யெகோவாவில் மகிழ்ந்து களிகூருங்கள்
பயனுள்ள திட்டம்—அது வெற்றிக் கனியாகையில் அதை சுவைக்கும் நேரம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் நேரமே. இடம்: நியூ யார்க் பேட்டர்ஸன் உவாட்ச் டவர் கல்வி மையம். தேதி: மார்ச் 13, 1999. நிகழ்ச்சி: பட்டமளிப்பு விழா. உவாட்ச் டவர் கிலியட் பள்ளியின் 106-வது வகுப்பில் பயின்ற 48 மாணவர்களுக்கும் இது உண்மையிலேயே வெற்றிக் கனியை சுவைத்து மகிழும் நேரமே.
“யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.” சங்கீதம் 32:11-ல் (NW) உள்ள இந்த வார்த்தைகளுக்கு தியோடர் ஜாரஸ் கொடுத்த பேச்சின் ஆரம்ப குறிப்புகள் மெருகூட்டின. இவர் ஆளும் குழுவின் அங்கத்தினர், ஏழாவது கிலியட் வகுப்பின் பட்டதாரி, இந்தப் பட்டமளிப்பு விழாவின் அக்கிராசினர். இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் மகிழ்ச்சிகொள்வது ஏன் பொருத்தமானது என்பதை விளக்கும்போது அவர் இவ்வாறு சொன்னார்: “கிலியட் மாணவர்கள் உட்பட, செம்மையான இருதயமுள்ளவர்களை வைத்து யெகோவா காரியங்களை சாதிப்பதால் இதுபோன்ற சமயங்களில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.” கிலியட் பள்ளிக்கு வருவதற்கு திட்டங்கள் போட்டு, மிஷனரி சேவைக்கு தகுதிபெற ஊக்கமாக உழைத்தது மாணவர்கள்தான் என்றாலும், இதை வெற்றிகரமாக முடிப்பதை சாத்தியமாக்கியது யெகோவாவே. (நீதிமொழிகள் 21:5; 27:1) அதுவே யெகோவாவுக்குள் மகிழ்வதற்கான காரணம் என்பதை சகோதரர் ஜாரஸ் வலியுறுத்திக் கூறினார்.
பேட்டர்ஸன் அரங்கில் நடைபெற்ற மகிழ்ச்சி பொங்கும் இந்நிகழ்ச்சியில் 12 நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் விருந்தினர்களும் அமர்ந்திருந்தனர். புரூக்ளின், பேட்டர்ஸன், வால்கில் ஆகிய இடங்களிலுள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களை உள்ளிட்ட 5,198 பேரும், நடக்கவிருந்த நிகழ்ச்சிநிரலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் மகிழ்ச்சி மணம் கமிழ்ந்தது.
மகிழ்ச்சியான மனநிலையை காத்துக்கொள்ள புத்திமதி
ஜாரஸ் தன்னுடைய ஆரம்ப குறிப்புகளை முடித்தபோது, ஐந்து பேச்சாளர்களில் முதலானவரை அறிமுகப்படுத்தினார்; கிலியட் பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல, ஆஜராயிருந்த அனைவருக்கும் உற்சாகமூட்டுகிற வேதப்பூர்வ புத்திமதியை அவர்கள் தயாரித்திருந்தார்கள்.
முதலில் பேசியவர் வில்லியம் மேலன்ஃபான்ட்—34-வது கிலியட் பள்ளி பட்டதாரி. ஆளும் குழுவின் போதனா குழுவில் ஓர் உதவியாளராக சேவை செய்கிறார். ‘எல்லாமே’ மாயை அல்ல!” என்ற தலைப்பின் சம்பந்தமாக—இது பிரசங்கி 1:2-ன் அடிப்படையிலானது—இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்: “சொல்லர்த்தமாகவே எல்லாமே மாயை என சாலொமோன் அர்த்தப்படுத்தினாரா?” “இல்லை” என்பதே பதில். “தெய்வீக சித்தத்தைப் புறக்கணித்து செய்யப்படும் மனித திட்டங்களே, தெய்வீக சித்தத்திற்குப் புறம்பான நாட்டங்களே மாயை என சுட்டிக்காட்டினார்.” மாறாக, உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குவது மாயை அல்ல; கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதும் அதை பிறருக்கு போதிப்பதும் மாயை அல்ல. தம்முடைய ஊழியர்களுடைய இப்படிப்பட்ட முயற்சியை கடவுள் மறந்து விடுவதில்லை. (எபிரெயர் 6:10) சொல்லப்போனால், கடவுளுடைய தயவை பெற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தாலும், ‘யெகோவாவின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருப்பார்கள்.’ (1 சாமுவேல் 25:29) இருதயத்திற்கு அனலூட்டும் என்னே சிறந்த வார்த்தைகள்! இந்தக் குறிப்புகளை நினைவில் வைத்திருப்பது யெகோவாவின் வணக்கத்தார் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையைக் காத்துக்கொள்ள உதவும்.
