என் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது எதார்த்தம்
வில்லியம் பான் சால் கூறியது
வருஷம் 1942. எங்கள் நாடு இரண்டாம் உலகப்போரில் முழுமூச்சாக இறங்கிவிட்டிருந்தது. நாஸிக்கள் தேடிக்கொண்டிருந்த ஐந்து வாலிபர்களில் நானும் ஒருவன். நெதர்லாந்தில், குரோஜின் நகரில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஒரு சின்ன ரூமில் உட்கார்ந்துகொண்டு, எப்படியாவது தப்பிக்க முடியுமா என்று யோசித்து கொண்டிருந்தோம்.
எப்படியும் எங்களுக்கு சாவு மணி அடிக்கப்போவது உறுதி. எதிர்பார்த்தபடி எங்களில் மூன்று பேரை கொடூரமாக கொன்றார்கள். நான் மாத்திரம் எப்படியோ தப்பிவிட்டேன். சில சமயங்களில் நாம் நினைப்பதையும் மிஞ்சி எதார்த்தமாக சில விஷயங்கள் நடப்பதுண்டு. அதற்கு உதாரணம் இன்றுவரை நான் உயிரோடு இருப்பதே.
இந்தச் சம்பவம் நடந்தபோது எனக்கு 19 வயது. பைபிளை பற்றியோ மதத்தைப் பற்றியோ எனக்கு அவ்வளவாக தெரியாது. என் அப்பாவுக்கு எந்த மதமும் சுத்தமாக பிடிக்காது. அம்மா உண்மையான மதத்தை தேடி தேடி, கடைசியில் மாய மந்திரம், பேய் என்று நம்ப தொடங்கினார்கள். என்னை பொருத்தவரை, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள கடுகளவுகூட முயற்சி செய்ததில்லை. ஆகவே, அன்று நடந்துகொண்டிருந்த போரில் ஒருவேளை குண்டு மழையில் நான் சிதைந்து செத்தால் அல்லது வேறு வழியில் சாக நேர்ந்தால் கடவுள் என்னை கண்டுகொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பினேன்.
தேடியது வீண்போகவில்லை
அந்த நான்கு வாலிபர்களுடன் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குள் நாஸிக்கள் வந்து என்னை கைதுசெய்தனர். ஜெர்மனியில் எம்மரிக் நகரிலிருந்த சிறை முகாமுக்கு கொடூரமாக வேலைவாங்க கொண்டுபோனார்கள். எதிரி நாடுகள் வீசிய குண்டுகளால் ஏற்பட்ட இடிபாடுகளை சுத்தம் செய்வது, சேதங்களை சரிசெய்வது போன்ற வேலைகளையும் செய்தோம். 1943 இறுதியில், நான் முகாமிலிருந்து தப்பி, எப்படியோ நெதர்லாந்து வந்து சேர்ந்தேன். அப்போதும் போர் மும்மூரமாக நடந்துகொண்டு இருந்தது.
ஒரு சின்ன புத்தகம் எப்படி என் கைக்கு வந்ததென்றே தெரியவில்லை. அதில் நிறைய கேள்விகளும், பைபிள் வசனங்களும் அடங்கியிருந்தன. யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட சால்வேஷன் என்ற புத்தகத்தை படிப்பதற்காக அந்தக் கேள்விப் புத்தகத்தை பயன்படுத்தினார்கள். அதிலிருந்த கேள்விகளை படித்து, கொடுத்திருந்த வசனங்களை புரட்டிப் பார்த்தேன். பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை அறிந்துகொள்ள என்னுள் பொங்கிய ஆர்வத்திற்கு அணைபோட முடியவில்லை.
