உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 11/1 பக். 26-30
  • ஓர் அவசர உணர்வுடன் சேவித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓர் அவசர உணர்வுடன் சேவித்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போர்கால பயிற்சி
  • ஒரு வாழ்க்கை தொழிலின் ஆரம்பம்
  • மதிப்புவாய்ந்ததாய் போற்றிவைக்கத்தக்க ஓர் உதவியாள்
  • இந்தோனீஷியாவில் மிஷனரி சேவை
  • ஒரு திடீர் அரசியல் புரட்சியின் மத்தியில்
  • மேலுமான எதிர்ப்பு தோற்கடிக்கப்பட்டது
  • தென் அமெரிக்காவிற்கு
  • யெகோவா என்னோடு இருப்பவராக நிரூபித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்பித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • நல்ல தெரிவுகளால் நீடித்த ஆசீர்வாதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • என் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது எதார்த்தம்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 11/1 பக். 26-30

ஓர் அவசர உணர்வுடன் சேவித்தல்

ஹான்ஸ் ஃபான் ஃபியூரா சொன்னபடி

ஒரு காலை, 1962-ல், நெதர்லாந்தில் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை கண்காணி, பால் குஷ்னிர், ராட்டர்டாமின் துறைமுக மாவட்டத்தில் என்னைச் சந்தித்தார். மங்கலான விளக்கு பொருத்தப்பட்டிருந்த ஒரு சிற்றுண்டிச்சாலையில், ஒரு மேசையின் குறுக்கே என்னைப் பார்த்துக்கொண்டு, அவர் சொன்னார்: “ஹான்ஸ், இந்த நியமிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்களும் உங்கள் மனைவியும் அங்குப் போய் சேருவதற்கான ஒரு வழி பயணச்சீட்டை மட்டுமே பெறுவீர்கள், தெரியுமா?”

“ஆம், ஸூசியும் அதற்கு ஒத்துக்கொள்வாள் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன்.”

“அதைக்குறித்து ஸூசியுடன் கலந்து பேசுங்கள். எவ்வளவு சீக்கிரம் உங்கள் தீர்மானத்தை என்னிடம் தெரியப்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது.”

மறுநாள் காலை அவருக்கு எங்கள் பதில் கிடைத்தது: “நாங்கள் போவோம்.” ஆகவே, டிசம்பர் 26, 1962 அன்று, ஆம்ஸ்டர்டாமின் பனிபடர்ந்த ஸ்கீபால் விமான நிலையத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் கட்டித்தழுவி விடைபெற்றோம்; நாங்கள் ஒரு புதிய மிஷனரி பிராந்தியத்திற்கு—நெதர்லாந்தின் நியூ கினீயா (தற்போது மேற்கு இரியன், இந்தோனீஷியா)—பாப்புயர்களின் தேசத்திற்கு—பறந்து சென்றோம்.

இந்தச் சவாலான நியமிப்பை ஏற்றுக்கொள்வதைப்பற்றி எங்களுக்கு சந்தேகங்கள் இருந்தனவா? நிஜமாக இல்லை. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக எங்கள் வாழ்க்கையை நாங்கள் முழு இருதயத்தோடு ஒப்புக்கொடுத்திருந்தோம்; அவர் எங்களை ஆதரிப்பார் என்று நாங்கள் நம்பினோம். எங்களுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில், யெகோவாவிடமான எங்கள் நம்பிக்கை ஒருபோதும் தவறாக வைக்கப்பட்டதாக இருக்கவில்லை என்பதை எங்களால் பார்க்க முடியும். ஆனால் இந்தோனீஷியாவில் என்ன சம்பவித்தது என்பதைச் சொல்வதற்குமுன், எங்களுடைய ஆரம்ப வருடங்களைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

போர்கால பயிற்சி

முதன்முதல் என்னுடைய குடும்பம், 1940-ல் அந்த தைரியமான சாட்சி ஆர்தர் உவிங்க்லரால் சந்திக்கப்பட்டபோது, எனக்கு வயது வெறும் பத்து. என் பெற்றோர் கிறிஸ்தவமண்டலத்தின் பொய் போதனைகளைப்பற்றி பைபிள் சொன்னவற்றைக் கண்டுபிடித்ததும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது நெதர்லாந்து நாசி ஜெர்மனியால் குடியேற்றப்பட்டு, யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டதால், ஒரு தடைவிதிக்கப்பட்ட அமைப்புடன் தொடர்பு கொள்வதுபற்றி என் பெற்றோர் தீர்மானிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். அவர்கள் அவ்வாறு செய்ய தீர்மானித்தனர்.

