யெகோவாவின் வழிநடத்துதலை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுதல்
யுலிஸிஸ் வி. கிளாஸ் என்பவர் சொன்னபடி
இது ஓர் அசாதாரணமான நிகழ்ச்சி. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 127 தான், ஆனால் உற்சாக வெள்ளத்தில் கரைபுரண்டவர்களின் எண்ணிக்கையோ 1,26,387. இவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். நியூ யார்க் யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உவாட்ச் டவர் கிலியட் பள்ளியின் 21-வது பட்டமளிப்பு விழாதான் இந்நிகழ்ச்சி. இது 1953, ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது. என் வாழ்க்கையில் இச்சம்பவம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது? அதற்கான பின்னணியை சற்று கூறுகிறேன், கேளுங்கள்.
அமெரிக்காவில் இண்டியானாவிலுள்ள வின்சென்னெஸ் என்ற ஊரில் 1912-ம் வருஷம் பிப்ரவரி 17-ம் தேதி பிறந்தேன், அதாவது வெளிப்படுத்துதல் 12:1-5-ல் விவரிக்கப்பட்டுள்ள மேசியானிய ராஜ்யம் பிறப்பதற்கு சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்னாடி. இதற்கு முந்தின வருஷத்திலிருந்தே வேதாகமங்களில் படிப்புகள் (ஆங்கிலம்) என்ற தொகுப்புகளை என்னுடைய அப்பா அம்மா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அந்த புத்தகங்கள் ஏதாவது ஒன்றிலிருந்து அப்பா வாசித்து காட்டுவாங்க, அதற்கப்புறம் நாங்க அதைப்பற்றி பேசுவோம்.
அம்மா என்ன செய்வார்கள் என்றால், படித்த விஷயங்களை பக்குவமாக எங்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் ரொம்ப நல்லவங்க, அன்பாக இருப்பாங்க, எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்துகொண்டே இருப்பாங்க. எங்களுடைய குடும்பத்தில் நாங்கள் மொத்தம் நான்கு பிள்ளைகள், ஆனால் அக்கம் பக்கத்தாருடைய மற்ற பிள்ளைகளையும் அம்மா ரொம்ப நேசித்தார்கள். எப்போதும் எங்களோடு நேரத்தை செலவழித்தார்கள். பைபிள் கதைகளை சொல்லிக் கொடுத்து, எங்களோடு பாடி மகிழ்ந்தார்கள்.
முழுநேர ஊழியர்கள் நிறைய பேரை எங்க வீட்டுக்கு அம்மா அழைப்பாங்க. எங்க வீட்டில் அவர்கள் இரண்டொரு நாள் தங்கியிருப்பாங்க; அடிக்கடி கூட்டங்கள்கூட எங்க வீட்டில் நடத்துவாங்க, பேச்சுக்கள் கொடுப்பாங்க. உதாரணங்களையும், கதைகளையும் சொல்லிக் கொடுத்தவர்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு சந்தர்ப்பத்தில், அதாவது முதல் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்து 1919-ல், சிறப்பு பேச்சாளராக வந்திருந்த சகோதரர் முக்கியமாக பிள்ளைகளாகிய எங்களைப் பார்த்து பேசினார். அவர் ஒப்புக்கொடுத்தலை பற்றி பேசினார். அது எங்களுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கும் உதவிசெய்தார். அன்னைக்கு ராத்திரி தூங்கப்போவதற்கு முன்பு பரலோக தகப்பனிடம் ஜெபம் செய்தேன். நான் எப்போதும் அவரையே சேவிக்க விரும்புவதாக சொன்னேன்.
ஆனால், 1922-க்குப் பின்பு வாழ்க்கையின் மற்ற கவலைகள் அந்த தீர்மானத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஊர் ஊராக இடம் மாறிச் சென்றதால் யெகோவாவின் ஜனங்களுடைய சபையோடு தொடர்பு இல்லாமலே போய்விட்டது. அப்பா ரயில்வேயில் வேலை பார்த்ததால் எங்களோடு இல்லை. நாங்க எப்போதாவதுதான் பைபிள் படித்தோம். கமர்ஷியல் ஆர்டிஸ்டாக வேண்டும் என்ற குறிக்கோளோடு அது சம்பந்தமான கோர்ஸ் எடுத்துப் படித்தேன். பிரபலமான யுனிவர்சிட்டியில் படிப்பதற்கும்கூட யோசனை பண்ணினேன்.
