வெற்றி மாணாக்கர்கள் முதல் வெற்றி மிஷனரிகள் வரை
“ஆகாஎங்களுக்கா இந்தப் பாக்கியம்! இன்னும்கூட என்னால் நம்பமுடியவில்லை!” என்று வியப்போடு கூறினார் வில் என்பவர். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 103-வது வகுப்பு மாணாக்கர்களாக சேர்ந்த அவரும் அவரது மனைவி பாட்ஸியும் இப்போதுதான் படித்து முடித்தார்கள். இதைத்தான் அவர் இப்படி ஆச்சரியத்தோடு குறிப்பிடுகிறார். இவரது கூற்றை ஜெஹிட் என்பவரும் ஜெனியும் ஒத்துக்கொள்கிறார்கள். “எங்களை இங்கு வரவழைத்ததை கௌரவமாக கருதுகிறோம்” என்று அவர்கள் சொன்னார்கள். பள்ளியில் எல்லா மாணாக்கர்களும் நன்றாக கஷ்டப்பட்டு படித்தார்கள். இப்போது மிஷனரிகளாக தங்கள் ஊழியத்தைத் துவங்க துடிதுடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு முன், செப்டம்பர் 6, 1997 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர்களது மிஷனரி நியமிப்புகளில் வெற்றியடைய உதவும் அன்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஆளும் குழுவின் அங்கத்தினர், தியோடர் ஜரெக்ஸ் நிகழ்ச்சிநிரலின் சேர்மேனாக இருந்தார். பெத்தேல் குடும்பத்தினரையும் உவாட்ச் டவர் சங்கத்தின் 48 கிளைக் காரியாலயங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளையும் இவர்களோடுகூட கனடா, ஐரோப்பா, பியூர்டோ ரிகோ, ஐக்கிய மாகாணங்கள் என பல்வேறு இடங்களிலிருந்து வந்த நண்பர்களையும் உறவினர்களையும் நோக்கி தங்கள் ஆதரவையும் அன்பையும் அந்த மாணாக்கர்களுக்கு கண்டிப்பாக வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் அனுப்பும் மிஷனரிகள் அடிக்கடி தங்களுடைய மிஷனரி ஊழியத்திலிருந்து வழிவிலகி, பெரும் மேதாவி படிப்புகளைப் படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் அல்லது அரசியலில் சிக்கி மூழ்கிவிடுகிறார்கள் என்று சகோதரர் ஜரெக்ஸ் குறிப்பிட்டார். ஆனால், கிலியட் பட்டதாரிகளுக்கு என்ன செய்யும்படி பயிற்சி தரப்பட்டதோ அதன்படியே செய்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு பைபிளை கற்றுத்தருகிறார்கள்.
“உங்கள் பாதையை வெற்றிப் பாதையாக ஆக்குங்கள்” என்ற தலைப்பில், சங்கத்தின் புரூக்லின் காரியாலயத்திலிருந்து வந்த ராபர்ட் பட்லர் சொற்பொழிவாற்றினார். பொருளாதாரத்தை அல்லது தனி வருமானத்தை வைத்து மனிதர் வெற்றியை அளவிடுகின்றனர், ஆனால் யெகோவா எவ்வாறு வெற்றியை அளவிடுகிறார் என்பதுதான் முக்கியம் என்ற விளக்கத்தை அவர் அளித்தார். இயேசுவின் ஊழியம் வெற்றி அடைந்ததற்கான காரணம் அவர் நிறைய ஆட்களை மதம் மாற்றியதால் அல்ல, ஆனால் அவருடைய நியமிப்பில் அவர் உண்மையோடு இருந்ததே காரணம். இயேசு யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவந்து, உலகத்தின் கறை தம்மீது படாமல் காத்துக்கொண்டார். (யோவான் 16:33; 17:4) இவற்றை எல்லா கிறிஸ்தவர்களாலும் செய்ய முடியும்.
“எல்லாருக்கும் அடிமைகளாக இருங்கள்” என்ற ஆலோசனையை வழங்கினார் ராபர்ட் பெவி, அவர் முன்பு ஆசியாவில் மிஷனரியாக இருந்தவர். அப்போஸ்தலன் பவுல் ஒரு வெற்றி-மிஷனரியாக இருந்தார். அவரது வெற்றியின் ரகசியம் என்ன? எல்லாரிடத்திலும் அவர் தன்னை ஓர் அடிமையைப்போல் நடத்திக்கொண்டார். (1 கொரிந்தியர் 9:19-23) அதே பேச்சாளர் அளித்த விளக்கம்: “கிலியட் பட்டதாரி ஒருவர் மிஷனரி ஊழியத்தை, தனக்கு வேலையில் கிடைத்த ஒரு பதவி உயர்வாக அல்லது அமைப்பில் முக்கிய ஸ்தானங்களைப் பெறுவதற்கு ஏணிப்படியாகக் கருதமாட்டார். ஒரு மிஷனரி தன் நியமிப்பை ஏற்று, சேவை செய்யவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தோடு செல்கிறார். ஏனென்றால் அடிமைகளாக இருப்பதே சேவை செய்யத்தான்.”
ஆளும் குழுவின் அங்கத்தினர் கெரெட் ஸாஷ் என்பவர், தான் கொடுத்த ஆலோசனையை முக்கியமாக 2 கொரிந்தியர் 3-ம் 4-ம் அதிகாரங்களை அடிப்படையாக கொண்டு, “யெகோவாவின் மகிமையைக் கண்ணாடிகளைப் போல் பிரதிபலியுங்கள்” என்று மாணாக்கர்களிடம் வலியுறுத்தி பேசினார். கடவுளைப் பற்றிய அறிவு, அறிவொளியூட்டும் வெளிச்சம் போன்றது; ஒரு கிறிஸ்தவர் திறந்த மனதோடு வரவேற்றால் அதை பெற்றுக்கொள்வார் என்று அவர் நினைப்பூட்டினார். நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமும், நல்நடத்தையைக் காத்துக்கொள்வதன் மூலமும் நாம் அந்த வெளிச்சத்தைப் பிரதிபலிக்கிறோம். “ஒன்றுக்கும் லாயிக்கற்றவர் என்ற எண்ணம் சில நேரங்களில் உங்களுக்கு ஏற்படும். அத்தகைய எண்ணங்கள் தலைதூக்கும்போது, ‘இயல்புக்கு மீறிய சக்தி கடவுளிடமிருந்து கிடைக்கும்’ என யெகோவாவின்மீது சார்ந்திருங்கள்” என்று அவர் கூறினார். (2 கொரிந்தியர் 4:7, NW) சகோதரர் ஸாஷ் 2 கொரிந்தியர் 4:1-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பவுலின் வார்த்தைகளை எடுத்துரைத்து, மாணாக்கர்களிடம் இப்படியொரு வேண்டுகோள் விடுத்தார்: “உங்கள் மிஷனரி ஊழியத்தில் சோர்ந்துவிடாதீர்கள். உங்கள் கண்ணாடியை எப்போதும் பளபளப்பாக வைத்திருங்கள்!”
“யெகோவா எங்கே?” என்ற ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பில் பேசியவர் கார்ல் ஆடம்ஸ். இவர் கிலியட் பள்ளியின் ஒரு போதனையாளர். பிரபஞ்சத்தில் கடவுள் எந்த இடத்தில் இருக்கிறார் என்று இக்கேள்வி குறிப்பிடவில்லை, ஆனால் யெகோவாவின் நோக்குநிலையையும் அவர் சுட்டிக்காட்டும் வழிநடத்துதலையும் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறது. “நீண்ட காலம் யெகோவாவை சேவித்தவர் என்ற பதிவை வைத்திருக்கும் நபரும்கூட மன அழுத்தத்தின்போது, யெகோவாவின் நோக்குநிலையைக் காணத் தவறிவிடலாம்” என்று அவர் கூறினார். (யோபு 35:11) நம் நவீனநாளைப் பற்றி என்ன? 1942-ல் கடவுளுடைய மக்களுக்கு வழிநடத்துதல் தேவைப்பட்டது. பிரசங்க வேலை முடிவடைகிறதா அல்லது இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டுமா? யெகோவா தம்முடைய மக்களைப் பற்றி என்ன நோக்கம் கொண்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்தன. அவர்கள் கடவுளுடைய வார்த்தையை படிக்கப் படிக்க இதற்கான விடைகள் தெளிவாகப் புரிந்தன. “அந்த ஆண்டு முடிவிற்குள் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்காக திட்டங்கள் தீட்டப்பட்டன” என்று சகோதரர் ஆடம்ஸ் அறிவித்தார். அந்தப் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட மிஷனரிகளின் ஊழியத்தை யெகோவா உண்மையில் ஆசீர்வதித்திருக்கிறார்.
அடுத்ததாக, மற்றொரு போதனையாளர் மார்க் நியுமார் பேசினார். “உங்கள் தாலந்தை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?” என்ற தலைப்பில் பேசிய அவர், மாணாக்கர்கள் புதிதாக நியமிக்கப்படும் இடத்திற்கு போனதும், கிலியட் பள்ளியில் பெற்ற பயிற்சியைச் செயல்படுத்தும்படி அவர்களைத் தட்டிக்கொடுத்தார். “மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். மக்களோடு மக்களாய் கலந்திடுங்கள். அந்நாட்டின் பண்பாடுகளையும், வரலாற்றையும், மக்களின் நகைச்சுவை உணர்வுகளையும் ஆவலோடு கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சீக்கிரத்தில் அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களது ஊழியத்தோடு நீங்கள் ஒன்றிப்போவதும் எளிது” என்று அவர் கூறினார்.
துடிப்பான மாணாக்கர்கள் ஊழியத்தில் மகிழ்ச்சி அடைவர்
கிலியட் பள்ளியில் பாடம் கற்பதோடு, உள்ளூரில் இருந்த 11 சபைகளுக்கு மாணாக்கர்கள் பிரித்துவிடப்பட்டனர். வார இறுதிநாட்களில் அவர்கள் துடிப்போடு ஊழியத்தில் பங்கேற்றார்கள். ஊழியத்தில் பெற்ற அனுபவங்களை குழுமியிருந்த அனைவருக்கும் சொல்லும்படி மாணாக்கர்கள் பலரை கிலியட் பள்ளியின் போதனையாளர் வெல்லெஸ் லிவரன்ஸ் அழைத்தார். ஷாப்பிங் சென்டர்களிலும், பார்க்கிங் ஏரியாக்களிலும், பிஸ்னஸ் ஏரியாக்களிலும், தெருக்களிலும், வீடு வீடாகவும் அவர்கள் ஊழியம் செய்ததன் அனுபவத்தை சொன்னபோது அவர்கள் பெற்ற மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. ஒருசில மாணாக்கர்கள் தாங்கள் அனுப்பப்பட்டிருந்த சபை ஊழியம் செய்யும் இடத்தில் வசித்த வேற்று மொழிபேசும் மக்களை சந்திப்பதற்கான வழிகளை நாடினார்கள். 103-ம் வகுப்பு கிலியட் மாணாக்கர்களால் அந்த ஐந்து மாத பயிற்சி காலத்தில் குறைந்தபட்சம் பத்து வீட்டு பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது.
நீண்டகால மிஷனரிகள் வெளியிட்ட வெற்றியின் ரகசியங்கள்
சந்தோஷமான இந்த நிகழ்ச்சிநிரலில் அடுத்ததாக, பிரான்ஞ்சு கமிட்டி அங்கத்தினர் ஏழுபேரை பாட்ரிக் லாபிராங்கா என்பவரும் வில்லியம் வான் டி வால் என்பவரும் அழைத்து, மிஷனரி ஊழியத்தில் அவர்கள் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களை மாணவர்களின் நன்மைக்காக சொல்லும்படி கேட்டார்கள். பட்டதாரிகள் தங்கள் நியமிப்பை யெகோவாவிடமிருந்து வந்த ஒன்றாக கருதவேண்டும் என்றும் தங்கள் நியமிப்பில் நிலைத்திருக்க திடதீர்மானமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கினர். கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்ற மிஷனரிகள் அவர்களுடைய தேசங்களில் சேவை செய்ததால் விளைந்த நல்ல பலன்களையும் எடுத்துக்கூறினார்கள்.
