பெற்றோரே, உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்
‘ஒருவன் தன் சொந்த குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் . . . தனது விசுவாசத்தையே மறுதலிப்பவனாக இருப்பான்.’—1 தீமோத்தேயு 5:8, Nw.
1, 2. (அ) குடும்பத்திலுள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சபை கூட்டங்களுக்கு வருவதைப் பார்ப்பது ஏன் உற்சாகமூட்டுகிறது? (ஆ) சபை கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் வந்துசேர, குடும்பங்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?
கிறிஸ்தவ சபைகளில், கூட்டம் ஆரம்பிப்பதற்குச் சற்று முன் உங்கள் கண்களைக் கொஞ்சம் ஓட விட்டீர்களென்றால் அழகாகவும் சுத்தமாகவும் உடையணிந்த பிள்ளைகள், தங்கள் பெற்றோரோடு சேர்ந்து உட்காருவதைக் கவனிப்பீர்கள். அத்தகைய குடும்பங்களில் நிலவுகிற அன்பைப் பார்ப்பது, அதாவது யெகோவா மீது அவர்கள் காட்டும் அன்பையும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பையும் பார்ப்பது மனதிற்கு இனிமையாக இருக்கிறது, அல்லவா? என்றாலும், சபை கூட்டத்திற்குச் சரியான நேரத்தில் குடும்பத்தோடு வந்துசேர அவர்கள் எவ்வளவோ முயற்சி எடுக்கிறார்கள்.
2 பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்கள் நாள் முழுக்க தங்கள் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார்கள், அதுவும் சபை கூட்டங்கள் இருக்கும் நாட்களில் முழு குடும்பமே அதிக பிஸியாகி விடுகிறது. சமையல் செய்ய வேண்டும், வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும், ஹோம்வொர்க் முடிக்க வேண்டும். முக்கியமாக, பெற்றோர்களுக்குதான் அதிகப் பொறுப்பு இருக்கிறது; பிள்ளைகள் எல்லாரும் குளித்து முடித்து சுத்தமாக இருக்கிறார்களா, சாப்பிட்டுவிட்டார்களா, நேரத்திற்குக் கிளம்பிவிட்டார்களா என்பதையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டும். அது போதாதென்று, வேண்டாத வேளையில்தான் பிள்ளைகள் அசம்பாவிதம் ஏதாவது செய்துவிடுவார்கள். விளையாடும்போது பெரியவன் பேன்ட்டை கிழித்துக்கொள்வான். சாப்பிடும்போது கடைக்குட்டி தன் சட்டையில் சிந்திக்கொள்ளும். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள், இப்படி ஏதாவதொன்று நிகழ்ந்துவிடும். (நீதிமொழிகள் 22:15) விளைவு? பெற்றோர்கள் என்னதான் கவனமாகத் திட்டமிட்டிருந்தாலும், கடைசியில் அதன்படி நடக்காமலே போய்விடலாம். ஆனாலும், அந்தத் தடங்கல்களையெல்லாம் ஒருவழியாகச் சமாளித்து, சபை கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பொதுவாக அவர்கள் ராஜ்ய மன்றத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்களை ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வருடமும் அவ்வாறு பார்ப்பது, அதுவும் அந்தப் பிள்ளைகள் யெகோவாவுக்குச் சேவை செய்பவர்களாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது எவ்வளவாய் உற்சாகமூட்டுகிறது!
3. குடும்பங்களை யெகோவா பெரிதும் மதிக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
3 ஒரு பெற்றோராக உங்களுக்கு இருக்கும் வேலைகள் சில சமயம் கடினமாக இருந்தாலும், அலுத்துக் களைக்க வைத்தாலும், உங்களுடைய முயற்சிகளையெல்லாம் யெகோவா பெரிதும் மதிக்கிறார் என்பதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம். குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் யெகோவா. அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் “உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்கு” யெகோவா காரணராய் இருப்பதாக அவருடைய வார்த்தை சொல்கிறது. (எபேசியர் 3:14, 15, பொது மொழிபெயர்ப்பு) எனவே பெற்றோராகிய நீங்கள் உங்களுக்கு இருக்கும் குடும்பப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றும்போது, சர்வலோகப் பேரரசரையே கனப்படுத்துகிறீர்கள். (1 கொரிந்தியர் 10:31) அது மாபெரும் பாக்கியம் அல்லவா? அப்படியானால், பெற்றோர்களுக்கு யெகோவா கொடுத்துள்ள நியமிப்பைப் பற்றிக் கலந்தாலோசிப்பது மிக மிகப் பொருத்தமானது. இந்தக் கட்டுரையில், குடும்பத்தாருடைய தேவைகளைப் பூர்த்திசெய்வது சம்பந்தமான குறிப்புகளைப் பார்க்க இருக்கிறோம். பெற்றோர்கள் குடும்பத் தேவைகளை எந்த மூன்று விதங்களில் பூர்த்திசெய்ய வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதை இப்போது சிந்திக்கலாம்.
பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
4. குடும்பத்தில், பிள்ளைகளின் தேவையைப் பூர்த்திசெய்வது சம்பந்தமாக யெகோவா என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்?
4 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஒருவன் தன் சொந்த ஜனத்தாரின், குறிப்பாகத் தன் சொந்த குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிப்பவனாக இருப்பான், அதோடு அவிசுவாசியிலும் மோசமானவனாக இருப்பான்.’ (1 தீமோத்தேயு 5:8, NW) இங்கே “ஒருவன்” என்று பவுல் குறிப்பிட்டபோது, அவர் யாரை மனதில் வைத்திருந்தார்? குடும்பத் தலைவரை, பொதுவாக தகப்பனை அவர் மனதில் வைத்திருந்தார். குடும்பத்தில் பெண்களையும் கௌரவமான ஒரு ஸ்தானத்தில் கடவுள் நியமித்திருக்கிறார், அதாவது கணவனுக்கு ஏற்ற துணையாக இருக்கும்படி நியமித்திருக்கிறார். (ஆதியாகமம் 2:18) பைபிள் காலங்களில், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவன்மாருக்கு உதவினார்கள். (நீதிமொழிகள் 31:13, 14, 16) இன்று, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன.a கிறிஸ்தவ ஒற்றைப் பெற்றோர் பலர் தங்கள் குடும்பத்தாருடைய தேவைகளை அருமையான விதத்தில் பூர்த்திசெய்து வருகிறார்கள். ஆனாலும், தாய் தந்தை இருவருமே உள்ள குடும்பமும், அதில் தந்தை முன்னின்று வழிநடத்துவதும் நன்றாக இருக்கும்.
5, 6. (அ) தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிலர் என்னென்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்? (ஆ) உலகப்பிரகாரமான வேலையைக் குறித்ததில் எத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருப்பது தங்களுடைய முயற்சியைக் கைவிடாதிருக்க கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு உதவும்?
5 பவுல், எவ்விதமான தேவைகளை மனதில் வைத்து 1 தீமோத்தேயு 5:8-ஐ எழுதினார்? அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறபடி, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையே அவர் மனதில் வைத்து எழுதினார். அதைப் பூர்த்திசெய்வதற்காக ஒரு குடும்பத் தலைவர் இன்றைய உலகில் அநேக சவால்களை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. தற்கால வேலை நீக்கங்களும், வேலையில்லாத் திண்டாட்டங்களும், விலைவாசிகளும் அதிகரித்துக்கொண்டே போவதால் உலகெங்குமே பணக்கஷ்டம் நிலவி வருகிறது. இத்தகைய சவால்கள் மத்தியிலும் முயற்சியைக் கைவிடாதிருக்க எது ஒரு பெற்றோருக்கு உதவும்?
6 யெகோவா கொடுத்துள்ள பொறுப்பையே நிறைவேற்றி வருகிறோம் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற முடிந்தும், அப்படிச் செய்ய மறுக்கும் ஒருவர் ‘விசுவாசத்தை மறுதலிப்பவருக்குச்’ சமமானவரென்று கடவுளால் ஏவப்பட்ட பவுலின் வார்த்தைகள் காண்பிக்கின்றன. எனவே, கடவுளுக்கு முன் அப்படிப்பட்ட நிலையில் இருப்பதைத் தவிர்க்க ஒரு கிறிஸ்தவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். ஆனால், வருத்தகரமாக, இன்றைய உலகில் அநேகர் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 3) சொல்லப்போனால், எத்தனையோ தகப்பன்மார்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கிறார்கள், தங்கள் குடும்பத்தைத் தத்தளிக்க விடுகிறார்கள். கிறிஸ்தவக் கணவன்மாரோ தங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யாமல் கல்நெஞ்சோடு இருப்பதில்லை, அலட்சிய மனப்பான்மையையும் காட்டுவதில்லை. கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்களுடைய சக வேலையாட்கள் பெரும்பாலோரைப் போல் இல்லாமல், மிகவும் தாழ்வான வேலைகள் செய்வதைக்கூட கெளரவமானதாகவும் முக்கியமானதாகவும் யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவதாகவும் கருதுகிறார்கள்; அத்தகைய வேலைகள் தங்களுடைய குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுகிறது என்பதாலேயே அவர்கள் அப்படிக் கருதுகிறார்கள்.
7. இயேசுவின் முன்மாதிரியைப் பெற்றோர்கள் ஆழ்ந்து சிந்திப்பது ஏன் பொருத்தமானது?
7 இவ்விஷயத்தில், இயேசுவின் பரிபூரண முன்மாதிரியைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதுகூட குடும்பத் தலைவர்களுக்கு உதவலாம். தீர்க்கதரிசன அர்த்தத்தில் இயேசுவை “நித்திய பிதா” என்று பைபிள் குறிப்பிடுவதை மறந்துவிடாதீர்கள். (ஏசாயா 9:6, 7) ‘முந்தின மனுஷனாகிய ஆதாம்’ வகிக்க வேண்டிய ஸ்தானத்தை ‘பிந்தின ஆதாமாகிய’ இயேசு வகிக்கிறார், தம்மை விசுவாசிப்பவர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தந்தையாக அவர் விளங்குகிறார். (1 கொரிந்தியர் 15:45) தன்னலம்பிடித்த தந்தையாக ஆன ஆதாமைப் போல் அல்லாமல், இயேசு ஒரு சிறந்த தந்தையாக இருக்கிறார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” என்று பைபிள் அவரைப் பற்றிச் சொல்கிறது. (1 யோவான் 3:16) ஆம், மற்றவர்களுக்காக இயேசு மனமுவந்து தம் உயிரையே அளித்தார். அதுமட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களில்கூட சுயநலம் கருதாமல் மற்றவர்களுடைய தேவைகளுக்குத்தான் அவர் முதலிடம் கொடுத்தார். அந்தச் சுய தியாக மனப்பான்மையை பெற்றோராகிய நீங்கள் காண்பித்தால், உங்களுக்கும் நன்மை, உங்கள் குடும்பத்துக்கும் நன்மை.
8, 9. (அ) சுயநலம் கருதாமல் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பறவைகளிடமிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) கிறிஸ்தவப் பெற்றோர் அநேகர் சுய தியாக மனப்பான்மையை எப்படிக் காண்பித்து வருகிறார்கள்?
8 தறிகெட்டுப்போன கடவுளுடைய ஜனங்களிடம் இயேசு சொன்ன பின்வரும் வார்த்தைகளிலிருந்து சுயநலமற்ற அன்பைப் பற்றிப் பெற்றோர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்: “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 23:37) தாய்க்கோழி தன் குஞ்சுகளை, சிறகுகளின் கீழ் பாதுகாப்பதை இயேசு இங்கே தத்ரூபமாகச் சித்தரிக்கிறார். குஞ்சுகளைத் தீங்கிலிருந்து பாதுகாக்க தன் உயிரையே பணயம் வைக்க தயாராயிருக்கும் தாய்க்கோழியின் இயல்பிலிருந்து பெற்றோர்கள் உண்மையிலேயே அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, அம்மா பறவையும் அப்பா பறவையும் அன்றாடம் என்னென்ன காரியங்களைச் செய்கின்றன என்பதைப் பார்ப்பதும்கூட ஆச்சரியமளிக்கிறது. இரை இருக்கிற இடத்திற்கும் கூட்டிற்கும் இடையே அவை மாறி மாறி பறந்து இரையைக் கொண்டு வருகின்றன. அதை அந்தக் குஞ்சுகள் விழுங்கிய பிறகு, இன்னும் வேண்டும் வேண்டும் என்று கீச்சிடுகின்றன; கடைசியில் ஓய்ந்து போய்விடுகிற நிலையில்கூட, தங்கள் குஞ்சுகளின் திறந்த அலகுக்குள் இரையை ஊட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆம், யெகோவாவின் படைப்புகளில் பெரும்பாலானவை அவற்றின் குஞ்சுகளைக் கவனிக்கும் விஷயத்தில் ‘இயல்பிலேயே ஞானமுள்ளவையாய்’ இருக்கின்றன.—நீதிமொழிகள் 30:24, NW.
9 அவ்வாறே, இன்று உலகெங்குமுள்ள கிறிஸ்தவப் பெற்றோர்களாகிய நீங்கள் மெச்சத்தக்க விதத்தில் சுய தியாக மனப்பான்மையைக் காண்பித்து வருகிறீர்கள். உங்களுக்கு எந்தத் தீங்கு வந்தாலும், உங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் வந்துவிடக் கூடாதென்பதில் அக்கறையோடு இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுப்பதற்காக அன்றாடம் மனமுவந்து தியாகங்களைச் செய்கிறீர்கள். உங்களில் அநேகர் கஷ்டமான வேலைகளுக்கு அல்லது சலிப்பூட்டும் வேலைகளுக்குச் செல்வதற்காக சீக்கிரமாகவே எழுந்துவிடுகிறீர்கள். குடும்பத்துக்குச் சத்துள்ள உணவைக் கொடுப்பதற்காக பாடுபடுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல உடையும், நல்ல வீடும், போதிய கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடினமாய்ப் போராடுகிறீர்கள். இதையே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் விடாமல் செய்து வருகிறீர்கள். நிச்சயமாகவே அத்தகைய சுய தியாகமும் சகிப்புத்தன்மையும் யெகோவாவைப் பிரியப்படுத்துகின்றன! (எபிரெயர் 13:16) உங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் நீங்கள் செய்து வருகிற போதிலும், இவற்றைவிட முக்கியமான தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டியிருப்பதையும் மறக்காமல் இருக்கிறீர்கள்.
ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
10, 11. மனிதர்களுடைய தேவைகளிலேயே மிக முக்கியமானது எது, தங்கள் பிள்ளைகளுக்கு இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு கிறிஸ்தவப் பெற்றோர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்?
10 பிள்ளைகளுடைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைவிட மிக முக்கியமானது அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதாகும். இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4; 5:3, NW) பிள்ளைகளுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்யலாம்?
11 இந்த விஷயம் சம்பந்தமாக, உபாகமம் 6:5-7-லுள்ள பைபிள் வசனங்கள்தான் மிக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து, அந்த வசனங்களை வாசியுங்கள். பெற்றோர்கள் முதலில் தங்களுடைய ஆன்மீகத்தன்மையை வளர்த்துக்கொள்ளுமாறும், யெகோவா மீதான அன்பை வளர்த்துக்கொள்ளுமாறும், அவருடைய வார்த்தைகளை மனதார ஏற்றுக்கொள்ளுமாறும் அங்கு சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அப்படியானால், பெற்றோர்களாகிய நீங்கள் யெகோவாவுடைய வழிகளையும், நியமங்களையும், சட்டங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை நேசிக்க வேண்டுமானால், கடவுளுடைய வார்த்தையான பைபிளைத் தவறாமல் வாசிப்பதற்கும், தியானிப்பதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது உங்கள் இருதயம் அருமையான பைபிள் சத்தியங்களால் பொங்கிவழியும், அதன் விளைவாக உங்களுக்கு பயபக்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும், யெகோவா மீது அன்பும் உண்டாகும். அதுமட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை உங்களால் கற்றுத்தரவும் முடியும்.—லூக்கா 6:45.
12. பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களைக் கருத்தாய்ப் போதிக்கும் விஷயத்தில், பெற்றோர்கள் இயேசுவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?
12 ஆன்மீக ரீதியில் பலமாக உள்ள பெற்றோர்கள், யெகோவாவுடைய வார்த்தைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ‘கருத்தாய்ப் போதிக்கும்படி’ உபாகமம் 6:7-ல் சொல்லப்பட்டுள்ள ஆலோசனையைக் கடைப்பிடிக்க எப்போதும் தயார்நிலையில் இருக்கிறார்கள். ‘கருத்தாய்ப் போதிப்பது’ என்பது திரும்பத் திரும்பச் சொல்லிக் கற்றுத் தருவதையும் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. திரும்பத் திரும்பச் சொல்லித் தரும்போதுதான் நம் எல்லாராலும்—குறிப்பாகப் பிள்ளைகளால்—கற்றுக்கொள்ள முடியும் என்பது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இயேசுவும்கூட ஊழியம் செய்யும்போது விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்து கற்றுக்கொடுத்தார். உதாரணத்திற்கு, தம்முடைய சீஷர்கள் அகந்தையையும் போட்டி மனப்பான்மையையும் தவிர்த்து மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும் என்ற நியமத்தை உணர்த்துவதற்காக வெவ்வேறு வழிகளில் அவர்களுக்குக் கற்பித்தார். நியாயங்காட்டிப் பேசினார், உதாரணம் சொல்லி விளக்கினார், செயலிலும் காண்பித்தார். (மத்தேயு 18:1-4; 20:25-27; யோவான் 13:12-15) ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இயேசு ஒருபோதும் பொறுமை இழந்துவிடவில்லை என்பதே. அவரைப் போல, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அடிப்படையான சத்தியங்களைக் கற்றுத்தர பல்வேறு வழிகளைக் கையாள வேண்டும்; யெகோவாவுடைய நியமங்களை அவர்கள் புரிந்துகொண்டு அவற்றைக் கடைப்பிடிக்கும் வரையில் பொறுமையாக திரும்பத் திரும்பச் சொல்லித் தந்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
13, 14. பைபிள் சத்தியங்களைப் பெற்றோர்கள் எந்தெந்த சமயங்களில் தங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிக்கலாம், அதற்கு எந்தக் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம்?
13 அப்படிக் கற்றுக்கொடுப்பதற்குக் குடும்பப் படிப்பு நேரங்கள் மிகச் சிறந்தவை. சொல்லப்போனால், தவறாமல் நடத்தப்படும் உற்சாகமூட்டுகிற சந்தோஷமான குடும்பப் படிப்புதான் குடும்பத்தாரின் ஆன்மீகத்தன்மைக்கு அஸ்திவாரமாய் அமைகிறது. உலகெங்குமுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களில் அத்தகைய படிப்பு மகிழ்ச்சிகரமாய் நடத்தப்படுகிறது; படிப்பை நடத்துவதற்கு யெகோவாவுடைய அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பிள்ளைகளுடைய தேவைகளுக்கு ஏற்றபடி அந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் பெரிய போதகரிடமிருந்து கற்றுக்கொள் என்ற புத்தகமும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகமும் ஒப்பற்ற பரிசுகளாக இருக்கின்றன.b என்றாலும், குடும்பப் படிப்பு நடத்தும்போது மட்டும்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை, வேறு சமயங்களிலும் அவர்கள் கற்றுக்கொடுக்கலாம்.
14 உபாகமம் 6:7 காண்பிக்கிறபடி, பெற்றோராகிய நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகக் காரியங்களைப் பற்றிக் கலந்துபேசலாம். ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓய்வாகப் பொழுதைக் கழிக்கும்போதோ உங்கள் பிள்ளைகளுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். ஆனால் அதற்காக, பைபிள் சத்தியங்களைப் பற்றி அவர்களுக்கு வாய் ஓயாமல் “லெக்சர்” கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டாம். மாறாக, குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசும்போது உற்சாகமூட்டும் விதத்தில் ஆன்மீக ரீதியிலேயே பேச முயலுங்கள். உதாரணத்திற்கு, விழித்தெழு! பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகள் வெளிவருகின்றன. எனவே, யெகோவாவின் படைப்புகளான மிருக ஜீவன்களைப் பற்றியும், உலகெங்கிலும் உள்ள கண்ணுக்கினிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களைப் பற்றியும், மனிதர்களின் பலதரப்பட்ட அருமையான கலாச்சாரம், வாழ்க்கைப் பாணி ஆகியவற்றைப் பற்றியும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அந்தப் பத்திரிகையில் இருக்கின்றன. அத்தகைய விஷயங்களைக் கலந்துபேசும்போது, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் தந்திருக்கும் பிரசுரங்களை அதிகமாக வாசிக்க வேண்டுமென்ற ஆசை பிள்ளைகளுக்கு ஏற்படும்.—மத்தேயு 24:45-47, NW.
15. கிறிஸ்தவ ஊழியத்தைப் பலனளிக்கும் சுவாரஸ்யமான வேலையாகக் கருதுவதற்குப் பெற்றோர்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம்?
15 உற்சாகமூட்டும் விதத்தில் உங்கள் பிள்ளைகளுடன் பேசுவது, அவர்களுடைய ஆன்மீகத் தேவையின் இன்னொரு அம்சத்தைப் பூர்த்திசெய்ய உங்களுக்கு உதவும். கிறிஸ்தவப் பிள்ளைகள் தங்களுடைய மத நம்பிக்கைகளைத் திறம்பட்ட விதத்தில் மற்றவர்களிடம் சொல்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையில் ஏதோவொரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சோடு பேச்சாக அந்த விஷயத்தை ஊழியத்திற்குச் சம்பந்தப்படுத்திக் காட்ட நீங்கள் முயலலாம். உதாரணத்திற்கு, “யெகோவாவைப் பற்றிய இந்த விஷயத்தை இன்னும் நிறைய பேர் தெரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா? இந்த விஷயத்தை ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எப்படி ஒருவரிடம் பேசலாம் என்று நினைக்கிறாய்?” என அவர்களிடம் கேட்கலாம். பிள்ளைகளிடம் அப்படிப் பேசும்போது, கற்றுவரும் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமென்ற பேராவல் அவர்களுக்கு ஏற்படும். அதன் பிறகு, பிள்ளைகள் உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, வீட்டில் கலந்துபேசிய விஷயங்களை நீங்கள் மற்றவர்களிடம் பேசுவதை நேரடியாகப் பார்ப்பார்கள். ஊழியம் செய்வது சுவாரஸ்யமான, சந்தோஷமான வேலை என்பதையும் மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிற வேலை என்பதையும்கூட அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.—அப்போஸ்தலர் 20:35.
16. பெற்றோர்களின் ஜெபங்களைக் கேட்பதிலிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்?
16 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்திசெய்யும் இன்னொரு விதம் அவர்களோடு ஜெபம் செய்வதாகும். எப்படி ஜெபிப்பதென்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார், அதுமட்டுமல்ல பல முறை அவர்களோடு சேர்ந்து ஜெபிக்கவும் செய்தார். (லூக்கா 11:1-13) யெகோவாவுடைய சொந்தக் குமாரனோடு சேர்ந்து ஜெபம் செய்தபோது அவர்கள் எந்தளவு கற்றிருப்பார்கள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! அதேபோல, உங்களுடைய ஜெபங்களிலிருந்து உங்கள் பிள்ளைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். உதாரணமாக, நாம் எதிர்ப்படும் எந்தவொரு பிரச்சினையையும் குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல் தம்மிடம் ஜெபத்தில் பேச வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். ஆம், முக்கியமான ஓர் உண்மையை, அதாவது தங்களுடைய பரலோகப் பிதாவிடம் தாங்கள் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற உண்மையை, உங்களுடைய ஜெபங்களிலிருந்து பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்.—1 பேதுரு 5:7.
மனோரீதியான தேவைகளைப் பூர்த்திசெய்தல்
17, 18. (அ) பிள்ளைகளிடம் அன்பு காட்டுவதன் முக்கியத்துவத்தை பைபிள் எவ்வாறு வெளிப்படுத்துகிறது? (ஆ) பிள்ளைகளிடம் தங்கள் அன்பைத் தெரிவிப்பதில் அப்பாமார்கள் யெகோவாவை எப்படிப் பின்பற்ற வேண்டும்?
17 உண்மைதான், பிள்ளைகளுக்கு மனோரீதியான முக்கிய தேவைகளும் இருக்கின்றன. பிள்ளைகளுடைய மனோரீதியான தேவையைப் பூர்த்திசெய்வது எவ்வளவு முக்கியம் என்பதை கடவுளுடைய வார்த்தை பெற்றோர்களுக்குச் சொல்கிறது. உதாரணத்திற்கு, இளம் தாய்மார்கள் ‘தங்கள் பிள்ளைகளிடத்தில் அன்புள்ளவர்களாய்’ இருக்க வேண்டுமென அது அறிவுறுத்துகிறது. அப்படிச் செய்பவர்கள் புத்தியுள்ளவர்களாய் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (தீத்து 2:4, 5) ஒரு பிள்ளையிடம் அன்பு காண்பிப்பது நிச்சயமாகவே ஞானமான செயலாகும். அப்படிச் செய்வது மற்றவர்களிடம் அன்பு செலுத்த அந்தப் பிள்ளைக்குக் கற்றுத்தருகிறது, அதோடு வாழ்நாள் முழுவதும் நன்மைகளை அள்ளித் தருகிறது. மறுபட்சத்தில், ஒரு பிள்ளையிடம் அன்பு காண்பிக்காமல் இருப்பது முட்டாள்தனமான செயலாகும். அது மிகுந்த வேதனையை அளிக்கும், அதோடு நம்முடைய அபூரணத்தின் மத்தியிலும் நம்மீது அளவுகடந்த அன்பைப் பொழிகிற யெகோவாவை நாம் பின்பற்றவில்லை என்பதைக் காட்டும்.—சங்கீதம் 103:8-14.
18 நம்மீது அன்பு செலுத்துவதில் யெகோவாவே முதற்படியை எடுக்கிறார். 1 யோவான் 4:19-ல் சொல்லப்பட்டுள்ளபடி, ‘அவர் முந்தி [அதாவது, முதலாவது] நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார்.’ யெகோவாவின் இந்த முன்மாதிரியைக் குறிப்பாக அப்பாமார்கள் பின்பற்ற வேண்டும்; அப்பாமார்களாகிய நீங்கள், உங்களுடைய பிள்ளைகளோடு அன்பையும் பாசப்பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முதற்படியை எடுக்க வேண்டும். “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி” அவர்களை விரக்தியடையச் செய்யாதீர்கள் என்று அப்பாமார்களுக்கு பைபிள் பரிந்துரை செய்கிறது. (கொலோசெயர் 3:21) அம்மா அப்பா தங்கள் மீது அன்பாக இல்லை அல்லது தங்களை உயர்வாகக் கருதுவதில்லை என்ற எண்ணம்தான் பிள்ளைகளைப் பெருமளவு விரக்தியடையச் செய்கிறது. தங்கள் பாச உணர்ச்சிகளை வெளிக்காட்ட தயங்குகிற அப்பாமார்கள் யெகோவாவுடைய முன்மாதிரியை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் தம்முடைய குமாரனை ஆதரிப்பதையும் நேசிப்பதையும் பரலோகத்திலிருந்தே தெரிவித்தார். (மத்தேயு 3:17; 17:5) அது இயேசுவுக்கு எவ்வளவாய் உற்சாகமூட்டியிருக்கும்! அதேபோல, பெற்றோர்கள் தங்களுடைய அன்பையும் ஆதரவையும் பிள்ளைகளிடம் எதார்த்தமாகத் தெரிவிக்கும்போது, பிள்ளைகள் பெருமளவு பலத்தையும் தைரியத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
19. கண்டித்து வளர்ப்பது ஏன் முக்கியம், கிறிஸ்தவப் பெற்றோர்கள் என்ன சமநிலையைக் காண்பிக்க வேண்டும்?