வாழ்க்கை லட்சியத்தில் மாற்றம்
1930-களின் மத்திபத்தில் மீண்டும் உலகப் போர் ஆரம்பித்தது. நாங்க கிளீவ்லாண்ட்டில் உள்ள ஒஹாயோவில் குடியிருந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்க வீட்டிற்கு வந்தார். நாங்க சின்ன பிள்ளைகளாய் இருந்த சமயத்தில் படித்த விஷயங்களைப் பற்றி இப்போது சீரியஸாக சிந்திக்க ஆரம்பித்தோம். எதையும் சீரியஸாக சிந்திக்கும் என்னுடைய அண்ணன் ரஸல்தான் முதலில் முழுக்காட்டுதல் எடுத்தான். எங்க வீட்டிலேயே நான் தனி டைப்; எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவன். ஆனால் 1936, பிப்ரவரி 3-ல் நானும் முழுக்காட்டுதல் எடுத்துக்கொண்டேன். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தல் என்பதில் என்னென்ன விஷயங்கள் உட்பட்டிருந்ததோ அதன்மீது என்னுடைய போற்றுதல் வளர்ந்தது, யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதற்கும்கூட கற்றுக்கொண்டு வந்தேன். அதே வருஷம் என் அக்கா கேத்ரினும் தங்கச்சி ஜெட்ரூட்டும் முழுக்காட்டுதல் எடுத்துக்கொண்டாங்க. நாங்க எல்லாரும் முழுநேர பயனியர்களாக சேவை செய்ய ஆரம்பித்தோம்.
ஆனால், நாங்க மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்று சொல்லிட முடியாது. “சத்தியத்தை கேட்டதிலிருந்தே ஆன் என்ற அழகான பெண் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாள், நம் வீட்டில் நடக்கும் கூட்டங்களுக்கு வருவாள்” என என்னுடைய அண்ணி சொன்னபோது காதை இன்னும் தீட்டிக்கொண்டு கேட்டேன். அந்தச் சமயத்தில், சட்ட அலுவலகத்தில் ஆன் ஒரு செகரெட்டரியாக வேலைபார்த்து வந்தாள். ஒரு வருஷத்தில் முழுக்காட்டுதலும் எடுத்துவிட்டாள். அப்போது கலியாணத்தைப் பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை, ஆனால் ஆன் சத்தியத்தில் உறுதியாய் இருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. யெகோவாவின் சேவையில் முழுமையாய் ஈடுபட விரும்பினாள். “என்னால அதை செய்ய முடியுமா?” என அவள் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால், “எப்படி செய்தால் நல்லா இருக்கும்?” என்றுதான் கேட்பாள். மேலும் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தாள். நம்பிக்கையான அந்த மனநிலை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அது மாத்திரமல்ல அழகாவும் இருந்தாள், இப்போதும் அப்படித்தான் இருக்கிறாள். அவள் என் மனைவியானாள், சீக்கிரத்திலேயே பயனியர் சேவையில் அவள் என் துணையானாள்.
மதிப்புமிக்க பயனியர் பயிற்சி
பயனியர்களாக பொருளாதர விதத்தில் கஷ்டநஷ்டங்கள் வந்தபோது இருக்கிறதை வைத்து எவ்வாறு திருப்தியடைவது என்பதையும் கற்றுக்கொண்டோம். (பிலிப்பியர் 4:11-13) ஒரு நாள் சாயங்காலத்தில், எங்களுக்கு சாப்பிட ஒன்றுமே இல்லை. ஐந்து ‘சென்ட்’தான் இருந்தது. ஒரு கசாப்புக் கடைக்குப்போய், “ஐந்து சென்ட்க்கு கறி தருவீங்களா?” என நான் கேட்டேன். கடைக்காரன் எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாலு துண்டுகளை வெட்டிக் கொடுத்தான். அதன் விலை ஐந்து சென்ட்டைவிட அதிகம் என எனக்கு நல்லா தெரியும், அது எங்களுக்கு கொஞ்சம் ஊட்டச்சத்து கொடுத்தது.
