‘தன் வீட்டாரைப் பராமரித்தல்’—வளர்முக நாடுகளில் சவாலை எதிர்ப்படுதல்
“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலுங் கெட்டவன்.” இவ்வாறு அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 5:8, திருத்திய மொழிபெயர்ப்பு) ஒரு குடும்பத்தைப் பேணி காப்பது செல்வச்செழிப்புள்ள நாடுகளில் அதிக கடினமானதாகி வருகையில், ஒரு வளர்முக நாட்டில் அது பெரும்பாலும் இன்னுமதிகமான அச்சுறுத்தும் சவாலை அளிக்கிறது.
உதாரணமாக, ஆப்பிரிக்காவில், பொருளாதார நெருக்கடி என்பது பெரும்பாலும் இயல்பான நிலையாக இருக்கிறது, விதிவிலக்காக அல்ல. வேலைகள் கிடைப்பது அரிது; அவை கிடைக்கும்போது, வெறும் பிழைப்புக்கானவற்றை சமாளிப்பதற்கே கணவனும் மனைவியுமாக இருவருமே வேலை செய்ய வேண்டியிருக்கக்கூடும். வேலையைக் கண்டடைய குடும்பத் தலைவர்கள், தங்கள் துணைகளையும் பிள்ளைகளையும் மாதக்கணக்கில்—அல்லது வருடக்கணக்கில்—தனியே விட்டு நெடுந்தூரங்களுக்குப் பயணப்பட வேண்டியதாய் இருக்கக்கூடும். போதிய வீட்டுவசதியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாக இருக்கக்கூடும். அநேக ஆப்பிரிக்க குடும்பங்கள் பெரியவை; அதனால் வாழும் இடங்கள், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் நெருக்கமானவையாக இருக்கின்றன. பெரும்பாலும் ஆரோக்கியமற்ற நிலைமைகள் நிலவுகின்றன.
மேலுமாக, உள்ளூர் பழக்கங்கள், நெடுங்காலமாக நிலைத்திருக்கும் பாரம்பரியங்கள், பிரபலமான நோக்குநிலைகள் ஆகியவை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் நோக்கிற்கு மாறானவையாகச் செல்லக்கூடும். திருமணத்தையும் பிள்ளைகளையும் குறித்து நிலவும் சில மனநிலைகளை எண்ணிப் பாருங்கள். வாடகை கொடுப்பதற்கும் கட்டாயமாகக் கொடுக்க வேண்டிய பள்ளி கட்டணத்தைக் கொடுப்பதற்கும் மட்டுமே தாங்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதாகச் சில குடும்பத் தலைவர்கள் நம்புகின்றனர். அவர்களுடைய மனைவிகளும்—சில சமயங்களில் மூத்த பிள்ளைகளும்கூட—உணவு மற்றும் உடை போன்ற அடிப்படைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புடன் விடப்படுகிறார்கள்.
மேலுமாக, சில கணவன்மார், “என் பணம் என்னுடைய பணம், ஆனால் உன் பணமும் என்னுடையது,” என்ற கருத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள். வருமானத்தைக் கொண்டுவரும் மனைவிகளுக்கு இது பெரும்பாலும் கோபத்தைக் கிளறுகிறது. டான்ஜானிய பெண் ஒருத்தி இவ்வாறு குறைபட்டுக் கொண்டாள்: “அந்தப் பணம் எங்களுக்காகவோ பிள்ளைகளுக்காகவோ செலவிடப்படுவதில்லை, குடிப்பதற்காகச் செலவிடப்படுகிறது. நாங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்கிறோம், அல்லது அதில் அதிக பாகத்தைச் செய்கிறோம், ஆனால் அவர் எல்லா பணத்தையும் தன்னுடையது என்று—தான் சம்பாதித்தது என்று—எங்களிடம் சொல்லிவிட்டு அதை எடுத்துக் கொள்கிறார்.”
