இளைஞர் கேட்கின்றனர்
நான் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்துவிட்டேனா?
“நான் அந்த அளவுக்கு ஒருபோதும் மனம் வாடிப் போயிருந்ததில்லை. அதற்குப் பிறகு எனக்கு சுய-மரியாதை இல்லாமல் போனது, கடவுள் என்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று நான் எண்ணினேன்.”—மார்க்கோ.a
“நான் அதிக உற்சாகமிழந்து விட்டேன். குற்ற உணர்வு என் இருதயத்தை மூடிக்கொண்டது. மன்னிக்கமுடியாத சில தவறுகளைச் செய்துவிட்டதாக நான் நினைத்தேன்.”—அல்பெர்ட்டோ.
“பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே,” என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 8:46) ஒரு தீங்கற்ற தவறை விட அதிக வினைமையானதை செய்து விட்டதாக சில சமயங்களில் ஓர் இளைஞன் உணரக்கூடும். மார்க்கோ மற்றும் அல்பெர்ட்டோவைப் போன்று, ஓர் இளைஞன் குற்ற உணர்வு விடாது தொடர்ந்து இருப்பதனால் ஒடுக்கப்படலாம். தான் செய்த காரியம் அதிக இழிவானது, மிகவும் துன்மார்க்கமானது, அதனால் கடவுள் அவனை ஒருபோதும் மன்னிக்கமுடியாது என்று அவன் உணரலாம்.
இப்படிப்பட்ட உணர்ச்சிகள் உங்களைத் துன்புறுத்தினால் அப்போது என்ன? உற்சாகமாயிருங்கள். உங்களுடைய நிலைமை நம்பிக்கையற்றதாய் இல்லை.
நம்முடைய மனச்சாட்சி நம்மை ஏன் வேதனைப்படுத்துகிறது
முட்டாள்தனமான பிழையை நீங்கள் செய்துவிட்டிருந்தால் வருத்தப்படுவது இயற்கையே. “மனச்சாட்சி” என்று பைபிள் அழைக்கும் மனோசக்தியோடு நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம். எது சரி, எது தவறு என்பதைக் காட்டும் ஓர் உள்ளார்ந்த உணர்வாகும், அது உள்ளாக அமைந்துள்ள எச்சரிக்கை மணியாக இருந்து, நாம் ஏதோவொரு கெட்ட காரியத்தைச் செய்யும்போது ஒலி எழுப்புகிறது. (ரோமர் 2:14, 15) உதாரணமாக, தாவீது ராஜாவை சிந்தித்துப் பாருங்கள். அவர் மற்றொரு ஆளின் மனைவியோடு விபச்சாரம் செய்தார். பின்னர், அவர், அவள் கணவன் உரியாவை நிச்சயமாக மரணத்தை எதிர்ப்பட வேண்டிய இடத்துக்கு அனுப்பினார். (2 சாமுவேல் 11:2-17) தாவீது மீது அதன் பாதிப்பு?
“இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்தது,” என்று தாவீது ஒப்புக்கொண்டார். ஆம், தெய்வீக நிராகரிப்பின் பாரத்தை அவர் உணர்ந்தார். தாவீது கூடுதலாக சொன்னார்: “உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப் போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. . . . நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.” (சங்கீதம் 32:4; 38:3-6) தாவீது உடன்பாடான நடவடிக்கை எடுத்து தன் தவறைக் குறித்து மனந்திரும்பும் வரை அவருடைய மனச்சாட்சி அவருக்குத் தொடர்ந்து வேதனையுண்டாக்கிக் கொண்டிருந்தது.
அதே போன்று, நீங்கள் கிறிஸ்தவ பெற்றோர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, பைபிள் தராதரங்களிலிருந்து விலகிச் சென்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள். இந்த மனவியாகுலப்படும் உணர்ச்சி இயற்கையானது, ஆரோக்கியமானது. அது ஒரு நபர் தன்னைத் திருத்திக்கொள்ள தூண்டுவிக்கலாம் அல்லது ஒரு தவறு ஆழமாகப் பதிந்துவிடும் ஒரு பழக்கமாக ஆவதற்கு முன்பு உதவியை நாடும்படி செய்யலாம். மறுபட்சத்தில், பாவத்திலேயே தொடர்ந்து இருக்கும் ஒரு நபர் தன் மனச்சாட்சியை பாழாக்கிப் போடுகிறான். அது காலப்போக்கில் மரத்துப்போன தோலைப் போன்று உணர்ச்சியற்றதாக ஆகிவிடுகிறது. (1 தீமோத்தேயு 4:2) ஒழுக்க சம்பந்தமான அசுத்தம் அதை நிச்சயமாகப் பின்தொடரும்.—கலாத்தியர் 6:7, 8.
