உலகத்தைக் கவனித்தல்
குப்பைகளின் விரைவு வளர்ச்சி
போலாந்து எல்லையில் ரோந்து வரும் படைவீரர்கள் இந்நாட்களில் விழிப்பாக கவனித்து வருவது ஒரு புது விதமான ஆக்கிரமிப்பு—வெளிநாட்டு குப்பைகள். தி வாஷிங்டன் போஸ்ட்-ன் பிரகாரம், 1992-ல், மேற்கு ஐரோப்பாவிலிருந்து மட்டும் 1,332 தேவையற்ற குப்பை இறக்குமதிகளை போலாந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 1993-ன் முதல் அரை பகுதி காலத்தில் இத்தகைய இறக்குமதிகள் 35 சதவீதம் உயர்ந்தன. அநேக மேற்கத்திய தேசங்களில் அபாயகரமான குப்பைகளை ஒழித்துக்கட்டுவது அத்தனை அதிக பணசெலவை உட்படுத்துவதால் சுற்றுப்புறச்சூழல் சட்டங்கள் அமல்படுத்துவதற்கு கடினமாயுள்ள குறைந்த முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு அவற்றை அனுப்பிவிடுவது செலவை மிச்சப்படுத்தும் தெரிவாக ஆகியுள்ளது. உதாரணமாக, பங்களாதேஷ்க்கு கப்பலில் அனுப்பப்பட்ட உரத்தோடு உருக்காலையில் வெளிவரும் 1000 டன் விஷ தூசியை கலந்து அனுப்பியதாக இரண்டு ஐ.மா. உலோக கம்பெனிகள் குற்றவாளியாக பிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சில குப்பைகள் அறச்சிந்தனையுடன் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் என்ற பெயரிலும் மறைத்து அனுப்பப்படுகின்றன. ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய மாகாணங்களிலிருந்து மருத்துவ அன்பளிப்புகளாக பொதுவாக பெறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு மாசுபடுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள், உள்ளாடைகள், கழிவறைப் பொருட்கள் அடங்கியவை என போலாந்து சுங்க அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.
மணவிலக்கு பத்திரிகை
மலைத்து நிற்கவைக்கும் வேகத்தில் வளர்ந்து வரும் மணவிலக்கு அதிகரிப்பில் ஒரு வியாபார வாய்ப்பைத் தேடி, பிரான்ஸிலுள்ள ஒரு பத்திரிகை பிரசுரிப்பாளர் மணவிலக்கு (ஆங்கிலம்) என்ற பெயருடைய ஒரு பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். இப்பத்திரிகை “வழக்கறிஞர்களுக்கு, மனோதத்துவ நிபுணர்களுக்கு ஆலோசனைகளையும், விவாகத்திற்குப் பின் முதலாவது வேலைதேடும் பெண்களுக்கும், மேலும்—தைரியமானவர்களுக்கு—காதல் சந்திப்புகளை மறுபடியும் எப்படி ஆரம்பிப்பது என்பதன் பேரிலும் குறிப்புகளை கொண்டிருக்கிறது” என ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியின் புல்லட்டின் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். தெளிவாக தோன்றுகிறபடி, இப்பத்திரிகை உட்படுத்தாத ஒரு விஷயம் விவாக ஒப்புரவு. அந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார்: “பிரச்சினைகளைக் கொண்ட உறவை சரிசெய்து கொள்வதன் பேரில் அறிவுரையை நாடும் எவரும் வேறு எங்காவது நோக்க வேண்டும்.” ஆம், கடவுளுடைய தவறாத வார்த்தையாகிய பைபிளின் அறிவுரையை நாட வேண்டும்.