கடுமையான துன்புறுத்தலெல்லாம் எங்களுடைய ஊழியத்தில் சர்வசாதாரணம். ஒரு விசேஷ பொது கூட்டத்திற்கு மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, நியூ யார்க், சிரக்யூஸிற்கு அருகிலுள்ள டவுனுக்குச் சென்று அங்குள்ள ஒரு தெருவில் துண்டு பிரதிகளை கொடுத்தோம். விளம்பர போஸ்டர்களை மாட்டிக் கொண்டும் போனோம். அந்தச் சமயத்தில் இரண்டு குண்டர்கள் திடீரென வந்து என்னைப் பிடித்து முரட்டுத்தனமாக நடத்தினாங்க. அதில் ஒருவர் மஃப்டியில் இருந்த போலீஸ் அதிகாரி. அவருடைய பேட்ஜை பார்க்கும்படி நான் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. அப்போது, புரூக்ளின் பெத்தேலில் உள்ள கிரான்ட் ஸூட்டர் என்னுடன் வந்து, இந்த விஷயத்தை செட்டில் பண்ண போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம் என்று சொன்னார். அதற்குப்பின், புரூக்ளினில் உள்ள சொஸைட்டியின் ஆபீஸுக்கு போன் செய்தார். மாதிரி வழக்கு (test case) ஒன்றிற்கு ஆதாரம் அளிக்கும் வகையில், விளம்பர அட்டைகளுடனும் துண்டுப்பிரதிகளுடனும் நாங்க ரெண்டுபேரும் மறுபடியும் ஊழியத்திற்குச் செல்லும்படி அறிவிக்கப்பட்டோம். எதிர்பார்த்த மாதிரியே நாங்க கைது செய்யப்பட்டோம். இருந்தாலும், நாங்க சட்டத்துக்கு விரோதமாக கைது செய்யப்பட்டதற்காக கேஸ் போடப் போகிறோம் என போலீஸிடம் சொன்னபோது எங்களை விட்டு விட்டார்கள்.
அடுத்த நாள் இளைஞரின் ரௌடி கும்பல் ஒன்று பாதிரியாரின் தூண்டுதலால் நாங்க கூடிவரும் இடத்தை தாக்கினாங்க. அந்தச் சமயத்தில் ஒரு போலீஸ்கூட அங்கு இல்லை. அந்த கலகக்கார கும்பல் பேஸ்பால் மட்டைகளை வைத்து மரத்தாலான தரையை ஓங்கி அடித்தாங்க, கூடிவந்திருந்த சிலரை காலரியிலிருந்து கீழே தள்ளியும் விட்டாங்க. அதோடு, மேடையில் ஏறி, அங்கு ஒரு அமெரிக்க கொடியை நிறுத்தி, “சல்யூட் போடுங்கள்” “சல்யூட் போடுங்கள்” என கூச்சல் போட்டாங்க. பின்பு, “பீர் பேரல் போல்கா” என்ற ஃபேமஸான ஒரு அமெரிக்க பாட்டை பாட ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு நடக்கவேண்டிய கூட்டத்தை கொஞ்சம்கூட நடத்தவிடாமல் கலைச்சுட்டாங்க. “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” என்று இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை கண்ணார கண்டோம்.—யோவான் 15:19.
உண்மையில், அந்த பொதுப் பேச்சு ஜெ. எஃப். ரதர்ஃபர்டு கொடுத்த பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட ஃபோனோகிராப் ரெக்கார்டு. அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்ட்டாக இருந்தவர்தான் ஜெ. எஃப். ரதர்ஃபர்டு. நானும் என் மனைவியும் அந்த நகரத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, வீட்டிலிருந்தே மக்கள் அந்த பேச்சை கேட்பதற்கு வாய்ப்பளித்தோம். சிலர் அதற்கு சம்மதிச்சாங்க.
வெளிநாட்டில் சேவைசெய்ய முன்வருதல்
காலப்போக்கில், யெகோவாவின் சேவையில் எங்களுக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டன. என்னுடைய அண்ணன் ரஸலும் அவனுடைய மனைவி டாரதியும் 1943-ல் நடந்த முதல் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். அதன்பின் அவர்கள் மிஷனரிகளாக க்யூபாவுக்கு அனுப்பப்பட்டார்கள். என் அக்கா கேத்ரின் நான்காவது கிலியட் பள்ளியில் கலந்து கொண்டாள். அவளும் க்யூபாவில் சேவைசெய்ய நியமிக்கப்பட்டாள். பின்னால் அவள் டொமினிக்கன் குடியரசுக்கும் அதற்குப்பின் பியூரிடோ ரிக்கோவிற்கும் அனுப்பப்பட்டாள். என்னையும் என்னுடைய மனைவியையும் பற்றி கேட்கிறீர்களா?