தேவனுக்கேற்ற துக்கம்
அப்படியென்றால், “மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு” என்பதைக் குறித்து பைபிள் பேசுவது ஆச்சரியமாயில்லை. (1 யோவான் 5:16; மத்தேயு 12:31-ஐ ஒப்பிடவும்.) அப்படிப்பட்ட பாவம் வெறும் மாம்ச பலவீனம் அல்ல. அது வேண்டுமென்றே, பிடிவாதமாக, மூர்க்கத்தனமாக செய்யப்படுகிறது. அந்தப் பாவம் தானே அவ்வளவாக இல்லை, அப்படிப்பட்ட பாவத்தை மன்னிக்கமுடியாததாக ஆக்குவது அந்த பாவியின் இருதய நிலைமையே ஆகும்.
என்றபோதிலும், உங்களுடைய தவறான நடத்தையின் காரணமாக நீங்கள் புண்படுத்தப்பட்டு, கடும் வேதனையடைந்திருக்கிறீர்கள் என்ற உண்மை, மன்னிக்கமுடியாத பாவத்தை நீங்கள் செய்யவில்லை என்பதைக் குறிப்பிடுகிறது. “தேவனுக்கேற்ற துக்கம் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது” என்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 7:10) யாக்கோபு 4:8-10 வரை கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையைக் கவனியுங்கள்: “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”
செய்த தவறு அதிக வினைமையான ஒன்றாக இருக்கலாம் என்பது உண்மை தான். உதாரணமாக, ஜூலி தன் காதலனோடு முத்தம் செய்வதிலும் கொஞ்சுவதிலும் ஈடுபட்டாள். “முதலில் எனக்கு அதிக குற்ற உணர்ச்சி இருந்தது” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள், “ஆனால் காலம் செல்ல செல்ல, எனக்கு அது பழக்கமாகி விட்டது. அது என் மனச்சாட்சியை அவ்வளவாக உறுத்தவில்லை.” காலப்போக்கில், அசுத்தமான செயல்கள் பாலுறவு கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டது. “நான் அதிக துக்கமடைந்தேன்” என்று ஜூலி சொல்கிறாள். “அது பலமுறைகள் நடக்கும் அளவுக்கு என் மனச்சாட்சி பெலவீனமானது.”
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைமை நம்பிக்கையற்றதாக உள்ளதா? அப்படியிருக்க தேவையில்லை. யூதாவின் அரசர்களில் ஒருவரான மனாசேயைப் பற்றியதென்ன? அவர் அதிக வினைமையான பாவங்களைச் செய்தார், ஆவியுலகத்தொடர்பு மற்றும் பிள்ளைகளைப் பலியிடுவது ஆகியவை உட்பட. இருந்தாலும், அவர் உண்மைமனதோடு மனந்திரும்பியதால் கடவுள் அவரை மன்னித்தார். (2 நாளாகமம் 33:10-13) தாவீது ராஜாவைப் பற்றியென்ன? அவர் தன் துன்மார்க்க செயல்களைக் குறித்து மனம் வருந்தி, யெகோவாவை “நல்லவரும் மன்னிக்கிறவருமான” கடவுளாகக் கண்டார்.—சங்கீதம் 86:5.
இன்று கிறிஸ்தவர்கள் இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) ஒருவர் தன் பாவங்களை யாரிடம் அறிக்கை செய்ய வேண்டும்? முதலாவது, யெகோவா தேவனிடம். “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.” (சங்கீதம் 32:5; 62:8) சங்கீதம் 51-ல் தாவீது தான் செய்த பாவத்துக்காக மனம் வருந்தி வெளியிடும் அறிக்கையை வாசிப்பது உங்களுக்கு உதவியாயிருப்பதாக நீங்கள் காணலாம்.
கூடுதலாக, வினைமையான பாவத்தில் விழுந்துவிட்ட கிறிஸ்தவர்கள் சபை மூப்பர்களோடு பேசும்படி பைபிள் ஊக்குவிக்கிறது. (யாக்கோபு 5:14, 15) கடவுளோடு உங்களுடைய உறவை மறுபடியுமாக நிலைநாட்டிக்கொள்வதற்கும், சுத்தமான மனச்சாட்சியை திரும்பவும் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களுடைய ஊக்கமான புத்திமதியும் ஜெபங்களும் உங்களுக்கு உதவக்கூடும். பெலவீனத்துக்கும் துன்மார்க்கத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் கண்டுணரக்கூடும். உங்களுடைய தவறை திரும்பவும் செய்யாமல் தவிர்ப்பதற்கு தேவையான உதவியை நீங்கள் பெற்றுக்கொள்வதையும்கூட அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜூலி இந்தத் தைரியமான படியை தானே எடுத்தப் பிறகு, இவ்வாறு சிபாரிசு செய்கிறாள்: “நான் ‘என்னையே கண்டித்துக்கொள்ள’ முயற்சி செய்து, அது ஓரளவுக்கு வேலை செய்ததாகவும்கூட நினைத்தேன். ஆனால் ஒரு வருடத்துக்குப் பிறகு நான் நினைத்தது தவறு என்று நான் அறிந்தேன். மூப்பர்களிடமிருந்து வரும் உதவியின்றி நீங்கள் வினைமையான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது.”
