உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 10/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொருளாதார துன்பங்கள்
  • பள்ளி அடக்குமுறை
  • “சரித்திரத்தில் மிகப்பெரிய தார்மீக நெறி தவறுதல்கள்”
  • கத்தோலிக்க சர்ச் மனந்திரும்புமா?
  • மற்றொரு மதத்தைச் சேர்ந்துகொள்ள வெளியேறுதல்
  • குற்றங்களினால் விளையும் இழப்பு திகைப்படைய வைக்கிறது
  • தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் உலகம்
  • டிவி அதிகமாய்ப் பார்ப்பது—குறைவாக வாசிப்பது
  • பாலைவனங்களை விரிவாக்கி நோயை அதிகரித்தல்
  • பாலுறவு குற்றங்கள் அதிகரிக்கின்றன
  • சீனாவின் வளரும் ஜனத்தொகை
  • சர்ச் ஏன் செல்வாக்கை இழந்து வருகிறது?
    விழித்தெழு!—1996
  • மதம் ஆதரவு கொடுக்கிறது
    விழித்தெழு!—1994
விழித்தெழு!—1994
g94 10/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

பொருளாதார துன்பங்கள்

“1930-களின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவு முதற்கொண்டு, முதல் முறையாக, தொழில் வளம் மிக்க நாடுகளும் வளரும் நாடுகளும் தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்ப்படுகின்றன” என்று சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தலைமை இயக்குனர் மைக்கேல் ஹென்சன் கூறுகிறார். ஜொர்னல் டா டார்டே-யின் பிரகாரம், “உலகத்தில் தொழில் திறமையுள்ள ஆட்களில் முப்பது சதவீதத்தினர்—சுமார் 82 கோடி ஆட்கள்—வேலையின்றியோ அல்லது தற்காலிக, பகுதிநேர வேலையுடனோ இருக்கின்றனர்.” லத்தீன் அமெரிக்காவைப் பற்றி இந்த ஸ்தாபனம் செய்துள்ள அறிக்கையின் பேரில், ஜொர்னல் டோ பிரேசில் கூறுகிறது: “காபி அறுவடை செய்து பக்குவப்படுத்துதல், கரும்பு வெட்டுதல், ஏற்றுமதிக்காக பஞ்சு, பழங்கள், காய்கறிகள் அறுவடை செய்தல் போன்ற வேலைகளில் உள்ள தற்காலிக வேலையாட்கள், வெகு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளிகள் ஆகியோரின் எண்ணிக்கை பயங்கரமாக வளர்ந்து வருகிறது.”

பள்ளி அடக்குமுறை

ஜப்பானில் உள்ள கோப் நகராட்சி இளநிலை தொழில் நுட்ப கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பையன் கல்வி பெற்றுக்கொள்வதற்கான தன் உரிமையைக் குறித்து மனுச் செய்தான். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக தன் மதசம்பந்தமான மனச்சாட்சியின் காரணமாக, உடற்பயிற்சி கல்வியின் பாகமாக இருந்த ஜப்பானிய வாட்போர்க்கலையில் அவன் பங்குகொள்ளவில்லை, பள்ளி அவனை நீக்கியது. உடற்பயிற்சி கல்வியில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்ற பள்ளி பாடங்களில் அவன் முதல் நிலையில் இருந்தான். “ஒரு மாணவனுக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதிருக்கையில், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் ஒரு சில மதிப்பெண்களில் குறைவுபட்டு தேர்ச்சி நிலையை அடையாத காரணத்தால் மோசமான பாட வேலையின் நிமித்தம் சிட்சித்து நீக்குவது எல்லா பொது அறிவுக்கும் முரண்பாடாக இருக்கிறது,” என்று இட்ஸ்குபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெட்சுவோ ஷியோமூரா, செய்தித்தாள் யோமுயூரி ஷின்பூன்-ல் கூறினார். வளைந்துகொடுக்கும் மனப்பான்மையின் அவசியத்தை வலியுறுத்திய பின் அவர் சொன்னார்: “இவ்விஷயத்தில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், அப்பள்ளியில் ஆழமாய் வேரூன்றிய அடக்குமுறை பழக்கங்களே.”

