நம் பிள்ளைகள்—ஓர் அருமையான சொத்து
“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.”—சங்கீதம் 127:4.
1. முதல் மானிட குழந்தை எப்படி பிறந்தது?
யெகோவா தேவன் ஆணையும் பெண்ணையும் படைத்த விதத்தால் நிகழும் அற்புத செயல்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்! முழு வளர்ச்சியடைந்த ஒரு புதிய நபரை—முதல் மானிட குழந்தையை—உருவாக்குவதில் அப்பா ஆதாமும் அம்மா ஏவாளும் பங்கு வகித்தார்கள். (ஆதியாகமம் 4:1) கருத்தரிப்பும் குழந்தை பிறப்பும் இன்று வரை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது, அநேகர் இதை ஓர் அற்புதம் என்றே வர்ணிக்கிறார்கள்.
2. கருத்தரித்த பெண்ணின் கர்ப்பப்பைக்குள் நிகழும் சம்பவங்களை ஓர் அற்புதம் என்று ஏன் சொல்கிறீர்கள்?
2 தகப்பனுடன் இணை சேர்வதால் தாய்க்குள் உருவாகிற மூல உயிரணு சுமார் 270 நாட்களுக்குள் கோடானு கோடி உயிரணுக்களைக் கொண்ட ஒரு குழந்தையாக வளருகிறது. அந்த மூல உயிரணுவில் 200 வகைகளுக்கும் மேற்பட்ட உயிரணுக்களை உருவாக்குவதற்குத் தேவையான கட்டளைகள் உள்ளன. மனித அறிவுக்கு எட்டாத மகத்தான அந்தக் கட்டளைகளைப் பின்பற்றி மலைக்கவைக்கும் சிக்கல்மிகு உயிரணுக்கள் ஒரு புதிய நபரை உருவாக்குவதற்கு ஏற்றபடி சரியான கிரமத்திலும் முறையிலும் வளருகின்றன!
3. புதியதோர் மனித உயிர் உருவாவதற்கு கடவுளே காரணராக இருக்க வேண்டும் என்று ஏன் சிந்திக்கும் மக்கள் ஒத்துக்கொள்கின்றனர்?
3 அந்தக் குழந்தையை உருவாக்கியவர் உண்மையில் யாரென நீங்கள் சொல்வீர்கள்? முதன்முதலில் உயிரைப் படைத்தவரே அவர். பைபிள் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: ‘யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்.’ (சங்கீதம் 100:3) பெற்றோராகிய உங்களுடைய எந்தவொரு விசேஷ திறமையாலும் அருமையான பச்சிளம் குழந்தையை நீங்கள் உருவாக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். புதியதோர் மனித உயிர் அற்புதமாக உருவாவதற்கு அளவற்ற ஞானமுள்ள கடவுளே மூலகாரணராக இருக்க முடியும். மகத்தான படைப்பாளரே தாயின் கருவறையில் ஒரு பிள்ளையை உருவாகச் செய்பவர் என்று சொல்லி, சிந்திக்கும் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்கே புகழ்மாலை சூட்டியிருக்கின்றனர். நீங்களும் அப்படி செய்கிறீர்களா?—சங்கீதம் 139:13-16.
4. மனிதரிடம் உள்ள எந்தக் குறைபாட்டை ஒருபோதும் யெகோவாவுக்கு சாட்ட முடியாது?
4 ஆனால், ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததியை உற்பத்தி செய்வதற்கு வெறுமனே உயிரியல் சுழற்சியை ஆரம்பித்து வைத்த யெகோவா உணர்ச்சியற்ற படைப்பாளரா? மனிதர் சிலர் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள், ஆனால் யெகோவா அப்படிப்பட்டவர் அல்ல. (சங்கீதம் 78:38-40) சங்கீதம் 127:4-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் [அதாவது சொத்து], கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” இப்பொழுது, சொத்து என்றால் என்ன, அது எதற்கு அத்தாட்சி அளிக்கிறது என்பதை நாம் சிந்திக்கலாம்.
