வளரும் நாடுகளில் வேலைகளை ஏற்படுத்துதல்
செனிகலில் உள்ள விழித்தெழு! நிருபர்
பதினாறு வயது பருவப் பெண்ணின் தந்தை அவள் பிள்ளையாயிருக்கும் போதே மரித்துப் போனார், எட்டுப் பிள்ளைகள் அடங்கிய பெரிய குடும்பத்தைத் தாயிடம் விட்டுச் சென்றார். இப்போது அவள் தாய்க்கு வயதாகிக் கொண்டிருப்பதால், அப்பருவ வயதினள் ஒரு வேலையைத் தேடுவதன் மூலம் குடும்பத்தை ஆதரிப்பதற்கு தன் பங்கைச் செய்ய வேண்டியிருக்கிறது. பள்ளிப்படிப்பைத் தொடர வேண்டிய தன் இலக்கை அவள் நிறைவேற்ற முடியாது. அவளுக்கு திறமைகளோ அல்லது முறைப்படியான கல்வியோ இல்லாவிட்டாலும்கூட, வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் இப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் சாதாரணமாக இருக்கின்றன. பல்கலைக்கழக பட்டங்களை உடையவர்களுக்கும்கூட வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இருப்பினும், உறுதியோடும், புதியவை உருவாக்கும் நல்ல திறனோடும் அநேகர் தங்களுக்கென வேலைகளை உருவாக்க முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட வேலைகள் ஒரு நபரை செல்வந்தனாக மாற்றாவிட்டாலும்கூட, பைபிள் 1 தீமோத்தேயு 6:8-ல் பின்வருமாறு சொல்கிறது: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”
ஒருவரை சமநிலையில் வைப்பதற்கு உதவும் அப்புத்திமதியை மனதில் கொண்டு, வளரும் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் சில புத்திசாலித்தனமான வழிகளில் பிழைத்துக்கொண்டும் செழித்தோங்கிக் கொண்டும் இருப்பதை நாம் சிந்திப்போம்.
உணவு வியாபாரம்—ஆப்பிரிக்க பாணி
உணவு எப்போதும் தேவைப்படுகிறது. இங்கு மேற்கு ஆப்பிரிக்காவில், இந்த உண்மையை இலாபமாக மாற்றுவதற்கு திறமைசாலியான பெண்கள் கவர்ச்சிகரமான பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, சிலர் கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு அருகே ஒரு சிறிய அறையைக் கட்டி வேலையாட்களுக்கு மதிய உணவை சமைக்கின்றனர். காலையில் தங்கள் வேலைகளுக்குச் சென்று கொண்டிருப்பவர்களுக்கு சிலர் உணவு தயாரித்து கொடுக்கின்றனர். அவர்கள் ஒரு சிறிய மேசையையும் பெஞ்சுகளையும் அமைத்து வைக்கின்றனர், கட்டைக் கரி அடுப்பின் மீது தண்ணீரைக் கொதிக்க வைக்கின்றனர், எளிய காலை உணவை பரிமாறுகின்றனர்—சூடான காபி, புதிய ரொட்டியும் வெண்ணையும். மாலையில் மறுபடியும் அவர்கள் தங்கள் கடையை அமைத்து ஒரு சிறிய சாப்பாட்டை வேலையாட்களுக்கு நாளின் முடிவில் பரிமாறுகின்றனர். இந்த வகையான உணவகத்தை நடத்துவது ஒரு கடினமான அட்டவணையை கடைப்பிடித்து வேலை செய்வதை தேவைப்படுத்தும், ஆனால் அது புத்திசாலித்தனமான நபர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் கொடுக்கும்.