என்றபோதிலும், கிறிஸ்தவர்கள், உள்ளூர் பண்பாட்டுக்கு அல்லது பிரபல கருத்துக்கு மேலாக கடவுளுடைய வார்த்தையை வைக்கிறார்கள். ஒருவருடைய குடும்பத்தைக் கவனிப்பதைக் குறித்த விஷயத்தில் பைபிள், உதவியுள்ள வழிநடத்துதலை அளிக்கிறது. உதாரணமாக, “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்,” என்று அது சொல்லுகிறது. (2 கொரிந்தியர் 12:14) ஆகவே, வேலை செய்ய முடிந்த கடவுள்-பயமுள்ள ஆண்கள், குடும்பத்திற்கான உணவு மற்றும் உடையை அளிக்கும் பொறுப்பை சோம்பேறித்தனத்தின் காரணமாக தங்கள் மனைவிகளிடம் அல்லது மூத்த பிள்ளைகளிடம் விட்டுவிடுவதில்லை; அந்தப் பொறுப்பானது சந்தேகமின்றி குடும்பத் தலைவனின் தோள்களிலேயே விழுகிறது.—1 கொரிந்தியர் 11:3.
ஒரு கணவனின் வருமானம், அவனது குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் கவனிப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால் அவனுடைய மனைவி வீட்டிற்கு வெளியே வேலைசெய்து பணம் சம்பாதித்தால், ஒரு கிறிஸ்தவ ஆண் கோபங்கொள்ள மாட்டான். மாறாக, அவன் அவளை மரியாதைக்குரிய ஒரு ‘கூட்டாளியாக’ நடத்துவான். (மல்கியா 2:14, NW) அதனால் அவன் பரிவிரக்கமின்றி, அவளுடைய உணர்ச்சிகளை மதியாமல், அவளால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கப்பட்ட பணத்தை எடுத்து வீணடிக்க மாட்டான். அதற்கு மாறாக, அவனும் அவனுடைய மனைவியும் ‘சேர்ந்து ஆலோசனை செய்து,’ அவர்களது வருமானம் எப்படி முழு குடும்பத்தின் நன்மைக்காவும் சிறந்த வகையில் பயன்படுத்தப்படலாம் என்று தீர்மானிப்பார்கள். (நீதிமொழிகள் 13:10) சாத்தியமாக இருக்கும்போது, பைபிள் காலங்களில் “குணசாலியான ஸ்திரீ” அனுபவித்ததுபோல, ஒரு கணவன் தன் மனைவிக்கு ஓரளவு பொருளாதார சுதந்திரத்தையும்கூட அளிக்கிறான். (நீதிமொழிகள் 31:10, 11, 16) அப்படிப்பட்ட காரியங்களில் பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுவது குடும்ப மகிழ்ச்சியையும் திருப்தியையும் முன்னேற்றுவிக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்தின் சவால்களை எதிர்ப்படுதல்
வேலையில்லாத் திண்டாட்டத்தின் பிரச்சினையைக் குறித்துச் சிந்தியுங்கள். வேலைகள் கொஞ்சமாகவும் ஊதியம் குறைவாகவும் இருக்கும்போது, அநேக ஆப்பிரிக்க குடும்பத் தலைவர்கள் வீட்டை விட்டு வெகு தொலைவில்—சுரங்கங்களிலும், தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலும், தோட்டங்களிலும்—வேலை நாடி சென்றிருக்கின்றனர். ஒரு கிறிஸ்தவ ஆண் இந்த நிலைமையில் இருந்தால், அவன் உடன் வணக்கத்தாரிடமிருந்து தனிமைப்பட்டவனாயும் மிக மோசமான கூட்டுறவுக்கு உட்பட்டவனாயும் தன்னைக் காணக்கூடும். (நீதிமொழிகள் 18:1; 1 கொரிந்தியர் 15:33) இயன்ற அளவு சிறப்பாக அவனுடைய குடும்பம் அந்த நிலைமையைச் சமாளிக்க முயலக்கூடும் என்றாலும், ஆவிக்குரிய விதத்தில் முன்நின்று வழிநடத்த அல்லது உணர்ச்சிப்பூர்வ ஆதரவைத் தருவதற்கு ஒரு தந்தை வீட்டில் இல்லாமல் இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் கஷ்டப்படுவார்கள். முரணான வகையில், நீண்டகாலம் வராமலிருத்தலானது அது எதைத் தடுக்கும்படியாகச் செய்யப்பட்டதோ அதிலேயேகூட விளைவடையலாம்—பொருளாதார நெருக்கடியில்.