சொத்தும் பலனும்
5. பிள்ளைகள் ஒரு சொத்தாக இருக்கிறார்கள் என ஏன் சொல்லலாம்?
5 பரம்பரைச் சொத்து என்பது ஒரு பரிசு போன்றது. தங்களுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக சொத்தை விட்டுச் செல்வதற்கு பெற்றோர்கள் பெரும்பாலும் வெகு காலமாக கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அது பணமாகவோ உடைமையாகவோ ஒருவேளை பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கும் ஏதாவதொரு பொருளாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும்சரி, ஒரு பெற்றோருடைய அன்பிற்கு அத்தாட்சியே அது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளைச் சொத்தாக கடவுள் கொடுத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. அவரிடமிருந்து வந்த அன்பான ஒரு பரிசாக அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இப்பிரபஞ்சத்தைப் படைத்தவரிடமிருந்து வந்த ஒரு பரிசாக உங்கள் பிள்ளைகளைக் கருதுகிறீர்கள் என்பதை உங்களுடைய செயல்கள் காட்டுகிறதென சொல்வீர்களா?
6. பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறமையை மனிதருக்குக் கொடுத்தபோது கடவுளுடைய நோக்கம் என்ன?
6 ஆதாம் ஏவாளின் சந்ததியாரால் பூமியை நிரப்ப வேண்டும் என்பதே இந்தப் பரிசை யெகோவா தந்தபோது அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 1:27, 28; ஏசாயா 45:18) கோடானு கோடி தேவதூதர்களைப் போல ஒவ்வொரு மனிதரையும் யெகோவா தனித்தனியாக படைக்கவில்லை. (சங்கீதம் 104:4; வெளிப்படுத்துதல் 4:11) மாறாக, தங்களுடைய அதே சாயலுடைய பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறனுடன் பெற்றோர்களைக் கடவுள் படைத்தார். இத்தகைய புதிய நபரைப் பெற்றெடுப்பதும் அவர்களைக் கவனிப்பதும் தாய் தகப்பனுக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த பாக்கியம்! பெற்றோர்களாக, இந்த அருமையான சொத்தை அனுபவித்து மகிழ்வதை சாத்தியமாக்கித் தந்த யெகோவாவுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கிறீர்களா?
இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
7. பெற்றோர் சிலரைப் போலின்றி, ‘மனித இனத்தின்’ மீது அன்பும் அக்கறையும் இயேசு எப்படி காண்பித்தார்?
7 வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், எல்லா பெற்றோரும் பிள்ளைகளை ஒரு நல்ல பலனாக, அதாவது ஒரு பரிசாக கருதுவதில்லை. அநேகர் தங்களுடைய பிள்ளைகள் மீது துளிகூட அன்பும் காட்டுவதில்லை. இத்தகைய பெற்றோர்கள் யெகோவாவுடைய அல்லது அவரது குமாரனுடைய மனப்பான்மையைப் பிரதிபலிப்பதில்லை. (சங்கீதம் 27:10; ஏசாயா 49:15) ஆனால், சிறுபிள்ளைகள் மீது இயேசு காட்டிய அக்கறையை சிந்தித்துப் பாருங்கள். மனிதராக இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பே, அதாவது பரலோகத்தில் வல்லமை வாய்ந்த ஆவி சிருஷ்டியாக இருந்தபோதே, ‘மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டதாக’ பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 8:31, பொது மொழிபெயர்ப்பு) மனிதர் மீது அவருக்கு அவ்வளவு அன்பிருந்தது, அதனால் நாம் நித்திய ஜீவனைப் பெற தமது உயிரையே மீட்கும்பொருளாக மனமுவந்து கொடுத்தார்.—மத்தேயு 20:28; யோவான் 10:18.
8. பெற்றோருக்கு இயேசு எப்படிச் சிறந்த முன்மாதிரி வைத்தார்?
8 இயேசு பூமியிலிருந்தபோது முக்கியமாக பெற்றோருக்குச் சிறந்த முன்மாதிரி வைத்தார். அவருடைய முன்மாதிரியை சிந்தித்துப் பாருங்கள். அவர் அதிக வேலையிலும் அழுத்தத்திலும் இருந்தபோதிலும்கூட பிள்ளைகளுடன் நேரம் செலவழித்தார். சந்தை வெளியில் அவர்கள் விளையாடுவதைக் கவனித்தார், அவர்கள் செய்கிற சில காரியங்களை தமது போதனையில் பயன்படுத்தினார். (மத்தேயு 11:16, 17) எருசலேமுக்குச் சென்ற அவருடைய கடைசி பயணத்தின்போது, தாம் பாடுபட்டு கொலை செய்யப்படுவார் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே, அவரைப் பார்ப்பதற்கு சிறுபிள்ளைகளை மக்கள் அழைத்து வந்தபோது, அவரை அந்தச் சிறுபிள்ளைகள் மேலும் சங்கடப்படுத்துவார்களே என்றெண்ணி இயேசுவின் சீஷர்கள் அவர்களை விரட்டினார்கள். ஆனால் இயேசு தமது சீஷர்களைக் கண்டித்தார். சிறுபிள்ளைகளுடன் இருப்பது தமக்கு ‘மகிழ்ச்சியே’ என்பதை காண்பித்து, அவர் இவ்வாறு கூறினார்: “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்.”—மாற்கு 10:13, 14.
9. நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பது ஏன் அதிக முக்கியம்?
9 இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். சிறுபிள்ளைகள் நம்மிடம் வரும்போது—நாம் அதிக ‘பிஸி’யாக இருந்தாலும்கூட—எப்படி பிரதிபலிக்கிறோம்? இயேசுவைப் போல் பிரதிபலிக்கிறோமா? பிள்ளைகளுக்கு முக்கியமாக பெற்றோரிடமிருந்து எது தேவையோ அதை கொடுப்பதற்கு, அதாவது நேரத்தையும் கவனிப்பையும் கொடுப்பதற்கு, இயேசு மனமுள்ளவராக இருந்தார். “நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்” போன்ற வார்த்தைகள் முக்கியம்தான். என்றாலும், செயல்களோ வார்த்தைகளைவிட அதிக வலிமையானவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மட்டுமல்ல, மிக முக்கியமாக என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் உங்களுடைய அன்பு வெளிப்படுகிறது. சின்னஞ் சிறுசுகளுக்காக நீங்கள் தரும் நேரம், கவனிப்பு, அக்கறை ஆகியவற்றால் அது காண்பிக்கப்படுகிறது. என்றாலும், இதையெல்லாம் செய்தாலும்கூட காணக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகலாம், ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பலன்களைக் காண முடியாமல் போகலாம். பொறுமை அவசியம். இயேசு தமது சீஷர்களிடம் நடந்துகொண்ட விதத்தைப் பின்பற்றினால் பொறுமையைக் கற்றுக்கொள்ளலாம்.
இயேசுவின் பொறுமையும் பாசமும்
10. மனத்தாழ்மையைப் பற்றிய ஒரு பாடத்தை இயேசு எப்படி தமது சீஷர்களுக்குக் கற்பித்தார், முதலில் அதற்கு பலன் கிடைத்ததா?
10 பெயரும் புகழும் பெற தமது சீஷர்கள் தொடர்ந்து போட்டி போடுவதை இயேசு அறிந்திருந்தார். ஒருநாள் தமது சீஷர்களுடன் கப்பர்நகூமுக்கு வந்தவுடன் இயேசு அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் வழியிலே எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம் பண்ணினார்கள்.” அவர்களை வன்மையாக கண்டிப்பதற்குப் பதிலாக, மனத்தாழ்மையைப் பற்றி நடைமுறையான ஒரு பாடத்தை அவர்களுக்குப் பொறுமையுடன் இயேசு கற்பித்தார். (மாற்கு 9:33-37) அதனால் நல்ல பலன்கள் கிடைத்ததா? உடனடியாக கிடைக்கவில்லை. சுமார் ஆறு மாதங்களுக்குப்பின், ராஜ்யத்தில் முதன்மையான ஸ்தானங்களுக்காக இயேசுவிடம் கேட்கும்படி யாக்கோபும் யோவானும் தங்கள் தாயைத் தூண்டிவிட்டார்கள். அவர்களுடைய சிந்தையை மீண்டும் பொறுமையாக இயேசு சரிசெய்தார்.—மத்தேயு 20:20-28.
11. (அ) இயேசுவுடன் மேல்மாடிக்கு வந்தபின் வழக்கமாக செய்ய வேண்டிய என்ன வேலையை அவருடைய சீஷர்கள் செய்யத் தவறினார்கள்? (ஆ) இயேசு என்ன செய்தார், அந்தச் சமயத்தில் அவருடைய முயற்சிகள் வெற்றி பெற்றனவா?
11 விரைவில், பொ.ச. 33 பஸ்கா பண்டிகை வந்தது, அதை ஆசரிப்பதற்காக இயேசுவும் அப்போஸ்தலர்களும் மட்டும் கூடிவந்தனர். மேல்மாடிக்கு வந்தபோது, மற்றவர்களுடைய தூசி படிந்த கால்களைக் கழுவும் வழக்கமான சேவையை, அதாவது வீட்டிலுள்ள ஒரு வேலைக்காரனோ ஒரு பெண்ணோ செய்யும் தாழ்வான ஒரு வேலையை 12 அப்போஸ்தலர்களில் எவருமே செய்ய முன்வரவில்லை. (1 சாமுவேல் 25:41; 1 தீமோத்தேயு 5:10) பெயரும் புகழும் பெற தமது சீஷர்கள் தொடர்ந்து ஏங்குவதைப் பார்த்தபோது அது இயேசுவுக்கு எவ்வளவு மனவேதனையை அளித்திருக்கும்! ஆகவே அவர்கள் ஒவ்வொருவருடைய கால்களையும் இயேசு கழுவி, தமது முன்மாதிரியைப் பின்பற்றி பிறருக்கு சேவை செய்யும்படி கெஞ்சி கேட்டுக்கொண்டார். (யோவான் 13:4-17) இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றினார்களா? பிற்பாடு அதே நாள் இரவில், “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று” என பைபிள் சொல்கிறது.—லூக்கா 22:24.
12. பிள்ளைகளைப் பயிற்றுவிக்க முயற்சி செய்வதில் பெற்றோர்கள் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
12 பிள்ளைகள் உங்களுடைய அறிவுரைக்குச் செவிகொடுக்காதபோது, இயேசு எப்படி உணர்ந்திருக்க வேண்டும் என்பதை பெற்றோராகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? அப்போஸ்தலர்கள் தங்களுடைய குறைகளை சரிசெய்வதில் மந்தமாக இருந்தபோதிலும், அவர்களுக்கு உதவி செய்வதை இயேசு கைவிட்டுவிடவில்லை என்பதை கவனியுங்கள். அவருடைய பொறுமை கடைசியில் பலனளித்தது. (1 யோவான் 3:14, 18) பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிக்க எடுக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட்டுவிடாமல், இயேசுவின் அன்பையும் பொறுமையையும் பின்பற்றுங்கள்.
13. பிள்ளை ஏதாவது கேட்க வந்தால் பெற்றோர் அதன் மீது ஏன் எரிந்து விழக்கூடாது?