கிலியட் பள்ளியை பற்றியும் மற்ற இடங்களுக்கு மிஷனரிகளை அனுப்ப சொஸைட்டி விரும்புவதை பற்றியும் கேள்விப்பட்டபோது, வெளிநாடுகளில் சேவை செய்ய நாங்க விரும்பினோம். முதலில், எங்க சொந்த விருப்பத்தின்படி மெக்ஸிகோவிற்குச் செல்லலாம் என நினைத்தோம். ஆனால், நாங்க கிலியட் பள்ளியில் கலந்து கொண்டபின், சொஸைட்டி எங்களை எங்கு நியமிக்கிறதோ அங்கு செல்வதே சிறந்தது என தீர்மானித்தோம். இது யெகோவா உபயோகிக்கும் ஒரு ஏற்பாடு என்பதை நாங்க உணர்ந்தோம்.
நாங்க கிலியட் பள்ளியின் நான்காவது வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். ஆனால் வகுப்பு ஆரம்பிப்பதற்குச் சற்று முன், அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்ட்டாக இருந்த என். எச். நார், என் மனைவி ஆனுக்கு இளம்பிள்ளை வாதம் தாக்கியிருந்ததால் சரீரப்பிரகாரமாக அவளால் அதிகம் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார். அவர் அதைப் பற்றி என்னிடம் பேசி, மற்றொரு நாட்டில் சேவை செய்ய எங்களை அனுப்புவது ஞானமான காரியமல்ல என தீர்மானித்தார்.
கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்களுக்குப்பின், மாநாட்டிற்கு முன் செய்யவேண்டிய வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில், மறுபடியும் சகோதரர் நார் என்னிடம் வந்து, கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள இன்னும் எங்களுக்கு விருப்பமிருக்கிறதா என்று கேட்டார். நாங்க வெளிநாட்டுக்கு போவதில்லை, ஆனால் அவருடைய மனதில் வேறொரு எண்ணம் இருப்பதாக கூறினார். ஆகவே, பிப்ரவரி 26, 1947-ல் நடந்த கிலியட் பள்ளிக்கு பெயர் பதிவு செய்யப்பட்டபோது, அந்த மாணவர் குழுவில் எங்களுடைய பெயர்களும் சேர்க்கப்பட்டன.
கிலியட்டில் நாங்க செலவழிச்ச அந்த நாட்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை. அந்த படிப்பு ஆவிக்குரிய விதத்தில் செழிப்படையச் செய்தது. ஆயுசு முழுக்க தொடரும் ஒரு நட்புறவை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் என் ஈடுபாடு இன்னும் விரிவடைந்து கொண்டே போனது.
வாஷிங்டனுக்கும் கிலியட்டுக்கும் இடையில்
கிலியட் பள்ளி இன்னும் ஓரளவு புதிதான ஒன்றாகவே இருந்தது. அமெரிக்க அரசாங்கம் இப்பள்ளியின் நோக்கத்தைப் பற்றி நன்கு அறியவில்லை, ஆகவே அநேக கேள்விகளை எழுப்பியது. வாஷிங்டன் டி.சி.-ல் ஒரு பிரதிநிதியை நியமிக்க சொஸைட்டி விரும்பியது. கிலியட் பட்டப் படிப்பை முடித்த சில மாசங்களில் எங்களை அங்குதான் அனுப்பினாங்க. மற்ற நாடுகளிலிருந்து கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு விசா எடுப்பதற்கும், பட்டதாரிகளை மிஷனரி வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை பெறுவதற்கும் நான் உதவி செய்தேன். சில அதிகாரிகள் நேர்மையாகவும் உதவியாகவும் இருந்தாங்க. ஆனால் மற்றவர்களுக்கு சாட்சிகள்மீது அதிக வெறுப்புணர்ச்சி. அரசியல் விவகாரங்களில் அதிக ஈடுபாடுள்ள சிலர், நாங்கள் அந்த நாட்டிற்கு எதிரான கொள்கை உடையோருக்கு உடந்தையாக இருப்பதாக கூறினார்கள்.