சிற்றுண்டிகள் விற்பதற்கான வாய்ப்பும்கூட உள்ளது. சில பெண்கள் ஜனக்கூட்டம் அதிகமாயிருக்கும் மார்க்கெட் அருகே ஓர் இடத்தை கண்டுபிடித்து அங்கே வேர்க்கடலைகளை வறுப்பார்கள். ஃபட்டாயா—சிறு இறைச்சி சோமாசிகளைக் காரமான குழம்பில் பரிமாறுதல்—இவைகளும்கூட எளிதில் விற்பனையாகின்றன. மசாலா இறைச்சி குழம்பில் செய்யப்பட்ட இறைச்சி சான்ட்விச்சுகளும்கூட. காம்பியா, மாலி போன்ற ஆப்பிரிக்க தேசங்களில் இப்படிப்பட்ட உணவுகள் எளிதில் விற்பனையாகின்றன.
கினி-பிசா, செனிகல் ஆகிய இடங்களில், யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அநேக இளைஞர்கள் முழு-நேர ஊழியத்தில் தங்களை ஆதரித்துக் கொள்வதற்கு மக்கள் விரும்பும் மற்றொரு வகையை சுட்டுக் கொடுக்கின்றனர்: சிறிய கேக்குகள். செனிகலின் தலைநகர், டாக்கர்-ல் வசித்து வரும் மோசஸ் விளக்குகிறார்: “நாங்கள் குழந்தைகளைக் கொண்டிருக்க ஆரம்பித்த போது, நானும் என் மனைவியும் விசேஷ பயனியர்களாக [முழுநேர சுவிசேஷகர்களாக] சேவித்துக் கொண்டிருந்தோம். இப்போது நான் அவர்களை ஆதரிப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, ஆகையால் சிறு கேக்குகளை செய்து விற்பனை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது.
“அதை ஆரம்பிப்பதற்கு என்னிடம் பணம் மிகவும் குறைவாக இருந்தது, ஆகையால் இலாபமாக நான் வைத்துக்கொள்ளக்கூடிய பணத்தையும், மாவு, முட்டைகள் போன்ற பொருட்களை மறுபடியும் வாங்குவதற்கு வியாபாரத்தில் தேவைப்படும் பணத்தையும் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில் நான் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. என் சிறு குடும்பத்தின் அநேக தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு போதுமான கேக்குகளை நான் இப்போது விற்பனை செய்யமுடிகிறது.
“பண தேவைகளில் உதவுவதற்கு என் மனைவி எஸ்தர் வீட்டில் ஆடைகளைத் தைக்கிறாள். இது எங்களுடைய இரண்டு சிறு பையன்களோடு அவள் வீட்டில் இருப்பதற்கு அனுமதிக்கிறது. ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுடைய குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்ள முடிகிறது, நாம் கடினமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையின் மத்தியிலும்.”
சிறு வியாபாரம் செய்வதற்கு மற்றொரு ஆலோசனை: வேலை செய்யும் ஆட்கள் அதிக வேலையாயிருப்பதால் நீண்ட பயணம் செய்து மார்க்கெட்டுக்குச் செல்வதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆகையால் அவர்கள் உள் ஊரில் பழங்கள் அல்லது காய்கறிகள் விற்கும் சிறு கொட்டகை மேடைகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள். சில கடை சொந்தக்காரர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குப் புதிய காய்கறிகளை எடுத்துச் செல்லும் சேவையை ஏற்பாடு செய்கிறார்கள். நீங்கள் நேர்மையானவர்கள், நல்ல தரமுள்ள பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்ற விஷயம் விரைவில் பரவி விடும். என்றாலும், அதிகமான விலை கூறுவதைக் குறித்து கவனமாயிருங்கள், அல்லது ஜனங்கள் வெறுமென மார்க்கெட்டுக்குத் திரும்ப செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
சேவை ஏற்பாடுகள்
பொருட்களை விற்பனை செய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், பல்வேறு சேவைகளை அளிப்பதைக் குறித்து சிந்தியுங்கள். சுத்தம் செய்தல், சமைத்தல், துவைத்தல், துணிகளைச் சலவைப் பெட்டியினால் தேய்த்தல் போன்ற வீட்டு வேலைகளுக்கு எப்போதும் தேவை அதிகம் உள்ளது. மேலும் அநேக மற்ற சந்தர்ப்பங்களும் உள்ளன.