வெனிசுயேலாவின் ஹம்மிங் குருவி ஆபத்தில் உள்ளது
வெனிசுயேலாவில் ஹம்மிங் குருவியின் இருபத்தியெட்டு இனங்கள் முற்றிலும் நசித்துப் போகும் ஆபத்தில் உள்ளன. இக்குருவி இனங்களில் சில உலகில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதில்லை. ஹம்மிங் குருவிகள் அலாஸ்கா முதல் அர்ஜன்டினா மற்றும் சிலி வரையுள்ள அமெரிக்காக்களைச் சேர்ந்தவை. அது இரண்டு முதல் ஒன்பது கிராம் எடையுள்ளது. அவற்றில் மிகச் சிறியது சுமார் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ள வண்டு ஹம்மிங் குருவியாகும், மிகப் பெரியது 21 சென்டிமீட்டர் நீளமுள்ள இராட்சத ஹம்மிங் குருவியாகும். வெனிசுயேலாவில் இந்த ஹம்மிங் குருவிகளை முற்றிலும் அழித்துக்கொண்டிருப்பது எது? ஏதோ வியாதியா, அல்லது அவற்றை கொன்று தின்னும் மற்றொரு பிராணியா? இல்லை. இலாகோவன் என்ற பெட்ரோலிய நிறுவனத்தால் வெளியிடப்படும் செய்தி பத்திரிகையான கார்டா இகோலாஜிக்கா-வின்படி, இதற்குக் காரணம் இக்குருவியின் வாழ்விடமாகிய காடுகள் அழிக்கப்படுவதே. மழைக்காடுகளை மனிதன் இரக்கமற்ற விதத்தில் அழித்து வருவதால் பாதிக்கப்படும் உயிரினங்களில் இந்தச் சிறிய, பல வண்ணமிக்க பரவசமூட்டும் பறவை ஒன்றாகும்.
கெடுதி விளைவிக்கும் பழக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது
சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பதைப் போன்று பாக்கு பாக்கெட்டுகளிலும் ஆரோக்கிய எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு சட்டம் விதித்துள்ளதாக ஏஷியாவீக் பத்திரிகை அறிக்கையிடுகிறது. தென் ஆசியாவில் உள்ள லட்சக்கணக்கான ஆட்கள் பான் மசாலா பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர். அந்த பான் மசாலா-வில் பாக்கு, பலவிதமான எண்ணெய்கள், இன்னும் மற்ற பொருட்கள் வெற்றிலையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. இதை மென்று தின்ன வேண்டும். வாயில் ஏற்படும் புற்றுநோயோடு பாக்கு சம்பந்தப்பட்டிருப்பதால், பாக்கு பாக்கெட்டுகளில் இந்தியா ஏற்கெனவே எச்சரிக்கைகளை வைத்திருக்கிறது. பிள்ளைகள் பாக்குகளை சாப்பிடும் போது தொண்டை அடைத்து செத்துப் போவதாக அறியப்பட்டிருக்கிறது. ஐந்து வயதுக்குக் கீழிருக்கும் பிள்ளைகளுக்கு பாக்கு விற்கக்கூடாது என்று பாகிஸ்தானின் புதிய சட்டங்கள் தடை விதிக்கவிருக்கின்றன.
தாத்தா பாட்டிமார்களின் பங்கு அதிகரிக்கிறது
ஐக்கிய மாகாணங்களில் செய்யப்படும் ஆய்வுகள் தாத்தா பாட்டிமார்கள், விசேஷமாக பாட்டிமார்கள் தங்கள் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிகமான பங்கு எடுத்து வருவதாகக் காண்பிக்கின்றன. முதுமையின் பேரிலுள்ள தேசிய நிறுவனத்தின் தொடரும் ஆராய்ச்சிகள் 1931-க்கும் 1941-க்கும் இடையே பிறந்தோரில் 69 சதவீதத்தினர் தாத்தா பாட்டிமாராக இருக்கின்றனர்; இவர்களில் 44 சதவீதத்தினர் தங்களுடைய ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதில் வருடத்துக்கு 100 மணிநேரங்களுக்கும் அதிகமாக செலவழிக்கின்றனர். சராசரியாக இந்தத் தாத்தா பாட்டிமார்கள் பிள்ளைகளுடன் 659 மணிநேரங்களை, அதாவது, 8 மணிநேரங்கள் கொண்ட 82 நாட்களுக்கு சமமான காலத்தை செலவிடுகின்றனர் என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜெர்னல் குறிப்பிடுகிறது. பாட்டிமார்கள் பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதில் சராசரியாக வாரத்துக்கு 15 முதல் 20 மணிநேரங்களை செலவிட்டனர், தாத்தாக்களைவிட பாட்டிகள் அத்தகைய கவனிப்பைக் கொடுப்பதில் 2.5 தடவைகள் அதிகப்படியானவர்களாக இருப்பதாக ஆய்வு கண்டது.