ஒரு தாய் சொல்கிறார்: “தங்கத்தைத் தோண்டி எடுக்க என் கணவன் போனார். ஒரு மாதத்திற்குப் பின் அல்லது அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குப் பின் அவர் திரும்பிவிடுவதாகத் திட்டமிட்டார். ஒரு வருடம் ஆனது! ஆறு பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பில் நான் விடப்பட்டேன். மேலும், வாடகை கட்ட வேண்டியிருந்தது. என்னுடைய உடல்நலம் அவ்வளவு நன்றாக இல்லாததால், மருத்துவமனை செலவுகளையும் கட்ட வேண்டியிருந்தது. எங்களுக்கு உடை தேவைப்பட்டது; நாங்கள் தினமும் சாப்பிடவும் வேண்டும். எனக்கு வேலை இல்லை. அது மிகவும் கடினமாக இருந்தது. பிள்ளைகளை ஆவிக்குரிய விதத்தில் கவனிப்பது—குடும்பப் படிப்பு, கூட்டங்கள், பிரசங்கவேலை—மிகவும் கஷ்டமாக இருந்தது. யெகோவாவின் ஆதரவுடன் எப்படியோ நாங்கள் சமாளித்தோம்.”
சில தாய்மார்கூட, வேலை செய்வதற்காகத் தங்கள் குடும்பங்களை மாதக்கணக்கில் விட்டுச்செல்லும் நிர்ப்பந்தத்தை உணர்ந்திருக்கின்றனர். பயணம் செய்யும் வியாபாரிகளாக இருந்து சிலர் பிழைக்கிறார்கள்; அவர்கள் அரிதாகவே வீட்டில் காணப்படுகிறார்கள். இதனால், மூத்த பிள்ளைகள், பெற்றோருடைய பாகத்தை வகித்து, உணவு, வீட்டு வேலைகள், உடன்பிறந்த இளையவர்களைச் சிட்சிப்பது ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளும் கட்டாயத்திற்குள்ளாகின்றனர். ஆவிக்குரிய நடவடிக்கைகளில் பங்கேற்பது குறைவுபடுகிறது. ஆம், குடும்பத்தின் மீதுள்ள அழுத்தம் பேரளவானதாக இருக்கலாம்!
நிச்சயமாகவே, பொருளாதார நிலைமைகள் கடுமையாக இருக்கையில், தொலைவில் ஒரு வேலையை நாடுவதைவிட பெற்றோர் ஒருவருக்குத் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேறு எந்த வழியும் இல்லாதிருக்கக்கூடும். பைபிள் காலங்களில் யாக்கோபின் குமாரர் எகிப்திலிருந்து உணவுப் பொருட்களைப் பெறும்படி தங்கள் குடும்பங்களை விட்டுச்செல்ல வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 42:1-5) ஆகவே இன்று அதேபோன்ற நிலைமைகள் எழும்புகையில், நீண்டநாள் பிரிவு ஏற்படுத்துகிற ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வ சேதத்துக்கு எதிராகத் தூரத்திலுள்ள வேலை கொண்டுவரக்கூடிய எல்லாவகையான பொருளாதார நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நீண்ட காலப்பகுதிக்குப் பிரிந்திருப்பதைவிட பொருளாதார நெருக்கடியைச் சகித்துக்கொள்வதை அநேக குடும்பங்கள் தெரிந்துகொள்கின்றன. அவர்கள் 1 தீமோத்தேயு 6:8-ல் காணப்படும் பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்கிறார்கள்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—நீதிமொழிகள் 15:17.