13 பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், தங்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். தமது சீஷர்களின் சிந்தையை இயேசு அறிய விரும்பினார், ஆகவே அவர்கள் கேள்விகள் கேட்டபோது செவிகொடுத்துக் கேட்டார். சில விஷயங்களைப் பற்றி அவர்களுடைய கருத்தை கேட்டார். (மத்தேயு 17:25-27) நன்கு கற்பிப்பதற்கு கூர்ந்து கேட்பதும் உண்மையான அக்கறை காட்டுவதும் அவசியம். பிள்ளைகள் ஏதாவது கேட்க வந்தால், “தூர போ! நான் வேலையா இருப்பது தெரியல?” என்று எரிந்து விழுவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். பெற்றோர் உண்மையிலேயே அதிக வேலையாக இருந்தால், அந்த விஷயத்தைப் பற்றி பிறகு பேசலாம் என பிள்ளையிடம் அன்பாக சொல்ல வேண்டும். சொன்னபடி வேறொரு சமயத்தில் அந்த விஷயத்தைப் பற்றி பேசவும் வேண்டும். அப்போதுதான், பெற்றோருக்கு உண்மையிலேயே தன் மீது அக்கறை இருப்பதை அந்தப் பிள்ளை உணரும், தன் மனதிலுள்ளதையும் பெற்றோரிடம் தயங்காமல் சொல்லும்.
14. பிள்ளைகளிடம் பாசமழை பொழிவதன் சம்பந்தமாக இயேசுவிடமிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 பிள்ளைகளுடைய தோள் மீது கைகளைப் போடுவதன் மூலமும் அவர்களைக் கட்டி அணைப்பதன் மூலமும் பெற்றோர் பாசத்தைப் பொழிவது சரியா? இதற்கும் இயேசுவிடமிருந்து பெற்றோர் கற்றுக்கொள்ளலாம். “அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்” என பைபிள் சொல்கிறது. (மாற்கு 10:16) இதற்கு அந்தச் சிறு பிள்ளைகள் எப்படி பிரதிபலித்தார்கள் என நினைக்கிறீர்கள்? நிச்சயமாகவே அவர்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளியது, அவர்கள் இயேசுவிடம் கவரப்பட்டார்கள்! ஆகவே, பெற்றோராகிய உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே பாசமும் நேசமும் உண்மையிலேயே இருக்கும்போது அவர்களைக் கண்டிப்பதற்கும் அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் பிரதிபலிப்பார்கள்.
எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?
15, 16. குழந்தை வளர்ப்பு சம்பந்தமான ஒரு பிரபல கருத்து என்ன, அதை எது தூண்டியதாக தெரிகிறது?
15 பிள்ளைகளோடு பெற்றோர் நிறைய நேரம் செலவிடுவதும் அவர்களுக்கு அன்பான கவனிப்பு கொடுப்பதும் உண்மையிலேயே தேவைதானா என்ற கேள்வியை சிலர் எழுப்பியிருக்கிறார்கள். பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக, தரமான நேரம் செலவிடுவது பற்றிய கருத்து ஜனங்களைக் கவரும் விதத்தில் பரப்பப்படுகிறது. பிள்ளைகளோடு பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை, அவர்களோடு செலவிடும் நேரம் அர்த்தமுள்ளதாகவும் நன்கு யோசித்து திட்டமிடப்பட்டதாகவும் இருந்தால் அதுவே போதுமென இந்தக் கருத்தை ஆதரிப்போர் கூறுகிறார்கள். தரமான நேரம் என்ற கருத்து பயனுள்ளதா? இளம் பிள்ளைகளின் நலனை மனதில் வைத்து இந்தக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளதா?
16 “பெற்றோரிடம் [பிள்ளைகள்] கேட்பதெல்லாம் அதிக நேரமும் முழு கவனிப்புமே” என அநேக பிள்ளைகளுடன் பேசிய எழுத்தாளர் ஒருவர் கூறினார். கல்லூரி பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு கூறியது கவனத்திற்குரியது: “பெற்றோரின் மனம் குறுகுறுப்பதால்தான் இந்தக் கருத்து [அதாவது, தரமான நேரமென்ற கருத்து] பிரபலமாகி வந்திருக்கிறது. தங்களுடைய பிள்ளைகளோடு சிறிது நேரமே செலவிடுவதை நியாயப்படுத்த பெற்றோர்கள் தங்களுக்கு தாங்களே ஒரு காரணத்தைக் கொடுத்துக் கொண்டனர்.” அப்படியானால், பிள்ளைகளுடன் எவ்வளவு நேரம் பெற்றோர்கள் செலவிட வேண்டும்?
17. பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத் தேவைப்படுவது என்ன?
17 பிள்ளைகளுடன் எவ்வளவு நேரம் செலவிட வேண்டுமென பைபிள் சொல்வதில்லை. என்றாலும், வீட்டில் இருக்கும்போதும் சாலையில் நடந்து செல்லும்போதும் படுக்கும்போதும் எழுந்திருக்கும்போதும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு பேச வேண்டுமென இஸ்ரவேல் பெற்றோர் ஊக்குவிக்கப்பட்டனர். (உபாகமம் 6:7) ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் தவறாமல் தொடர்புகொள்ள வேண்டும், அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.
18. தமது சீஷர்களைப் பயிற்றுவிக்க இயேசு எப்படி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டார், இதிலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 இயேசு தமது சீஷர்களோடு உணவருந்தியபோதும், பயணித்தபோதும், இளைப்பாறியபோதும்கூட அவர்களை நல்ல விதத்தில் பயிற்றுவித்தார். கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்பித்தார். (மாற்கு 6:31, 32; லூக்கா 8:1; 22:14) இது போலவே, கிறிஸ்தவ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுடன் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கும் அதை தொடர்ந்து காத்துக்கொள்வதற்கும் யெகோவாவின் வழிகளில் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கும் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கு விழிப்புடனிருக்க வேண்டும்.
எதை போதிப்பது, எப்படி போதிப்பது
19. (அ) பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதோடுகூட எதுவும் தேவைப்படுகிறது? (ஆ) பிள்ளைகளுக்கு முக்கியமாக எதைப் பற்றி பெற்றோர் கற்பிக்க வேண்டும்?
19 வெறுமனே பிள்ளைகளோடு பொழுதைக் கழிப்பதும் அவர்களுக்குக் கற்பிப்பதும் அவர்களை வெற்றிகரமாய் வளர்ப்பதற்குப் போதுமானதல்ல. என்ன கற்பிக்கப்படுகிறது என்பதும் அதிமுக்கியம். அதை பைபிள் எப்படி வலியுறுத்திக் காட்டுகிறது என்பதை கவனியுங்கள். ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை . . . உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதி’ என அது சொல்கிறது. அப்படியானால், பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டிய “இந்த வார்த்தைகள்” யாவை? இதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளே அவை என்பதில் சந்தேகமில்லை, அதாவது: “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்ற வார்த்தைகளே அவை. (உபாகமம் 6:5-7) கடவுள் கொடுத்த எல்லா கட்டளைகளிலும் இதுவே அதிமுக்கியமானது என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:28-30) ஆகவே, பிள்ளைகளுக்கு முதலில் யெகோவா தேவனைப் பற்றி பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்; நமது முழு அன்பிற்கும் பயபக்திக்கும் ஏன் அவர் மாத்திரமே தகுதியானவர் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
20. பிள்ளைகளுக்கு என்ன கற்பிக்கும்படி முற்கால பெற்றோருக்கு கடவுள் கட்டளையிட்டார்?
20 என்றாலும், கடவுளுடைய ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரும்படி ஊக்குவிக்கப்பட்ட “இந்த வார்த்தைகள்” என்பதில், கடவுளை முழு ஆத்துமாவோடு நேசிப்பதைவிட அதிகம் உட்பட்டுள்ளது. உபாகமத்தில் இதற்கு முந்தைய அதிகாரத்தில், கற்பலகையில் கடவுள் எழுதிய சட்டங்களை—பத்துக் கட்டளைகளை—மோசே திரும்ப குறிப்பிடுவதை நீங்கள் கவனிப்பீர்கள். பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, கொலை செய்யக் கூடாது, விபசாரம் செய்யக் கூடாது போன்றவையும் இந்தச் சட்டங்களில் அடங்கியுள்ளன. (உபாகமம் 5:11-22) ஆகவே, பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிப்பதன் அவசியம் அந்தக் கால பெற்றோருக்கு உணர்த்தப்பட்டது. இன்று கிறிஸ்தவ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அதே போன்ற போதனைகளைக் கொடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் பிள்ளைகள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமானால் இது அவசியம்.