தகப்பன்மார் தங்கள் குடும்பத்தோடு தொடர்பின்றி உள்ளனர்
உலகத்தின் மற்ற இடங்களில் இருப்பதைப் போன்று, குடும்ப பிணைப்புகள் ஜப்பானில் முன்பு இருந்ததைப் போல் இல்லை. ஏறக்குறைய 4,81,000 ஜப்பானிய ஆண்கள் தங்கள் வேலையில் மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று தி டெய்லி யோமிரி செய்தித்தாள் சமீபத்தில் அறிக்கை செய்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அந்த எண்ணிக்கை 15 சதவீதம் அதிகமாக இருந்தது, வீடு, பள்ளி ஆகியவற்றைத் தேடுவதில் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமாகிக்கொண்டு வருவதால் அந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே பிரச்சினையைக் குறித்து அந்தச் செய்தித்தாள் ஒரு ஆய்வை அறிக்கை செய்தது. அதில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களில் 43 சதவீத இளைஞர் தங்கள் தகப்பன்மாரிடம் பேசவேயில்லை என்று அந்த ஆய்வு காட்டியது. ஒரு கணிசமான அளவு, 18.4 சதவீதத்தினர், தங்கள் தாய்மார்களோடு உரையாடல்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறினர்.
அர்ஜன்டினாவில் குடும்ப வாழ்க்கையில் மாற்றங்கள்
க்லாரின் என்ற பியூனஸ் ஏர்ஸ் செய்தித்தாளின்படி, அர்ஜன்டின குடும்ப வாழ்க்கையின் அமைப்பிலும் நடத்தை மாதிரியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் வெளிக்காட்டின. முன்மாதிரியான குடும்பங்களைப் பற்றி குறிப்பிடுகையில்—பெரியதாகவுள்ளது, ஒற்றுமையாகவும் விடுமுறை நாட்களிலோ அல்லது இரவுகளிலோ ஒன்றாக சேர்ந்து உணவருந்துவதாகவும் இருக்கும் குடும்பங்கள்—அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது: “அப்படிப்பட்ட முன்மாதிரியான குடும்பங்கள் வெறுமனே ஒரு பழைய புகைப்படம்—பிம்பங்களால் பிரதிபலிக்கப்படும் கடந்தகால கற்பனைக் கோட்பாடு.” கடந்த பத்தாண்டுகளில் ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், அர்ஜன்டினாவில் சுமார் 60-லிருந்து 80 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதன் எண்ணிக்கை இப்போது 12,00,000 என்று சூசன்னா டொராடோ என்பவர் எழுதிய அர்ஜன்டினாவில் குடும்பம் (La familia en la Argentina) என்ற புத்தகத்தில் உள்ள புள்ளிவிவரம் காண்பித்தது. இப்போது பிறக்கும் எல்லா குழந்தைகளிலும் 36 சதவீத குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவை—இது 1960-லிருந்து ஏறக்குறைய 30 சதவீத அதிகரிப்பு. இன்னும் கூடுதலாக, 20 மற்றும் 34 வயதுகளுக்கிடையே உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் திருமணப் பிணைப்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கக்கூடிய ஒன்று என்பதை நம்புவதில்லை என்று பேட்டிகள் காண்பித்திருக்கின்றன.