அந்தச் சின்ன புத்தகத்தில் படித்த விஷயத்தை நான் திருமணம் செய்யவிருந்த கெரேவிடம் சொன்னேன். முதலில் அவள் அவ்வளவா ஆர்வம் காட்டவில்லை. ஆனால் என் அம்மா அந்தச் சின்ன புத்தகத்தில் அப்படியே ஆழ்ந்துவிட்டார். “நான் இவ்வளவு காலமாக தேடின சத்தியம் இதுதான்!” என்று உணர்ச்சி பெருக கூறினார். இதைப் பற்றி என் நண்பர்களுக்கும் சொன்னேன். சிலர் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ஒரு நண்பன் சாட்சியாக ஆனான். கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வளர்பிறையாக வளர்ந்த எங்கள் நட்பு, 1996-ல் அவன் இறந்ததும் அம்மாவாசை ஆனது.
இதற்கிடையில் கெரேவும் பைபிள் படித்தாள். எனவே, பிப்ரவரி 1945-ல் இரண்டுபேரும் முழுக்காட்டுதல் எடுத்தோம். நாங்கள் முழுக்காட்டுதல் எடுத்து சில மாதங்களுக்கு பிறகு போர் முடிந்தது. முழுநேரம் ஊழியம் செய்யும் யெகோவாவின் சாட்சிகளை பயனியர்கள் என்பார்கள். எங்கள் கல்யாணத்திற்கு பிறகு நாங்களும் பயனியர்களாக சேவிக்க விரும்பினோம். அதற்கு தடையாக வியாதியும், பணப் பிரச்சினையும் வந்தன. போதாக்குறைக்கு, நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வேறு எங்களை தேடி வந்தன. முதலில் பணத்தை சம்பாதித்துவிட்டு, பிறகு பயனியர் செய்யலாமா, அல்லது உடனே பயனியர் செய்யத் தொடங்கலாமா என்ற கேள்வி எங்கள் முன் மலையென எழுந்தது.
நெதர்லாந்தில் ஊழியம்
பயனியர் சேவைக்கே முதலிடம் என்று முடிவுசெய்து, செப்டம்பர் 1, 1945-ல் ஊழியத்தில் இறங்கினோம். அன்று இரவு, வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். எதையாவது குடிக்கலாம் என்று ரெஸ்ட்டாரென்டில் நுழைந்தேன். நான் வெயிட்டரிடம் ஒரு குல்டன் நோட்டை [நெதர்லாந்து பணம்] கொடுத்ததாக நினைத்து: “மீதியை நீயே வச்சுக்கோபா” என்று சொல்லிவிட்டேன். அவர் என்னை விழுந்து விழுந்து கவனித்தார். அவர் ஏன் அப்படி கவனித்தார் என்று வீட்டிற்கு வந்த பிறகுதான் புரிந்தது. நான் அவருக்கு கொடுத்தது 100 குல்டன் நோட்டு! ஒரேவொரு குல்டனை வைத்துக்கொண்டு பயனியர் தொடங்கினோம்!
1946-ல் நான் பைபிள் பொதுப் பேச்சுக்களை கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் ஒரேவொரு லெதர் கோட்டு மாத்திரம் இருந்தது. ஆனால் சூட்-கூட போடும் கோட் இல்லை. என் நண்பரிடத்தில் ஒரு கோட் இருந்தது. அவரும் என் சைஸ். அவர் சேர்மேனாக வந்து, என்னுடைய பேச்சின் தலைப்பை சொல்லிவிட்டு, உடனே மேடைக்கு பின்புறம் வந்து, தன்னுடைய கோட்டை கழட்டி கொடுப்பார். நான் அதைப் போட்டுக்கொண்டு வந்து பேச்சு கொடுப்பேன். பேச்சு முடித்ததும் நான் போய் அவருக்கு கோட்டை திருப்பி தருவேன். அவர் அதை மாட்டிக்கொண்டு மேடையில் தோன்றுவார்.
மார்ச் 1949-ல், வட்டார ஊழியத்தை செய்யும்படி, என்னையும், கெரேவையும் சங்கம் கேட்டுக்கொண்டது. இந்த ஊழியத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை நாங்கள் சந்தித்து, அங்குள்ளோருக்கு ஆவிக்குரிய விதத்தில் பலமடைய உதவிசெய்ய வேண்டும். பிரிட்ஸ் ஹார்ட்ஸ்டாங் என்பவர் எனக்கு வட்டார ஊழியத்தில் பயிற்சி கொடுத்தார். அவர் உலகப் போர் நடந்தபோதும் அதற்கு முன்பும் முழுநேர ஊழியம் செய்துவந்தவர். அவர் எனக்கு தந்த பொன்னான அறிவுரை: “விம்! யெகோவாவின் அமைப்பு தரும் அறிவுரைகளை கேட்டு, அப்படியே நடந்துக்கோ. அவ்வளவு நல்ல அறிவுரையா இல்லையே என்று ஒருவேளை நீ நினைச்சாலும், பின்பற்ற தயங்காதே. அவை எல்லாமே நம்ம நன்மைக்கு என்பதை போகப்போக நீயே புரிஞ்சுக்குவே.” அவர் வாய்க்குச் சர்க்கரைத்தான் போடவேண்டும்.
உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரஸிடென்ட் நேதன் ஹெச். நார் 1951-ல் நெதர்லாந்துக்கு வந்தார். அப்போது நானும் கெரேவும் ஐக்கிய மாகாணங்களில் மிஷனரி ஊழியத்தில் பயிற்சி பெற, விண்ணப்பம் செய்திருந்தோம். விரைவிலேயே, 21-வது உவாட்ச் டவர் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. 1945-ல் நாங்கள் நெதர்லாந்தில் பயனியர் ஊழியம் ஆரம்பித்தபோது, சுமார் 2,000 சாட்சிகளே இருந்தார்கள். ஆனால் 1953-ல் அங்கே 7,000 சாட்சிகள் இருந்தார்கள். இவ்வளவு அதிகரிப்பை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது.
புதிய இடத்தில் ஊழியம்
தற்போது இந்தோனேஷியாவின் மாகாணமான டச்சு நியு கினியில் மிஷனரி ஊழியம் செய்ய எங்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கே செல்ல எங்களுக்கு அரசாங்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே தென் அமெரிக்காவின் வெப்பமண்டல நாடான சூரினாமுக்கு போக சொன்னார்கள். டிசம்பர் 1955-ல் அங்கே சென்றோம். அப்போது சூரினாமில் சுமார் நூறு சாட்சிகளே இருந்தனர். அவர்கள் வலியவந்து உதவியதால், எங்கேயோ புது இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு அடியோடு மறந்துபோனது.
புது இடத்தில் நிறைய விஷயங்களை அனுசரித்து போகவேண்டும். ஆனால் சில நேரங்களில் அட்ஜஸ்ட் ஆவது கஷ்டம். உதாரணத்திற்கு, கெரே ஒரு பூச்சி பொட்டை பார்த்துவிட்டால் பயந்து நடுங்குவா. நாங்க நெதர்லாந்தில் இருந்தபோது, ஒருநாள், எங்கள் பெட்ரூமில் ஒரு சின்ன சிலந்தியை கெரே பார்த்துவிட்டாள். அவ்வளவுதான், நான் வந்து அதை அடிச்சி கொல்லற வரைக்கும் அவ தூங்கவே இல்லை. ஆனால், அந்தச் சிலந்தியைப் போல் பத்து மடங்கு பெரிய பெரிய சிலந்திகள் இங்கே சூரினாமில் இருந்தன. விஷமுள்ளவை வேறு! எங்கள் மிஷனரி இல்லத்தை சொந்தம் கொண்டாட கரப்பான் பூச்சிகள், எலிகள், எறும்புகள், கொசுக்கள், வெட்டுக்கிளிகள் எல்லாம் வரும். போதாக்குறைக்கு பாம்புகள் வேறு எங்களை வந்து விசிட் அடிக்கும். கெரேவுக்கு இந்த ஜந்துக்களை பார்த்து பார்த்து சலித்துவிட்டதால், தினந்தோறும் அவற்றை ஒழிக்கும் படலத்தை அவளாகவே செய்கிறாள்.
