மலர்களை முத்தமிடும் குருவி
பிரேசில் நாட்டவர்கள் இதை பேஸ்-ஃப்ளார் என்கிறார்கள். இதற்கு மலர்களை முத்தமிடும் குருவி என்று அர்த்தம். இப்பெயர் மலர்க்கூட்டத்தை எப்போதும் வட்டமடிக்கும் தேன்சிட்டுக்களுக்கே (hummingbirds) மகா பொருத்தம். இந்தச் சின்னஞ்சிறிய சிட்டுக்களின் வண்ணம் மிகு இறகுகளில் மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள், அவற்றை, “உயிருள்ள நவரத்தினம்,” “சிதறிய வானவில்” என்று என்னன்னவோ சொல்லி புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவற்றின் நிறங்களைக்கொண்டு வகை பிரித்து, சிகப்பு நிற சிட்டை மாணிக்கம் என்றும், வயிற்றின் பகுதியில் மின்னிடும் பச்சை நிற சிட்டை மரகதம் என்றும், மஞ்சள் பழுப்பு நிற வாலுடைய சிட்டை வெண்கல-வால்நட்சத்திரம் என்றும் அழகழகான பெயர்களை சூட்டியுள்ளார்கள்.
தேன்சிட்டுக்களின் கண்கவர் வண்ணங்களை அவற்றின் தொண்டைப் பகுதி இறகுகளிலும், ஆண் குருவிகளின் கொண்டைகளிலும் காணலாம். இவற்றின் இறகுகளில் காற்று அடைத்திருக்கும் பல அறைகள் அடுக்கடுக்காக உள்ளன. அவற்றில் ஒளி அலைகள் பட்டதும் வானவில்லின் வர்ண ஜாலங்கள் ஜொலித்திடும். இவை கோடிக்கணக்கான சிறுசிறு சோப்பு குமிழ்களில் தோன்றும் வர்ணங்களுக்கு ஒப்பாய் இருக்கும்.
வட அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் பழுப்பு மஞ்சள் நிற ரூபஸ் தேன்சிட்டுகள் பரவலாக காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி, கிரீச்சர் கம்ஃபர்ட்ஸ் என்ற தனது புத்தகத்தில் ஜோன் வார்டு-ஹாரிஸ் பின்வருமாறு மிக அழகாக வர்ணிக்கிறார்: “நெக்லஸ் அணிந்திருப்பதைப் போல் அதன் கழுத்து நிறத்திட்டு (gorget) உள்ளது. . . . இந்நிறத்திட்டு கன்னங்களின் கீழிருந்து, தாடை, தொண்டை, மார்பு வரை நீண்டு, குழந்தையின் கழுத்தில் கட்டும் அணையாடைபோல் உள்ளது. இந்தக் கழுத்து நிறத்திட்டு பு. . .ஸ் என்று விரிவது கண்கொள்ளா காட்சி. அப்போது அதை பார்க்கவேண்டுமே! இயல்பான அளவைவிட இருமடங்கு பெரியதாக தெரியும். நெருப்புபோல் செக்கச்செவேல் என்று ஜொலித்திடும்.” ரூபஸ் தேன்சிட்டு ஜூ. . .ம் என்று பறக்கும்போது, கழுத்து நிறத்திட்டு ஊதா நிறமாக, பச்சை நிறமாக அல்லது எல்லா வண்ணங்களையும் உமிழும் கண்ணாடி பட்டகம் போல் காட்சியளிக்கும். ஆனால் சூரிய வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிவிட்டால், கழுத்து நிறத்திட்டு திடீரென்று கறுப்பு வெல்வெட் நிறமாக மாறிவிடும்.