அதற்குப்பின், என் தாயின் தைரியமும், தன் சுதந்திரத்தையும், உயிரையும்கூட அபாயத்திற்குள்ளாக்க மனமுவந்த தன்மையும் என் மனதில் பதிந்தன. ஒருமுறை அவள் சைக்கிளில் 11 கிலோமீட்டர் சென்று பைபிள் துண்டுப்பிரதிகளை ஒரு பையில் திணித்துவைத்துக்கொண்டு, இருட்டில் காத்திருந்தாள். ஒரு விசேஷ பிரச்சாரம் தொடங்குவதற்கு இருந்த குறித்த நேரத்தில், அவள் தன்னால் முடிந்தளவு வேகமாக சைக்கிளில் சென்று, தொடர்ந்து தன்னுடைய பைக்குள் கையைவிட்டு எடுத்துக்கொண்டு, தெருக்களில் துண்டுப்பிரதிகளை அங்குமிங்கும் வீசிக்கொண்டு சென்றாள். பின்தொடர்ந்து சைக்கிளில்வரும் ஒருவன் கடைசியில் அவளை முந்திக்கொண்டு, மூச்சு இளைக்க கத்தினான்: “ஏம்மா, ஏம்மா, நீங்கள் எதையோ விட்டுவிட்டுப் போகிறீர்கள்!” அம்மா இந்தக் கதையைச் சொன்னபோது எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

நான் மிகவும் இளைஞனாய் இருந்தேன், ஆனால் என்னுடைய வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்யவேண்டுமென நான் அறிந்திருந்தேன். மத்திப 1942-ல் நம்முடைய கூட்டங்கள் ஒன்றில், நடத்துபவர் கேட்டார், “அடுத்த சிறப்பு நிகழ்ச்சியில் முழுக்காட்டுதல் பெற விரும்புபவர்கள் யார்?” நான் என் கையை உயர்த்தினேன். அத்தகைய ஒரு தீர்மானத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டிருக்கிறேனா என்ற சந்தேகத்தில் என் பெற்றோர் கவலைக்குரிய பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் எனக்கு வெறும் 12 வயதாகவே இருந்தபோதிலும், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் எதை அர்த்தப்படுத்தியது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

நாசிகள் எங்களைத் தொடர்ந்துவர, வீட்டுக்குவீடு பிரசங்கித்தலில் எச்சரிக்கை தேவைப்பட்டது. எங்களை நாசிகளிடம் பிடித்துக்கொடுப்பவர்களின் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி, நாசிகளுக்காகப் பரிவிரக்கம் காண்பிப்பவர்கள் தங்கள் ஜன்னல்களில் சுவரொட்டிகளை ஒட்டி வைக்கும் தினங்களில், நான் சைக்கிளில் சுற்றிவந்து, அவர்களுடைய முகவரிகளை எழுதி வைத்தேன். ஒருமுறை ஒரு மனிதன் என்னைக் கவனித்துவிட்டு கத்தினார்: “நல்ல காரியம் செய்தாய், தம்பி. அவற்றை எழுதி வை—எல்லாருடையதையும்!” நான் ஆர்வமுள்ளவனாய் இருந்தேன், ஆனால் தெளிவாகவே போதிய அளவிற்கு விவேகமுள்ளவனாய் இல்லை! போரின் முடிவில், 1945-ல், பிரசங்கிப்பதற்கு அதிகப்படியான சுதந்திரம் கிடைக்கும் எதிர்நோக்கில் நாங்கள் சந்தோஷப்பட்டோம்.

