வாழ்க்கை சரிதை
யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்பித்தார்
மேக்ஸ் லாய்ட் சொன்னபடி
1955-ல் நானும் இன்னொரு மிஷனரி சகோதரரும் தென் அமெரிக்காவிலுள்ள பராகுவே நகரில் ஊழியம் செய்து வந்தோம். ஒருநாள் நள்ளிரவில் வெறிபிடித்த கும்பல் ஒன்று நாங்கள் இருந்த வீட்டை வளைத்துக்கொண்டது. அந்தக் கும்பலில் இருந்தவர்கள், “எங்கள் தெய்வம் இரத்தவெறிபிடித்த தெய்வம். அது கிரிங்கோஸ்களின் இரத்தத்தைக் கேட்கிறது” என்று கூச்சல் போட்டார்கள். கிரிங்கோஸ்கள் (வெளிநாட்டவர்கள்) எப்படி இங்கு வந்தார்கள்?
அந்தக் கதையைச் சொல்வதற்கு முன்பு என் சொந்தக் கதையைக் கொஞ்சம் சொல்கிறேன். நான் வளர்ந்ததெல்லாம் ஆஸ்திரேலியாவில். யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய அங்குதான் கற்றுக்கொண்டேன். 1938-ல் ஒரு யெகோவாவின் சாட்சி பகைவர்கள் என்ற ஆங்கில புத்தகத்தை என் அப்பாவுக்குக் கொடுத்தார். பைபிளில் பாதிக்குப் பாதி கட்டுக்கதை என்று பாதிரி சொல்லி வந்ததால் ஏற்கெனவே என் அப்பாவும் அம்மாவும் சர்ச் என்றாலே வெறுத்துப்போயிருந்தார்கள். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அதுமுதல், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு எங்கள் குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்பா, அம்மா ஞானஸ்நானம் எடுத்த பிறகு, லெஸ்லி அக்கா ஞானஸ்நானம் பெற்றார். அவர் என்னைவிட ஐந்து வயது மூத்தவர். 1940-ல், ஒன்பது வயதில் நான் ஞானஸ்நானம் பெற்றேன்.
இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகி கொஞ்ச நாட்களுக்குள், யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரங்களை அச்சிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் ஆஸ்திரேலியா தடைவிதித்தது. எனவே, அந்தச் சின்ன வயதிலேயே பைபிளை மட்டுமே பயன்படுத்தி என் மத நம்பிக்கைகளை விளக்கக் கற்றுக்கொண்டேன். நான் ஏன் கொடி வணக்கத்தில் கலந்துகொள்வதில்லை, ஏன் போர் முயற்சிகளை ஆதரிப்பதில்லை என்று யாராவது கேட்டால் அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் பள்ளிக்கு எப்போதும் பைபிளை எடுத்துச் சென்றேன்.—யாத். 20:4, 5; மத். 4:10; யோவா. 17:16; 1 யோ. 5:21.
பள்ளியில் எனக்கு “ஜெர்மானிய உளவாளி” என்று பட்டப் பெயர் வைத்திருந்தார்கள். அதனால், நிறையப் பேர் என்னுடன் பேசமாட்டார்கள். அந்தச் சமயத்தில் பள்ளியில் திரைப்படங்கள் காட்டப்பட்டன. படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக எல்லாரும் எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாட வேண்டியிருந்தது. நான் மட்டும் உட்கார்ந்தே இருப்பேன், இரண்டு மூன்று பையன்கள் என் முடியைப் பிடித்துத் தூக்கி என்னை நிற்க வைக்க முயற்சி செய்வார்கள். என்னுடைய மத நம்பிக்கைகளுக்காக சீக்கிரத்திலேயே பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். இருந்தாலும், வீட்டிலிருந்தே அஞ்சல்வழி கல்வி கற்றேன்.