சிறு பாவங்கள் மீதான குற்றவுணர்ச்சி
சில சமயங்களில் ஓர் இளைஞன் ‘அதைக் குறித்து அறியாமலேயே தவறான படியை எடுக்கிறான்.’ (கலாத்தியர் 6:1) அல்லது அவனோ அல்லது அவளோ மாம்சப்பிரகாரமான கட்டாயப்படுத்தல் மேற்கொண்டு விடும்படியாக அனுமதித்து விடலாம். இந்த நிலையில் இருக்கும் ஓர் இளைஞன் ஆழமான குற்ற உணர்ச்சிகளினால் துன்புறலாம்—உண்மையில் அந்தத் தவறு, தேவைப்படுத்தும் குற்றவுணர்ச்சியைவிட அதிகமானதாக ஒருவேளை இருக்கலாம். தேவையற்ற மனவேதனை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆழமான குற்ற உணர்வுகள் ஆரோக்கியமான ஆனால் அளவுக்கு மீறி உணர்ச்சிமிக்க மனச்சாட்சியின் விளைவாக இருக்கக்கூடும். (ரோமர் 14:1, 2) நாம் பாவம் செய்யும்போது “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” என்பதை நினைவில் வையுங்கள்.—1 யோவான் 2:1, 2.
எங்கள் அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளம் மார்க்கோவின் விஷயத்தை மறுபடியும் சிந்தியுங்கள். இந்த இளம் கிறிஸ்தவன் தான் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்துவிட்டதாக நம்பினான். அவன் தன்னிடமே இவ்வாறு சொல்லிக்கொள்வான்: ‘எனக்கு பைபிள் நியமங்கள் நன்றாகத் தெரியும், இருந்தாலும் பாவம் செய்வதை என்னால் நிறுத்தமுடியவில்லை!’ அவனுடைய பாவம்? தற்புணர்ச்சி பழக்கப் பிரச்சினை. ‘அந்தப் பழக்கத்தை நான் நிறுத்தவில்லையென்றால் கடவுள் என்னை எப்படி மன்னிப்பார்?’ மார்க்கோ அவ்வாறு காரணங்காட்டிப் பேசுவான். அதேபோன்று அவ்வப்போது தற்புணர்ச்சி பழக்கத்தைக் கொண்டிருந்த அல்பெர்ட்டோ இவ்வாறு சொன்னான்: “நான் குற்ற உணர்ச்சியை எனக்குள் ஆழமாக உணர்ந்தேன், ஏனென்றால் பாவத்தை விட்டு என்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை.”
தற்புணர்ச்சி ஓர் அசுத்தமான பழக்கம். (2 கொரிந்தியர் 7:1) என்றபோதிலும், அதை வேசித்தனம் போன்ற வினைமையான பாவங்களோடு சேர்த்து பைபிள் பேசுவதில்லை. உண்மையில், அது அதைப் பற்றிக் குறிப்பிடுவதே இல்லை. ஆகையால், தற்புணர்ச்சி பழக்கத்துக்குள் வீழ்ந்துவிடுதல் மன்னிக்க முடியாததாக ஒருபோதும் இருக்காது. மன்னிக்க முடியாததற்கும் அப்பாற்பட்டது என்று அதை நோக்குவது உண்மையில் ஆபத்தானதாக இருக்கலாம்; அப்பிரச்சினையை மேற்கொள்ள முயற்சி செய்வதில் அவ்வளவு பிரயோஜனமில்லை என்று ஓர் இளைஞன் வாதாடலாம். ஆனால் இப்பழக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு கிறிஸ்தவன் ஊக்கமாக முயற்சி செய்யவேண்டும் என்று பைபிள் நியமங்கள் குறிப்பிடுகின்றன.b (கொலோசெயர் 3:5) “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (யாக்கோபு 3:2) மறுபடியும் அதில் வீழ்ந்து போனால், ஓர் இளைஞன் கண்டனம் செய்யப்பட்டவராக உணரவேண்டிய தேவையில்லை.
