பெயரும் ஸ்விப்ட்—பறப்பதும் ஸ்விப்ட்
கென்யாவிலிருந்து “விழுத்தெழு!” நிருபர்
காற்றோடு போட்டிபோட்டு, தன் அரிவாள் வடிவ சிறகுகளை விரித்து, படு சுட்டியாய் பறக்கும் பறவை இந்த உலகிலேயே ஸ்விபிட் பறவையாகத்தான் இருக்கும். இதன் எடையோ வெறும் கிராம் கணக்கு. பறப்பதோ மின்னல் வேகம். “ஸ்விப்ட் பறவைகள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்” என்கிறது தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா. ஸ்விப்ட் என்ற ஆங்கில சொல்லுக்குத் ‘துரிதமாக செல்லக்கூடியது’ என்று பொருள். இப்பறவை கண்மண் தெரியாமல் சூப்பர் சோனிக் ‘வேகத்தில்’ பறப்பதால் ஸ்விப்ட் என்ற பெயர் சூப்பர் பொருத்தம்.
ஸ்விப்ட் பறவைகள் உணவு பிடிக்க உயரே வானில் சடாரென்று எழுவது, சட்டென்று திரும்புவது, ஜூ. . .ம் என்று பறப்பதும் என எல்லாவற்றையும் ரொம்ப ஈஸியாக செய்வதுபோல் தெரியும். உணவைப் பிடிப்பது, சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கூடு கட்டும் பொருட்களை சேகரிப்பது என எல்லா வேலைகளையும் பறந்துகொண்டே செய்கின்றன. இவ்வளவு ஏன், ஜோடி சேருவதுகூட பறந்துகொண்டே என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ஸ்விப்ட் பறவைகள் பறப்பதிலேயே ஏகப்பட்ட நேரத்தை செலவிடுவதால், கண்ணுக்கு தெரியாதபடி மேகங்கள் மறைக்க, உயரே வானத்தில் அவை கூடுகட்டுவதாக அந்தக் காலத்து ஆட்கள் நம்பினார்களாம். சில ஸ்விப்ட் பறவைகள் வருஷத்தில் ஒன்பது மாதங்களை காற்றில் பறந்தே கரைத்துவிடுமாம். இந்தச் சின்னஞ்சிறிய அதிசய பறவைகள் அநேகமாக காற்றில் மிதந்தப்படி தூங்கினாலும் தூங்கிவிடும்!
பறப்பதற்கு ஏற்ற பட்டுடல்
பறப்பதற்கு ஏற்ற பிரமாதமான உடலமைப்பை இப்பறவைகள் பெற்றுள்ளன. மூன்றாம் பிறைபோல் வளைந்திருக்கும் அதன் சிறகுகள் விருட்டென்று விண்ணில் பறக்க கைக்கொடுக்கின்றன. பல பறவைகளுக்கு இத்தகைய வளைவு இல்லை. எனவே பறப்பதில் வேகத்தடை ஏற்படுகிறது. ஸ்விப்ட்-கள் உயரே எழும்போது சிறகுகளை வேகமாக அடிக்கும். காற்றில் மிதந்தபடி பறக்கும்போது சிறகுகளை அவ்வப்போது அடிக்கும்.
இவை பறக்கும்போது ஒரு சிறகை மட்டும் வேகமாக அடிப்பதால், காற்றில் இஷ்டப்படி ஆட்டம் போடுகின்றன். சிறகுகளை அடிப்பதில் உள்ள இந்தச் சின்ன வித்தியாசம் பல விதங்களில் உதவுகிறது. வேகத்தை குறைக்காமலே அவற்றால் சட்டென்று திரும்ப முடிகிறது. அதோடு பறந்துகொண்டிருக்கும் பூச்சிகளை சுற்றி வட்டமடித்து, வட்டமடித்த வேகத்தில், திறந்திருக்கும் தன் வாயில் அவற்றை அலேக்காக கவ்விக்கொள்ளவும், கவ்விய வேகத்தில் காற்றோடு காற்றாய் பறக்கவும் உதவுகிறது. எப்போதும் படு வேகமாக பறந்துகொண்டிருக்கும் ஸ்விப்ட்-களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி தேவை. தேவைக்கு ஏற்ப எக்கச்சக்கமாக பூச்சிகளை விழுங்கியே ஆகவேண்டும். இவை பூச்சிக்களை தேடி தினந்தோறும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தையும் துச்சமாக நினைத்து பறப்பதில் படு கில்லாடிகள்.
