உலகளாவிய அறுவடைக்கு அதிகமான மிஷனரிகள்
செப்டம்பர் மாதம் விவசாயிகளுக்கு அறுவடை மாதமாகும். ஆனால், இதைக்காட்டிலும் அதிமுக்கியமான அறுவடை வேலை, 1991, செப்டம்பர் 8-ம் தேதி நியு யார்க் நகரிலிருந்து ஹட்சன் ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஜெர்சி நகர அசெம்பிளி மன்றத்துக்கு மாபெரும் கூட்டத்தைக் கவர்ந்திழுத்தது. காவற்கோபுரம் கிலியட் பைபிள் பள்ளியின் 91-வது வகுப்பு பட்டம் பெற்றுக்கொண்டிருந்தது. பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் அழைக்கப்பட்ட விருந்தினருமாக சுமார் 4,263 பேர் அங்கிருந்தனர். புரூக்ளின் தலைமைக் காரியாலயத்திலும் வால்கில் மற்றும் பேட்டர்ஸனிலுள்ள பண்ணைகளிலும் 1,151 பேர் தொலைப்பேசி கம்பியினால் இணைக்கப்பட்டிருந்தனர்.
ஏறக்குறைய 98 வயதினரான கிலியட் பள்ளித் தலைவர் ஃப்ரெட்ரிக் W. ஃப்ரான்ஸ் உருக்கமான ஆழ்ந்த பயபக்தியோடுகூடிய ஒரு ஜெபத்தோடு நிகழ்ச்சிநிரலை ஆரம்பித்தார். ஆளும் குழுவின் உறுப்பினரும், முன்னாள் பதிவாளரும், பள்ளிப் போதகருமான ஆல்பர்ட் D. ஷ்ராடர், பட்டமளிப்பு நிகழ்ச்சியின் அக்கிராசினராக இருந்தார். தேசங்களின் மத்தியில் ஏற்பட்டுவரும் இந்தக் கொந்தளிப்பையும் குழப்பத்தையும் முன்னுரைக்கும் சங்கீதம் 2:1, 2 இன்னும் மற்ற தீர்க்கதரிசனங்களையும் அவர் கேட்போர் கூட்டத்துக்கு நினைப்பூட்டினார். இந்த இணக்கமுறிவு நிலை, அறுவடை வேலைக்கு அநேக புதிய பிராந்தியங்கள் திறக்கப்படுவதை அர்த்தப்படுத்தியிருக்கிறது.
அந்த நாளின் முதல் பேச்சு, பெத்தேல் குழுவின் உறுப்பினர் ஜார்ஜ் M. கவுச் என்பவரால் வழங்கப்பட்டது. அவருடைய பொருள் “உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணிப்பாருங்கள்.” இந்தப் பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு இது ஒருபோதும் சீக்கிரமாக இல்லை என்பதை கிலியட் மாணவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். மாணவர்கள் தாமே நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஆனால் இந்த ஆசீர்வாதங்கள் மிகுதியான கடின உழைப்புக்குப் பின்னரே கிடைக்கப்பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அதேவிதமாகவே, 97 வயதினனான யாக்கோபு—இரவு முழுவதுமாக ஒரு தேவதூதனோடே போராடினார்—ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. (ஆதியாகமம் 32:24–32) சகோதரர் கவுச், எதிர்மறையான எண்ணங்களில் கருத்தூன்றியிராமல், ஆனால் ஜெபத்தின் மூலமும் மன உறுதியின் மூலமும் மன சமாதானத்தை வளர்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கும்படி மாணவர்களை துரிதப்படுத்தினார்.
ஆளும் குழுவிலுள்ள ஜான் E. பார், அடுத்து, “ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள்” என்ற பொருளின் பேரில் பேசினார். இயேசுவை பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்காக ஒருவர் மரிக்க மனமுள்ளவர்களாயிருந்தனர். “இத்தகைய ஓர் அன்பு உங்கள் இருதயங்களில் பொங்கிவழிவதை நீங்கள் உணருகிறீர்களா?” என்பதாக அவர் மாணவர்களைக் கேட்டார். ‘இந்த அன்பில்லாவிடில் நாம் ஒன்றுமே இல்லை. இதுவே இந்தக் காரியத்தின் அடிப்படை உண்மையாகும்.’ (1 கொரிந்தியர் 13:3) சகோதரர் பார் அன்பு காண்பிக்க ஒரு சில நடைமுறையான வழிகளை வரிசைப்படுத்திக் காண்பித்தார். உடன் மிஷனரிகளை மரியாதையோடு நடத்தி, காரியங்களைச் சொல்வதற்கு சாதுரியமான வழியை எப்போதும் நாடிக்கொண்டிருக்கும்படியாக அவர் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 1 பேதுரு 4:8-ஐ மேற்கோள் காண்பித்து அற்பமான கருத்துவேறுபாடுகளை மறந்துவிடும்படியாக அவர் அவர்களுக்கு ஆலோசனை கூறினார். மிஷனரிமார்கள் உணவு தயாரிக்கும் நாட்களிலும்கூட அவை அவர்களுக்கு அன்பு காண்பிப்பதற்கு சந்தர்ப்பங்களாகும். அந்த வேலையை வெறுமென ஒரு கடமைக்காக செய்யாதிருப்பதன் மூலம் அது அவர்களுக்கு அவ்விதமாக இருக்கும் என்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மாணவர்களுக்கு நினைப்பூட்டியதாவது: நம்முடைய சகோதர சகோதரிகளிடம் அன்பில் கடன்பட்டிருப்பது ஒருபோதும் நின்றுவிடுவதில்லை.”—ரோமர் 13:8.
“நீங்கள் எவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?” என்பது ஊழிய இலாக்கா குழுவிலுள்ள டேவிட் A. ஓல்சன் தயாரித்தளித்த அக்கறையூட்டும் பொருளாகும். இரண்டு பகுதிகளில் நம்பிக்கையை அவர் உயர்த்திக் காண்பித்தார்: நமக்கிருக்கும் எண்ணிலடங்கா காரணங்களினிமித்தமாக யெகோவாவிலும் அவருடைய அமைப்பிலும் (நீதிமொழிகள் 14:6; எரேமியா 17:8); மற்றும் நம்மிலும். மிஷனரிமார்கள் ஊழியர்களாக அவர்களுடைய பின்னணியினாலும் யெகோவாவும் அவருடைய அமைப்பும் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவும் ஓரளவு தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணமிருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் இதுபோன்ற காரணங்களுக்காக இப்படிப்பட்ட தன்னம்பிக்கையை காண்பித்தார். (1 கொரிந்தியர் 16:13; பிலிப்பியர் 4:13) ஆனால், “நான் என்னையே மேற்கோள் காண்பிக்கிறேன், அது என் சம்பாஷணைக்கு உயிர்ச்சுவையூட்டுகிறது,” என்பதாக சொன்ன ஒரு பிரபல எழுத்தாளரின் விஷயத்தில் காண்கிறபடி உலகம் ஊக்குவிக்கும் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கைக்கு எதிராக சகோதரர் ஓல்சன் எச்சரிப்பு செய்தார். என்றபோதிலும் மனத்தாழ்மையோடு சமநிலைப்படுத்தப்பட்ட தன்னம்பிக்கை, மற்றவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடும். இது பவுலின் விஷயத்தில் நிச்சயமாகவே உண்மையாக இருந்தது.—பிலிப்பியர் 1:12–14.
ஆளும் குழுவிலுள்ள லைமேன் A. ஸ்விங்கிள் அடுத்து, மாணவர்களை இவ்வாறு துரிதப்படுத்தினார்: “கிலியட் பட்டதாரிகளே, அறுவடைக்காக களத்துக்கு!” இது கிலியட் பள்ளிக்கும் உலகளாவிய சகோதரத்துவத்துக்கும் அறுவடை நாளாகும். ஏனென்றால் பட்டதாரிகள் புறப்பட்டுச் சென்று, 1840-களில் நடந்த முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்புகளிலும் பயின்று இன்னும் மிஷனரி வேலையில் இருந்துவரும் முந்திய பட்டதாரிகளோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதாக அவர் சொன்னார். அந்தச் சமயத்தில் மிஷனரி வேலை இன்னும் 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெறும் என்பதோ அல்லது பிரசங்க வேலைக்கு தடையாக இருந்த நாசிஸம், பாசிஸம் இன்னும் மற்ற அரசாங்க தடைகள், நொறுங்கிவிடும் என்பதோ எவருக்கும் தெரியாது. “யெகோவா கடந்த காலங்களில் செய்திருப்பவற்றைக் குறித்து நீங்கள் ஆச்சரியமடைந்திருந்தால், எதிர்காலத்தைப் பற்றியதென்ன?” என்று அவர் கேட்டார். அவர் மாணவர்களுக்கு கிளர்ச்சியூட்டும் ஒரு அழைப்போடு முடித்தார்: “களத்துக்கு!”
பின்பு, கிலியட் பள்ளியின் இரண்டு முக்கிய போதகர்கள், 91-வது வகுப்புக்கு கடைசி முறையாக உரையாற்றினர். ஜேக் D. ரெட்போர்ட், “ஞானத்தை முயன்றுப் பெறுங்கள்” என்ற பொருளின் பேரில் பேசினார். கிலியட் பள்ளி அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் கற்பிக்கிறது, ஆனால் சரியான விதத்தில் தங்கள் அறிவை பயன்படுத்தும் திறமையாக இருக்கும் ஞானத்தை அவர்கள் முயன்று பெற வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் சொன்னார். அறிந்து கொள்வதற்கு இருக்கும் அனைத்தையும் அவர்கள் கிலியட் பள்ளியில் கற்றுக்கொண்டார்கள் என்ற கட்டுக்கதையை தள்ளிவிடுமாறு மாணவர்களை அவர் துரிதப்படுத்தினார்: “பள்ளிக்குப் பின் நீங்கள் கற்றுக்கொள்வதே முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள்: “மற்றவர்களோடு சமாதானத்தோடு செயல்தொடர்பு கொள்ளுதல், துணைவரிடம், உடன் மிஷனரிமார்களிடம், உள்ளூரிலுள்ள சகோதர சகோதரிகளிடம் ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லக்கூடியவராக இருப்பது, முதல் அபிப்பிராயங்களை நம்புவது குறித்து எச்சரிக்கையாயிருப்பது, ஞானமான புத்திமதியைக் கொடுப்பதற்கு முன்பாக ஒவ்வொரு பிரச்னையும் சூழ்நிலைமைகளைப் பற்றிய ஆழமான புரிந்து கொள்ளுதலை தேவைப்படுத்தும் சிக்கலான ஒன்று என்பதை உணருவது; கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதில் அவர்களுடைய திறமைக்காக உள்ளூரிலுள்ள சகோதரர்களுக்கு மதிப்பு காட்டுவது.—நீதிமொழிகள் 15:28; 16:23; யாக்கோபு 1:19.
யூலிசீஸ் V. கிளாஸ், கிலியட் பள்ளி பதிவாளர் பிலிப்பியர் 3:16-ஐ தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டிருந்தார். அவர் அவர்கள் செய்த முன்னேற்றத்துக்காக வகுப்பை பாராட்டி, அந்த வசனத்துக்கு இணக்கமாக தொடர்ந்திருக்கும்படியாக அவர்களுக்கு அறிவுரை கூறினார். மாணவர்கள் தொடர்ந்து திருத்தமான அறிவை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இருந்தபோதிலும் எல்லாவற்றையும் அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள் என்பதாக அவர் குறிப்பிட்டார். ஒரு டிஜிட்டல் கைக்கடிகாரத்தைக் கொண்டு குறிப்பை விளக்கினார். அதனுடைய சொந்தக்காரர் அது எவ்வாறு உண்மையில் வேலை செய்கிறது என்பதை அறியாமலே, அதை அவர் வேலை செய்ய வைக்க அறிவார். அதேவிதமாகவே அறிவின் ஆழத்தில் தங்களுக்கு நிகராக இல்லாதிருப்பினும் முக்கியமானதை—யெகோவாவுக்கு எவ்வாறு பயப்படுவது என்பதை அறிந்திருப்பவர்களை மிஷனரிமார்கள் தாழ்வாகக் கருதக்கூடாது. (நீதிமொழிகள் 1:7) ‘கண்ணைத் தெளிவாக’ வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வகுப்புக்கு நினைப்பூட்டினார். (மத்தேயு 6:22) மாம்சக் கண் இடையூறுக்குள்ளாக முடிவது போலவே ஆவிக்குரிய கண்ணும் ஆகக்கூடும். உதாரணமாக சிலர் முழு விவகாரத்தையும் பார்க்க முடியாதபடி ஒரு சில விவரங்களின் பேரில் அதிகமாக கருத்தூன்றியவர்களாக இருக்கின்றனர்—மற்றவர்கள் எதிர்மாறாக மேலீடாக மாத்திரமே கவனித்து, அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயங்களிலிருந்து ஓயாது திசைதிருப்பப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
காலை நேர கடைசி பேச்சை “யெகோவாவின் அமைப்பை அடையாளங்கண்டுகொள்வதும் அதனோடு சேர்ந்து வேலைசெய்வதும்” என்ற தலைப்பின் கீழ் அளித்தவர் ஆளும் குழுவிலுள்ள தியோடர் ஜெரஸ் ஆவார். சகோதரர் ஜெரஸ், உலகில் ஆயிரக்கணக்கான அமைப்புகளும் சங்கங்களும் இருக்கையில், இவை எல்லாவற்றிலும் ஒன்று மாத்திரமே உலகத்தினால் உண்டானது அல்ல என்று குறிப்பிட்டார். யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பை எவ்வாறு அடையாளங் கண்டுகொள்வது? கடவுளுடைய வார்த்தை அடையாள குறிகளை அளிக்கிறது. பரலோக சிருஷ்டி வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதை பைபிள் காண்பிக்கிறது. (சங்கீதம் 103:20, 21; ஏசாயா 40:26) யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பையும்கூட அதன் ஒழுங்கு, உலகிலிருந்து பிரிந்திருத்தல், பைபிள் நியமங்களை கண்டிப்புடன் கடைபிடித்தல், உயர் தரமான ஒழுக்கச் சுத்தம் மற்றும் அதன் உறுப்பினர் மத்தியில் காணப்படும் அன்பு ஆகியவற்றால் அடையாளங் கண்டுகொள்ள முடியும். சகோதரர் ஜெரஸ் கிலியட் மாணவர்களை அவர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட பகுதியில் யெகோவாவின் அமைப்பை வேதப்பூர்வமாக அடையாளங் கண்டுகொள்ள எத்தனைப் பேருக்கு உதவ முடியுமோ அத்தனைப் பேருக்கு உதவுமாறு துரிதப்படுத்தினார். இதன் சம்பந்தமாக அவர் கிளர்ச்சியூட்டும் ஓர் அறிவிப்பை செய்தார்: கிலியட் பள்ளி சீக்கிரத்தில் அளவில் இருமடங்காகப் போகிறது, 93-வது வகுப்பில் 50 பேர் இருப்பார்கள்! மேலுமாக ஜெர்மனியில் கிலியட் விரிவாக்கப் பள்ளி வகுப்புகள் ஏறக்குறைய அதே சமயத்தில் துவங்கும். கைத்தட்டல் நீண்ட நேரமும் சப்தமாகவும் இருந்தது!
காலை நேரத்தின் உச்சக்கட்டமாக எல்லா 24 கிலியட் மாணவர்களும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்கள். விரைவில் அவர்கள் உலகம் முழுவதிலும் 12 வித்தியாசமான தேசங்களுக்குச் செல்லும் வழியில் இருப்பர். அவர்கள் ஆளும் குழுவுக்கும் பெத்தேல் குடும்பத்துக்கும் நன்றி தெரிவித்து இருதயப்பூர்வமான ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தனர். மதிய உணவுக்குப் பின், காவற்கோபுர பண்ணைக் குழுவிலுள்ள சகோதரர் சார்லஸ் J. ரைஸ், காவற்கோபுரம் சுருக்கத்தை நடத்தினார். பின்னர் பட்டதாரிகள் சுவையான ஒரு நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நியு யார்க், வால்கிலில் தங்களுடைய ஐந்து மாத கால பயிற்சியின் போது வெளி ஊழியத்தில் அவர்களுக்கிருந்த சில அனுபவங்களை அவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர். அதற்குப் பிற்பாடு, பல்வேறு உள்ளூர் சபைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பிரஸ்தாபிகள், தங்கள் சிருஷ்டிகரைத் தற்போது நினைக்கும் வாலிபர்கள் என்ற தலைப்புடைய ஒரு நாடகத்தை அளித்தனர்.
நிகழ்ச்சிநிரலின் முடிவாக, ஆளும் குழுவிலுள்ள 95 வயது சகோதரர் ஜார்ஜ் கேங்கஸ், யெகோவாவுக்கு விசேஷமாக ஊக்கமான ஜெபத்தை ஏறெடுத்தார். சந்தேகமின்றி உலகளாவிய அறுவடை வேலையில் எக்காலத்தையும்விட அதிகமான பங்கைக் கொண்டிருக்க தூண்டப்பட்டவர்களாக கேட்போர் கூட்டம் உற்சாகமாக அவ்விடத்தைவிட்டு புறப்பட்டுச் சென்றது.
(w91 12/1)
[பக்கம் 22-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரம்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 6
நியமிக்கப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 12
மாணவர்களின் எண்ணிக்கை: 24
விவாகமான தம்பதிகளின் எண்ணிக்கை: 12
சராசரி வயது: 33.4
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 16.13
முழு–நேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 11.3
[பக்கம் 23-ன் படம்]
உவாட்ச் டவர் கிலியட் பள்ளியின் பட்டம் பெறும் 91-வது வகுப்பு
பின்வரும் பட்டியலில் வரிசைகள் முன்னிருந்து பின்னும் பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமாகவும் உள்ளன.
(1) மெக்டோவல், A. ; என்குவிஸ்ட், L.; ஸ்கோக்கன், B.; வார்னீயே, N.; மில்லர், Y.; முனியோஸ், M. (2) பேல்ஸ், M.; பேரேஸ், D.; அட்டிக், E.; வைனிகைனன், A.; மோஸ்ட்பெர்க், K. (3) டெப்ரீஸ்ட், D.; டெப்ரீஸ்ட், T.; பேரேஸ், R.; வார்னீயே, J.; முனியோஸ், J.; மில்லர், J. (4) மெக்டோவல், S.; பேல்ஸ், D.; ஸ்கோக்கன், M.; அட்டிக், C.; என்குவிஸ்ட், W.; வைனிகைனன், J.; மோஸ்ட்பெர்க், S.