாம். 17 வயது டான்னா ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள்: “என் பெற்றோர் என்னென்னவோ செய்யவேண்டுமென்றிருந்தனர். ஆகவே அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். நான் இந்தக் குழந்தையைப் பெற்றுக்கொண்டதனால் அவர்கள் இவற்றையெல்லாம் செய்யமுடியாது என்று இப்போது சொல்கின்றனர்.” காலப்போக்கில் பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய மனவேதனைகளை மேற்கொண்டு ஏதாவது வழியில் உதவ விருப்பப்பட்டு முன்வருகின்றனர். மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பிய ஒரு வாலிபப்பெண் தான் உண்டாக்கியிருக்கிற வேதனையை ஒப்புக்கொண்டு, உண்மையிலேயே மன்னிப்புக் கேட்பதன்மூலம் மன இறுக்கங்களைத் தளர்த்துவதற்கு அதிகத்தைச் செய்யலாம்.—லூக்கா 15:21-ஐ ஒப்பிடவும்.
பெண்ணின் பெற்றோர் உதவ மறுத்துவிட்டாலோ அல்லது அவள் தங்களோடு தொடர்ந்து தங்கியிருப்பதை அனுமதிக்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியே இல்லாமல் இருந்தாலோ என்ன செய்வது? அரசாங்க உதவி கிடைக்கும் தேசங்களில், திருமணமாகா தாய்க்கு—தொடக்கத்திலாவது—அதைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. கிறிஸ்தவர்கள் அத்தகைய ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதை பைபிள் அனுமதிக்கிறது. இருந்தாலும், மிகக் கடுமையான வரவுசெலவுத் திட்டத்தில் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கும். “பணம்தான் என்னுடைய மிகப் பெரிய பிரச்சினையாகத் தோன்றுகிறது. சாப்பாட்டுக்கும் துடைப்புத் துணிகளை வாங்கவும் மட்டும்தான் பணம் இருக்கும்,” என்று 17 வயது ஷேரன் சொல்கிறாள். காலம் செல்லச்செல்ல வெளியில் ஏதாவது ஒரு வேலையை செய்யமுடியலாம். தாய்மைத்துவம், வேலை, ஆவிக்குரிய நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் சமாளிக்க முயற்சிப்பதென்பது ஒன்றும் சுலபமல்ல. ஆனாலும் மற்றவர்கள் அவ்வாறு சமாளித்து வந்திருக்கின்றனர்.
சேர்ந்து வாழ்வதில் ஞானத்தோடும் பகுத்தறிவோடும் நடந்துகொள்ளுதல்
ஒருவருடைய பெற்றோர் ஒத்துக்கொள்கிறார்கள் என்றால், வெளியே சொந்தக்காலில் நின்று வாழ்க்கை நடத்த முயற்சிப்பதைவிட, வீட்டில் தங்கி வாழ்வது உண்மையான அனுகூலங்களைக் கொண்டுவரலாம். வீட்டில் வாழ்ந்தால் பொதுவாகவே அதிகம் செலவாகாது. அதுமட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பழக்கப்பட்ட சுற்றுப்புற சூழ்நிலைகள் உங்களுக்கு இடர்பாடுகளற்ற, பாதுகாப்பான ஒரு உணர்ச்சியைத் தரலாம். வீட்டில் தங்கியிருப்பதானது ஒரு பெண் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடர்வதையும் எளிதாக்கலாம். மேல்நிலைப் பள்ளிப்படிப்பை முடிப்பதன்மூலம், ஒரு பெண் வறுமையில் வாழ்வதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான தன் வாய்ப்புகளை அதிகரிக்கிறாள்.e
மூன்று தலைமுறைகள் ஒரு வீட்டில் தங்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அதனால் அழுத்தம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஒற்றைத்தாய் குறைந்த இடவசதியுள்ள அறையில் வாழ்வதை சமாளிக்கவேண்டி இருக்கலாம். குழந்தை கத்துவதால் தங்கள் தூக்கம் கலைக்கப்படுவதைப் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கலாம். குடும்பத்தின் அனுதின வழக்கமுறை ஒருவேளை பாதிக்கப்படலாம். ஆனால் நீதிமொழிகள் 24:3 இவ்வாறு சொல்லுகிறது: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, [பகுத்தறிவினாலே உறுதியாக, NW] நிலைநிறுத்தப்படும்.” ஆம், சம்பந்தப்பட்ட அனைவரும் தன்னலமற்ற அன்பையும் கரிசனையையும் காண்பித்தால், குடும்பத்திற்குள் ஏற்படும் உட்பூசல் குறைக்கப்படலாம்.
