உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 12/1 பக். 28-31
  • ‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளின் முன்மாதிரி
  • பரிசுகள் கொடுப்பதற்கான உள்நோக்கங்கள்
  • கொடுப்பதற்கான வழிகள்
  • ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • “பணம் எங்கேயிருந்து வருகிறது?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • ‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 12/1 பக். 28-31

‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்

“ஒரு முறை ரிஃபார்ம்டு சர்ச்சைச் சேர்ந்த ஓர் ஊழியர் என்னை அழைத்தார். என்னுடைய சர்ச்சை எவ்வாறு நடத்துகிறேன் என்பதைக் குறித்து அவர் தெரிந்துகொள்ள விரும்பினார். அவரிடம், . . . ‘நாங்கள் சம்பளம் கொடுப்பதில்லை; ஆட்கள் சண்டைபோடுவதற்கு எதுவுமில்லை. நாங்கள் காணிக்கை வசூலிப்பு செய்வது கிடையாது’ என நான் சொன்னேன். ‘உங்களுக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது?’ எனக் கேட்டார். அவரிடம், ‘டாக்டரே——, நான் உங்களிடம் இப்போது எளிமையான உண்மையைச் சொன்னால், உங்களால் நம்பவே முடியாது. மக்கள் இந்த மதத்தில் ஆர்வங்கொண்டால், திருக்கோயில் காணிக்கைத் தட்டை அவர்கள் பார்க்கமாட்டார்கள். மாறாக, செலவுகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள், “இந்த மன்றத்திற்கு ஏதோ செலவாயிருக்கும். . . . இதற்கு நான் எப்படிக் கொஞ்ச நன்கொடையை அளிக்க முடியும்?” என்று சொல்லிக்கொள்வார்கள்.’ அவர் ‘நான் விஷயம் தெரியாதவன் என்று நினைக்கிறாயா?’ என்று யோசிப்பதுபோல என்னைப் பார்த்தார். “நான் சொன்னேன், ‘இப்பொழுது டாக்டரே——, நான் உங்களிடம் தெள்ளத்தெளிவான உண்மையை சொல்கிறேன். . . . ஒருவர் ஆசீர்வதிக்கப்பட்டவராய், ஏதாவது பொருளைப் பெற்றால், அதை கர்த்தருக்காக உபயோகிக்கவே அவர் நினைக்கிறார். அவரிடம் இல்லையென்றால், நாம் ஏன் அவரை வற்புறுத்தவேண்டும்?’”

—சார்ல்ஸ் T. ரஸல், உவாட்ச் டவர் சங்கத்தின் முதல் தலைவர், “தி உவாட்ச் டவர்,” ஜூலை 15, 1915.

நாம் கொடுக்கிறோம், ஏனெனில் யெகோவா தேவன் முதல் கொடையாளியாக இருந்தார். அவர் தம் படைப்போடு—ஆதி படைப்பாக இருந்த தம் “ஒரே பேறான குமார”னோடு—அனாதி காலங்களுக்கு முன்பே ஆரம்பித்தார். (யோவான் 3:16) அன்பினிமித்தம், இவர் மற்றவர்களுக்கு உயிராகிய பரிசைக் கொடுத்தார்.

கடவுளுடைய குமாரன், இயேசு கிறிஸ்து, யெகோவா நமக்களித்த மகத்தான பரிசாகும். ஆனால் கடவுளுடைய குமாரனைக் கொடுப்பதோடு மட்டும், கடவுள் கொடுப்பதை நிறுத்திவிடவில்லை. ‘தேவன் அளித்த மிகவும் விசேஷித்த தகுதியற்ற தயவை’ பவுல் அப்போஸ்தலன் யெகோவாவின் “சொல்லிமுடியாத ஈவு” என அழைக்கிறார். (2 கொரிந்தியர் 9:14, 15) தெளிவாகவே, இப்பரிசு இயேசு மூலம் தம்முடைய மக்களுக்கு கடவுள் அளிக்கும் எல்லா நன்மைகளையும் அன்பான தயவையும் உள்ளிட்ட முழுமொத்தமாக இருக்கிறது. இத்தகைய தகுதியற்ற தயவு மனிதனால் விளக்கவோ கூறவோ முடியாத அளவுக்கு விஞ்சியிருப்பதன் காரணமாக, இது அவ்வளவு மகத்தானது. ஆனால், கடவுள் கொடுப்பதற்கு இன்னும் அதிகம் இருக்கின்றன.

ஓர் அரசன், வெகு காலத்திற்கு முன்னர், தான் பரிசாகக் கொடுத்த எல்லா நற்காரியங்களுமே உண்மையில் யெகோவாவுக்கு உரியவையென ஞானத்தோடும் மனத்தாழ்மையோடும் ஒப்புக்கொண்டார். “வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். . . . இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.”—1 நாளாகமம் 29:11-14.

கடவுளின் முன்மாதிரி

இயேசு கிறிஸ்துவின் சீஷன், யாக்கோபு எல்லா விதங்களிலும் ஒட்டுமொத்தமாய் நல்லதாயிருக்கும் காரியமெதற்கும் யெகோவா தேவனே மூலக்காரணரென அறிந்திருந்தார். அவரிடமிருந்து பூரணமான ஈவுகளே கிடைக்கின்றன. யாக்கோபு எழுதினார்: “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.”—யாக்கோபு 1:17.

பரிசு கொடுக்கும் விஷயத்திலும், கடவுள் எப்படி மனிதர்களிலிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதை யாக்கோபு கண்டுணர்ந்தார். மனிதர்கள் நல்ல பரிசுகளைக் கொடுக்கலாம். ஆனால் எப்போதும் அவ்வாறு செய்வதில்லை. இப்பரிசுகள் தன்னல எண்ணத்தினிமித்தம் கொடுக்கப்படக்கூடும், அல்லது ஏதாவது கெட்ட காரியத்தைச் செய்யும்படி ஒரு நபரைத் தூண்டுவதற்கு அவை பயன்படக்கூடும். யெகோவாவைப் பொருத்தமட்டில், எந்த வேறுபாடும் கிடையாது; அவர் மாறாதவராயிருக்கிறார். ஆகவே, அவருடைய பரிசுகளின் இயல்பும் மாறாதவை. அவை எப்போதும் மாசற்றவையாக இருக்கின்றன. அவை மனிதவர்க்கத்தின் நலனையும் சந்தோஷத்தையும் எப்போதும் முன்னேற்றுவிக்கின்றன. அவை அன்பானவையாகவும் உதவிசெய்யக்கூடியவையாகவும் எப்போதும் இருக்கின்றன, ஒருக்காலும் அழிப்பதற்கில்லை.

பரிசுகள் கொடுப்பதற்கான உள்நோக்கங்கள்

யாக்கோபின் நாட்களில், பிரபலமாயிருந்த மதத் தலைவர்கள், மனிதர்கள் பார்ப்பதற்காகவே பரிசு கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் கெட்ட மனநிலையுடன் கொடுத்தனர். மனிதர்கள் புகழ்ச்சியை விரும்பி, தங்களுடைய நீதியான தராதரங்களை விட்டுக்கொடுத்தனர். எனினும், கிறிஸ்தவர்கள் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கவேண்டும். இயேசு அவர்களுக்கு இவ்வாலோசனைக் கொடுத்தார்: “நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”—மத்தேயு 6:2-4.

ஒரு கிறிஸ்தவன் பரிசு கொடுப்பதற்கான காரணம், மற்றவர்களுடைய தேவையைப் பூர்த்திசெய்ய உதவுவதற்காகவோ அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காகவோ மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காகவோ இருக்கிறது. தற்புகழ்ச்சிக்காக அல்ல. எப்படியிருந்தாலும், யெகோவாவுடைய கண்கள், நம் இருதயத்தின் மூலைமுடுக்கிற்குள் ஊடுருவி ஆராயக்கூடும். நாம் செய்யும் இரக்கக் கொடைகளிலிருக்கும் உள்ளூர நோக்கத்தை அவர் கண்டுணரக்கூடும்.

யெகோவாவின் சாட்சிகள் நன்கொடை அளிப்பதில் யெகோவாவுடைய முன்மாதிரியையும் அவருடைய குமாரனுடைய முன்மாதிரியையும் பின்பற்ற பிரயாசப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு இருப்பதிலிருந்து எடுத்துக் கொடுக்கின்றனர். அவர்களிடம் ராஜ்ய நற்செய்தி இருக்கிறது, இதை அவர்கள் மற்றவர்களுடைய ஆசீர்வாதத்துக்காக அளிக்கின்றனர். நீதிமொழிகள் 3:9, “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு” எனக் கூறுவதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு கிளை அலுவலகமும், சபையும், தனிநபரும் எல்லாருடைய நலனைக் கருதி, கொடுக்க நாடுவதால், முழு சகோதரத்துவமும் ஆவிக்குரிய ரீதியில் பலமுள்ளதாகவும் செழுமையாகவும் ஆக்கப்படுகிறது. பொருளாதார செழுமை ஆவிக்குரிய செழுமைக்கு வழிநடத்துவது கிடையாது. மாறாக, ஆவிக்குரிய செழுமை யெகோவாவின் வேலையின் தேவைகளுக்குப் போதுமான பொருளாதார செழுமையைக் கொண்டுவருகிறது.

