மெய்க் கிறிஸ்தவர்களும் போரும்
இயேசு தம் சீஷர்களிடம் “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினார். (யோவான் 13:34) மெய்க்கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் இத்தகைய அன்புகாட்டவும் அதே சமயத்தில் போரில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கொல்லவும் முடியுமா?
அப்போஸ்தலன் பவுல் கேட்ட கேள்வியையும் சிந்தித்துப் பாருங்கள்: “கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?” (1 கொரிந்தியர் 1:13) உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரே மதத்தின் அங்கத்தினர்களே ஒருவரையொருவர் கொலை செய்துகொள்ளும்படி செய்விக்கும் பிரிவினையை விட பெரியதோர் பிரிவினை இருக்கக்கூடுமா?’
உண்மையில் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபடவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள நாம் ஆச்சரியப்படக்கூடாது. ஹேஸ்டிங்சின் புகழ்பெற்ற மதம் மற்றும் நீதிநெறி சொற்களஞ்சியம் குறிப்பிட்டது: “போர் என்பது சர்ச்சும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களும் முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒழுங்கமைக்கப்பட்ட துஷ்டத்தனம் என்ற கருத்து ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே விரிவாக பரவியிருந்தது.”
ஆரம்பகால கிறிஸ்தவர்கள், ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்ற இயேசுவின் கட்டளைக்கு இணங்க வாழ்ந்தனர். ஜெர்மானிய இறையியலர் பேட்டர் மின்ஹோல்ட் விளக்கினார்: “கிறிஸ்தவர்கள் இராணுவவீரர்களாக இருக்கலாமா கூடாதா என்பதைக் குறித்தும் அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகையில் இராணுவத்திலிருந்து வெளியேறிவிட வேண்டுமா என்ற கேள்வியைக் குறித்தும் புதிய ஏற்பாடு மெளனமாய் இருக்கிறது என்றாலும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை இப்பிரச்னையின் பேரில் ஒரு நிலைநிற்கையை மேற்கொண்டது. ஒரு கிறிஸ்தவனாக இருப்பதும் ஓர் இராணுவ வீரனாக இருப்பதும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போக முடியாதவைகளாக கருதப்பட்டன.” “அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை” எடுத்ததைப் போன்ற ஒரு நிலைநிற்கையை இன்று எவராவது எடுக்கக்கூடுமா?
இன்று மெய்க்கிறிஸ்தவர்கள் எவராவது இருக்கின்றனரா?
கனடியானா சொற்களஞ்சியம் சொல்கிறது: “யெகோவாவின் சாட்சிகளின் வேலை நம் சகாப்தத்தின் முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் இயேசுவினாலும் அவருடைய சீஷர்களினாலும் கடைப்பிடிக்கப்பட்ட பூர்வீக கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியாயும் மறு எழுச்சியாயும் இருக்கிறது . . . அனைவரும் சகோதரர்கள்.”
நடைமுறையில் இது எப்படிக் கடைப்பிடிக்கப்படுகிறது? “போர்க் காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் மாறாத நடுநிலைமையைக் கடைப்பிடிக்கின்றனர்,” என்று ஆஸ்திரேலிய சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது. இத்தகைய நிலையை மேற்கொள்ள தனிப்பட்டவர்களாக அவர்கள் தீர்மானித்துக் கொண்டாலும் அவர்கள் வாழும் தேசத்தில் உள்ள அரசாங்கத்தின் அலுவல்களில் அவர்கள் குறுக்கிடுவதில்லை. இவ்வாறாக, அவர்கள் ஹிட்லரின் போரை ஆதரிக்கவில்லை, இதன் காரணமாகவே நூரெம்பர்க் விசாரணைகளின் போது போர்க்குற்றவாளிகளாக அவர்களில் எவரும் விசாரிக்கப்படவில்லை.