ஒரு வாழ்க்கை தொழிலின் ஆரம்பம்

நவம்பர் 1, 1948 அன்று, என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபின், ஒரு பயனியராக என்னுடைய முதல் முழுநேர ஊழிய நியமிப்பைப் பெற்றேன். ஒரு மாதத்திற்குப்பின் நான் சேர்ந்து தங்கியிருந்த குடும்பத்தைச் சகோதரர் உவிங்க்லர் சந்தித்தார். நான் எப்படிப்பட்டவனாய் இருக்கிறேன் என்று என்னைப்பற்றி கணிப்பதற்கு அவர் வந்திருக்கவேண்டும்; ஏனென்றால், அதற்குப்பின் சீக்கிரத்தில் சொஸையிட்டியின் ஆம்ஸ்டர்டாம் கிளையலுவலகத்தில் பணிபுரியும்படி நான் அழைக்கப்பட்டேன்.

பின்னர், ஒரு வட்டாரக் கண்காணியாக யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சந்திக்கும்படி கேட்கப்பட்டேன். பின்பு, 1952-ன் இலையுதிர் காலத்தில், மிஷனரி பயிற்சியைப் பெறுவதற்காக நியூயார்க்கிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடின் 21-ம் வகுப்பிற்குச் செல்வதற்கான அழைப்பைப் பெற்றேன். ஆகவே, 1952-ன் பிற்பகுதியில், நெதர்லாந்திலிருந்து எட்டு பேர், நியூ ஆம்ஸ்டர்டாம் என்னும் கப்பலில் ஏறி அமெரிக்காவிற்குப் பயணப்பட்டோம்.

அந்தப் பள்ளி படிப்பின் முடிவின்போது, போதனையாளர்களில் ஒருவரான மாக்ஸ்வெல் ஃபிரென்ட் சொன்னார்: “நீங்கள் இங்குக் கற்றுக்கொண்டவற்றில் பெரும்பாலான காரியங்களை மறந்துவிடுவீர்கள், ஆனால் மூன்று காரியங்கள் உங்களுடன் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு.” மேலும் மனதிலும் இருதயத்திலும் தங்கி நிற்பது, ஓர் அவசர உணர்வுடன் செயல்படும் யெகோவாவின் அமைப்பைப் பற்றிய மதிப்புவாய்ந்த நினைவுகள்.

அதற்குப்பின், நான் ஒரு பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். எங்களுடைய டச் தொகுதியில் பாதிபேர்—என்னையும் சேர்த்து—திரும்பவும் நெதர்லாந்துக்குச் செல்லும்படி நியமனம் செய்யப்பட்டோம். ஏமாற்றமடைந்தாலும், நான் நிலைகுலைந்து போய்விடவில்லை. பண்டைய காலத்து மோசேயைப்போல், ஓர் அயல்நாட்டு நியமனத்தைப் பெறுமுன், 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருந்துவிடக்கூடாது என்று மட்டும் நான் யோசித்தேன்.—அப்போஸ்தலர் 7:23-30.

மதிப்புவாய்ந்ததாய் போற்றிவைக்கத்தக்க ஓர் உதவியாள்

என் தந்தையையொத்த நண்பர் ஃபிரிட்ஸ் ஹார்ட்ஸ்டாங், என்னுடைய திருமண திட்டங்களை அறிந்தார்; அவர் நம்பிக்கை தெரிவித்தார்: “இதைவிட ஒரு நல்ல தெரிவை நினைத்துப் பார்ப்பது அரிது.” ஸூசியின் தந்தை, கேஸீ ஸ்டூஃபா இரண்டாம் உலகப் போரில், நாசிகளுக்கு எதிராகப் போராடுபவர்களில் முதன்மை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 1946-ல் சாட்சிகளால் சந்திக்கப்பட்டபோது, அவர் உடனடியாக பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொண்டார். சீக்கிரத்தில் அவரும் அவருடைய ஆறு பிள்ளைகளில் மூவரும்—ஸூசி, மெரீயன், கெனத்—முழுக்காட்டப்பட்டனர். மே 1, 1947-ல், இந்தப் பிள்ளைகள் எல்லாரும் பயனியர்களாக முழுநேர ஊழியத்தைத் தொடங்கினர். கேஸீ தன்னுடைய வியாபாரத்தை 1948-ல் விற்றுவிட்டு, அவரும் பயனியர் செய்ய தொடங்கினார். பின்னர் அவர் குறிப்பிட்டார்: “என் வாழ்வில் மிக மகிழ்ச்சியானவை அந்த வருடங்களே!”