கொடுப்பதற்கான வழிகள்

நற்செய்தியை ஆதரிப்பதில் எல்லாரும் தனிப்பட்ட விதத்தில் பங்குகொள்வதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. ஒரு வழி ராஜ்ய மன்றங்கள் சம்பந்தப்பட்டதிலாகும். சபையிலுள்ள எல்லா உறுப்பினர்களும் ராஜ்ய மன்றத்தை உபயோகிக்கின்றனர். அதன் கட்டுமான வேலைக்கோ வாடகைக்கோ ஒளிக்கோ சீதோஷ்ண நிலைக்கோ பராமரிப்பிற்கோ யாரோ ஒருவர் நன்கொடைகளை அளித்திருக்கிறார். எல்லாரும் சபைக்கு ஆதரவு கொடுப்பது அவசியமாக இருப்பதால், ராஜ்ய மன்றத்தில் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மனமுவந்து கொடுக்கப்படும் காணிக்கைகள், சபை செலவுகளுக்காக உபயோகிக்கப்படுகின்றன. கூடுதலான தொகையைக் கொண்டு, சபையின் தீர்மானத்திற்கிணங்க, உள்ளூர் உவாட்ச் டவர் கிளை அலுவலகத்திற்கு நன்கொடைகளை அனுப்பலாம்.

தற்போது வாழக்கூடிய மக்கள்தொகைக்கு நற்செய்தி சென்றெட்டியிராத உலகப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் மிஷனரிகளையும் விசேஷ பயனியர்களையும் பயிற்றுவித்து ஆதரிப்பதற்காக அளிக்கப்படும் நன்கொடைகளை, சங்கத்தின் கிளை அலுவலகத்திற்கே அனுப்பலாம். நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்துவதில் உள்ள இதர செலவுகள் பயணக் கண்காணிகளின் வேலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. முதல் நூற்றாண்டில் பயண வேலையில் முன்மாதிரியை வைத்த பவுல் அப்போஸ்தலன், பிலிப்பியிலுள்ள சபையை இவ்வாறு பாராட்டினார்: “என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.” (பிலிப்பியர் 4:14-16) எல்லா கிளை அலுவலகங்களிலும் இருக்கிற முழுநேர ஊழிய அம்சங்களுக்கு ஆகும் இச்செலவுகள் போக, ஒவ்வொரு பெத்தேல் வீட்டைப் பராமரிப்பதற்கும் அங்கு இருந்துகொண்டு வேலைசெய்யும் ஆட்களைப் பராமரிப்பதற்குமான செலவு இருக்கிறது. நற்செய்தியின் அழகான செய்தியைக் கொண்டுள்ள பிரசுரங்களை எழுதுவதும் அச்சடிப்பதும் உண்மையிலேயே கடவுளிடமிருந்து கிடைத்த சிலாக்கியங்கள். ஆனால் பிரசுரங்களை விநியோகம் செய்வதும் அவசியம், இது செலவுபிடிக்கிறது. அடுத்து, அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் உண்டாகும் செலவு இருக்கிறது. “மேலும் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்”துவதற்காகச் செய்யப்படும் நீதிமன்ற வழக்குவிசாரணைகளுக்கு உண்டாகும் செலவுகளைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.—பிலிப்பியர் 1:7.

நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஒவ்வொரு யெகோவாவின் ஊழியர் செலவிடும் நேரம் மனமுவந்து செலவிடும் நேரமாகும், அவ்வாறே ஒருவர் பொருள் சம்பந்தப்பட்ட தொகைகளைக் கொடுப்பதுமிருக்கிறது. மெய் வணக்கத்தின் விஸ்தரிப்பிற்கு ஆதரவாக உபயோகிக்க ஒழுங்காக பண ஒதுக்கீட்டைச் செய்வதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் அறிவுரை கூறியிருக்கிறார்: “பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து, . . . உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 16:1, 2.

ஒரு நபர் காணிக்கை கொடுக்கையில், அது குறிப்பாக எப்படி உபயோகிக்கப்படுமென எப்போதுமே அவருக்குத் தெரியாது. ஆனால் ராஜ்ய பிரசங்க விஸ்தரிப்பு வேலையில் அவர் பலன்களைக் காண்கிறார். 1993 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடப்புத்தகத்தில் (1993 Yearbook of Jehovah’s Witnesses) உள்ள அறிக்கைகள், இந்த ராஜ்ய நற்செய்தி 200 நாடுகளுக்கும் கடற்தீவுகளுக்கும் மேலாக, 45,00,000-க்கும் மேலான கிறிஸ்தவ ஊழியர்களால் பிரசங்கிக்கப்பட்டு வருகிறதென காட்டுகின்றன. இவ்வறிக்கைகள் கேட்பதற்கு இதமாக இருக்கின்றன. அவ்வாறெனில், எந்த நன்கொடையும் அளவைப் பொருத்தில்லாமல், உலகமுழுவதும் நற்செய்தியைப் பிரஸ்தாபிக்க உதவுகிறது.