இங்கே வந்து 43 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கேயே பிறந்து வளர்ந்த இளைய சமுதாயத்தைவிட இந்நாட்டைப் பற்றி எங்களுக்கு நிறையவே தெரியும். இங்குள்ள ஆறுகளும், மழைக் காடுகளும், கடலோர சதுப்புநிலங்களும் எங்கள் மனதை திருடிவிட்டன. முள்ளம் பன்றிகளும், தேவாங்குகளும், சிறுத்தைகளும் எங்களுக்கு தெரிந்த விலங்குகளில் சில. பலவகை பாம்புகளையும் பார்த்துவிட்டோம். அழகழகான கலர்களில் நிறைய பாம்புகள் உள்ளன. இவை எல்லாவற்றையும்விட எங்கள் மனதை கவர்ந்தவர்கள் இங்குள்ள பல நாட்டு மக்களே. சிலருடைய முன்னோர்கள், இந்தியா, இந்தோனேஷியா, ஆப்பிரிக்கா, சீனா இன்னும் பல நாடுகளிலிருந்து வந்து குடியமர்ந்தவர்கள். தென் அமெரிக்க செவ்விந்தியர்களே இங்குள்ள பழங்குடியினர்.
இத்தகைய பின்னணிகளை உடைய மக்களையே கிறிஸ்தவ ஊழியத்தில் சந்திக்கிறோம். இதேபோல் நம் ராஜ்ய மன்றத்தில் பன்னாட்டு சகோதர சகோதரிகள் கூடி மகிழ்வதை பார்க்க கண்கோடி வேண்டும்! 1953-ல் நாங்கள் இங்கே வந்தபோது, ஒரேவொரு ஓட்டை ராஜ்ய மன்றம் இருந்தது. இப்போது 30-க்கும் மேற்பட்ட அழகான ராஜ்ய மன்றங்கள் தோன்றிவிட்டன. நல்ல அசெம்பிளி ஹாலையும் கட்டிவிட்டோம். வசதியான கிளை அலுவலகத்தை பிப்ரவரி 1995-ல் பிரதிஷ்டை செய்தோம்.
அனுபவ பாடங்கள்
சூரினாம் உள்நாட்டுப் பகுதியில், புஷ் நீக்ரோக்கள் என்று அழைக்கப்படுவோரின் சபைகளே நிறைய. ஒருகாலத்தில் ஆப்பிரிக்க எஸ்டேட்டுகளில் கொத்தடிமைகளாய் இருந்த அவர்கள் அங்கேயிருந்து எப்படியோ தப்பி, இங்கு ஆறுகள் உற்பத்தியாகும் பல பகுதிகளில் குடியமர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய வம்சத்தில் வந்தவர்கள் இந்த புஷ் நீக்ரோக்கள். இவர்களுடைய வாழ்க்கைப் போராட்டம் என்னை மலைக்க வைக்கிறது. உதாரணத்திற்கு இவர்கள் ஆற்றில் பயணம் செய்வதையும், அடர்ந்த காட்டில் குடியிருப்பதையும் யோசிக்கும்போது மூக்கில் விரல்வைக்க தோன்றும். இவர்கள் மரங்களை வெட்டி, படகுகளை செய்து நீர்வீழ்ச்சிகளையும், நீர் சுழற்சிகளையும் சட்டைசெய்யாமல், சல்லென்று படகுகளை ஓட்டிச்செல்ல தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள்! வேட்டையாடி, மீன் பிடித்து உணவு தேடுகிறார்கள். எந்தவித நவீன சமையல் வசதிகளே இல்லாமல் சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்கள் செய்கிற பல வேலைகள் நம்மால் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
நாங்கள் பல வருடங்களாக சூரினாமில் வாழ்ந்துவருவதால், இங்குள்ள மக்களின் கலாச்சாரங்கள், சிந்தனைகள், வாழ்க்கை முறைகள் என எல்லாமே எங்களுக்கு அத்துப்படி. 1950-ல் தென் அமெரிக்க செவ்விந்தியர் வாழ்கிற கிராமத்திற்கு சென்றேன். நட்டநடு ராத்திரியில், அடர்ந்த காட்டுக்குள், யாருமே இல்லாத ஒரு முகாமுக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு வழிகாட்டியாக வந்த செவ்விந்தியரும், நானும் அங்கிருந்து படகில் செல்ல வேண்டும். அந்த வழிக்காட்டி, கிடுகிடுவென்று அடுப்பை மூட்டி, சமையல் செய்து, இன்னும் பல வேலைகளை எனக்காக செய்தார். நான் படுக்க இரு மரங்களுக்கு இடையே ஒரு தொட்டிலையும் (hammocks) கட்டினார். எப்போதும்போல், எல்லாவற்றையும் அவரே செய்துவிட்டார். ஏனென்றால் எனக்கு எதுவுமே தெரியாது என்பது அவருக்கு நல்லாவே தெரியும்.