சொக்க வைக்கும் சர்க்கஸ்
வானில் சர்க்கஸ் காட்டி சாகசங்கள் புரிவதில் தேன்சிட்டுகளுக்கு நிகர் தேன்சிட்டுக்களே! ஒரு நிமிடம் பார்த்தால், அதற்கு இறக்கைகள் இருக்கிறதா என்று சந்தேகம் வரும் விதத்தில் படு வேகமாக அவற்றை அடித்து, ஒருவித ரீங்கார சத்தத்தை எழுப்பி, தேனை உண்ணும். மறுநிமிடமே வலிமை மிக்க இச்சின்னஞ்சிறிய தேன்சிட்டு, நொடிக்கு 50 முதல் 70 முறை தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு, (நொடிக்கு 80 முறையென்று சிலர் சொல்கிறார்கள்) முன் பக்கமாகவும், பின்பக்கமாகவும், பக்கவாட்டிலும், தலைக்கீழாகவும்கூட அந்தரத்தில் சாகசம் புரியும். இது மணிக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்து, டக்கென்று பிரேக் போடுமாம். ஆமாம், எப்படி இந்தத் தேன்சிட்டுக்களால் இப்படியெல்லாம் மயிர்க்கூச்செறிய வைக்கும் சர்க்கஸ்களை செய்ய முடிகிறது?
அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் உடல் அமைப்பில்தான் இரகசியமே அடங்கியுள்ளது. உறுதியான மார்பு எலும்புக்கூட்டுக்கு அருகிலுள்ள நன்கு வளர்ச்சியடைந்த தசைகள் அதன் உடல் பாகத்தில் 25 முதல் 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன. இதன் இறக்கைகள், தோள்ப்பட்டை முதல் நுனிவரை கெட்டியாக உள்ளதால் மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் இறக்கைகளை அடிக்கவும், பின்புறமாகக்கூட பறக்க வலிமையைத் தருகின்றன. மற்ற பறவைகளால் கீழ் நோக்கியே இறக்கைகளை அடிக்க முடியும். இவ்வாறு இரு புறமும் இறக்கைகளை அடிப்பதால், ஹெலிகாப்டர்போல டக்கென்று மேல் எழவும், முன்னோக்கி செல்லவும் முடிகிறது. இறக்கைகளை 180 டிகிரிக்கு வட்டம் அடிக்கும் அளவுக்கு அதன் தோள் இணைப்புகள் அமைந்துள்ளன. ஓகோ, இதுதானா ரகசியம்! அதனால்தான் தேன்சிட்டுகள் ‘சிட்டாக’ பறந்து சாகசங்கள் புரிகின்றன!
இன்னல்களை தாங்கும் வலிமை உள்ளதா என்று டெஸ்ட் வைத்தால் தேன்சிட்டுகள் பாஸாகிவிடுமா? கவலையே வேண்டாம். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாகிவிடும். உதாரணத்திற்கு, ரூபஸ் தேன்சிட்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். மெக்ஸிக்கோ அவற்றின் குளிர்கால வீடு. அங்கிருந்து அவை வடக்கே அலாஸ்கா வரை, அதாவது மூவாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இடம்பெயர்ந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது உயரமான மலைகள், பரந்துவிரிந்த பெருங்கடல்கள், கடினமான சீதோஷணநிலைகள் ஆகியவற்றால் வரும் இன்னல்களை துச்சமாக நினைத்து, ‘சிட்டாக பறந்துவிடும்’ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
சாப்பாட்டு மன்னர்கள்
மலர்களிடம் காதல் கொண்டிருக்கும் தேன்சிட்டுகள், தங்கள் மலர் காதலிகளை சந்திக்க வரும்போதெல்லாம், அயல் மகரந்தசேர்க்கையால் பெரும் நன்மை ஏற்படுகிறது. மலர்களைவிட மலரிலிருக்கும் தேன்தான் சிட்டுக்களை கொக்கிப்போட்டு இழுக்கிறது. அவற்றிற்கு எக்கச்சக்கமாக எனர்ஜி தேவைப்படுவதால், தினமும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை, அதாவது தேனை, தங்கள் உடல் எடையில் பாதியளவு (இருமடங்கு என்றும் சிலர் சொல்கிறார்கள்) உண்கின்றன. இவை உண்பதைப்போல் மனிதர்களும் உண்டால் எப்படியிருக்கும்!
