இளைஞர் கேட்கின்றனர்
வகுப்புடன் சிற்றுலா செல்வதைப் பற்றியென்ன?
“பள்ளியிலிருந்து கொஞ்ச நேரம் விடுப்பு உனக்குக் கிடைக்கும்.” “வித்தியாசமான புதிய காரியங்களை நீ பார்க்க முடியும்.” “உன் வகுப்பிலுள்ளவர்களை நன்கு தெரிந்துக்கொள்ள முடியும்.”
இவ்வாறு மூன்று ஜெர்மானிய இளைஞர்கள் தாங்கள் வகுப்புடன் சிற்றுலா செல்வதற்கு காரணங்களை விளக்கினர். இத்தகைய பயணங்கள் உலக முழுவதுமுள்ள இளைஞரிடையே பிரபலமானவை.
இருப்பினும், வகுப்புடன் சிற்றுலா செல்வதை உயர்வாகக் கருதுவது மாணவர் மட்டுமேயல்ல. “நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வகுப்பு சிற்றுலா ஓர் இளைஞனுக்கு உண்மையான பயனளிக்கிறது. அவனுடைய மனநிலை பாங்கை விரிவாக்கி, அவனை பிறர் ஆதரவு சாராதவனாக ஆக்குகிறது,” என்று ஓர் ஆசிரியர் கூறுகிறார். “மேலுமாக, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு பலமடைகிறது.” மனசாட்சியுடன் வேலை செய்யும் ஆசிரியர்களும், ஒழுங்குடன் நடந்துகொள்ளும் மாணவர்களும் ஒருங்கிணைந்து வகுப்பு சிற்றுலாவைப் போதனையளிப்பதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் செய்யமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயினும், கிறிஸ்தவ இளைஞருக்கும் பெற்றோருக்கும் அக்கறைக்குரிய அநேக அம்சங்கள் இதில் உட்பட்டிருக்கக்கூடும். உதாரணமாக, ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய தேசங்களிலும், பொதுவாக மாணவ மாணவியர் ஆகிய இருபாலாரும் ஒன்றாக நீண்ட பயணம் செல்கின்றனர். அநேக சமயங்களில் இது வெளியே இராத்தங்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் இது பிரச்னைகளை எழுப்புகிறது. பதினான்கு வயதான அன்னாலாரா நினைவுபடுத்தி சொல்கிறாள்: “சிற்றுலாவின் போது சில நாட்கள் கழித்து எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் ஆகிவிட்டது. இரவிலும்கூட எங்களுக்கு எவ்வித சமாதானமும் அமைதியும் கிடைக்கவில்லை. வகுப்பிலிருந்த பெரும்பாலோர் சுயநலமாயும் கரிசனையற்றும் நடந்து கொண்டனர்.”
அப்படியானால், வகுப்புடன் சிற்றுலா செல்ல உங்களுக்கு ஓர் வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
செல்லும் செலவைக் கணக்குப் பார்த்தல்
லூக்கா 14:28, 30-ல் இயேசு கிறிஸ்து சொன்னார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அதைக் கட்டி தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லும் செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?” இச்சிற்றுலாவில் நீங்கள் கலந்துகொள்ளலாம் என்று உங்கள் பெற்றோரும் நீங்களும் தீர்மானிப்பதற்கு முன், அதில் உட்பட்டிருக்கும் அனைத்தையும் கவனமாய் ஆராய்ந்துப் பாருங்கள். நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில கேள்விகள் இதோ:
இச்சிற்றுலாவில் உங்களை எந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்? அருகிலுள்ள அருங்காட்சியகத்திற்கு ஒரே நாளில் சென்று திரும்புவதற்கும் அநேக நாட்கள் வெளியே இராத்தங்க வேண்டிய நீண்ட பயணங்கள் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மேலும், உங்களுடைய செலவுகளுக்கு பெற்றோர் பணம் கொடுக்க வேண்டியிருந்தால், அதைச் சமாளிக்க தங்களால் முடியுமா என்பதை அவர்கள் தீர்மானிக்க விரும்புவர்.
நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருப்பது என்ன? ஆர்வத்தைத் தூண்டும் நற்பயன் விளைவிக்கும் நிகழ்ச்சிகள் அடங்கியதாக ஒவ்வொரு நாளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால், வகுப்பாரை நல்ல காரியங்களில் ஈடுபடுத்தி, விபரீதங்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். எனவே வகுப்புடன் சிற்றுலா செல்ல தீர்மானிப்பதற்கு முன் நிகழ்ச்சி நிரல் அட்டவணையைக் கவனமாய் பாருங்கள். அருங்காட்சியகங்களுக்கு செல்வதும், இயற்கை வரலாறு சம்பந்தப்பட்ட சிற்றுலாவுக்கு செல்வதும் அறிவூட்டுவதாய் இருக்கக்கூடும். ஆனால், ஒரு வகுப்புக்கு திட்டமிடப்பட்டதைப் போல, யோகா மற்றும் ஆசிய மதங்களின் பேரில் ஆராய்ச்சி போன்றவை நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவனுக்கு உகந்தது அல்ல.—1 கொரிந்தியர் 10:21.
திறம்பட்ட, இடைவிடாத மேற்பார்வை அப்போது இருக்குமா? ஜூலியா என்ற பெயருடைய 15 வயதுள்ள ஒரு கிறிஸ்தவ பெண் சொல்கிறாள்: “நல்ல ஒழுங்கு நிறைந்த ஒரு வகுப்பில் நான் இருந்தேன். எனவே அந்தப் பயணத்தில் நான் சேர்ந்துகொள்வதை என் அம்மாவும் அப்பாவும் ஆட்சேபிக்கவில்லை. ஆசிரியர்கள் வெகு கவனமாய் எங்களைக் கண்காணித்தார்கள்.” என்றாலும், அப்படிப்பட்ட மேற்பார்வை இந்நாட்களில் வெகு அரிதாக இருக்கிறது. ஒரு ஜெர்மானிய ஆசிரியர் ஒத்துக்கொள்கிறபடி, கவனமுள்ள, நம்பத்தகுந்த மேற்பார்வை “நிச்சயமாக உறுதியளிக்கப்பட முடியாது.” உண்மையில், ஒரு வகுப்பு சிற்றுலாவுக்குப் பின் ஓர் இளைஞன் “இரண்டு ஆசிரியர்களையும் ஏமாற்றிவிட்ட பின்பு, எங்களுக்கு எது வேண்டுமோ அதையெல்லாம் செய்தோம்” என்று பெருமையடித்துக் கொண்டான்.
மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க எல்லா முயற்சிகளையும் ஆசிரியர்கள் எடுத்தாலும் சில மாணவர்கள் தொந்தரவு ஏற்படுத்துவர். முன்னாள் ஆசிரியை ஒருவர் நினைவுபடுத்தி சொல்கிறார்: “மறைமுகமாக மதுவை கொண்டுவர இளைஞர்கள் சூழ்ச்சிதிறமிக்க முறைகளைப் பயன்படுத்தினால், அவர்களுடைய அறைகளைச் சோதனையிடுவது பயனற்றதாகி விட்டது. ஒரு பெண் வாந்தியெடுக்க ஆரம்பித்த போது தான் அவர்கள் அதிகமாய் மது குடித்திருந்தார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.” ஒரு பயணம் சரியாக கண்காணிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்வது வெகு கடினமானது என்பது தெளிவாய் இருக்கிறது. எனினும், மேற்பார்வைக்கென என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்களும் உங்கள் பெற்றோரும் கவனமாய் ஆராய்வது உங்களுக்கு பெரும் கவலையையும் வெட்கத்தையும் தவிர்க்கும். நீதிமொழிகள் 22:3 கூறுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துக் கொள்கிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”
உங்கள் சக மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்குப் பொதுவாக எப்படி பிரதிபலிக்கிறார்கள்? பள்ளி சிற்றுலாவின் போது அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைப் பற்றி பேரளவான விஷயத்தை இது உங்களுக்கு தெரிவிக்கும். கட்டுப்பாடற்ற மாணவர்கள் ஆசிரியர்களின் “தெளிவான, பொறுமையான கட்டளைகளை” அசட்டை செய்ததன் காரணத்தால் ஒரு ஜெர்மானிய இடைநிலைப் பள்ளி மூன்று நாள் பள்ளி சிற்றுலாவை குறைக்க வேண்டியதாயிற்று என்று அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு ஜெர்மானிய இளம் பெண்ணான ஸ்டெபானி முன்பெல்லாம் இத்தகைய சிற்றுலாவுக்கு செல்வதுண்டு, ஆனால் அவள் அடைந்த அனுபவத்தின் காரணமாக உங்களை நீங்களே பின்வரும் கேள்விகளை கேட்டுக் கொள்ளும்படி பரிந்துரை செய்கிறாள்: “என் வகுப்பில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்குச் செவிகொடுக்கக்கூடிய புத்திசாலிகளா? ஒரு நல்ல பெயரைக் காத்துவர பள்ளி முயலுகிறதா? சரியான தலைமைத்துவத்தை கொடுக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் கண்டிப்பானவர்களா? இளைஞர்கள் சரியான ஒழுக்கநெறிகளுக்கு இணங்க நடந்து கொள்பவர்களா? அவர்கள் மதுபானங்களையும் போதை மருந்துகளையும் உபயோகிக்கிறார்களா?” ஸ்டெபானி ஒத்துக்கொள்கிறபடி, “நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதன் பேரில் எளிதில் இணங்கிப் போய் விடுவீர்களா மாட்டீர்களா என்பதன் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது.” ஆயினும், ‘சோதனைக்குட்படுத்தாதபடி’ யெகோவாவிடம் ஜெபித்து விட்டு, பின்பு நீங்கள் சோதனைக்கு எளிதில் இலக்காகி விடக்கூடிய ஒரு சூழ்நிலைமையில் எப்படி நீங்கள் வேண்டுமென்றே உங்களை வைத்துக்கொள்ள முடியும்?—மத்தேயு 6:13.