நான் ஒருவருடைய ஆபீஸுக்கு போனபோது, நாங்க கொடி வணக்கம் செய்வதில்லை அல்லது போருக்கு செல்வதில்லை என்று கடுமையாக குறைகூறினார். இதைப் பற்றி கொஞ்ச நேரம் அவர் வசைபாடினார். பிறகு கடைசியாக நான் சொன்னேன்: “நான் உங்களுக்கு சொல்ல விரும்புறதும், நீங்க ஏற்கெனவே தெரிஞ்சிருக்குறதும் என்னன்னா யெகோவாவின் சாட்சிகள் யாரோடும் போர்ல ஈடுபடுறதில்ல. உலக விவகாரங்களிலும் ஈடுபடுறதில்ல. யுத்தங்களிலோ, அரசியலிலோ ஈடுபடுறதில்ல. நாங்கள் முற்றிலும் நடுநிலை வகிப்பவர்கள். உங்களுக்கு இருக்கற பிரச்சனைகள நாங்க ஏற்கனவே ஜெயிச்சிட்டோம்; எங்க அமைப்பில நாங்க ஒற்றுமையா இருக்கிறோம் . . . இப்போ நாங்க என்ன செய்யனும்னு விரும்புறீங்க? உங்க விருப்பப்படியே செய்து எங்களோட நடவடிக்கைகளை விட்டுட நீங்க விரும்புறீங்களா?” அதற்குப் பிறகு அவர் வாயே திறக்கவில்லை.
அரசாங்க அலுவலகங்கள் சம்பந்தமான வேலைகளுக்கென்றே ஒரு வாரத்தில் இரண்டு நாட்களை முழுமையாக ஒதுக்கி வைத்தோம். அதோடு விசேஷ பயனியர்களாகவும் சேவை செய்தோம். அப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் 175 மணிநேரம் ஊழியம் செய்யணும். (பின்னர் 140 மணி நேரங்களாக மாற்றப்பட்டது), ஆகவே, இருட்டும் வரை நாங்கள் ஊழியம் செய்வோம். வெகு அருமையான நாட்கள் அவை. குடும்பம் குடும்பமாக அநேக நல்ல பைபிள் படிப்புகளை நடத்தினோம். அவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பித்தாங்க. பிள்ளைகள் வேண்டாமென நானும் என் மனைவியும் தீர்மானித்தோம். ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாய் சொல்லப்போனால் எங்களுக்கு பிள்ளைகள் மட்டுமல்ல, பேரப்பிள்ளைகளும் கொள்ளு பேரப்பிள்ளைகளும்கூட இருந்தாங்க. எங்கள் இதயத்தில் பொங்கிய மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தைகளே இல்லை!
1948-ல் மேலும் ஒரு நியமிப்பை பெற்றேன். கிலியட் பள்ளியின் பதிவாளரும் போதனையாளர்களில் ஒருவருமான சகோதரர் ஷ்ரோடர், மற்றொரு முக்கியமான வேலையில் ஈடுபட வேண்டியிருந்ததால் தேவைப்படும்போது கிலியட் வகுப்பாருக்கு போதிக்கும்படி சகோதரர் நார் என்னை கேட்டுக் கொண்டார். தொடை நடுக்கத்துடன் டிசம்பர் 18 அன்று ஆனுடன் நியூயார்க், தென் லான்சிங்கிலுள்ள கிலியட் பள்ளிக்குத் திரும்பினேன். முதலில் மாற்றுப் போதனையாளராக ஒருசில வாரங்களே கிலியட் பள்ளியில் இருந்தோம், அதற்கு பின் நாங்க மறுபடியும் வாஷிங்டனுக்கு வந்திடுவோம். ஆனால், முடிவில் நாங்க வாஷிங்டனில் செலவழித்ததைவிட கிலியட் பள்ளியில் அதிக நாட்களை செலவழித்தோம்.
முன்னால் சொன்னபடி, இந்த சமயத்தில்தான் நியூ யார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் வைத்து கிலியட் பள்ளியின் 21-வது வகுப்பினர் பட்டம் பெற்றார்கள். போதனையாளர்களில் ஒருவராக நானும் அந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்குபெறும் சிலாக்கியம் கிடைச்சது.