மற்ற பறவைகள்போல், தேன்சிட்டுக்கள் தரையில் நடப்பது அரிது. அவை பறந்துகொண்டே உணவு சாப்பிடும். தேன்சிட்டுக்களின் வகைகளைப் பொருத்து அவற்றின் அலகுகள் அளவிலும் வடிவிலும் வேறுபடுகின்றன. அலகுக்கு பொருத்தமான மலர்களையே அவை நாடும். தேனை மட்டுமின்றி, பழ ஈக்களையும், தாவரப் பூச்சிகளையும் உணவாக உண்ணும். சரி, மலர்களை முத்தமிட்டு, எப்படி தேனை உறிஞ்சுகின்றன?
தேன்சிட்டுகள் தேனை உறிஞ்ச உபயோகிக்கும் சாதனம்—அதன் நாக்கு. ஜோன் வார்டு-ஹாரிஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: “தேன்சிட்டின் நாக்கு, நீண்டு, குறுகி, பிளவுப்பட்டு, நுனியில் இலேசாக உரோமத்தோடு உள்ளது; சுருண்டு இருக்கும் இரு தேன்குழல்கள், குட்டி கிண்ணங்களைப்போல் உள்ளன. அவற்றின் மூலம் தேனை அள்ளியெடுத்து, குழாய் வழியே உறிஞ்சி குடித்து தீர்த்துவிடும்.”
உங்கள் வீட்டு ஜன்னலில் உணவுவைத்து தேன்சிட்டுக்களைக் கவர்ந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான் அவை செய்யும் லூட்டிகளை பார்க்க பார்க்க சலிப்பே தட்டாது. எனர்ஜியெல்லாம் இவற்றிடம்தான் ஒன்றுதிரண்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றும். அவற்றிற்கு உணவுவளிக்க நீங்கள் விரும்பினால், அந்தச் சீஸன் முழுவதும் உணவளியுங்கள். ஏனென்றால் உணவுக்காக உங்களையே நம்பி, பக்கத்திலேயே கூடு கட்டி, தங்கள் குடும்பத்தை பராமரிக்க தொடங்கிவிடும்.
ஜோடி தேடுதல்
மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் உள்ள சிலவகை ஆண் தேன்சிட்டுகள், தங்கள் காதலிகளை பாட்டுப்பாடி மயக்குகின்றன. குவாத்மாலாவில் உள்ள ஒயின் கழுத்து தேன்சிட்டுக்கள் சுரம் ஏற்ற இறக்கத்தோடு பாடுவது இசையில் கரைக்கண்ட பாடகனின் குரல்போல் கேட்கும். வெள்ளைக்காது தேன்சிட்டின் பாட்டு, “கிலிங், கிலிங் என்று சின்ன வெள்ளி மணி ஓசைபோல் இனிமையாக” ஒலிக்கும். பெரும்பாலான சிட்டுக்கள் பிரமாதமான பாடகர்கள் ஒன்றும் அல்ல. அவை கர்ணகடூரமான குரலில், ஒரேவிதமாக கத்திப்பாடும் அல்லது, அலகை மூடியப்படி முணுமுணுக்கும் அல்லது கழுத்து நிறத்திட்டை பாவாடைபோல் விரித்துவைத்திருக்கும்.
ஜோடியை தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தில், சில தேன்சிட்டுக்கள் பிரமிக்கவைக்கும் சாகசங்களை செய்கின்றன. இதற்கு ரூபஸ் தேன்சிட்டுக்கள் நல்ல உதாரணம். அவை கண்சிமிட்டும் நேரத்திற்குள் மின்னலென மேலே எழும்பி, அதை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்சிட்டின் தலைக்கு நேரே தடால்-என்று இறங்கி, இறங்கிய வேகத்தில் மறுபடியும் மேலே எழுந்துவிடும். இவ்வாறு ஏறி இறங்குவது ஆங்கில எழுத்து J போல் காட்சியளிக்கும். இந்த ஜே-வின் அடிபாகத்தை வரைவதைப்போல் முன்னுக்கும் பின்னுக்கும் வந்து, உடனே மேலே எழும்பிவிடும் அல்லது தன் புதிய ஜோடியோடு ‘சிட்டாக’ பறந்துவிடும். இப்படி ஆட்டம்போடும்போது அந்த ஆண்சிட்டு தன் இறக்கைகளை நொடிக்கு இருநூறு தடவை படபடவென்று அடிக்கும்!