பதினேழு வயதான பெட்ரா இவ்வாறு வகுப்பு சிற்றுலா செல்ல மறுத்துவிட்டாள். “என் வகுப்பு மாணவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும்” என்று அவள் விளக்குகிறாள். “என் மனச்சாட்சியை சோதனைக்குட்படுத்தக்கூடிய மதுபானமும் பாலுறவும் சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகளை என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தது. நடந்தது என்னவென்றால், ஐந்து பையன்கள் ஒரு பெண்ணின் ஆடையைக் களைந்து அவளைப் புகைப்படமெடுத்து பிறகு அந்தப் படங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்தனர்.”
உங்களுடைய மத நம்பிக்கைகள் மதிக்கப்படுமா? உதாரணமாக, இளம் டிமன் குறிப்பிட்டான்: “சாதாரணமாக ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு இருக்கும், அதிலிருந்து தப்பித்துக் கொள்வது கடினம்.” ஒரு யெகோவாவின் சாட்சியாக, அவன் அத்தகைய கொண்டாட்டங்களில் பங்குகொள்ள மறுக்கிறான்.a அதைப் போன்ற கொண்டாட்டம் ஒன்று உங்கள் வகுப்பு சிற்றுலாவில் இடம் பெற்றால், உங்கள் ஆசிரியர்களும் சக மாணவர்களும் உங்கள் நோக்குநிலையை மதிப்பார்களா?
எத்தகைய கூட்டுறவில் நீங்கள் இருக்க வேண்டியதாகும்? புகைப்பிடித்தலையும், போதை மருந்துகளை எடுப்பதையும், மதுபான துர்ப்பிரயோகத்தையும், விவாகத்துக்கு முன் பாலுறவில் ஈடுபடுவதையும் கடவுள் கண்டிக்கிறார் என்பதைக் கிறிஸ்தவர்கள் அறிவர். (1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1) எனவே தான் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞருடன் கூட்டுறவு ஞானமாக தவிர்க்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 15:33) “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 13:20 எச்சரிக்கிறது. வகுப்பு சிற்றுலாவின் போது, இத்தகைய இளைஞருடன் நீங்கள் வழக்கத்தைவிட அதிகமான நேரத்தை செலவிடுகிறீர்கள், அதுவும் கண்டிப்புத் தளர்ந்த சூழ்நிலைமையில். இளம் ஆன்டிரியஸ் இவ்வாறு சொல்கிறான்: “வகுப்பு சிற்றுலா செல்கையில் எல்லா உலகப்பிரகாரமான இசையும் ஆபாச பேச்சும் நிறைந்த உலகத்தின் ஆவிக்கு நீங்கள் இருபத்திநான்கு மணிநேரமும் இலக்காகிறீர்கள்.”
மற்றொரு அம்சம், வீட்டை விட்டு தூரம் சென்று விடுகையில் எளிதில் தனிமையை உணரக்கூடும். வகுப்பு சிற்றுலாக்கள் வெகு இளம் வயதிலேயே அநேகரில் காதலைத் தூண்டியிருக்கின்றன. நீங்கள் ஓர் அவிசுவாசியின் பேரில் காதல் உணர்ச்சி கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படக்கூடுமா? ஒன்று கொரிந்தியர் 10:12 எச்சரிக்கிறது: “இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” சோதனையை எதிர்க்கக்கூடிய அளவு பலமுள்ளவராய் நீங்கள் இருந்தாலும், அத்தகைய சிற்றுலாவில் நீங்கள் பங்குபெறுவதே பிற கிறிஸ்தவ இளைஞருக்கு இடறுதலாக இருக்குமா?—1 கொரிந்தியர் 8:7-13; 10:28, 29-ஐ ஒப்பிடுங்கள்.
