ஆப்பிரிக்க வானின் அழகுக்கு அழகு சேர்க்கும் வைரங்கள்
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
நிலநடுக்கோட்டின் கொளுத்தும் வெயிலால், வறண்டு, உலர்ந்து, வாட்டி எடுக்கப்பட்டது போல் இருக்கிறது ஆப்பிரிக்க சவான்னா. அங்குள்ள கூரிய முட்களுடைய சீமையிலந்தை மரங்களினூடேயும் (wait-a-bit trees) முட்புதர்களினூடேயும் நாங்கள் படாதபாடு பட்டு சென்றோம்.
திடீரென்று செங்குத்தான ஒரு இடத்திற்கு வந்தோம். சட்டென்று எங்கள் கவனம் பன்னிறம் காட்டும் மினுக்கொளியால் கொள்ளைகொள்ளப்பட்டது. பூத்துக் குலுங்கும் ஒரு வேல மரக் கிளையில் ஒரு சிறிய பறவை வந்தமர்ந்தது. அதன் சிறிய இறகினுள் குட்டிச் சூரியன் எட்டிப் பார்ப்பதுபோல் பற்பல வண்ணங்கள். சிறகுள்ள இந்த இரத்தினம் சூரிய பறவை (சன்பேர்டு) என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது.
உலோக கண்ணாடிகள் (மெட்டாலிக் மிரர்ஸ்)
உலகில் நூற்றுக்கு அதிகமான சன்பேர்டு பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் அநேகம் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ளன. அவை ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் தீவுகளிலும்கூட காணப்படுகின்றன. கண்ணுக்கினிய பற்பல இனங்களாக இருப்பினும் சூரியனில் நுண்ணிய உலோக கண்ணாடிகள் பிரதிபலிப்பது போன்ற அமைப்பே சன்பேர்டுகளிலும் உள்ளன. இவை ஒளிக்கதிர்களை பிரதிபலித்து, பல்வர்ண வானவில்லைப் போல் தோன்றுகிறது; பகட்டு சிகப்பு, மஞ்சள், நீலம், பச்சை மற்றும் சிறிது தாமிர நிறம் கலந்த நிறங்கள் போன்ற பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கின்றன.
சன்பேர்டுகள் வழக்கமாக அமெரிக்க தேன்சிட்டு பறவைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. தேன்சிட்டுகளைப் போலவே இவையும் பகட்டான நிறமுடையவை; இவை தேன் குடிப்பவை. ஆனால் தேன்சிட்டுகளை விடப் பெரியவை. என்றாலும், வட அமெரிக்காவில் உள்ள சக பறவைகளைப்போல் பறக்கும் திறமை இவற்றிற்கு இல்லை.
பொதுவாக சன்பேர்டுகள் தேனை உறிஞ்சுவதற்காக நேரே பூவின் மீது அமர்ந்துகொண்டு, வளைந்திருக்கும் தனது நீளமான அலகை நுழைத்து தேனை உறிஞ்சுகின்றன. ஆனால் சன்பேர்டு தன் அலகை செலுத்த முடியாதளவுக்கு நீளமாக இருக்கும் குழாய் வடிவ பூக்களில், பூவின் கீழ்ப்பகுதியைத் துளைத்து தேனை வழியச் செய்து குடிக்கிறது. அது பூக்களிலும் அருகிலிருக்கும் இலைகளிலும் இருக்கும் பூச்சிகளையும்கூட சாப்பிடுகிறது.
ஆண் பறவைகள் பாடுவதில் கில்லாடிகள். இவற்றின் பாட்டொலி கவர்ச்சியூட்டும் சன்பேர்டின் ட்ஸ்ப் என்ற மெல்லிய கீச்சொலி முதல், சிவப்பு குடுமியுள்ள கிழக்கு ஆப்பிரிக்க மலகைட் சன்பேர்டின் ட்ஸ்க்-ட்ஸ்க்-ட்ஸ்க்-ட்ஸ்க்-ட்ஸ்ட் ட்ரீ-ட்ரீ-டுர்ர்ர் என்ற அழகான பாட்டொலி வரை வேறுபடுகிறது. இவை அடர்ந்த புதர்களுக்கு இடையே இருப்பதை அநேக சமயங்களில் இவற்றின் பாடல்களே சொல்லாமல் சொல்கின்றன. இருப்பினும், வறண்டு உலர்ந்த பகுதியான ஆப்பிரிக்க புல்வெளியில் இவற்றை ஒருமுறை பார்த்துவிட்டால் பின்பு எளிதில் கண்டுகொள்ள முடிகிறது.