குட்டி குட்டி கூடுகள்
தேன்சிட்டுக்களின் கூடே “இந்த உலகில் மிக மிக குட்டியான கட்டிடம்” என்கிறார் அதை பார்த்த ஒருவர். ஜோன் வார்டு-ஹாரிஸ் தான் கண்டெடுத்த ஒரு கூட்டை விழித்தெழு! நிருபருக்கு காட்டினார். அது குறுக்களவில் 4.5 சென்டிமீட்டரும், ஒரு சென்டிமீட்டர் ஆழமும் இருந்தது. வண்டு அளவுக்கு இருக்கும் அவற்றின் குஞ்சுகள் வளரவும், அவை வளரும்போது இந்தக் குட்டி கூடு விரிவடையும்படி கட்டியிருந்தது. அந்தக் கூட்டை கையில் எடுக்கும்போது, மனம் குஷியால் துள்ளியது! தாவரங்களில் மெத்தென்று இருக்கும் பொருட்களால் ஆன அக்கூடு, சின்ன பொம்மையின் குட்டிக் கோப்பை போல் இருந்தது! மென்மையான இறகுகளையும், சிலந்தி வலையையும் கலந்து கூடுகளை கட்டுவதும் உண்டு. இக்கூட்டில் இரண்டு அல்லது மூன்று பளிச்சென்ற தூயவெள்ளை முட்டைகளை இடும். இவை பார்க்க “ஒரேயளவான முத்துக்களைப்போல் இருக்கும்.”
குஞ்சுகளுக்கு உணவூட்டும்போது, தாய் குருவி, தன்னுடைய அலகை, குஞ்சுகளின் பிஞ்சு தொண்டையின் அடிவரை நுழைத்து, அவற்றிற்கு தேவையான போஷாக்கை கொடுக்கிறது. பொதுவாக, மூன்றே வாரங்களில் குஞ்சுகள் கூட்டைவிட்டு கிளம்பி, சுயமாக பறந்து, திரிந்து உணவுத்தேடி வளர்ந்துவிடும். இவ்வாறு திரியும் பறவைகள், இயற்கை அவற்றிற்குள் வைத்திருக்கும் கடிகார மணி அடித்தவுடன், மென்மையான குளிர் நிலவும் இடங்களைத்தேடி தங்களது நீண்ட பயணத்தை தொடங்கிவிடும்.
அஞ்சா நெஞ்சம் படைத்தவை
தேன்சிட்டுக்களின் அஞ்சா நெஞ்சத்தை பார்க்கும்போது வியப்பளிக்கும். உணவுக்காகவும் இடத்திற்காகவும் சண்டையிடும்போது பார்க்கவேண்டும் அவற்றின் கோபத்தை! தென் அமெரிக்காவில் வெல்வெட் ஊதாநிற கொண்டை தேன்சிட்டுக்கள் இரண்டு, தங்கள் கூடு இருக்கும் இடத்திற்கு வந்த பெரிய கழுகை பயங்கர தைரியத்தோடு எதிர்த்ததை பார்த்தார்களாம். அந்தக் காட்சி பருந்தை எதிர்க்கும் தாய் கோழியைப் போல் இருந்ததாம். ஆனால் பாம்பு, தவளை, சிலந்திவலை, முள்ளுள்ள மலர் போன்ற மற்ற எதிரிகளால் தேன்சிட்டுக்கள் சிலசமயம் உயிரிழப்பது பரிதாபம்! அவற்றை வேட்டையாடும் மனிதர்களும் எதிரியே.
