உங்கள் குடும்பத்தைக் காத்துக்கொள்ள பிரயாசப்படுங்கள்
“யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து வளர்த்து வருவீர்களாக.”—எபேசியர் 6:4, NW.
1, 2. இன்று பெற்றோர் என்ன சவால்களை எதிர்ப்படுகின்றனர்?
ஒரு பிரபலமான பத்திரிகை இதை ஒரு புரட்சி என்றழைத்தது. சமீப ஆண்டுகளில் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் திடுக்கிடச்செய்யும் மாற்றங்களை விவரித்துக் காட்டிய ஒரு கட்டுரையாக இது இருந்தது. இவை “மணவிலக்கு, மறுமணம், மறுமணவிலக்கு, முறைகேடான உறவு, ஐக்கியப்பட்ட குடும்பங்களில் புதிய அழுத்தங்கள் போன்றவை பெருவாரியாக பரவியிருப்பதன் விளை”வாயிருப்பதாக சொல்லப்பட்டன. இத்தகைய அழுத்தங்களும் நெருக்கடிகளும் ஆச்சரியமூட்டுவதாக இல்லை. ஏனெனில் இந்த “கடைசிநாட்களில்” மக்கள் ‘கொடிய காலங்களை’ எதிர்ப்படுவார்கள் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது.—2 தீமோத்தேயு 3:1-5.
2 ஆகையால் இன்று பெற்றோர் கடந்த தலைமுறைகள் அறியாத சவால்களை எதிர்ப்படுகின்றனர். நம் மத்தியிலிருக்கும் சில பெற்றோர் “சிசுப்பருவம் முதல்” தங்கள் பிள்ளைகளைக் கடவுளுடைய வழிகளில் வளர்த்திருந்தாலும், அநேக குடும்பங்கள் சமீபத்தில்தானே “சத்தியத்திலே நடக்”கத் தொடங்கியிருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:15, NW; 3 யோவான் 4) பெற்றோர் கடவுளுடைய வழிகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்கத் தொடங்கும்போது அவர்கள் வளர்ந்த பிள்ளைகளாக இருந்திருப்பார்கள். மேலும், நம் மத்தியில் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும் மாற்றாங்குடும்பங்களும் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதால் ஆகும். உங்களுடைய சூழ்நிலைமைகள் என்னவாயிருந்தாலும், பவுலின் புத்திமதி பொருந்துகிறது: “யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து வளர்த்து வருவீர்களாக.”—எபேசியர் 6:4, NW.
கிறிஸ்தவ பெற்றோரும் அவர்கள் வகிக்கும் பங்கும்
3, 4. (அ) தகப்பன்மார்களுடைய பங்கை என்ன காரணிகள் குறைத்திருக்கின்றன? (ஆ) கிறிஸ்தவ தகப்பன்மார்கள் உணவாதரவுக்கு உரியவர்களாக இருப்பதைக் காட்டிலும் ஏன் அதிகத்தை செய்யவேண்டும்?
3 எபேசியர் 6:4-லுள்ள வார்த்தைகளைப் பவுல், முக்கியமாக “பிதாக்க”ளுக்கு எழுதியதைக் கவனியுங்கள். கடந்தகால தலைமுறைகளில் “தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளின் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய வளர்ப்புக்கு பொறுப்புள்ளவராயிருந்தனர்; தங்கள் பிள்ளைகளுடைய படிப்புக்கும் தகப்பன்மார்கள் பொறுப்புள்ளவராயிருந்தனர். . . . தொழிற்புரட்சியோ இந்தப் பிணைப்பை எடுத்துப்போட்டது; தகப்பன்மார்கள் தொழிற்சாலைகளிலும் பின்னர் அலுவலகங்களிலும் வேலைசெய்ய தங்கள் பண்ணைகளையும் கடைகளையும் விடுவதோடு, தங்கள் வீடுகளையும் விட்டு வந்தனர். ஒருசமயத்தில் தகப்பன்மார்கள் பொறுப்புள்ளவர்களாயிருந்த பல்வேறு அலுவல்களைத் தாய்மார்கள் செய்யத் தொடங்கினர். அதிகப்படியாக, தந்தைத்துவம் வெறும் கோட்பாட்டளவில்தானே இருந்தது.”
4 கிறிஸ்தவ ஆண்கள்: உங்கள் பிள்ளைகளுடைய பயிற்சியையும் வளர்ப்பையும் மனைவிகளுக்கு விட்டுவிட்டு, வெறும் உணவாதரவுக்கு உரியவர்களாக மட்டும் இருப்பதில் மனநிறைவடையாதீர்கள். நீதிமொழிகள் 24:27 பூர்வ காலங்களிலிருந்த தகப்பன்மார்களை உந்துவித்தது: “வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.” அதேபோல இன்று, வேலைசெய்யும் மனிதனாக, வாழ்க்கையை நடத்த நீங்கள் ஒருவேளை நெடுநேரமும் கடினமாகவும் வேலைசெய்ய வேண்டியிருக்கலாம். (1 தீமோத்தேயு 5:8) என்றாலும், பிற்பாடு, உணர்ச்சிப் பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ‘உங்கள் வீட்டைக் கட்ட’ தயவுசெய்து நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.
5. கிறிஸ்தவ மனைவிகள் எப்படித் தங்கள் குடும்பங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்?
5 கிறிஸ்தவ மனைவிகள்: நீங்களுங்கூட உங்கள் குடும்பத்தைக் காத்துக்கொள்ள பிரயாசப்பட வேண்டும். நீதிமொழிகள் 14:1 சொல்கிறது: “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்.” மணத் துணைவர்களாக, நீங்களும் உங்கள் கணவரும் உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பை பகிர்ந்துகொள்கிறீர்கள். (நீதிமொழிகள் 22:6; மல்கியா 2:14) உங்கள் பிள்ளைகளைச் சிட்சிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் அவர்களைத் தயார்செய்வது, அல்லது உங்கள் கணவர் குடும்பப் படிப்பை நடத்த இயலாதபோது அதை நடத்துவதையுங்கூட இது உள்ளடக்கலாம். வீட்டு வேலைகளையும் நன்னடத்தையையும் சரீர சுகாதாரத்தையும் மேலும் வேறுபல உதவிதரும் காரியங்களையும் கற்றுக்கொடுப்பதன் மூலமுங்கூட நீங்கள் அதிகத்தை செய்யலாம். (தீத்து 2:5) இவ்விதமாக கணவர்களும் மனைவிகளும் ஒன்றுசேர்ந்து உழைத்தால், தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை நன்றாகவே அவர்களால் பூர்த்திசெய்ய முடியும். அத்தேவைகளில் சில யாவை?
அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வமான தேவைகளைக் கவனித்துக்கொள்வது
6. தாய்மார்களும் தகப்பன்மார்களும் தங்கள் பிள்ளைகளுடைய உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சியில் என்ன பங்கை வகிக்கின்றனர்?
6 ‘பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகையில்,’ அவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணருகின்றனர். (1 தெசலோனிக்கேயர் 2:7; சங்கீதம் 22:9) தாய்மார்கள் சிலர் தங்கள் சிசுக்களின்பேரில் அதிக கவனம் செலுத்தும்படியான உந்தலைத் தவிர்க்கக்கூடும். ஏசாயா தீர்க்கதரிசி கேட்டதாவது: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” (ஏசாயா 49:15) இவ்வாறு தாய்மார்கள் பிள்ளைகளுடைய உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றனர். எனினும், தகப்பன்மார்களும் இந்த விஷயத்தில் முக்கியமான பங்கை வகிக்கின்றனர். குடும்ப போதகர், பால் லூயிஸ் சொல்கிறார்: “எந்தவொரு சமூக பணியாளரும் [கவனியாது விடப்பட்ட] ஒரு பிள்ளை, தன் அப்பாவோடு ஓர் ஆரோக்கியமான உறவை வைத்திருந்ததாக சொன்னதை நான் கேள்விப்பட்டதே கிடையாது. நூறு பிள்ளைகளில் ஒன்றுகூட சொல்லவில்லை.”
7, 8. (அ) யெகோவா தேவனுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையே பலமான கட்டு இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (ஆ) தகப்பன்மார்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளோடு ஓர் அன்பான கட்டை உருவாக்கலாம்?
7 ஆகையால் கிறிஸ்தவ தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளோடு ஓர் அன்பான கட்டை வளர்ப்பதில் கவனமுள்ளவர்களாக இருப்பது அத்தியாவசியமாயிருக்கிறது. உதாரணமாக, யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் சிந்தித்துப்பாருங்கள். இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது, யெகோவா அறிவித்தார்: “நீர் என்னுடைய நேசகுமாரன், [உம்மை நான் அங்கீகரித்திருக்கிறேன், NW].” (லூக்கா 3:22) இந்த ஒருசில வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பது எவ்வளவதிகம்! யெகோவா (1) தம் குமாரனை ஏற்றுக்கொண்டார், (2) இயேசுவிடம் தமக்கிருந்த அன்பை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்தினார், மேலும் (3) இயேசுவிடமான தம்முடைய அங்கீகாரத்தை தெரியப்படுத்தினார். ஆனால், யெகோவா தம்முடைய குமாரனிடம் அன்பை வெளிக்காட்டிய சமயம் இது மட்டுமல்ல. இயேசு பிறகு தம்முடைய தகப்பனிடம் சொன்னார்: “உலகத்தோற்றத்துக்குமுன் நீர் என்னில் அன்பாயிருந்”தீர். (யோவான் 17:24) என்றாலும், நிச்சயமாகவே, கீழ்ப்படிதலுள்ள எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் தங்கள் தகப்பன்மார்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளுதலும் அன்பும் அங்கீகரிப்பும் அவசியந்தான் அல்லவா?
8 நீங்கள் ஒரு தகப்பனாக இருந்தால், பொருத்தமாயிருக்கும் சரீரப்பிரகாரமான, வாய்மொழியான அன்பின் வெளிக்காட்டுதல்களைத் தவறாமல் செய்வதன் மூலம் உங்கள் பிள்ளைகளோடு ஓர் அன்பான கட்டை உருவாக்க ஒருவேளை அதிகத்தை செய்யலாம். சில ஆண்கள், விசேஷமாக தங்களுடைய சொந்த தகப்பன்மார்களிடமிருந்து வெளிப்படையான பாசத்தை ஒருக்காலும் பெறவில்லையென்றால், அவர்களுடைய பங்கில் பாசத்தைக் காட்டுவது என்பது கடினம்தான். ஆனால் உங்களுடைய பிள்ளைகளிடம் அன்பு காட்டுவது தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகும்படி வைத்தாலுங்கூட, அது பெரும் பாதிப்பை உண்டுபண்ணும். மொத்தத்தில், ‘அன்பு பக்திவிருத்தியை உண்டாக்கும்.’ (1 கொரிந்தியர் 8:1) உங்களுடைய தகப்பனுக்குரிய அன்பினால் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்ந்தால், ‘உண்மையான மகன்களாகவும் மகள்களாகவும்’ இருப்பதற்கும் உங்கள்மீது முழு நம்பிக்கை வைப்பதற்கும் அவர்கள் அதிக மனச்சாய்வுள்ளவர்களாக உணருவார்கள்.—நீதிமொழிகள் 4:3, NW.
அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்வது
9. (அ) தெய்வபயமுள்ள இஸ்ரவேல பெற்றோர் எவ்வாறு தங்கள் குடும்பங்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொண்டனர்? (ஆ) கிறிஸ்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம் போதிக்க என்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?
9 பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய தேவைகளும் இருக்கின்றன. (மத்தேயு 5:3) மோசே இஸ்ரவேல பெற்றோரை அறிவுறுத்தினார்: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசவேண்டும்.’ (உபாகமம் 6:6, 7) ஒரு கிறிஸ்தவ பெற்றோராயிருந்தால், சமயம் வாய்க்கும்போதெல்லாம், நீங்கள் பற்பல அறிவுரைகளை வழங்கலாம்; உதாரணமாக, “வழியில் நடக்கிறபோதும்” அவ்வாறு நீங்கள் செய்யலாம். ஒன்றுசேர்ந்து பயணம் செய்யும்போதோ, கடைக்குச் செல்லும்போதோ, அல்லது கிறிஸ்தவ ஊழியத்தில் வீட்டுக்கு வீடு உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து நடந்து செல்லும்போதோ செலவிடப்படும் சமயமானது சாவகாசமான சூழ்நிலையில் அறிவுரை வழங்க முழுநிறைவான வாய்ப்புகளை அளிக்கிறது. உணவுநேரங்கள் சம்பாஷிக்க குடும்பங்களுக்கு விசேஷமாக நல்ல சமயமாக இருக்கின்றன. “நாளில் நடந்த விஷயங்களைக் குறித்து பேச நாங்கள் உணவுநேரத்தை உபயோகிக்கிறோம்,” என்று ஒரு பெற்றோர் விளக்குகிறார்.
10. குடும்பப் படிப்பு ஏன் சில சமயங்களில் ஒரு சவாலாக இருக்கிறது, பெற்றோர் என்ன திடத்தீர்மானமுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
10 என்றபோதிலும், ஒழுங்கான பைபிள் படிப்பின் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு முறைப்படியான அறிவுரை வழங்குவதுங்கூட முக்கியமாயிருக்கிறது. பிள்ளைகளின் “நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. (நீதிமொழிகள் 22:15) சில பெற்றோர் என்ன சொல்கிறார்களென்றால் தங்களுடைய பிள்ளைகள் சுலபமாக குடும்பப் படிப்புக்கு வேண்டுமென்றே தடையாயிருக்கும் முட்டுக்கட்டைகளாயிருப்பார்கள். எப்படி? அமைதியிழந்து, சலிப்புத்தட்டுபவர்களாக நடிப்பதன் மூலமும், கவனத்தை சிதறடிக்கிற காரியங்களைச் செய்து (பிள்ளை சண்டைகள் போன்ற) எரிச்சலூட்டுவதன் மூலமும், அல்லது அடிப்படையான பைபிள் சத்தியங்களைத் தெரியாததுபோல நடிப்பதன் மூலமுமாகும். விருப்பம் சார்ந்த பிரச்சினையாக இது மாறும்போது, பெற்றோருடைய விருப்பத்தின்படியே செய்யவேண்டும். கிறிஸ்தவ பெற்றோர் அடிபணிந்து, பிள்ளைகள் குடும்பத்தைக் கட்டுப்படுத்த விட்டுவிடக்கூடாது.—கலாத்தியர் 6:9-ஐ ஒத்துப்பாருங்கள்.
11. குடும்பப் படிப்பை எப்படி அனுபவித்து மகிழத்தக்கதாக செய்யலாம்?
11 குடும்பப் படிப்பை உங்களுடைய பிள்ளைகள் அனுபவித்து மகிழவில்லையென்றால், ஒருவேளை சில மாற்றங்களைச் செய்யலாம். உதாரணமாக, உங்கள் பிள்ளைகள் சமீபத்தில் செய்த தவறுகளை விமர்சிப்பதற்கான சாக்காக படிப்பு உபயோகப்படுத்தப்படுகிறதா? ஒருவேளை அத்தகைய பிரச்சினைகளைத் தனிப்பட்ட முறையில் பேசுவது மிகவும் நன்றாயிருக்கும். உங்களுடைய படிப்பு தவறாமல் நடத்தப்படுகிறதா? ஒரு பிடித்தமான தொலைக்காட்சி படத்திற்காகவோ விளையாட்டு நிகழ்ச்சிக்காகவோ நீங்கள் அதை நடத்தவில்லையென்றால், பெரும்பாலும் படிப்பை உங்களுடைய பிள்ளைகள் மிகவும் முக்கியமாக கருதமாட்டார்கள். படிப்பு நடத்தும் முறையில் நீங்கள் ஊக்கமுள்ளவர்களாகவும் உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்கிறீர்களா? (ரோமர் 12:8) ஆம், படிப்பு மகிழ்ந்து அனுபவிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். எல்லா பிள்ளைகளையும் பங்குகொள்ள வைக்க முயற்சி செய்யுங்கள். மனதிட்பமுள்ளவர்களாகவும் கட்டியெழுப்பக்கூடியவர்களாகவும் இருங்கள். பிள்ளைகள் பங்குகொள்கையில், அன்போடு அவர்களைப் பாராட்டுங்கள். ஆனால், மேல்வாரியாக அதிக பொருளை சிந்திக்காமல், இருதயங்களைச் சென்றெட்ட முயற்சி செய்யுங்கள்.—நீதிமொழிகள் 23:15.
நீதியின்படி சிட்சிப்பது
12. எப்பொழுதும் சரீரப்பிரகாரமான தண்டனையாக சிட்சை ஏன் இருக்கவேண்டியதில்லை?
12 பிள்ளைகளுக்கு பலமான சிட்சை கொடுப்பதற்கான தேவையும் இருக்கிறது. பெற்றோராக, நீங்கள் அவர்களுக்கு எல்லைகளை வைக்கவேண்டும். நீதிமொழிகள் 13:24 சொல்வதாவது: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.” ஆயினும், எப்போதும் அடித்து சிட்சிப்பதை பைபிள் அர்த்தப்படுத்துவது கிடையாது. நீதிமொழிகள் 8:33 (NW) சொல்வதாவது: “சிட்சைக்கு செவிகொடு.” மேலும் “மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்” என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.—நீதிமொழிகள் 17:10.
13. பிள்ளைக்கு சிட்சையை எப்படி அளிக்கவேண்டும்?
13 அவ்வப்போது, ஒருவகையான சரீரப்பிரகாரமான சிட்சை பொருத்தமாயிருக்கலாம். என்றாலும், கோபத்தோடு சிட்சிக்கப்பட்டால், அது ஒருவேளை கட்டுக்கடங்காமல், பயனற்று போய்விடும். பைபிள் எச்சரிப்பதாவது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21) நிச்சயமாகவே, “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.” (பிரசங்கி 7:7) புண்படுத்தப்பட்ட இளைஞன் நீதியான தராதரங்களுக்கு எதிராக கலகஞ்செய்யவுங்கூடும். இதன் காரணமாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சிட்சிப்பதில் உறுதியாக இருந்தபோதிலும் சமன்பாடான முறையில் நீதியின்படி சிட்சிப்பதற்கு வேதவசனங்களைப் பயன்படுத்த வேண்டும். (2 தீமோத்தேயு 3:17) கடவுளுக்கேற்ற சிட்சையை அன்போடும் சாந்தத்தோடும் அளிக்கவேண்டும்.—2 தீமோத்தேயு 2:24, 25, 26-ன் பிற்பகுதியை ஒத்துப்பாருங்கள்.a
14. பெற்றோர் கோபத்திற்கு அடிபணிவதாக உணர்ந்தால் என்ன செய்யவேண்டும்?
14 “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்பது உண்மைதான். (யாக்கோபு 3:2) சாதாரணமாக எப்பொழுதும் அன்புகூரும் பெற்றோருங்கூட கணநேரத்தில் ஏற்படும் அழுத்தத்துக்கு ஆளாகி திட்டவோ கோபத்தை வெளிக்காட்டவோ செய்வார். (கொலோசெயர் 3:8) இவ்வாறு நேரிட்டால், உங்கள் பிள்ளை பெரும் துயரத்திலோ நீங்கள்தானே எரிச்சலடைந்த நிலையிலோ இருந்து சூரியன் அஸ்தமிக்கும்படி அனுமதிக்காதீர்கள். (எபேசியர் 4:26, 27) காரியங்களை உங்கள் பிள்ளையோடு பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால் மன்னிப்பு கேளுங்கள். (மத்தேயு 5:23, 24-ஐ ஒத்துப்பாருங்கள்.) அத்தகைய மனத்தாழ்மையைக் காட்டுவது உங்களையும் உங்களுடைய பிள்ளையையும் நெருக்கமாக ஒன்றிவர வைக்கும். உங்களுடைய கோபாவேசத்தை அடக்க முடியாமல் கோபத்திற்கு அடிபணிந்துவிடுவதாக நீங்கள் உணர்ந்தால், நியமிக்கப்பட்ட சபை மூப்பர்களின் உதவியை நாடுங்கள்.
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும் மாற்றாங்குடும்பங்களும்
15. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவியளிக்கலாம்?
15 ஆனாலும், எல்லா பிள்ளைகளுக்கும் இரண்டு பெற்றோருடைய ஆதரவில்லை. ஐக்கிய மாகாணங்களில், 4 பிள்ளைகளில் ஒன்று ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறது. பைபிள் காலங்களில் ‘தகப்பனில்லா பையன்கள்’ பொதுவாக இருந்தார்கள். வேதவசனங்கள் அடிக்கடி அவர்களுக்கான அக்கறையைக் குறித்து திரும்பத்திரும்ப குறிப்பிடுகிறது. (யாத்திராகமம் 22:22, NW) இன்று, அதேபோல ஒற்றைப் பெற்றோர் கொண்ட கிறிஸ்தவ குடும்பங்கள் அழுத்தங்களையும் கஷ்டங்களையும் எதிர்ப்பட்டபோதிலும், யெகோவா “[தகப்பனில்லா பையன்களுக்கு, NW] தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்” என்பதை அறிவதில் அவர்கள் ஆறுதலடைகின்றனர். (சங்கீதம் 68:5) கிறிஸ்தவர்கள், “ஆதரவற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் அவர்கள் உபத்திரவத்தில் விசாரிக்”கும்படி உந்துவிக்கப்படுகின்றனர். (யாக்கோபு 1:27, தி.மொ.) ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு உதவ உடன் விசுவாசிகள் அதிகத்தைச் செய்யலாம்.b
16. (அ) ஒற்றைப் பெற்றோர் தங்கள் சொந்த குடும்பங்களின் சார்பாக என்ன செய்யவேண்டும்? (ஆ) ஏன் சிட்சை கொடுப்பது கஷ்டமாக இருக்கலாம், ஆனால் ஏன் அதை அளிக்கவேண்டும்?
16 ஒற்றைப் பெற்றோராக இருந்தால், உங்களுடைய குடும்பம் பயனடைய நீங்கள்தானே என்ன செய்யலாம்? குடும்ப பைபிள் படிப்பு, கூட்டங்களுக்கு வருவது, வெளி ஊழியம் ஆகியவற்றைக் குறித்து நீங்கள் ஊக்கமுள்ளவர்களாக இருப்பது அவசியம். எனினும், சிட்சை கொடுப்பது விசேஷமாக கஷ்டமான காரியமாக இருக்கலாம். மரணத்தில் அருமையான துணைவரின் இழப்பைக் குறித்து நீங்கள் ஒருவேளை இன்னும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது திருமண முறிவிற்கான குற்றவுணர்ச்சியாலோ கோபவுணர்ச்சியாலோ நீங்கள் போராடிக்கொண்டிருக்கலாம். பிள்ளைகளை நீங்களும் உங்களுடைய முந்தைய துணைவரும் மாறிமாறி கவனித்துவந்தால், பிள்ளையானது உங்களை விட்டுப் பிரிந்து வாழ்கிற அல்லது திருமண விலக்கு செய்துகொண்ட துணைவரோடு வாழ விரும்புவதை பற்றியுங்கூட நீங்கள் பயப்படலாம். அத்தகைய சூழ்நிலைமைகள் சமன்பாடான சிட்சையை அளிப்பதில் உணர்ச்சிப்பூர்வமான கஷ்டத்தைத் தரும். எனினும், “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என்று பைபிள் நமக்கு சொல்கிறது. (நீதிமொழிகள் 29:15) ஆகவே மணத் துணைவராயிருந்தவரின் மூலம் வரும் குற்றவுணர்ச்சிகளுக்கோ பச்சாதாபத்திற்கோ உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திற்கோ அடிபணிந்துவிடாதீர்கள். நியாயமான, உறுதியான தராதரங்களை வையுங்கள். பைபிள் நியமங்களை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.—நீதிமொழிகள் 13:24.
17. குடும்ப அங்கத்தினர்களின் பங்கு எவ்வாறு ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் தெளிவற்றதாகலாம், இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
17 ஆனாலும், ஒற்றைத் தாயானவள் தன் மகனைக் குடும்பத் தலைவனாக, பதில் துணைவராக (surrogate spouse) பாவித்தால் அல்லது தன் மகளை நம்பகமான சிநேகிதியாக பாவித்து தனிப்பட்ட பிரச்சினைகளை சொல்லி அவளை பாரமடைய செய்தால் கஷ்டங்கள் எழும்பலாம். அவ்வாறு செய்வது நல்லதல்ல, பிள்ளையைக் குழப்பமடையச் செய்வதாகவும் இருக்கும். பெற்றோர் மற்றும் பிள்ளையின் பங்கு தெளிவற்றதானால், சிட்சை பயனற்றுப்போகும். நீங்கள் பெற்றோர் என்பதைத் தெரியப்படுத்துங்கள். தாயாக, உங்களுக்கு பைபிள் சார்ந்த புத்திமதி வேண்டுமென்றால், அதை மூப்பர்களிடமிருந்து அல்லது ஒருவேளை முதிர்ச்சிவாய்ந்த முதுமையான சகோதரியிடமிருந்து பெற நாடுங்கள்.—தீத்து 2:3-5-ஐ ஒத்துப்பாருங்கள்.
18, 19. (அ) மாற்றாங்குடும்பங்கள் எதிர்ப்படும் சில சவால்கள் என்ன? (ஆ) மாற்றாங்குடும்பத்தில் உள்ள பெற்றோரும் பிள்ளைகளும் எவ்வாறு ஞானத்தையும் பகுத்துணர்வையும் காட்டலாம்?
18 அவ்வாறே மாற்றாங்குடும்பங்களும் சவால்களை எதிர்ப்படுகின்றன. அடிக்கடி, “உடனடியான பாசத்தை” காண்பது மாற்றாம்-பெற்றோருக்கு அபூர்வமாயிருக்கிறது. உதாரணமாக, மாற்றாம்-பிள்ளைகள் சொந்த பிள்ளைகளிடமாக பாரபட்சமாய் நடந்துகொள்வதாக தோன்றும் எதையும் மிகவும் எளிதில் கண்டுணரலாம். (ஆதியாகமம் 37:3, 4-ஐ ஒத்துப்பாருங்கள்.) பிரிந்துபோன பெற்றோரால் வரும் மனவேதனையாலும் மாற்றாம்-பெற்றோரை அன்புகூருவது தங்களுடைய சொந்த தாய்தகப்பன்மாருக்கு ஏதோவொரு விதத்தில் உண்மையற்றவர்களாக நடந்துகொள்வதாக இருக்கலாம் என்ற பயத்தாலும் மாற்றாம்-பிள்ளைகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். தேவையான சிட்சையளிக்க எடுக்கும் முயற்சிகள் ‘நீங்கள் என்னுடைய உண்மையான பெற்றோரல்ல!’ என்று கோபத்தோடு ஞாபகப்படுத்தி சொல்வதில் விளைவடையலாம்.
19 நீதிமொழிகள் 24:3 சொல்வதாவது: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.” ஆம், ஒரு மாற்றாங்குடும்பம் வெற்றிபெறவேண்டுமானால், எல்லாருடைய பங்கிலும் ஞானத்தையும் பகுத்துணர்வையும் கேட்கிறது. காலப்போக்கில், காரியங்கள் மாறிவிட்டன என்ற பெரும்பாலும் வேதனைதரும் உண்மையைப் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வேண்டும். மாற்றாம்-பெற்றோருங்கூட அவ்வாறே பொறுமையாகவும் பரிவுடனும் இருக்க கற்றுக்கொள்வது அவசியம், வேண்டாவெறுப்பாக பிரதிபலிப்பதாக தோன்றினால் உடனடியாக புண்பட்டுவிடக்கூடாது. (நீதிமொழிகள் 19:11; பிரசங்கி 7:9) சிட்சையளிக்கும் பங்கை வகிப்பதற்கு முன்பாக, மாற்றாம்-பிள்ளையோடு நட்புறவை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அத்தகைய ஒரு கட்டை உருவாக்கும் வரை, சொந்த பெற்றோர் சிட்சையளிப்பதை நல்லதாக சிலர் கருதலாம். அழுத்த நிலைகள் ஏற்பட்டால், பேச்சுத்தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கவேண்டும். “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு,” என்று நீதிமொழிகள் 13:10 சொல்கிறது.c
உங்கள் குடும்பத்தைக் காத்துக்கொள்ள தொடர்ந்து பிரயாசப்படுங்கள்!
20. கிறிஸ்தவ குடும்பத் தலைவர்கள் எதைத் தொடர்ந்து செய்யவேண்டும்?
20 பலமான கிறிஸ்தவ குடும்பங்கள் தற்செயலாக வருவது கிடையாது. உங்கள் குடும்பங்களைக் காத்துக்கொள்ள குடும்பத் தலைவர்களாகிய நீங்கள் தொடர்ந்து பிரயாசப்படவேண்டும். ஆரோக்கியமற்ற தன்மைகளையோ உலக சுபாவங்களையோ கவனித்து, எச்சரிப்புள்ளவர்களாயிருங்கள். வார்த்தையிலும் நடக்கையிலும் அன்பிலும் விசுவாசத்திலும் கற்பிலும் நல்ல முன்மாதிரிகளாயிருங்கள். (1 தீமோத்தேயு 4:12) கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுங்கள். (கலாத்தியர் 5:22, 23) பொறுமை, பரிவு, மன்னிக்கும் சுபாவம், கனிவு ஆகியவை உங்கள் பிள்ளைகளுக்கு கடவுளுடைய வழிகளைப் போதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பலப்படுத்தும்.—கொலோசெயர் 3:12-14.