“சரித்திரத்தில் மிகப்பெரிய தார்மீக நெறி தவறுதல்கள்”

“ஹிட்லரின் சர்வ நாச செயல்களோடு வத்திக்கனின் தொடர்பைப் பற்றிய பதிவு சரித்திரத்திலேயே மிகப் பெரிய தார்மீக நெறி தவறுதல்களில் ஒன்றாகும்—இதிலிருந்து கத்தோலிக்க சர்ச் இன்னும் விடுபடவில்லை” என்று தி பாஸ்டன் குளோப்-ல் பத்திரிகையாளர் ஜேம்ஸ் கேரஸ் எழுதினார். தன் குறிப்பை ஆதரிக்க பின்வரும் சரித்திர விவரங்களை அவர் வரிசையாக சொல்கிறார்: “1929-ல் முசோலினிக்கும் பயஸ் XI-க்கும் ஏற்பட்ட உடன்பாடுகள் வத்திக்கனுக்கு சுயாதீனமும் பணமும் அளித்தன, முசோலினிக்கு தேவைப்பட்ட புகழைத் தந்தன. [1933]—வத்திக்கன் ஹிட்லரோடு ஓர் உடன்படிக்கையைக் கையெழுத்திட்டது—அது ஹிட்லரின் முதலாவது சர்வதேச வெற்றி . . . 1935—முசோலினி அபிஸினியாவை இப்போது (எத்தியோப்பியா) முற்றுகையிட்டான். கத்தோலிக்க குருக்கள் இத்தாலிய துருப்புகளை ஆசீர்வதித்தனர் . . . 1939—இத்தாலியிலுள்ள யூதர்களின் உரிமைகளுக்கு முசோலினி சட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கிறான். போப் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை . . . 1942—யூதர்கள் கொல்லப்படுவதைப் பற்றி இத்தாலிய படை குருக்களின் மூலம் போர் அறிக்கைகளைப் பெறுகிறார். தன் கிறிஸ்மஸ் செய்தியில், தங்கள் இனத்தின் காரணமாக கொல்லப்படும் “துரதிர்ஷ்டமான” ஜனங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார், ஆனால் ஹிட்லரையோ, ஜெர்மனியையோ, சித்திரவதை முகாம்களையோ பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ‘யூதன்’ என்ற சொல்லே உபயோகிக்கப்படுவதில்லை . . . 1943—இத்தாலியில், வத்திக்கனின் அருகிலுள்ள ரோமிலும்கூட உள்ள யூதர்களை ஜெர்மானியர் வளைத்துப் பிடிக்கின்றனர். இப்போதும் போப் மெளனமாக இருக்கிறார்.”

கத்தோலிக்க சர்ச் மனந்திரும்புமா?

போப் ஜான் பால் II கத்தோலிக்க கார்டினல்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “சர்ச்சை பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்கள் அதன் பெயரில்” செய்துள்ள குற்றங்களை சர்ச் ஒத்துக்கொண்டு மனந்திரும்பும்படி புத்திமதி கூறியுள்ளார். சர்ச் பயன்படுத்திய “மனித உரிமைகளுக்கு முரணான பலாத்கார முறைகள்” பிற்பாடு “20-ஆம் நூற்றாண்டில் சர்வாதிகார கருத்துடையோரால் பின்பற்றப்பட்டன” என்று அவர் ஒத்துக்கொள்வதாய் ரோமிலுள்ள லா ரிப்பப்ளிக்கா கூறுகிறது. ஆனால் எதைக் குறித்து கத்தோலிக்க சர்ச் மனந்திரும்ப வேண்டும்? “அநேக காரியங்களைக் குறித்து” என்று வத்திக்கன் பத்திரிகையாளர் மார்கோ பொலிட ஒத்துக்கொள்கிறார். “சூனியக்காரிகளைக் கொல்லுதல், மதபேதமுள்ளவர்களைத் தூணில் கட்டி எரிக்கப்பட அனுப்புதல், விஞ்ஞானிகளையும் சுயேச்சை சிந்தையுள்ளவர்களையும் சித்திரவதையால் பயமுறுத்துதல், பாசிச ஆட்சிகளை ஆதரித்தல், சிலுவை குறியின் கீழ் வட அர்த்த கோளத்தில் செய்யப்பட்ட படுகொலைகள்” ஆகியவற்றைக் குறித்தும், அது மட்டுமன்றி “சர்ச் தன்னை பரிபூரண சமுதாயமாகவும், மனச்சாட்சியின் பேரில் முழுமையான அதிகாரம் பெற்றிருப்பதாகவும், போப் உண்மையாகவே கிறிஸ்துவின் பிரதிநிதி என்பதாக சரித்திரத்தில் ஒரு சமயத்தில் நம்பி வந்த இறையியல் தூஷணத்திற்காகவும் மனந்திரும்ப வேண்டும்.”