ஆம்ஸ்டர்டாம் கிளையலுவலகத்தில் அவள் வேலை செய்வதற்காக அழைக்கப்பட்டபோது, 1949-ல் நான் ஸூசியுடன் பழகினேன். எனினும், அதற்கடுத்த வருடம், அவளும் அவளுடைய தங்கை மெரீயனும் கிலியடின் 16-ம் வகுப்பிற்குச் செல்வதற்காக அங்கிருந்து சென்று, அவர்களுடைய மிஷனரி நியமிப்பிற்கு—இந்தோனீஷியாவிற்கு—கப்பலில் பயணப்பட்டனர். பிப்ரவரி 1957-ல், ஐந்து வருட மிஷனரி ஊழியத்திற்குப்பின், என்னைத் திருமணம் செய்வதற்காக ஸூசி திரும்பி நெதர்லாந்திற்கு வந்தாள். அந்தச் சமயம், நான் ஒரு வட்டாரக் கண்காணியாகச் சேவித்துக் கொண்டிருந்தேன்; எங்கள் திருமண வாழ்க்கை முழுவதும், அவள் பல முறை, ராஜ்ய சேவைக்காக தனிப்பட்ட தியாகங்களைச் செய்ய மனமுள்ளவளாய் இருந்திருக்கிறாள்.

எங்களுடைய திருமணத்திற்குப்பின், நெதர்லாந்தின் பல்வேறு பாகங்களிலுள்ள சபைகளை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வந்தோம். ஸூசி கடுமையான மிஷனரி நியமிப்புகளில் பல வருடங்கள் இருந்தது, ஒரு சபையிலிருந்து மற்றொன்றிற்கு சைக்கிளில் செல்லும் பயணங்களுக்கு அவளை நன்கு தயாரித்திருந்தன. நாங்கள் வட்டார வேலையில் இருந்தபோதுதானே, 1962-ல் சகோதரர் குஷ்னிர் ராட்டர்டாமில் என்னைச் சந்தித்து இந்தோனீஷியாவின் மேற்கு இரியனுக்குச் செல்லும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தோனீஷியாவில் மிஷனரி சேவை

நாங்கள் மானக்வாரீ என்ற பட்டணத்தில் வந்து சேர்ந்தோம்—முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம்! வெப்பமண்டல பகுதியிலுள்ள அச்சுறுத்தும் சப்தங்களும், வெப்பமும், தூசியும் இருந்தன. மேலும் உள்நாட்டுப் பகுதியிலுள்ள பாப்புயர்கள் இருந்தனர்; அவர்கள் வெறும் இடைத்துணிகளை உடுத்திக்கொண்டும், வெட்டுக்கத்திகளை எடுத்துச்சென்றும், எங்கள் பின்னால் நடந்து வர விரும்பி எங்கள் வெள்ளை தோலை தொட முயன்று கொண்டும் இருப்பர்—இவை எல்லாவற்றுடனும் பழக்கப்படுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

நாங்கள் அங்கு சென்றடைந்த சில வாரங்களில், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக எச்சரிக்கும் ஒரு கடிதத்தைக் கோயில் சொற்பொழிவு மேடைகளிலிருந்து மதக்குருக்கள் வாசித்து, அங்கு ஆஜராயிருந்த அனைவருக்கும் அதன் நகல் ஒன்றைக் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை உள்ளூர் வானொலி நிலையம் ஒலிபரப்பவும் செய்தது. பின்னர், மூன்று மதக்குருக்கள் எங்களைச் சந்தித்து, நாட்டின் உட்புறத்திற்குச் சென்று, “புறமதத்தினர்” என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பவர்கள் மத்தியில் நாங்கள் வேலை செய்யும்படி அவர்கள் கோரினர். ஓர் உயர் பதவி வகிக்கும் பாப்புய போலீஸ் அதிகாரியும் வெளியேறும்படியாக எங்களை வற்புறுத்தினார்; மேலும் எங்கள் கொலை திட்டமிடப்பட்டிருப்பதாக ரகசிய போலீஸின் ஓர் அங்கத்தினர் கூறினார்.