உதாரணமாக, நீங்கள் கடல் அருகே அல்லது ஒரு மீன் மார்க்கெட் அருகே வசிக்கிறீர்களா? மீனை குறைவான விலையில் விரைவாக ஏன் சுத்தம் செய்து தரக்கூடாது? உங்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் கூர்மையான மீன் வெட்டும் கத்தியும் நல்ல மரத்துண்டுமே. கார் கழுவுவது மற்றொரு இலாபம் தரும் வேலையாகும். தேவைப்படும் பொருட்கள்? ஒரு பக்கெட், கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் சோப்பு, ஒரு நல்ல துணி. டாக்கர்-ல் வியாபார எண்ணமுள்ள இளைஞர்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் எல்லாவற்றிலும், நல்ல நிழல் உள்ள தெருக்களிலும் இச்சேவை செய்து கொண்டிருப்பதை காணலாம்.
இவ்வுலகில் நீங்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் பஞ்சம் உள்ளதா? சில சமயங்களில் பெண்கள் பல மணிநேரங்கள் பொது குழாய் அருகே தங்கள் கொள்கலங்களை நிரப்புவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. பின்பு பாரமான கொள்கலங்களைத் தங்கள் தலைகள் மீது வைத்து வீடு வரை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. யாராவது ஒருவர் தண்ணீரை வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அதற்கு பணம் கொடுக்க அநேகர் விரும்புகின்றனர். இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதிகாலையிலேயே தண்ணீர் குழாய் இருக்கும் இடத்துக்குச் சென்று, உங்கள் கொள்கலங்களை நிரப்பி, அவற்றைக் கையினால்-இழுக்கும் வண்டியிலோ அல்லது கழுதை-இழுக்கும் வண்டியிலோ ஏற்றிச் செல்லலாம். இப்போது நீங்கள் வீடுகளுக்கோ அல்லது வேலை நடக்கும் இடங்களுக்கோ தண்ணீர் கொண்டு செல்ல தயாராயிருக்கிறீர்கள்.
நீங்கள் பள்ளிப் படிப்பை உடையவர்களாய் இருக்கிறீர்களா? வார இறுதி நாட்களில் இளம் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நீங்கள் முன்வரலாம். வளரும் நாடுகளில் வகுப்பறைகள் அதிக நெருக்கமாக இருக்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளை தனிப்பட்ட கவனிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுக்க மனமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
நீங்கள் ஏற்கெனவே கொண்டிருக்கும் மற்றொரு பயனுள்ள திறமை, முடி பின்னும் கலையாகும். ஆப்பிரிக்காவில் இருக்கும் பெண்கள் மத்தியில் பின்னப்பட்ட முடி பாணிகள் பிரபலமாக உள்ளதால், இக்கலையில் திறமையுள்ள ஆட்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
புதுப்புனைவுத் திறனை பயன்படுத்துதல்
பைபிள் காலங்களில் திறமைசாலியான மனைவி வருமானத்தை பெருக்குவதற்குப் புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டு பிடிக்கக்கூடும். நீதிமொழிகள் 31:24 சொல்கிறது: “மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.” அதே போன்று, வளரும் நாடுகளில் உள்ள அநேகர் தங்கள் சொந்த சிறு தொழில்களை அல்லது குடிசைத் தொழில்களை நடத்துவதன் மூலம் வெற்றி கண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஒரு தச்சன் சிறு கடை ஒன்றை அமைத்து எளிய ஸ்டூல்கள், பெஞ்சுகள், மற்ற வீட்டு பொருட்கள் போன்றவற்றை செய்யலாம். தச்சு வேலைக்குரிய அடிப்படை கருவிகள் மட்டுமே தேவைப்படும். விவசாய திறமைகள் உங்களுக்கு இருந்தால், கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்து முட்டைகளையும் கோழிகளையும் விற்கலாம்.