நிறத்திலோ சுமார்; வேலையிலோ உஷார்
ஆண் பறவையைக் காண்பதும் அது பாடுவதை கேட்பதும் இனிதாய் இருக்கையில், பெண் பறவை பார்ப்பதற்கு சிறியதாகவும் மங்கிய நிறமுள்ளதாகவும் இருக்கிறது. எனவேதான் பறவை விரும்பிகளும் போட்டோகிராபர்களும் பெரும்பாலும் பெண் பறவைகளைக் கண்டுகொள்வதில்லை. ஆண் பறவையுடன் சேர்ந்து இருக்கையில் மட்டுமே வழக்கமாக பெண் பறவைகளைக் கண்டுகொள்கிறார்கள். இது மங்கிய நிறத்தில் இருந்தாலும், உஷாரானது.
சாதாரணமாக பெண் பறவைதான் கூடு கட்டுகிறது; அதோடு குஞ்சு பொரிப்பதில் அதிகமான வேலைகளையும் செய்கிறது. பெண்பறவை கூடு கட்டும் வேலையில் மும்முரமாக இருக்கும்போது கூடு கட்டும் பகுதியில் நுழையும் எதிரிகளை துரத்துவதற்கு ஆண்பறவை உஷாராக இருக்கிறது.
தொங்கும் கூடுகள்
சன்பேர்டின் கூடு பார்க்க சகிக்காது. காற்றில் பறக்கும் குப்பைகளை சேகரித்து வேல மரமுள்ளில் குவித்து வைத்தாற்போலவே இருக்கும். அவை நார்ப்பொருளால் பின்னப்பட்டு, நூலாம்படையால் நெய்யப்பட்டு பனித்துளி வடிவத்தில் தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றும். இக்கூட்டின் வெளிப்புறமோ, சிறுசிறு குச்சிகளாலும், காய்ந்த இலைகளாலும், கடற்பாசிகளாலும், அவ்வப்போது விதைத் தோடுகளாலும் திறமையுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
கூட்டின் உட்புறம் மென்மையான புல், இறகு, மிக நுண்ணிய பொருள் ஆகியவற்றால் லைனிங் செய்யப்பட்டிருக்கும். கூட்டின் மேற்புறத்தில் ஒரு சிறிய துவாரம் இருக்கிறது. பறவை உள்ளேயும் வெளியேயும் செல்ல இதுவே வழி. பெரும்பாலும் பெண்பறவை தனிமையில் அடைகாக்கும். பேரிக்காய் வடிவ கூட்டினுள் பெண்பறவை உட்கார்ந்திருக்கையில் எப்போதும் அதன் நீளமான வளைந்த அலகு கூட்டிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இது ஒன்று அல்லது இரண்டு முட்டை இடும், அவை சுமார் 14 நாட்களில் பொரிந்துவிடும். குஞ்சு கூட்டை விட்டு பறக்க ஆரம்பிக்கையில் தாய்ப் பறவையைப் போலவே மங்கின நிறமுடையதாய் இருக்கும். இருப்பினும் ஆண் குஞ்சுகள் வளருகையில் அதன் அழகுக்கு அழகு சேர்க்கும் கம்பீரமான இறகுகள் முதிர்ச்சியடைந்து, அசல் சூரிய பறவையாக மாறிவிடும்.
புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரின் தாராள மனப்பான்மைக்கும் பல்வகைமைக்கும் சன்பேர்டு ஒரேவொரு எடுத்துக்காட்டுதான். இவற்றின் அழகிய நிறங்களையும் இவற்றிற்கே உரிய பண்புகளையும் படைத்த சிருஷ்டிகர் நமது போற்றுதலுக்கு உரியவர். “பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்: . . . ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே . . . துதியுங்கள்,” “சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக,” என்று பைபிள் கட்டளையிடும் படைப்புகளுள் சன்பேர்டும் ஒன்று. (சங்கீதம் 148:7, 10, 12; 150:6; திருத்திய மொழிபெயர்ப்பு) ஆப்பிரிக்க வானின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த வைரங்கள் இவற்றை உருவாக்கிய சிருஷ்டிகரை துதிக்கும்படி நம்மைத் தூண்டுவதாக.