இருப்பினும், எங்களை எல்லாரும் எதிர்க்கவில்லை. நெதர்லாந்துக்குச் செல்லவிருந்த பாப்புயர்களின் ஓர் அரசியல் ஆலோசகரான டச் இனத்தவர் ஒருவர், பல பாப்புய தலைவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்தார். “நீங்கள் அறிந்திருப்பதைவிட சிறந்த வகையான கிறிஸ்தவத்தை யெகோவாவின் சாட்சிகள் கொண்டு வருவார்கள்,” என்று அவர் அவர்களிடம் சொன்னார். “ஆகவே, நீங்கள் அவர்களை வரவேற்கவேண்டும்.”

பின்னர், ஓர் அரசாங்க அதிகாரி தெருவில் ஸூசியை அணுகி மெதுவாகச் சொன்னார்: “நீங்கள் ஒரு புதிய வேலையை ஆரம்பித்திருப்பதாக எங்களிடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஆகையால் நாங்கள் உங்களைத் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது. ஆனால், ம், . . . உங்களுக்கு ஒரு சர்ச் மட்டும் இருந்தால்.” ஒரு சாடைக்குறிப்பு! விரைவில், எங்கள் வீட்டின் சுவர்களை எடுத்துவிட்டு, பென்ச்சுகளை அடுக்கி, ஒரு பேச்சாளர் மேடையை அமைத்து, வெளியே “ராஜ்ய மன்றம்” என்ற அடையாளக்குறியை வைத்தோம். பின்னர் அந்த அதிகாரியை ஒரு சந்திப்பிற்காக அழைத்தோம். அவர் தலையை அசைத்து, புன்முறுவல் செய்து, தன் ஆள்காட்டி விரலால் தலையின் ஒரு பக்கத்தைத் தட்டிக்கொண்டு, ‘திறம்பட்ட செயல், திறம்பட்ட செயல்’ என்று சொல்வதுபோல் பிரதிபலித்தார்.

ஜூன் 26, 1964 அன்று, நாங்கள் வந்து ஒன்றரை வருடங்களுக்குப்பின், எங்கள் பைபிள் மாணவர்களின் முதல் 12 பாப்புயர்கள் முழுக்காட்டப்பட்டனர். சிறிது காலத்தில், இன்னும் 10 பேர் தொடர்ந்தனர்; எங்களுடைய கூட்டங்களுக்கு வருகை தந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 40. எங்களுக்கு உதவி செய்யும்படி இரண்டு இந்தோனீஷிய பயனியர்கள் அனுப்பப்பட்டனர். மானக்வாரீயில் சபை நன்கு ஸ்தாபிக்கப்பட்டபின், சொஸையிட்டியின் இந்தோனீஷிய கிளை மற்றொரு பிரசங்க நியமிப்பை, டிசம்பர் 1964-ல் அளித்தது.

நாங்கள் போவதற்குமுன், அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு துறையின் தலைவர் எங்களிடம் தனியாகப் பேசி, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் போவதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஒவ்வொரு வாரமும் உங்களை அனுப்பிவிடும்படி மதக்குருக்கள் என்னிடம் மன்றாடினார்கள்; ஏனென்றால், அவர்களுடைய பழங்களை நீங்கள் பறித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அவர்களிடம் சொன்னேன்: ‘இல்லை, மாறாக அவர்கள் உங்கள் மரங்களுக்கு உரமிடுகிறார்கள்.’” அவர் தொடர்ந்து சொன்னார்: “நீங்கள் எங்கு சென்றாலும், தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!”

ஒரு திடீர் அரசியல் புரட்சியின் மத்தியில்

செப்டம்பர் 1965-ல் ஓர் இரவில், தலைநகரான ஜகார்த்தாவில் நாங்கள் சேவித்துக் கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் கலகக்காரர் அநேக இராணுவ தலைவர்களைக் கொன்று, ஜகார்த்தாவை தீக்கொளுத்திவிட்டு, தேசமெங்கும் பரவிய ஒரு போராட்டத்தைத் துவங்கினர்; அது முடிவில் தேசத்தின் ஜனாதிபதியாகிய சுக்கர்நோவை விழச்செய்தது. ஏறக்குறைய 4,00,000 பேர் உயிரிழந்தனர்!