இந்தப் பிரான்ஞ்சு கமிட்டி அங்கத்தினர்கள் பல பத்தாண்டுகளாய் சந்தோஷமாக, திறம்பட்ட மிஷனரிகளாக சேவை செய்வதற்கு எது உதவியது? அவர்கள் உள்ளூர் சகோதரர்களோடு ஒன்றுகலந்து ஊழியம் செய்து, அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். அவர்கள் நியமிப்பு பெற்று வந்தவுடனேயே மொழியைக் கற்பதில் முழு மூச்சாக இறங்கினார்கள். உள்ளூர் பண்பாடுகளுக்கு இசைவாக வளைந்து கொடுக்கவும் அதற்கேற்ப வாழவும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். கிலியட் முதல் வகுப்பின் பட்டதாரியும் 54 வருடங்களாக மிஷனரியாக இருப்பவருமான சார்லஸ் ஐஸ்னோவர், வெற்றி-மிஷனரிகள் கற்றுக்கொண்ட ஐந்து ரகசியங்களை எடுத்துச்சொன்னார். அவை யாவன: (1) பைபிளை தவறாமல் படிப்பது, (2) மொழியைக் கற்றுக்கொள்வது, (3) ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது, (4) மிஷனரி இல்லம் சுமூகமாக நடைபெற உழைப்பது, (5) யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்வது. இத்தகைய நடைமுறையான ஆலோசனைகளை பெற்றதால் மட்டுமின்றி, அனுபவம்வாய்ந்த இந்த மிஷனரிகள் யெகோவாவின் சேவையில் அனுபவித்த மகிழ்ச்சியைக் கண்டதாலும் மாணாக்கர்கள் தங்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். “அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மகிழ்ச்சிப்பொங்க எடுத்துச்சொன்னார்கள்” என்பதாக ஆர்மான்டோ என்பவரும் லூபி என்பவரும் சொன்னார்கள்.
பேட்டியெல்லாம் கண்டப்பிறகு, ஒரேயொரு பேச்சு மட்டும் பாக்கி இருந்தது. “கடவுள் வார்த்தையை கண்ணும் கருத்துமாய் காத்துவருவது விலையேறப்பெற்ற சத்தியங்களை வெளியிடுகிறது” என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார் ஆளும் குழுவின் அங்கத்தினர் ஆல்பர்ட் ஷ்ரோடர். பைபிளே கிலியட் பள்ளியின் பிரதான பாடப்புத்தகமாக இருப்பதால், அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற ஆவல் மாணாக்கர்களின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. 50 வருடங்களுக்கு முன்பு, புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவில் இருந்த அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்கள், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பை (ஆங்கிலம்) தயாரிப்பதற்கான பணியை ஆரம்பித்தபோது அவர்கள் மனிதர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்மீதே சார்ந்திருந்தார்கள். (எரேமியா 17:5-8) இருந்தாலும்கூட புதிய உலக மொழிபெயர்ப்பின் உயர் தரத்தை சமீபத்தில் சில அதிகாரவட்டங்கள் அங்கீகரித்துள்ளன. கல்விமான் ஒருவர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நல்ல தரம்வாய்ந்த புத்தகத்தை பார்த்த மாத்திரத்தில் என்னால் சொல்லிவிட முடியும். உங்களுடைய ‘புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு’ அபாரமாக செய்திருக்கிறார்கள்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு, மாணாக்கர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்கள், அவர்கள் அனுப்பப்படும் இடங்கள் கூடியிருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. அந்த வகுப்பில் பயின்ற மாணாக்கர்களுக்கு அத்தருணம் பலவித உணர்ச்சி அலைகள் பொங்கியெழும் ஒரு