“உங்களுடைய மிஷனரி சேவையில் மகிழ்ச்சியை காணுங்கள்” என்று தலைப்பிடப்பட்ட பேச்சில், பட்டம் பெறவிருந்த வகுப்பாரை ஆளும் குழு அங்கத்தினராகிய ஜான் பார் உற்சாகப்படுத்தினார். மிஷனரி சேவை யெகோவா தேவனுடைய இதயத்திற்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அவர் காட்டினார். “உலகத்திற்கு யெகோவா காண்பித்த அன்போடு பின்னிப் பிணைந்த ஒன்றாக அது இருந்தது. தம்முடைய ஒரே பேறான குமாரனையே இந்தப் பூமிக்கு அவர் அனுப்பினார். இயேசுவே மிகப் பெரிய மிஷனரி, அவரே மிக முதன்மையான மிஷனரி.” பூமியில் தம்முடைய வேலையை வெற்றிகரமாக்குவதற்கு இயேசு செய்ய வேண்டியிருந்த மாற்றங்களைப் பற்றி பட்டதாரிகள் சிந்திக்க முடிந்தது. என்றாலும், இயேசுவின் மிஷனரி சேவையின் நன்மைகளை அனுகூலப்படுத்திக் கொள்வோருக்கு அவை இன்னும் கிடைக்கிறது. ஏனெனில், சகோதரர் பார் சுட்டிக்காட்டியபடி, கடவுளுடைய சேவையை செய்வதில் இயேசு மகிழ்ச்சியடைந்தார், மனிதவர்க்கத்தின் பிள்ளைகளையும் அவர் நேசித்தார். (நீதிமொழிகள் 8:30, 31) தங்களுடைய சேவையை விடாமல் தொடரும்படி சகோதரர் பார் உந்துவித்தார். வெறுமனே சகிப்புத்தன்மையால் அல்ல, அந்த சேவையில் மகிழ்ச்சியடைவதாலேயே அவ்வாறு செய்யும்படி உந்துவித்தார். “யெகோவாவை சார்ந்திருங்கள்; அவர் உங்களை கைவிட மாட்டார்” என்று வகுப்பாருக்கு சொன்னார்.—சங்கீதம் 55:22.
“யெகோவாவின் பெயரில் தொடர்ந்து நடப்பது.” இது அடுத்த பேச்சாளர் லாய்டு பாரி தெரிந்தெடுத்த தலைப்பு பொருள். இவரும் ஆளும் குழு அங்கத்தினர். 11-வது கிலியட் வகுப்பை முடித்தப் பிறகு 25 வருடங்களுக்கு மேல் ஜப்பானில் மிஷனரியாக சேவை செய்தார். ஆரம்பகால மிஷனரிகளுடைய அனுபவங்கள் சிலவற்றையும் அவர்கள் எதிர்ப்பட்ட சவால்களையும் சொன்னார். பட்டம்பெறும் வகுப்பாருக்கு என்ன நடைமுறையான அறிவுரையைத் தந்தார்? “எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ளுங்கள். அதோடு, நீங்கள் போகிற இடத்தின் மொழியையும் அந்தக் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நகைச்சுவையுணர்வை காத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நியமிப்பை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். சோர்ந்து விடாதீர்கள், அல்லது தளர்ந்து விடாதீர்கள்.” பல்வேறு தெய்வங்களின் பெயரில் நடப்பவர்களை அயல்நாட்டு சேவையில் மிஷனரிகள் சந்திப்பார்கள், ஆகவே மீகாவின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைப்பூட்டினார்: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” (மீகா 4:5) யெகோவாவின் நாமத்தில் நடந்து அவரை உண்மையுடன் சேவிக்கும் கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் முன்னாள் மிஷனரிகளுடைய முன்மாதிரி நிச்சயமாகவே ஓர் உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறது.