என் கனவு நனவானது
எனக்கு 14 வயதானதும் பயனியர் ஊழியம் ஆரம்பிக்க வேண்டுமென்பது என் லட்சியமாய் இருந்தது. “முதலில் ஒரு வேலையைத் தேடு, சம்பாதிக்க ஆரம்பி, அப்புறம் பயனியர் செய்யலாம்” என்று அப்பா அம்மா சொன்னபோது எனக்கு ஒரே ஏமாற்றம். வீட்டில் தங்குவதற்கும்கூட நான் பணம் தரவேண்டுமென கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், எனக்கு 18 வயதானதும் பயனியர் ஊழியம் செய்ய அனுமதிப்பதாகச் சொன்னார்கள். அதனால், நான் என்ன சம்பாதிக்கிறேன், எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதைப் பற்றிச் சதா வீட்டில் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பயனியர் செய்வதற்குக் காசு சேர்த்து வைக்க வேண்டுமென நான் சொல்லியும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள்.
நான் பயனியர் ஊழியத்தைத் தொடங்க வேண்டிய சமயம் வந்தது. அப்பா அம்மா என்னோடு உட்கார்ந்து பேசினார்கள். நான் கொடுத்த காசையெல்லாம் சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்திருப்பதாகச் சொன்னார்கள். பிறகு, மொத்தப் பணத்தையும் கையில் கொடுத்து, பயனியர் செய்வதற்குத் தேவையான துணிமணிகளையும் மற்றவற்றையும் வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். யார் கையையும் எதிர்பார்க்காமல் என் தேவைகளை நானே கவனித்துக்கொள்ள என்னைப் பயிற்றுவித்தார்கள். அன்று அவர்கள் எனக்குக் கொடுத்த பயிற்சி இன்றுவரை உதவியாய் இருக்கிறது.
நானும் அக்காவும் சிறுவர்களாக இருந்தபோது பயனியர்கள் அடிக்கடி எங்கள் வீட்டில் தங்கினார்கள். அவர்களோடு சேர்ந்து ஊழியத்திற்குப் போவதென்றால் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சனி ஞாயிறுகளில், வீட்டுக்குவீடு ஊழியம், தெரு ஊழியம், பைபிள் படிப்புகள் என்றே எங்கள் பொழுது கழிந்தது. அந்தக் காலத்தில் பிரஸ்தாபிகள் ஊழியத்தில் 60 மணிநேரம் செலவிட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. அம்மா எப்படியாவது 60 மணிநேரம் செய்துவிடுவார். அவருடைய அருமையான முன்மாதிரி எனக்கும் அக்காவுக்கும் எப்போதுமே தூண்டுகோலாய் இருந்திருக்கிறது.
டாஸ்மேனியாவில் பயனியர் ஊழியம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாஸ்மேனியா தீவில் முதன்முதலாக பயனியர் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். அங்கு என் அக்காவும் மாமாவும் பயனியர் ஊழியம் செய்து வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தேன். ஆனால், கொஞ்ச நாட்களுக்குள் கிலியட் பள்ளியின் 15-வது வகுப்பில் கலந்துகொள்ள அவர்கள் போய்விட்டார்கள். பொதுவாகவே எனக்குக் கூச்ச சுபாவம். அதுவரை வீட்டைவிட்டு நான் எங்கும் தனியாகப் போய்த் தங்கியதே இல்லை. மூன்று மாதங்களுக்கு மேல் நான் தாக்குப்பிடிக்க மாட்டேன் என்று சிலர் நினைத்தார்கள். இருந்தாலும் ஒரு வருடத்திற்குள், அதாவது, 1950-ல் கம்பெனி சர்வன்ட்டாகவும் (இன்று மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்) பின்னர், விசேஷ பயனியராகவும் நியமிக்கப்பட்டேன். என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஓர் இளம் சகோதரர் நியமிக்கப்பட்டார்.
யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லாத, செப்புச் சுரங்கமிருந்த ஓர் ஒதுக்குப்புற நகரத்தில் ஊழியம் செய்ய நாங்கள் அனுப்பப்பட்டோம். ஒருநாள் மாலை சுமார் 4 மணிவாக்கில் பஸ்ஸில் அந்த நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு பழைய ஹோட்டலில் அன்று இரவு தங்கினோம். மறுநாள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஏதாவது வீடு காலியாக இருக்கிறதாவென சந்தித்தவர்களிடம் கேட்டோம். பொழுது சாயும் வேளையில் நாங்கள் சந்தித்த ஒருவர் பிரெஸ்பிட்டேரியன் சர்ச்சுக்கு அடுத்திருந்த பாதிரியின் வீடு காலியாக இருப்பதாகவும் அவரிடம் கேட்டுப் பார்க்கும்படியாகவும் சொன்னார். அந்தப் பாதிரி அன்பாகப் பேசினார், வீட்டையும் வாடகைக்குக் கொடுத்தார். ஒரு பாதிரியின் வீட்டில் குடியிருந்துகொண்டு ஊழியத்திற்குச் செல்வது என்னவோபோல் இருந்தது.
அந்தப் பகுதியில் இருந்த எல்லாருமே சத்தியத்திற்குச் செவிகொடுத்தார்கள். பைபிளிலிருந்து நிறைய விஷயங்களைப் பற்றி நாங்கள் அவர்களிடம் பேசினோம். அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம். தலைநகரத்திலிருந்த சர்ச் அதிகாரிகள் இதையெல்லாம் கேள்விப்பட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளுக்குப் பாதிரி தன் வீட்டை வாடகைக்கு விட்டிருப்பதையும் கேள்விப்பட்டார்கள். உடனடியாக எங்களைக் காலிசெய்யச் சொல்லி பாதிரிக்கு உத்தரவு போட்டார்கள். மீண்டும் தலைசாய்க்க இடமில்லாமல் தெருவில் நின்றோம்.
மறுநாள் மதியம்வரை ஊழியம் செய்துவிட்டு, இரவு தங்குவதற்காக இடம் தேடினோம். ஒரு விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் பகுதியில் கூரை போடப்பட்டிருந்தது. அங்கேயே தங்கிக்கொள்வதென தீர்மானித்தோம். எங்கள் பெட்டி படுக்கைகளை அங்கே மறைத்து வைத்துவிட்டு, மீண்டும் ஊழியத்திற்குச் சென்றோம். இருட்டத் தொடங்கியது. ஆனால், அந்தத் தெருவில் இன்னும் சில வீடுகள் இருந்ததால் அவற்றையும் முடித்துவிட நினைத்தோம். ஒரு வீட்டுக்காரர் தனது வீட்டுக்குப் பின்புறமிருந்த ஒரு வீட்டை எங்களுக்கு வாடகைக்குத் தர ஒத்துக்கொண்டார்! அதில் இரண்டு அறைகள் இருந்தன.
வட்டார ஊழியமும் கிலியட்டும்
இங்கு சுமார் எட்டு மாதங்கள்வரை ஊழியம் செய்த பிறகு, வட்டார ஊழியராக நியமிக்கப்பட்டிருப்பதாய் ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்திலிருந்து எனக்குக் கடிதம் வந்தது. அதைப் பார்த்ததும் பயந்தே போய்விட்டேன். ஏனென்றால், எனக்கு அப்போது 20 வயதுதான். ஓரிரு வாரங்கள் பயிற்சி பெற்ற பிறகு சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்குச் சபைகளைப் போய்ச் சந்திக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட சபையில் இருந்த எல்லாருமே என்னைவிட பெரியவர்கள்தான். இருந்தாலும், என்னை “சின்ன பையனாக” நினைக்காமல் நான் செய்துவந்த வேலையை ரொம்பவே மதித்தார்கள்.
சபைகளுக்குப் பயணிப்பது சுவையான அனுபவம்! ஒரு வாரம் பஸ்ஸில், ஒரு வாரம் டிராமில், ஒரு வாரம் காரில் எனப் பயணம் செய்வேன். சில சமயங்களில், மோட்டர்பைக்கில் அழைத்துச் செல்லப்படும்போது ஒரு கையில் சூட்கேஸையும் மறுகையில் ஊழியப் பையையும் பிடித்துக்கொள்வேன். சகோதர சகோதரிகளுடன் தங்குவது என்றாலே அலாதி ஆனந்தம்தான். கம்பெனி சர்வன்ட்டாக சேவை செய்துவந்த ஒரு சகோதரருடைய வீடு பாதி கட்டியும் கட்டாமலும் இருந்தது. ஆனாலும் அவர் என்னை அவருடைய வீட்டில் தங்க வைத்துக்கொண்டார். அந்த வாரம் அவர்கள் வீட்டு குளியல் தொட்டி, என் படுக்கையாக மாறிவிட்டது. அந்த வாரம் இருவரும் சேர்ந்து ஊழியத்திலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
1953-ல் எனக்கு மற்றொரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. 22-வது கிலியட் வகுப்பில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றேன். எனக்கு ஒருபக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் கவலை. ஏனென்றால், ஜூலை 30, 1950-ல் அக்காவும் மாமாவும் கிலியட் பட்டம் பெற்ற பிறகு பாகிஸ்தானில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள். அங்கு போய் ஒரு வருடத்துக்குள் அக்கா வியாதிப்பட்டு இறந்துவிட்டார். ‘அந்த அதிர்ச்சியிலிருந்து அப்பா அம்மா இன்னும் மீளவில்லை. அதற்குள் நானும் இன்னொரு மூலைக்குச் சென்று ஊழியம் செய்யப் போகிறேன் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்று கலங்கிப்போனேன். ஆனால் அவர்கள், “போப்பா, யெகோவா எங்க போகச் சொல்கிறாரோ அங்க போ” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நான் அப்பாவைப் பார்க்கவே இல்லை. அவர் 1957-ல் இறந்துவிட்டார்.
விரைவிலேயே, இன்னும் ஐந்து ஆஸ்திரேலியர்களுடன் நியு யார்க் நகரத்தை நோக்கி கப்பலில் புறப்பட்டேன். அது ஆறுவார பயணம். போகும் வழியில் நாங்கள் பைபிளைப் படித்தோம், அதிலுள்ள விஷயங்களைக் கலந்துபேசினோம், சக பயணிகளுக்குச் சாட்சி கொடுத்தோம். நியு யார்க்குக்கு வடக்கே உள்ள சௌத் லான்சிங் நகரில்தான் பள்ளி அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு முன்பு, யாங்கி ஸ்டேடியத்தில் ஜூலை 1953-ல் நடந்த சர்வதேச மாநாட்டுக்குச் சென்றோம். அந்த மாநாட்டிற்கு 1,65,829 பேர் வந்திருந்தார்கள்.
எங்கள் வகுப்பில் 120 மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் உலகின் எட்டுத் திக்கிலிருந்தும் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பட்டம் பெற்றபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. உடனேயே, நாங்கள் போகவிருந்த நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கிலியட் பள்ளியிலுள்ள நூலகத்திற்கு ஓடினோம். நான் போகவிருந்த பராகுவே நாடு பல அரசியல் புரட்சிகளைக் கண்ட நாடு என்பதை அறிந்துகொண்டேன். அந்த நாட்டுக்குச் சென்ற சில நாட்களில் ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் காலையில் எழுந்ததும், ‘நேத்து ராத்திரி என்ன ஒரே சத்தமா இருந்தது?’ என்று சக மிஷனரிகளிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக்கொண்டே, “இது நீ பார்க்கற முதல் புரட்சி. கொஞ்சம் வெளியே எட்டிப் பார்” என்றார்கள். மூலைக்கு மூலை ராணுவ வீரர்களின் தலை தென்பட்டது!
நீங்காத நினைவுகள்
ஒருசமயம், ஒதுக்குப்புறத்திலுள்ள ஒரு சபையில் இருந்தவர்களைச் சந்திக்கவும் அவர்களுக்கு புதிய உலக சமுதாயம்—செயலில் என்ற ஆங்கில படக்காட்சியைக் காட்டவும் நானும் ஒரு வட்டாரக் கண்காணியும் சென்றிருந்தோம். முதலில் ரயிலில், பிறகு குதிரையில், அதற்குப் பிறகு குதிரை வண்டியில், கடைசியில் மாட்டு வண்டியில்... என மாறி மாறிக் கிட்டத்தட்ட எட்டு, ஒன்பது மணிநேரம் பயணித்தோம். ஒரு ஜெனரேட்டரையும் படக்காட்சிக்கான ஒரு புரொஜக்டரையும் எடுத்துச் சென்றோம். ஒருவழியாக நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைந்தோம். மறுநாள் பண்ணைகளிலிருந்த மக்களைச் சந்தித்து அன்று இரவு ஒரு படக்காட்சியைப் பார்க்க எல்லாரையும் அழைத்தோம். சுமார் 15 பேர் வந்தார்கள்.