பிள்ளைகளின் சொல் வளம்
நவீன உலகின் விரும்பத்தகாத மெய்ம்மைகளைக் குறித்து பிள்ளைகள் அதிகம் தெரிந்திருக்கலாம், பெரியவர்கள் தாங்கள் அறிந்திருப்பதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட, என்று இத்தாலியில் நடந்த ஒரு ஆய்வு வெளிக்காட்டியது. ஆறு வயதிலிருந்து பத்து வயது வரை உள்ள பள்ளிப் பிள்ளைகள் எழுதிய 5,000 கட்டுரைகளை இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி மையத்திலிருந்து வந்த ஒரு குழு பரிசோதித்தது. லா ரிப்பப்ளிக்கா என்ற செய்தித்தாளின்படி, அவர்களுடைய 6,000-வார்த்தைகள் அடங்கிய சொல் தொகுதியை, பெரியவர்களால் எழுதப்பட்ட பிள்ளைகள் வாசிப்புப் பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்த போது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட “பிரச்சினைகளற்ற அமைதியான ஓர் உலகம் அவர்களை ஏமாற்றுவதில்லை” என்று வெளிக்காட்டியது. அச்செய்தித்தாள் கூடுதலாக சொல்கிறது: “‘போதைப் பொருட்கள்,’ ‘எய்ட்ஸ்,’ ‘கற்பழிப்பு’ போன்றவை எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை அவர்கள் திருத்தமாக அறிந்திருக்கின்றனர்.” “பிள்ளைகளின் எழுத்து உலகம், பெரியவர்களால் எழுதப்பட்டிருக்கும் வாசிப்பு பொருளைவிட அதிகமாக முன்னேறியிருப்பதாகவும் காலத்துக்கேற்றவாறு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர் என்று காரீரி டெல்லா செரா கூறுகிறது.
ஜனங்களை கவர்ந்திழுப்பது
அ.ஐ.மா., மேரிலான்ட்-ல் உள்ள ஒரு புராட்டஸ்டன்ட் சர்ச் ஆட்களை உள்ளே கவர்ந்திழுப்பதற்கு ஒரு புதிய முறையை கண்டுபிடித்தது. சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, சர்ச்சுக்கு வந்து சேர்ந்த முதல் 125 பேரில் ஒவ்வொருவருக்கும் 10 டாலர்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் வெறுமனே 75-நிமிட ஆராதனைக்கு உட்கார்ந்திருக்க வேண்டும், அதில் சிறு நாடகமும், “மென்மையான ராக் இசைக்குழு” பின்னணியோடு பாடலும் இருந்தன. பத்திரிகைத் துறை சங்கத்தின்படி, மதத்தொண்டுகளைச் சார்ந்த சர்ச்சின் உதவி இயக்குநர் இவ்வாறு சொன்னார்: “சர்ச்சுகள் எப்போதும் பணம் கேட்பதால் சர்ச்சுக்குப் போவதில்லை என்று அநேக ஆட்கள் குறை கூறுகின்றனர். ‘தைரியமாக நாம் ஏன் அவர்களுக்குப் பணம் கொடுக்கக்கூடாது?’ என்று நாங்கள் நினைத்தோம்.” கொடுக்கப்பட்ட பணத்தை அநேகர் ஏற்றுக்கொண்டனர் என்று அந்த அறிக்கை கூறியது, அநேகர் பிற்பாடு அதைத் திருப்பிக் கொடுத்து விட்டதாக சொல்லிக் கொண்டனர். முற்பத்து-இரண்டு பேர் பணத்தை வைத்துக் கொண்டனர்.