நிகழ்ச்சிநிரலில் அடுத்து வந்தவர் கிலியட் பயிற்சியாளர் லாரன்ஸ் பவன். அவருடைய பேச்சின் தலைப்பு, “நீங்கள் எப்படிப்பட்டவர்களாக நிரூபிப்பீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியது. மிஷனரி சேவையில் வெற்றிபெறுவது யெகோவாவில் விசுவாசம் வைத்து அவரை நம்பியிருப்பதன் பேரிலேயே சார்ந்திருக்கிறது என்பதை காண்பித்தார். ராஜாவாகிய ஆசா யெகோவாவின்மீது முழுமையாக சார்ந்திருந்தது, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொண்ட சேனைமீது அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. எனினும், தொடர்ந்து கடவுள்மீது சார்ந்திருப்பதன் அவசியம் தீர்க்கதரிசியாகிய அசரியாவின் மூலம் அவருக்கு நினைப்பூட்டப்பட்டது: “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்.” (2 நாளாகமம் 14:9-12; 15:1, 2) தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு—அது காப்பவராக, அளிப்பவராக, அழிப்பவராக இருப்பதை அர்த்தப்படுத்தினாலும்சரி—தேவையானபடியெல்லாம் ஆவதை கடவுளுடைய பெயராகிய யெகோவா உணர்த்துவதால், யெகோவாவின்மீது சார்ந்திருந்து அவருடைய நோக்கத்திற்கு இசைவாக செயல்படுகிற மிஷனரிகள் தங்களுடைய நியமிப்பை வெற்றிகரமாக ஆக்குவார்கள். (யாத்திராகமம் 3:14, NW) “யெகோவாவின் நோக்கத்தை உங்களுடைய நோக்கமாக ஆக்கும்வரை, உங்களுடைய நியமிப்பை நிறைவேற்றுவதற்கு தேவையானபடியெல்லாம் உங்களை ஆகும்படி செய்வார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்” என்று சொல்லி முடித்தார் சகோதரர் பவன்.
நிகழ்ச்சிநிரலின் இந்தப் பாகத்தில் கடைசியாக பேசியவர் முன்னாள் மிஷனரியும் தற்போது பள்ளியின் பதிவாளருமாகிய வாலஸ் லிவ்ரன்ஸ், “கடவுளுடைய வார்த்தையை உயிருள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், அதை உங்களுடைய செயலில் காட்டுங்கள்” என்பது அவருடைய பேச்சின் தலைப்பு. எப்பொழுதுமே அதன் முடிவை நோக்கி முன்னேறும் கடவுளுடைய தவறிப்போகாத செய்திக்கு அல்லது வாக்குறுதிக்கு அது கவனத்தை திருப்பியது. (எபிரெயர் 4:12) அவ்வாறு செயல்படுவதற்கு தங்களை அனுமதிக்கிறவருடைய வாழ்க்கையை அது செல்வாக்கு செலுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13) எவ்வாறு அந்த வார்த்தை உயிருடனிருந்து நம்முடைய வாழ்வில் செயல்பட வைக்கலாம்? ஊக்கமாக பைபிளைப் படிப்பதன் மூலமே. கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அதன் அர்த்தத்தையும் பொருத்தத்தையும் விளக்கிச் சொல்வதை உள்ளடக்கிய கிலியட் பயிற்சியை பட்டதாரிகளுக்கு சகோதரர் லிவ்ரன்ஸ் நினைப்பூட்டினார். 50 வருடங்களுக்கும் முன்பு கிலியட் பள்ளியை ஸ்தாபித்த அக்கிராசினர் குழுவில் சேவித்த ஆளும் குழு அங்கத்தினராகிய ஆல்பர்ட் ஷ்ரோடரின் வார்த்தைகளை இவர் மேற்கோள் காண்பித்தார். “சூழமைவை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரால் கடவுளுடைய வார்த்தையிலுள்ள முழுமையான, திருத்தமான, ஆவிக்குரிய கருத்தைப் பெற முடியும்.” பைபிள் படிப்புக்கான இந்த அணுகுமுறை கடவுளுடைய வார்த்தையை உயிருள்ளதாயும் கிரியை செய்வதாயும் வைக்க முடியும்.
மகிழ்ச்சி பொங்கும் அனுபவங்களும் பேட்டிகளும்
இந்தப் பேச்சுகளுக்குப்பின், மாணவர்கள் பெற்ற மகிழ்ச்சி பொங்கும் சில அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு பரிமாறப்பட்டது. முன்னாள் மிஷனரியும் தற்போதைய கிலியட் அறிவுரையாளருமாகிய மாற்கு நியூமரின் வழிநடத்துதலின்படி, பல்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வாறு மாணவர்கள் சாட்சிகொடுத்தனர் என்பதை விவரித்தார்கள், அதை நடித்தும் காண்பித்தார்கள். அந்தப் பிராந்தியத்திலுள்ளவர்களுடைய சூழ்நிலைகளையும் வார்த்தைகளையும் கவனித்து தனிப்பட்ட அக்கறை காட்டியதன் காரணமாக சிலரால் பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கவும் நடத்தவும் முடிந்தது. இவ்விதமாக, மாணவர்கள் ‘தங்களைக் குறித்தும் தங்களுடைய உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிருந்தார்கள்,’ மற்றவர்கள் இரட்சிப்பை பெற உதவுவதில் உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருந்தார்கள்.—1 தீமோத்தேயு 4:16.
நடைமுறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. உவாட்ச் டவர் கல்வி மையத்தில் கிளை அலுவலக குழு அங்கத்தினர்களுக்கு நடத்தப்பட்ட பள்ளியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அனுபமிக்க சகோதரர்கள் அநேகரும் மிஷனரி சேவையால் வரும் மகிழ்ச்சியை தெளிவாக காட்டினர். பொலிவியா, ஸிம்பாப்வே, நிகரகுவா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, டொமினிக்கன் குடியரசு, பாப்புவா நியூ கினி, காமரூன் போன்ற சங்கத்தின் கிளை அலுவலகங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட நேரடி பேட்டியை தலைமை அலுவலகத்தின் பணியாளர்களாகிய சாம்யுல் ஹெர்ட் மற்றும் ராபர்ட் ஜான்ஸன் என்ற சகோதரர்கள் நடத்தினர்.
அனுபவங்களுக்கும் பேட்டிகளுக்கும் பிற்பாடு, ஜெரட் லாஸ் என்பவர் கடைசி பேச்சை கொடுத்தார். இவர் 41-வது கிலியட் வகுப்பு பட்டதாரியும் இப்பொழுது ஆளும் குழுவின் அங்கத்தினருமானவர். அவர் கொடுத்த பேச்சு, “நீங்கள் ‘விரும்பத்தக்க நபரா’ ?” என்ற சிந்தையைத் தூண்டும் பேச்சுப் பொருளில் சொற்பொழிவாற்றினார். கடவுளுடைய பரிபூரண குமாரனாகிய இயேசுவை மக்கள் விரும்பத்தக்க நபராக கருதவில்லை, ஆனால் ‘அவமதிக்கப்பட்டார், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டார்.’ (ஏசாயா 53:3, NW) ஆகவே, இன்று உலகின் பெரும்பாலான பகுதிகளில், மிஷனரிகள் ஏற்றுக்கொள்ளப்படாததிலும் வரவேற்கப்படாததிலும் ஆச்சரியமில்லை. மறுபட்சத்தில், பாபிலோனில் அநேக ஆண்டுகள் சேவை செய்தபோது, தேவதூதன் மூலமாக மூன்று தடவை தானியேல் “மிகவும் பிரியமானவன்” என படைப்பாளரால் அழைக்கப்பட்டார். (தானியேல் 9:23; 10:11, 19) எது தானியேலை அப்படிப்பட்டவராக்கியது? பாபிலோனிய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்தபோது, பைபிள் நியமங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. தன்னுடைய ஸ்தானத்தை தனிப்பட்ட வசதிக்காக பயன்படுத்தவில்லை; எல்லா விஷயங்களிலும் உண்மையுடன் நடந்துகொண்டார். கடவுளுடைய வார்த்தையின் ஊக்கமான மாணவராக இருந்தார். (தானியேல் 1:8, 9; 6:4; 9:2) யெகோவாவிடம் தவறாமல் ஜெபித்துவந்தார், தன்னுடைய சாதனைகளுக்கு கடவுளுக்கே புகழ் சேர்த்தார். (தானியேல் 2:20) தானியேலின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், இந்த உலகத்தாருக்கு முன்பாக அல்ல, ஆனால் கடவுளுக்கு முன்பாக அவருடைய ஊழியர்கள் பிரியமானவர்களாக நிரூபிக்க முடியும்.