19 உண்மைதான், பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அன்பு வெறும் வார்த்தைகளில் மட்டுமே காட்டப்படுகிற ஒன்றல்ல. அன்பு என்பது முக்கியமாக செயலில் காட்டப்படுகிறது. பொருளாதாரத் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பெற்றோர்கள் பூர்த்திசெய்வது, குறிப்பாக அன்பினால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்வது அவர்களுடைய பாசத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் அன்பை ஒரு முக்கிய அர்த்தத்தில் வெளிக்காட்டுகிறார்கள். ‘யெகோவா எவர் மீது அன்பு செலுத்துகிறாரோ அவரை அவர் கண்டிக்கிறார்.’ (எபிரெயர் 12:6, NW) மறுபட்சத்தில், தங்கள் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்காத பெற்றோர்கள், அவர்களைப் பகைக்கிறார்கள்! (நீதிமொழிகள் 13:24) இந்த விஷயத்தில் யெகோவா எப்போதும் சரியான சமநிலையைக் காட்டுகிறார், அவர் எப்போதும் “மட்டாய்” கண்டிக்கிறார், அதாவது சரியான அளவில் கண்டிக்கிறார். (எரேமியா 46:28) அத்தகைய சமநிலையைக் காண்பிப்பது அபூரண பெற்றோர்களுக்கு எப்போதும் சுலபமாய் இருப்பதில்லை. என்றாலும், அந்தச் சமநிலையைக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் தகுந்ததே. உறுதியாகவும் அன்பாகவும் கண்டிக்கப்படும் ஒரு பிள்ளை பிற்பாடு சந்தோஷமான, வளமான வாழ்க்கையை அனுபவிக்கும். (நீதிமொழிகள் 22:6) தங்கள் பிள்ளைக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டுமென்று தானே ஒவ்வொரு கிறிஸ்தவப் பெற்றோரும் விரும்புவார்கள்?
20. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ‘ஜீவனைத் தேர்ந்தெடுப்பதற்கான’ மிகச் சிறந்த வாய்ப்பை எவ்வாறு அளிக்கலாம்?
20 பெற்றோர்களுக்கென்று யெகோவா கொடுத்துள்ள முக்கியமான வேலையை நீங்கள் செய்யும்போது, அதாவது உங்கள் பிள்ளைகளுடைய பொருளாதார, ஆன்மீக, மனோரீதியான தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது, மிகுதியான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அவ்வாறு செய்வதன் மூலம், ‘ஜீவனைத் தேர்ந்தெடுத்து’ உயிர் ‘பிழைப்பதற்கான’ மிகச் சிறந்த வாய்ப்பை உங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கிறீர்கள். (உபாகமம் 30:19) யெகோவாவுக்குச் சேவை செய்து, ஜீவனுக்குப் போகும் பாதையில் நிலைத்திருக்க தீர்மானித்துள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தங்கள் பெற்றோருடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறார்கள். (சங்கீதம் 127:4, 5) அந்த மகிழ்ச்சி என்றென்றும் நீடித்திருக்கும்! ஆனால், சிறு பிள்ளைகள் இன்று எந்தெந்த விதங்களில் யெகோவாவைத் துதிக்க முடியும்? இதைப் பற்றி அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கலந்தாலோசிப்பில், குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள நியமங்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, அப்படிப் பூர்த்திசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிற கிறிஸ்தவப் பெண்களுக்கும் பொருந்தும்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
தங்கள் பிள்ளைகளுடைய பின்வரும் தேவைகளைப் பெற்றோர்கள் எவ்வாறு பூர்த்திசெய்யலாம்:
• பொருளாதாரத் தேவைகள்?
• ஆன்மீகத் தேவைகள்?
• மனோரீதியான தேவைகள்?
[பக்கம் 18-ன் படம்]
பெரும்பாலான பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதற்காக அயராமல் உழைக்கின்றன
[பக்கம் 20-ன் படம்]
பெற்றோர்கள் முதலில் தங்களுடைய ஆன்மீகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
படைப்பாளரைப் பற்றித் தங்கள் பிள்ளைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் கற்றுத்தரலாம்
[பக்கம் 22-ன் படம்]
பெற்றோருடைய ஆதரவு இருக்கும்போது பிள்ளைகள் பலத்தையும் தைரியத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்