ஸ்விப்ட்-டை நேரில் பார்த்தால், இந்தப் பறவையா இப்படியெல்லாம் அட்டகாசம் செய்வது என்று கேட்கத்தூண்டும். ஆண் பறவையும் சரி, பெண் பறவையும் சரி ஆஹா ஓஹோ என்று மெச்சும் அளவுக்கு அழகல்ல. பெரும்பாலும் மங்கலான சாம்பல் நிறத்தில் அல்லது பிரௌன் நிறத்தில் இருக்கும். உலகெங்கும் பற்பல ஸ்விப்ட் பறவைகள் பறந்து பவனி வருகின்றன. ஆனால் அதிக வெப்பமுள்ள நாடுகளும், அவற்றை ஒட்டியுள்ள நாடுகளும் இவை விரும்பி குடிபுகுந்த வீடுகள். பூமியின் வட பகுதிகளில் இருக்கும் இப்பறவைகள் குளிர்காலம் வந்துவிட்டால், பறந்து, பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து, வெப்பமான இடங்களைத்தேடி வந்துவிடும்.
சிமெண்ட் வீடு
ஸ்விப்ட்-கள் கூடு கட்ட உபயோகிக்கும் அரிய பொருள் உமிழ்நீராகும்! இவற்றிற்கு ஸ்பெஷல் உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. கூடுகட்டும் பொருட்களை ஒட்ட வைக்க ஏராளமாக சுரக்கும் உமிழ்நீரே சிமெண்ட்.
மற்ற பறவைகளைப்போல் இவை தரையில் இறங்குவது, தரையில் உட்காருவது அரிதிலும் அரிது. கொக்கிப்போன்ற இவற்றின் சிறிய கால்கள் குட்டையானவை. அதனால் தரையிலிருந்து மேலே எழ, சிறகுகளை முழு வீச்சில் அடிக்க முடிவதில்லை. ஆனால் இந்தக் குட்டி கால்கள், உயரமான பாறை உச்சிகள், குகைகள், கட்டட சுவர்கள் முதலிய செங்குத்தான இடங்களில் தொங்குவதற்கு ஏற்றவை. ஸ்விப்ட்-கள் கூடுகட்டும்போது, பிற பறவைகளைப் போல் தரையில் கிடக்கும் இலைகளையோ, குச்சிகளையோ, மண்ணையோ மற்ற பொருட்களையோ இவற்றால் சேகரிக்க முடிவதில்லை. இவற்றின் வழி தனி வழி.
சிம்னி ஸ்விப்ட் பறவை, மரக்கிளைகளிலிருந்தே சிறு குச்சிகளை ஒடித்து கொண்டுவரும். அவை கிளைக்கு கிளை வேகமாக பறந்து, பறந்த வேகத்திலேயே குச்சியை ஒடித்து, எடுத்து சென்றுவிடும். செங்குத்தான இடத்தில் குச்சிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, இடையிடையே பசைபோன்ற உழுழ்நீரை சிமெண்ட் போல் வைத்து கூட்டை கட்டும். அமெரிக்கன் பாம் (பனை) ஸ்விப்ட் பறவை, ஜெட் வேகத்தில் பறந்துகொண்டே முடி, இறகுகள், பஞ்சு போன்ற காற்றில் மிதந்து வரும் இலேசான பொருட்களை ‘கேட்ச்’ பிடித்து வந்து, உமிழ்நீரை சேர்த்து கூடு கட்டுகிறது.