தருணமாக இருந்தது. வகுப்பின் பிரதிநிதி நன்றியுரையை வாசித்தபோது, பலருக்கு உணர்ச்சி மிகுதியால் தொண்டை அடைத்துக்கொண்டு, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சில மாணாக்கர்கள் மிஷனரி ஊழியத்திற்காக வேண்டி பல வருடங்களாக தங்களை தயார்ப்படுத்தியிருந்தனர். கிலியட் வகுப்பு ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்பதை அறிந்து, ஆங்கில மொழியை இன்னும் நன்றாக கற்றுக்கொள்வதற்காக அவர்கள் ஆங்கில மொழியில் நடைபெறும் சபைகளுக்குச் சென்றார்கள். சொந்த ஊர், வெளிநாடு என மற்றவர்கள் எங்கே பயனியர்களின் தேவை அதிகமாக இருந்ததோ அங்கே சென்றார்கள். இன்னும் சிலர், அனுபவங்களை படிப்பது, ஆராய்ச்சி செய்வது, சங்கம் வெளியிட்ட பூமியின் கடைக்கோடிகளுக்கு என்ற ஆங்கில வீடியோ கேஸட்டை போட்டுப் போட்டு பார்ப்பது போன்ற வழிகளிலும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டார்கள்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட வில் என்பவரும் பாட்ஸியும் மாணாக்கர்களுக்கு காட்டப்பட்ட தனிப்பட்ட அக்கறையைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள். “எங்களுக்கு முன்பின் தெரியாதவர்களும்கூட எங்களை கட்டித்தழுவினார்கள்; எங்களை போட்டோ எடுத்தார்கள். ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர் எங்களோடு கைகுலுக்கி, சொன்னார்: ‘உங்களைக் கண்டு பெருமைப்படுகிறோம்!’” 103-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மிகுந்த அன்பு காட்டப்பட்டது என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. அவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டது. கிலியட் பள்ளியில் அவர்கள் கற்ற கல்வி, அவர்களை வெற்றி-மாணாக்கர்கள் என்ற நிலையிலிருந்து வெற்றி-மிஷனரிகள் என்ற நிலைக்கு மாற்றும்.
[பக்கம் 22-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 9
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 18
மாணாக்கர்களின் எண்ணிக்கை: 48
தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 33
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12
[பக்கம் 23-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 103-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) பன், ஏ.; டால்ஸ்டெட், எம்.; காம்பான்யா, இஸெட்.; பயாஜூயாலு, ஆர்.; ஒகாண்டோ, ஜி.; நிக்கன்ச்சக், டி.; மெல்வின், எஸ். (2) மே, எம்.; மப்பெல்லா, எம்.; லூயன், ஜே.; ஹைட்டாமா, டி.; ஹெர்னான்டஸ், சி.; பயாஜூயாலு, என்.; ஸ்டர்ம், ஏ.; மெல்வின், கே. (3) தாம், ஜே.; மப்பெல்லா, ஈ.; நோல், எம்.; டிஸ்டேல், பி.; ரைட், பி.; பெரஸ், எல்.; ஷென்னாஃபெல்ட், எம்.; பாக், ஹெச். (4) மர்ஃபி, எம்.; காம்பான்யா, ஜே.; ஸ்டுவார்ட், எஸ்.; ச்சேரேடா, எம்.; ரீடு, எம்.; பெரஸ், ஏ.; டிஸ்டேல், டபிள்யூ.; பாக், ஜே. (5) ஸ்டுவார்ட், டி.; ரைட், ஏ.; ச்சேரேடா, பி.; நிக்கன்ச்சக், எஃப்.; ரீடு, ஜே.; ஹைட்டாமா, கே.; ஒகாண்டோ, சி.; ஷென்னாஃபெல்ட், ஆர். (6) மர்ஃபி, டி.; ஹெர்னான்டஸ், ஜே.; நோல், எம்.; பன், பி.; தாம், ஆர்.; டால்ஸ்டெட், டி.; லூயன், இஸெட்.; மே, ஆர்.; ஸ்டர்ம், ஏ.
[பக்கம் 24-ன் படம்]
நாங்கள் எங்கே போக வேண்டும்?