உபயோகமுள்ள பழைய கொள்கலங்கள்
கப்பலில் பயன்படுத்தப்படும் உலோக சரக்குப் பெட்டிகளை பயனற்ற உலோகம் என எறிந்து விடுவதற்குப் பதிலாக, இனிமேலும் பாரமான சரக்குகளைக் கொண்டு செல்லமுடியாத அளவுக்கு அதிக பழுதாய்ப் போனவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கப்பல் போக்குவரத்து கம்பெனி பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட இரண்டு பெரிய உலோக அமைப்புகளை ஒன்றாக இணைத்தால், ஒரு நடுத்தர-அளவுள்ள பள்ளி வகுப்பறையாக ஆகிறது. ஒவ்வொரு சரக்குப் பெட்டியிலும் ஒரு பக்கத்தை நீக்கிவிட வேண்டும், மீந்திருக்கும் பக்கங்களுக்கு ஜன்னல்களும் கதவுகளும் பொருத்த வேண்டும். பழைய சரக்குப் பெட்டிகள் வீடுகளாகவும், கடைகளாகவும், தனி மருத்துவமனைகளாகவும், நூலகங்களாகவும்கூட சேவிக்கலாம். ஆப்பிரிக்கன் பனோரமா-வின் படி, ஒரு சந்தர்ப்பத்தில், “மாற்றியமைக்கப்பட்ட 16 சரக்குப் பெட்டிகள் 1,000 மாணவர்களுக்கும் மேலாக இடவசதியளிக்கும் 8 விரிந்தகன்ற வகுப்பறைகளை அளித்தன.” தற்சமயம் வரை, 1,000-க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டிகள் தேவையிலிருக்கும் தென் ஆப்பிரிக்க சமுதாயங்களுக்கு கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட கம்பெனியின் பழைய சரக்குப் பெட்டிகள் தீர்ந்துபோய்க் கொண்டிருக்கின்றன. தேவைக்கு மேற்பட்ட பழைய சரக்குப் பெட்டிகள் இருக்குமா என்று அந்தக் கம்பெனி மற்ற சர்வதேச கப்பல் போக்குவரத்து கம்பெனிகளை உதவிக்காகக் கேட்கிறது.
மூளை நலிந்து போதல்
அதிகப்படியான மதுபானத்தையும் கொழுப்பையும் பல ஆண்டுகளாக உட்கொள்வது தொங்கு சதையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மூளையையும் சுருங்கச் செய்கிறது என்று ஜப்பானில் உள்ள அக்கிட்டா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி தொகுதி ஒன்று நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக MRI-ஐ (MAGNETIC RESONANCE IMAGING) உபயோகித்து அத்தொகுதி 960 நபர்களை ஆய்வு செய்தது. மதுபானத்தின் பேரில் சார்ந்திருப்பவர்களில் 58 சதவீதத்தினரின் மூளை நலிவடைந்து போயிருப்பதாக கண்டுபிடித்தது. ஹைப்பர்லிப்பீமியா, அதாவது இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்புக் கூறுகள் உள்ளவர்கள் மத்தியில், வயது 40-களிலும், 50-களிலும் இருந்தவர்களில் 41 சதவீதத்தினருக்கும், 60 வயதுக்கு மேலாக இருந்தவர்களில் 55 சதவீதத்தினருக்கும் அப்படிப்பட்ட மூளை நலிவு காணப்பட்டது. அதற்கு நேர் எதிர்மாறாக, மதுபானத்தின் பேரில் சார்ந்திராமலோ அல்லது ஹைப்பர்லிப்பீமியா இல்லாமலோ இருந்தவர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே மூளை நலிந்து போகும் அறிகுறிகளைக் காண்பித்தனர். மூளை நலிந்து போனவர்கள் மத்தியில் 80 சதவீதத்தினருக்கு அறிவு குழம்பிய அறிகுறிகள் காணப்பட்டன யோமியுரி ஷிம்பன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அந்த ஆராய்ச்சி தொகுதியின் துணை பேராசிரியர் இக்கு நெமுரா இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “மூளை நலிந்து போவது மெதுவாக, ஆனால் நிச்சயமாக ஏற்படுகிறது. அளவுக்கு மீறி மதுபானம் அருந்துவதையும், கொழுப்பான உணவு உண்பதையும் தவிர்ப்பது முக்கியம்.”