இளம் தாய் தன்னுடைய சொந்த பொறுப்புச் சுமையைச் சுமக்காமல் தப்பித்துக்கொள்ள முயன்று, தன்னுடைய அம்மாவே எல்லா வேலையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் பிரச்சினைகள் ஏற்படும். (கலாத்தியர் 6:5-ஐ ஒப்பிடவும்.) அல்லது நல்லெண்ணம் கொண்ட அவளுடைய அம்மா ஒருவேளை பேரக்குழந்தையைக் கவனித்துக்கொள்கிற முழுப்பொறுப்பையுமே தன் கையில் வைத்திருப்பதாகவும் இருக்கலாம். ஃபேசிங் டீனேஜ் பிரக்னன்ஸி என்ற புத்தகம் சொல்கிறது: “திருமணமாகாத ஒரு மகளின் குழந்தையை தங்களுடைய சொந்த குழந்தையாகக் கருதி வளர்க்கும் தாத்தாவும் பாட்டியம்மாவும் குடும்பத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தி, பெற்றோர் யார் என்ற குழப்பத்தை குழந்தைக்கு உண்டுபண்ணலாம்.” தாத்தா பாட்டியின் உதவியும் ஆதரவும் விலையேறப்பெற்றதாய் இருந்தாலும், வேதவசனங்கள் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றோருக்கே உரித்தாக்குகின்றன. (எபேசியர் 6:1, 4) ஆகவே மனம்திறந்து பேச்சுத்தொடர்பு கொள்ளுவதும் ஒத்துழைப்பதும் மனவருத்தங்களைத் தவிர்ப்பதில் அதிகத்தைச் செய்யலாம்.—நீதிமொழிகள் 15:22.
நீங்கள் தனியாக அல்ல
திருமணப் பிணைப்புக்கு வெளியே பிள்ளைப் பெறுவது கஷ்டமானது என்றாலும், அதுதானே ஒருவருடைய வாழ்க்கையின் முடிவு அல்ல. தங்களுடைய தவறுகளுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புபவர்களைக் கடவுள் ‘மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.’ (ஏசாயா 55:7) இதன்பேரில் தியானிப்பது சில சமயங்களில் தன்மீதுதானே ஏற்படும் வெறுப்புணர்ச்சிகளை மேற்கொள்ள ஒரு ஒற்றைத்தாய்க்கு உதவலாம். உற்சாகமிழந்து உணரும்போது, யெகோவாவின்மீது அவள் சார்ந்திருந்து ஜெபத்தில் அவரை அணுகலாம். தன்னுடைய பிள்ளையை வளர்ப்பதற்குக் கடவுளுடைய உதவிக்காகவும் அவள் மன்றாடலாம்.—நியாயாதிபதிகள் 13:8-ஐ ஒப்பிடவும்.
கிறிஸ்தவ சபையின்மூலமாகவும் யெகோவா ஆதரவளிக்கிறார். யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்கக்கேட்டை அனுமதிப்பதில்லை. என்றபோதிலும், கடவுளை சந்தோஷப்படுத்துவதற்காக மனஸ்தாபப்பட்டு தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்துகொள்பவர்களுக்கு அவர்கள் பரிவுகாட்டுகின்றனர். (ரோமர் 15:7; கொலோசெயர் 1:10) ஒற்றைப் பெற்றோருக்கு ஒருசில நடைமுறையான உதவியைச் செய்யும் விவேகமான வழிகளைக் காணும்படி சபையிலுள்ள சிலர் உந்துவிக்கப்படலாம். (ஒப்பிடவும்: உபாகமம் 24:17-20; யாக்கோபு 1:27.) குறைந்தபட்சம், அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும்போது நட்பைத் தந்து, செவிகொடுத்து கேட்கமுடியும். (நீதிமொழிகள் 17:17) அந்தப் பெற்றோர் ஒரு பெரிய பாவத்தைச் செய்தபோதிலும், குழந்தை மாசற்றதாகவே இருக்கிறது. ஆகவே தாய் சரியான ஒரு மனநிலையைக் காட்டுவாளாகில் சபை உதவி செய்யலாம்.
முதலாவது கடவுளுடைய சட்டங்களை மீறாதிருப்பது எவ்வளவு நல்லதாக இருக்கிறது! ஆனால் தவறு செய்தவர்கள் தங்களுடைய தாறுமாறான போக்கினிமித்தம் மனஸ்தாபப்பட்டு திருந்தி, அதற்கேற்றாற்போல் நடந்துகொண்டார்களேயானால், அவர்கள் தங்கள் நிலைமையை நன்கு சமாளிப்பதில் யெகோவாவின் உதவிக்காக நிச்சயமாக இருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்களில் சில மாற்றப்பட்டுள்ளன.
b இந்தக் கட்டுரை முறைதகாப் புணர்ச்சிக்கோ (incest) கற்பழிப்புக்கோ பலியானவர்களுக்காக எழுதப்பட்டதல்ல. இருப்பினும், இதில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவுபவையாக இருக்கலாம்.
c எமது மே 8, 1990, இதழில் (ஆங்கிலம்) “இளைஞர் கேட்கின்றனர் . . . பருவவயது கருத்தரித்தல்—ஒரு பெண் என்ன செய்யவேண்டும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
d எமது அக்டோபர் 22, 1988 இதழில் (ஆங்கிலம்) “பிள்ளையை எடுத்துக்கொள்வது யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
e கிராக்கியுள்ள வேலைத் திறமைகளை கற்றுக் கொடுப்பதற்கான அரசாங்க திட்டங்களைச் சிலர் அனுகூலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தாய் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கையில் பிள்ளையைப் பள்ளியிலேயே வைத்துப் பார்த்துக்கொள்வதற்கான திட்டங்களும்கூட இருக்கலாம்.
[பக்கம் 23-ன் படம்]
திருமணமாகாத ஒரு தாய்க்கு உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது