பைபிளின் கருத்து
கடவுள் வெகுமதிகளை அளிக்கிறாரா?
ஆம், அவர் அளிக்கிறார். ஆகையால் ஒரு வெகுமதியை மனதில் கொண்டு கடவுளை சேவிப்பது சுயநலமானதா? இல்லை, அவர் தாமே தம் உண்மையுள்ள ஊழியர்கள் முன்பு வெகுமதிகளை வைக்கிறார். உண்மையில், அன்பும் நீதியுமுள்ள கடவுளாக தம்மை சேவிப்பவர்களுக்கு பலனளிக்க யெகோவா தம்மையே கடமைப்பட்டவராக ஆக்கிக்கொள்கிறார். அவருடைய வார்த்தை எபிரெயர் 11:6-ல் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: “கடவுளை அணுகும் ஒரு மனிதன் இரண்டு காரியங்களில் விசுவாசம் வைக்க வேண்டும், முதலில் கடவுள் இருக்கிறார் என்றும், இரண்டாவது தம்மைத் தேடுபவர்களுக்கு அவர் பலனளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”—ஃபிலிப்ஸ்.
கடவுள் பேரில் மெய்யான விசுவாசத்தை வெளிக்காட்டுவது அவருடைய நட்பை பெற்றுக்கொள்ளச் செய்கிறது, இந்த நட்பு ஒரு வெகுமதிக்கு வழிநடத்துகிறது. கடவுள் ஊக்கத்தோடு அவருடைய தயவைத் தேடுவோரை ஆசீர்வதிக்கிறார்.
அன்பான செயல்கள் தான் வெகுமதிகள்
தம்மை நேசிப்பவர்களுக்கு பலனளிக்கும் கடவுள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். உதாரணமாக, கரிசனையுள்ள பெற்றோர் வீட்டில் மனமுவந்து வேலை செய்யும் பிள்ளைக்கு வெகுமானம் அளிக்க பல வழிகளைத் தேடுவர். வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவைகளை மட்டுமல்லாமல், அதற்கு மேலும் கூடுதலாக தங்கள் பிள்ளைக்கு ஒரு விசேஷ வெகுமதியை பலனாக அளிப்பர். சில சமயங்களில் எதிர்கால பாதுகாப்புக்கென்று வங்கியில் போட்டு வைப்பதற்கு பணமாகக்கூட அந்த வெகுமதி இருக்கலாம். ஆக, அன்பு அல்லது பற்றுமாறாத்தன்மையின் காரணமாக காரியங்களைச் செய்பவர்களின் பேரில் போற்றுதலோ அல்லது கரிசனையோ இல்லாத ஆட்களைப் போன்று கடவுள் இல்லை. யெகோவா, இருதயம் கனிந்த அன்புள்ளவராயிருக்கிறார், தம் நண்பர்களிடம் மிகவும் நெருங்கி வருகிறார். அவர் பேரில் நீங்கள் உறுதியான விசுவாசம் கொண்டிருந்தீர்களானால், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”—எபிரெயர் 13:5.
கடவுள் தம் சார்பாக சிறிதளவு சேவை செய்பவர்களையும்கூட போற்றுகிறார், ஆதரிக்கிறார், அவரைக் குறித்து அறிந்துகொள்ள அவர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை அளிக்கிறார். இக்குறிப்பை மத்தேயு 10:40-42-ல் உள்ள இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் விளக்குகின்றன: “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
இயேசு தம் தகப்பனாகிய யெகோவாவால் அனுப்பப்பட்டார். எனவே, கிறிஸ்துவின் சீஷர்களை ஆதரித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு நபர்—அவர்கள் தீர்க்கதரிசிகளாகவோ, நீதிமான்களாகவோ அல்லது சிறியவர்களாகவோ இருந்தாலும் சரி—கிறிஸ்துவையும் கிறிஸ்துவை அனுப்பின கடவுளையும் ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாகவே அப்படிப்பட்ட ஆள் ஆசீர்வதிக்கப்படுவார்; அவர் வெகுமதியின்றி விடப்படார். ஆவிக்குரிய உடைமைகள் நிறைந்த அவருடைய பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பும். ஏன்? தம் ராஜ்யத்தை ஆதரிப்பதற்கு செய்யப்படும் மிகச் சிறிய சேவையையும்கூட யெகோவா நினைவில் வைத்திருக்கிறார்.—எபிரெயர் 6:10.
அக்கறைக்குரியவிதமாக, இயேசுவின் சீஷரில் ஒருவராகிய பேதுரு தனக்கும் தன் உடன் அப்போஸ்தலருக்கும் ஒரு வெகுமதி கிடைக்குமா என்று நேரடியாக இயேசுவைக் கேட்டார்: “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்.” (மத்தேயு 19:27) இயேசு அந்தக் கேள்வியை பொருத்தமற்றதாக கருதவில்லை, ஆனால் நம்பிக்கையான பதிலைக் கொடுத்து, அவர் சொன்னதாவது: “என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.”—மத்தேயு 19:29.