உலக தலைமை காரியாலயத்தில் சேவை
பிப்ரவரி 12, 1955-ல் மற்றொரு நியமிப்பை பெற்றோம். நாங்கள் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பான உலக தலைமை காரியாலயத்தின் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களானோம். ஆனால் அது எதை உட்படுத்தும்? அடிப்படையில், எந்த வேலையையும் செய்ய மனமுள்ளவர்களாக இருந்தோம். மற்றவர்களுடைய ஒத்துழைப்போடு செய்யவேண்டிய புராஜெக்ட் வேலைகளில் பங்குகொண்டோம். இப்படிப்பட்ட வேலைகளை இதற்கு முன்னாடி செய்திருந்தாலும், இப்போது ஒரு பெரிய குழுவின் அதாவது, தலைமை காரியாலய பெத்தேல் குடும்பத்தின் பாகமாக அதைச் செய்கிறோம். இந்த புதிய நியமிப்பை யெகோவாவின் வழிநடத்துதலுக்கு ஒரு அத்தாட்சியாக நாங்க சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டோம்.
என்னுடைய வேலையின் முக்கிய பாகம் செய்தி தொடர்பு சம்பந்தப்பட்ட காரியங்கள். சுவாரஸ்யமாக இருப்பதற்காக நல்லா கதைகட்டியும் தவறான ஊற்றுமூலத்திலிருந்து கிடைக்கும் தகவலை வைத்தும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி செய்தியாளர்கள் தாறுமாறாக எழுதினாங்க. அதை சரிசெய்ய அரும்பாடு பட்டோம்.
நாங்க அதிக சேவை செய்யும் வாய்ப்பை பெறும்படி சகோதரர் நார் பார்த்துக்கொண்டார். ஆகவே வேறு பல நியமிப்புகளும் எங்களுக்கு வந்தது. இந்த நியமிப்புகளில் சில, ஒரு கமர்ஷியல் ஆர்டிஸ்ட்டாக நான் என்னுடைய திறமைகளை இன்னும் மேம்படுத்துவதை தேவைப்படுத்தியது. மற்றவர்கள் சொஸைட்டியின் WBBR வானொலி நிலையத்தில் வேலை செய்தார்கள். சொஸைட்டியால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட வேலையும் இருந்தது. தேவராஜ்ய சரித்திரம் கிலியட் பள்ளியின் பாகமாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ யெகோவாவுடைய ஜனங்களில் பெரும்பாலோருக்கும் பொது மக்களுக்கும் நவீனகால தேவராஜ்ய அமைப்பின் சரித்திரம் மிகத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு புராஜெக்டுகளை மேற்கொண்டோம். கிலியட் பள்ளி பயிற்சியின் மற்றொரு அம்சம் பொதுப் பேச்சு. பொதுப் பேச்சுக்கு அடிப்படையானவற்றை சபையின் சகோதரர்கள் நன்றாக தெரிந்துகொள்வதற்காக உழைக்க வேண்டியிருந்தது. ஆகவே செய்வதற்கு அதிகம் இருந்தது.
கிலியட் பள்ளியில் நிரந்தர சேவை
1961-ல் பிரயாண கண்காணிகளுக்கும் கிளை அங்கத்தினர்களுக்கும் பயிற்சிகொடுக்கும் நோக்கத்துடன் கொஞ்ச நாட்களிலேயே கிலியட் பள்ளியானது உவாட்ச் டவர் சொஸைட்டியின் முக்கிய அலுவலகங்கள் முன்பு இருந்த இடமாகிய புரூக்ளினுக்கே மாற்றப்பட்டது. மறுபடியுமாக அதே பள்ளிக்குத் திரும்பினேன், மாற்றுப் போதனையாளராக அல்ல, ஆனால் நிரந்தர போதனையாளரானேன். என்னே ஒரு பாக்கியம்! கிலியட் பள்ளி யெகோவாவிடமிருந்து வந்த ஒரு பரிசு, யெகோவாவின் காணக்கூடிய முழு அமைப்புக்கும் நன்மையளித்த ஒரு பரிசு என்பதை உறுதியாக நம்பினேன்.
புரூக்ளினிலுள்ள கிலியட் பள்ளிகளில், இதற்கு முந்தின வகுப்புகளில் படித்த மாணவர்கள் தெரிந்திராத விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. அங்கு அநேக சிறப்பு சொற்பொழிவாளர்கள் இருந்தாங்க. அதோடு ஆளும் குழுவுடன் நெருங்கிய கூட்டுறவு இருந்தது. தலைமை காரியாலயத்தில் இருந்த பெத்தேல் குடும்பத்தாரோடு நன்கு பழகும் வாய்ப்பும் இருந்தது. மாணவர்கள் அலுவலக சம்பந்தமான முறைகளைப் பற்றியும் பெத்தேல் குடும்ப வேலைகளைப் பற்றியும் தொழிற்சாலை வேலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் பயிற்சி பெறுவதை இது சாத்தியமாக்கியது.
வருடங்கள் செல்லச் செல்ல மாணவர்களின் எண்ணிக்கையும், போதனையாளர்களின் எண்ணிக்கையும் மாறுபட்டது. பள்ளி நடக்கும் இடமும் அநேக சமயங்களில் மாற்றப்பட்டது. இப்போது நியூயார்க், பேட்டர்ஸனிலுள்ள ரம்மியமான ஒரு சூழலில் இந்தப் பள்ளி நடைபெற்று வருகிறது.
மாணவர்களுடன் தொடர்பு
இந்த வகுப்புகளில் பாடம் சொல்லிக் கொடுப்பது தானே எவ்வளவு சந்தோஷத்தை தந்தது! பழைய ஒழுங்குமுறைக்குரிய காரியங்களில் அக்கறை காண்பிக்காத இளைஞர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்தபந்தங்களையும் நண்பர்களையும் வீட்டையும் நாட்டையும் விட்டு வந்திருக்கிறார்கள். சீதோஷணநிலை, உணவு எல்லாமே அவர்களுக்கு வித்தியாசமாக இருக்க போகிறது. அவர்கள் எந்த நாட்டிற்கு போகப் போகிறார்கள் என்றுகூட தெரியாது. ஆனால் அவர்களுடைய இலக்கு மிஷனரிகளாக வேண்டுமென்பதே. இப்படிப்பட்டவர்களை நீங்கள் உந்துவிக்க வேண்டியதேயில்லை.
வகுப்பறைக்குச் செல்கையில் எப்போதுமே மாணவர்கள் ரிலாக்ஸாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாயிருந்தது. டென்ஸனாகவோ கவலையாகவோ இருக்கும் யாருமே நன்றாக கற்றுக்கொள்ள முடியாது. நான் போதனையாளராகத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மாணவனாக இருப்பதென்றால் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நானும் ஒருகாலத்தில் அதே இடத்தில் இருந்தவன்தானே! உண்மையிலேயே அவர்கள் கடினமாகப் படித்து கிலியட் பள்ளியில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் கிலியட் பள்ளியில் தங்கள் நேரத்தை மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்பினேன்.
அவர்கள் தங்கள் நியமிப்பில் வெற்றிபெற சில காரியங்கள் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு பலமான விசுவாசம் தேவைப்பட்டது, மனத்தாழ்மை தேவைப்பட்டது—சொல்லப்போனால் அதிகம் தேவைப்பட்டது. அவர்கள் மற்ற ஜனங்களோடு பழகி, அவர்களுடைய சூழ்நிலைகளை புரிந்துகொண்டு, தாராளமாக மன்னிக்க கற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. ஆவியின் கனிகளை அவர்கள் தொடர்ந்து அபிவிருத்தி செய்யவும் வேண்டியிருந்தது. ஜனங்களை நேசிக்கவும் அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்களோ அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்யவும் வேண்டியிருந்தது. இதெல்லாம் கிலியட் பள்ளியில் இருக்கையில் நான் அவர்களுக்கு அடிக்கடி வலியுறுத்திக் கூறிய விஷயங்கள்.
எத்தனை மாணவர்களுக்கு நான் உண்மையில் கற்பித்தேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் அவர்களைப் பற்றி நான் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்கு தெரியும். வகுப்பறையில் அவர்களுடன் ஐந்து மாதங்கள் செலவழித்தபின், அவர்களோடு ஒன்றிப்போய்விட்டேன். அதற்குப்பின், பட்டமளிப்பு நாளில் அவர்கள் தங்கள் டிப்ளமோக்களைப் பெற்று மேடையின் குறுக்கே நடந்து செல்வதை கவனிக்கையில், அவர்கள் கோர்ஸை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சீக்கிரத்தில் வெளியே செல்ல இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். இது என் குடும்பத்தின் ஒரு பகுதி பிரிந்து போவதைப் போலவே இருந்தது. இந்த இளம் மாணவர்களைப் போல, கடவுளுடைய சேவைக்காக தங்களையே மனப்பூர்வமாக அளிக்கும் ஜனங்களிடம் எப்படி நீங்க அன்பு காட்டாது இருக்க முடியும்?