குற்றவாளியாக தீர்க்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு ஜெர்மானியர் ஆல்பிரட் ரோசன்பெர்க் ஆவார். அவர் நாசி கட்சியின் வெளி உறவு இலாகாவின் தலைவர். யெகோவாவின் சாட்சிகளை சித்திரவதை முகாம்களில் அடைத்த நாசி கொள்கையை ஆதரித்துப் பேசுபவராய் ரோசன்பெர்க் விசாரணையின் போது அறிக்கையிட்டதாவது: “ஓர் அமெரிக்க பாதிரி அதிக தயவாக எனக்கு சிறை அறையில், [ஒஹாயோ] கொலம்பஸ்லிருந்து வெளியான ஒரு சர்ச் செய்தித்தாளை கொடுத்திருக்கிறார். போரின் போது ஐக்கிய மாகாணங்களும்கூட யெகோவாவின் சாட்சிகளைக் கைதுசெய்தது என்றும் டிசம்பர் 1945 வரை அவர்களில் 11,000 பேர் இன்னும் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும் நான் அதிலிருந்து அறிந்துகொள்கிறேன்.” யெகோவாவின் சாட்சிகள் அரசியல் சச்சரவுகளில் எப்பக்கத்தையும் ஆதரிக்காமல் மாறாத நடுநிலைமையை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இரண்டாம் உலகப்போரிலோ அல்லது வேறு எந்தப் போரிலோ அவர்கள் எந்த இரத்தத்தையும் சிந்தவில்லை.
ஹங்கேரியில் நவம்பர் 4, 1992 தேதியிட்ட ரிங் பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து சொன்னார்: “மற்றொருவரை கொல்லுவதைவிட தாங்கள் மரிப்பதையே அவர்கள் தெரிந்துகொள்கின்றனர். எனவே பூமியில் வெறும் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே வாழ்ந்தால் எங்குமே போர்கள் ஏற்படாது என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.” அரசியல் அறிவியல் பேராசிரியர் ரியோ எம் கிறிஸ்டன்சன் கிறிஸ்தவ நூற்றாண்டில் ஓர் உண்மையான கிறிஸ்தவன் போரில் பங்குகொள்ள முடியுமா என்பதைக் கலந்தாய்வு செய்தபின் முடிவாக குறிப்பிட்டார்:
“இயேசு தம் எதிரிகளின் மேல் வெடிகுண்டுகளை எறிவதையோ ஓர் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்துவதையோ நெருப்புத்தழலை எறியும் இயந்திரப்பொறியை உபயோகிப்பதையோ ஆயிரக்கணக்கான தாய்மார்களையும் பிள்ளைகளையும் கொல்லக்கூடிய அல்லது முடமாக்கக்கூடிய அணுகுண்டுகளையோ ஏவுகணைகளையோ எறிவதை எவராவது கற்பனை செய்துபார்க்க முடியுமா? இது ஒரு பதிலைப் பெறத் தகுதியற்ற அபத்தமான ஒரு கேள்வி. இயேசு தம்மிடம் எதிர்பார்க்கப்பட்டவைகளுக்கு உண்மையாயிருக்க இதை செய்யமுடியவில்லையென்றால், நாம் எப்படி அதைச் செய்து அவருக்கு உண்மையாயிருக்க முடியும்?” சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வி இது.
இருப்பினும், உலகத்தின் மதங்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றன. கத்தோலிக்கர்கள் தொடர்ந்து கத்தோலிக்கர்களை கொல்கின்றனர், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மதத்தினரையோ அல்லது மற்ற சர்ச்சுகளின் அங்கத்தினர்களையோ கொல்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்ற உறுதியான நம்பிக்கையும் தைரியமும் தேவைப்பட்டிருக்கிறது, இதைப் பின்வரும் மெய்வாழ்க்கை சம்பவம் காண்பிக்கிறது.
[பக்கம் 7-ன் படம்]
இயேசு போரில் ஓர் இயந்திரத் துப்பாக்கி உபயோகிப்பதை எவராவது யோசித்துப் பார்க்க முடியுமா?
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo