குழந்தைகளுக்குத் தேவையானதை கொடுத்தல்
அப்படியானால், குட்டிப் பிள்ளைகளுக்கு நிறைய கவனிப்பு தேவை, ஆனால் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தெளிவு. இன்றைய இளைஞர்களுடைய நிலைமை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. “முன்னொருபோதும் நமது இளைஞர் சமுதாயம் பெற்றோரிடமிருந்து இந்தளவுக்குப் பிரிந்திருக்கவுமில்லை, இந்தளவுக்கு நடைமுறை அனுபவமோ ஞானமோ பெறாமலும் இருக்கவில்லை” என ஆய்வாளர் ஒருவர் புலம்புவதாக கனடாவிலுள்ள டோரான்டோவின் த குளோப் அண்டு மெயில் தினசரியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
என்ன தவறு நேர்ந்துவிட்டது? பச்சிளம் குழந்தைகளுக்கு கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணரத் தவறியதே இதற்கு ஓரளவு காரணமாக இருக்க முடியுமா? “சிறந்த பெற்றோராக இருப்பதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை நாம் அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, நமது குழந்தைச் செல்வங்களுடன் நேரம் செலவிடுவது அநேக பலன்களை அள்ளி வழங்கும் என்பதையும் நாம் உணர வேண்டும்” என பிறந்த குழந்தைகளை கவனிப்பது எப்படி என்பதை குறைந்த வருவாய் பெறும் பெண்களுக்கு கற்றுத் தரும் உளவியலாளர் ஒருவர் கூறுகிறார்.
பிஞ்சுக் குழந்தைகளுக்கும்கூட தவறாமல் போதிப்பது அவசியம். எப்பொழுதாவது சில நிமிடங்கள் அல்ல, ஆனால் தவறாமல்—ஆம் நாள் முழுவதும்—போதிப்பது அவசியம். குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுடைய ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
தயார்படுத்துவதன் அவசியம்
பெற்றோர்கள் தங்களுடைய முக்கியமான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, புதிய குழந்தையின் வரவுக்காக தயார் செய்ய வேண்டும். முன்னரே திட்டமிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறிய ஒரு நியமத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளலாம். ‘உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்தால், . . . முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?’ என அவர் கூறினார். (லூக்கா 14:28-30) ஒரு கட்டடத்தைக் கட்டுவதைப் பார்க்கிலும் மிக மிக சிக்கலானது குழந்தை வளர்ப்பு—இது 20 ஆண்டு திட்டம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆகவே, ஒரு குழந்தையை வெற்றிகரமாக வளர்ப்பதற்கு ஒரு ‘புளூபிரின்ட்,’ அதாவது ஒரு திட்டம் தேவை.
முதலாவதாக, பெற்றோர்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்ற மனோ ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தங்களை தயார்படுத்துவது முக்கியம். குழந்தைகளை விரும்பாத தாய்மார்களுடைய பிள்ளைகளைவிட ஒரு குழந்தை பிறக்கப் போவதை எதிர்பார்த்திருந்த தாய்மார்களுடைய பிள்ளைகள்—உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும்—மிகவும் ஆரோக்கியமாய் இருந்தார்கள் என்பதை 2,000 கர்ப்பிணிகளை வைத்து ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டியது. மறுபட்சத்தில், கணவனுடன் சந்தோஷமாக வாழும் ஒரு பெண்ணைவிட கொந்தளிப்புமிக்க குடும்ப வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண் உணர்ச்சி ரீதியிலோ உடல் ரீதியிலோ பாதிக்கப்பட்ட பிள்ளையை பெற்றெடுக்கும் ஆபத்து 237 சதவீதம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் கணக்கிட்டார்.
அப்படியானால், பிள்ளை வெற்றிகரமாய் வளருவதில் தகப்பன்மார் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. டாக்டர் தாமஸ் வெர்னி இவ்வாறு குறிப்பிட்டார்: “கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை துஷ்பிரயோகம் செய்கிற அல்லது அலட்சியம் செய்கிற ஒரு தகப்பன்தான், உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் குழந்தைக்கு இருக்கும் மிகப் பெரிய ஆபத்து.” உண்மையில், ஒரு பிள்ளைக்கு கிடைக்கும் மிகச் சிறந்த பரிசு, அதன் தாயை நேசிக்கும் தகப்பனே என அடிக்கடி சொல்லப்படுகிறது.