அநேக வருடங்களுக்குப்பின், அவர்கள் திரும்ப சந்திக்க வந்தபோது தங்கள் சேவையில் அனுபவித்த சந்தோஷத்தை சொல்லக்கேட்டேன். மேலும் எதைச் செய்வதற்காக பயிற்சி பெற்றார்களோ அந்த நியமிப்பில் தொடர்ந்து சேவைசெய்து வருவதையும் அறிந்தேன். கேட்க கேட்க தேனாய் தித்தித்தது.
எதிர்காலத்தை நோக்கி
இப்போது என் கண் பார்வை மங்கிவிட்டது, இதனால் வரும் ஏமாற்றங்களை அனுபவிக்கிறேன். இனிமேலும் கிலியட் பள்ளியில் என்னால் கற்றுக்கொடுக்க இயலவில்லை. இதை ஜீரணிப்பது முதலில் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் என்னுடைய வாழ்க்கை முழுவதுமாக சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு வாழ கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி அப்போஸ்தலன் பவுலைப் பற்றியும், “மாம்சத்திலுள்ள முள்” என்று அவர் சொன்னதைப் பற்றியும் சிந்திக்கிறேன். அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பவுல் மூன்று முறை ஜெபம் செய்தார், ஆனால் கர்த்தர் அவரிடம் சொன்னார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” (2 கொரிந்தியர் 12:7-10) பவுல் அந்த பலவீனத்தோடே தொடர்ந்து வாழ்ந்தார். அவரால் முடிந்ததென்றால் நானும் முயற்சி செய்ய வேண்டும். இப்போது வகுப்புகள் நடத்துவதில்லையென்றாலும், ஒவ்வொரு நாளும் மாணவர்கள் வருகிறதும் போகிறதுமாயிருப்பதைக் காண்பதற்காக அதிக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். சில நேரங்களில் அவர்களோடு பேசுகையில் அவர்கள் காட்டும் நல்ல மனப்பான்மையை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குகிறது.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது ஆச்சரியமூட்டுவதாய் உள்ளது. அதற்கான அஸ்திவாரம் இப்பொழுதே போடப்பட்டுள்ளது. கிலியட் பள்ளி அதில் முக்கிய பங்கை வகித்துள்ளது. மகா உபத்திரவத்திற்குப்பின் வெளிப்படுத்துதல் 20:12-ல் குறிப்பிட்டுள்ள சுருள்கள் திறக்கப்படுகையில் ஆயிரம் வருடங்கள் யெகோவாவின் வழிகளில் கூடுதலாக கல்வி புகட்டப்படும். (ஏசாயா 11:9) அதோடு முடிவடைவதில்லை. அது உண்மையில் ஒரு துவக்கம் மட்டுமே. நித்திய காலமாக யெகோவாவைப் பற்றி கற்றுக் கொள்வதற்கும், படிப்படியாக அவருடைய நோக்கங்கள் வெளியிடப்படுகையில் அவற்றை செய்வதற்கும் அநேகம் இருக்கும். யெகோவா செய்திருக்கும் மகத்தான வாக்குத்தத்தங்களை அவர் நிறைவேற்றுவார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த சமயத்தில் நமக்கு கிடைக்கும் யெகோவாவின் வழிநடத்துதல்களை ஏற்றுக்கொள்ள நான் அங்கு இருக்க விரும்புகிறேன்.
[பக்கம் 26-ன் படம்]
1953-ல், நியூ யார்க் யாங்கி ஸ்டேடியத்தில் பட்டமளிப்பு விழா
[பக்கம் 26-ன் படம்]
ஜெட்ரூட், நான், கேத்ரின், ரஸல்
[பக்கம் 26-ன் படம்]
மாநாட்டை ஒழுங்கமைப்பதில் என். எச். நார் (இடதுபுறம் கடைசி), எம். ஜி. ஹென்ஷலுடன்
[பக்கம் 26-ன் படம்]
WBBR வானொலி நிலையத்தில்
[பக்கம் 29-ன் படம்]
கிலியட் வகுப்பறையில்
[பக்கம் 31-ன் படம்]
சமீபத்தில் ஆனுடன்