தற்போதும் எதிர்காலத்திலும் வெகுமதிகள்
தம்மைப் பின்பற்றுவோர் இப்போதும் எதிர்காலத்திலும் பலனளிக்கப்படுகிறார்கள் என்பதை இயேசு கொடுத்த பதில் காண்பிக்கிறது. இப்போதுள்ள ஒரு வெகுமதி என்னவென்றால், ஆவிக்குரிய சகோதரர்களும் சகோதரிகளும் அடங்கிய சர்வதேச குடும்பத்தின் பாகமாக அவர்கள் ஆவது ஆகும். குறைந்துகொண்டே போகும் அங்கத்தினர்களைக் குறித்தும், ஆதரவு இல்லாமையைக் குறித்தும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் புலம்பிக்கொண்டே இருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் கூடும் மன்றங்கள் நிரம்பி வழிந்துகொண்டேயிருக்கின்றன. இலட்சக்கணக்கான புதிய சாட்சிகள் ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டப்பட்டு வருகின்றனர்.
மற்றொரு வெகுமதி, கடவுளோடு நட்பும் அவரைப் பற்றிய அறிவும் கொண்டு வரும் மகிழ்ச்சியும் திருப்தியோடும்கூடிய மனசமாதானமும் ஆகும். ஆம், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே” மிகுந்த ஆதாயம். (1 தீமோத்தேயு 6:6) அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதைப் போன்று ஒருவர் சொல்லக்கூடுமென்றால், அது உண்மையிலேயே மனதின் ஒரு மகிழ்ச்சியான நிலையைப் பிரதிபலிக்கிறது: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்,” அதாவது திருப்தியாய் இருப்பது.—பிலிப்பியர் 4:11.
பவுல் மரணமடைவதற்கு சற்று முன்பு, இயேசுவைப் பின்பற்றிய அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் அடங்கிய ‘சிறுமந்தைக்கு’ எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் வெகுமதியைப் பற்றி பவுல் எழுதினார்: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.”—லூக்கா 12:32; 2 தீமோத்தேயு 4:7, 8.
இயேசுவைப் பின்பற்றிய லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகள்’ பரதீஸாக மாற்றப்பட்ட பூமியில் நித்திய ஜீவனை எதிர்காலத்தில் அடையப்போகும் வெகுமதிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (யோவான் 10:16) இயேசு, தம்மைப் பின்பற்றியவர்கள் மரிக்கையில் “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படுவார்கள்,” என்று உறுதியளித்தார்—லூக்கா 14:14.
வெகுமதியை கற்பனை செய்துபாருங்கள்
அப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் உண்மையில் எப்படி இருக்கும் என்று திருத்தமாக சொல்வதற்கு எவருமே அறிந்திராத போதிலும்கூட அவற்றை கற்பனை செய்துபார்க்க முயற்சி செய்வது பொருத்தமானது. “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்,” என்பதாக ஏசாயா 25:8-ல் விவரிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியவில்லையா? ஏசாயா 32:17-ல் உள்ள வார்த்தைகளைக் கற்பனை செய்துபார்க்க முயற்சி செய்யுங்கள்: “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.” ஆம், எல்லா மானிடர்களும் மெய்யான நட்பில் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வர். (ஏசாயா 65:21-25) இன்றும்கூட, சிறந்த வீடுகள், நல்ல தரமுள்ள பொருட்கள் போன்றவை ஊக்கமான உழைப்பின் விளைவாக கிடைக்கின்றன. அப்படியென்றால், கடவுளுடைய புதிய உலகில் பரிபூரணமான நிலைமைகளின்கீழ் ஆரோக்கியமுள்ள மக்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதற்குத் தேவையான எல்லாவற்றையும் உண்டாக்க முடியும்.—சங்கீதம் 37:4.
கடவுள் கொடுக்கும் வெகுமதிகள் நம்முடைய பங்கில் நமக்கிருக்கும் தகுதிகளின் காரணமாக அல்ல, ஆனால் சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய அபூரண நிலையின் மத்தியிலும் அவருடைய அன்பின் காரணமாக ஒரு வெகுமதியாக அளிக்கிறார். (ரோமர் 5:8-10) இருந்தபோதிலும், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வெகுமதிக்கும் நம்முடைய நடத்தைக்கும் இடையே ஒரு சம்பந்தம் உள்ளது. நாம் யெகோவாவை தைரியமான விசுவாசத்தோடும் சகிப்புத்தன்மையோடும் ஊக்கமாகத் தேட வேண்டும். (எபிரெயர் 10:35-39) வேறு வார்த்தைகளில் சொன்னால், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” ஆம், அவர் வெகுமதிகளை அளிக்கிறார்.—கொலோசெயர் 3:23, 24.