மற்ற தவறுகள், தவறான படிகள் ஆகியவற்றிலும் இதுவே உண்மையாயிருக்கிறது. அளவுக்கு மீறிய குற்ற உணர்ச்சியினால் நாம் நம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா தேவைப்படுத்துவதில்லை. மாறாக, பிரச்சினையை சரி செய்துகொள்வதற்கு நாம் படிகள் எடுக்கும்போது அவர் பிரியப்படுகிறார்.—2 கொரிந்தியர் 7:11; 1 யோவான் 3:19, 20.
உதவியும் ஆறுதலும் கிடைக்குமிடங்கள்
இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு அநேகமாக உங்களுக்கு தனிப்பட்ட உதவி தேவைப்படும். கடவுள்-பயமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவியும் ஆதரவும் தருவதற்கு அதிகத்தைச் செய்யலாம். மேலும் கிறிஸ்தவ சபை ஆதரவு தருவதற்கு மற்ற வழிகளை அளிக்கிறது. மார்க்கோ நினைவுபடுத்தி சொல்கிறான்: “ஒரு மூப்பரோடு கலந்து பேசியது எனக்கு உண்மையிலேயே உதவியாக இருந்தது. நான் தாராளமாகப் பேசி என்னுடைய அதிக அந்தரங்கமான எண்ணங்களை அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியம் தேவைப்பட்டது. ஆனால் அவர் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார், ஆகையால் நான் அவர் புத்திமதியைக் கேட்டேன்.” அல்பெர்ட்டோவும்கூட ஒரு மூப்பரிடமிருந்து புத்திமதியை நாடினான். “அவருடைய உற்சாகமான புத்திமதியை என்னால் மறக்க முடியாது” என்று அல்பெர்ட்டோ சொல்கிறான். “அவர் இளைஞனாக இருந்தபோது அவருக்கும்கூட அதே பிரச்சினை இருந்தது என்று அவர் என்னிடம் சொன்னார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய நேர்மைத் தன்மைக்காக நான் மிகுந்த போற்றுதலோடு அவர் சொன்னதை செவிகொடுத்துக் கேட்டேன்.” அப்படிப்பட்ட உதவியோடும் ஆதரவோடும், மார்க்கோவும் அல்பெர்ட்டோவும் தங்கள் பிரச்சினைகளை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் இப்போது தங்கள் சபைகளில் உத்தரவாதமுள்ள ஸ்தானங்களில் சேவித்து வருகின்றனர்.
ஊக்கமான ஜெபம் மற்றொரு உதவியாகும். தாவீதைப் போன்று, “சுத்த இருதயத்துக்காகவும்,” “நிலைவரமான ஆவியை உள்ளத்திலே புதுப்பிப்பதற்காகவும்” நீங்கள் ஜெபிக்கலாம். (சங்கீதம் 51:10) கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது ஆறுதலளிக்கும் மற்றொரு ஊற்றுமூலம். உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுலும்கூட உள்ளான போராட்டங்களைக் கொண்டிருந்தார் என்பதை அறிவது உங்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இருக்கலாம். அவர் ஒப்புக்கொண்டார்: “ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.” (ரோமர் 7:21) பவுல் தன் தவறான மனச்சாய்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் வெற்றி பெற்றார். ஆகையால் நீங்களும் வெற்றி பெறலாம். நீங்கள் குறிப்பாக சங்கீதங்கள் வாசிப்பதை ஆறுதலளிப்பதாய் காணலாம், விசேஷமாக கடவுளின் மன்னிப்பைப் பற்றிக் கூறும் சங்கீதங்கள் 25, 86, 103 போன்றவை.
என்ன நடந்தாலும் சரி, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து, தீமையையே எதிர்பார்க்கும் மனநிலை உங்களை மேற்கொண்டுவிட அனுமதிக்காதீர்கள். (நீதிமொழிகள் 18:1) யெகோவாவின் இரக்கத்தை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் அவர் “மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” என்பதை நினைவில் வையுங்கள். (ஏசாயா 55:7; மத்தேயு 20:28) உங்கள் தவறுகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள், கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் என்றும் முடிவு செய்து விடாதீர்கள். அவரைச் சேவிப்பதற்கு உங்களுடைய விசுவாசத்தையும் தீர்மானத்தையும் பலப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4:13) காலப்போக்கில் நீங்கள் மனசமாதானத்தையும், நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து அதனால் வரும் ஆழ்ந்த உள்ளான மகிழ்ச்சியையும் அடைவீர்கள்.—சங்கீதம் 32:1-ஐ ஒப்பிடவும்.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்துள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள் பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 25, 26-ல் உதவியளிக்கும் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
[பக்கம் 19-ன் படம்]
தகுதிபெற்ற ஒரு கிறிஸ்தவரோடு கலந்து பேசுவது, விஷயங்களை ஒரு புதிய கோணத்தில் காண உதவக்கூடும்