ஆனாலும் அவற்றிற்கு நண்பர்களே அதிகம். அடுத்தமுறை தேன்சிட்டுக்கள் எப்போது வரும், அவற்றின் வழக்கமான, ஆனால் நன்மைதரும் வாழ்க்கை முறையை எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள மலர்களை முத்தமிட வரும் தேன்சிட்டுக்களை உன்னிப்பாக கவனிக்க தவறிவிடாதீர்கள்! இயற்கையின் இந்த உயிருள்ள இரத்தினங்களை பார்க்க பார்க்க திகட்டாமல், மகிழ்ச்சியில் அப்படியே ஆழ்ந்துவிடுவீர்கள்!
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
தேன்சிட்டுக்களைப் பற்றி சில உண்மைகள்
• தேன்சிட்டுக்களில் 320 வகை உண்டு. மேற்கு அரைக்கோளத்தில், நிறைய எண்ணிக்கையில் இருக்கும் பறவை இனங்களில் இவை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன
• பறவை இனங்களில் இவைதான் குள்ளம்: கியூபாவில் இருக்கும் வண்டு தேன்சிட்டின் அளவு, அதன் அலகின் நுனி முதல் வால் நுனிவரை சுமார் 6 சென்டிமீட்டரே
• மிகப் பெரிய தேன்சிட்டின் மொத்த அளவு 22 சென்டிமீட்டரே. இவற்றை தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில், ஈக்வடாரிலிருந்து சிலி வரை காணலாம்
• இவற்றின் முக்கிய குடியிருப்பு ஸ்தலங்கள்: தென் அமெரிக்காவின் குறுக்கே பூமத்திய ரேகை செல்லும் பிரதேசங்களில், கடல்மட்ட உயரத்திலுள்ள பகுதிகளும், கடல்மட்டத்திலிருந்து 4,500 மீட்டருக்கும் அதிக உயரத்திலுள்ள பகுதிகளும், ஒருசில கரீபியன் மற்றும் பசிபிக் தீவுகளும்
• கோடைக்காலங்களில் இவை வடக்கிலுள்ள அலாஸ்கா, தெற்கேயுள்ள டீயர் டெல் ஃயூகோ என தொலைதூரங்களிலும் காணப்படுகின்றன
• ஐரோப்பாவில் ஒருகாலத்தில் இவற்றை லட்சக்கணக்கில் கொன்று, இறகுகளால் தொப்பி போன்றவற்றை அலங்கரித்து விற்றார்கள். தேன்சிட்டுக்களின் சில இனமே அழிந்துவிடும் அபாயம் வந்தது
[படங்கள்]
ராட்சதன் (முழு உருவம்)
வண்டு தேன்சிட்டு (முழு உருவம்)
[படத்திற்கான நன்றி]
C. H. Greenewalt/VIREO
1990 Robert A. Tyrrell
[பக்கம் 15-ன் படம்]
ரூபஸ் தேன்சிட்டு
[படத்திற்கான நன்றி]
THE HUMMINGBIRD SOCIETY / Newark Delaware USA
[பக்கம் 15-ன் படம்]
வண்டு தேன்சிட்டு (பெரிதாக்கப்பட்டது)
[படத்திற்கான நன்றி]
1990 Robert A. Tyrrell
[பக்கம் 15-ன் படம்]
அண்டில்லியன் மேங்கோ
[படத்திற்கான நன்றி]
© 1990 Robert A. Tyrrell
[பக்கம் 16-ன் படம்]
ரூபஸ்-பிரஸ்ட்டெட் ஹர்மிட்
[படத்திற்கான நன்றி]
1990 Robert A. Tyrrell
[பக்கம் 16-ன் படம்]
அனாஸ் (பெரிதாக்கப்பட்டது)
[படத்திற்கான நன்றி]
Patricia Meacham/Cornell Laboratory of Ornithology
[பக்கம் 17-ன் படம்]
தாய் ரூபி-த்ரோட்டெட் தேன்சிட்டும் குஞ்சுகளும்