அடிக்கடி, பயணம்செய்வதற்கு வேறு மாற்றுவழிகள் இருக்கின்றன. முன்முயற்சியையும் புதுப்புனைவுத் திறனையும் வெளிக்காட்டுவதன்மூலம், பயனுள்ள சேவைகளைச் செய்து சிலரால் வேலையை உருவாக்க முடிந்திருக்கிறது.a (நீதிமொழிகள் 31:24-ஐ ஒப்பிடுக.) அல்லது மற்றவர்களால் அடிமைப்பாங்கான வேலை என்று கருதப்படும் தாழ்வான வேலைகளை ஏற்றுக்கொள்வதாக அது இருக்கக்கூடும். (எபேசியர் 4:28) மற்றவர்களுக்கு ஒரு பொருளாதார பாரமாக இருப்பதைத் தவிர்க்கும்படியாக அப்போஸ்தலன் பவுல்தானே ‘இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்தார்.’ (2 தெசலோனிக்கேயர் 3:8) இன்று கிறிஸ்தவ ஆண்கள் அந்த முன்மாதிரியைப் பின்பற்றலாம்.
பள்ளி படிப்பு பிரச்சினைகள்
மற்றொரு பிரச்சினை பள்ளி படிப்பை உட்படுத்துகிறது. சில தொலைக்கோடியான பகுதிகளில், பிள்ளைகளுக்குப் போதிய பள்ளி படிப்பை அளிப்பதற்காக பெற்றோர் அவர்களை நீண்ட காலப்பகுதிகளுக்கு உறவினர்களுடன் சென்று வாழும்படி அனுப்பிவிடுவது வழக்கமான ஒரு காரியம். பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாய் அப்படிப்பட்ட பிள்ளைகள், கூட்டங்களுக்குச் செல்வதில் அல்லது வெளி ஊழியத்தில் பங்கெடுப்பதில் அடிக்கடி பிரச்சினையைக் கொண்டிருக்கிறார்கள். அவசியமான சிட்சை கிடைக்காமல் இருப்பதால், அவர்கள் கெட்ட கூட்டுறவுகளுக்கு எளிதில் இரையாகிறார்கள். அதன் விளைவாக, ஏராளமானவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை பாதையைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள்.
உலகப்பிரகாரமான கல்வி கேள்விக்கிடமின்றி அதற்குரிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் ஆவிக்குரிய கல்வியின் மீது பைபிள் உயர்ந்த மதிப்பை வைக்கிறது; அப்படிப்பட்ட போதனையளிக்கும் உத்தரவாதத்தை கடவுள் பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறார். (உபாகமம் 11:19, 20; நீதிமொழிகள் 3:13, 14) என்றாலும், நீண்ட காலப்பகுதிகளுக்கு ஒரு பிள்ளையைத் தூரமாக அனுப்பிவிடுவது, “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” அவனை வளர்ப்பதற்கான ஒரு பெற்றோரின் முயற்சிகளை பெரும்பாலும் கெடுத்துவிடும்.—எபேசியர் 6:4, NW.b
கல்விக்கான உள்ளூர் வாய்ப்புகள் போதியவையாக இல்லை என்று தோன்றினால், பிள்ளைகளுக்கு அடிப்படை திறமைகளைக் கற்றுக்கொடுப்பதற்குத் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதைத் தவிர பெற்றோர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காது. நம்முடைய ‘மகத்தான போதகராகிய’ யெகோவாவாலும் நமக்கு உதவி அளிக்கப்படுகிறது. (ஏசாயா 30:20, NW) யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபைகள் ஏராளமான கல்விக்குரிய ஏற்பாடுகளை அளிக்கின்றன. அநேக சபைகள் படிப்பறிவு வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல, தேவராஜ்ய ஊழியப் பள்ளியும், ஒரு பிள்ளை தெளிவாக வாசிப்பதற்கும் பேசுவதற்குமான திறமையைக் கூர்மையானதாக்கும் உதவியுள்ள ஓர் ஏற்பாடாக இருக்கிறது.