இந்த வேலை எல்லாரும் சேர்ந்து கொடுப்பதால் நிதிவகையில் உதவப்பட்டு வருகிறது. சிலர் அதிகம் கொடுக்கின்றனர், இது பிரசங்க வேலைக்கு அதிக அளவு உதவுகிறது. மற்றவர்கள் குறைவாகக் கொடுக்கின்றனர். ஆனால் அளவான காணிக்கைகளைக் கொடுப்பவர்கள் அவர்களுடைய பங்கை நினைத்து கேவலப்படவோ மிகவும் சொற்பம் என்றோ உணரவேண்டியதில்லை. நிச்சயமாகவே யெகோவா அவ்வாறு உணருவது கிடையாது. யெகோவா எப்படி அந்த விதவையின் சிறு நன்கொடையை மதித்துப்போற்றினார் என்பதைக் குறித்து காட்டும்போது இயேசு இதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார்: “ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”—லூக்கா 21:2-4.

நிதி வகையில் நம்முடைய சூழ்நிலைமை என்னவாக இருந்தாலுஞ்சரி, யெகோவாவுக்குப் பிரியப்படுகிற வழிகளில் நாம் கொடுக்கலாம். நம்முடைய அரசரும் நீதிபதியுமாயிருப்பவருக்கு எப்படி நாம் மகிமை சேர்க்கலாம் என்பதைச் சங்கீதக்காரன் நன்றாகத் தொகுத்துரைக்கிறார்: “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.” (சங்கீதம் 96:8) ஆகையால், உற்சாக மனதோடு நாம் நன்கொடைகளை அளிப்பதன் மூலம் நம் பரலோக தகப்பனின் அன்பான முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக. ஏனெனில், அவரே நமக்கு முதலில் கொடுத்தார்.

[பக்கம் 30-ன் பெட்டி]

ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்

◻ உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்: அநேகர் “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14,” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுவதற்கு ஒரு தொகையை ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள் அல்லது அதை வரவு செலவு திட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகைகளை அருகாமையிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கின்றன.

◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah.-விற்கு அனுப்பலாம். நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களுங்கூட நன்கொடையாக கொடுக்கப்படலாம். இவை எவ்வித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.

◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பொறுப்பாண்மையில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம் கொடுக்கப்படலாம். சொந்தத் தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்கு இந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இது கொடுக்கப்படலாம்.

◻ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஓர் ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸையிட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாட்டைக் குறித்துச் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

◻ வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத் தொகை சான்றிதழ்கள், அல்லது தனிநபரின் ஓய்வு ஊதிய கணக்குகள், உள்ளூர் வங்கி தேவைகளுக்கேற்ப சங்கத்தின் பொறுப்பாண்மையில் வைக்கப்படலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சொஸையிட்டி இதைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்யப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் குறித்துச் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

◻ பங்குகளும் கடன் பத்திரங்களும்: பங்குகளும் கடன் பத்திரங்களும் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாகவோ வருமானம் தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும் என்ற ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம்.

◻ நிலம், கட்டிட மனைகள்: விற்கப்படக்கூடிய நிலம், கட்டிட மனைகள் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, அவனுடைய அல்லது அவளுடைய வாழ்நாளின் போது தொடர்ந்து அவ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலம், கட்டிட மனைகளையும் பத்திரத்தினால் சங்கத்துக்கு மாற்றுவதற்கு முன்பாக ஒருவர் சங்கத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

◻ உயில்களும் நம்பிக்கை பொறுப்புறுதிகளும்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டிக்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது ஒரு பொறுப்பாண்மை ஏற்பாட்டில் அனுபவ பாத்தியத்தை உடைய சங்கமாகப் பெயரிடப்படலாம். மத அமைப்புக்கு நன்மை தரும் ஒரு பொறுப்பாண்மை ஒருசில வரி சலுகைகளைத் தரலாம். உயில் அல்லது பொறுப்பாண்மை ஒப்பந்தத்தின் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இத்தகைய விஷயங்களின் பேரில் கூடுதலான தகவல்களுக்கு Watch Tower Bible and Tract Society of India, H–58 Old Khandala Road, Lonavla 410 401, Mah. அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு எழுதிக்கேட்கவும்.

[பக்கம் 31-ன் படம்]

உங்கள் காணிக்கைகள் எப்படி உபயோகிக்கப்படுகின்றன:

1. பெத்தேல் வாலன்டியர்கள்

2. கிளை அலுவலக கட்டுவிப்பு

3. சேதத்திற்கான நிவாரணம்

4. ராஜ்ய மன்றங்கள்

5. மிஷனரிகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்