ஒருமுறை நாங்கள் பிரசங்கிக்கையில், அடுத்த தெருவில் துப்பாக்கிச்சூடும், தீவைப்பும் நடந்துகொண்டிருந்தன. அடுத்த நாள், அருகாமையிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் வசதியை இராணுவம் அழிக்கப் போகிறது என்று நாங்கள் கேள்விப்பட்டோம். வீட்டுக்காரர்களை அணுகுகையில் அவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்; ஆனால் அவர்கள் எங்கள் பைபிள் செய்தியைக் கேட்டபோது, பயம் குறைந்தவர்களாக உணர்ந்து எங்களை உள்ளே அழைத்தனர். எங்களை அவர்களுடன் கொண்டிருப்பதைப் பாதுகாப்பாக உணர்ந்தனர். அந்தச் சமயம், யெகோவாவில் சார்ந்திருப்பதையும் கஷ்டமான நிலைமைகளிலும் சமநிலையைக் காத்துக்கொள்வதையும் எங்கள் எல்லாருக்கும் கற்றுக்கொடுத்தது.

மேலுமான எதிர்ப்பு தோற்கடிக்கப்பட்டது

இயற்கைகாட்சி நிறைந்த தெற்கு மாலக்கா தீவுகளிலுள்ள ஆம்பன் நகரத்திற்கு, 1966-ன் பிற்பட்ட காலத்தில் நாங்கள் குடிபெயர்ந்தோம். அங்கே, சிநேகப்பான்மையான, நன்குபழகும் மக்களின் மத்தியில், அதிக ஆவிக்குரிய அக்கறையை நாங்கள் கண்டோம். எங்கள் சிறிய சபை சீக்கிரமாக வளர்ந்தது; சபைக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை நூறை அணுகியது. ஆகவே எங்களை ஆம்பனைவிட்டு கட்டாயமாக வெளியே விரட்டும்படி கிறிஸ்தவமண்டல சர்ச் அதிகாரிகள் மத விவகாரங்களின் அலுவலகத்தின் தலைவரை வற்புறுத்தும்படி அங்குச் சென்றனர். ஆனால் அங்கோ அந்தத் தலைவரின் மேசையில், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் புத்தகங்கள் முனைப்பாக காட்சியில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்! அந்தத் தலைவரின் மனதை மாற்றும் முயற்சியில் தோல்வியுற்றவர்களாய், எங்களை ஆம்பனிலிருந்து மட்டுமல்ல, ஆனால் இந்தோனீஷியாவிலிருந்தே வெளியேற்ற நாடி, ஜகார்த்தாவிலுள்ள மத அமைச்சகத்தின் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்த முறை அவர்கள் வெற்றிபெற்றதாகத் தோன்றிற்று; ஏனென்றால், பிப்ரவரி 1, 1968, எங்களை வெளியேற்றும் நாளாகக் குறிக்கப்பட்டது. இருப்பினும், ஜகார்த்தாவிலுள்ள கிறிஸ்தவ சகோதரர்கள், மத அமைச்சகத்திலுள்ள முஸ்லீம் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தனர்; அந்தத் தீர்மானத்தை நேர்மாறாக மாற்றுவதற்கு அவர் உதவி செய்தார். அதோடுகூட ஒரு முந்தைய கொள்கை மாற்றப்பட்டு, இன்னும் மற்ற மிஷனரிகளுக்கும் நுழைவு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு அடுத்த பத்து வருடங்கள், வட சுமத்ராவின் மகத்தான மலைகள், காடுகள், ஏரிகளின் பின்னணியில், நாங்கள் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், மற்றும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள மிஷனரிகளுடன் சேர்ந்து வேலை செய்தோம். பிரசங்க வேலை விசேஷமாக அந்தப் பகுதியின் முக்கிய இனத்தொகுதியாகிய பாடாக்கின் மத்தியில் செழித்தோங்கியது.

எனினும், மதச் சூழ்ச்சியாளர்கள் கடைசியில் நம்முடைய பிரசங்க வேலைக்கு டிசம்பர் 1976-ல் தடைவிதிப்பதில் வெற்றிகண்டனர்; அதற்கடுத்த வருடம் பெரும்பாலான மிஷனரிகள் மற்ற நாடுகளிலுள்ள நியமிப்புகளுக்குச் சென்றனர். கடைசியில், 1979-ல், நாங்களும் போகவேண்டியதாயிற்று.

தென் அமெரிக்காவிற்கு

இப்போது எங்களுக்கு 50 வயதாகிவிட்டது; இன்னும் மற்றொரு நாட்டிற்குச் சென்று சரிப்படுத்தல்களைச் செய்ய முடியுமா என்று யோசித்தோம். “ஒரு புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்வோமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோமா?” என்று ஸூசி கேட்டாள்.

“ஸூசி, யெகோவா நம்மை எங்கெல்லாம் போகும்படி அழைத்தாரோ, அவர் நம்மைக் கவனித்துக் கொண்டார். எதிர்காலம் மேலுமான என்ன ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?” என்று நான் பதிலளித்தேன். இவ்வாறு, நாங்கள் எங்கள் புதிய நியமிப்பான தென் அமெரிக்க நாடாகிய சூரினாமிற்கு வந்து சேர்ந்தோம். இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் திரும்பவும் பயணவேலையில் இருந்தோம்; சீக்கிரத்தில் அதில் பழக்கப்பட்டவர்களானோம்.

முழுநேர ஊழியத்தில் 45-ற்கும் அதிகமான வருடங்களைப் பின்னோக்கிப் பார்க்கையில், இந்த மிஷனரி ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு எங்கள் பெற்றோரின் ஆதரவு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று ஸூசியும் நானும் உணருகிறோம். ஆறு வருடங்களுக்குப்பின், 1969-ல் திரும்பவும் என் பெற்றோரைப் பார்த்தபோது, என் தந்தை என்னைப் பக்கத்தில் அழைத்துச் சொன்னார்: “உன் தாய் முதலில் இறக்க நேர்ந்தால், நீ வீட்டுக்கு வரவேண்டியதில்லை. உன்னுடைய நியமனத்தில் நிலைத்திரு. நான் சமாளித்துக்கொள்வேன். ஆனால் அதற்கு மாறான விதத்தில் நிகழ்ந்தால், அதைப் பற்றி உன் தாயைக் கேட்கவேண்டும்.” அம்மாவும் அதையே சொன்னாள்.

ஸூசியின் பெற்றோருக்கு அதே தன்னலமற்ற மனப்பான்மை இருந்தது. ஒருமுறை ஸூசி 17 வருடங்கள் அவர்களைவிட்டு தூரமாக இருந்தாள்; இருந்தாலும் அவர்கள் ஒரு சோர்வூட்டும் வார்த்தையையும் எழுதவில்லை. நிச்சயமாக, எங்களுடைய பெற்றோருக்கு வேறெந்த உதவியும் கிடைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் வீடு திரும்பியிருப்போம். குறிப்பு என்னவென்றால், எங்கள் பெற்றோருக்கு மிஷனரி வேலையைக் குறித்து அதே மதிப்பு இருந்தது; அவர்கள் தங்கள் மரணம் வரை, எங்கள் இருதயங்களில் பதிய வைத்திருந்த அதே அவசர உணர்வுடன் யெகோவாவைச் சேவித்திருந்தனர்.—1 சாமுவேல் 1:26-28-ஐ ஒப்பிடவும்.

ஒழுங்காகக் கடிதம் எழுதுபவர்கள் மூலமாகவும் நாங்கள் உற்சாகமூட்டப்பட்டோம். எங்களுடைய மிஷனரி சேவையின் 30-க்கும் அதிகமான வருடங்களில் எங்களுக்கு எழுதுவதில் ஒரு மாதம்கூட தவறாத ஒருசிலர் இருக்கின்றனர்! ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுடைய அன்பான பரலோக தகப்பனாகிய யெகோவாவை மனதில் வைக்கிறோம்; பூமியிலுள்ள தம் ஊழியர்களை எப்படி ஆதரிப்பது என்று அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சம்பவங்களின் உச்சக்கட்டத்திடமாக இப்போது அணுகுகையில், ஸூசியும் நானும் தொடர்ந்து ஓர் அவசர உணர்வுடன் யெகோவாவைச் சேவிப்பதன்மூலம் ‘யெகோவாவுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்க’ விரும்புகிறோம்.—2 பேதுரு 3:12.

[பக்கம் 26-ன் படம்]

திருமணமானது 1957-ல்

[பக்கம் 29-ன் படம்]

என்னே ஒரு கிளர்ச்சி—பயனியர்களாக ஆறு இளைஞர்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்