ஆவிக்குரிய பிரகாரம் கட்டியெழுப்பிய இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர, உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தந்திகள் மற்றும் செய்திகள் சிலவற்றை அக்கிராசினர் வாசித்தார். பின்பு, 24 தம்பதியினருக்கும் தனித்தனியாக டிப்ளமோ வழங்கப்பட்டது, அவர்களுக்கு நியமிக்கப்பட்ட நாடும் அறிவிக்கப்பட்டது. கடைசியாக, ஆளும் குழுவிற்கும் பெத்தேல் குடும்பத்திற்கும் முகவரியிடப்பட்ட ஒரு கடிதத்தை வகுப்பு பிரதிநிதி வாசித்தார். கடந்த ஐந்து மாதகாலம் பெற்ற பயிற்சிக்கும் தயாரிப்புக்கும் நன்றியை அந்தக் கடிதம் வெளிப்படுத்தியது.
நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது, கலைந்துசென்ற கூட்டத்தாரின் ‘நன்றியோடுகூடிய மகிழ்ச்சியை’ கேட்க முடிந்தது.—நெகேமியா 12:27.
[பக்கம் 27-ன் படம்]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 19
மாணவர்களின் எண்ணிக்கை: 48
தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 33
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13
[பக்கம் 25-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 106-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும் ஒவ்வொரு வரிசையிலும் பெயர்கள் இடமிருந்து வலமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) டீக்கன், டீ.; பூவாபோலோ, எம்.; லகூனா, எம்.; டவோல்ட், எஸ்.; டொமிங்கெஸ், ஈ.; புரூக், ஜே. (2) கௌட், எஸ்.; வாஸ்கெஸ், டபிள்யூ.; சீபுருக், ஏ.; மஸ்கா, ஏ.; ஹெலீ, எல்.; புரூவர்ட், எல். (3) பிராண்டன், டீ.; ஓலிவார்ஸ், என்.; கோல்மன், டீ.; ஸ்காட், வீ.; பீட்டர்சன், எல்.; மக்லௌட், கே. (4) மக்லௌட், ஜே.; தாம்ஸன், ஜே.; லூப்ரிஸ், எஃப்.; ஸ்பேட்டா, பீ.; லேட்டமாகீ, எம்.; லகூனா, ஜே. (5) கௌட், யூ.; டொமிங்கெஸ், ஆர்.; ஹெலீ, எஃப்.; ஸ்மீத், எம்.; பையர், டீ.; மஸ்கா, ஏ. (6) ஸ்காட், கே.; சீபுருக், வீ.; ஸ்பேட்டா, ஆர்.; கோல்மன், ஆர்.; புரூவர்ட், எல்.; டவோல்ட், டபிள்யூ. (7) ஸ்மித், டீ.; லேட்டமாகீ, டீ.; பீட்டர்சன், பீ.; தாம்ஸன், ஜீ.; வாஸ்கெஸ், ஆர்.; பையர், ஏ. (8) லூப்ரிஸ், எம்.; டீக்கன், சீ.; பிராண்டன், டீ.; பூவாபோலோ, டீ.; ஓலிவார்ஸ், ஓ.; புரூக், எஸ்.