21. ஒருவருடைய வீட்டில் எப்படி ஓர் அனலான, சந்தோஷமான சூழ்நிலைமையைக் காத்துக்கொள்ளலாம்?
21 கடவுளுடைய உதவியோடு, சந்தோஷமான, அனலான ஆவியானது வீட்டில் நிலவுவதைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பமாக சேர்ந்து நேரத்தை செலவழியுங்கள், நாளில் ஒரு வேளையாவது ஒன்றுசேர்ந்து உணவருந்த பிரயாசப்படுங்கள். கிறிஸ்தவ கூட்டங்கள், வெளி ஊழியம், குடும்பப் படிப்பு ஆகியவை அத்தியாவசியமானவை. என்றாலுங்கூட, “நகைக்க ஒரு காலமுண்டு; . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 4) ஆம், கட்டியெழுப்புதலான கேளிக்கைக்கான நேரங்களுக்காக திட்டமிடுங்கள். அருங்காட்சியகங்கள், மிருகக்காட்சி சாலைகள் மேலும் அதுபோன்ற இடங்களைச் சென்று பார்ப்பது முழுக் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அல்லது டிவியை அணைத்துவிட்டு, பாடுவதிலும் பாட்டுக் கேட்பதிலும் விளையாடுவதிலும் பேசுவதிலும் நேரத்தை செலவழிக்கலாம். இது குடும்பம் நெருக்கமாக ஒன்றிவருவதற்கு உதவக்கூடும்.
22. உங்கள் குடும்பத்தைக் காத்துக்கொள்ள ஏன் நீங்கள் பிரயாசப்படவேண்டும்?
22 “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடை”வதன் மூலம் யெகோவாவை முழுமையாக பிரியப்படுத்துவதில் கிறிஸ்தவ பெற்றோராகிய நீங்கள் அனைவருமே தொடர்ந்து பிரயாசப்படுவீர்களாக. (கொலோசெயர் 1:10) கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் பலமான அஸ்திபாரத்தின்மீது உங்கள் குடும்பத்தினரைக் கட்டுங்கள். (மத்தேயு 7:24-27) மேலும் “யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” உங்கள் பிள்ளைகளை வளர்க்கும் முயற்சிகள் அவருடைய அங்கீகாரத்தைப் பெறும் என்பதன்பேரில் நிச்சயமுள்ளவர்களாக இருப்பீர்களாக.—எபேசியர் 6:4, NW.
[அடிக்குறிப்புகள்]
a செப்டம்பர் 8, 1992 அவேக்!-ல் “பைபிளின் கருத்து: ‘சிட்சையின் பிரம்பு’—அது காலத்திற்குப் பொருந்தாததா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b செப்டம்பர் 15, 1980 தி உவாட்ச்டவரில் 15-26 பக்கங்களைப் பாருங்கள்.
c அக்டோபர் 15, 1984 தி உவாட்ச்டவரில் 21-5 பக்கங்களைப் பாருங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கணவரும் மனைவியும் தங்கள் குடும்பத்தைக் கட்டியமைப்பதில் எவ்வாறு ஒத்துழைக்கலாம்?
◻ பிள்ளைகளின் சில உணர்ச்சிப்பூர்வ தேவைகள் என்ன, இவற்றை எவ்வாறு பூர்த்திசெய்யலாம்?
◻ குடும்பத் தலைவர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு முறைப்படியாகவும் சமயம் வாய்க்கையிலும் போதிக்கலாம்?
◻ பெற்றோர் எவ்வாறு நீதியின்படி சிட்சிக்கலாம்?
◻ ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் நன்மைக்காகவும் மாற்றாங்குடும்பங்களின் நன்மைக்காகவும் என்ன செய்யலாம்?
[பக்கம் 16-ன் படம்]
ஒரு பிள்ளையின் உணர்ச்சிப்பூர்வ வளர்ச்சிக்கு தகப்பனுடைய அன்பும் அங்கீகாரமும் முக்கியம்