கவலை, மனஅழுத்தம் ஆகியவற்றோடு தொடர்புடைய ஹார்மோன்கள் தாயின் இரத்தக் குழாய்க்குள் சுரக்கும்போது அவை கருவை பாதிக்கும். என்றபோதிலும், கர்ப்ப காலத்தில் எப்பொழுதாவது ஏற்படும் எதிர்மறையான உணர்ச்சிகளோ மனஅழுத்தங்களோ பாதிக்காது, ஆனால் தீவிரமான அல்லது நீண்ட கால கவலையே பாதிக்கும் என அத்தாட்சி காட்டுகிறது. பிறவாத குழந்தையைப் பற்றி அந்தக் கர்ப்பிணி எப்படி உணருகிறாள் என்பதே முக்கிய காரணியாக விளங்குகிறது.a
நீங்கள் கர்ப்பமாக இருக்கையில் உங்களுடைய கணவர் உங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் அல்லது தாய்மையடைவதில் உங்களுக்கு விருப்பமில்லாதிருந்தால் என்ன செய்வது? கர்ப்பம் தரித்திருப்பதைக் குறித்து மனச்சோர்வடையும் சில சூழ்நிலைமைகள் ஒரு பெண்ணிற்கு உண்டாவது சகஜம்தான். என்றாலும், உங்களுடைய பிள்ளை எந்தப் பாவமும் செய்யவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படியானால், மோசமான சூழ்நிலைமைகள் மத்தியிலும் எப்படி ரம்மியமான மனநிலையைக் காத்துக்கொள்ளலாம்?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் ஞானமான அறிவுரை லட்சக்கணக்கானோருக்கு கைகொடுத்திருக்கிறது. அது இவ்வாறு கூறுகிறது: “உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” இந்த வார்த்தைகளை கடைப்பிடிப்பது, ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதிருங்கள்’ என்ற அறிவுரையைப் பின்பற்ற எந்தளவு உதவுகிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். (பிலிப்பியர் 4:6, 7) உங்களை கவனித்துக்கொள்ளும் படைப்பாளருடைய அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.—1 பேதுரு 5:7.
அசாதாரணமான அனுபவம் அல்ல
குழந்தை பிறந்த பின் சில வாரங்களுக்கு, இளம் தாய்மார்கள் சிலருக்கு இனம்புரியாத கவலையும் சோர்வும் ஏற்படுகிறது. பிள்ளையைப் பெற்றெடுப்பதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்த தாய்மார்களும்கூட திடீர்திடீரென உணர்ச்சிவயப்படலாம், சிடுசிடுப்பாக இருக்கலாம். இவை சகஜம்தான். குழந்தை பிறந்தபின் பெண்களுடைய ஹார்மோன் அளவுகளில் பயங்கர மாற்றங்கள் உண்டாவதே இதற்கு காரணம். குழந்தையை பெற்றெடுத்ததால் செய்ய வேண்டிய காரியங்கள்—நேரங்காலம் இல்லாமல், அழும் குழந்தைக்குப் பால்கொடுப்பது, ஈரத் துணிகளை மாற்றுவது, குழந்தையை கவனித்துக்கொள்வது போன்ற காரியங்கள்—அந்தத் தாயை திணறடிப்பதும் சகஜம்தான்.
குழந்தை தன்னை தொல்லைப்படுத்துவதற்கென்றே அழுகிறது என ஒரு தாய் நினைத்தாள். “குழந்தை வளர்ப்பதால் வரும் மனக்கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள் யாருமே கிடையாது” என ஜப்பானிலுள்ள குழந்தை வளர்ப்பு நிபுணர் ஒருவர் கூறியதில் ஆச்சரியமில்லை. “ஒரு தாய் தன்னை ஒருபோதும் தனிமைப்படுத்திக் கொள்ளாதிருப்பதே அவளுக்கு மிகவும் முக்கியம்” என இந்த நிபுணர் கூறுகிறார்.