மற்றொரு மதத்தைச் சேர்ந்துகொள்ள வெளியேறுதல்

சர்ச் ஆப் இங்கிலாந்திலிருந்து பெருமளவில் குருக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஏன்? “பெண் பாதிரிகளை நியமனம் செய்யலாம் என்று சர்ச் ஆப் இங்கிலாந்து செய்த விவாதத்துக்குரிய தீர்மானம் இதை தூண்டியிருப்பதாக” டொரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. “130-க்கும் மேலான ஆங்கில குருக்கள் ஏற்கெனவே வெளியே ஓடிவிட்டனர், மற்றவர்கள் பெரும் திரளில் வெளியேறுவது சீக்கிரத்தில் நடக்கும் என்று தோன்றுகிறது” என ஸ்டார் கூறுகிறது. ஏழு ஆங்கில பிஷப்புகளும் 700-க்கு மேற்பட்ட குருக்களும் கத்தோலிக்க சர்ச்சில் சேருவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். முதல் உலக யுத்தம் முதற்கொண்டு சர்ச் ஆப் இங்கிலாந்துக்கு ஆதரவு படிப்படியாய் குறைந்து வருகிறது. இங்கிலாந்தில், ஞானஸ்நானம் பெற்ற அங்கத்தினராக உரிமை பாராட்டும் 200 லட்சம் பேரில், 10 லட்சம் பேர் மட்டுமே ஞாயிறு ஆராதனைகளுக்கு வருகின்றனர். இக்கட்டான காலங்கள் இனி வரவிருக்கின்றன. சர்ச்சை விட்டு வெளியேறுதல் தொடரக்கூடும்.

குற்றங்களினால் விளையும் இழப்பு திகைப்படைய வைக்கிறது

ஆஸ்திரேலியாவின் குற்றயியல் ஸ்தாபனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆஸ்திரேலியாவில் குற்றங்களினால் ஒவ்வொரு ஆண்டும் 2,600 கோடி டாலர்கள் இழக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஆஸ்திரேலியாவிலுள்ள ஒவ்வொரு ஆண், பெண், பிள்ளைக்கும் ஏறக்குறைய 1,300 டாலர் என்று பொருள்படும். சிட்னியில் வெளியாகும் சன்டே டெலிகிராப்-ல் ஒரு நிருபர் பேட்டியளித்து மிகப்பெரிய இழப்பை—ஆண்டுக்கு 1,400 கோடி டாலர் இழப்பை—ஏற்படுத்தும் குற்றம், பணமோசடி என்று குறிப்பிட்டார். பிற குற்றங்களின் மதிப்பீடு: கொலை, ஆண்டுக்கு 27.5 கோடி டாலர்கள்; போதை மருந்துகள், 120 கோடி டாலர்கள்; வீட்டில் புகுந்து திருடுதல், 89.3 கோடி டாலர்கள்; கடைகளில் வாங்குபவர்கள் பொருட்களைத் திருடுதல் ஆச்சரியமூட்டும் அளவுக்கு 150 கோடி டாலர்கள். குற்றங்களினால் விளையும் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லி அந்த அறிக்கை முடிக்கிறது.

தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் உலகம்

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஸ்தாபனத்திலிருந்து வந்த ஓர் அறிக்கையின்படி, 1994-ஆம் வருடம் ஆரம்பித்ததிலிருந்து இவ்வுலகத்தை 43 போர்கள் தொடர்ந்து தாக்கியிருக்கின்றன. ஆசியாவில் 22 போர்கள், ஆப்பிரிக்காவில் 13 போர்கள், லத்தீன் அமெரிக்காவில் 5 போர்கள், ஐரோப்பாவில் 3 போர்கள் தொடுக்கப்பட்டன என்று அந்த அறிக்கையைப் பற்றி குறிப்பிட்டு கிறிஸ்தவ திருச்சபை செய்தி சேவை எழுதுகிறது. 1950-களின் போது, போர்களின் வருடாந்தர சராசரி எண்ணிக்கை 12 ஆக இருந்தது என்றும்கூட அந்த அரசியல் ஸ்தாபனம் கண்டுபிடித்தது. 1960-களின் போது அது 22 ஆக உயர்ந்தது, இன்று அந்த எண்ணிக்கை ஏறக்குறைய இருமடங்காக ஆகியிருக்கிறது.

டிவி அதிகமாய்ப் பார்ப்பது—குறைவாக வாசிப்பது

அதிகமாய் டிவி பார்க்கும் பள்ளி பிள்ளைகள் ஏன் வாசிப்பில் ஆர்வத்தை இழந்து விடுகின்றனர்? நெதர்லாந்திலுள்ள 1,000 ஆரம்ப பள்ளி பிள்ளைகளின் நடத்தையை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் C. M. கூல்ஸ்ட்ரா இரண்டு காரணங்களைக் கண்டுபிடித்தார். அதிகமாய் டிவி பார்ப்பதன் விளைவாக பிள்ளைகள் வாசிப்பதில் மகிழ்ச்சி காண்பதை இழந்து, கூர்ந்து கவனிப்பதில் உள்ள திறமையில் குறைந்து விடுகின்றனர். அடிக்கடி டிவி பார்ப்பவர்களுக்கு தாங்கள் வாசிப்பதைப் புரிந்துகொள்வதும் தங்கள் முன்னால் உள்ள புத்தகத்தின் பேரில் கவனத்தை ஊன்ற வைப்பதும் படிப்படியாய் கடினமாகி விடுவதாக நெதர்லாந்தின் லீடன் பல்கலைக்கழக செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. சிறிது நேரத்தில் அவர்கள் புத்தகத்தை எறிந்து விட்டு தொலைக்காட்சி பெட்டியை இயக்க நாடுகின்றனர். எத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது இதில் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணவில்லை என்பதையும்கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். நகைச்சுவையோ, பிள்ளைகளின் நிகழ்ச்சிகளோ, நாடகமோ அல்லது கல்வி நிகழ்ச்சிகளோ, எதுவானாலும் விளைவு ஒன்றே: “வாசிப்பது குறைந்து விடுகிறது.”