சுமார் 20 நிமிடங்கள்தான் படத்தைக் காட்டியிருப்போம், அதற்குள் சட்டென உள்ளே போகும்படி அங்கிருந்தவர்கள் எங்களைத் துரிதப்படுத்தினார்கள். உடனே புரொஜக்டரையும் மற்றவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினோம். அன்று இரவுதான் வெறிபிடித்த அந்த ஆட்கள் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டு துப்பாக்கி சூடு நடத்தினார்கள், “எங்கள் தெய்வம் இரத்தவெறிபிடித்த தெய்வம். அது கிரிங்கோஸ்களின் இரத்தத்தைக் கேட்கிறது” என்று கூச்சல் போட்டார்கள். அங்கிருந்தது இரண்டே இரண்டு கிரிங்கோஸ்கள். அதில் நான் ஒருவன்! படக்காட்சியைப் பார்க்க வந்தவர்கள், அந்த வெறியர்கள் வீட்டை உடைத்து உள்ளே புகுந்துவிடாதபடி பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் விடியற்காலை சுமார் மூன்று மணியளவில் திரும்பி வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ‘எப்படியும் நீங்க திரும்பவும் நகரத்திற்குப் போய்த்தானே ஆகணும். அப்போ பார்த்துக்குறோம்’ என்று சூளுரைத்துவிட்டுச் சென்றார்கள்.
சகோதரர்கள் உள்ளூர் அதிகாரியை (ஷெரிஃப்பை) அணுகி உதவி கேட்டார்கள். அன்று மதியம் அவர் எங்களை நகரத்துக்கு அழைத்துச் செல்ல இரண்டு குதிரைகளுடன் வந்தார். புதர்கள் மண்டிக்கிடந்த அல்லது மரங்கள் அடர்ந்திருந்த இடங்களைக் கடந்து சென்றபோதெல்லாம், தனது துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு எங்களுக்கு முன்பாக குதிரையில் சென்று பார்வையிட்டார். அதற்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது, ஒவ்வொரு இடத்திற்கும் பயணம் செய்ய குதிரை ரொம்பவே அவசியம் என்று. பின்னர் எனக்கென சொந்தமாக ஒரு குதிரையை வாங்கிக்கொண்டேன்.
இன்னும் அதிக மிஷனரிகள் வந்திறங்கினார்கள்
மதகுருக்கள் எதிர்த்து வந்தபோதிலும் ஊழியம் மட்டும் தங்கு தடையின்றி நடந்தது. 1955-ல் இன்னும் ஐந்து மிஷனரிகள் வந்திறங்கினார்கள். அவர்களில் கனடாவைச் சேர்ந்த எல்ஸி ஸ்வென்ஸன் என்ற இளம் சகோதரியும் இருந்தாள். அவள் கிலியட்டின் 25-வது வகுப்பில் பட்டம் பெற்றவள். ஊழியம் செய்ய அவள் வேறொரு நகரத்திற்கு செல்வதற்கு முன்பாக கிளை அலுவலகத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தாள். அப்போது அவளுடன் பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அவள் மட்டுமே சத்தியத்தில் இருந்தாள், கடைசிவரை அவளுடைய பெற்றோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. 1957-ல் டிசம்பர் 31-ஆம் தேதி நானும் எல்ஸியும் திருமணம் செய்துகொண்டோம். பிறகு, பராகுவே நாட்டின் தென் பகுதியிலிருந்த மிஷனரி இல்லத்தில் வசித்தோம். அதில் நாங்கள் மட்டுமே தங்கியிருந்தோம்.
அந்த வீட்டில் குழாய் வசதி இல்லாவிட்டாலும் பின்புறம் ஒரு கிணறு இருந்தது. வீட்டுக்குள் குளியலறை இல்லை, கழிவறை இல்லை, துணி துவைக்கும் மிஷன் இல்லை, ஏன் ஒரு ஃபிரிஜ்கூட இல்லை. அன்றன்று தேவைப்பட்ட உணவுப்பொருள்களை மட்டுமே வாங்கிக்கொண்டோம். எளிமையான வாழ்க்கையும் சபையிலிருந்த சகோதர சகோதரிகளின் பாசமும் எங்கள் நெஞ்சில் சந்தோஷமான நினைவுகளைப் பதித்தன.
1963-ல் அம்மாவைப் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றோம். பத்து வருடங்களுக்குப் பிறகு மகனைப் பார்த்த பூரிப்பிலோ என்னவோ சில நாட்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நாங்கள் பராகுவே நாட்டுக்கு மீண்டும் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியது. பராகுவே செல்வதுதான் எங்கள் கனவு. ஆனால், எங்கள் அம்மாவை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டுப் போவதா அல்லது கூடவே இருந்து அவரைப் பார்த்துக்கொள்வதா என்ற முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை. யெகோவாவிடம் ஜெபம் செய்து ஒரு முடிவுக்கு வந்தோம். கூடவே இருந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தோம். 1966-ல் அவர் இறக்கும்வரை, முழுநேர ஊழியத்தை விட்டுவிடாமலே அவரைக் கவனித்துக்கொண்டோம்.
ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் வட்டார, மாவட்டக் கண்காணியாகவும் மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளியில் போதனையாளனாகவும் சேவை செய்ய முடிந்ததைப் பாக்கியமாய்க் கருதுகிறேன். மீண்டும் எங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக கிளை அலுவலகக் குழு உருவானபோது அதன் அங்கத்தினனாக நியமிக்கப்பட்டேன். பிறகு, புதிய கிளை அலுவலகத்தைக் கட்ட வேண்டிய வேளை வந்தபோது கட்டுமானக் குழுவின் சேர்மனாக நியமிக்கப்பட்டேன். அனுபவம் வாய்ந்த, ஒத்துழைக்கும் கரங்கள் சேர்ந்து ஓர் அழகிய கிளை அலுவலகத்தைக் கட்டி முடித்தன.
அடுத்ததாக... பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் ஊழிய இலாகாவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். அதோடு, மண்டலக் கண்காணியாக உலகெங்குமுள்ள வெவ்வேறு கிளை அலுவலகங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவியும் உற்சாகமும் அளிக்கும் பாக்கியத்தையும் பெற்றிருந்தேன். முக்கியமாக, யெகோவாவுக்கு உண்மையுடன் கீழ்ப்படிந்ததால் சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் பல வருடங்களை—ஏன், பல பத்தாண்டுகளை—கழித்தவர்கள் சிலரைப் பல்வேறு நாடுகளில் சந்தித்தது என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது.
இன்று நாங்கள்...
2001-ல் ஒரு மண்டல சந்திப்பை முடித்துவிட்டுக் களைத்துப்போய் ஆஸ்திரேலியா திரும்பியபோது புருக்லினிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. புதிதாக உருவான அமெரிக்கக் கிளை அலுவலகக் குழுவில் கண்காணியாகச் சேவை செய்ய நான் நியமிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நானும் எல்ஸியும் யெகோவாவிடம் ஜெபம் செய்து, அதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்தோம். பின்பு, சந்தோஷமாக அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டோம். 11 ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் புருக்லினில் சேவை செய்து வருகிறோம்.
யெகோவா என்ன செய்யச் சொன்னாலும் அதற்குத் தோள்கொடுக்கும் வகையில் எனக்கு மனைவி அமைந்ததற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். எனக்கும் எல்ஸிக்கும் 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஓரளவு ஆரோக்கியமாக இருக்கிறோம். யெகோவா கற்பிக்கும் விஷயங்களிலிருந்து இன்றும் என்றும் பயனடைய ஆவலாய் இருக்கிறோம். அதோடு, அவருடைய சித்தத்தை எப்போதும் செய்பவர்களுக்காக அவர் அள்ளித்தரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் காத்திருக்கிறோம்.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
ஒரு வாரம் பஸ்ஸில், ஒரு வாரம் டிராமில், ஒரு வாரம் காரில் எனப் பயணம் செய்வேன். சில சமயங்களில், மோட்டர்பைக்கில் அழைத்துச் செல்லப்படும்போது ஒரு கையில் சூட்கேஸையும் மறுகையில் ஊழியப் பையையும் பிடித்துக்கொள்வேன்
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
யெகோவா கற்பிக்கும் விஷயங்களிலிருந்து இன்றும் என்றும் பயனடைய ஆவலாய் இருக்கிறோம்
[பக்கம் 18-ன் படங்கள்]
இடது: ஆஸ்திரேலியாவில் வட்டார ஊழியத்தில் இருந்தபோது
வலது: என் அப்பா அம்மாவுடன்
[பக்கம் 20-ன் படம்]
டிசம்பர் 31, 1957—எங்கள் திருமணத்தன்று