சிலசமயங்களில் தாய் மனச்சோர்வடைந்தாலும்கூட, தனக்கு உண்டாகும் உணர்ச்சி மாற்றங்களால் குழந்தை பாதிக்கப்படாதவாறு பாதுகாத்துக்கொள்ள முடியும். டைம் பத்திரிகை இவ்வாறு அறிவித்தது: “மனச்சோர்வை சமாளித்து வெற்றி பெற முடிந்த தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் வாரிவழங்குகிறார்கள், அதனுடன் விளையாடி மகிழ்கிறார்கள், அதனால் குழந்தைகளுடைய மூளை அதிக குதூகலமாக செயல்பட உதவுகிறார்கள்.”b
தகப்பன் எப்படி உதவலாம்
பெரும்பாலும் குழந்தையின் தகப்பன் தேவையான உதவியையும் ஆதரவையும் கொடுப்பதற்கு சிறந்த நிலையில் இருக்கிறார். நடு இராத்திரியில் குழந்தை அழும்போது, தாயை தூங்கவிடுவதற்காக குழந்தையின் தேவைகளை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தகப்பனே கவனித்துக் கொள்ளலாம். “குடும்ப வாழ்க்கையில் கணவன்மார்கள் எப்பொழுதும் தங்களுடைய மனைவிமார்களை கரிசனையோடு நடத்த வேண்டும்” என பைபிள் கூறுகிறது.—1 பேதுரு 3:7, த ஜெருசலம் பைபிள்.
கணவன்மார்கள் பின்பற்றுவதற்கு சிறந்த முன்மாதிரியை இயேசு கிறிஸ்து வைத்திருக்கிறார். தம்மை பின்பற்றுகிறவர்களுக்காக அவர் தமது ஜீவனையே கொடுத்தார். (எபேசியர் 5:28-30; 1 பேதுரு 2:21-24) ஆகவே, குழந்தையை வளர்ப்பதற்காக சொந்த சௌகரியங்களை தியாகம் செய்ய முன்வருகிற தகப்பன்மார்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்கள் இருவருமே சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய கூட்டு முயற்சியாகும்.
கூட்டு முயற்சி
“எங்களுடைய மகளை எப்படி வளர்ப்பது என்பதை கணவனும் மனைவியுமாக நாங்கள் ஒன்றுகூடி கலந்து பேசினோம்” என இரண்டு வயது பெண்பிள்ளையின் தகப்பனாகிய யோயீசீரோ சொல்கிறார். “ஏதாவது பிரச்சினை எழும்பும் போதெல்லாம் அதை எப்படி சரிசெய்யலாம் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம்.” தனது மனைவிக்கு ஓய்வு தேவை என்பதை யோயீசீரோ உணருகிறார், ஏதாவது வாங்குவதற்காக கடைக்குப் போகும்போதும் தனது மகளை அவரே அடிக்கடி எடுத்துச் செல்கிறார்.
ஆரம்ப காலங்களில், குடும்பங்கள் பொதுவாக பெரியதாகவும் ஐக்கியமாகவும் இணைந்து இருந்தபோது, பெற்றோர்களுக்கு பெரிய பிள்ளைகளுடைய உதவி இருந்தது, குழந்தையை வளர்ப்பதில் உறவினர்களும் கைகொடுத்தார்கள். ஆகவே ஜப்பானில் காவஸாகியில் குழந்தை வளர்ப்பு ஆதரவு மையத்தில் பணிபுரியும் ஒருவர் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமில்லை: “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த விஷயத்தைப் பற்றி தாய்மார்கள் மற்றவர்களிடம் பேசும்போது பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல நிம்மதி கிடைக்கிறது. கொஞ்ச உதவியுடனேயே, அநேக தாய்மார்களால் கஷ்டங்களை சமாளிக்க முடிந்திருக்கிறது.”
“பெற்றோர்கள் தங்களுடைய கவலையையும் பயத்தையும் பற்றி மனந்திறந்து பேசுவதற்கு ஆதரவான ஆட்கள் தேவை” என பெற்றோர்கள் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை கூறுகிறது. இத்தகைய ஆட்களை எங்கே கண்டுபிடிப்பது? தங்களுடைய சொந்த பெற்றோர்கள் அல்லது அத்தைமார்/மாமாமார் சொல்வதை பரந்த மனதுடன் செவிகொடுத்துக் கேட்கிறவர்களாய் இருப்பதன் மூலம் புதிய தாய்மார்களும் தகப்பன்மார்களும் பெரும் பயனடையலாம். ஆனால் முடிவான தீர்மானங்களை இளம் தம்பதியினர் கையிலேயே தாத்தா பாட்டிமார் விட்டுவிட வேண்டும்.c
இளம் பெற்றோர்களுக்கு கிடைக்கும் மற்றொரு உதவி சக விசுவாசிகளை சார்ந்திருப்பதாகும். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில், குழந்தை வளர்ப்பில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றவர்களை நீங்கள் காணலாம்; அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை செவிகொடுத்துக் கேட்பதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்க முடியும். பெரும்பாலும், “முதிர்வயதுள்ள ஸ்திரீ”களுடைய—கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என பைபிள் அழைக்கிறவர்களுடைய—உதவியை நீங்கள் நாடலாம், இவர்கள் இளம் பெண்களுக்கு உதவ மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.—தீத்து 2:3-5.