குழந்தைப்பேற்றைக் குறித்த ஒரு சமநிலையான நோக்கு
பிள்ளைகளைப் பராமரித்தல், குறிப்பாக நிறைய பிள்ளைகள் இருந்தால், கடினமாக இருக்கலாம். ஆப்பிரிக்க பெற்றோர் தாங்கள் குழந்தைகளை நேசிப்பதாக அடிக்கடி சொல்வார்கள்; எனவே, அவர்கள் தங்களால் எத்தனை பிள்ளைகளைக் கொண்டிருக்க முடியுமோ அத்தனையைக் கொண்டிருக்கிறார்கள்! பிள்ளைகள் ஒரு பொருளாதார வளமாக கருதப்படலாம் என்றாலும், அநேக பெற்றோரால் அவர்களில் அதிகம் பேரை போதியளவு பராமரிக்க முடிவதில்லை.
“பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்,” என்று பைபிள் சொல்வது உண்மைதான். (சங்கீதம் 127:4) என்றபோதிலும், இஸ்ரவேலில் சாதகமான நிலைமைகள் நிலவிய காலத்தின்போது அந்த வார்த்தைகள் எழுதப்பட்டன என்பதைக் கவனியுங்கள். பின்னர், கடுமையான பஞ்சமும் போரும் குழந்தைப்பேற்றை துன்பகரமானதாக்கின. (புலம்பல் 2:11, 20; 4:10) அநேக வளர்முக நாடுகளில் நிலவும் கடினமான நிலைமைகளைக் கருத்தில் கொள்கையில், பொறுப்புள்ள கிறிஸ்தவர்கள், நடைமுறையில் எத்தனை பிள்ளைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், பயிற்றுவிப்பு ஆகியவற்றைத் தங்களால் அளிக்க முடியும் என்று கருத்தூன்றி சிந்திக்க வேண்டும். செலவைக் கணக்கிட்ட பிறகு, பாரம்பரியத்தை மீறிச் சென்று, தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையை வரையறைப்படுத்துவது சிறந்ததாய் இருக்கும் என்று அநேக தம்பதிகள் தீர்மானிக்கின்றனர்.c—லூக்கா 14:28, 30-ஐ ஒப்பிடுக.
தெளிவாகவே, இவை “கையாளுவதற்குக் கடினமான காலங்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5, NW) இந்தக் காரிய ஒழுங்குமுறை அதன் தவிர்க்க முடியாத முடிவை நோக்கி சரிகையில், வளர்முக நாடுகளில் குடும்பங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையின் நியமங்களை நெருக்கமாகக் கடைப்பிடிக்கையில், குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பங்களின் சரீரப்பிரகாரமானதும் ஆவிக்குரியதுமான தேவைகளைக் கவனிப்பதில் வெற்றி அடையலாம்; ஏனென்றால் யெகோவா, தம்மை உண்மையுடன் சேவிப்பவர்களிடம் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) ஆம், ஏழ்மையான நாடுகளில்கூட, கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரிக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்ப்படலாம்!
[அடிக்குறிப்புகள்]
a எங்கள் துணைப் பத்திரிகையாகிய விழித்தெழு!-வின் அக்டோபர் 22, 1994 பிரதியில், “வளர்முக நாடுகளில் வேலைகளை ஏற்படுத்துதல்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
b மேலுமான விவரங்களுக்கு, ஆகஸ்ட் 15, 1982 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பார்க்கவும்.
c ஜூன் 8, 1993 விழித்தெழு!-வில் வந்த “குடும்பக் கட்டுப்பாடு—ஓர் உலகளாவிய பிரச்னை” என்ற தொடர் கட்டுரைகளில் உதவியுள்ள தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.