பதினான்கு வயதான இவான் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு தன் வகுப்புடன் சிற்றுலா செல்ல மறுத்து விட்டாள். அவள் விளக்குகிறாள்: “உலகப்பிரகாரமான இளைஞரோடும் ஆசிரியரோடும் ஒரு முழு வாரத்தை செலவிட்டிருப்பேன். அதோடுகூட என் சகோதரர்களின் தோழமை, பிரசங்க வேலை, கூட்டங்கள் ஆகியவற்றை நான் உண்மையாகவே இழந்திருப்பேன். மற்றொரு காரணம், பிறர் கவனியாத போது பெரும்பாலான இளைஞர் நடந்துகொள்ளும் விதமாகும்.”
கடவுளை முழுமையாக பிரியப்படுத்துதல்
வகுப்பு சிற்றுலாக்கள் பொதுவாக மதம், அரசியல், கிறிஸ்தவர்களுக்கு விலக்கப்பட்ட பிற செயல்கள் ஆகியவற்றை நேரடியாக உட்படுத்தாத காரணத்தால் அத்தகைய பயணம் உகந்ததா என மாணாக்கனும் அவனுடைய பெற்றோரும் தீர்மானிக்க வேண்டும். (ஏசாயா 2:4; வெளிப்படுத்துதல் 18:4-ஐ ஒப்பிடவும்.) சூழ்நிலைமைகள் இடத்துக்கு இடம், வகுப்புக்கு வகுப்பு வித்தியாசப்படுகின்றன. எனவே ஒரு பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்ற பிராந்தியங்களில் உள்ள பிரச்னைகளிலிருந்து வித்தியாசப்பட்ட பிரச்னைகளோடு போராட வேண்டியிருக்கிறது.
“என் தாய் என் வகுப்பிலிருந்த இளைஞரை நன்கு அறிந்திருந்தாள். என் ஆசிரியர் பொறுப்புணர்ச்சி வாய்ந்தவர் என்றும் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே என் வகுப்பு சிற்றுலா வெற்றிகரமாக முடிந்தது” என்று ஸ்டெஃபான் குறிப்பிடுகிறான். “ஆனால் நான் வளர்ந்து என்னுடைய கடைசி சிற்றுலா நேரம் வந்த போது, நானும் கலந்து கொள்வதா என்ற கேள்வி முற்றிலும் வித்தியாசப்பட்டதாய் இருந்தது.” ஏன்? அவன் தொடருகிறான்: “மூன்று வருடங்களுக்கு முன் என் சக மாணவர்கள் இனிமையானவர்களாகவும் மதிக்கத்தக்கவர்களாகவும் இருந்தனர். ஆனால் அதற்குப் பின் போதை மருந்துகளும் ஒழுக்கயீனமான நடத்தையும் அவர்களுடைய அன்றாடக வாழ்க்கையின் பாகமாகி விட்டிருந்தன. எனவே நான் அந்த சிற்றுலாவில் கலந்து கொள்ளவில்லை. அந்தச் சிற்றுலா முடிவடைவதற்கு முன்பாகவே நிறுத்தப்பட வேண்டிய தேவை வந்து விட்டது.”
இருப்பினும் இறுதி ஆய்வில் நீங்களும் உங்கள் பெற்றோரும் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து உங்கள் சொந்த தீர்மானத்தை செய்ய வேண்டும். உங்கள் தீர்மானம் எதுவாக இருப்பினும், உங்கள் இலக்கு “யெகோவாவுக்கு பிரியமுண்டாக அவருக்கு பாத்திரராய் நடந்து கொள்வதே” என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள்.—கொலோசெயர் 1:10.
[அடிக்குறிப்புகள்]
a “பரிசுத்த நாட்கள்—ஏன் சில பிள்ளைகள் அவற்றை கொண்டாடுவதில்லை” என்ற கட்டுரையை எமது நவம்பர் 22, 1993 இதழில் பார்க்கவும்.
[பக்கம் 25-ன் படம்]
வகுப்பு சிற்றுலாவின் போது இராத்தங்க வேண்டியிருப்பின் எப்படிப்பட்ட கூட்டுறவில் நீங்கள் இருக்க வேண்டியிருக்கும்?