ஆனால், பிறருடைய கருத்துக்களை செவிகொடுத்துக் கேட்கும் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் உண்மையே. “எங்களைச் சுற்றியுள்ள எல்லாருமே திடீரென குழந்தை வளர்ப்பு நிபுணர்களாக ஆகிவிட்டார்கள்” என யோயீசீரோ கூறுகிறார். அவருடைய மனைவி டாகாகோ இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “முதலில், மற்றவர்கள் கொடுத்த அறிவுரைகள் எனக்கு பெரும் தொல்லையாக இருந்தது, தாயாக எனக்கு ஒரு அனுபவமுமில்லை என குறைகூறுவதைப் போல நான் உணர்ந்தேன்.” என்றாலும், பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் தங்களுடைய பிள்ளைகளுக்கு எது தேவை என்பதைப் பற்றிய சமநிலையான நோக்கை அநேக கணவன்மார்களும் மனைவிமார்களும் பெற முடிந்திருக்கிறது.
கிடைக்கும் மிகச் சிறந்த உதவி
உங்களுக்கு உதவ யாருமே இல்லை என்று தோன்றினாலும்கூட, பலம் தருவதில் நம்பகமான ஒருவர் இருக்கிறார். அவரே யெகோவா தேவன், நம்மை படைத்தவர், அவருடைய கண்களால் பூமியில் பிறப்பவர்களுடைய “கருவை”யும் காண முடியும். (சங்கீதம் 139:16) யெகோவா தமது வார்த்தையாகிய பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, பூர்வ காலங்களில் வாழ்ந்த தமது மக்களிடம் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.”—ஏசாயா 49:15; சங்கீதம் 27:10.
ஆம், நிச்சயமாகவே பெற்றோர்களை யெகோவா மறப்பதில்லை. பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவும் மிகச் சிறந்த வழிமுறைகளை பைபிளில் கொடுத்திருக்கிறார். உதாரணமாக, சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசே இவ்வாறு எழுதினார்: “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” பிற்பாடு மோசே தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் [அதாவது, யெகோவாவை நேசித்து அவரையே சேவிக்க வேண்டுமென்ற புத்திமதி உள்ளிட்ட இந்த வார்த்தைகள்] உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே[சு].”—உபாகமம் 6:5-7.
உங்களுடைய கருத்துப்படி, கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிநடத்துதலின் குறிப்பென்ன? பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் போதிக்க வேண்டும் என்பதே குறிப்பல்லவா? சொல்லப்போனால், எப்பொழுதாவது ‘தரமான’ நேரத்தை ஒதுக்கி சிறுபிள்ளைகளுக்கு போதிப்பது போதுமானதல்ல. பேச்சுத்தொடர்பு கொள்வதற்கேற்ற முக்கியமான சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் திட்டமிடாமல் இயல்பாகவே வருகின்றன, ஆதலால் உங்களுடைய பிள்ளைகளிடம் நேரம் செலவழிப்பதற்கு நீங்கள் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும். இப்படி செய்தால், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து” என்ற இந்த பைபிள் கட்டளையை உங்களால் நிறைவேற்ற முடியும்.—நீதிமொழிகள் 22:6.