சிறு தொழில்களை ஆரம்பிப்பதற்கு புதுப்புனைவுத் திறன் ஒரு முக்கியமாக தேவையாகும். சில ஆட்கள் வேண்டாமென்று எறிந்துவிட்ட டின் கொள்கலங்களை வண்ணமிக்க சூட்கேசுகளாகவும் டிரங்குகளாகவும் மாற்றியிருக்கின்றனர். மற்றவர்கள் வாகனங்களின் டயர்களை உபயோகித்து காலணிகளை உண்டாக்கியிருக்கின்றனர். இன்னும் சிலர் பழைய சக்கரத்தின் சுழல்வட்டைக் குழாய்களிலிருந்து பக்கெட்டுகளைச் செய்திருக்கின்றனர். சாத்தியமான செயல்கள் உங்கள் சொந்த கற்பனையினால் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.
வளரும் நாடுகளில் உயிர் வாழ்வதற்கு திறமையும் கற்பனையும் தேவைப்படுகிறது, ஆனால் உங்களுக்கு பொறுமையும் உடன்பாடான மனநிலையும்கூட தேவை. எளிதில் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். வளைந்து கொடுக்கும் தன்மையுடையவர்களாய் இருங்கள், தேவைப்பட்டால் வேலைகளை மாற்றிக்கொள்ள தயாராயிருங்கள். ஒரு தொழிலைத் துவங்கினாலோ அல்லது ஒரு சேவையைச் செய்தாலோ, உள்ளுர் சட்டங்களையும் கட்டளைகளையும் சரிபார்த்துக்கொள்ள நிச்சயமாயிருங்கள். தேசத்துச் சட்டங்களை மதிக்கும்படி கிறிஸ்தவர்கள் தேவைப்படுத்தப்படுகின்றனர்.—ரோமர் 13:1-7.
ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அளிப்பதற்கு முன், உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘உள்ளூர் தேவைகளும் பழக்கவழக்கங்களும் யாவை? உள்ளுர் பொருளாதாரத்தின் நிலைமை என்ன? நான் அளிப்பவற்றை வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து வாங்க முடியுமா? இதே பொருளை அல்லது சேவையை வேறு யாரெல்லாம் அளிக்கின்றனர்? இந்த வேலையை தொடர்ந்து செய்வதற்கு தேவைப்படும் திறமைகள், சக்தி, தொழில் தொடங்கும் ஆற்றல், சுய-கட்டுப்பாடு, ஒழுங்கமைப்பு ஆகியவற்றை நான் உண்மையிலேயே கொண்டிருக்கிறேனா? இதில் எவ்வளவு முதலீடு உட்பட்டிருக்கும்? தொழிலைத் தொடங்குவதற்கு நான் பணம் கடன் வாங்க வேண்டியிருக்குமா? நான் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியுமா?’
லூக்கா 14:28, 30-ல் இயேசுவின் கேள்வி பொருத்தமானது: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ.”
சுய-வேலைத் தேடிக்கொள்ளும் திறமைகளையோ அல்லது மனப்பாங்கையோ எல்லாருமே கொண்டிருப்பதில்லை என்பது உண்மை தான். என்றபோதிலும் யெகோவா தேவன் உங்களுடைய ஆற்றலையும் ஊக்கமான முயற்சியையும் ஆசீர்வதிப்பார், அது சரியான உள்ளெண்ணத்தோடு செய்யப்படுகையில். (2 பேதுரு 1:5 ஒப்பிடுக.) ஆகையால் வேலை கிடைப்பதற்கு உங்களால் ஆனதையெல்லாம் செய்யுங்கள்—அதை நீங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றாலும்கூட!
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
ஆடைகளைத் தைத்தல், கார்களைக் கழுவுதல், தூய தண்ணீரை கொண்டு செல்லுதல், மீனை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்து ஜனங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்