பாலைவனங்களை விரிவாக்கி நோயை அதிகரித்தல்

டன்ஸானியாவின் ஏழ்மையான கிராமப்புற ஜனத்தில் 85 சதவீதத்தினருக்கு சமைக்கவும், குளிர்காயவும், வெளிச்சம் பெறவும் விறகு அதிக அத்தியாவசியமாய் தேவைப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் 42,000 ஏக்கர் பரப்புள்ள அருமையான காடுகள் அத்தேசத்தின் புகையிலைப் பயிரைப் பதனிடுவதற்காக வெட்டப்படுகின்றன என்று கனடாவின் சர்வ தேச ஆரோக்கிய சங்கத்தின் செய்திபத்திரிகையான சினர்ஜி அறிவிக்கிறது. “புகையிலை ஏற்றுமதியிலிருந்து அந்நிய செலவாணியைப் பெறுவதற்காக மதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டி பாலைவனங்களை உண்டுபண்ணுவது உண்மையிலேயே முரண்பாடானது” என்று டன்ஸானியாவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் தலைமை இயக்குனர் பேராசிரியர் W. L. கிலாமா சொல்கிறார். “நோயை விளைவிக்கும் புகையிலையை வளரும் தேசங்கள் உற்பத்தி செய்வது அதைப் போன்றே முரண்பாடானது” என்றும் அவர் கூறுகிறார்.

பாலுறவு குற்றங்கள் அதிகரிக்கின்றன

கற்பழிப்பு, நெருங்கிய குடும்ப அங்கத்தினரோடு பாலுறவு, பிள்ளைகளைத் துர்ப்பிரயோகம் செய்தல் போன்ற பாலுறவு குற்றங்கள்—ஒரு காலத்தில் மேற்கத்திய தேசங்களின் பிரச்னை என்பதாக எண்ணப்பட்டவை—சில ஆப்பிரிக்க தேசங்களில் அதிகரித்து வருவதாக தோன்றுகின்றன. சமீப மாதங்களில், பாலுறவு குற்றங்களைப் பற்றிய செய்திகள் வெளிவருவது அதிகரித்துள்ளது. 37 வயதுள்ள ஒரு மனிதன் தன் 13 வயதுள்ள மகளுடன் பாலுறவு கொண்டதற்காக ஐந்து வருட சிறை தண்டனையும் பிரம்பினால் ஆறு அடிகளையும் தண்டனையாக பெற்றதாக டைம்ஸ் ஆப் சாம்பியா அறிக்கை செய்தது. சண்டையின் காரணமாக அவனுடைய மனைவி அவனை விட்டு பிரிந்து போன பிறகு தன் மகளை அவன் முறைகேடாக நடத்தியதாக கண்டுப்பிடிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது அந்த மகள் தன் தகப்பனைச் சொந்தம் கைவிட்டாள்.

சீனாவின் வளரும் ஜனத்தொகை

சீனாவிலுள்ள மக்களின் தொகை இந்த ஆண்டு 120 கோடியை எட்டி விடும் என்பதாக சின்ஹூவா என்ற அதிகாரப்பூர்வ சீன செய்தி ஏஜென்சி அறிவித்தது. ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு பிள்ளை என்ற கொள்கையை வளர்த்து வரும் சீனாவின் கண்டிப்பான குடும்ப கட்டுப்பாட்டின் மத்தியிலும், ஜனத்தொகை 120 கோடியை எட்டுவது மக்கள் தொகை திட்டமைப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட ஆறு ஆண்டுகள் முன்கூட்டியே வந்திருக்கிறது. இந்தச் செய்தி ஏஜென்சி இந்த அதிகரிப்புக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறது: முதலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் விதிக்கப்படும் அபராதத்தை கட்ட அநேக கிராமப்புற பெண்கள் தயாராக உள்ளனர். இரண்டாவது, கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் மாறி செல்லும் தொழிலாளர்கள் நிலையான இடங்களில் வாழ்பவர்களுள் பிறப்புகளைக் கண்காணிக்கும் குடும்ப திட்ட கட்டுப்பாடுகளை ஏய்த்து விடுகின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்