கிலியட் பயிற்சி மகா பரிசுத்தமான விசுவாசத்தின்பேரில்
“நம் மாணாக்கர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.” இவை உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 95-ம் வகுப்புடைய பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரலில் கூறப்பட்ட ஆரம்ப வார்த்தைகளாகும். இது ஞாயிறு, செப்டம்பர் 12, 1993 அன்று நடத்தப்பட்டது. அந்நாள் காலை ஜெர்சி சிட்டி அசெம்பிளி ஹாலில், அழைக்கப்பட்ட 4,614 விருந்தாளிகளும் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் கூடிவந்திருந்தனர். ஜார்ஜ் கேங்கஸ் என்பவர் ஆரம்ப ஜெபத்தைச் செய்தார். சகோதரர் கேங்கஸ் 65 ஆண்டுகளாகப் பெத்தேல் குடும்ப அங்கத்தினராகவும், 97 வயதுள்ளவராக, நிர்வாகக் குழுவில் மூத்த அங்கத்தினராகவும் இருக்கிறார்.
ஆல்பர்ட் ஷ்ரோடர் என்பவரும் நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவராவார். நிகழ்ச்சிநிரலின் அக்கிராசனராக அவர் சொன்னார்: “ஐந்து மாதங்களுக்கு இந்தக் கிலியட் பயிற்சி மகா பரிசுத்தமான விசுவாசத்தின்பேரில் சார்ந்திருந்தது.” ஆனால் “மகா பரிசுத்தமான விசுவாசம்” என்றால் என்ன? யூதா 20-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த “மகா பரிசுத்தமான விசுவாசம்” பைபிள் சத்தியத்தின் முழு வரிசைத்தொடராக இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆகவே, கிலியட் படிப்பு யெகோவாவின் வார்த்தையாயிருக்கிற பைபிளைச் சார்ந்ததாயிருக்கிறது. இதுவே அதன் பிரதான பாடபுத்தகமாக இருக்கிறது.
அநேக அறிவுரைகளை மாணாக்கர் பெறுகின்றனர்
முதல் பேச்சாளர், உவாட்ச்டவர் பண்ணை ஆலோசனை குழுவைச் சேர்ந்த ஜான் ஸ்டூஃபுலோட்டன் என்பவர் ஆவார். இவர் “ஞானமான ஆட்களின் செல்வாக்கிலிருந்து பயனடைதல்” என்ற தலைப்பின்பேரில் பேசினார். ‘ஞானிகளோடே சஞ்சரிக்கிறவர்கள் ஞானமடைவார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) கிலியட் பயிற்சியின்போது, மாணாக்கர் 900 மணிநேரங்களுக்கும் மேலாக பைபிளைப் படிக்கச் செலவிட்டனர். சகோதரர் ஸ்டூஃபுலோட்டன் மாணாக்கரைக் கேட்டார்: “எதிர்காலத்தில் யெகோவாவின் செல்வாக்கு உங்களை எப்படிப் பாதிக்கும்?” கூட்டுமொத்தமாக சுமார் 17 கோடி மக்களடங்கிய 18 நாடுகளுக்கு நீங்கள் செல்கிறீர்கள். அப்போது, அந்த மக்களை நீங்கள் எப்படிச் செல்வாக்குச் செலுத்துவீர்கள்?” யெகோவாவின் ஞானத்தைப் பிரதிபலிப்பதன் மூலம், புதிய மிஷனரிகள் அளவிலா ஞானத்தின் ஊற்றுமூலராயிருக்கிற யெகோவாவின் வணக்கத்தாராவதற்கு மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அடுத்து, “எல்லாருக்கும் எல்லாமாவது” என்ற தலைப்பின்பேரில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த லாயட் பேரி விவரமாகப் பேசினார். (1 கொரிந்தியர் 9:22, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பாக, 11-ம் கிலியட் வகுப்பில் சகோதரர் பேரி-தானே ஒரு மாணாக்கனாக இருந்தார். இப்போது இந்த 95-ம் வகுப்பு, அயல் நாட்டில் அநேக ஆண்டுகளாகச் சேவைசெய்த, அனுபவம்வாய்ந்த முந்தைய மிஷனரியிடமிருந்து நடைமுறையான ஆலோசனை பெறுவதை மதித்துப் போற்றியது. உள்ளூர் பண்பாட்டைத் தெரிந்துகொண்டு அங்குப் பேசப்படும் பாஷையைக் கற்றுக்கொள்வதன் மூலம், விரைவில் புதிய அயல் நாட்டுப் பிராந்தியத்திலுள்ள உள்ளூர் மக்களில் ஒருவராகுங்கள் என்று மாணாக்கரை அவர் உற்சாகப்படுத்தினார். உள்ளூர் மக்களோடு சேர்ந்து பழகி, வேலைசெய்து, அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டு தகுந்த இடங்களில் அவற்றை அனுசரிப்பதன் மூலம் இதை நன்றாகச் செய்யலாம்.
அடுத்து, தொழிற்சாலை ஆலோசனை குழுவைச் சேர்ந்த டீன் சாஙர் “கடமையிலிருந்து விடுபட்டவர்கள்” என்ற ஆவலைத் தூண்டும் தலைப்பின்பேரில் பேசினார். முழு நேர ஊழியத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவித்தப் பிறகு, சகோதரர் சாஙர் ஒருமுகப்பட்ட, எளிமையான வாழ்க்கை வாழ்வதும், உலகப்பிரகாரமான கவலைகளிலிருந்து விடுபட்டு, செய்யவேண்டிய வேலையில் கவனத்தை ஊன்றவைத்து வாழ்வதும் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அறிந்திருக்கிறார். அதுவே அவர் மாணாக்கருக்குக் கொடுத்த ஆலோசனையின் சாராம்சமாகும். யெகோவாவின் ஆலயத்தில் இருந்த சங்கீதக்காரர், தங்களுக்குரிய விசேஷ வேலையில் முழுமையாகத் தங்களை ஒப்புக்கொடுப்பதற்காக, பொதுவாக மற்ற லேவியர்களுக்குள்ள கடமைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருந்தனர். (1 நாளாகமம் 9:33) அதேவிதமாக, கிலியட் மிஷனரிகள் தங்களுடைய விசேஷ சேவையில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு, உலகப்பிரகாரமான வேலை போன்ற சர்வசாதாரண காரியங்களிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கின்றனர். சகோதரர் சாஙர் இந்த ஆலோசனையோடு தன் பேச்சை முடித்தார்: “உங்கள் நோக்குநிலையை ஒருமுகப்படுத்திவைத்து, எளிமையான வாழ்க்கையை நடத்துங்கள். கடமையிலிருந்து விடுபட்டவர்களாக, உங்களுடைய பொறுப்பு, வேலையில் இரவும் பகலும் இருந்து, யெகோவாவைத் துதிப்பதாகும்.”
அடுத்து, “வாழ்க்கையிலிருந்து மிகச் சிறந்ததை எப்படிப் பெறுவதென்று மற்றவர்களுக்குப் போதிப்பது” என்ற தலைப்பின்பேரில் நிர்வாகக் குழு அங்கத்தினராயிருக்கிற டேனியல் சிட்லிக் பேசினார். “கொள்கையைப் போதிப்பதோடு மட்டுமல்லாமல், கடவுளுடைய சித்தத்துக்கிணங்க தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டுவருவதற்கு மக்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் காட்ட போதிய தைரியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்” என்று அவர் மாணாக்கரை உற்சாகப்படுத்தினார். நல்ல போதகர்கள் ஊக்கமூட்டி, தூண்டுதல் அளிக்கவேண்டும். “வெறுமனே சட்டதிட்டங்களை போதிப்பதற்குப் பதிலாக கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கட்டுவதற்கு உணர்வுள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்லிய பிறகு, அவர் முடிவாகக் கூறினார்: “எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பான சகோதரர்களே, எப்படி அன்புகூருவது என்று உங்களுக்குத்தாமே போதித்துக்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் போதியுங்கள். ஏனென்றால், அது பூரண சற்குணத்தின் கட்டாகும்.”—1 கொரிந்தியர் 13:1-3; கொலோசெயர் 3:14.
பலமாத பயிற்சிக்குப் பிறகு, மாணாக்கருக்கு விசேஷமாக இரண்டு கிலியட் போதகர்கள்மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. முதலில், “நீங்கள் சரியான தெரிவைச் செய்திருக்கிறீர்கள்” என்ற பொருளின்பேரில் முன்பு மிஷனரியாக இருந்த ஜேக் ரெட்ஃபர்டு என்பவர் பேசினார். பூர்வ யூத சமுதாயத்தில், கிறிஸ்தவ அப்போஸ்தலனாக ஆவதற்கு முன்பு, பவுலுக்கு அந்தஸ்து, கெளரவம், செல்வாக்கு, நிதி பாதுகாப்பும் இருந்தது. ஆனால் பிலிப்பியர் 3:8-ல், இதையெல்லாம் பவுல் “நஷ்டம்” அல்லது பிலிப்ஸ் மொழிபெயர்ப்பின் பிரகாரம் “குப்பை”யாக விவரித்தார். அவருடைய இருதயம் ஊழியத்தில் மூழ்கியிருந்தது, அவர் சரியான தெரிவைச் செய்தார். மாறாக, இன்று மனிதவர்க்கத்தில் பெரும்பான்மையர், வாழ்க்கையில் செய்யும் தங்கள் தெரிவுகளிலிருந்து நித்திய ஜீவனைவிட தங்கள் பொருளாதார உடைமைகளைப் பெருமதிப்பு வாய்ந்தவையெனக் கருதுவதாகக் காட்டுகின்றனர். கிலியட் மிஷனரிகள் சரியான தெரிவைச் செய்திருக்கின்றனர். ஜேக் ரெட்ஃபர்டு இவ்வாறு சொல்லி முடித்தார்: “சாத்தானுடைய உலகம் மிஷனரி சேவைக்கு நிகரான எதையுமே உங்களுக்கு அளிக்க முடியாது. அந்த விலைமதியா சிலாக்கியத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள், உலகம் அதன் குப்பையைப் பார்த்துக்கொள்ளும்!”
கடந்த 32 ஆண்டுகளாக, யுலீசிஸ் கிளாஸ் என்பவர் கிலியட் போதகராக இருந்துவந்திருக்கிறார். “கடவுளாலேயே ஒரு மரத்தை உண்டுபண்ண முடியும்” என்ற தலைப்பின்பேரில் அவர் சில பிரியாவிடை ஆலோசனைகளை மாணாக்கருக்குக் கொடுத்தார். அவருடைய பேச்சு சங்கீதம் 1:3-ஐ சார்ந்ததாயிருந்தது. கடவுளால் படைக்கப்பட்ட மரத்தை உண்டுபண்ணுவதில் நவீன தொழில்நுட்பத்தால் ஒருக்காலும் போட்டியிட முடியவில்லை. ஒருவிதத்தில், உண்மை கிறிஸ்தவர்கள் மரங்களைப் போல் இருக்கிறார்கள். யெகோவா அவற்றை நட்டு, நீர்ப்பாய்ச்சியிருக்கிறார். ஐந்து மாதங்களாக, மாணாக்கர் ஆவிக்குரிய தோப்பில் அல்லது பரதீஸிலிருக்கும் மரங்களைப் போல, “கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஜீவனை அளிக்கும் தண்ணீர்களின் ஊற்றிலிருந்து ஒழுங்காக நீர்ப்பாய்ச்சப்பட்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார். ஆனாலும், மிஷனரிகளாக, தங்களுடைய “ஆவிக்குரிய வேர் மண்டலத்தை எந்தச் சேதமுமடையாதபடி” காத்துக்கொள்ளவேண்டும். ‘கடவுள் மாத்திரமே மரத்தை உண்டுபண்ண முடியுமாதலால், தொடர்ந்து யெகோவாவிடமிருந்து வரும் ஜீவத் தண்ணீரை வாஞ்சையோடே பெறும்படியாக’ அவர்கள் ஆலோசனை கூறப்பட்டனர்.
கடைசி பேச்சை நிர்வாகக் குழு அங்கத்தினரான கேரி பார்பர் கொடுத்தார். முழு நேர ஊழியத்தில் 70 ஆண்டுகள் இருந்தபிறகு, “யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்துங்கள்” என்ற பொருளின்பேரில் சகோதரர் பார்பரால் தன்னம்பிக்கையோடே பேச முடிந்தது. மனிதவர்க்கத்தில் உள்ள பெருந்திரளான மக்கள் யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்தியதில்லை. (உபாகமம் 5:9, NW) ஆனால், சகோதரர் பார்பர் எடுத்துக்காட்டின பிரகாரம், நம்முடைய அபூரணத்தின் மத்தியிலும் “கடவுளுக்கு முழுமையாகப் பக்தியுள்ளவர்களாயிருப்பது மிகவும் கூடிய காரியமே.” மேலும் அவர் சொன்னார்: “பிசாசானவன் என்னை அதைச் செய்யும்படி வைத்தான் என்று ஒருவராலும் உண்மையில் சொல்ல முடியாது.” ஆனால் நாம் அவனை எதிர்க்கவில்லையென்றால், பிசாசு நம்மை தோல்வியடையச் செய்வான். (யாக்கோபு 4:7) சாத்தானையும் அவனுடைய உலகையும் எதிர்த்து, யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்துவதற்கு, யெகோவாவுடைய வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதே முக்கிய வழியாக இருக்கிறது.
மிஷனரிகளாக நியமிக்கப்பட்டனர்
காலை நிகழ்ச்சிநிரல், வந்திருந்த எல்லா 46 மாணாக்கரும் அதிகாரப்பூர்வமாக மிஷனரிகளாக நியமிக்கப்படுவதோடு முடிவடைந்தது. 23 தம்பதிகளும் பட்டம் பெற்றனர். பட்டதாரிகள் “கல்விபுகட்டும் வேலையில் ஈடுபட விசேஷத் தகுதிபெற்று, நல்லெண்ணத்தை ஊக்குவித்து, சகல மக்கள் மத்தியிலும் நிரந்தர சமாதானத்திற்காகவும் பூரண ஒழுங்கு மற்றும் நீதியாகிய சட்டத்தின் சார்பாகவும் உழைப்பவர்கள்” என்று அது பகுதியாகச் சொன்னது. இந்த 95-ம் கிலியட் வகுப்பு, தாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிற 18 நாடுகளில் இந்த மேம்பட்ட வேலையை நிறைவேற்ற நிச்சயமாக முயற்சி செய்யும். உலகமுழுவதிலும் அவர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிப்புகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் ஆகியவற்றில் உள்ள நாடுகளை உட்படுத்தின.
பிற்பகல், ஊழிய இலாக்கா குழுவைச் சேர்ந்த சார்ல்ஸ் உடி என்பவர் சுருக்கமாக காவற்கோபுர படிப்பை நடத்திய பிறகு, இந்தப் புதிய கிலியட் பட்டதாரிகள், “மிஷனரிகளாக, போதிப்பதற்கு கிலியட் எங்களைத் தயாரித்திருக்கிறது” என்ற தலைப்பைக்கொண்ட தங்களுடைய மாணாக்கர் நிகழ்ச்சிநிரலைக் கொடுத்தனர். “எங்களுக்கு முன்பாக உள்ள தெரிவுகள்” என்ற நாடகத்தோடு நிகழ்ச்சிநிரல் முடிவுக்கு வந்தது.
இந்த ஊக்கமூட்டும் நிகழ்ச்சிநிரலுக்குப் பிறகு, “மகா பரிசுத்தமான விசுவாசத்”தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள இந்தப் புதிய மிஷனரிகள் பூமியின் நான்கு கோடிகளுக்கும் அனுப்பப்பட இப்போது தயார்நிலையில் இருந்தனர்.
[பக்கம் 26-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவஞ்செய்த நாடுகளின் எண்ணிக்கை: 7
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 18
மாணாக்கரின் எண்ணிக்கை: 46
மணமான தம்பதிகளின் எண்ணிக்கை: 23
சராசரி வயது: 30.06
சத்தியத்தில் உள்ள சராசரி ஆண்டுகள்: 12.92
முழு நேர ஊழியத்தில் உள்ள சராசரி ஆண்டுகள்: 9.4
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 95-ம் பட்டம்பெறும் வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசைகள் முன்னிருந்து பின்னோக்கியும், ஒவ்வொரு வரிசையிலும் பெயர்கள் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) பியூலோ, D.; டான்ஸே, V.; இனஸ், S.; ஃபல்க், N.; பிலிங்ஸ்பி, M.; ஹாட்நாட், L.; நியூக்ரேன், B.; ஏரிக்சான், L. (2) போகர், J; தாமஸ், M.; ஸ்டெட்மன், S.; பிலிங்ஸ்பி D.; உவா, I.; பர்விஸ், M.; லட்ரெல், M. (3) யாகாப்சன், T.; போகர், J.; மார்டீனெஸ், L.; நீல்சான், E.; பர்விஸ், P.; ஹோல்ட், L.; லார்சன், M.; ஜோன்ஸ், L. (4) நியூமீனென், P.; நியூமீனென், H.; பியூலோ, M.; ஓல்சன், W.; ஹோல்ட், S.; டான்ஸே, G.; தேஷாதா, C.; தேஷாதா, D. (5) லார்சன், K.; மார்டீனெஸ், D.; நியூக்ரேன், P.; உவா, P.; ஜோன்ஸ், D.; ஹாட்நாட், J.; தாமஸ், G. (6) இனஸ், B.; ஃபல்க், R.; ஏரிக்சான், A.; நீல்சான், S.; ஸ்டெட்மன், J.; ஓல்சன், K.; யாகாப்சன், F.; லட்ரெல், J.