21. கடவுளுடைய போதனைகளைப் பிள்ளைகளுக்குக் “கருத்தாய்ப் போதி”ப்பது என்றால் என்ன?
21 ‘இந்த வார்த்தைகளை,’ அதாவது கட்டளைகளை, பிள்ளைகளுக்கு எப்படி கற்றுத்தர வேண்டுமென்று பெற்றோருக்கு புத்திமதி கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள்: “உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதி.” இதன் அர்த்தமென்ன? “கருத்தாய்ப் போதி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை, “திரும்பத் திரும்ப சொல்லி கொடுத்து அல்லது புத்திமதி கொடுத்து கற்பிப்பதையும் மனதில் பதிய வைப்பதையும்; உற்சாகப்படுத்துவதையும் அல்லது மனதில் அச்சாக பதிய வைப்பதையும்” அர்த்தப்படுத்துகிறது. மொத்தத்தில், பிள்ளைகளின் மனதில் ஆன்மீக விஷயங்களை ஆழமாக பதிய வைக்கும் பிரத்தியேக நோக்கோடு பைபிளைப் பற்றி கற்றுக் கொடுக்கும் ஒரு ஏற்பாட்டை முன்கூட்டியே திட்டமிட்டு ஆரம்பிக்கும்படி பெற்றோருக்கு கடவுள் சொல்கிறார்.
22. பிள்ளைகளுக்குக் கற்பிக்க இஸ்ரவேல் பெற்றோர் என்ன செய்ய வேண்டுமென சொல்லப்பட்டது, அதன் அர்த்தமென்ன?
22 திட்டமிடப்பட்ட இந்த ஏற்பாட்டை ஆரம்பிக்க பெற்றோர் தாமே முதற்படி எடுக்க வேண்டும். “அவைகளை [‘இந்த வார்த்தைகளை,’ அதாவது கடவுளுடைய கட்டளைகளை] உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக” என பைபிள் சொல்கிறது. (உபாகமம் 6:8, 9) சொல்லர்த்தமாக கடவுளுடைய சட்டங்களை வீட்டு நிலைகளிலும் வாசல்களிலும் எழுத வேண்டும் என்பதையோ கைகளின்மேல் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதையோ கண்களுக்கு நடுவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையோ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளுடைய போதனைகளை பெற்றோர் எப்போதும் பிள்ளைகளுக்கு நினைப்பூட்ட வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். கடவுளுடைய போதனைகள் எப்போதும் பிள்ளைகள் கண்ணெதிரிலேயே இருப்பது போல தவறாமலும் சீராகவும் அவர்களுக்குப் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
23. அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
23 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் சில யாவை? தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பிள்ளைகளுக்குக் கற்பிப்பதும் பயிற்றுவிப்பதும் இன்று ஏன் முக்கியம்? பிள்ளைகளுக்குத் திறம்பட கற்பிக்க பெற்றோருக்கு இன்று என்ன உதவி கிடைக்கிறது? இந்தக் கேள்விகளும் பெற்றோருக்கு அக்கறையூட்டும் பிற கேள்விகளும் பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை ஏன் விலையேறப் பெற்றவர்களாக கருத வேண்டும்?
• பெற்றோரும் மற்றவர்களும் இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
• எவ்வளவு நேரம் பிள்ளைகளிடம் பெற்றோர் செலவழிக்க வேண்டும்?
• பிள்ளைகளுக்கு எதைக் கற்பிக்க வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
இயேசு கற்பித்த முறையிலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 11-ன் படம்]
எப்போது, எப்படி இஸ்ரவேல் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியிருந்தது?
[பக்கம் 12-ன் படம்]
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கடவுளுடைய போதனைகளை நினைப்பூட்ட வேண்டும்