அர்த்தராத்திரியில் அந்தத் தொட்டிலிலிருந்து ‘பொத்தென்று’ விழுந்தேன். விழுந்ததை பார்த்து அவர் சிரிக்கவில்லை. ஆனால், என் உடையில் படிந்திருந்த தூசுகளை எல்லாம் தட்டிவிட்டு, மறுபடியும் எனக்காக அந்தத் தொட்டிலை கட்டிக்கொடுத்தார். குறுகலான ஆற்றில் படகுசவாரி செய்தோம். ஒரே கும்மிருட்டு. எனக்கு சுத்தமா எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிக்காட்டி பல வளைவு சுழிவுகளில் படகை துடுப்புப்போட்டு கஷ்டமே இல்லாமல் ஓட்டிச்சென்றார். பாறைகளை தவிர்த்து லாவகமாக ஓட்டினார். இருட்டில்கூட எப்படி இவ்வளவு ஈஸியாக படகு ஓட்ட முடிகிறது என்று கேட்டேன். அதற்கு அவர்: “சார், நீங்க கீழே பார்க்கக்கூடாது. நிமிர்ந்து, ஆற்று நெடுக இருக்குற மரங்களோட உச்சிங்கள பார்க்கணும். மர உச்சிய பார்த்தா, ஆற்றில் உள்ள வளைவுநெளிவு தெரியும். அதே சமயம் கீழே, தண்ணீல ஏதாவது பாற கீற இருந்தா, அலையோட அதிர்வுலேயே தெரிஞ்சுக்கலாம். கவனமா கேளுங்க. சத்தத்தை வச்சியே எதிர்ல என்ன இருக்குனு சொல்லிடலாம்” என்றார்.
வேகமான தண்ணீர் சுழிகளையும், மேலிருந்து வந்து விழுகிற நீர்வீழ்ச்சிகளையும் கடந்து, அந்தச் சின்ன படகில் சவாரி செய்வது ஆபத்தானது. அதோடு ரொம்பவும் களைப்பாகிவிடுவோம். ஆனால், சிரித்த முகத்தோடு, ஆசையாசையா காத்திருக்கும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை பார்த்ததும் நம் களைப்பெல்லாம் காற்றில் பறந்துவிடும். விருந்தினருக்காக எப்போதும் உணவை தயாராக வைத்திருப்பார்கள். இல்லனா, கிண்ணம் நிறைய சூப் வைத்திருப்பார்கள். மிஷனரி வாழ்க்கை என்பது இலேசானது அல்ல. நிறைய சோதனைகள் வரும். ஆனால் இதுபோன்ற திருப்தியான வாழ்க்கை வேறு இருக்க முடியாது.
ஊழியத்தை தொடர உதவிகள்
எங்கள் உடம்பு நோயே வராத கல்லு அல்ல. அம்மா மாத்திரம் யெகோவாவின் சாட்சி. அதனால் சொத்தக்காரர்களிடமிருந்து அவ்வளவாக ஆதரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் ஆருயிர் நண்பர்கள் எங்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்து ஊக்கம் கொடுத்தார்கள். அவர்களது உதவியால் ஊழியத்தை எங்களால் தொடர்ந்து செய்ய முடிந்தது. குறிப்பாக அம்மா எங்களை தட்டிக்கொடுத்து, ஊக்கம் தந்ததை மறக்கவே முடியாது.
நாங்க மிஷனரி ஊழியம் தொடங்கி, ஆறு வருடங்கள் ஆகியிருக்கும். அம்மா நோயில் படுத்துவிட்டார். கடைசி தடவையா அம்மாவை வந்து பார்த்துவிட்டு போங்கள் என்று நண்பர்கள் கடிதம் எழுதினார்கள். ஆனால் அம்மா இவ்வாறு எழுதினார்: “தயவுசெய்து, உங்க மிஷனரி ஊழியத்தை நிறுத்திடாதீங்க. நான் நோயா இருக்குறதா ஏன் நினைக்கிறீங்க? நான் எப்பவும்போல இருக்கிறதா நினைச்சிக்குங்க. அப்படியே எனக்கு எதாவது ஆனாலும், [கடவுள்] என்னை மறுபடியும் உயிரோடு எழுப்பும்போது, உங்கள வந்து பார்ப்பேன்.” கடவுள் மேல அம்மா அசைக்க முடியாத விசுவாசம் வச்சிருந்தாங்க.
1966-ல்தான் எங்களால் விடுமுறை எடுத்துக்கொண்டு நெதர்லாந்து வரமுடிந்தது. பழைய நண்பர்களை எல்லாம் பார்த்ததில் எங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஆனால் இப்போது சூரினாம்தான் எங்கள் சொந்த ஊர். மிஷனரிகள் ஊழியம் செய்ய போகும் நாட்டில் குறைந்தது மூன்று வருடங்களாவது அங்கேயே இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகே தங்கள் நாடுகளுக்கு விடுமுறையில் செல்லலாம் என்பது அமைப்பு தரும் ஆலோசனை. எவ்வளவு புத்தியோடு இந்த ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள் என்பதை விடுமுறையில் சென்றபோது புரிந்துகொண்டோம்.
நாங்கள் சிரித்துவாழ கற்றுக்கொண்டதால் ஊழியத்தை மகிழ்ச்சியோடு செய்ய முடிந்தது. ஓடி ஆடி குஷியாக இருக்கவே சில விலங்குகளை யெகோவா படைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, சிம்பன்ஸி குரங்குகளும், நீர் நாய்களும் செய்யும் சேட்டைகளை பார்த்தால், அதிலும் அவற்றின் குட்டிகள் அடிக்கும் லூட்டிகளை பார்த்தால் சிரிக்காமல் இருக்கவே முடியாது. எதிலும் நல்ல விஷயங்களை மாத்திரம் எடுத்துக்கொள்கிற மனப்பக்குவத்தையும், நாம ஒண்ணும் உசத்தி அல்ல என்கிற எண்ணத்தையும் இத்தனை வருடங்களில் நாங்கள் வளர்த்துக்கொண்டோம்.
செய்த ஊழியம் வீண்போகவில்லை. கைமேல் பலன் கிடைத்தது. ஊழியத்தில் தொடர்ந்திருக்க இதுவும் ஒரு காரணம். பராமரிபோவில், ஒரு முதியோர் இல்லத்தில் ஒன்பது பேருக்கு கெரே பைபிள் படிப்பை தொடங்கினாள். எல்லாரும் 80 வயதுக்கு மேற்பட்ட தாத்தாக்கள். இவர்களில் சிலர் பாலாடபிலீடர்களாக (ரப்பர் மரங்களிலிருந்து பாலெடுப்பவர்கள்) இருந்தவர்கள். சிலர் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்தவர்கள். பைபிளிலிலிருந்து கற்ற விஷயங்கள் இவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. எல்லாரும் முழுக்காட்டுதல் எடுத்தார்கள். அவர்கள் உயிர் துறக்கும் வரை பிரசங்க ஊழியத்தை விடாமல் செய்தார்கள்.