இன்னொரு வகை ஸ்விப்ட் பறவையின் கூடுகளை மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆகவே, இதற்கு எடிபெல் நெஸ்ட் ஸ்விப்ட்லெட் (சுவையான கூடுடைய ஸ்விப்ட்) என்று கச்சிதமாக பெயரிட்டிருக்கிறார்கள். இதன் கூடு முழுக்க முழுக்க கெட்டியாகிவிட்ட அதன் உமிழ்நீரால் ஆனது. கிழக்கத்திய மக்கள் இக்கூடுகளை முக்கியமாக சூப் வைத்து சுவைத்து குடிக்கிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. இப்படி சுவையாக சமைத்து உண்டு மகிழ, ஆண்டு தோறும் பல கோடி கூடுகள் குளோஸ் ஆவதாக அறிக்கை காட்டுகிறது.
பசைபோன்ற உமிழ்நீரால் ஆப்பரிக்கன் பாம் ஸ்விப்ட் பறவை கட்டிய கூட்டை பார்க்க ரொம்ப இன்டரஸ்டாக இருக்கும். இந்தச் சிறிய பறவை, பனை ஓலையின் அடிப்புறத்தில் இறகுகளை படிப்படியாக வைத்து, உமிழ்நீரால் ஒட்டுகிறது. இதன் கூடு தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் அல்லது கூட்டின் திறந்த பகுதி கீழ்நோக்கி இருக்கும். காற்றில் பயங்கரமாக ஆடிக்கொண்டிருக்கும். ஐயோ! முட்டைகள் கீழே விழாதா? இதற்கு ட்ரையல்ஸ் ஆஃப் லைஃப் என்ற தனது புத்தகத்தில் டேவிட் அட்டன்பாரோ விளக்கம் தருகிறார்: “குட்டி கிண்ணம் போன்ற அந்தக் கூட்டிலிருந்து கண்டிப்பாக முட்டைகள் கீழே விழுந்துவிடும் என்று நினைக்க தோன்றும். உண்மைதான், முட்டைகளை கூட்டோடு பசை போட்டு ஒட்டாமல் இருந்தால், கூட்டை ஓலையோடு ஒட்டாமல் இருந்தால் கண்டிப்பாக அவை கீழே விழும்.” பனை ஓலையில் கூடும், கூட்டில் முட்டைகளும் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். தாய் பறவையும் தந்தை பறவையும் கூட்டின் விளிம்பை கால்களால் பிடித்து தொற்றியபடி மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். முட்டை பொரிந்து வெளிவரும் குஞ்சுகள், சிறகுகள் முளைத்து, பறந்து போகும்வரை காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டை பிடித்து தொங்கிய வண்ணம் இருக்கும்.
ஆயிரக்கணக்கான ஸ்விபிட் பறவைகள், ஏதோ குஷியாக ஏகாந்தமாய் கத்திக்கொண்டு, மின்னலென பறந்து போவதை பார்க்க கண்கோடி வேண்டும். நாம் நின்றுகொண்டு பார்க்கும் போது, அந்தப் பறவைகளைப்போல சுதந்திரமாய் பாடித்திரிய ஏக்கம் எழும். அதேசமயம் அவற்றின் அற்புத படைப்பில் மனம் சொக்கும். கண் சிமிட்டும் நேரத்தில், காற்றில் மாயமாய் மறைந்து சாகஸம் செய்யும் இதற்கு ஸ்விப்ட் என்ற ஆங்கில பெயர் கச்சிதமாக பொருந்துகிறது. இப்போது தமிழிலும் பொருத்தமான பெயரை நீங்களே வையுங்களேன்!
[பக்கம் 17-ன் படம்]
சர்வசாதாரணமாக காணப்படும் யூரோப்பியன் ஸ்விப்ட்
[படத்திற்கான நன்றி]
Animals/Jim Harter/Dover Publications, Inc.
[பக்கம் 17-ன் படம்]
ஆல்பைன் ஸ்விப்ட்
சிம்னி ஸ்விப்ட்
[படத்திற்கான நன்றி]
© Robert C. Simpson/ Visuals Unlimited
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
© D. & M. Zimmerman/VIREO