சிறுபிள்ளைகளுக்கு தகுந்த பயிற்சி கொடுப்பதில் அவர்களுக்கு சத்தமாக வாசித்துக் காட்டுவதும் உட்பட்டுள்ளது. முதல் நூற்றாண்டு சீஷனாகிய தீமோத்தேயு ‘சிசு பருவத்திலிருந்தே பரிசுத்த வேத எழுத்துக்களை அறிந்திருந்தார்’ என பைபிள் கூறுகிறது. அப்படியானால், அவர் குழந்தையாக இருந்தபோதே அவரது தாய் ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும் அவரிடம் சத்தமாக வாசித்துக் காண்பித்திருக்க வேண்டும் என தெரிகிறது. (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15, NW) உங்களுடைய குழந்தையிடம் நீங்கள் பேச ஆரம்பித்தவுடனேயே இதை செய்யத் துவங்குவது நல்லது. ஆனால் நீங்கள் எதை வாசிக்கலாம், அதோடு சிறு குழந்தையிலேயே எப்படி மிகச் சிறப்பாக கற்பிக்கலாம்?
நீங்கள் பைபிள் வாசிப்பதை உங்களுடைய பிள்ளை கேட்கட்டும். இப்படித்தான் தீமோத்தேயுவுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. பைபிளைப் பற்றி பிள்ளைகள் அறிந்துகொள்வதற்கு ஏற்ற வண்ணப் படங்கள் நிறைந்த புத்தகங்களும் உள்ளன. பைபிளில் விவரிக்கப்பட்டிருப்பதை கற்பனை செய்து பார்க்க பிள்ளைக்கு இவை உதவுகின்றன. உதாரணமாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் போன்ற புத்தகங்கள் இருக்கின்றன. இத்தகைய புத்தகங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான பிள்ளைகள் பைபிள் போதனைகளை தங்களுடைய மனதிலும் இருதயத்திலும் பதிக்க உதவி செய்யப்பட்டிருக்கிறார்கள்.
“பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 127:4) உங்களுடைய படைப்பாளர் உங்களிடம் ஒரு ‘சுதந்திரத்தை,’ அதாவது நேசிக்கத்தக்க ஒரு குழந்தையை கொடுத்திருக்கிறார், அது உங்களுடைய பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்றாக விளங்கலாம். பிள்ளைகளை வளர்ப்பது, முக்கியமாக படைப்பாளருக்கு துதி சேர்க்கத்தக்க பிள்ளைகளை வளர்ப்பது உண்மையிலேயே பலனளிக்கும் ஒரு வேலையே! (g03 12/22)
[அடிக்குறிப்புகள்]
a மனஅழுத்தத்திற்குரிய ஹார்மோன்கள் மட்டுமல்ல, நிக்கோட்டின், ஆல்கஹால், போதைப் பொருட்கள் ஆகியவையும்கூட கருவை பாதிக்கலாம். ஆபத்துண்டாக்கும் எந்த பொருட்களிலிருந்தும் கர்ப்பிணிகள் விலகியிருப்பது நல்லது. அதோடு, மருந்துகள் சாப்பிடுவதால் கருவிற்கு உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம்.
b ஒரு தாய்க்கு அளவுக்கு மிஞ்சிய சோகமும் வெறுமையுணர்வும் ஏற்பட்டாலோ, அத்துடன் குழந்தையிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் காரணமாக இருக்கலாம். அப்படியானால், அவள் தனது மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். விழித்தெழு! செப்டம்பர் 8, 2002, பக்கங்கள் 19-23-யும், ஆங்கிலம் ஜூன் 8, 2003, பக்கங்கள் 21-3-யும் தயவுசெய்து காண்க.
c “தாத்தா பாட்டிமார்—சுகங்களும் சுமைகளும்” என்ற கட்டுரையை மார்ச் 22, 1999 தேதியிட்ட விழித்தெழு! இதழில் தயவுசெய்து வாசிக்கவும்.
[பக்கம் 8-ன் படம்]
வயிற்றிலுள்ள குழந்தையைப் பற்றிய தாயின் உணர்வுகள் மிகவும் முக்கியமானவை
[பக்கம் 9-ன் படம்]
குழந்தையைப் பெற்றெடுத்த புதிதில் தாய்க்கு உணர்ச்சி ரீதியில் திடீர்திடீரென மாற்றங்கள் ஏற்படுகிறபோதிலும், தனது குழந்தைக்கு நேசத்தையும் பாதுகாப்பையும் வழங்க அவளால் நிறைய செய்ய முடியும்
[பக்கம் 10-ன் படம்]
குழந்தை வளர்ப்பில் தகப்பன்மாருக்கும் உத்தரவாதம் உண்டு
[பக்கம் 10-ன் படம்]
பிள்ளைக்கு சிசு பருவத்திலிருந்தே வாசித்துக் காட்ட வேண்டும்