நியூ ஸ்விடன்பர்க் சர்ச்சை சேர்ந்த வயதான பாதிரியார் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் ரிவர்ஸ். நாங்க பைபிள் படிப்பு நடத்தும்போது கேட்டுக்கொண்டிருப்பார். பிறகு குத்தலாக எதையாவது சொல்வார். ஆனால் ஒவ்வொரு வாரமும் பைபிள் படிப்பை கேட்க கேட்க, அவரை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாக மாறி, குறைகூறுவதை குறைத்துக்கொண்டே வந்தார். கடைசியில் அவரும் மற்றவர்களோடு பைபிள் படிப்பில் கலந்துகொண்டு பதில் சொல்ல தொடங்கிவிட்டார்! அப்போது அவருக்கு 92 வயது. சரிவர கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. ஆனால் அவர் வசனங்களை மேற்கோள் காட்டும்போது அப்படியே பார்த்து வாசிப்பதைப்போல் இருக்கும். எங்களோடு சேர்ந்து ஊழியத்திற்கு வரத்தொடங்கினார். அவரது பிரசங்கத்தை கேட்க விரும்பிய எல்லாருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி எடுத்து சொன்னார். அவர் இறப்பதற்கு முன், தன்னை வந்து பார்க்கும்படி எங்களுக்கு சொல்லி அனுப்பினார். ஆனால், நாங்கள் அங்கே போவதற்குள், அவர் எங்களையெல்லாம் கண்ணீரில் தவிக்கவிட்டு, கண்மூடிவிட்டார். அவர் அம்மாதம் செய்த ஊழிய அறிக்கை தலையணைக்கு கீழே இருந்தது!
முழுநேர பிரசங்க ஊழியத்தை 25 வருடங்களுக்கு மேல் செய்த பிறகு, 1970-ல் சூரினாம் கிளை அலுவலகத்தை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். ஆபிஸில் உட்கார்ந்து வேலைசெய்ய எனக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது, கெரே மாத்திரம் ஒவ்வொரு நாளும் ஊழியத்திற்கு போனாள். நான் மட்டும் ஆபிஸில் உட்கார்ந்திருக்க, அவள் மாத்திரம் ஊழியத்திற்கு போவதை பார்க்கும்போது எனக்கு பொறாமையா இருந்தது. இப்போது கெரேவும் கிளை அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். எங்களுக்கு வயதாகிக்கொண்டிருந்தாலும், உபயோகமான வேலையையே செய்துக்கொண்டிருக்கிறோம்.
1945-ல் உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டாலும், கடவுளுடைய ராஜ்யத்தை படு சுறுசுறுப்பாக அறிவித்தவர்களின் எண்ணிக்கை 1,60,000-க்கும் குறைவு. அன்றைய அவர்களோடு இன்றைய 60,00,000 ராஜ்ய அறிவிப்பாளர்களை ஒப்பிட்டால், உண்மையில் என் எதிர்பார்ப்பை எதார்த்தம் மிஞ்சிவிட்டது. 1955-ல் நாங்கள் சூரினாமில் அடியெடுத்து வைத்த நாள் முதல், இன்றுவரை ஒப்பிட்டு பார்த்தால், ஊழியத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 19 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது! உதாரணத்திற்கு, 1955-ல் 100 பேர் இருந்ததாக வைத்துக்கொள்வோம். இப்போது 1,900 பேருக்கு மேல் இருப்பார்களே!
யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்போது, இதுபோன்ற வளர்ச்சியைவிட இன்னும் மேலான விஷயங்கள் நடப்பதை கண்கூடாக காண்போம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆனால் இதையெல்லாம் காண கடவுளுக்கு உத்தமத்தோடு இருந்தால் போதும். உத்தமத்தோடு இருக்கவே நாமும் விரும்புகிறோம்.
[பக்கம் 13-ன் படம்]
1955-ல் சூரினாமில் அடியெடுத்து வைத்தோம்
[பக்கம் 15-ன் படம்]
ஊழியத்திற்கு படகு சவாரி
[பக்கம் 15-ன் படம்]
நானும் என் மனைவியும்